Showing posts with label சேக்கிழார். Show all posts
Showing posts with label சேக்கிழார். Show all posts

Thursday, August 30, 2012

பெரிய புராணம் - முதல் பாடல்

பெரிய புராணம் - முதல் பாடல்

நீங்கள் எப்பவாவது கவிதை எழுத நினைத்ததுண்டா?

ஏதேதோ எழுத வேண்டும் என்று தோன்றும்...இதை எழுதலாமா, அதை எழுதலாமா ? இப்படி எழுதலாமா ? அப்படி எழுதலாமா ? என்று மனம் கிடந்து அலை பாயும்...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

பெரிய பெரிய ஞானிகளுக்கே இந்த கஷ்டம் இருந்திருக்கிறது. 

இறைவனே நேரில் வந்து முதல் அடி எடுத்து தந்து இருக்கிறான்...

அருணகிரி நாதருக்கு "முத்தை தரு" என்று முதல் அடி எடுத்துத் தந்தான்.

குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன். 

சேக்கிழாரும் முதல் அடி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். 

இறைவனே "உலகெல்லாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தான்.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்  

Wednesday, May 23, 2012

பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்


பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்

பனிக்காலம் காதலின் காலமோ ?

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று கண்ணன் சொன்னது அதனால் தானோ?

துணை தேடும் காலம்.

காதலில் ஆண்டாள் கற்கண்டாய் உருகியதும் இந்த மார்கழிப் பனியில் தான்.


இங்கு அந்த குளிர் காலத்தில் வீடுகளில் என்ன நடக்கிறதென்று கூறுகிறார் சேக்கிழார்....

பனி பொழிகிறது. 

சூரியனும் வெளியே வரவில்லை.

தூரத்தில் மலைகள் எல்லாம் பனிப் போர்வை போத்தி இருக்கின்றன.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

வெளியே போக யாருக்கு மனம் வரும்.

வீடுகளில் உள்ள மாடங்களில் பெண் புறாவும் ஆண் புறாவும் ஒன்றை ஒன்று தழுவி ஒடுங்கி ஒன்றாய் இருக்கின்றன.

வீட்டின் உள்ளே தங்கள் துணைவிகளோடு ஆண்கள் ஒன்றாய் இருந்தனர்.

சேக்கிழாரின் தமிழுக்கு உரை எழுதினால் அதன் இனிமை கெட்டு விடும் போல இருக்கிறது...அவ்வளவு இனிமையான பாடல்.
  

நீடியவப் பதிகளெலா நிரைமாடத்திறைகடொறும்
பேடையுடன் பவளக்காற் புறவொடுங்கப்பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச வெம்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளு மணிமார்பு மடங்குவன.

சீர் பிரித்த பின்:

நீடிய அப் பதிகள் எல்லாம் நிரைமாடத்து, இறைகள் தொறும்
பேடையுடன் பவளக் கால் புறா ஒடுங்கபித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 
ஆடவர் தம் பணைத் தோளும் மணி மார்பும் அடங்குவன


நீடிய = நீண்ட

அப் பதிகள் = அந்த ஊரில், அந்த இடத்தில் (எந்த இடம் என்றால் முந்தைய இரண்டு BLOG களைப் பாருங்கள்)

எல்லாம் = எல்லா இடத்தும்

நிரைமாடத்து, = நிறைந்த மாடங்களில்

இறைகள் தொறும்= இறை என்றால் கூண்டு மாதிரி ஒரு இடம் (இறப்பு என்று சொல்வது வழக்கம்)

பேடையுடன் = பெண் புறாவுடன்

பவளக் கால் = பவளம் போல் சிவந்த கால்களை உடைய

புறா ஒடுங்க = ஆண் புறா ஒடுங்க

பித்திகையின் = செண்பகம் போன்ற ஒரு வகை மலர்

தோடு அலர் = இதழ் மலரும்

மென் குழல் = மென்மையான குழலை கொண்ட

மடவார் = பெண்கள்

துணைக் கலச = இரண்டு கலசங்கள் ஒன்றாய் சேர்த்து வைத்தார் போன்ற

வெம் முலையுள் =

ஆடவர் தம் = ஆண்களின்

பணைத் தோளும் = பனை போன்ற கடினமான தோள்களும்

மணி மார்பும் = மணி போல ஒளி வீசும் மார்பும்

அடங்குவன = அடங்கின

பனியில் எது எல்லாம் அடங்கும் ?




Saturday, May 19, 2012

பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?


பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?

பெரிய புராணம்,

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை பற்றியது.

இதை ஒரு வரலாற்று நூல் என்றே கூறலாம்.

ஏனென்றால் நாயன்மார்கள் கற்பனை கதா பாத்திரங்கள் அல்ல. 
உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறை என்று அழைக்கப் படுகிறது.

படிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.

கம்ப இராமாயணம் போல் அவ்வளவு எளிமை அல்ல.

இருப்பினும், மிக இனிமையான பாடல்களை கொண்டது.

அதி காலை நேரம்.

கீழ் வானம் சிவக்கிறது.

வானெங்கும் பறவைகள்.

குளிர் பிரியா காற்று காதோரம் இரகசியம் பேசிச் செல்லும்.

மெல்லிய வானம்.

துல்லிய மேகம்.

பனியில் நனைந்த மலர்கள் மலரும் நேரம்.

அப்படி ஒரு கிராமத்தில், அந்த அதி காலை வேளையில் நடந்து போகிறீர்கள்.

அங்கங்கே குளங்கள் தென்படுகின்றன. அந்த குளங்களில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன.

அதை பார்க்கும் போது ஓராயிரம் சூரியன்கள் தரையில் உதித்த மாதிரி இருக்கிறது.

அந்த ஊர், திரு ஞான சம்பந்தர் பிறந்த சீர்காழி.

படிக்கும் போது மனதுக்குள் மழை அடிக்கும் அந்தப் பெரிய புராணப் பாடல்...