Showing posts with label பெரிய புராணம். Show all posts
Showing posts with label பெரிய புராணம். Show all posts

Saturday, June 26, 2021

பெரிய புராணம் - தெளிவு இல்லதே

 பெரிய புராணம் - தெளிவு இல்லதே 


வாழ்க்கை பெரிய துரித கதியில் சென்று கொண்டு இருக்கிறது. 


அனைத்திலும் ஒரு வேகம். ஒரு பதற்றம். ஒவ்வொரு வாகனமும் ஒன்றை விட ஒன்று முந்திக் கொண்டு வருகின்றன. எவ்வளவு சீக்கிரத்தில், எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்று போட்டி போட்டுக் கொண்டு பறக்கின்றன. 


எதற்கும் நேரம் இல்லை. மழை, வெயில், மின் கம்பியின் மேல் இருக்கும் அந்த சின்னக் குருவி, குழந்தையின் சிரிப்பு, அதிகாலைச்  சூரியன், அந்தி சந்திரன்..இப்படி ஆயிரம் ஆயிரம் இனிமையான விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. எதையும் பார்க்க, இரசிக்க, அனுபவிக்க  நேரம் இல்லை. 


பணம், பொருள், சொத்து, அதிகாரம், பதவி, எதிர்கால கனவு/பயம் என்று வாழ்கை ஒரு சாரம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. 


பெரிய புராணம் போன்ற மிகப் பெரிய இலக்கியத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், ஆற்றின் நீரோட்டத்தை, நின்று, இரசித்து, அனுபவித்து எழுதுகிறார்.


ஆற்றின் நீரோட்டம் கலங்கலாக இருக்கிறது. ஏன் கலங்கி இருக்கிறது என்றால், பெண்கள் ஆற்றில் நீராடுவார்கள், அவர்கள் உடலில் உள்ள சந்தனம், குங்குமம் போன்றவை நீரில் கலந்ததால் அந்த நீர் தெளிவு இல்லாமல் இருக்கிறதாம். 


பாடல் 


வாச நீர்குடை மங்கையர் கொங்கையிற்  

பூசு கும்கும மும்புனை சாந்தமும்

விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்

தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_26.html


(please click the above link to continue reading)


வாச நீர் = வாசம் உள்ள நீர் 


குடை = குடைந்து குடைந்து நீராடும் 


மங்கையர் = பெண்கள் 


கொங்கையிற்  = மார்பில் 


பூசு  = பூசிய 


கும்கும மும் = குங்குமமும் 


புனை சாந்தமும் = அணிந்த சந்தனமும் 


விசு = வீசி 


தெண்டிரை =  அலையால் 


மீதழித் தோடுநீர் = மிகையாக அழித்துக் கொண்டு ஓடும் நீர் 


தேசு = ஒளி 


உடைத்தெனி னுந்  = பொருந்தியதாயினும் 


தெளி வில்லதே. = தெளிவு இல்லாமல் கலங்கி இருந்தது 


சரி, இதில் என்ன இருக்கிறது ? பெண்கள் குளிக்கிறார்கள். சந்தனமும், குங்குமமும் நீரில் கலந்து இருக்கிறது. நீர் தெளிவாக இல்லை.  இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? 


இயற்கையை இரசிக்க தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி இரசித்து இருக்கிரார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அட, இதை இப்படியும் இரசிக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. 


Wordsworth என்ற ஆங்கில் கவிஞர் ஒரு கிராமத்தில் வயலோரம் நடந்து போகிறார். அங்கே யாரோ ஒரு முகம் தெரியாத பெண்  கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். அது என்ன பாட்டு என்றும் அவருக்குத் தெரியாது. 

இதில் என்ன இருக்கிறது? 

அதைப் பற்றி ஒரு பாடல் எழுதி இருக்கிறார். காலத்தால் அழியாத பாடல். 



The Solitary Reaper

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?—
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.


இரசிக்க பழக வேண்டும்.

இரசிக்க ஆயிரம் இருக்கிறது. இரசிக்க இரசிக்க வாழ்கை இனிமையாக இருக்கும். 



Thursday, June 24, 2021

பெரிய புராணம் - உலகம் உய்ய

 பெரிய புராணம் - உலகம் உய்ய 


சோழ நாட்டின் அரசன் அநபாய சோழன் என்பவன். அவன் ஒரு காலகட்டத்தில் பல சிற்றின்ப நூல்களை படித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அவனிடம் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். 


மன்னன் இப்படி சிற்றின்ப நூல்களைப் படித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு கீழே உள்ள அதிகாரிகளும் அந்த மாதிரி நூல்களையே படிப்பார்கள். அவர்களைப் பார்த்து குடி மக்களும் அதே மாதிரி நூல்களைப் படிப்பார்கள். நாடே நலிந்து போகும் என்று நினைத்து, சேக்கிழார் பெருமான் அரசனிடம் அந்த மாதிரி நூல்களைப் படிக்க வேண்டாம் என்றார். 


அதற்கு அரசன், "சரி இந்த மாதிரி நூல்களைப் படிக்கவில்லை...வேறு எந்த மாதிரி நூல்களைப் படிக்கட்டும்" என்று கெட்டான். 


சேக்கிழார் :  அடியார்கள் பற்றிய செய்திகளை படியுங்கள் 


அரசன்: அடியார்கள் பற்றிய நூல் இருக்கிறதா ?


சே: நூலாக இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள், கதைகள் என்று இருக்கிறது 


அ: அப்படியானால் நீரே அவற்றை தொகுத்து ஒரு நூலாக செய்து தாருங்கள் படிக்கிறேன் 


சே: முதலைமைச்சர் பதவியும் பார்த்துக் கொண்டு, நூல் எழுதுவது என்பது நடவாத காரியம். நேரம் இருக்காது


அ: அப்படியா, பரவாயில்லை, நீங்கள் முதலைமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்த நூலை எழுதுங்கள் என்றான். 


சேக்கிழாரும் அவ்வாறே செய்தார். 


இது ஒரு ஒரு அநபாயனுக்கு, அவர் முதலைமைச்சர் எழுதிய நூல் என்று கொள்ளக் கூடாது. 


எல்லா காலகட்டத்திலும், தலைவர்கள் வழி தவறுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று குடி மக்களும் அறம் தவறுவார்கள். என்றென்றுக்கும் வழி காட்ட இந்த நூலைச் செய்தேன் என்கிறார். 


உலகம் உய்ய இந்த திருத் தொண்டர்களின் வரலாற்றை பாடுகிறேன் என்கிறார். 


தொண்டர்களின் வரலாற்றைப் படித்தால் உலகம் உய்யுமா என்று கேட்டால் அதற்கு இரண்டு விடை இருக்கிறது. 


ஒன்று, சேக்கிழார் போன்ற ஆழுந்து அகன்ற நுண்ணிய அறிவு உடையவர்கள் சொல்வது தவறாக இருக்காது என்று நம்பலாம். 


இல்லை. அதெல்லாம் நம்ப முடியாது. அது யாராக இருந்தால் என்ன, இதைப் படித்தால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றம் வந்தால் மேலே படியுங்கள். இல்லை என்றால் விட்டு விடலாம். 


கொஞ்சம் படியுங்கள். புரியும். 


பாடல் 


உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  

அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய

நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை

குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_24.html


(please click the above link to continue reading)



உலக முய்யவுஞ் = உலகம் உய்யவும். உய்தல், தவறுகளில் இருந்து தப்பி, நிலைத்து வாழ்தல் 


சைவநின் றோங்கவும் = சைவ நெறி நின்று ஓங்கவும் 


அலகில் சீர் = அளவற்ற சிறப்புகள் நிறைந்த 


நம்பி யாரூரர் பாடிய = நம்பி ஆரூரர் பாடிய 


நிலவு = நிலைத்து இருக்கும் 


தொண்டர்தங் = தொண்டர்களின் 


கூட்டம் நிறைந்துறை = கூட்டம் நிறைந்து, வாழும் 


குலவு = விளங்கும் 


தண்புன னாட்டணி கூறுவாம். = தண் + புனல் + நாட்டு + அணி + கூறுவாம் 


குளிர்ந்த நீரை உடைய நாட்டின் (சோழ நாட்டின்) சிறப்பைக் கூறுவோம். 




Monday, June 21, 2021

பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார்

 பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார் 


தகவல் தொழில் நுட்பம் (information technology ), உயிரியல் தொழில் நுட்பம் (bio technology ) என்று உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெரிய புராணம், திருக்குறள் என்று பழம் பாட்டு படிப்பதில் காலணாவுக்கு புண்ணியம் உண்டா? 


இதை எல்லாம் நேரம் செலவழித்து படித்து என்ன ஆகப் போகிறது? 


வளர்ச்சி என்றால் அது முழுவதுமாக இருக்க வேண்டும். உடலில் ஒரு பக்கம் மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது, இன்னொரு பக்கம் வளராமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எப்படி இருக்கும். 

வலது கை நாலு அடி நீளம், இடது கை இரண்டு அடி நீளம். வலது கால் மூணு அடி நீளம். இடது கல் ஒரு அடி நீளம் என்று இருந்தால் எப்படி இருக்கும். பக்க வாதம் வந்த மாதிரி இருக்கும் அல்லவா. வளர்ச்சி என்றால் அது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்க வேண்டும். 


மனிதர்கள் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கலவை. அறிவியல் வளர்ந்து கொண்டே போகிறது. மிக வேகமாக வளர்கிறது. அதை வளர்க பள்ளிகள், கல்லூரிகள், என்று இருக்கின்றன.


மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகள் வளர என்ன வழி இருக்கிறது? 


இலக்கியமும், சமயமும் மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகளை செம்மை படுத்தி வளர்க்க உதவும். உதவ வேண்டும். 


ஆனால், வருந்த்தத்தக்க  விடயம் என்ன என்றால், உரம் ஊட்ட வேண்டிய இலக்கியமும், மதமும், பெரும்பாலும் நஞ்சை ஊட்டுகின்றன. 


வேற்றுமையை வளர்த்து, பகையை உருவாக்கி, மலினமான பால் உணர்சிகளை தூண்டி பணம் பார்க்கும் வழிகளாக உருவாகி விட்டன. 


இதில் இருந்து தப்பி, நல்ல உயர்ந்த இலக்கியங்களை, பொருள் அழகும், சொல் அழகும், இலக்கிய நயமும், பண்பாடும், கலாச்சாரமும் செறிந்த உயர்ந்த இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்க வேண்டும். 


இல்லை என்றால், அறிவு வளரும். மனம் வளராது. 


இதை மனதில் கொள்ள வேண்டும். 


கதைக்கு வருவோம். 


கைலாய மலை. அருகில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் பூ பறிக்க இரண்டு தேவ லோக பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பூ பறிக்கும் போது, அங்கே சுந்தரரும் வருகிறார். அவர்களைப் பார்கிறார். 


அந்தப் பெண்கள் கண்ணிலும், சுந்தரர் கண்ணிலும் காதல் மலர்கிறது. 


நடந்தது அவ்வளவு தான். அதை சேக்கிழார் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள். 


பாடல் 


மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்

தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்

போது வாரவர் மேன்மனம் போக்கிடக்

காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_21.html


(Please click the above link to continue reading)


மாத வஞ்செய்த = பெரிய தவத்தை செய்த 


தென்றிசை  = தென் திசை (தமிழ் நாடு) 


வாழ்ந்திடத் = வாழ்ந்திட 


தீதி லாத் = தீமையை இல்லாது செய்யும் 


திருத் தொண்டத் தொகை = திருத் தொண்டத் தொகை  என்ற நூலை 


தரப் = தருவதற்காக 


போது வாரவர் = போது என்றால் மலர். மலர் கொய்ய வந்த அந்த இளம் பெண்கள் 


மேன் = மேல் 


மனம் போக்கிடக் = மனதை செலுத்த 


காதன் மாதருங் = காதல் கொண்ட அந்தப் பெண்களும் 


காட்சியிற் கண்ணினார். = கண்களால் அதை வெளிப்படுத்தினார் 


அவர் அந்தப் பெண்கள் மேல் மனம் செலுத்தக் காரணம் நமக்கு திருத் தொண்டர் தொகை என்ற நூலைத் தருவதற்காக என்கிறார் சேக்கிழார். 


அவர் காதலாக பார்பதற்கும், இந்த நூலுக்கும் என்ன சம்பந்தம்?


மேலும் சிந்திப்போம். 



Friday, June 18, 2021

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள்

 பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் 


நம் வீடாகவே இருந்தாலும், இருட்டில் மாட்டிக் கொண்டால் எது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முட்டி மோதிக் கொள்வோம்.  கண் இருக்கிறது. பார்வை இருக்கிறது. அறிவு இருக்கிறது. தெரிந்த இடம்தான். இருந்தும், இருட்டில் ஒன்றும் தெரியாது அல்லவா. 


அது போல, உலகம் இருக்கிறது. நமக்கு அறிவு இருக்கிறது.  தெரிந்த இடம்தான். பழகிய இடம்தான். இருந்தும், அறியாமை என்ற இருள் இருந்தால் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தப்புத் தவறாக செய்து காயப் பட்டுக் கொள்வோம். 

  

புற இருளை நீக்க சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க ?


அறியாமையை நீக்க இந்த பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார். 


பாடல் 


இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்

தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற

பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற

செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_18.html


(Please click the above link to continue reading)


இங்கு = இங்கு 


இதன் = இதன் 


நாமம் கூறின் = இந்த நூலின் பெயரை கூறினால் 


இவ் உலகத்து = இந்த உலகில் 


முன்னாள் = முன்பு 


தங்கு இருள் = தங்கிய இருள் 


இரண்டில் = இரண்டில் 


மாக்கள் = சிந்திக்கும் திறம் அற்றவர்களின் 


சிந்தையுள் சார்ந்து நின்ற = சிந்தையுள் சார்ந்து நின்ற 


பொங்கிய இருளை = பொங்கிய இருளை 


ஏனைப் = மற்ற 


புற இருள் போக்கு கின்ற = புறத்தில், வெளியில் உள்ள இருளை போக்குகின்ற 


செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல 


நீக்கும்= நீக்கும் 


திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம் 


என்பாம் = என்று கூறுவோம் 



புற இருளை நீக்குகின்ற சூரியனைப் போல அக இருளை நீக்குகின்ற நூல் இது. இதன் பெயர் திரு தொண்டர் புராணம். 


இது தொண்டர்களைப் பற்றியது. இறைவனைப் பற்றியது அல்ல. 


"சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருள்"  என்று நான்கு அடை மொழி போடுகிறார் சேக்கிழார். 


மனதில் உள்ள இருள் 


மனதை சார்ந்து நிற்கும் இருள். பற்றிக் கொண்டு இருக்கும் இருள். 


நிற்கும் இருள். ஏதோ வந்தோம், போனோம் என்று இருக்காது. நிற்கும் இருள். 


பொங்கும் இருள். நின்றால் மட்டும் போதாது. பொங்கும் இருள். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும். 


யோசித்துப் பாருங்கள். ஒரு ஊருக்குப் போக வேண்டும். தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டீர்கள். எவ்வளவு வேகமாக போனாலும், போய்ச் சேர வேண்டிய இடம் வராது. என்னடா இது இன்னும் வரலியே என்று இன்னும் வேகமாக வண்டியை ஓட்டினால் என்ன ஆகும். சேர வேண்டிய இடத்தை விட்டு மேலும் விரைவாக விலகிச் செல்வோம் அல்லவா?


அது போல, தவறு செய்ய ஆரம்பித்து விட்டால், அது தவறு என்று தெரியாவிட்டால், தொடர்ந்து மேலும் மேலும் அதை செய்து கொண்டே இருப்போம். பழக பழக அது இலகுவாகி விடும். அதிகமகாச் செய்வோம். 


பொங்கிய இருள். 


அப்புறம், அங்கு ஒருவர் வந்து நாம் செல்ல வேண்டிய ஊருக்கு போகும் வழி உள்ள map ஐ நம்மிடம் தருகிறார். அடடா, இப்படி போகனுமா? தெரியாம இந்த வழியில் வந்து விட்டேனே என்று நாம் நம் பாதையை திருத்திக் கொள்வோம் அல்லவா. அது போல, வழிகாட்டி இந்த நூல் என்கிறார். 


அது உண்மையும் கூட. எப்படி என்றால், செல்லும் ஊருக்கு ஒரு வழி அல்ல   64 வழிகளை காட்டுகிறார்.  


நடந்து போனால் இப்படி, இரண்டு சக்கர வாகனம் என்றால் இப்படி, நாலு சக்கர வாகனம் என்றால் இப்படி, பறந்து போவது என்றால் இப்படி என்று 64 வழிகளை காட்டுகிறார். 


நீங்கள் உங்களுக்கு வேண்டிய வழியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். 


அது மட்டும் அல்ல, 


வழி தவறி பல பேர் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பார்கள். 


செல்ல வேண்டிய இடம் ஊருக்கு நடுவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் அந்த இடத்துக்கு வடக்கில் இருகிறீர்கள் என்றால், உங்களுக்கு வழி சொல்லும் போது தெற்கே போக வேண்டும் என்று சொல்ல வேண்டும். 


அது போல, தெற்கில் ஒருவர் இருந்தால் அவரை வடக்கு நோக்கி போகச் சொல்ல வேண்டும். மேற்கில் இருந்தால் கிழக்கு நோக்கியும், கிழக்கில் இருந்தால் மேற்கு நோக்கியும் போகச் சொல்ல வேண்டும். 


எல்லோருக்கும் ஒரு வழி காட்ட முடியுமா? எல்லோரும் தெற்கே போங்கள் என்றால் சரியாக இருக்குமா. இருக்கும் இடத்ததை வைத்துக் கொண்டு , போகும் இடத்துக்கு வழி சொல்ல வேண்டும். 


எனவே, பல வழிகள் தேவைப் படுகிறது. 


எனவே தான் இது பெரிய புராணம்.  அத்தனை வழிகள். 


மேலும் சிந்திப்போம். 



Tuesday, June 15, 2021

பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்

 பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர் 


உயர்ந்த நூல்களைப்  படிக்கும் போது நாம், நம் தரத்தை உயர்த்திக் கொள்ள பழக வேண்டும். 


சிலர் பெரிய நூல்களை, உயர்ந்த கருத்துகளை உள்ள நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு, இதை எழுதியவர் என்ன ஜாதி, என்ன குலம், அதனால்தான் இப்படி எழுதி இருக்கிறார் என்று தங்கள் சிறுமையை நூல்களின் மேல் ஏற்றத் தலைப் படுகிறார்கள். 


மேலும் சிலரோ, இது என்ன எதுகை, என்ன மோனை என்று இலக்கணம் படிக்க இறங்கி விடுகிறார்கள். நூலின் கருத்தை விட்டு விடுகிறார்கள். 


இன்னும் சிலர், தங்களுக்கு பிடிக்காத கருத்துகள் இருந்தால், அந்தப் பகுதி இடைச் செருகலாக இருக்கும் என்று அதை புறம் தள்ளி விடுகிறார்கள்.  புதிதாக ஒரு அறிவும் உள்ளே வரக் கூடாது என்பதில் அப்படி ஒரு பிடிவாதம். 


சேக்கிழார் சொல்கிறார், 


"நான் சொல்லப் போகும் பொருளின் சிறப்புக்  கருதி, நான் சொல்லும் சொல்லின் பொருளைக் கொள்வார்கள் மெய் பொருளை நாடுபவர்கள். என்னுடைய உரை சிறிதாக இருந்தாலும், பொருளின் பெருமை நோக்கி அதைப் பெரிதாக கொள்வார்கள்" 

என்கிறார். 


யாரோ கொஞ்சம் நாயன்மார்கள், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள், பக்தி செய்தார்கள், முக்தி அடைந்தார்கள். அதை தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப் போகிறது. நமக்கு இருக்கு ஆயிரம் கவலை.  ஞானசம்பந்தர் அழுதால் என்ன, பார்வதி வந்து பால் தந்தால் என்ன என்று நினைக்கலாம். 


கோவிலுக்குப் போகிற கூட்டம் போலத்தான். 


சிலர் பக்தியோடு போவார்கள், சிலர் அன்பினால், நன்றியால் போவார்கள், சிலர் தங்கள் துக்கத்தை சொல்லி முறையிட போவார்கள், சிலர் அங்கே தரும் சுண்டல், பொங்கல் வாங்கப் போவார்கள். 


சுண்டல் வாங்கப் போனாலும், நாளடைவில் அவர்களும் பக்தி நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது. 


பக்தி, இறைவன், முக்தி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தமிழின் இனிமை கருதி படியுங்கள். 


சொல்லின் ஆழம், கருத்தின் செறிவு, சொல்லும் அழகு...இவற்றை கருதி கூட வாசிக்கலாம். 


யாருக்குத் தெரியும், எந்த பாதை எங்கே பிரியும் என்று. 


பாடல் 


செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்

அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்

இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்

மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_15.html


(please click the above link to continue reading)


செப்ப லுற்றா  = கூறிய 


பொருளின் = பொருளின் 


சிறப்பினால் = உயர்வால் 


அப்பொ ருட்குரை = அந்த பொருளுக்கு உரை 


யாவரும் கொள்வரால் = எல்லோரும் கொள்வார்கள் 


இப்பொ ருட்கு = இந்தப் பொருளுக்கு 


என் னுரை = என்னுடைய உரை 


சிறி தாயினும் = அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் 


மெய்ப் பொருட்குரி யார்  = மெய் பொருளை அறிந்து உணரும் பெரியவர்கள் 


கொள்வர் மேன்மையால். = உயர்ந்த கருத்துகளை தங்களுடைய உயர்வால் கொள்வார்கள். 


சிறியார், தங்கள் உயர்வுக்கு ஏற்ப கொள்வார்கள் என்பது உணரக் கிடைப்பது. 


"சரியா படிக்கலேனா மாடு மேய்க்கத் தான் போற" என்று அப்பா கடிந்து சொன்னால், அதன் அர்த்தம், அப்பா என்னை மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று கூறுகிறார், அவருக்கு என் மேல் அன்பு இல்லை என்று நினைத்தால் அந்தப் பிள்ளையை போல மடையன் உலகில் யார் இருப்பார்கள். 


என் மேல் உள்ள அன்பால், அக்கறையால்,  என் தந்தை இப்படி கூறுகிறார் என்று எடுக்கத் தெரிய வேண்டும். 


சொல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பொருள்தான் முக்கியம். 


சேக்கிழார் சைவ சமயத்தை சார்ந்தவர், நான் அந்த சமயம் அல்ல, நான் எதற்கு அதை படிக்க வேண்டும் என்று தள்ளக் கூடாது. 


நல்லது எங்கிருந்தால் என்ன? 


பொருளைப் பிடித்துக் கொள்வோம். 


என்ன, சரியா? 

Saturday, June 12, 2021

பெரிய புராணம் - முன்னுரை

 பெரிய புராணம் - முன்னுரை 


இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும் ?


நிறைய படிக்கணுமா? நிறைய தான தர்மங்கள் செய்யணுமா? கோவில் கோவிலாக போய் சாமி கும்பிடணுமா?  நாளும் கிழமையும் ஆனா விரதம், பூஜை எல்லாம் செய்யணுமா? மடியா, ஆசாரமா இருக்கனுமா? 


இது ஒன்றும் செய்யாமலேயே இறைவன் அடி சேர்ந்த தொண்டர்களின் வரலாற்றுத் தொகுப்புதான் பெரிய புராணம். 


எழுத்தறிவே இல்லாமல், சிவனுக்கு மாமிசம் படைத்தார் கண்ணப்பர். அதுவும் எப்படி, வாயில் நீரை கொண்டு வந்து சிவன் மேல் கொப்பளிபார். அது தான் அபிஷேகம். செருப்புக் காலை கொண்டு போய் சிவ லிங்கத்த்தின் மேல் வைப்பார். படைத்த மாமிசமும் எப்படி, வாயில் போட்டு கடித்துப் பார்த்து பதமாக இருக்கிறதா என்று அறிந்த பின், அந்த எச்சில் மாமிசம் தான் நைவேத்தியம். 


நம்ம வீட்டில் நைவேதியத்துக்கு என்று வைத்த வடையை சிறு பிள்ளைகள் எடுத்தால் கூட நாம் திட்டுவோம். "பூஜை முடிந்து தர்றேன்...அதுக்குள்ள என்ன அவசரம்" என்று. பிள்ளைக்கு கவனம் முழுவதும் வடை மேலேயே இருக்கும். 


மண் பாண்டம் செய்து விற்கும் குயவர், அவருக்கு கொஞ்சம் பெண் பித்து. மனைவி இருக்க பல பெண்களை நாடினார். அதை அறிந்த மனைவி, "என்னைத் தொடாதே" என்று தள்ளி வைத்து விட்டார். அவருக்கு முக்தி. 


இன்னொருவரோ, சாமி கும்பிடவே இல்லை. சுவர்க்கம் வேண்டும், வீடு பேறு வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை.அவரை வீடு தேடி வந்து முக்தி தந்தார் சிவன். 


இன்னொருவர், சிவனை கூப்பிட்டு, "எனக்கு அந்த பெண் மேல் காதல். நீ போய் இந்த லவ் லெட்டரை நான் குடுத்தேன்னு குடுத்துட்டு வா" நு சிவனை courier boy யாக ஆக்கி விட்டார். அவருக்கும் முக்தி. 


இன்னொருவர், சிவன் ஒரு கடவுளே இல்லை. சைவம் ஒரு மதமே இல்லை என்றார். அவருக்கும் முக்தி. 


இப்படி பலதரப்பட்ட தொண்டர்களுக்கு முக்தி வழங்கிய வரலாறுதான் பெரிய புராணம். 


இவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை - பக்தி. அசைக்க முடியாத பக்தி. புரிந்து கொள்ள முடியாத பக்தி.  



https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_12.html


(Please click the above link to continue reading)


இப்படிதான் பக்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முற்றாக முறித்து எறிந்த இலக்கியம் பெரிய புராணம். எப்படி வேண்டுமானாலும் பக்தி செய்யாலாம் என்று எடுத்துச் சொன்னது பெரிய புராணம். 


என் மதம் உயர்ந்தது,  என் ஜாதி உயர்ந்தது, நான் செய்யும் பக்தியே உயர்ந்தது, கடவுளுக்கு நான் செய்வது தான் பிடிக்கும், ஆடு வெட்டுவது, மாடு வெட்டுவது எல்லாம் காட்டு மிராண்டித் தனம் என்று சொல்பவர்கள் முன்னால், பிள்ளையை வெட்டி கறி சமைத்து போட்ட தொண்டர் கதையை சொல்கிறது பெரிய புராணம். 


அன்பு ஒன்று தான் முக்கியம் என்று எடுத்துக் காட்டிய இலக்கியம் பெரிய புராணம். 


எனவே தான் அதற்கு "பெரிய " புராணம் என்று பெயர் வந்தது. 



சேக்கிழாரின் தமிழ்...அமிழ்தை விட இனிமையாக இருக்கும். படிக்க படிக்க நாவில் இனிப்பு ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு இனிமையான பாடல். 


பக்தி மணம் ஒரு புறம், கொஞ்சும் தமிழ் மறுபுறம். 


அற்புதமான பக்தி இலக்கியம். படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 


அதில் இருந்து சில பாடல்களை பார்க்க இருக்கிறோம். 


பார்ப்போமா?


Sunday, November 8, 2020

பெரிய புராணம் - கேளாத ஒலி

பெரிய புராணம் - கேளாத ஒலி 


தன்னை பார்க்க விரும்புபவர்கள், அரண்மனைக்கு வெளியே இருக்கும் ஆராய்ச்சி மணியை அடிக்கலாம் என்று மனு நீதி சோழன் அறிவித்து இருந்தான். 

ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த மணி அடித்து இருக்கும்? 

இப்ப நம்ம ஊர்ல அப்படி ஒரு மணி கட்டி இருந்தால், விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் அல்லவா?

மனு நீதி சோழன் காலத்தில் , அந்த மணி அடிக்கப் படவே இல்லையாம். அந்த மணியின் சத்தம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அடித்தால் தானே? 

யாருக்கும் எந்த குறையும் இல்லை. இதுவரை. 

இன்று முதன் முதலாக அந்த மணி அடிக்கிறது. 


எல்லோருக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. 

"இது என்ன நம் மேல் பழி போடும் சத்தமா? நாம் செய்த பாவத்தின் எதிரொலியா? இளவரசனின் உயிரை எடுக்க வரும் எமனின் எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலியா? " என்று அனைவரும் திடுகிடு கிரார்கள். 

பாடல் 


 பழிப்பறை முழக்கோ? வார்க்கும் பாவத்தி னொலியோ? வேந்தன்

 வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்

கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன் கடைமுன் கேளாத்

தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க போது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_8.html

click the above link to continue reading


பழிப்பறை முழக்கோ?  = நாம் செய்த பழியினை அறிவிக்கும் முழக்கமோ?

வார்க்கும் பாவத்தி னொலியோ?  =  செய்த பாவத்தின் எதிரொலியோ?

வேந்தன் = அரசன் 

வழித் = வழியில் வந்த 

திரு மைந்த னாவி = திரு + மைந்தன் + ஆவி . இளவரசனின் ஆவியை 

கொளவரு = கொண்டு செல்ல வாவரும் 

 மறலி = எமன் 

 யூர்திக் = ஊர்த்தி, வாகனம், எருமை 

கழுத்தணி = கழுத்தில் அணிந்த 

மணியி னார்ப்போ?  = மணியின் ஆர்போ , மணியின் சத்தமோ 

வென்னத் = என்று 

தன் கடைமுன் கேளாத் = தன்னுடைய வாசலின் முன்பு எப்போதும் கேளாத 

தெழித்தெழு மோசை = பெரிதாக எழுந்த  ஓசையை 

மன்னன் செவிப்புலம் புக்க போது. = மன்னனின் காதில் விழுந்த போது 


எத்தனை மனு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தக் காலம் எங்கே,  குறை சொல்ல ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் துடித்த  அரசாங்கம் இருந்த காலம் எங்கே. 


அப்படியும் அரசு நடத்த முடியும். 


அரசு மட்டும் அல்ல, எந்த நிறுவனத்தையும் அப்படி நடத்த வேண்டும். 


Friday, November 6, 2020

பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி

 பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி 


நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கும் நம் அரசியல் தலைவர்களை நாம் நினைத்த நேரத்தில் சென்று பார்க்க முடியுமா?

பிரதம மந்திரி, முதல் மந்திரி எல்லாம் விட்டு விடுவோம். உள்ளூர் கவுன்சிலரை நாம் நினைத்த நேரத்தில் போய் பார்க முடியுமா?

 முடியாது அல்லவா?


நமக்கு என்ன குறையோ அதை ஒரு மனுவில் எழுதி அங்கு  உள்ள ஒரு கிளார்கிடம்  கொடுக்கலாம்.அல்லது புகார் பெட்டியில் போடலாம். 

ஆனா ல், அந்தக் காலத்தில், அரசர்கள் ஆண்ட காலத்தில், மனு நீதிச் சோழன் என்ற அரசன் இருந்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா?


வாசலில் ஒரு பெரிய மணியை கட்டி வைத்து இருந்தான். யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அந்த மணியை அடித்தால் போதும். அரசன் வெளியே வந்து, மணி அடுத்தவருக்கு என்ன குறை என்று கேட்பான். 


நம்ப முடிகிறதா? 


அரசன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலத்தில் , எப்படி ஆட்சி செய்து இருக்கிரறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது அல்லவா?


 அவனுடைய ஆட்சியில் ஒரு நாள், அந்த மணி அடிக்கப்பட்டது. அடித்தது ஒரு மனிதன் கூட இல்லை, கன்றை இழந்த ஒரு பசு. தன் குறையை மன்னனிடம் கூற அது மணியை அடித்தது. 


பாடல் 


தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார

மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்

பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post.html

click the above link to continue reading

தன்உயிர்க்  கன்று = தன் உயிருக்கு உயிரான கன்று 

வீயத்  = வீழ, இறந்து போக 

தளர்ந்த = அதனால் தளர்ந்த 

ஆத் = ஆ என்றால் பசு 

தரியாது ஆகி = பொறுத்துக் கொள்ள முடியாமல் 

முன் = முன்னால் (மூக்கில்) 

நெருப்பு உயிர்த்து  = நெருப்பு போல மூச்சு விட்டுக் கொண்டு 

விம்மி  = விம்மி 

முகத்தினில் கண்ணீர் வார = கண்களில் கண்ணீர் பொங்க 

மன் உயிர் காக்கும்  = நிலைத்து நிற்கும் உயிர்களை காக்கும் 

 செம்கோல்  = செங்கோல் 

மனுவின் = அரசனின் 

 பொன் கோயில் வாயில் = அரண்மனை வாயிலில் 

பொன் அணி மணியைச் = பொன்னால் செய்யப்பட்ட அந்த மணியை 

 சென்று =சென்று 

கோட்டினால் = கொம்பால் 

புடைத்தது அன்றே. = முட்டியது 

தெரிந்த கதைதான். இருந்தும் அதை சேக்கிழார் சொல்லும் விதம் இருக்கிறதே. அடடா...என்ன ஒரு தமிழ். அப்படி ஒரு சுகம். 

தமிழில் இப்படியும் கூட சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் நடை. 

அது ஒரு புறம் இருக்க, அரசியலில் எந்த உச்சத்தை தொட்டு இருக்கிறோம் என்று பாருங்கள். இன்று நமக்கு மேலை நாட்டினர் அரசியல் சொல்லித் தருகிறார்கள். 

நம் வரலாற்றை நாம் மறந்ததால் வந்த வினை. 

நம்மை நாம் அறிவோம். இலக்கியம், நமக்கு நம்மை அறிமுகப் படுத்தும். 


இதுதான் நீ, இவர்கள் தான் உன் முன்னோர்கள். அவர்கள் வழி வந்தவன் தான் நீ என்று எடுத்துச் சொல்லும். 


கேட்போமே. 



Saturday, October 3, 2020

பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்

 பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்


இறைவனை  அடைய என்ன வழி?  என்ன வழி என்று எத்தனையோ பேர் தேடி த் தேடி அலைகிறார்கள். 


பூஜை, ஆச்சாரம், அனுஷ்டானம், பாராயணம், ஷேத்ராடனம் என்று என்னென்ன முடியுமோ செய்கிறார்கள். படிப்பு ஒரு பக்கம், பெரியவர்கள் பேசுவதை கேட்பது ஒரு பக்கம். மிகப் பெரிய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு பக்கம். 


இதெல்லாம் பத்தி ஒண்ணும் கவலைப் படாமல், தான் வேலையை ஒழுங்கா செய்து கொண்டு இருந்தவர்களைத் தேடி இறைவன் வந்து கூட்டிக் கொண்டு போன கதைகள் நிறைய இருக்கின்றது.


கடவுள், சுவர்க்கம், ஞானம், யோகம் என்று இதைப் பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர்களைத் தேடி இறைவன் வந்தான். 


பெரிய புராணத்தில் இளையான் குடி மாற நாயனார் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒண்ணுமே செய்யல. அடியவர்களுக்கு உணவு அளிப்பார். அவ்வளவுதான். வேற ஒரு ஒன்றும் செய்யவில்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து, கூட்டிக் கொண்டு போனார். 


எவ்வளவு எளிய வழி? எதுக்கு கிடந்து கஷ்டப்படனும் ?


அவருடைய வரலாற்றை 27 பாடல்களில் சேக்கிழார்  வடிக்கிறார். 


அந்த தர்ம வேலைக்கு நடுவில், அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அந்த அற்புதமான  உறவையும் கோடி காட்டி விட்டுப் போகிறார் சேக்கிழார். 


அவருடைய வரலாற்றை சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_3.html

Friday, September 11, 2020

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்


நம்மை அறியாமலேயே நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம்.

செய்யும் போது அது தவறு என்று தெரிவதில்லை.

பின்னாளில், ஐயோ, இப்படி தவறு நிகழ்ந்து விட்டதே என்று நினைந்து வருந்தி இருக்கிறோம்.

இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சரியானவைதானா? நாளை, இன்று நாம் செய்கின்ற காரியங்கள் தவறானது என்று நினைத்து வருந்த மாட்டோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

பின், எப்படித்தான் சரியான பாதையை தேர்ந்து எடுத்து அதில் செல்வது?

இந்தக் குழப்பம் நமக்கு மட்டும் அல்ல...மிகப் பெரியவர்கள் வாழ்விலும் நிகழ்ந்து இருக்கிறது.

திருநாவுக்கரசர், இளம் வயதில், சைவ சமயத்தை துறந்து, சமண சமயத்தில் சேர்ந்தார். சேர்ந்தது மட்டும் அல்ல, சைவ நிந்தனை, சிவ நிந்தனை போன்றவற்றையும் செய்தார்.

ஏன்? ஏன் அப்படி ஒரு தவறான பாதையில் போனார்?

சேக்கிழார் பெருமான் சொல்கிறார்

"இறைவன் அருள் இன்மையால்"

இறைவன் அருள் இல்லாததால், நல்ல பாதையை விட்டு தவறான பாதையில் சென்றார் என்று.

பாடல்

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.


பொருள்


நில்லாத = நிலை இல்லாத

உலகு = உலகின்

இயல்பு கண்டு = இயல்பினை உணர்ந்து

நிலையா = நிலையற்ற

வாழ்க்கை = வாழ்க்கையை

அல்லேன் என்று = பற்றி வாழ்தல் சரி அல்ல என்று

அறத் துறந்து = முற்றுமாக  துறந்து

சமயங்கள் ஆன வற்றின் = உள்ள சமயங்களில்

நல் ஆறு தெரிந்து = சரியான வழி தெரிந்து

உணர = உணர்ந்து கொள்ள

நம்பர் அருளாமை யினால்  = இறைவன் அருளாமையால்

கொல்லாமை = கொல்லாமை

மறைந்து  உறையும் = அதன் பின் மறைந்து வாழும்

அமண் சமயம் குறுகுவார். = சமண சமயத்தை சென்று அடைந்தார் (நாவுக்கரசர்)

சில பேரிடம் ஒரு சில நல்ல குணங்கள் இருக்கும். நாம் அவற்றால் கவரப் பட்டு  அவர்கள்பால் ஈர்க்கப் படுவோம். அவர்களோடு பழகிய பின்னால் தான் தெரியும் அவர்களிடம் உள்ள மற்ற தீய குணங்கள் என்னென்ன என்று.

வேறு வழி இல்லாமல் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம்.

அது போல சமண சமயம், கொல்லாமை என்ற ஒரு நல்ல குணத்தின் பின்னால் பல  தீய செயல்களை செய்து வந்தது. ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்குத் தெரியாது.  நாவுக்கரசரும், அது தெரியாமல் அந்த சமயத்தில் சென்று  சேர்ந்தார்.

சொல்ல வந்த செய்தி இதுதான்...

இறைவன் அருள் இல்லாவிட்டால், எவ்வளவு அறிவு இருந்தாலும் வழி தவறிச் செல்ல  வாய்ப்பு இருக்கிறது.

நாவுக்கு அரசர், அவ்வளவு படித்தவர். தடம் மாறிப் போனார். காரணம், இறை அருள் இன்மை.

எவ்வளவோ படித்தவர்கள், அறிவாளிகள் பெரிய பெரிய தவறு செய்கிறார்கள். காரணம் இறை அருள் இன்மை என்கிறார் சேக்கிழார்.




Saturday, January 11, 2020

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது 


எப்படியோ துன்பம் வந்து விடுகிறது. நம் பிழை என்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் துன்பம் வந்து நம்மை வேதனை செய்கிறது.

துன்பம் வந்து விட்டால், தளர்ந்து போகிறோம். என்ன செய்யப் போகிறோம், இதில் இருந்து எப்படி மீழ்வது என்று தவிக்கிறோம்.

துன்பமே இல்லாத வாழ்வு இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை , இந்த துன்பம் வரமால் இருந்தால் சரி என்று நினைக்கிறோம்.

நாமாவது இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஏதேதோ செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ தவறு நிகழ்ந்து விடலாம். தெரியாமல் யாரையாவது மனம் புண்பட பேசி இருப்போம். தெரிந்து அல்ல, தெரியாமல். தெரியாமல் குடித்தால் நஞ்சு நம்மைக் கொல்லாதா. செய்த வினைக்கு மறு வினை வரும் தானே?

அப்பர், சுந்தரர், மணிவாசகர் போன்ற பெரியவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

சிறு வயதில், சைவ சமயம் விட்டு, சமண சமயத்தில் சேர்ந்து விட்டார் அப்பர். அவருடைய தமக்கையார், பெயர் திலகவதியார். திலகவதியார் ஒரு நாள் சிவனிடம் முறையிட்டார் ..."என் தம்பி இப்படி போய் விட்டானே, அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நீ தான் அவனை நல் வழிப் படுத்த வேண்டும் " என்று  மனம் உருகி வேண்டினார்.

சிவன், அவருடைய கனவில் வந்து சொன்னார், "உன் தம்பி முன்பே என்னை நோக்கி தவம் செய்திருக்கிறான். அவனுக்கு சூலை நோயை கொடுத்து நல் வழிப் படுத்துவோம்" என்று.

சிவன் நினைத்தால், நாவுக்கரசரை மனம் மாறச் செய்ய முடியாதா? தாங்க முடியாத வயிற்று வலியை கொடுத்தார். நாவுக்கரசர் வலி தாளாமல் துடித்தார்.

அந்த வலி வந்ததால், அவர் தன்னுடைய தமக்கையை நோக்கி வந்தார்.  பின் சைவ சமயத்தை  வந்து அடைந்தார். தேவாரம் பாடினார்.

செய்தி அதுவல்ல.

துன்பம் வரும் போது , தோல்வி வரும் போது தவிக்கிறோம். துவள்கிறோம். அது எல்லாம் சரி.  அந்த துன்பம் கூட, தோல்வி கூட ஏதோ ஒரு பெரிய நன்மைக்கு  என்று நாம் நினைக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றியைத் தரவே  இறைவன்/இயற்கை இந்த தோல்வியை/துன்பத்தை நமக்குத் தந்திருக்கிறது என்று நினைக்க வேண்டும்.

சுடு மணலில் , செருப்பு இல்லாமல் நிற்க வைத்தார்கள் மணி வாசகரை.

தாள முடியாத வயிற்று வலியால் துன்பப் பட வைத்தார் நாவுக்கரசரை.

அந்தத் துன்பங்களுக்கு பின்னால், அவர்கள் பக்தி உலகுக்குத் தெரிந்தது.

ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும்  வருகின்றன என்று நம்ப வேண்டும். அவற்றை வென்று  முன்பு இருந்ததை விட பெரிய  , உயரிய நிலைக்குப் போக வேண்டும்.



பாடல்

மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
"உன்னுடைய மனக்கவலை பொழிநீ;யுன் னுடன்பிறந்தான்
 முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
 அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ"மெனவருளி,


பொருள்


மன்னு = நிலைத்த

தபோதனியார்க்குக் = தவம் புரிந்த அந்த பெண்மணிக்கு

கனவின்கண் = கனவில்

மழவிடையார் = மழு என்ற ஆயுதத்தைக் கொண்ட சிவனார்

"உன்னுடைய = உன்னுடைய

மனக்கவலை = மனக் கவலையை

பொழிநீ; = ஒழி நீ

யுன்னுடன்பிறந்தான் = உன் உடன் பிறந்தான் (நாவுக்கரசர்)

முன்னமே = முன்பு, முந்தைய பிறவியில்

முனியாகி  = முனிவனாகி

யெனையடையத் = என்னை அடையத்

தவமுயன்றான் = தவ முயற்சிகள் மேற் கொண்டான்

அன்னவனை = அவனை

யினிச் = இனி

சூலை = சூலை நோய் (கொடிய வயிற்று வலி)

மடுத்தாள்வ = மடுத்து ஆள்வோம்

"மெனவருளி, = என்று அருளினார்

பரீட்சை வைத்துதானே மார்க் போட முடியும். மார்க் வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஐயோ பரீட்சை வந்து விட்டதே என்று அலறினால் என்ன அர்த்தம்.

கொஞ்சம் படித்தவுடன் , ஒரு பரீட்சை வரும். அதில் தேறினால், மேலும் படிக்கலாம்,  அதில் இன்னொரு பரீட்சை வரும்.

பரீட்சை கொஞ்சம் கடினம் தான். இருந்து படிக்க வேண்டும், எழுத வேண்டும்.

வாழ்க்கையும் அப்படித்தான். அப்பப்ப சோதனைகள் வரும்.

சோதனை வரும் என்று எதிர் பார்த்து அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றும் படிக்காமல் பரீட்சை எழுதப் போனால், எப்படி. நடுக்கம் வரத்தான் செய்யும்.

அடுத்து என்ன சோதனை வரும் என்று எண்ணிப் பாருங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று  திட்டம் போடுங்கள்.

நம்மை தினமும் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால், எளிதாக தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால், கையில்  வினாத்தாளை வைத்துக் கொண்டு திரு திரு என்று முழிக்க வேண்டியதுதான்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_11.html

Monday, October 7, 2019

பெரிய புராணம் - நீளு மாநிதி

பெரிய புராணம் - நீளு மாநிதி 


வீட்டுக்கு வர்றவங்களுக்கு எல்லாம் நாலு வித உணவை, ஆறுவித சுவையில் தினமும் விருந்து கொடுத்தால், கட்டுப்படியாகுமா? எவ்வளவு செலவு ஆகும்? ஏதோ நாள் கிழமை னா பரவாயில்லை. எப்போதும் செய்வது என்பது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழும் அல்லவா?

சேக்கிழார் சொல்கிறார்...

"சிவ பெருமானின் அன்பர்கள் உள்ளம் மகிழ நாளும் நாளும் விருந்து அளித்ததால், அவருடைய செல்வம் மேலும் மேலும் பெருகி குபேரனின் தோழன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் "

என்கிறார்.

பாடல்


ஆளு நாயகர் அன்பர் ஆனவர் அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய தோழ னாரென வாழுநாள்.

பொருள்

ஆளு நாயகர் = அடியவர்களை ஆளும் நாயகர் (சிவன்)

அன்பர் ஆனவர் = அவரிடத்தில் அன்பு கொண்டவர்கள்

அளவி லார் = எண்ணிக்கையில் அடங்காத

உளம் மகிழவே = உள்ளம் மகிழவே

நாளு நாளும் = ஒவ்வொரு நாளும்

நி றைந்து வந்து = நிறைந்து வந்து

நுகர்ந்த = விருந்தை உண்ட

தன்மையின் = தன்மையின்

நன்மையால் = அதனால் விளைந்த நன்மையால்

நீளு மாநிதி யின் = நீண்டு கொண்டே, அல்லது பெருகிக் கொண்டே சென்ற பெரிய நிதியின்

பரப்பு = அளவு

நெருங்கு செல்வ = குவிந்த செல்வத்தின்

நிலாவி = பொருந்தி

யெண்தோளி னார் = எட்டு தோள்களை உடைய  (சிவன்)

அளகைக்கி ருத்திய =  அழகாபுரி என்ற இடத்தில் இருக்கப் பண்ணிய (குபேரன்)

 தோழனாரென = தோழனார் என

வாழுநாள். = வாழும் நாளில்

அடியவர்களுக்கு அமுது படைத்ததால், இளையான் குடி நாயனாரின் செல்வம் குபேரனுக்கு இணையாக  வளர்ந்ததாம்.

இதெல்லாம் நம்புகிற படியா இருக்கு?

செலவு செய்தால், செல்வம் வளருமா ?

நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

தெய்வப் புலவர் சேக்கிழார் பொய் சொல்லுவாரா ? தவறான ஒன்றை செய்யச் சொல்லுவாரா ?

அவர் மட்டும் அல்ல, வள்ளுவரும் சொல்லுகிறார்.

"நீ மற்றவர்களுக்கு உதவி செய். உன் வீட்டுக்கு செல்வம் தானே வரும் " என்று.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

விருந்தினர் உண்ட பின் மிச்சம் இருப்பதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்காமலே  பயிர் விளையும் என்கிறார்.  அதவாது, அவன் வேறு ஒன்றும் செய்யாவிட்டாலும், செல்வம் அவனைத் தேடி வரும் என்கிறார்.

விவேகானந்தர் , தன்னுடைய குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஒரு மடம்  நிறுவி, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அப்படி அவர் அந்த மடத்தை நிறுவியபோது அவரிடம் கையில் காலணா காசில்லை.

இன்று அந்த நிறுவனம் உலகெங்கும் கிளை பரப்பி தொண்டாற்றி வருகிறது.  செல்வம்  தானே வருகிறது.

என்னுடைய சிற்றறிவிற்கும், தர்க ரீதியான சிந்தனைகளுக்கும் அப்பால் சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை நான் அனுபவ பூர்வமாக  உணர்ந்து இருக்கிறேன்.  அது எப்படி நிகழ்கிறது என்று தெரியாது.  ஆனால் நிகழ்கிறது.

அப்படிப்பட்ட  விஷயங்களில் இதுவும் ஒன்று.

பலன் எதிர் பாராமல் உதவி செய்து பாருங்கள், ஒன்றுக்கு பத்தாக அது உங்களுக்கு திரும்பி வரும்.

வந்தே தீரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_7.html

Sunday, September 29, 2019

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து 


விருந்தினரை உபசரிப்பதை ஒரு அறமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.  விருந்தை எப்படி உபசரிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

விருந்தினரை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள்.

சேக்கிழார் சொல்கிறார்,  விருந்தினர் தூரத்தில் வரும் போது, அவர் கண்ணுக்கு நாம் தெரிவோம். நாம் நிற்கும் நிலை, நமது மலர்ந்த முகம், சிரிப்பு, விரிந்த கைகள், அல்லது கூப்பிய கைகள் இவைகள்தான் விருந்தினருக்கு தெரியும். அந்த பார்வையிலேயே வருகின்ற விருந்தினர்க்குக்கு தெரிந்து விடுமாம், இவன் நம் வருகையை விரும்புகிறானா அல்லது நாம் அழையா விருந்தாளியா என்று.

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால், நாம் பேசுவது அவருக்கு கேட்கும். "வாங்க வாங்க...என்ன உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்பவாவது என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே" என்று இன் சொல் சொல்லி வரவேற்க வேண்டும்.

முதலில் பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தை கடு கடு என்று வைத்து இருந்தால் வருகிறவன் கூட அப்படியே போய் விடுவான். அப்புறம், கொஞ்சம் கிட்ட வந்த பின், இன் சொல் கூற வேண்டும்.

பாடல்


ஆர மென்புபு னைந்த ஐயர்தம் அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும் நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்குவித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரிவெய்த முன்னுரை செய்தபின்.


பொருள்

ஆரம் = கழுத்தில் அணியும் மாலை

என்பு புனைந்த = எலும்பை அணிந்த

ஐயர்தம்  = தலைவரின்

அன்பர் = அன்பர்

என்பதொர் தன்மையால் = என்கிற தன்மையால்

நேர வந்தவர் = நேரே வந்தவர்

யாவ ராயினும்  = யாராக இருந்தாலும்

நித்த மாகிய = எப்போதும் இருக்கும்

பத்தி = பக்தி

முன் கூர = முன்பு வர

வந்தெதிர் = வந்து எதிர்

கொண்டு  = கொண்டு

கைகள் குவித்து = கைகளை குவித்து

நின்று = நின்று

செ விப்புலத் தீர = அவர்கள் காதில் விழும்படி

மென் = மென்மையாக

மது ர = மதுரமான

பதம் = சொற்களை கூறி

பரி வெய்த = பரிவுடன்

முன்னுரை செய்தபின். = வரவேற்புரை கூறிய பின்

இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, வாங்க வாங்க என்று சொல்லக் கூடாது. எதிரில் சென்று அழைக்க வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே வாங்க என்று சொல்லக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.

கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.

இனிமையான சொற்களை மென்மையாக பேசி வரவேற்க வேண்டும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி வரவேற்க வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், பணக்காரர், பெரியவர், சின்னவர் என்று பேதம் பார்க்கக் கூடாது.

இதெல்லாம் ஒரு பண்பாடு. அப்படி வாழ்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

அது ஒரு நல்ல பழக்கம் என்று தெரிந்தால், கடைபிடிப்பது நல்லது தானே?

அது மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கு இதை கதையாக சொல்லித் தர வேண்டும்.  அவர்கள் மனதில் பதியும். செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம்.

நல்லதை விதைப்போம்.  அல்லதா விளைந்து விடும்?

சரி, இன் முகம் காட்டி, இன் சொல் கூறி வரவேற்றாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_29.html

Saturday, September 28, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்


நம் உடம்பில் எந்த உறுப்பு உயர்ந்தது ? எது தாழ்ந்தது  என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? அனைத்து உறுப்புகளும் ஒரே நிலை தான். கண் உயர்ந்தது, காது தாழ்ந்தது, வலது கை சிறந்தது, இடது கை தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா?

சரி.

சமுதாயத்தில் எந்த வேலை செய்பவர் உயர்ந்தவர்? எந்த வேலை செய்பவர் தாழ்ந்தவர் என்று கேட்டால்?

பூஜை செய்ப்வர் உயர்ந்தவர்....குப்பை அள்ளுபவர் தாழந்தவர் என்று கூற முடியுமா ?

கூறிக் கொண்டிருக்கிறோம். அது சரி அல்ல.

நமது முன்னோர்கள் சமுதாயத்தை நான்காக பிரித்தார்கள். அது இன்றைய பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதாவது,

- உற்பத்தி (production )
- விநியோகம் (distribution )
- நிர்வாகம் (Administration)
- தொலை நோக்கு திட்டமிடுதல் (Strategic Planning )

எந்த பெரிய நிறுவனத்தையும் இந்த நான்கு பிரிவாக பிரித்து விடலாம்.

சமுதாயத்தையும் அப்படியே.

அப்படி பிரித்து வைத்து இருந்தார்கள் -  அதற்கு வர்ணம் என்று பெயர்.

உற்பத்தி அடிப்படை. Goods and Services உற்பத்தி செய்யாவிட்டால் ஒரு சமுதாயம் படுத்து விடும்.  உற்பத்திதான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடி. விவசாயம், மருத்துவம், சாலை போடுவது, போக்குவரத்து, தொழிற்சாலை , வங்கிகள்,  தொலை தொடர்பு என்ற அனைத்தும் இதில் அடங்கும். சமுதாயத்தை  இயக்குவது அதுதான். எனவே, அதில் உள்ளவர்களை சூத்திர தாரிகள், அல்லது சூத்திரர்கள் என்று கூறினார்கள்.

உற்பத்தி மட்டும் செய்து விட்டால் போதாது, அதை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வைசியர்கள் என்று பெயர்.

அதே போல நிர்வாகம் செய்பவர்கள் ஷத்ரியர்கள் என்றும் திட்டம் தீட்டுதல்,  ஆராய்ச்சி செய்தல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களை  அந்தணர்கள் என்று பிரித்து பெயர் வைத்தார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இளையான்குடிமாற நாயனார் ஒரு விவசாயி. எனவே அவர் சமுதாய அமைப்பில் ஒரு சூத்திரர். சூத்திரர் என்ற நற்குலத்தில் பிறந்தவர் என்கிறார் சேக்கிழார். சிவனடியார்களை போற்றி அவர்களுக்கு விருந்து உபசரிப்பது என்பது அவரின் விரதம்.

பாடல்

அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.


பொருள்

அம்பொன் = அழகிய பொன்

நீடிய = வேய்ந்த

அம்பலத்தினில் = அம்பலத்தில்

ஆடு வார் = ஆடுவார். யார் ஆடுவார்? சிவன்.

அடி சூடுவார் = அவருடைய (சிவனுடைய) அடிகளை சூடுபவர்

தம்பி ரான் = தம்பிரான்

அடி மைத் = அப்படி சிவனுக்கு அடிமையாக இருந்த

திறத்துயர்  சால்பின் = திறத்தினால்

மேன்மைத ரித்துளார் = மேன்மை பெற்றவர்

நம்பு வாய்மையில் = நம்புகின்ற வாய்மையில்

நீடு = உயர்ந்த

சூத்திர = சூத்திர

நற்குலஞ் = நல்ல  குலம்

செய்த வத்தினால் = செய்த தவத்தினால்

இம்பர் = இந்த

ஞாலம் = உலகம்

விளக்கி னார் = விளங்கும்படி

இளையான்கு டிப்பதி மாறனார். = இளையான்குடி பதி மாறனார் இருந்தார்

நம்பு வாய்மை = வாய்மையை நம்ப வேண்டும். வாய்மையே சிறந்த அறம் என்பார் வள்ளுவர்.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் 
வாய்மையின் நல்லபிற

என்பது வள்ளுவம்.

வாய்மையை விட சிறந்தது ஒன்று இல்லை.

இறைவன் ஜாதி, குலம் , சமயம் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. அவனுடைய அடியார்கள் என்று  சொல்லிக் கொள்பவர்கள்தான் இந்த பாகுபாடு செய்து கொண்டு  பேதைகளாய் மூடர்களாய் திரிகிறார்கள்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்

ஓர்பொரு ளானது தெய்வம்.

என்பார் பாரதியார்.


எலும்பிலும், சதையிலும், தோலிலும் இலக்கம் (number ) போட்டு இருக்கிறதா என்று கேட்கிறார் சிவவாக்கியார் என்ற சித்தர்.

பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.

சாதி மத பேதங்களை கடந்து, அன்பை நிலை நாட்ட வந்தது பெரிய புராணம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_28.html


Thursday, September 26, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்



அந்தக் காலத்தில், நான் சொல்வது 1960 களில், இளங்கலை (BA ) படிப்புக்கு இளையான்குடிமாற நாயனார் புராணம் இருந்தததாக என் தந்தையார் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அது மட்டும் அல்ல, அதே புராணம்தான் அதற்கு முன்பு இருந்த  P  U  C , SSLC  போன்றவற்றிலும் இருந்ததாம்.

ஒரு இலக்கியத்தை சாரமற்றதாகச் செய்ய வேண்டும் என்றால், அதை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும். பின், அதன் மேல் உள்ள மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த மாணவர்களுக்கு போய் விடும். படித்து மனப்பாடம் செய்து, நாலு மதிப்பெண் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.

பெரிய புராணம், 63 நாயன்மார் வரலாற்றை சொல்லுகிறது. அதில் மணிவாசகர் கிடையாது. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் தவிர்த்து பல பேருக்கு மற்ற நாயன்மார் பெயர்கள் கூடத் தெரியாது. காரைக்கால் அம்மையார் தெரியும் ஏனென்றால் அவர் மட்டும் தான் ஒரே ஒரு பெண் அந்த நாயன்மார் வரிசையில்.

இந்த நாயன்மார்கள் ஏதோ பக்தி செய்தார்கள், இறைவன் அவர்களை சோதித்தான், பின் முக்தி கொடுத்தான். அவ்வளவுதான். இதைப் படித்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

நம்மால் எல்லாம் அப்படி பக்தி செய்ய முடியாது.

இதையெல்லாம் படிப்பது வெட்டி வேலை என்று நாம் நினைக்கலாம்.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும் போது , பக்தி எங்கிருந்து வரும்?  அதிலும் அடியார்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து என்ன ஆகப் போகிறது  என்றும் தோன்றும்.

ஞாயமான சந்தேகம்தான்.

கடவுளை விட்டு விடுங்கள்.

பக்தியை விட்டு விடுங்கள்.

வீடு பேறு , முக்தி, சுவர்க்கம் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழுக்காக அதை படிக்கலாம். அத்தனையும்  தேன் சொட்டும் பாடல்கள்.

தமிழ் கொஞ்சும்.  கிறங்க அடிக்கும்.

தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை அறிந்து கொள்ள படிக்கலாம்.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், இப்போது இப்படி திக்கு திசை தெரியாமல்,  மேலை நாட்டு நாகரிகம், பண்பாடு இவற்றை நோக்கி கையேந்தி நிற்கிறோம் என்பது புரியும்.

நம் பாரம்பரியம் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெரிந்தால், "அட, இப்படியும் கூட வாழ முடியுமா? இப்படி கூட வாழ்ந்திருக்கிறார்களா " என்ற ஆச்சரியம் வரும்.

ஒருவேளை அந்த பாரம்பரியம் பிடித்து கூட போகலாம். நாம் நம் ஆதார நிலை நோக்கி  திரும்பலாம்.

எது எப்படியோ, தமிழுக்காக படிக்கலாம். மற்றவை கிடைத்தால், நல்லது. இலவச இணைப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

இளையான்குடிமாற நாயனார் பற்றி வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம்.

இது ஒரு முன்னுரை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_26.html

Monday, December 3, 2018

பெரிய புராணம் - காதலும் கோபமும்

பெரிய புராணம் - காதலும் கோபமும் 


சுந்தரர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். எல்லோரும் திருமண மண்டபம் வந்து விட்டார்கள். அப்போது, சிவ பெருமான் ஒரு முதியவர் வேடத்தில் வந்து "இந்த சுந்தரன் என் அடிமை. இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ...நான் இட்ட வேலைகளை செய்து கொண்டு எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் ..இவன் எனக்கு அடிமை என்று இவன் தாத்தா எழுதித் தந்த ஓலை என்னிடம் இருக்கிறது " என்றார்.

அது கேட்ட சுந்தரர் கோபம் கொண்டு "நீ என்ன பித்தனா ? எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா " என்று பேசினார்.

சிவன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இப்போது புறப்படு. நிறைய வேலை இருக்கிறது "

சுந்தரர் பார்த்தார். இந்த ஆளைப் பார்த்தால் மனதில் ஏதோ ஒரு அன்பு பிறக்கிறது. இருந்தாலும் இவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருகிறது. எதுக்கும் அந்த ஓலையில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து "சரி, நீ ஓலையைக் காட்டு"  என்றார்.


பாடல்


கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 
தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை.


பொருள்

கண்டது ஓர் வடிவால் = கண்டது ஒரு வடிவத்தை


உள்ளம் காதல் செய்து  = கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு

உருகா நிற்கும் = உருகி நிற்கும்

கொண்டது ஓர் பித்த வார்த்தை  = ஆனால், இவர் பேசுவதோ பைத்தியகாரன் மாதிரி இருக்கிறது

கோபமும் உடனே ஆக்கும் = கேட்டவுடன் உடனே கோபம் வருகிறது

உண்டு ஓர்ஆள் ஓலை  = ஒரு ஓலை இருக்கிறது என்று சொல்கிறாரே

என்னும் அதன் உண்மை அறிவேன் = அதன் உண்மை என்ன என்று அறிவேன்

என்று  = என்று மனதில் நினைத்து

தொண்டனார் = சுந்தரர்

 ‘ஓலை காட்டு’ என்றனர் = சரி அந்த ஓலையை காட்டு என்றார்

 துணைவனாரை. = துணைவனான சிவனைப் பார்த்து

காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் வந்து விடும்.

அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு.

மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும்.

மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல் , அப்படியே முடிவு செய்து விடும்.

சிவனை கண்டவுடன் சுந்தரருக்கு உடனே மனதில் காதல் பிறந்தது.

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.



பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.

இராமன் கானகம் போகிறான். தூரத்தில் அவன் வருவதை அனுமன் காண்கிறான்.

பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. "என் எலும்பு உருகுகிறது. அளவற்ற காதல் பிறக்கிறது. அன்புக்கோ அளவு இல்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை " என்று தவிக்கிறான்.

துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.

குகன் இராமனைக்  கண்டபோதும், விபீஷணன் இராமனைக் கண்ட போதும் இதே நிலை தான்.  பார்த்தவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு வரும். நீண்ட நாள் பிரிந்த பின் கூடுவது போல ஒரு அன்பு பிறக்கும்.

முன்பே கூறியது போல, இறைவனை தேடி காண முடியாது. அவனை காணும் போது உள்ளம் அறியும். அறிவுக்குத் தெரியாது. அறிவு தேடிக் கொண்டே இருக்கும். அறிவின் வேலை அது.

சுந்தரருக்கு சிவன் மேல் காதல் பிறந்த அதே நேரம், சிவனின் சொற்களை கேட்டு கோபமும் பிறக்கிறது.

இருந்தும், இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உண்மை என்ன என்று அறிய முற்படுகிறார்.

நாம் வாழ்வில் உணர்ச்சி மிகுதியில் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

அது அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி

 நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

பெரிய புராணத்தில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை. அவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_3.html

Sunday, December 2, 2018

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும்

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும் 


சுந்தரர் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். அப்போது , சிவ பெருமான், ஒரு முதிய அந்தணன் வடிவில் வந்து , "நீ எனது அடிமை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என் பின்னே வா " என்று அழைக்கிறார். அதனால் கோபம் கொண்ட சுந்தரர் "ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆகும் வழக்கம் உண்டா. நீ என்ன பித்தனா " என்று கேட்கிறார்.

அதுவரை முந்தைய ப்ளாகுகளில் பார்த்ததோம்.

சுந்தரர் , "நீ பித்தனா?" என்று கேட்டவுடன் சிவ பெருமான் சொல்கிறார்

"நான் பித்தனோ, பேயனோ ..நீ என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. சும்மா வள வள என்று பேசிக் கொண்டிருக்காதே. புறப்படு , நிறைய வேலை இருக்கிறது உனக்கு செய்ய " என்றார்.

பாடல்

‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்;
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார்.


பொருள்

‘பித்தனும் ஆகப் = பித்தன் என்றாலும் சரி

பின்னும் பேயனும் ஆக, = பேயன் ஆகவும் இருந்து விட்டுப் போகிறேன்

நீ இன்று = நீ இன்று

எத்தனை தீங்கு சொன்னால்  = எத்தனை தீய வார்த்தைகளால் என்னை நிந்தித்தாலும்

யாதும் மற்று அவற்றால் நாணேன்; = அதுக்கெல்லாம் நாம் வெட்கப் பட மாட்டேன்

அத்தனைக்கு  = அனைத்துக்கும் மேலாக

என்னை  ஒன்றும் அறிந்திலை = நீ என்னை அறிய மாட்டாய்

ஆகில் = எனவே

நின்று = இங்கே வெட்டியாக நின்று கொண்டு

வித்தகம் பேச வேண்டாம்; = எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம்

பணி செய வேண்டும்’ = எனக்கு நீ பணி செய்ய வேண்டும்

என்றார். = என்று கூறினார்

எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், சுவர்க்கம் போக வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.

"சரி, கிளம்புங்கள் போவோம் " என்று கூறினால், எத்தனை பேர் அப்படியே கிளம்பி வருவார்கள்.

"இப்ப எப்படி வர முடியும்...பிள்ளைகளை தனியா விட்டு விட்டு எப்படி வர முடியும் ? அதுகளுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்" என்பார்கள்.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து "சரி , இப்போது தான் பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடித்து வாழ்வில் வழி கண்டு விட்டார்களே, கிளம்பலாமா ?" என்று கேட்டால் ..."ஐயோ, வயதான பெற்றோரை எப்படி விட்டு விட்டு வர முடியும்? அது மட்டும் அல்ல, நான் இல்லா விட்டால் என் கணவன் / மனைவி தனியா என்ன செய்வார்/செய்வாள் ..." என்று தட்டிக் கழிப்பார்கள்.

யாருக்கும் இதை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சொல்வது என்னவோ இறைவன் திருவடி, சுவர்க்கம் என்று.

இறைவன் நேரில் வந்து, "கிளம்பு என்னோடு" என்று கூப்பிட்டார். சுந்தரர் போகாதது மட்டும் அல்ல...அப்படி கூப்பிட்ட இறைவனை ஏசவும் தலைப் படுகிறார்.


சரி, இந்த சுவர்க்கம், இறைவன் திருவடி என்று சொல்கிறார்களே, ஒரு வேளை அங்கு போய் சேர்ந்து விட்டால், அப்புறம் என்ன செய்வது ? எந்நேரமும் பாட்டு, பஜனை, இறைவனை பார்த்துக் கொண்டே இருப்பது ...இது தானா வேலை. சலித்துப் போகாதா. எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் , எவ்வளவு சர்க்கரை பொங்கல் சாப்பிட முடியும், எவ்வளவு பாயசம் குடிக்க முடியும்.

சொர்க்கம் என்பது சோம்பேறிகளின் இருப்பிடமா ? ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு , நடனமாடும் பெண்களை சைட் அடித்துக் கொண்டு இருப்பது தான் வேலையா?  சரி, ஆண்களுக்காவது சில பல அழகாகன பெண்களை பார்த்து இரசிக்கலாம்...பெண்கள் பாவம் என்ன செய்வார்கள் ?

சுவர்க்கம் என்பது அது அல்ல. இறைவன் திருவடி என்றால் சும்மா போய் உட்கார்ந்து இருப்பது அல்ல.

வேலை செய்வது. பணி செய்வது.

என்ன பணி, யாருக்குப் பணி?

நல்ல வேலை, நல்லவர்களுக்கு வேலை செய்வது.

வேலை செய்வது ஒன்று தான் சுவர்க்கம். அது தான் இறைவன் திருவடி.

சுந்தரரிடம் , சிவன் சொன்னது அது தான். "வா சொர்கத்துக்ப் போகலாம் " என்று சொல்ல வில்லை. "வா , வேலை இருக்கிறது " என்றார்.

மணிவாசகர் சொல்லுவார் " எது எமை பணி கொள்ளுமாறு, அது கேட்போம் " என்று.

அதாவது, "இறைவா, எங்களுக்கு ஏதாவது வேலை கொடு. நீ என்ன வேலை கொடுத்தாலும் அப்படியே செய்கிறோம்" என்கிறார்.

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


"அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டு விட்டால் 
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே "

என்பார் தாயுமான சுவாமிகள்.

"என் கடன் பணி செய்து கிடப்பதே " என்பார் அப்பரடிகள்.


எங்களுக்கு எதாவது சின்ன சின்ன வேலைகள் கொடு என்று ஆண்டாள் , கண்ணனிடம் வேண்டுகிறாள் "குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது "

ஏவல் = ஏவுதல். அதைச் செய், இதைச் செய் என்று ஏவுதல்.

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

சுவர்க்கம், இறைவன் திருவடி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

பணி செய்து பழகுங்கள். அங்கே போனாலும் அது தான் செய்ய வேண்டி வரும்.

பணி செய்யுங்கள். பணிந்து செய்யுங்கள். அதுவே இறைவனை அடியும் வழி.

சுந்தரர் போனாரா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post.html

Thursday, November 29, 2018

பெரிய புராணம் - பித்தனோ?

பெரிய புராணம் - பித்தனோ?



இதை படிக்கத் தொடங்கும் முன், முந்திய பிளாக்கை படித்து விடுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html

இறைவனை எப்படி வழி படலாம்?

பூக்கள் இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, பட்டாடை சாத்தி, பன்னீர், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, துதிப் பாடல்களைப் பாடி வழி படலாம் என்று சொல்லுவீர்கள்.

இறைவனை எப்படியும் வழி படலாம் என்று சொல்ல வந்ததுதான் பெரிய புராணம். எனவே தான் அதற்கு பெரிய புராணம் என்று பெயர்.

இறைவனை இப்படித்தான் வழி பட வேண்டும் என்று அல்ல.

சுந்தரர் , இறைவனை பைத்தியக்காரன் என்று திட்டுகிறார். யோசித்துப் பாருங்கள், வேறு எந்த மதத்திலாவது, அந்த மதத்தின் மூலக் கடவுளை பைத்தியம் என்று சொல்ல முடியுமா ? சொன்னால் விட்டு விடுவார்களா?

சைவ சமயம் ஒன்றுதான் அந்த சுதந்திரத்தைத் தருகிறது.

நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றும் தெரியாத கடவுளை எப்படி வழிபடுவது? எனவே தான் சைவம் நம் அறியாமையை ஏற்றுக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் வழி படு என்று சுதந்திரம் தருகிறது.

நேரில் வந்த சிவ பெருமானை, சுந்தரர் "நீ என்னை உன் அடிமை என்கிறாய். எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா. இப்படிச் சொல்கிறாயே நீ என்ன பைத்தியமா " என்று கேட்டார்.

பாடல்


மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார்.


பொருள்

மாசு இலா = குற்றம் இல்லாத

மரபில் வந்த = வழியில் வந்த

வள்ளல் = வள்ளல் குணம் கொண்ட சுந்தரர்

வேதியனை நோக்கி = அங்கு வந்த வயதான வேதியனை நோக்கி

நேசம் முன் கிடந்த = முன்பு இருந்த நேசம் நீங்கி

சிந்தை நெகிழ்ச்சி யால்  = சிந்தை நெகிழ்ந்து

சிரிப்பு நீங்கி = முகத்தில் இருந்த சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் = குற்றம் அற்ற

அந்தணர்கள் = அந்தணர்கள்

வேறு ஓர் அந்தணர்க்கு = வேறு ஒரு அந்தணர்க்கு

அடிமை ஆதல் = அடிமை ஆவது

பேச = பேசும்படி

இன்று உன்னைக் கேட்டோம் = இன்று நீ சொல்லக் கேட்டோம்

பித்தனோ = நீ என்ன பித்தனா ?

மறையோய்?” = மறை ஓதியவனே

என்றார். = என்று கூறினார்.

இறைவன் நேரில் வந்திருக்கிறான். அடையாளம் தெரியவில்லை. நீ என்ன பைத்தியமா  என்று கேட்டார் சுந்தரர். கேட்டது போகட்டும், அப்படி சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவனை பித்தன் என்று இகழ்ந்து கூறிய சுந்தரரை நாயன்மார்களில் சிறந்த நால்வரில் ஒருவராக சைவ சமயம் போற்றுகிறது.

தோத்திரம் தந்த நால்வரில் சுந்தரர் ஒருவர்.

என்னடா இது, நாம் பெரிதாக நினைத்து வழிபடும் கடவுளை திட்டுகிறானே என்று அவரை ஒதுக்கி வைக்கவில்லை. தலையில் வைத்து கொண்டாடுகிறது சைவ சமயம்.


சைவ சமயத்தின் நீளமும் ஆழமும் புரிகிறதா?

சரி, நாம் கொண்டாடுவது இருக்கட்டும். தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா ?

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_29.html

Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


Monday, November 12, 2018

காரைக்கால் அம்மையார் பாடல் - அறவா

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்  - அறவா 


இறைவன் என்பது யார்? அவர் ஒரு ஆளா? ஆணா ? பெண்ணா ? அலியா ? உயரமா? குள்ளமா ? கறுப்பா ? சிவப்பா?


முதலில் இறைவன் என்பது ஒரு "ஆள்" என்ற எண்ணத்தை விட வேண்டும். இறைவன் என்றால் ஏதோ நம்மைப் போல இரண்டு கை , இரண்டு கால், கண், மூக்கு என்று இருப்பார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனிதர்கள் படைத்த இறைவன் மனிதர்கள் போல இருக்கிறான். சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இறைவனை கற்பனை செய்தால் அது மிகப் பெரிய வலிமையான சிங்க ரூபத்தில் இருக்கும். எனவே, இறைவன் மனித ரூபத்தில் இருப்பான் என்று எண்ணிக் கொள்வது நமது ஆணவம் அன்றி வேறில்லை.


சரி, இறைவன் மனித வடிவில் இல்லை என்றால் பின் எப்படி இருப்பான் ?


இறைவன் எந்த வடிவிலும் இல்லை. அவனுக்கு ஒரு வடிவம் கிடையாது.


பின் இறைவன் என்றால் என்ன ? வடிவம் இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?


அறம் தான் இறைவன். இயற்கை தான் இறைவன்.


அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார் 

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?



பின் வேண்டு கின்றார் = மேலும் வேண்டுகிறார்


பிறவாமை வேண்டும்  =  பிறவாமல் இருக்க வேண்டும்


மீண்டும்  பிறப்புண்டேல்  = ஒரு வேளை மறுபடியும் பிறந்து விட்டால்


உன்னை என்றும் மறவாமை வேண்டும் = உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்


இன்னும் வேண்டும் = இன்னும் என்ன வேண்டும் என்றால்


நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி


அறவா = அறவா , அறமே வடிவானவனே


நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது உன்


அடியின்கீழ் இருக்க என்றார் = உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார்.


இறைவன் அறமே உருவானவன் என்பது ஒரு செய்தி.

நம்மில் பல பேர் பக்தி என்றால் ஏதோ பெரிய இராணுவ பயிற்சி போல குளித்து முழுகி, முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, பய உணர்வு ஒரு பக்கம், பக்தி ஒரு பக்கம்,  என்று பக்தி செலுத்துவார்கள்.

கற்பூர ஆரத்தி காட்டுவதும், பூ அள்ளிப் போடுவதும் ஏதோ அறிவியல் செயல் கூடத்தில்  (laboratory) ஏதோ அறிவியல் கோட்பாட்டை சரி பார்க்கும் முயற்சி போல இருக்கும்.


வேண்டவே வேண்டாம்.


முதலில் சந்தோஷமாக இருக்கும் வேண்டும்.  இன்ப அன்பு வேண்டும்.


அடுத்து, மகிழ்ந்து பாடி என்கிறார். சந்தோஷமாக வாய் விட்டு பாடுங்கள்.


மூன்றாவதாக, இறைவனே ஆடிக் கொண்டு இருக்கிறான். இது ஒரு லீலை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருங்கள். பக்தி என்றால் ஏதோ surgical strike  மாதிரி இருக்கக் கூடாது.


"விளையாட்டு உடையார் அவர் , தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்பார்  கம்பர். எந்த கடவுள் விளையாட்டாக இருக்கிறாரோ, அவர் தான் எங்கள்  தலைவர் என்கிறார் கம்பர்.



வாழ்க்கையை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டாக  எடுங்கள்.


ஆடுங்கள். பாடுங்கள். அன்பு செய்யுங்கள்.


அவ்வளவுதான் வாழ்க்கை. அவ்வளவுதான் இறைவன்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_12.html