Wednesday, August 31, 2016

இராமாயணம் - வாலி வதம் - ஆவி போம் வேலை வாய்

இராமாயணம் - வாலி வதம்  - ஆவி போம் வேலை வாய்


இராம பாணத்தால் அடிபட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி தன் நிலை உணர்ந்து இராமனிடம் சில செய்திகள் கூறுகிறான்.

ஏவிய கூறிய அம்பை என் மேல் எய்து , நாய் போன்ற கீழானவனான எனக்கு ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய். மூவர் நீ, முதல்வன் நீ, அனைத்தும் நீ என்று போற்றினான்.

பாடல்

‘ஏவு கூர் வாளியால்
    எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய்,
    அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘

பொருள் 

‘ஏவு கூர் = ஏவும் கூறிய

 வாளியால் = அம்பினால்

எய்து = என் மேல் எய்து

நாய் அடியனேன் = நாய் போன்ற அடியவனான எனக்கு

ஆவி போம் வேலை வாய் = ஆவி போகின்ற வேலையில் (?)

அறிவு தந்து அருளினாய்; = அறிவும் அருளும் தந்தாய்

மூவர் நீ! முதல்வன் நீ! =  மூவர் நீ! முதல்வன் நீ!

முற்றும் நீ! மற்றும் நீ! =  முற்றும் நீ! மற்றும் நீ!

பாவம் நீ! தருமம் நீ! =  பாவம் நீ! தருமம் நீ!

பகையும் நீ! உறவும் நீ! ‘ = பகையும் நீ! உறவும் நீ! ‘

வாலி பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு இந்தப் பாடல்.


நாய் அடியனேன் - நாய்க்கு உள்ள ஒரு நல்ல குணம் என்ன என்றால், எஜமான் என்ன அடித்தாலும் அவன் காலடியிலேயே கிடக்கும் . அவன் காலையே சுற்றி சுற்றி வரும். அது போல, இராமா, நீ எனக்கு துன்பம் தந்தாலும் நான் உன்னையே சுற்றி சுற்றி வருவேன் என்கிறான்.ஆவி போம் வேலை வாய் - ஆவி போகின்ற நேரத்தில் என்று சொல்வதென்றால்

ஆவி போம் வேளை  வாய் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கே, "வேலை" என்று சொல்கிறான் கம்பன். மிக மிக கவனமாக ஒரு சொல்லை  தேர்ந்து எடுத்துப் போடுகிறான்.

வேளைக்கும் , வேலைக்கும் என்ன வித்தியாசம்.

ஆவிக்கு உடலினுள் வருவதும் பின் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலுக்குப் போவதும் தான் வேலை.

இராமன் அம்பு எய்து கொல்லாவிட்டாலும் வாலியின் உயிர் ஒரு நாள் போகத்தான் போகிறது. உயிரின் வேலை போவது.  வேறு விதமாக  போயிருந்தால் இராம தரிசனம் கிடைத்திருக்காது. வாலி ஞானம் பெற்று , பின் வீடு பேறும் அடைந்திருக்க மாட்டான்.


அறிவு தந்து அருளினாய்...அறிவு தந்தாய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம்.  அறிவு தந்து அருளினாய் என்கிறான் வாலி. வாலியின் மேல் உள்ள  அன்பால் , கருணையால் அவனுக்கு அறிவு தந்தான் இராமன் என்பது  வாலியின் வாக்கு. 

அறிவு தந்ததால் என்ன நிகழ்ந்தது ?


இதற்கு முன்னால் அறிவு இல்லாதவன் அல்ல வாலி. வேதங்களை கற்று உணர்ந்தவன்  வாலி. 

அது கல்வி அறிவு. 

படித்து வருவது. 

இராமன் அவனுக்குத் தந்தது மெய் அறிவு.

அந்த மெய்யறிவு பெட்ற வாலி என்ன ஆனான் ?

மிகப் பெரிய ஞானிகளுக்குக்  கூட அறிய முடியாத பரம் பொருளின் தன்மையை அறிந்தான். 

மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘


பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆன மூவரும் நீ.

அவர்களுக்கு முன்னால் தோன்றியவனும் நீ. 

பாவம், தர்மம், பகை , உறவு எல்லாம் நம் ஆசாபாசங்களை பொறுத்தது. 

ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அவன் யாரை பகைக்க முடியும் ? யாரோடு உறவு கொள்ள முடியும். 

ஞானிகளுக்கும் எட்டாத அந்த பார்வை பெற்றான் வாலி. 


ஒருவன்மு கமூடி அணிந்து கொண்டு , மயக்கமாய் கிடைக்கும் இன்னொருவனை கத்தியால் குத்தி  கிழிப்பதைப் பார்த்தால் என்ன தோன்றும் ?  பாதகா , இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் , மயக்கத்தில் இருக்கும்  ஒருவனை இப்படியா கத்தியால் குத்துவது என்று நம் மனம் பதறும். 

அதுவே ஒரு மருத்துவர் இரண சிகிச்சை செய்கிறார் என்றால், மயங்கி கிடக்கும் நோயாளி , அறுவை சிகிச்சைக்குப் பின் எழுந்து சுகம் அடைந்து , அந்த மருத்துவருக்கு நன்றி சொல்லுவான் அல்லவா.

காரியம் அல்ல முக்கியம். 

காரியத்தால் விளைந்தது என்ன என்று பார்க்க வேண்டும். 

காரியம் - மறைந்து இருந்து அம்பு போட்டது. 

விளைந்தது - வாலி மோட்சம். வாலி மெய்யறிவு பெற்றது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ 
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே  

என்று ஆழ்வார் சாதித்தது போல, வாலிக்கு வலிதான். 

அந்த வலியில் வழி பிறந்தது. 

இராமன் செய்தது சரியா தவறா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_31.html


Tuesday, August 30, 2016

இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 2

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 2இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி

தாய் என உயிர்க்கு நல்கி என்ற வரியின் விளக்கத்தை முந்தைய blog இல் பார்த்தோம்.

மேலும் சிந்திப்போம்.


தருமமும், தகவும், சால்பும், நீ என நின்ற நம்பி!

மூன்று சொற்களால் இராமனை போற்றுகிறான் வாலி.

தருமம், தகவு, சால்பு

தருமம் என்றால் என்ன என்று தெரிகிறது.

அது என்ன தகவு, சால்பு ?

தகவு என்றால் நடுவு நிலைமை.  தர்மத்தின் வழி செல்பவர்கள் கூட சில சமயம் பாசம் அல்லது அறியாமை காரணமாக நடுவு நிலைமை பிறழ்ந்து விடலாம்.  இராமன் நடு நிலை தவறாதவன் என்று வாலி கூறுகிறான்.

சால்பு என்றால் சான்றோர் இயல்பு. சான்றோன் என்றால் கல்வி , கேள்வி மற்றும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.

இதை விட இராமன் செய்தது சரி தான் என்று சொல்ல வேறு என்ன சொல்ல முடியும் ?

இந்த மூன்று குணங்களாகவே இராமன் இருந்தான் என்று வாலி சொல்கிறான் என்றால் என்ன நிகழ்ந்தது ? ஏதோ ஒன்று வாலிக்கு தெரிய வந்திருக்கிறது. இல்லை என்றால், மறைந்து நின்று போட்ட அம்பு மார்பில் துளைக்க, இரத்தம் பெருக்கெடுத்து ஓட , உயிர் போகும் தருணத்தில் , அப்படி அம்பு போட்டவனை வாலி ஏன் புகழ வேண்டும் ?


நெறியினின் நோக்கும் நேர்மை

சில சமயம் பிள்ளைகள் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும், அல்லது கை பேசியில் யாருடனாவது chat பண்ணிக் கொண்டிருக்கும். அப்பா, பிள்ளையை அதட்டி, அதை பிடுங்கி வைத்து, படி என்று அதட்டுவார். கேட்கவில்லை என்றால் திட்டுவார், தேவைப் பட்டால் இரண்டு அடி கூட தருவார்.

பிள்ளை அழும். சந்தோஷமாக இருந்த பிள்ளையை துன்பப் படுத்தி அழ வைப்பதா பெற்றோரின் நோக்கம் ?

இப்போது அழுதாலும் பரவாயில்லை, பிள்ளை பின்னாளில் நன்றாக இருப்பான் என்ற தொலை நோக்கோடு அவர் அப்படி செய்கிறார்.

பிள்ளை , தகப்பனை, ஒரு வில்லனை பார்ப்பது போலத் தான் பார்க்கும்.

அதற்காக , ஒரு தகப்பன் மிரட்டி, திட்டி, அடித்து பிள்ளையை நெறி படுத்தாமல் இருந்து விட முடியுமா ?

இராமன் செய்தது வேதம் சாஸ்திரம் போன்றவற்றில் சொல்லப் பட்ட வழியின் பால் நேர்மையாக சென்றது.

நெறி என்றால் உயர்த்த வழி.

நோக்குதல் , தொலை நோக்கு. இராமன் நினைத்து இருந்தால் வாலியின் உதவி பெற்று சீதையை எளிதாக மீட்டிருக்க முடியும். அது சுய இலாபத்துக்காக நேர்மையை கை விட்டது மாதிரி ஆகி இருக்கும்.

இராமன் செய்தது தொலை நோக்குப் பார்வை.

அதிலும் ஒரு நேர்மையை கடை பிடித்தான் என்றான் வாலி.


நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?

நாய் போன்றவன் நான். எதிலும் குற்றம் காண்பதே என் வேலை. குற்றமற்று பார்க்கும் பார்வை என்னிடம் இல்லை என்கிறான் வாலி. 

கல்வி கேள்விகளில் சிறந்தவன் வாலி.பெரிய சிவ பக்தன். சிறந்த வீரன். 

பின் ஏன் தன்னை நாய் என்று சொல்லிக் கொள்கிறான் ?

நாயிடம் உள்ள ஒரு கெட்ட குணம் என்ன என்றால், எவ்வளவு தான் அதற்கு உயர்ந்த உணவு அளித்து , வீட்டில் சௌகரியமாக வைத்து இருந்தாலும், சில சமயம் அது வெளியில் போகும்போது தெருவில் கிடக்கும்  அசிங்கத்தை ருசி பார்க்கும். அது   நாயின் பிறவிக் குணம். 

எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும், சில சமயம் புத்தி கீழ் நோக்கிப் போவது மனிதர்களின் இயல்பு. 

அதையே வாலி சொல்கிறான். 

தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

தீயவைகளை பொறுத்துக் கொள்வாய் என்று இராமனிடம் வாலி வேண்டுகிறான். 

வாலி என்ன தீமை செய்து விட்டான் ? அவனே "நான் செய்த தீமைகளை பொறுத்துக் கொள் " என்று சொல்லும் அளவுக்கு என்ன தீமை  செய்து விட்டான் ?

ஒரே ஒரு தீமை தான், இராமனை நிற்க வைத்து கேள்வி கேட்டது. 

அரசு அவனுடையதுதான். 

மாயாவியோடு சண்டை போட்டு குகைக்குள் போனபோது , காவலுக்கு நின்ற  சுக்ரீவன், குகையை மூடி விட்டு தானே அரசனாகிவிட்டான். 

குகையில் இருந்து வெளியே வந்த வாலி கோபம் கொண்டது இயற்கை. 

அண்ணன் தம்பி உறவை விடுங்கள். ஒரு அரசன் ஆணையை மீறியது மட்டும் அல்ல, அவனை சிறை வைத்து விட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டால் , எந்த அரசனுக்குத் தான் கோபம் வராது ?

வாலிக்கு சுக்ரீவன் மேல் கோபம் வந்தது. அவனை அடித்து விரட்டினான். 

அது அல்ல அவன் செய்த தீமை. 

இராமன் செய்தது சரி தான் என்று பின்னர் உணர்ந்த வாலி, அதற்கு முன்னால் , உண்மை தெரியாமல் இராமனை கேள்வி கேட்டதற்காக, இராமனை தரக் குறைவாக பேசிய தீமையை குறித்து கூறுகிறான். 

அடுத்து நடந்தது தான் வாலி வதையின் மிக மிக முக்கியமான நிகழ்வு.

அது என்ன நிகழ்வு ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/08/2.html
இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 1

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 1இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி


இந்தப் பாடலை நாளெல்லாம் வாசித்து வாசித்து உருகலாம்.இங்கே சில விஷயங்களை சொல்கிறான்.

சொல்பவன் யார் ?

வாலி.

அவன் எப்படிப் பட்டவன் ?

சிறியன சிந்தியாதவன்.

எது சிறியது ?

ஆட்சி, செல்வம், புகழ், அதிகாரம், ஏன் உயிர் இவை எல்லாமே சிறியதுதான்.

இதைப் பற்றியெல்லாம் வாலி சிந்திக்கவில்லை.

பின் ஏதோ உயர்ந்த ஒன்றை சிந்தித்த வாலி, சொல்கிறான்....

"'தாய் என உயிர்க்கு நல்கி,"

தாய் போல உயிர்க்கு நல்கி.

நல்குதல் என்றால் அருள் செய்தல் என்று பொருள்.

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி என்பார் மணிவாசகர்


 விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

தாய் உடலுக்குத் தான் உணவு தருவாள். பாலூட்டி, சோறூட்டி உடலை வளர்ப்பாள் .

உயிரை யார் வளர்ப்பார்கள் ?

இராமன் உயிரை வளர்த்தான் என்கிறான் வாலி.

"உயிர்க்கு நல்கி"

சில சமயம் குழந்தை உணவு உண்ணாமல் அடம் பிடிக்கும். அம்மா, குழந்தையை இழுத்து பிடித்து, தன் கால்களுக்கு நடுவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உணவை கட்டாயமாக ஊட்டுவாள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ அந்த அம்மா கருணை இல்லாத அரக்கி போலத் தோன்றும். அந்த கடுமைக்கு பின்னால் உள்ள கருணையை அந்த பிள்ளை கூட உணராது. அம்மா ஒரு இராட்சசி என்றே நினைக்கும். ஆனால், பின்னால் அந்த பிள்ளை அறிவு வளர்ந்த பின், தாயின் அன்பை எண்ணி கண்ணீர் விடும்.

இராமன் செய்தது அறம் அற்ற செயலாகத்தான் தெரியும் வெளியில் இருந்து பார்க்கும் போது.

வாலி கூட அப்படித்தான் நினைத்தான்.

ஆனால், அவன் அறிவு அடைந்தான். இராமனின் கருணையை உணர்ந்தான்.

உடலை வளர்க்கும் தாயே இந்த பாடு படுகிறாள் என்றாள் என்றால், உயிரை வளர்க்க என்ன பாடு பட வேண்டும்.

யாருக்குப் புரியும் ?

(மேலும் சொல்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/1.html

Sunday, August 28, 2016

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்


இராமனின் அம்பால் அடிபட்டு வீழ்ந்த வாலி, முதலில் இராமனின் நாமத்தை அம்பில் கண்டான். பின், இராமனே நேரில் வரக் கண்டான். நேரில் வந்த இராமனை வாலி பலவாறு கேள்வி  கேட்கிறான்.அவன் குற்றச்சாட்டெல்லாம் , ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் , என்பதுதான்.

இராமன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலி ஏற்கவில்லை.

இலக்குவன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலியின் மனம் ஒப்பவில்லை.

அடுத்து என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

ஏதோ நடந்திருக்கிறது.

யாருக்கும் தெரியாது.

ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

கீழே வரும் பாடல் மிக நுண்ணிய பாடல்.

பாடல்

கவி குலத்து அரசும் அன்ன
      கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்
      திறன் அழியச் செய்யான்
புவியுடை அண்ணல்' என்பது
     எண்ணினன் பொருந்தி, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன்
      சென்னியின் இறைஞ்சி, சொன்னான்:

பொருள்

கவி குலத்து அரசும் = குரங்கு கூட்டத்தின் அரசனான வாலி

அன்ன = அந்த

கட்டுரை கருத்தில் கொண்டான் = இராமன் மற்றும் இலக்குவன் சொன்ன கருத்துகளை மனதில் கொண்டான் ;

அவியுறு மனத்தன் ஆகி, = மனதில் பொங்கிய கோபம் அமைதி உற்று

'அறத் திறன் அழியச் செய்யான் = அறத்தின் வலிமையை அழிய விடமாட்டான்

புவியுடை அண்ணல்' = புவியின் அரசனான இராமன்

என்பது எண்ணினன் பொருந்தி = என்று மனதுள் பொருந்தி

முன்னே = முன்பே

செவியுறு கேள்விச் செல்வன் = செவியுற்ற கேள்விச் செல்வனான வாலி

சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: = தலையால் வணங்கிச் சொன்னான்

அறம் என்பது இன்னது என்று யாரும் அறுதியிட்டு கூற முடியாது.

ஈறில் அறம் என்பான்  கம்பன்.

அறம் என்று ஒன்று உண்டு அதை தேவரும் அறிய மாட்டார்கள் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

இராமன் மறைந்து இருந்து அம்பு போட்டது அறமா , அறம் அற்ற செயலா ?

வாதம் பண்ணிக் கொண்டே வந்த வாலி, திடீரென்று மனம் மாறுகிறான்.

இராமன் செய்தது சரி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் படித்த அறத்தின் படி, மறைந்து நின்று அம்பு போடுவது வில்லறம் பிறழ்ந்த செயல்தான்.

பின், வாலி மனம் மாறக் காரணம் என்ன ?

அம்பு அவன் மார்பில் பட்டு அவன் கேள்விகள் கேட்பது வரை , அவன் கண்ட அறம் அவன் படித்து உணர்ந்த அறம்.

இப்போது , அவன் இராமனிடம் கேட்ட அறம் .

அப்படி என்ன இராமன் சொல்லி விட்டான் ?

நமக்குத் தெரியாது.

கம்பன் நேரடியாகச் சொல்லவில்லை.

உயர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது.

அது மௌனத்தில் உணரப் படவேண்டிய ஒன்று.

காதலி, தன் காதலை , அவளுடைய காதலனுக்கு கண்ணால் சொல்லுவது போல.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு கண் அசைவு காட்டி விடும்.

ஒரு புன்முறுவல் சொல்லி விடும்.

பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாது.

இராமன் சொன்னான். வாலி கேட்டான்.


"செவியுறு கேள்விச் செல்வன்"

காதில் கேட்டுக் கொண்ட கேள்வியின் செல்வன் என்று வாலியை கம்பன்  அழைக்கிறான். 

செவியுறு கேள்விச் செல்வன் என்று அவனுக்கு ஒரு அடை மொழி  தருகிறான்.

அவன் என்ன கேட்டான். கேட்ட பின் மனம் மாறினான்.

அவன் கேட்டதில் கொஞ்சம் தான் நாம்  கேட்டோம்.

நேரில் வந்த இராமன் ஏதோ சொல்லி இருக்கிறான். வாலியும் கேட்டிருக்கிறான். 

கேட்ட பின் தலையால் வணங்கி வாலி கூறுகிறான். 

என்ன கூறினான் ?


Friday, August 26, 2016

இராமாயணம் - வாலி வதம் - எண்ணுற்றாய்! என் செய்தாய்?

இராமாயணம் - வாலி வதம்  - எண்ணுற்றாய்! என் செய்தாய்?


இராமனின் அம்பால் அடிபட்டு விழுந்த வாலி, தூரத்தில் இராமன் தன்னை நோக்கி வருவதைக்  கண்டான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான், பின் அவன் நாமத்தை அம்பினில் கண்டான், பின் இராமனே நேரில் வரக் காண்கிறான்.

வானில் உள்ள கார் மேகம், மழை பொழிந்ததால், தரையில் விழுந்து, பல தாமரை மலர்களை மலரச் செய்து, அந்த மேகமே மண்ணில் இறங்கி வந்து கையில் வில் ஏந்தி வந்ததைப் போல வந்த திருமாலைக் கண்டான். தன் உடலில் இருந்து இரத்தம் வழிய, கண்ணில் தீப் பொறி பறக்க, என்ன நினைத்து என்ன செய்தாய் என்று சொல்லத தொடங்குகிறான்.

பாடல்


கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:


பொருள்

கண்ணுற்றான் = கண்டான்

வாலி = வாலி

நீலக் = நீல நிறமும்

கார் முகில் = கரிய நிறமும் கொண்ட மேகம்

கமலம் பூத்து = தாமரை மலர்களை மலரச் செய்து

மண் உற்று = பின் தரை இறங்கி வந்து

வரி வில் ஏந்தி,  = வலிய வில்லை ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல இருந்த

மாலை; = திருமாலை

புண் உற்றது = புண் உள்ள உடலில் இருந்து

அனையசோரி = இரத்தம் வழிய

பொறியொடும் = கண்ணில் தீ பொறி பறக்கும் படி

பொடிப்ப, நோக்கி = கோபத்தோடு நோக்கி

'எண்ணுற்றாய்! என் செய்தாய்!' = என்ன நினைத்து , என்ன செய்தாய்

என்று ஏசுவான் இயம்பலுற்றான் = என்று ஏசுவான் , இயம்பல் உற்றான்


என்ன பொருள்...

மேகம் வானில் இருந்தே மழை பொழிந்து தாமரைக்கு நீர் வார்க்க முடியும்.  இருந்தும் அது இறங்கி வருகிறது.

அவதாரம் என்றால் அருளினால் , மேலிருந்து கீழிறங்கி வருவது என்று அர்த்தம்.

திருமால் நினைத்திருந்தால் , வைகுந்தத்தில் இருந்தே இராவணனை கொன்று  இருக்க முடியும். இராவணனை கொல்வது மட்டும் நோக்கம்  அல்ல. இன்னும் பலப் பல இராவணன்கள் வராமல் இருக்க, இந்த உலகுக்கு வழி காட்ட , மானிடம் வடிவம் தாங்கி இரங்கி , இறங்கி வந்தான்.

கார்மேகம் , தரை மேல் வந்தது போல.

கம்பன் அதில் ஒரு நுட்பம் வைக்கிறான்.

வாலியை பார்க்க வந்தது, அவனுக்கும் அருள் செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறான்.

தாமரைக்கு நீர் வார்த்த மேகம் தரை மேல் வந்தது மாதிரி இராமன் வந்தான்  என்றான் கம்பன்.

கடைசியில் "ஏசுவான் இயம்பல் உற்றான்"  என்கிறான் கம்பன்.

ஏசுவது, இயம்புவது இரண்டும் ஒன்று தானே. எதற்கு இரண்டு வார்த்தைகள்.

ஏசுதல் என்றால் திட்டுதல், வைதல் .

இயம்புதல் என்றால் போற்றுதல், துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே என்பது குற்றாலக் குறவஞ்சி.

வெளியில் இருந்து பார்த்தால் திட்டுவது மாதிரி இருக்கும். அத்தனையும் புகழாரம்.

அம்பு எய்திய இராமன் அப்படியே போய் இருக்கலாம்.

போகவில்லை. ஏன் ?

வாலி தன்னை திட்டுவான் என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

தெரிந்தும் வந்தான்.

ஏன் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_26.html

Thursday, August 25, 2016

பெரிய புராணம் - காலையின் ஒலி

பெரிய புராணம் - காலையின் ஒலி 


அந்தக் காலத்தில் , கல்லூரியில் படிக்கும் போது அதி காலை எழும் வழக்கம் இருந்தது.

ஒரு 4:30 அல்லது 5:00 இருக்கும் , வழக்கமாக எழும் நேரம்.

அதி காலையில் வெளிச்சம் முழுவதுமாக இருக்காது. லேசாக வெளிச்சம் படரும் நேரம்.

சில வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தம், வாசலை பெருக்கும் சத்தம் கேட்கும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதி வண்டியில் செல்வோர் அடிக்கும் bell  ஒலி கேட்கும்.

தினசரி நாள் இதழ் போடும் சத்தம் கேட்கும். கோவிலில் பாட்டு போடுவார்கள் அந்த சத்தம் கேட்கும்.

கொஞ்ச நேரம் ஆன பின் சில வீடுகளில் வானொலி பெட்டி ஒலிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே  போகும். கல்யாணக் காலம் என்றால் , பல கல்யாண மண்டபங்களில் பாட்டு போடுவார்கள்.

இதையே இன்னும் சில நூறு ஆண்டுகள் முன்னோக்கி எடுத்துச் சென்றால் எப்படி இருக்கும் ?

அன்றுள்ள மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் ? என்ன மாதிரி ஒலி எல்லாம் கேட்டிருக்கும் அந்தக் காலத்தில் ?

சேக்கிழார் படம் பிடிக்கிறார்.

அது ஒரு கடலோர கிராமம்.

அதி காலையில், தூரத்தில் கடலின் அலைகள் எழுப்பும் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது.

பொழுது விடிகிறது.

எங்கோ சில வீடுகளில் பாட்டு, நடனம், வேதம் போன்ற கலைகள் நடக்கும். அந்த சப்தம் ஒரு புறம் வருகிறது.

கொஞ்சம் தள்ளி, யானை குட்டிகளை பழக்கப் படுத்துவோர்   எழுப்பும் ஒலி கேட்கிறது.

இன்னொரு பக்கம், சோலையில் வண்டுகள் ரீங்காரமிடும் சப்தம்.

மற்றொரு புறம், குதிரையை பழக்குவோர் எழுப்பும் ஒலி .

சில வீடுகளில் யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைக்கும் ஒலி .

இன்னும் சில இடங்களில் ஆடல் பாடல் இவற்றிற்காக இசைக்கும் வாத்திய ஒலி .

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் கூடி, கடலின் அலை சப்தத்தை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

பாடல்

காலை எழும்பல் கலையின்ஒலி
     களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை எழும்மென் சுரும்பின்ஒலி
     துரகச் செருக்கால் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
     பாடல் ஆடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கிஎழ 
     விளங்கி ஓங்கும் வியப்பினதால்.

பொருள்


காலை = காலையில்

எழும்பல் = எழும் போது

கலையின்ஒலி = ஆடல், பாடல், போன்ற கலைகளின் ஒலி

களிற்றுக் கன்று = யானைக் குட்டியை

வடிக்கும்ஒலி = பழக்கும் ஒலி

சோலை எழும்மென் = பூங்காவில் தோன்றும்

சுரும்பின்ஒலி = வண்டுகளின் ஒலி

துரகச் செருக்கால் சுலவும்ஒலி = பெருமிதம் கொண்ட குதிரைகளை பழக்கும் ஒலி 

பாலை விபஞ்சி பயிலும்ஒலி = பாலை போன்ற யாழ்களை மீட்டும் ஒலி

பாடல் ஆடல் முழவின்ஒலி = ஆடலுக்கும், பாடலுக்கும் வாசிக்கும் மிருதங்கம், மத்தளம் போன்றவற்றின் ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ = கடலின் ஒலியை மிஞ்சி எழ

விளங்கி ஓங்கும் வியப்பினதால்.= ஓங்கி வியக்கும் படி ஒலித்தன

அந்தக் கால கிராமம் கண் முன்னால் படமாக விரிக்கிறதா ?

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ். 

பெரிய புராணத்தைப் படித்துப் பாருங்கள். அத்தனையும் தேன் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_35.htmlஇராமாயணம் - வாலி வதம் - இராமன் தோற்றம்

இராமாயணம் - வாலி வதம்  - இராமன் தோற்றம் 


இராமனின் அம்பினால் அடிபட்டு கிடக்கும் வாலி, தன் மேல் பாய்ந்த அம்பினை பற்றி இழுத்து அதில் இராமன் என்ற நாமம் எழுதி இருக்கக் காண்கிறான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறான்.

இப்போது அவன் நாமத்தை கண்டான்.

அடுத்து ?

அதுத்தது அந்த இராமனே நேரில் வரக் காண்கிறான்.


பாடல்

‘இறை திறம்பினனால்; என்னே
    இழிந்துேளார் இயற்கை? என்னில்
முறை திறம்பினனால் ‘என்று
    மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
    மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
    தோன்றினான், வந்து தோன்ற.

பொருள் 


‘இறை திறம்பினனால்; = அரச நீதி தவறினால் (இராமனே)

என்னே இழிந்துேளார் இயற்கை?  = மற்றவர்களின் நிலை என்ன. இராமனே தவறு செய்தால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

என்னில் = என்று

முறை திறம்பினனால் ‘ = வழக்கம் தவறினால் என்ன செய்வது

என்று = என்று

மொழிகின்ற முகத்தான் முன்னர் = சொல்கின்ற வாலியின் முன்
,
மறை திறம்பாத = வேதங்களில் சொல்லப் பட்டதை விட்டு தவறாத

 வாய்மை = உண்மையாக

மன்னர்க்கு  = மாணவர்களுக்கு

முன்னம் சொன்ன = முன்பு சொன்ன

துறை திறம்பாமல் காக்கத் = இடங்கள் தவறாமல் காக்க

தோன்றினான், வந்து தோன்ற.= தோன்றியவன்  தோன்றினான்

வந்தது யார் ?


உணர்ச்சியும் அறிவும் உச்சம் பெட்ற பாடல்.

ஒன்றைப் பார்ப்பவர்கள், மற்றதை மறந்து விட வாய்ப்பு உள்ள பாடல்.

வாலி நினைக்கிறான் -  அரச நீதி தப்பியவன்,  துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான். வில்லறம் , இல்லறம் துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான்.

மறைந்து இருந்து அம்பு தாக்கப்பட்ட அதிர்ச்சியில் உள்ள வாலி , வலியின்  உச்சியில் இருந்து அப்படி பார்க்கிறான்.

அது என்ன இறை திறம்பின்னான் ?

அரசனை இறைவனாகவே நினைத்தார்கள் நமது இலக்கியத்தில்.

ஏன் அப்படி ?

உயிர்களை காப்பது இறைவனின் வேலை. அந்த வேலையை செய்வதால், அரசனையும் இறைவனாகவே நினைத்தார்கள். வள்ளுவர் 'இறை மாட்சி' என்று ஒரு ஒரு அதிகாரமே படைத்தார்.

சரி, அது வாலியின் பார்வை.

கம்பன் எப்படி பார்க்கிறான் ?

வேதம், மனு நீதி இவற்றில் சொல்லப் பட்ட அறங்களை காக்க தோன்றியவன் , அங்கு வந்து தோன்றினான் என்கிறான் கம்பன்.

இராமன் தவறு செய்ததாக கம்பன் நினைத்திருந்ததால் அப்படி ஒரு வரியை  அந்த இடத்தில் போட வேண்டிய அவசியம் இல்லை.

கம்பன் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்.

அடி பட்டவன் வாலி. வலியும் , வேதனையும் அவனுக்குத்தான்.

இராமனே இப்படி செய்தால் மற்றவர்கள் கதி என்ன என்று நினைத்தவன் முன்  தோன்றினான் என்று கம்பன் கூறுகிறான். வாலி  இன்னும் இராமனைப் பார்க்கவில்லை.

இராமன் இன்னும் சற்று நெருங்கி வருகிறான்.

இராமனைப் பற்றி கேள்வி பட்டான்.

அவன் நாமத்தை கண்டான்.

இப்போது இராமனே நேரில் வருகிறான்.

வந்த இராமனை, வாலி எப்படி கண்டான் ?

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_25.html

Wednesday, August 24, 2016

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு 


நம் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், நாம் என்ன செய்வோம்.

அவை அண்டாமல் இருக்க எலி பாஷாணம், அல்லது கரப்பான் பூச்சி மருந்து வைப்போம். அவை ஓடி விடும், அல்லது அந்த விஷத்தை தின்று உயிர் விடும்.

நம் தொல்லை தீரும்.

இந்த எலி, கரப்பான் போல நமக்கு ஓயாத தொல்லை தருவது நாம் செய்த பழைய வினைகள்.

அந்த வினைகளை எப்படி விரட்டுவது அல்லது இல்லாமல் ஆக்குவது ? அதற்கு என்று ஏதாவது நஞ்சு இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறது பிரபந்தம்.

"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது.

வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.

பாடல்


மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

சீர் பிரித்த பின்

மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள்  கலிகன்றி 

செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு 
சிக்கெனத் தொண்டீர் 

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம் 

நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்


பொருள்

மஞ்சு = மேகங்கள்

உலாவும் = உலவுகின்ற

சோலை = சோலை

வண்டு அறையும் = வண்டுகள் ரீங்காரமிடும்

மா நீர் = சிறந்த நீர்

மங்கையார் = திருமங்கை ஆழ்வார்

வாள் = வாளை கையில் கொண்ட

கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்

செஞ் சொல்லால் = சிறந்த சொற்களால்

எடுத்த = செய்த

தெய்வ = தெய்வத்திற்கு சாத்திய

நன் மாலை = நல்ல மாலை

இவை கொண்டு  = இவை கொண்டு

சிக்கெனத் தொண்டீர் = இறுக்கமாக பற்றிக் கொண்டு

துஞ்சும் போது அழைமின் = இறப்பு வரும்போது அழையுங்கள்

துயர் வரில் நினைமின் = துன்பம் வரும்போது நினையுங்கள்

துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்  = துன்பம் வராதபோதும் சொன்னால் நல்லதாம்

நஞ்சுதான் கண்டீர் = விஷம் தான் அறிந்து கொள்ளுங்கள்

நம் உடை வினைக்கு = நம்மை பற்றிக் கொண்டு இருக்கும்

நாராயாணா எனும் நாமம்  = நாராயாணா என்ற நாமம்


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்.

சிக்கெனைப் தொண்டீர் ....இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டுமாம். கைகளால் அல்ல. நாராயணா என்ற நாமம் நமது நாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் சொன்ன மாதிரி நாவில் அந்த நாமம்  பற்றிக் கொள்ள வேண்டும். 

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 
          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று வள்ளலார் கூறியது போல , நா , நாராயணா என்ற நாமத்தை மறக்கக் கூடாது. 

அது என்ன சிக்கெனைப் பிடித்தல் ?

அந்த காலத்தில் புத்தகங்கள் படிக்க X போல ஒரு மரத்தில் செய்த பலகை இருக்கும். அதன் நடுவில் புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். அந்த பலகைக்குப் பெயர் சிக்கு பலகை. புத்தகத்தை எடுத்து விட்டு மூடினால், அது ஒன்றுக்குள் ஒன்று புதைந்து ஒரே கட்டை போல ஆகிவிடும். அப்படி , நாராயாணா என்ற நாமமும், நாவும் ஒன்றோடு ஒன்று  பிணைந்து ஒன்றாக ஆகி விடவேண்டும். 

சிக்கெனைப் பிடித்தேன் என்பார் மணிவாசகர் 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எப்போதெல்லாம் நினைக்க வேண்டும் , சொல்ல வேண்டும் ?

சாகும் தருவாயில் சொல்ல வேண்டும், துன்பம் வரும் போது சொல்ல வேண்டும்,  துன்பம் வராத போதும் சொல்ல வேண்டும்.

என்ன இது ஒண்ணும் புரியலையே. சாகும் போது சொல்வது, துன்பம் வரும்போது சொல்வது , துன்பம் வராத போது சொல்வது என்றால் என்ன ?


பாடலின் வரிகளை கொஞ்சம் இடம் மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.


எப்போதும் அந்த நாமத்தை சொல்ல வேண்டும்.

முடியவில்லையா, சரி பரவாயில்லை, துன்பம் வரும்போதாவது சொல்லுங்கள்.

அப்போதும் சொல்லவில்லையா, இறக்கும் தருவாயிலாவது சொல்லுங்கள்.

போகும் இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும்.

தீய வினைகளுக்கு அது விஷம் போன்றது. இறக்கும் தருவாயில் சொன்னால் கூட, அது வாழ்நாளில் செய்த அத்தனை வினைகளும் அழிந்து போகும்.

சாவு எப்போது வரும், எப்படி வரும், அந்த நேரத்தில் நினைவு இருக்குமா ? தெரியாது. எனவே துன்பம் வராமல் சுகமாக இருக்கும் போதே சொல்லி வையுங்கள். அது உங்கள் நாவில் ஏறி அமர்ந்து கொள்ளும்.

வல் வினைகள் ஓயட்டும்.

வாழ்வில் ஒளி தீபம் வீசட்டும்.

நாராயாணா எனும் நாமம் உங்கள் வாழ்விலும் வசந்தத்தை கொண்டு தரட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_68.html


இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள்

இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள் 


இராமன் எய்த அம்பை வாலினாலும் கைகளினாலும் பிடித்து இழுத்த வாலி, அதில் இராமனின் பெயர் இருக்கக் கண்டான்.

இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளை யும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான்  என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர அவன் நகைத்தான்.

பாடல்

‘இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது ‘என்னா,
    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள்

‘இல் அறம் = இல்லறமாகிய அறத்தை

துறந்த நம்பி, = துறந்த நம்பி

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில்லறத்தை துறந்த வீரன்

தோன்றலால்,= தோன்றி

வேத நூலில் = வேத நூல்களில்  சொல்லப் பட்ட

சொல் அறம் துறந்திலாத = சொல் அறங்களை துறந்திலாத

சூரியன் மரபும் = சூரிய மரபில்

தொல்லை நல் அறம் துறந்தது = பழமையான நல்ல அறங்களை  துறந்து, கைவிட்டு

‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான். = என்று நினைத்து அதனால்  சிரிப்பு வர, நாணம் அடைந்தான்.


தனக்கு வந்த துன்பம் இராமனால் வந்தது என்று அறிந்து கொண்டான்.

மனைவியோடு வாழும் இல்லறம் துறந்தான்.

மறைந்து நின்று அம்பு எய்து வில்லறம் துறந்தான்.

வேத நூல் சொன்ன  சொல்லறம் துறந்தான்.

பழமையான நடைமுறை அறங்களையும் துறந்தான்.

என்று இராமன் மேல் குற்றச் சாட்டுகளை அடுக்குகிறான் வாலி.

நமக்கு ஒரு துன்பம் வரும்போது நாம் என்ன நினைப்போம்.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா ? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ? பெரியவர்களை மதிக்கிறேன். கோவிலுக்குப் போகிறேன். புத்தகங்களில் உள்ள முறைப்படி பூஜை , விரதம் எல்லாம் இருக்கிறேன். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுகிறேன்.

இருந்தும் எனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் வந்தது.

என்னென்னமோ தவறுகள் செய்தவன் எல்லாம் நிம்மதியாக  மகிழ்ச்சியாக இருக்கிறான்.  நான் மட்டும் ஏன் கிடந்து இப்படி துன்பப்  படுகிறேன் என்று நமக்கு ஒரு மன உழைச்சல் ஏற்படுவது இயற்கை.

கடவுள் என்று ஒன்று இல்லை. இந்த வேதம், புராணம், இதிகாசம் எல்லாம் பொய்.  நாட்டில் நீதி நேர்மை என்பதே இல்லை. நல்லது காலம் இல்லை என்று தானே புலம்புவோம்.

அதையே தான் வாலியும் செய்கிறான்.

நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்காத குறையாக   .கேட்கிறான்.


இங்கு சற்று நிதானிப்போம்.

இது வரை இராமனை பட்டு கேள்விப் பட்டிருக்கிறான்.

தாரை கூட சொல்லி இருக்கிறாள். சொல்லக் கேள்வி.

அடுத்த கட்டம், இராம நாமத்தை காண்கிறான். அந்த நாமத்தின் மகிமை அவனுக்குப் புரிகிறது. "தெரியக் கண்டான் " என்று சொல்லுகிறான் கம்பன்.

மந்திரத்தின் மகிமை புரிகிறது.

ஆனாலும், அஞ்ஞானம் தடுக்கிறது.

அறிவு குழப்புகிறது. தடுமாற வைக்கிறது.

இறைவன் நல்லவன், உயர்ந்தவன் என்றால் ஏன் வாழ்வில் இத்தனை துன்பங்கள் என்ற விடை தெரியாத கேள்வி வாலியின் மனத்திலும் ஓடுகிறது.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான்.

அடுத்து அவன் நாமத்தை நேரில் கண்டான்.

அடுத்து...?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_24.html

Monday, August 22, 2016

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை 


வாலி வதத்தின் மிக மிக முக்கியமான பாடல்.

தன் மார்பில் பாய்ந்த அம்பை பற்றி இழுத்து , அதில் யார் பெயரை எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.

கம்பனின் உச்ச பச்ச பாடல்.

என் போன்ற சாமானியர்களால் இந்த பாடலுக்கு ஒரு விளக்கமும் தர முடியாது. தராமல் இருப்பது நலம்.

இருந்தும், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றார் போல, நான் அடைந்த இன்பத்தைப் பற்றி சொல்கிறேன்.

ஆழ்ந்து ஆராய்ந்து மேலும் அறிந்து கொள்க.

அந்த அம்பில் என்ன எழுதி இருந்தது ?


மூன்று உலகுக்கும் மூலமான மந்திரத்தை, முழுவதும் தன்னையே தன் அடியவர்களுக்கு அருளும் சொல்லை, பிறவி பிணிக்கு மருந்தை, இராமன் என்ற நாமத்தைக் கண்டான்.

பாடல்

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.

பொருள்


மும்மை சால் உலகுக்கு  = மூன்று என்று சொல்லப் படும் உலகுக்கு


எல்லாம் = அனைத்திற்கும்

மூல மந்திரத்தை = மூலமான மந்திரத்தை

முற்றும் = முழுவதும்

தம்மையே= தன்னையே

தமர்க்கு = அடியவர்களுக்கு

நல்கும் = கொடுக்கும்

தனிப் பெரும் பதத்தை = தனிச் சிறப்பான உயர்ந்த சொல்லை

தானே = அவனே

இம்மையே எழுமை நோய்க்கும் = இந்தப் பிறவிக்கும், ஏழேழு பிறவிக்கும்

மருந்தினை = மருந்தினை

இராமன்  = இராமன்

என்னும் = என்னும்

செம்மை = சிறப்பு

சேர் = சேர்க்கும்

நாமம் தன்னைக் = நாமத்தை

கண்களின் தெரியக்  கண்டான். = கண்களில் தெரியக் கண்டான்


ஆழ்ந்து அறிய வேண்டிய பாடல்.

பாடலின் பொருளை அறியும் முன்,   இப்படி இராமன் என்ற நாமத்தைப் பார்த்தவன் யார் ? வாலி ? வாலியின் பார்வையில் இருந்து  இந்தப் பாடலின் பொருளை நோக்கினால், பாடலின் ஆழமான அர்த்தம் விளங்கும். 


மும்மை சால் உலகுக்கு எல்லாம் ...மேல், நடு , கீழ் என்று சொல்லப் படும்  மூன்று உலகங்கள். சொர்கம், நரகம், பூமி என்று சொல்லப் படும் மூன்று  உலகங்கள். இருந்தது, இருப்பது, இனி வர போகும் என்ற மூன்று  உலகங்கள் என்று எப்படி பிரித்தாலும் அந்த அனைத்து உலகங்களுக்கும் மூலமான மந்திரம்  இராம நாமம். 

முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்....தன்னுடைய அடியவர்களுக்கு தன்னை  அப்படியே முழுமையாக தந்து விடுவானாம் இராமன். ஏதோ  கொஞ்சம் உனக்கு என்று மிச்சம் வைக்காமல் முழுவதும் தந்து விடுவான். பக்தன் இறைவனிடம் சரணாகதி அடைவது இருக்கட்டும். ஆண்டவனே தன்னை முழுவதும் பக்தனிடம் தந்து விடுகிறான். "கேட்டாய் அல்லவா , எடுத்துக் கொள் " என்று சொல்லுவது போல.


இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை .... தமிழிலே நோய் , பிணி என்று இரண்டு சொல் உண்டு. நோய் என்றால் மருந்து தந்தால் போய் விடும்.  பிணி போகவே போகாது.

பசிப் பிணி என்று சொல்லுவார்கள். பசி வந்தால் நோய் வந்தது மாதிரி  உடல் அல்லல் படும். உணவு உண்டால் பசி போய் விடும். ஆனால்,  சில மணி நேரங்களில் மீண்டும் வந்து விடும். எவ்வளவு சாப்பிட்டாலும்,  எல்லாம் சில மணி நேரம் தான். மீண்டும் பசிக்கும். பசி பிணிக்கு நிரந்தர மருந்து இல்லை.

அதே போலத்தான் பிறவிப் பிணியும். அதற்கு மருந்து இருக்கிறதா ? இது வரை இல்லை. இப்போது இருக்கிறது.

ஏழு பிறப்புக்கும் மருந்தினை என்கிறார் கம்பர். இந்த மருந்தை உட்கொண்டால், ஏழேழு பிறவி என்ற நோய் தீர்ந்து போய் விடும்.

தீராத பிறவி பிணியை தீர்க்கும் அருமருந்து.


செம்மை சேர் நாமம் ...இதற்கு பல பொருள்.

ஒன்று, சிவப்பு சேர்ந்த நாமம். மார்பில் பாய்ந்து , வாலியின் இரத்தத்தில் தோய்ந்ததால் சிவந்த நாமம். சிவப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


இரண்டாவது, செம்மையான நாமம்.  சிறப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


மூன்றாவது, செம்மையான இடத்தில் கொண்டு சேர்க்கும் நாமம். செம்மை சேர் நாமம்.

நான்காவது, வினைத் தொகையாக செம்மையான இடத்தில் முன்பு இருந்தவர்களை சேர்த்த நாமம், இப்போது இருப்பவர்களை சேர்க்கும் நாமம், இனி வரும் காலத்தில் வர இருப்பவர்களையும் சேர்க்கும் நாமம்.


கண்களின் தெரியக்  கண்டான்....அது என்ன கண்களின் தெரியக் கண்டான்.

கண்டான் என்று சொன்னால் போதாதா ? கண்களால் தான் காண முடியும். எதற்காக கண்களின் தெரியக் கண்டான் என்று தேவை இல்லாமல்  இரண்டு வார்த்தைகளை போடவேண்டும் ?

காணுதல் வேறு ,  தெரிதல் வேறு.

இயற்பியலில் ஒரு சிக்கலான விதியை எழுதி என்னிடம் காண்பித்தால் என்னால் அதை காண முடியும். ஆனால், அது என்ன என்று  தெரிந்து கொள்ள முடியாது.

காதலியின் கண்கள் சொல்லும் காதலை அவளுடைய காதலனைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது.

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் 
உறாஅர்போன் றூற்றார் குறிப்பு.

ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கும் பார்வையில் பொதிந்து கிடைக்கும் ஆயிரம் காதலை அவன் மட்டுமே அறிய முடியும்.

அது போல,  தெரிவது வேறு, காண்பது வேறு.

வாலி, இத்தனை சிறப்பு மிக்க நாமத்தை கண்டது மட்டும் அல்ல, தெரிந்தும் கொண்டான்.

காண்பது, தெரிவது என்று இரண்டு இருந்தாலும், கண் ஒன்றுதானே ?

இல்லை.

அகக்கண், புறக்கண் என இரண்டு உண்டு.

அம்பில் உள்ள நாமத்தை அகக் கண்ணால் கண்டான். அதன் சிறப்பை மனதில் 'தெரிந்து' கொண்டான்.

ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியின் இரண்டாம் படி.

வாலி என்ற மனிதன் (அல்லது குரங்கு) எப்படி ஒரு ஆன்மீக வளர்ச்சி அடைந்தான் என்று கம்பன் காட்டுகிறான்.

குரங்குக்குச் சொன்னால் என்ன, நமக்குச் சொன்னால் என்ன.


அது என்ன ஆன்மீக வளர்ச்சி...அதற்கும் இந்த மறைந்து இருந்து அம்பு எய்வதற்கும் என்ன சம்பந்தம் ?

(வளரும்)

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_22.html


Sunday, August 21, 2016

இராமாயணம் - வாலி வதம் - பொறித்த நாமத்தை

இராமாயணம் - வாலி வதம்  - பொறித்த நாமத்தை 


Self Realization என்பது பெரிய விஷயம்.

உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்கரடீஸ்.

தன்னைத் தான் அறிவது என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கூட இருக்குமோ ?

வாழ்க்கை தூண்டிக் கொண்டே இருக்கிறது. அறிந்து கொள் , அறிந்து கொள் என்று. நாம் தான் அறிய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் கற்றுக் கொள்ளத் தவறும் போதும் வாழ்க்கை இன்னும் அதிக அழுத்தமாக சொல்லித் தர முயல்கிறது.

சில பேர் சீக்கிரம் அதை பற்றிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு நேரம் ஆகிறது.

வாலி, தான் வலிமை, திறமை, பூஜை, புனஸ்காரம் என்று இருந்து கொண்டிருந்தான்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்திருந்தான்.

இராமன் மறைந்து இருந்து ஏவிய அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.

மிகப் பெரிய அடி. நினைத்துப் பார்க்க முடியாத அடி . வலி.

திகைத்துப் போனான் வாலி.

அவன் மார்பில் தைத்த அம்பை வாலினாலும் கையினாலும் பிடித்து இழுத்து அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க எத்தனிக்கிறான்.

பாடல்

பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.


பொருள் 

பறித்த வாளியைப் = மாரிபில் இருந்து பிடுங்கிய அம்பை

 பரு = பருத்த, பெரிய

வலித் = வலிமையான

தடக்கையால் = பெரிய கைகளால்

 பற்றி = இறுகப் பிடித்து


‘இறுப்பென் ‘ = உடைப்பேன்

என்று  = என்று

கொண்டு எழுந்தனன் = எழுந்தான்.

மேருவை = மேரு மலையை

இறுப்போன் = உடைப்பவன், முறிப்பவன்

‘முறிப்பென் என்னினும் = அந்த அம்பை முறித்துப் போடுவேன் என்று நினைத்தாலும்

முறிவது அன்றாம் ‘ = முறிக்க முடியாதது

என மொழியாப் = என்று சொல்லும் படி

பொறித்த = அதில் எழுதி உள்ள

நாமத்தை = நாமத்தை, பெயரை

அறிகுவான் நோக்கினன் = அறியவேண்டி நோக்கினான்

புகழோன் = புகழ் உடைய வாலி

நமக்கு வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மிடம் சொல்லி விட்டா வருகின்றன ? இன்ன தேதியில், இன்னார் மூலம், இப்படி இப்படி வரும் என்று  சொல்லி விட்டா வருகின்றன.

வாலி மேல் இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான் என்பது ஒரு குறியீடு.

துன்பம் வரும் வழி நாம் அறிவதே இல்லை.

துன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான் என்றால் , சொல்லி விட்டுத் தருவதில்லை.

இராமன் நேரில் வந்து வாலியிடம் சொல்லி இருந்தால் , ஒரு வேளை வாலி இராமன் சொல்வதைக் கேட்டு அரசை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு இராமன் பின்னால் கிளம்பி இருப்பான்.

 ஆனால், வாலி தன்னைத் தான் அறிந்திருக்க மாட்டான்.

இராமனே தான் தான் பரம் பொருள் என்று சொல்லி இருந்தாலும், முதலில் நம்பி  இருந்தாலும், பின்னால் சந்தேகப் பட்டிருப்பான் .  "பரம் பொருள்னு சொல்றான்...கட்டிய மனைவியை பறி கொடுத்து விட்டு காடு மேடெல்லாம் அலைகிறானே ...ஒரு வேளை உண்மையிலேயே இவன் பரம் பொருள் இல்லையோ " என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.

துன்பம் வரும் போதுதான் நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.

பற்றை விட்டால் தான், பரமனை அறிய முடியும்.

வாலியோ ஒவ்வொரு நாளும் மற்றவர்களிடம் உள்ள வலிமை எல்லாம் தனக்கு வேண்டும் என்று மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

என்று இவன் பற்றை விடுவது, என்று இவன் உண்மையை அறிவது ?

அம்பைப் பறித்த வாலி கண்டது என்ன ?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_21.htmlSaturday, August 20, 2016

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான்

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான் 


அவன் ஒரு பெரிய வீரன். அவன் பேரை கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல என்பது மாதிரி.

அப்படிப் பட்ட வீரன், அவனுடைய காதலியை காணச் செல்கிறான். அவளுடைய நெற்றியை பார்க்கிறான். அவனுடைய வீரம் எல்லாம் எங்கோ போய் விட்டது. அவள் அழகின் முன், அவன் வீரம் மண்டியிட்டது.

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.

பொருள்

ஒள்நுதற் கோஒ = ஒள் + நுதலுக்கோ = ஒளி பொருந்திய நெற்றிக்கோ

உடைந்ததே = உடைந்ததே

ஞாட்பினுள் = போர் களத்தில்

நண்ணாரும் = பகைவர்களும்

உட்கும் = அச்சம் கொள்ளும்

என்  பீடு = என் பெருமை, அல்லது வலிமை

பாட்டும் பொருளும் நல்லாத்தான் இருக்கு.

பாட்டிலில் உள்ள சில வார்த்தைத் தெரிவுகளை பார்ப்போம்.

ஏன் நெற்றியைப் பார்த்து அவன் வீரம் உடைய வேண்டும் ?

கண்ணைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம் ...

அல்லது சிறுத்த இடையைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம்...

அல்லது சிவந்த பாதங்களை பார்த்து என்று சொல்லி இருக்கலாம்

அல்லது பெண்ணுக்கே உரிய வேறு பல சிறந்த அங்கங்களை காட்டிச் சொல்லி இருக்கலாம்...

நெற்றியை ஏன் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

பெண்களுக்கு கருணை அதிகம்.

கருணை கண்ணில் இருந்து வெளிப்படும்.

கருணை அதிகமாக அதிகமாக கண்ணின் விசாலம் அதிகமாகும்.

அவளுக்கு விசாலாக்ஷி என்றும் பெயர்.

கண் பெரிதாகும் போது நெற்றி சுருங்கும்.

சின்னப் பெண் தான். இருந்தும் அவளின் மனதில் ஊற்றெடுக்கும் அந்த அன்பு, கருணை , பாசம் ...அவளது சின்ன நெற்றியில் தெரிகிறது.

அவனது வீரம் , மற்றவர்களை பயப்பட வைக்கும். எதிரிகளை கொல்லும் .

ஆனால், இவளது கருணை மிகுந்த பார்வையும், அதனால் சிறுத்த நெற்றியும்  உயிர்களை வாழ வைக்கும்.

அதை நினைத்து அவன் வெட்கப் பட்டு, அதனால், அவன் பெருமை உடைந்தது.

மற்றவர்களை கொல்லுவது , அவர்கள் நம்மைக் கண்டால் மிரளும் படி முரட்டுத் தனமாய் இருப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா...இல்லவே இல்லை என்று அவன் உணர்ந்த தருணம். முரடனையும் , மென்மையானவனாய் மாற்றும் பெண்ணின் கருணை.


இந் நன்னுதல் அவள் நின் கேள் என்று சீதையை அறிமுகம் செய்வான் குகனிடம் இராமன்.

இந்த அழகிய நெற்றியை உடைய பெண் உன்னுடைய உறவினள் என்று கூறுகிறான். அங்கும் நெற்றியை குறித்து கம்பன் பேசுகிறான்.


"ஒள்நுதற் கோஒ" என்று ஒரு 'ஓ" வை ஏன் வள்ளுவர் போடுகிறார் ? அந்த அளபெடை எதற்கு ?

"ஓ" என்பது ஒரு ஆச்சரியக் குறி. அடடா, கருணையும் மக்களை அடிமை கொள்ளுமா ?  இந்த சின்ன நெற்றிக்கு இவ்வளவு வலிமையா என்ற ஆச்சரியம். அதை எப்படி சொல்லுவது ? ஒரே ஒரு எழுத்தில் காட்டி விட்டுப் போகிறார் வள்ளுவர். 

ஆச்சரியம், திகைப்பு எல்லாம் அந்த ஒரு 'ஓ' வில் இருக்கிறது. 

ஒரு முறை சொல்லிப் பாருங்கள் , புரியும். 

அது என்ன "நண்ணார் ".கேள்விப் படாத பெயராக இருக்கிறதே.

நண்ணுதல் என்றால் நெருங்கி வருதல் நண்பர் என்பது அதில் இருந்து வந்தது. 

நண்ணார் என்றால் நெருங்காதவர். தள்ளியே இருப்பவர். பகைவர். 

ஒன்றே முக்கால் அடி தான். ஏழே ஏழு வார்த்தை தான். 

எவ்வளவு அர்த்தம்.

இப்படி 1330 பாடல் பாடி வைத்திருக்கிறார்.

நேரம் இருப்பின், படித்துப் பாருங்கள். 

கொட்டிக் கிடக்குது பொக்கிஷம். 
Friday, August 19, 2016

இராமாயணம் - வாலி வதம் - வார்த்தையின் வலிமை - பாகம் 2.3

இராமாயணம் - வாலி வதம்  - வார்த்தையின் வலிமை  - பாகம் 2.3
நமக்குத் துன்பம் வரும் போது , யாரால் இந்த துன்பம் வந்தது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் நாம் நொந்து கொள்கிறோம். ஏதோ எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், நாம் மட்டும் தான் துன்பத்தில் வாடுவது போலவும் நாம் நினைத்து வருந்துவோம்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஏன் துன்பம் வரக் கூடாது ? எல்லோருக்கும் வருகிறது. அது போல நமக்கும் இன்பமும் துன்பமும் வருகிறது.

துன்பம் யார் தந்தோ வருவது இல்லை. நாமே தேடிக் கொள்வதுதான். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு வகையில் நாம் செய்த அறம் அல்லாத காரியம் இருந்திருக்கும்.

வாலியின் மார்பில் இராமன் விட்ட அம்பு பாய்ந்தது.

வாலி அதை தன் கைகளாலும், வாலினாலும் பிடித்து நிறுத்தி விட்டான். இராம பாணத்தை தடுத்து நிறுத்திய ஆற்றல் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது.

இவ்வளவு வலிமை வாய்ந்த என் மார்பில் அம்பை ஒரு வில்லின் மூலம் எய்ய முடியாது. அவ்வளவு ஆற்றல் உள்ள ஒருவன் இருக்க முடியாது. இது ஏதோ ஒரு தவ முனிவரின் சாபத்தால் (சொல்லினால்) வந்ததாகத் தான்  இருக்க முடியும் என்று நினைத்து, பல்கலைக் கடித்துக் கொண்டு அந்த அம்பை கொஞ்சம் வெளியே இழுத்துப் பார்த்தான்.பாடல்

‘வில்லினால் துரப்ப அரிது, இவ் வெம்
    சரம்! ‘என வியக்கும்;
‘சொல்லினால் நெடு முனிவரோ
    தூண்டினார்? ‘என்னும்;
பல்லினால் கடிப்புறும் பல
    காலும்; தன் உரத்தைக்
கல்லி, ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
    பகழியைக் கண்டான்.

பொருள்

‘வில்லினால் = வில்லில் இருந்து

துரப்ப அரிது = எய்ய முடியாது

இவ் வெம் சரம்! = இந்த கொடிய அம்பை

‘என வியக்கும்; = என்று வியந்து

‘சொல்லினால் = சாபத்தால்

நெடு முனிவரோ தூண்டினார்? ‘என்னும்; = உயர்ந்த முனிவர் எவரோ அனுப்பி இருப்பாரோ என்று எண்ணினான்

பல்லினால் கடிப்புறும் = பல்லை கடித்துக் கொண்டு

பல காலும்; = நீண்ட நேரம்

தன் உரத்தைக் கல்லி, = மார்பை பிளந்து

ஆர்ப்பொடும் பறிக்கும் = மிகுந்த ஒலியோடு பறித்தான்

 அப் பகழியைக் கண்டான். = அந்த "அம்பைக்" கண்டான்


வார்த்தைகளுக்கு உள்ள மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இராம பாணத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட வாலி சொல்கிறான், இப்படி பட்ட அம்பை வில்லின் மூலம் யாரும் எய்திருக்க முடியாது, முனிவரின் சொல் தான் இவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்று.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை உண்டு.

அசோக வனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்லுவாள்


"அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ் உலகம் யாவதையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்"

ஒரு வார்த்தையில் அனைத்து உலகையும் பொசுக்கி விடுவேன் என்றாள்

அப்படி என்றால் வார்த்தைக்கு, சொல்லுக்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும்.

இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்ற ஆராய்ச்சி ஒரு புறம்  இருக்கட்டும்.

வாரத்தைகளின் மகத்துவம் அறிவோம்.

அவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகளை எவ்வளவு மோசமாக நாம் உபயோகிக்கிறோம்.

அர்த்தம் அற்ற பேச்சுக்கள். வம்பு. புரணி . கோள் சொல்லுதல். என்று எத்தனை வகைகளில் வார்த்தைகளை வீணடிக்கிறோம்.

ஆராய்ந்து பேசுவோம். அர்த்தமுடன் பேசுவோம்.

மந்திரங்கள் என்பது என்ன ? வார்த்தைகளின் தொகுப்பு தானே.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கும் என்றால் மந்திரங்களுக்கும் வலிமை இருக்கும் தானே ?

சிந்திப்போம்....

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/23.html

Thursday, August 18, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2


தன்னை யாராலும் வெல்ல முடியாது, நீ பயப்படாதே என்று மனைவிக்கு தேறுதல் சொல்லிவிட்டு வாலி போருக்கு புறப்படுகிறான்.

சுக்ரீவனோடு சண்டை போடுகிறான்.

சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் போது இராமன் , இராமன் வலியின் மேல் அம்பு எய்துகிறான்.

மிக மிக வலிமை மிக்கவன் வாலி.

இருந்தும் அவன் மார்பில், கனிந்த வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல இராமனின் அம்பு நுழைகிறது.

பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.

பொருள்

காரும் வார் சுவைக் கதலியின் = கனிந்த சுவையான வாழைப் பழத்தில்

கனியினைக் = பழத்தினை

கழியச் சேரும் = விரைந்து செல்லும்

ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது

நின்றது = நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும் = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரைத் தரும் நெருப்பும்

வன் காற்றும் = ஆற்றல் மிகுந்த காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = இவற்றிற்கு கீழே உள்ள நிலமும்

சார் வலி படைத்தவன் = மிகுந்த வலிமை கொண்டவனான

உரத்தை அப் பகழி = வலிமையை அந்த அம்புஒரு பரு வெடிப்பில் (Big Bang ) இருந்து இந்த உலகம் வந்தது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு நெருப்புக் கோளம் வெடித்து சிதறியதில் இருந்து உலகம் அனைத்தும் வந்தது என்று அறிவியல் கூறுகிறது.

கம்பன் கூறுகிறான், ஆதியில் நெருப்பு இருந்தது என்றும், அதில் இருந்து நீர்  வந்தது என்றும், அதில் இருந்து காற்றும் நிலமும் வந்தது என்றும்.

வன் காற்று என்று ஏன் கூறுகிறான் ?

வேன் நெருப்பு என்றோ, வன் நீர் என்றோ கூறி இருக்கலாம் அல்லவா ?

காற்றுக்குத்தான் வலிமை அதிகம்.

இராமாயணத்திலும் சரி, பாரதத்திலும் சரி,  மிக்க உடல் வலிமை மிக்கவர்கள்  வாயு புத்திரர்களே.

இராமாயணத்தில் அனுமன்

பாரதத்தில் பீமன்.

என்ன காரணம் ?

மூச்சை அடக்கினால் வலிமை வரும்.

நாடியில் இருக்கிறது அத்தனை வலிமையையும்.


சரி, வாலியின் பலத்தை எடுத்தது யார் ? இராமனா ?

கம்பன் கூறுகிறான் , வாலியின் பலத்தை எடுத்தது இராமன் அல்ல, அவன்  எய்த அம்பு என்று.

இது என்ன புதுக் கதை ? அம்பு தானாகவா தாக்கியது ?


இராமன் தானே எய்தான் ?

எய்தது இராமன் தான். அதில் சந்தேகம் இல்லை.

"    உரத்தை அப் பகழி."

வாலியின் வலிமையை அந்த "அம்பு"  கொண்டு சென்றது என்கிறான்.

அதற்கு என்ன காரணம் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/22.html


Wednesday, August 17, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1


வாலி வதம் , இராமாயணத்தில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதி. எத்தனை ஆயிரம் சமாதானம் சொன்னாலும், இராமன் மறைந்து இருந்து அம்பு எய்ததை , அவனுடைய பக்தர்களே கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இடம் அது.

ஏன் அது நடந்தது ? இராமன் குழம்பிப் போனானா ? மனைவியைப் பிரிந்ததால் அவன் முடிவு எடுப்பதில் தடுமாறினானா ? அப்படி என்றால் அவனை நம்பி ஒரு பெரிய அரசை எப்படி ஒப்படைப்பது ?

வால்மீகிக்கும், கம்பனுக்கும் இது தெரியாதா ? ஏன் வேலை மெனக்கெட்டு அதை பாட வேண்டும். விட்டு விட்டுப் போகவேண்டியது தானே ? இராமன் போன்ற உயர்ந்த பாத்திரத்தை ஏன் அதன் மதிப்பில் இருந்து நழுவி விழச் செய்தார்கள்.

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?

அது என்ன காரணம் ?

சிந்திப்போம்.

மனிதனின் அறிவை அழிப்பது அவனுடைய ஆணவம். தான் என்ற ஆணவம் வரும்போது மனிதன் வீழ்ச்சியின் முதல் படியில் காலை வைக்கிறான்.

ஆணவம் அறிவுக்குப் போடும் திரை. அது உண்மையை மறைக்கும்.

ஆணவ மலம் ஆதி மலம் என்று சொல்லுவார்கள்.

வாலி, சுக்ரீவனோடு போர் செய்யப் புறப்படுகிறான்.

வாலிலியின் மனைவி தாரை தடுக்கிறாள். இத்தனை நாள் இல்லாத வீரம் சுக்ரீவனுக்கு எப்படி வந்தது ? என்று பலவும் சொல்லி வாலியை தடுத்து நிறுத்த முயல்கிறாள்.

வாலி ஆணவத்தின் உச்சியில் இருந்து பேசுகிறான் .

"இந்த மூன்று உலகமும் என் எதிரில் வந்தாலும், அவை என் முன்னால் நிற்காமல் தோற்று ஓடும் " என்று கூறுகிறான்.

பாடல்

மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘


பொருள்

‘மூன்று என முற்றிய = மேல் , நடு , கீழ் என்று கூறப் படும் அந்த

முடிவு இல் பேர் உலகு = எல்லை அற்ற இந்த பெரிய உலகம் யாவும்

ஏன்று உடன் உற்றன = ஒன்று திரண்டு

எனக்கு நேர் எனத் தோன்றினும், = எனக்கு முன்னே தோன்றினாலும்

 தோற்று அவை  தொலையும் என்றலின் = அவை யாவும் தோற்று ஓடும்

சான்று உள; =அதற்கு சான்று உள்ளது

அன்னவை = அவற்றை

தையல் கேட்டியால். ‘ = பெண்ணே நீ கேட்டுக் கொள்

தன்னை மிஞ்ச இந்த மூன்று உலகிலும் யாரும் இல்லை என்கிறான்.

தனித் தனியாக கூட இல்லை, இந்த மூன்று உலகங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறான்.

அது ஆணவத்தின் உச்சம்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆணவம் கெட்டிப் பட்டிருக்கிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை நம் கண்களுக்குத் தெரியாது.Tuesday, August 16, 2016

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ 

என்ற சினிமா பாடல் வரிகளை கேட்ட உடன் சொக்கிப் போகிறோம். அட டா என்ன ஒரு கற்பனை என்று.

அந்தக் காலத்திலேயே ,  இந்த கற்பனையெல்லாம் தூக்கி அடிக்கும்படி ஆண்டாள் எழுதி இருக்கிறாள்.

மேகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அது வானம் என்ற பெண்ணுக்கு போட்ட மேலாக்கு மாதிரி இருக்கிறது. காற்றில் அது அங்கும் இங்கும் அலைவது , வான மகளின் மேலாடை அசைவது போல இருக்கிறது.

அந்த மேகங்களிடம் ஆண்டாள் கேட்கிறாள்...."என் ஆள், மதுசூதனன் அங்க இருக்கானா " என்று.

மேகங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கின்றன.

அதனால், ஆண்டாளுக்கு இன்னும் துக்கம் அதிகம் ஆகிறது. இங்கும் இல்லை. அங்கும் இல்லை என்றால் எங்கு தான் போனான் இந்த மாயக் கண்ணன் என்று.

அவள் கண்ணில் இருந்து நீர் வழிகிறது.

அது வழிந்து கன்னத்தில் இருந்து நேரே சொட்டு சொட்டாக அவள் மார்பில் விழுகிறது. அவளுடைய மார்பும் கண்ணீரால் நனைகிறது.


பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிறமான வானத்தில்

மேலாப்பு = தாவணி, அல்லது சேலை

விரித்தாற்போல் = அணிந்திருப்பதைப் போல

மேகங்காள் = மேகங்களே


தெண்ணீர்பாய் = தெளிந்த நீர் பாயும்

வேங்கடத்தென் = திரு வேங்கடத்தில் உள்ள என்

திருமாலும் =திருமாலும்

போந்தானே = அங்கு வந்தானா ?

கண்ணீர்கள் = இரண்டு கண்ணில் இருந்தும் வழியும் கண்ணீர்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

துளிசோரச் = துளி துளியாக வடிய

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் =பெண்ணின் குணங்களான நாணம் போன்றவற்றை அழிக்கும்

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா

என்னதான் ஆனாலும் பெண் வாய் விட்டு தன் காமத்தை வெளியே சொல்ல மாட்டாள். தன் ஆசையை வெளிப் படுத்த மாட்டாள். ஆனால், வேறு வழி இல்லாமல், தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விடுகிறது. துக்கம் ஒரு புறம். இப்படி , தன்னை கட்டுப் படுத்த முடியாமல் எல்லோரிடமும் தன் காதல் இப்படி ஒரு வெட்கம் இல்லாமல்  வெளிப் பட்டுவிட்டதே என்ற சங்கடம் ஒரு புறம்.

படிக்கும் எந்த பெண்ணுக்கும் ஆண்டாளின் அவஸ்தை புரியும்.

காதலித்திருந்தால் , ஆணுக்கும் புரியும் அந்த அவஸ்தை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/boss.html

Monday, August 15, 2016

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?


வாலி வதை என்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. இராமன் என்ற அவதார புருஷன் இப்படி ஒரு தவறு செய்யலாமா என்று அவனின் பக்தர்களே ஜீரணிக்க முடியாமல் திணறும் ஒரு இடம் வாலி வதம் .

இராமன் தவறு செய்தான் என்று வைத்துக் கொண்டாள் , ஏன் அந்தத் தவற்றை செய்தான் ? அதற்கு காரணம் என்ன ? காரணம் இருந்தாலும், செய்தது சரிதானா  என்ற கேள்விகள் காலம் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இராமன் , ஆராயாமல் எடுத்த முடிவுக்குக் காரணம் அனுமன்.

மனைவியைப் பிரிந்து, சோகத்தில் இருக்கும் இராமனை தூண்டி விட்டு , அவனை உணர்ச்சி வசப்படச் செய்து தன் காரியத்தை முடித்துக் கொண்டது அனுமனின் சாமர்த்தியம்.

"சுக்ரீவனனின் மனைவியையும் எடுத்துக் கொண்டான்" என்று சொல்கிறான் அனுமன். அப்படி என்றால் என்ன ? சுக்ரீவனனின் அரசையும் எடுத்துக் கொண்டான் என்று பொருள் பட பேசுகிறான்.

வாலி மூத்தவன். அரசு அவனுக்குத் தான் சொந்தம். அப்படி இருக்க , சுக்ரீவனின் அரசை அவன் எடுத்துக் கொண்டான் என்று சொல்வது எப்படி சரியாகும்.

அது மட்டும் அல்ல.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று ஒரு இடத்தில் கூட கம்பன் பதிவு செய்யவில்லை.

இறைவனின் மேல் விழுந்து அழும் மண்டோதரி சொல்கிறாள் "சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் என நாடி தடவியதோ ஒருவன் வாளி " என்று.

வாலியின் மேல் விழுந்து புலம்பும் தாரை அப்படி ஒரு வரிகூட சொல்ல வில்லை.

வாலியின் மேல் வீண் பழியை சுமத்தியது அனுமன். இராமனை தூண்டி அவனிடம் வாலியை கொல்லுவேன் என்று சத்யம் வாங்கியது அனுமனின் பேச்சுத் திறம்.

பாடல்

உருமை என்று இவர்க்கு உரிய தாரமாம் 
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.

பொருள்

உருமை = சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை . அது உருமை என்று வந்தது.

என்று = என்று

இவர்க்கு = சுக்ரீவனுக்கு

உரிய தாரமாம் = உரிமை உள்ள தாரமாம்

அருமருந்தையும் = அறிய மருந்தையும். இங்கு அவன் கூறும் அந்த 'ம்' காவியத்தின் போக்கை மாற்றுகிறது.

அவன் = வாலி

விரும்பினான் = விரும்பினான்

இருமையும் = தாரத்தையும், அரசையும்

துறந்து = துறந்து

இவன்= சுக்ரீவன்

இருந்தனன் = இருந்தான்

கருமம் இங்கு இது = இங்கு நடந்தது இதுதான்

எம் கடவுள் = எமக்கு கடவுள் போன்றவனே

என்றனன் = என்று அனுமன் கூறினான்

அனுமன் , சொற்களை மிக மிக தேர்ந்தெடுத்துப் போடுகிறான்.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று சொல்ல வில்லை. "விரும்பினான்" என்று கூறுகிறான்.

பின், சுக்ரீவன் "இருமையும் இழந்தான்" என்று கூறுகிறான்.

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த இராமன், எல்லாவற்றையும்  தானே முடிச்சுப் போட்டுக் கொண்டு "சுக்ரீவனுக்கு உரிய  தாரத்தையும், அரசையும் வாலி கவர்ந்து கொண்டான் " என்ற முடிவுக்கு வருகிறான்.

பாடம் நடத்துகிறான் கம்பன்.

1. உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அறிவு பூர்வமாக, சிந்தித்து, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால்  கால காலத்துக்கும் துன்பம் தான்.

2. மனைவி என்பவள் மருந்தைப் போன்றவள் என்கிறான் கம்பன். இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் இது போல கூறுகிறான். துன்பத்தை போக்குவது  மருந்து. வலியை குறைப்பது, நீக்குவது மருந்து. கணவனுக்கு வரும் துன்பத்தை போக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்.  துன்பத்தை கொண்டு வந்து தருபவளாக அல்ல.

3. எப்படி பேசுவது என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய காரியத்தையும்  நடத்தி விடலாம். யாருடைய உதவியையும் பெற்றுக்  கொள்ள முடியும். பேசிப் பழக வேண்டும். வார்த்தைகளை கையாள்வதில்  திறமை வேண்டும். வெற்றிக்கு அது முதல் படி.

இராமன் செய்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

அதில் இருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அறிவோம். உயர்வோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_15.html


Saturday, August 13, 2016

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது 


குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை , அவர்கள் பெரியவர்கள் ஆவதற்கு முன்பே சொல்லித் தந்து விட வேண்டும்.

கொஞ்சம் வளரட்டும் , பின்னால் சொல்லித் தரலாம் என்று இருந்தால் , நடக்காது.

ஏன் ?

தர்க்க மூளை வளர்ந்து விட்டால், எதை சொன்னாலும் ஏன் அப்படி என்று கேள்வி கேட்பார்கள். எதற்கும் ஒரு எதிர்மறை எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதை குறை என்று சொல்ல முடியாது. அது வளர்ச்சியின் ஒரு படி. எதையும் எதிர்ப்பது, எதையும் கேள்வி கேட்பது அறிவு வளர்ச்சியின் அறிகுறி.

சிக்கல் என்ன என்றால், நல்லதைச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

புகை பிடிப்பது கெடுதல் என்று சொன்னால், "குடித்தவர்கள் எல்லாம் என்ன கெட்டா போய் விட்டார்கள்" என்ற கேள்வி வரும். சிகரெட் பெட்டியின் மேல் "புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு" என்று எழுதி வைத்தாலும் , அதை வாங்கி குடிக்கிறார்கள்.

ஏன் ? தெரியாமலா ?

இல்லை தெரியும்.

மனம் ஏதேதோ சமாதானம் சொல்லி அவர்களை குடிக்க தூண்டுகிறது.

புகை பிடிப்பது கெடுதல் என்ற எண்ணம் சிறு வயதில் ஆழமாக விழுந்து விட்டால்  , பின்னாளில் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வராது.

ஆண்டாளுக்கு, சிறு வயதிலேயே பெருமாள் மேல் பற்று. காதல்.

கொஞ்சம் வயதான பின், அறிவு நினைக்கிறது. அரக்கனாவது , பூமியை பாயாக சுற்றிக் கொண்டு கடலுக்குள் போவதாவது...இதெல்லாம் சும்மா கதை...என்று அறிவு சொல்கிறது.   அந்த  கதை எல்லாம் மனதில் இருந்து தூக்கி எறிந்து விடலாம் என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

ஏன் ஆண்டாள் அதை தன் மனதில் இருந்து வெளியேற்ற முயன்றாள் ?

யாருக்குத் தெரியும். அருகில் உள்ளவர்கள் ஏதேதோ சொல்லி இருக்கலாம். அது சரி இல்லை, இது இப்படி இருக்காது என்றெல்லலாம் சொல்லி அவள் மனதை மாற்ற முயன்றிருக்கலாம்.

இருந்தும் அவளால் முடியவில்லை.

ஆழ் மனதில் படிந்து விட்டது.

பாடல்

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே


சீர் பிரித்த பின்

பாசி தூர்ந்து கிடந்த பார் மகட்க்கு பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் நீர் வார மானம் இல்லா பன்றியாம்
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசி இருபனகள் பேர்கவும் பேராவே

பொருள்

பாசி  = பாசி படர்ந்து

தூர்ந்து = கேட்பாரற்று தூர்ந்து

கிடந்த - கிடந்த

பார் மகட்க்கு = நில மகளுக்கு

பண்டு = முன்பு

ஒரு நாள் = ஒரு நாள்

மாசு = அழுக்கு

உடம்பில் = உடலில்

நீர் வார = நீர் வழிய

மானம் இல்லா பன்றியாம் = மானம் இல்லாத பன்றியாக

தேசு = தேஜஸ். ஒரு கம்பீரம், ஒரு அமைதி, அந்த கூரிய பற்கள்...நீர் சொட்ட சொட்ட நிற்கும் அந்த தோரணை...அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.

உடைய = உடைய

தேவர் = தேவனான

திருவரங்க செல்வனார் = திருவரங்கத்தில் உள்ள செல்வமான பெருமாள்

பேசி இருபனகள் = அவரைப் பற்றி பேசிய பேச்சுக்களை

பேர்கவும் பேராவே  = மனதை விட்டு விலக்க முயன்றாலும் முடியவில்லை

வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டி விட வேண்டும். வெள்ளம் வந்த பின்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் வெள்ளம் , அணையையும் சேர்த்து அடித்துக் கொண்டு போய் விடும்.

அறத்தை, நல்லதை , பிஞ்சு மனங்களில் படித்து விட வேண்டும்.

தடுப்பூசி போடுவது போல. முதலில் அதைப் போட்டு விட்டால், பின் எத்தனை நுண் கிருமிகள் தாக்கினாலும் ஒரு நோயும் வராது.

குழந்தைகளுக்கு நல்லது இளமையிலேயே சொல்லி வையுங்கள்.

வருங்காலத்திற்கான தடுப்பூசி அது.

பிள்ளைகளுக்கு சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை, பேரக் குழந்தைகளுக்கு  சொல்லித் தாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_13.html
வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம் 


நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான். 

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான். 

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான். 

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள். 

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று. 

பாடல் 

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள் 


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு 

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த 

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும் 

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும் 

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும் 

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும் 


உ ண்மையான = உண்மையான 

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் 

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான் 

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை 


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று மதத்தவள் என்பதால் அவளின் அழகு குறைந்து விடுமா ?

உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் வாயை அடைப்பதற்காக கூட அவன் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், அவன் மூலம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்கிறார் வில்லிபுத்தூரார். 

அறிவோம். 

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம். 

அறிவோம். உயர்வோம். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post.html

Wednesday, August 3, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்


நமக்கு ஏன் ஏமாற்றங்கள் வருகின்றன ?

எவ்வளவோ முயற்சி செய்தேன், கடைசியில் கை நழுவித் போய் விட்டது என்று வருந்தியர்கள் எத்தனை பேர்.

காரணம் என்ன ?

எவ்வளவு முயற்சி வேண்டும் எந்தப்பதில் தப்பு கணக்கு போட்டு, கடைசியில் ஏமாந்து போனவர்கள் ஏராளம்.

எந்த ஒரு வேலையை செய்வதானாலும் , அந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு முயற்சி தேவை என்று தெளிவாக ஆராய்ந்து பின் செயலில் இறங்க விடும். இல்லை என்றால் ஏமாற்றமும் விரக்தியும் தான் மிஞ்சும்.

அவன் செய்தான், இவன் செய்தான் என்று நாமும் இறங்கி விடக் கூடாது.

நமது திறமை என்ன, நமது வலிமை என்ன, நம்மால் என்ன ஆகும் என்று அறிந்து பின் செயலின் இறங்க வேண்டும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டு அவதிப் படக் கூடாது.

நிறைய பேர் தெரியாமல் தொழில் தொடங்கி நட்டப் பட்டிருக்கிறார்கள். தெரியாமல் ஏதாவது ஒரு துறையில் இறங்கி, கல்லூரியில் படிக்க முடியாமல் திணறியவர்கள் ஏராளம்.

அனுமன் கடலை தாண்ட தாவிக் குதிக்கிறான்.

ஒரு காலத்தில் அகத்திய மா முனிவர் இந்த கடல் அனைத்தையும் தன்  வயிற்றுக்குள் அடக்கி பின் உமிழ்ந்தவர். அனுமனை பார்த்து தேவர்கள்  கூறினார்கள், "அகத்தியர் உண்டு உமிழ்ந்த கடல் தானே, சின்னாதாக இருக்கும் என்று எண்ணாதே" என்று அறிவுரை பகர்ந்தார். நல்லது என்று அனுமனும் கேட்டுக் கொண்டான்.


பாடல்

‘குறு முனி குடித்த வேலை
    குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும்
    விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை
    அல்லை; நீ சேறி! ‘என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்;
    ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.


பொருள் 

‘குறு முனி =  உயரம் குறைந்த முனிவரான அகத்தியர்

குடித்த வேலை = குடித்த கடல்

குப்புறும் கொள்கைத்து ஆதல் = பாய்ந்து கடக்க வேண்டி இருத்தல்

வெறுவிது = சிறியது, மதிக்கதாகதது

விசயம் வைகும் = வெற்றி கொண்ட

விலங்கல் = மலை போன்ற

தோள் = தோள்களில்

அலங்கல் = மாலை அனிதா

வீர! = வீரனே

சிறிது இது என்று = சின்னது இது என்று

இகழல் பாலையல்லை  = அற்பமாக நினைக்காதே

நீ சேறி! = நீ விரைந்து செல்க

 ‘என்னா = என்று

உறுவலித்  = வலிமை உடைய

துணைவர் சொன்னார் = நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான் = ஏற்றுக் கொண்டான்

பொருப்பை = மலையை

ஒப்பான்  = போன்ற உடல் உடைய அனுமன்


எந்த வேலையையும் அற்பமாக நினைக்காமல், அதற்கு வேண்டிய முயற்சி யை அளித்து அந்த செயலில் வெற்றி பெற வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_3.html


Monday, August 1, 2016

குறுந்தொகை - கை இல்லாத இதயம்

குறுந்தொகை - கை இல்லாத இதயம் 
அவர்களால் சந்திக்க முடியவில்லை. தங்கள் காதலை whatsapp லும் ,  குறுஞ் செய்திகள் (S M S ) மூலமும் பரிமாறிக் கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் ,நேரில் சென்று அவள் கை பிடிப்பது போல வருமா ? கட்டி அணைக்கும் சுகம் கை பேசி தகவல் பரிமாற்றத்தில் வருமா.

வராது.

இதயம் , நினைத்த மாத்திரத்தில் அவளிடம் போய் விடுகிறது. போய் என்ன செய்ய ? கை கோர்க்க, கட்டி அணைக்க கை வேண்டாமா ? அது தெரியாமல் இந்த இதயம் ஊருக்கு முந்தி அவளிடம் சென்று விடுகிறது.

இது இன்றைய நிலை. குறுந்தொகை காலத்திலும் இதே கதை தான்.

பொருள் தேடி காதலன்  வெளி நாடு சென்று திரும்பி வருகிறான்.  அவளை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல். எத்தனை வருடம் ? அவன்  போவதற்குள் அவன் இதயம் அவளிடம் ஓடிப் போய் விட்டது.

காதலன் , தன்னுடைய தேர் பாகனிடம் சொல்கிறான்....

"நாம் நம் தலைவியின் இருப்பிடம் நோக்கிச் செல்கிறோம். போகிற வழியோ ஆபத்து நிறைந்தது. புலிகள் நிறைந்த காட்டுப் பாதை. கடல் ஆரவாரித்து எழுவது போல அந்த கொலை நோக்கம் கொண்ட புலிகள் பாய்ந்து வரும். இடைப்பட்ட தூரமோ அதிகம். என் இதயம் இருக்கிறதே , அது என்னை கேட்காமல் அவளைக் காண ஓடி விட்டது. போய் என்ன செய்யப் போகிறது ? அவளை கட்டி பிடிக்க முடியுமா அதனால் ? நான் எதை நினைத்து வருந்துவேன் " என்று மயங்குகிறான் காதலன்.

காதலியைத் தேடும் அவன் ஆர்வத்தை, அவனுக்கு முன்னால் சென்ற அவன் இதயத்தை, புலி நிறைந்த கானகத்தின் சாலைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்....

பாடல்


அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 

நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
   
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
    
சேய வம்ம விருமா மிடையே 

மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
    
கோட்புலி வழங்குஞ் சோலை 
    
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள் 


அஞ்சுவ தறியா = அஞ்சுவது அறியாமல்

தமர்துணைதழீஇய = நாம் விரும்பும் தலைவியை தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் நெஞ்சானது

நப் பிரிந்தன் றாயினு = என்னை பிரிந்து அவளை காண சென்றாலும்

எஞ்சிய = மீதியுள்ள
 
கைபிணி = கையால் பிணித்தல் (கட்டித்த தழுவுதல்)

நெகிழினஃ தெவனோ = நெகிழ்ந்து விடுமாயின் , தவறி விட்டால். நெஞ்சத்தால் எப்படி கட்டி தழுவ முடியும் ?

நன்றும் சேய  = சேய்மை என்றால் தூரம். மிக தொலைவில்

அம்ம விருமா மிடையே = எங்களுக்கு இடையில் உள்ள தூரம்

மாக்கடற் றிரையின் = மா + கடல் + திரையின் = பெரிய கடலின் அலை போல

முழங்கி = சப்த்தம் செய்து

வலனேர்பு  =வலமாக எழுந்து
 
கோட்புலி = கொலை நோக்கம் கொண்ட புலி

வழங்குஞ் சோலை =  இருக்கின்ற சோலைகள்
 
எனைத்தென் றெண்ணுகோ = எத்தனை என்று எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைக்க

மலைவே = தடைகள்

காலங்கள் மாறலாம். மனித உணர்ச்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.

காலங்கள் கடந்தாலும் காதல் தாகம் தீர்ந்தபாடில்லை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_99.html

இராமாயணம் - சுந்தர காண்டம் - தொடங்குங்கள், உலகம் உங்கள் பின்னால்

இராமாயணம் - சுந்தர காண்டம் - தொடங்குங்கள், உலகம் உங்கள் பின்னால் 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth that ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamed would have come his way. Whatever you can do, or dream you can do, begin it. Boldness has genius, power, and magic in it. Begin it now.”


― William Hutchison Murray

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஒரு உறுதி வேண்டும். Committment .

உடற் பயிற்சி செய்யப் போகிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கப் போகிறேன்....இந்த Course படிக்கப் போகிறேன், என்று எதை எடுத்தாலும் ஒரு உறுதி வேண்டும்.

உறுதியோடு ஆரம்பித்தால் , உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.


நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து உதவி தானே வரும்.

அனுமன் இலங்கை நோக்கி செல்லத் தொடங்குகிறான்.

வானவர்களும், தேவர்களும் மற்றையவர்களும் வந்து நின்று அவன் மேல் பூ மாறி பொழிந்து "வென்று வருக" என்று வாழ்த்துச் சொன்னார்கள்.

நீங்கள் ஒரு நல்ல காரியத்தை , உறுதியோடு ஆரம்பியுங்கள். மூவரும், தேவரும் உங்கள் பின்னால் இருப்பார்கள்.

நம்புங்கள்.

இராம காதை தரும் நம்பிக்கை இது.

யார் நமக்கு உதவுவார்கள் என்று சோர்ந்து இருக்காதீர்கள்.

எழுந்து சுறு சுறுப்பாக காரியத்தில் இறங்குங்கள். உதவி வரும்.

அனுமன் தேவர்களின் உதவியைக் கேட்கவில்லை. அவர்களே வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.

அப்படி , உயர்ந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் கிடைக்கும்.

பாடல்

இத் திறம் நிகழும் வேலை,
    இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும்,
    முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
கொத்து உறு மலரும், சாந்தும்,
    சுண்ணமும், மணியும், தூவி,
‘வித்தக! சேறி ‘என்றார்;
    வீரனும் விரைவது ஆனான்.பொருள்

இத் திறம் = இப்படியாக

நிகழும் வேலை = நிகழும் நேரத்தில்

இமையவர் = தேவர்கள்

முனிவர் = முனிவர்கள்

மற்றும் = மேலும்

முத்திறத்து உலகத்தாரும் = மூன்று உலகில் உள்ள அனைவரும்

முறைமுறை = வரிசை வரிசையாக

விசும்பின் = மலையின் கண்

மொய்த்தார், = வந்து சேர்ந்தனர்

கொத்து உறு மலரும் =  கொத்து கொத்தான மலர்களையும்

சாந்தும், = சந்தனமும்

சுண்ணமும் = வாசனைப் பொடிகளையும்

மணியும் = மணிகளையும்

தூவி = தூவி

‘வித்தக! = அறிஞனே

சேறி ‘என்றார்; = சென்று வா என்றார்கள்

வீரனும் விரைவது ஆனான் = அனுமனும் விரைந்தான்

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_1.html