Showing posts with label திருபூவல்லி. Show all posts
Showing posts with label திருபூவல்லி. Show all posts

Thursday, July 31, 2014

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் 


வாழ்க்கைக்குத் துணை அவசியம்.

யார் அல்லது எது துணை என்பதில்தான் சிக்கல்.

பிள்ளைகள் துணையா ? அவர்கள் வாழ்க்கை வேறு போக்கில் போய் விடும். அவர்களை நம்பி பயன் இல்லை. கடைசிக் காலத்தில், அவர்களின் வேலையையயும் குடும்பத்தையும் விட்டு விட்டு நம் பக்கம் வந்து  இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மதியீனம்.

அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமன், மச்சான் என்ற உறவுகள் எல்லாம்  பேருக்குத்தான்.

கணவன் மனைவி - முடியலாம். வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பாரம்தான். ஒருவேளை சகித்துப் போகலாம்.


ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பது பட்டினத்தார் வாக்கு 


மாணிக்க வாசகர் கூறுகிறார்....

இறைவா நீ உன் திருவடிகளை என்   தலை மேல் வைத்த பின் எனக்கு துணை என்று இருந்த சுற்றங்கள் அத்தனையும் துறந்து  விட்டேன். அப்பேற்பட்ட சிவனின்  பெருமைகளைப் பாடி நாம் பூ கொய்வோம்

பாடல்

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பொருள்

இணையார் திருவடி = இணையான இரண்டு திருவடிகளை

என்தலைமேல் = என் தலைமேல்

வைத்தலுமே = வைத்தவுடன்

துணையான சுற்றங்கள் = துணையான சுற்றங்கள்

அத்தனையுந் = அனைத்தையும்

துறந்தொழிந்தேன் = துறந்தேன்

அணையார் = அணையில் உள்ள

புனற்றில்லை = நீர் ஆடும் தில்லை

அம்பலத்தே ஆடுகின்ற = அம்பலத்தே ஆடுகின்ற

புணையாளன் = துணைவன்

சீர்பாடிப் = பெருமைகளைப் பாடி

 பூவல்லி கொய்யாமோ = நாம் பூ கொய்வோம்

இறைவனின் திருவடிகள் என்று நம் மதம் கூறுவது ஒரு குறியீடு. திருவடி என்பது ஞானம்.

ஞானம் வரும்போது பற்றுகள் அகலும்.

திருவடி என்பது ஞானம் என்பது சரியா ?

மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.