Tuesday, May 7, 2019

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு 


வீட்டில், அலுவலகத்தில், வெளி உலகில் என்று பல இடங்களில் நாம் பல செயல்களை செய்கிறோம். அப்படி தொழில் ஆற்றும் போது எப்படி வேலை செய்ய வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

என்னங்க இது, நாம இருக்கிறது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. வள்ளுவர் இருந்தது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். இப்ப இருக்கிற அலுவலகம், தொழில் நுட்பம், வேலைச் சிக்கல்கள் எல்லாம் வள்ளுவருக்கு எப்படித் தெரியும். அவர் எப்படி எனக்கு அறிவுரை கூற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.  மேலும், எப்படி வேலை செய்ய வேண்டும் கட்டு காட்டாக வழிகாட்டி நூல்கள் இருக்கின்றன (operating manual ). அதன் படி நடந்தாலே சிக்கல் வருகிறது. வள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் என்ன பெரிதாக சொல்லி விட முடியும் என்றும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் தவறு ஒன்றும் இல்லை.

வள்ளுவர் என்ன தான் சொல்கிறார் என்று கேட்போம். அப்புறம் முடிவு செய்வோம்.

பாடல்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு

பொருள்

எள்ளாத = பிறர் பார்த்து நகைக்கும் படியாக இல்லாமல்

எண்ணிச் = திட்டமிட்டு

செயல்வேண்டும் = செயல் பட வேண்டும்.

தம்மொடு = தம்மோடு

கொள்ளாத = ஒத்து வராதாவற்றை

கொள்ளாது உலகு = ஒத்துக் கொள்ளாது உலகு

உலகு ஒத்துக் கொள்ளும் காரியங்களை செய்ய வேண்டும். பிறர் பார்த்து நகைக்கும்படியான காரியங்களை செய்யக் கூடாது.

அவ்வளவுதான் குறள்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இதெல்லாம் நமக்குத் தெரியாதா? இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ?

சிந்திப்போம்.

"பிறர் பார்த்து நகைக்கும் படியாக செயல் செய்யக் கூடாது" அப்படி என்றால் என்ன அர்த்தம்?

முதலாவது, நம் தகுதிக்கு குறைவான செயல்களை செய்யக் கூடாது. நம் தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்ற  செயல்களை செய்ய வேண்டும்.  அதை இன்னும்  விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது, தெரியாதவற்றை செய்தால் உலகம் நகைக்கும் படி ஆகி விடும். எனக்கு ஒரு நிறுவனத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கத் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். ஒரு கணக்குப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். நான் கணக்கு வேலை செய்தால் யாரும் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். மாறாக, நான் போய் அந்த நிறுவனத்தின் மின்சாரம் வரும் transformer கழட்டி மாட்டுகிறேன் என்று இறங்கினால் எப்படி இருக்கும் ? உலகம் நகைக்குமா? நகைக்காதா ? கோமாளி இருக்கும். தெரியாத ஒன்றில் இறங்கி  பிறர் நகைக்கும் படி செயல் செய்யக் கூடாது.

மூன்றாவது, தெரிந்த வேலையை செய்யாமல் சோம்பிக் கிடந்தாலும் உலகம் எள்ளி நகையாடும்.  "வேலை செய்ய மாட்டோம்னா சொல்றோம். நல்ல வேலை கிடைக்கணும்ல " என்று சிலர் சொல்லுவார்கள்.

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் 
நிலம் எனும் நல்லாள் நகும் 

என்பார் வள்ளுவர். வேலை இல்லை, கையில் காசு இல்லை, எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை, எனக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை என்று இப்படி  ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பவரைக் கண்டால் இந்த நில மகள் சிரிப்பாள் என்கிறார். நில மகள் என்றால் இந்த உலகில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் என்று அர்த்தம். நிலமா சிரிக்கும்.

நான்காவது, பிறர் நகைக்கும் படி வேலை செய்யக் கூடாது என்றால் என்ன அர்த்தம், பிறர் போற்றும் படி, பிறரை வியக்கும் படி வேலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

ஒரு வேலை செய்தால், "அடடா என்ன அற்புதம்...இப்படி யாராலயும் செய்ய முடியாது  "என்று வியக்க வேண்டும்.

...வீட்டை என்னமா அழகா வச்சிருக்கா அந்த பொண்ணு. கண்ணுல ஒத்திக்கலாம். அப்படி ஒரு சுத்தம். அப்படி ஒரு ஒழுங்கு வீட்டில் என்று பிறர் சொல்லும் படி இருக்க வேண்டும். வீடா அது, குப்பை கூளமா மாதிரி இருக்கு இருக்கு என்று  இகழ்ந்து நகைக்கும் படி இருக்கக் கூடாது.

...ஆஹா சாப்பாடு என்ன உருசியாக இருக்கிறது என்று வியக்க வேண்டும்.

....இந்த ரிப்போர்ட், இந்த presentation என்ன நேர்த்தியாக இருக்கிறது என்று வியந்து பாராட்ட வேண்டும்.

...என்னமா படித்து எவ்வளவு மார்க் வாங்கி இருக்கிறான் பாரு என்று மாணவனை பார்த்து வியக்க வேண்டும்.

அப்படி எந்த வேலை செய்தாலும், பிறர் பார்த்து வியக்கும் படி செய்ய வேண்டும்.

சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு புரிகிறது அல்லவா?


சரி, அது என்ன "தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


தம்மொடு என்பதை கடைசியில் உள்ள உலக என்று வார்த்தையோடு சேர்த்துக் கொள்ளுங்கள். 

"உலகோடு கொள்ளாத கொள்ளாது உலகு" என்று பொருள் வரும். 

அதாவது,  இந்த உலகிற்கு ஒத்து வராததை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும்  ஒரு சில கோட்பாடுகள் உண்டு. வரை முறைகள் உண்டு.  அதற்கு ஒவ்வாத செயல்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. 

உதாரணமாக, சில உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று  ஒரு வரைமுறை வைத்து இருக்கிறது இந்த உலகம். அது இடத்துக்கு இடம் மாறுபடலாம். மதத்திற்கு மதம் மாறுபடலாம். ஆனால், ஒரு இடத்தில், ஒரு மதத்தில்  இதுதான் சட்டம் என்று ஆன பின், அதை மீறுவதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கறி மீன் சாப்பிடக் கூடாது என்று வரை முறை இருக்கிறது.  அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை உலகம் ஒத்துக் கொள்ளாது. 

பொதுவாக சொல்லுவது என்றால், சட்ட விதி முறைகள், சமுதாய பழக்க வழக்கங்களை மீறுவதை  உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என்று சட்ட விதிமுறைகளை மீறக் கூடாது. 

நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்பதற்காக தேர்வில் காப்பி அடிக்கக் கூடாது. 

இன்னொரு விதமாக இதை சிந்திக்கலாம். 


"தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


அதாவது, நம்முடைய மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்வதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. தவறு என்று மனசாட்சி சொன்னால், அதை செய்யக் கூடாது. 

படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடுவது சரி என்று மனசாட்சி சொல்கிறதா? 

உருப்படியாக எதுவும் செய்யாமல் வாட்ஸாப்ப், பக்கத்து வீட்டு பெண்கள், டிவி சீரியல், என்று நேரத்தை வீணடிப்பதை சரி என்று மனசாட்சி சொல்கிறதா ?

மனம் தவறு என்று சொல்வதை செய்யக் கூடாது. 

என்ன? ஒண்ணே முக்கால் அடி போதுமா ? 

வினை செயல் வகை என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 

எப்படி வேலை செய்ய வேண்டும் என்று  சொல்லி இருக்கிறார்.  பிரமிப்பூட்டும் குறள்கள். 

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_7.html

1 comment:

  1. உலக நியதியை மீறாமல் வாழவேண்டும் என்பது ஒப்புக் கொள்ள முடியாத கருத்து. வள்ளுவரே சொல்லினும் குற்றம் குற்றமே!

    ReplyDelete