Showing posts with label இராமானுசர் நூற்றந்தாதி. Show all posts
Showing posts with label இராமானுசர் நூற்றந்தாதி. Show all posts

Monday, May 9, 2022

இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து

 இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து 


ஒரு விளக்கை ஏற்ற வேண்டும் என்றால் எண்ணெய் விட்டு, திரி போட்டு அதை ஏற்ற வேண்டும். 


திரி என்றால் திரிப்பது. ஒரு பருமனான நூலைப் போட்டால் அது சீக்கிரம் எரிந்து கருகி விடும். இரண்டு அல்லது மூன்று நூலை சேர்த்துத் திரித்து போட்டால் அந்த தீபம் நின்று எரியும். அதற்கு அறிவியல் கோட்பாடு இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று நூல்களை சேர்த்துத் திரித்தால், அதற்கு இடையே உள்ள இடைவெளி ஒரு குழாய் போல் செயல் பட்டு எண்ணெயை மேலே கொண்டு வரும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இருள் போக்க விளக்கை ஏற்றுகிறோம். விளக்குக்குத் திரி வேண்டும். 

ஆழ்வார்கள் பாசுரங்கள் நம் அறியாமை இருளை போக்க வந்தவை. அந்த பாசுரங்கள் அறிவு ஒளி தரும் விளக்கு என்றால் அதன் திரியாக எதாவது இரண்டு நூல் வேண்டுமே? அவை என்னென்ன?


வேதங்கள் ஒரு நூல், தமிழ் ஒரு நூல். இந்த இரண்டு நூலையும் திரித்து, ஞான விளக்கு ஏற்றினார்களாம். 


வேதம் யாருக்குப் புரியப் போகிறது? அதை படித்து உணர்வது கடினம். எனவே அதன் சாரத்தை எடுத்து, அதை இனிய தமிழில் நமக்குத் தந்தார் பொய்கை ஆழ்வார். அப்படி அவர் ஏற்றிய திருவிளக்கை தன் மனத்துள் இருத்திய இராமானுசன் எம் இறைவன் என்கிறார் ஆரவமுதனார். 


பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 

குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 

திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 

இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_91.html


(Please click the above link to continue reading)



வருத்தும் = வருத்தம் தரும், துன்பம் தரும் 


புறவிருள் மாற்ற = புற இருளைப் போக்க 


எம் = எம்முடைய 


பொய்கைப்பிரான் = பொய்கை ஆழ்வார் 


மறையின் = வேதங்களின் 


குருத்தின் பொருளையும் = ஆழமான பொருளையும் 


செந்தமிழ் தன்னையும் = செந்தமிழையும் 


கூட்டி =சேர்த்து 


ஒன்றத் = ஒன்றாக 


திரித்தன்று = திரித்து அன்று 


எரித்த = ஏற்றிய 


 திருவிளக்கைத்  = ஒளி பொருந்திய விளக்கை 


தன் திருவுள்ள‌த்தே = தன்னுடைய உள்ளத்தில் 


இருத்தும் பரமன் = கொண்ட பரமன் 


இராமானுசன் = இராமானுசன் 


எம் இறையவனே = எங்களுக்கு இறைவன் 


வேதம் படிக்க முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். பிரபந்தம் என்பது வேதத்தின் சாரம். நமக்குத் தெரிந்த மொழியில், இனிமையாக அதன் சாரத்தை நமக்கு அருளிச் செய்து இருக்கிறார்கள். 


பழச் சாறு போல. 


அள்ளி அள்ளி பருக வேண்டியதுதான் பாக்கி. 




Tuesday, May 18, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - உனக்கு இது இழுக்கு இல்லையா?

இராமானுசர் நூற்றந்தாதி -  உனக்கு இது இழுக்கு இல்லையா?


கடல் பரந்து கிடக்கிறது. அதில் இருந்து கொஞ்சம் நீர் முகந்து கொண்டால், கடலின் அளவு குறைந்தா போய் விடப் போகிறது?  எவ்வளவு முகந்தாலும் கடலின் அளவு குறையாது.  அது போல

இராமானுசரே உம்முடைய கருணை கடல் போன்றது. எவ்வளவு பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


ஆனால்  


கடல் கொடுக்கும், ஆனால் கொடுப்பதனால் அந்த கடலின் பெருமை ஒன்றும் பெரிதாகி விடுவது இல்லை. ஆனால், இராமானுசரே, கொடுக்க கொடுக்க உம் கருணையின் பிரகாசம் மேலும் மேலும் ஒளி விட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வளவு பெருமை வாய்ந்த கருணைக் கடலான நீர் வினைகளால் பீடிக்கப் பட்ட என் மனத்துள் வந்து புகுந்தாய். நான் எவ்வளவு கீழானவன். என் மனதில் வந்து புகுந்தால் அதனால் உனக்கு ஒரு இழுக்கு வந்து விடாதா என்று என் நெஞ்சு கவலைப் படுகிறது என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 


கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 

வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 

வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 

தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_18.html


(please click the above link to continue reading)


கொள்ளக் குறைவு அற்று = எடுக்க எடுக்க குறையாமல் 


இலங்கி = விளங்கி 


கொழுந்து விட்டு ஓங்கிய = சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 


உன்  = உன் 


வள்ளல் தனத்தினால் = வள்ளல் தன்மையால் 


வல்வினையேன் = கொடிய வினைகள் உள்ள என் 


மனம் நீ புகுந்தாய் = மனத்தில் நீ புகுந்தாய் 


வெள்ளைச் சுடர் விடும் = களங்கம் ஏதும் இன்றி சுடர் விடும் 


உன் பெரு மேன்மைக்கு = உன்னுடைய பெரிய புகழுக்கு 


இழுக்கு இது என்று = இது இழுக்கு என்று 


தள்ளுற்று இரங்கும் =  தவித்தபடி ஏங்கும் 


இராமாநுச! = இராமாநுச!


என் தனி நெஞ்சமே! = துணை அற்ற என் தனி நெஞ்சமே 




Monday, May 17, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை 


தர்மத்தை பசுவுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் போது, அந்த பசு கிருத  யுகத்தில் நான்கு கால்களில் நின்றதும் என்றும், திரேதா யுகத்தில் மூன்று கால்களில் நின்றதும் என்றும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களில் நின்றது என்றும், இப்போது கலி காலத்தில் ஒரு காலில் நிற்கிறது என்றும் சொல்லுவார்கள். 


பசு, கால் என்பதெல்லாம் ஒரு குறியீடு. அதாவது, தர்மம் தன் நிலை இழக்கும் என்பது அர்த்தம். ஒரு காலில் ஒரு பசு எவ்வாறு உறுதியாக நிற்க முடியும். 


கலி காலத்தில் அறம் தேய்ந்து, மறம் ஓங்கி நிற்கும். கலியின் ஆதிக்கம் ஓங்க ஓங்க, நாட்டில் அநீதியும், அதர்மமும் தலையெடுக்கும். 


யார் இதை தடுத்து நிறுத்துவது? அறத்தை யார் எடுத்துச் சொல்வது? மக்களை யார் நல் வழிப் படுத்துவது ? 


அவ்வப்போது பெரியவர்கள் தோன்றி அறத்தை உபதேசித்து மக்களை நல் வழிப் படுத்துகிறார்கள். 


அப்படி தோன்றிய பெரியவர்களில் ஒருவர் இராமானுஜர். 


அவர் தன்னுடைய தவ வலிமையால், இந்த பூமியை பீடித்த கலியை வென்று வீழ்த்தினார். அப்படி செய்த பின்னும், இந்த உலகம் ஒளி பெற்று விளங்கவில்லை. காரணம், கலியின் கொடுமை தணிந்தாலும், நாம் செய்த வினைகளின் பலன் நம்மை விட்டுப் போகாது. இராமானுஜர் அதையும் விடவில்லை. கலியின் கொடுமையை அழித்த அவருக்கு நம் வினையின் தொகுதியை அழிப்பது என்ன பெரிய காரியமா? அதையும் அழித்தார் அவர். அவர் பெருமை சொல்லவும் முடியுமோ என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல்  


நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,  நினைப்ப‌ரிய- 

ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,  என் பெய்வினைதென்- 

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 

நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_17.html


(please click the above link to continue reading)


நிலத்தைச் = பூமியை 

செறுத்துண்ணும் = கோபித்து அழிக்கும் 

நீசக் கலியை = மோசமான கலியின் 

நினைப்ப‌ரிய = நினைபதற்கு முடியாத பெரிய 

ப‌லத்தைச்  = பலத்தை 

செறுத்தும் = அடக்கியும் 

பிறங்கியதில்லை =இந்த உலகம் ஒளி விடவில்லை 

 என் = என்னுடைய் 

பெய்வினை = பெய் வினைகள் 

தென் புலத்தில் = தெற்கு திசையில் 

பொறித்த = எழுதப்பட்ட 

அப்புத்தகச் சும்மை = அந்த புத்தகத்தை 

பொறுக்கியபின் = எடுத்து மாறிய பின்  

நலத்தைப் பொறுத்தது = நலத்தை தருவது 

இராமானுசன் தன் நயப்புகழே = இராமானுசன் தன் நவிலக் கூடிய புகழே 


பெய் வினை: அதாவது, வினைகளை ஒவ்வொன்றாக செய்யவில்லையாம். 

மழை பெய்வது போல மொத்த வினையும் ஒன்றாக செய்து விட்டாராம். அவ்வளவு வினைகள ஒன்றாகச் செய்து விட்டால், எப்போது அவற்றை அனுபவித்து தீர்ப்பது? அதற்கு எத்தனை பிறவி வேண்டுமோ? அதை எல்லாம் ஒருங்கே அழித்தார் இராமனுசர்.


"தென் புலத்தில் பொறித்த அப்புத்தகம்" எமனுடைய துணையாள் சித்திர குப்தன் நாம் செய்யும் நல் வினை தீ வினைகளை எழுதி வைப்பான் என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் புத்தகத்தில் உள்ள நம் வினையின் தொகுதிகளை அழித்து நமக்கு நல்லது செய்வார் என்பது கூற்று. 


என்னே குருபக்தி 




Saturday, May 15, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச

 இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச 


ஒரு சில நாட்களாய் பயங்கர வயிற்று வலி. மருத்துவரிடம் போகிறோம். அவர் சோதனை எல்லாம் செய்து விட்டு, ஒரு மாத்திரை தருகிறார். அதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். 


பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. ஓரிரு நாட்களில் திருமணம். எதிர்பாராத செலவு வந்து விட்டது. கையில் காசு இல்லை. யார் யாரிடமோ கேட்டாகி விட்டது. கடைசி நிமிடத்தில் எல்லோரும் கை விரித்து விட்டார்கள். என்ன செய்வது என்று ஒரே தவிப்பு. கடைசியாக ஒரு நண்பரிடம் சென்று கேட்கிறோம். அவரோ, "இதை ஏன் முதல்லியே என் கிட்ட சொல்லல " என்று கோபித்துக் கொண்டு, நாம் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே தந்து, "முதல்ல போய் கல்யாணத்தை நல்ல படியா முடி...மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று நம்மை அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


நம் மனம் எவ்வளவு சந்தோஷப் படும். 


இப்படி நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் யாரோ ஒருவர் வந்து உதவி பண்ணி நம்மை கை தூக்கி விடுகிறார். 


எல்லாம் குருவருள். 


மேகத்தின் தன்மை மழை பொழிவது. 


அது எங்கே பொழிய வேண்டும், இந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நமக்கு வேண்டியவன், அங்கே கொஞ்சம் நிறைய பொழிவோம். இந்த நிலத்துக்காரன் மோசமானவன், அவன் நிலத்தில் பெய்யக் கூடாது என்று பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை. 


எல்லோருக்கும் பொதுவாக அது பொழிகிறது. விருப்பு வெறுப்பு கிடையாது. நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. 


இராமானுசரே, உம்முடைய கருணை அந்த கார் மேகத்தைப் போன்றது. உம்முடைய அந்த கருணை உள்ளத்தை யார் அறிவார்கள்? யாரும் அறிய மாட்டார்கள்.  எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு துன்பத்தைப் பற்றிக் கொண்டு தவிக்கின்றேன் நான். நான் அந்த துன்பங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேன் இல்லை என்றால் அது என்னைப் பிடித்துக் கொள்கிறது.  எப்படியோ இந்த துன்பங்கள் என்னை தேடி வந்து அடைந்து விடுகின்றன. வருவது மட்டும் அல்ல, என் கூடவே நிரந்தரமாய் தங்கியும் விடுகின்றன. ஒண்ணு போனா இன்னொன்னு வந்து விடுகிறது.  நீர் வந்து என்னை இந்தத் துன்பக் கடலில் இருந்து கரை ஏற்றிய பின், உன்னுடைய பெருமைகளை எல்லாம் நினைக்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் திருவரகத்து அமுதனார். 


பாடல் 


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_15.html


(please click the above link to continue reading)


காரேய் = நீர் கொண்ட கரிய மேகம் 


கருணை இராமானுச! = கருணை கொண்ட இராமானுசரே 


இக்கடலிடத்தில் =  இந்தப் பிறவி என்ற கடலில் 


ஆரே அறிபவர் = யார் அறிவார்கள் 


நின்னருளின் தன்மை?! = உன் அருளின் தன்மையை 


அல்லலுக்கு = துன்பத்துக்கு 


நேரே உறைவிடம் நான்! = எப்போதும் இருப்பிடம் நான் 


வந்து நீ என்னை  = நீ வந்து 


உய்த்த பின் = என்னை காப்பாற்றிய பின் 


உன் சீரே  = உன் பெருமைகளை 


உயிர்க்குயிராய் = உயிருக்கும் உயிராய் 


அடியேற்கு இன்று தித்திக்குமே! = அடியேனாகிய எனக்கு இன்று தித்திகின்றது 




Friday, May 14, 2021

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?


எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். மக்கள் உய்த்தேற உபதேசம் செய்து இருக்கிறார்கள். நல் வழி காட்டி இருக்கிறார்கள். அறம் போதித்து இருக்கிறார்கள். 


அப்படி செய்ததால் அவர்களுக்கு பாவம் வரும், அவர்கள் வீடு பேறு பெற முடியாது என்று யாரும் சொல்லாவில்லை. அப்படி சொன்ன பின்னும், எனக்கு தீங்கு வந்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு நன்மை வந்தால் போதும் என்று தான் அறிந்த உண்மையை உலகுக்குச் சொன்னவர் இராமானுசர். 


இறைவனை தொழுவதும், அவன் நாமத்தை சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் அப்படி செய்தால் பாவம் என்று சொல்லி வந்த போது, அப்படி அல்ல, வாருங்கள், நீங்களும் இறைவனின் திருவடியை தொழலாம், நீங்களும் இறைவனின் பிள்ளைகள் தான் என்று அனைவரையும் ஒன்று சேர்த்தவர் இராமானுஜர். 


அவர் மட்டும் இல்லை என்றால், அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு யார் காவல் என்று கேட்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல் 

 

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு

அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சரணம் அடைந்த = சரணம் அடைந்த 


தருமனுக்காப் = தருமன் முதலிய பஞ்ச பாண்டவர்களுக்காக 


பண்டு = முன்பு 


நூற்றுவரை = கௌரவர்களை 


மரணம் அடைவித்த = மரணம் அடையச் செய்த 


மாயவன் தன்னை = திருமால் தன்னை 


வணங்க வைத்த = வணங்க வைத்த 


கரணவையு = கரணம் இவை  (கரணம் என்றால் உறுப்புகள். வணங்கும் தலை, கூப்பும் கைகள்) 


உமக் கன்று = உமக்கு அன்று 


என்று = என்று 


இ ராமா னுசன் = இராமானுசன் 


உயிர்கட்கு = உயிர்களுக்கு 


அரணங் கமைத்தில னேல் = அரண் அங்கு அமைத்திலனேல் = அரணம் அமைக்கவில்லை என்றால் 


அர ணார் = அரண் ஆர் 


மற்றிவ் வாருயிர்க்கே? = மற்று இவ் ஆருயிற்கே ?


குறிப்பிட்ட மக்கள் மட்டும்தான் இறைவனை தொழ முடியும்; வீடு பேறு அடைய முடியும் என்று சொல்லி வந்த காலத்தில், அப்படி அல்ல  எல்லோரும் இறைவனை தொழ முடியும் என்று "வான் கருணை" யை வியந்து பாராட்டுகிறார் திருவரங்கத்து அமுதனார். 



Friday, January 22, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள். 



Thursday, October 24, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன்

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன் 


தினமும் மூணு வேளை குளிக்கிறேன், நாலு வேளை பூஜை பண்ணுகிறேன், நாளும் கிழமையும் என்றால் உடலை வருத்தி தவம் செய்கிறேன், வருடம் தவறாமல் திருத்தல யாத்திரை செய்கிறேன், மொட்டை போட்டுக் கொள்கிறேன், வெளியே ஒரு காப்பி கூட குடிப்பதில்லை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்று அத்தனையும் கடைபிடிக்கிறேன் ....

என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஏதோ இதை எல்லாம் செய்தால் நேரே இறைவனடி சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில்.

அமுதனார் சொல்கிறார்

"உடலை வருத்தி செய்யும் தவங்களை விட்டு விட்டேன். குலசேகர பெருமாளின் பாசுரங்களை படிக்கும் பெரியவர்களின் பாதங்களை துதிக்கும் இராமானுஜரை நான் பற்றிக் கொண்டேன். அவர் என்னை விட்டு விட மாட்டார்"  என்கிறார்.

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.


பொருள்


கதிக்குப் = நல்ல கதிக்கு செல்ல வேண்டுமே என்று

பதறி = பதட்டம் கொண்டு

வெங் கானமும் = கொடிய காடும்

கல்லும் = மலையும்

கடலுமெல்லாம் = கடலும் எல்லாம்

கொதிக்கத் = கொதிக்கும்படி

தவம் செய்யும் = தவம் செய்யும்


கொள்கையற் றேன் = கொள்கையை விட்டு விட்டேன்

கொல்லி காவலன் = குலசேகர ஆழ்வார்

சொல் = சொற்கள்

பதிக்கும் = பதிந்து கிடக்கும்

கலைக்கவி  = கலை நின்றாய்ந்த கவிதைகள்

பாடும் = பாடுகின்ற

பெரியவர் பாதங்களே = பெரியவர்களின் பாதங்களை

துதிக்கும் = வணங்கும்

பரமன் = பெரியவன்

இராமா னுசன் = இராமானுசன்

என்னை  = என்னை

சோர்விலனே. = சோர்வுடைய விட மாட்டார்

பக்தியிலே இரண்டு விதம் சொல்வார்கள்.

குரங்கு மாதிரி, பூனை மாதிரி என்று இரண்டு விதம்.

பூனை, தன் குட்டியை தானே தூக்கிக் கொண்டு திரியும்.

குரங்கு அப்படி அல்ல. குட்டி குரங்கு தாயை இறுக்க பற்றிக் கொள்ளும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும்.  விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டியது குட்டியின் பாடு.

இராமானுசன் என்னை சோர்விலனே என்றால் பூனை மாதிரி பக்தி. அவர் கிட்ட போய்விட்டால் போதும்.  அவர் நம்மை தூக்கிக் கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விடுவார்.  அப்புறம் அவர் பாடு அது என்கிறார்  அமுதனார்.

தாய்தான் , தந்தையை அடையாளம் காட்டுகிறாள்.

தந்தைதான், குருவை அடையாளம் காட்டுகிறார்.

குரு , நமக்கு தெய்வத்தை அடையாளம் காட்டுவார் என்பது நமது நம்பிக்கை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முறை.

குருவிடம் போய் சேர்ந்து விட வேண்டும். அவர் கொண்டு போய் சரியான இடத்தில்  சேர்த்து விடுவார்.

இதற்கு நடுவில் இந்த  ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை, புனஸ்காரம், விரதம், தவம்  எல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

நாமா கேட்போம்?

நமக்கு எவ்வளவு தெரியும். இத்தனை நாளாய் செய்து வந்த முறைகளை விட முடியுமா என்ன?

பாசுரம் ஒரு பக்கம் வாசித்து, 'அடடா என்னம்மா பாடியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே நம்ம  வேலையை பார்க்க வேண்டியதுதான்.

நாளை மீண்டும் சந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_24.html

Wednesday, October 16, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை


நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும் இயல்பு உடையன. வெளியில் உள்ளதை பார்க்கும், நுகரும், கேட்கும்...இப்படி எங்கே எது இருக்கிறது என்று அலையும்.

நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும், நல்ல படம் எங்கே ஓடும் என்று ஆசை கொண்டு நம்மை விரட்டும்.

இப்படி நாளும் ஓடும் புலன்களை பிடித்து நிறுத்த முடியுமா என்றால், அதுவும் கடினம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ, அவ்வளக்கவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.

பின் என்ன தான் செய்வது ? எப்படி புலன்களை வெற்றி கொள்வது?

நம் முன்னவர்கள் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்து சொன்னார்கள்.

ஓடுவது புலன்களுக்கு இயல்பு. ஓடட்டும். ஆனால், அது எங்கே ஓட வேண்டும் என்று நாம் முடிவு செய்து கொண்டு அதை அங்கே அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். அது நிற்காது. ஆனால், அதை நாம் விரும்பிய திசையில் செலுத்த முடியும்.

வழிபாடு என்ற ஒன்றை கண்டு பிடித்தார்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  வழிபாடு என்பது மனதை நல் வழி படுத்த வந்த ஒரு முறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனைத் தான் வழிபட வேண்டும் என்று இல்லை. இயற்கையை வழிபடுங்கள், உங்கள் பெற்றோரை வழி படுங்கள், ஆசிரியரை வழி படுங்கள்...வழிபாடு மனதை நல்வழி திருப்பப் பயன்படும்.

வழிபடும் போது, மனம், வாக்கு, உடல் (காயம்) இந்த மூன்றும் ஒன்று பட வேண்டும்.  வாய் பாட்டுக்கு பாசுரத்தை சொல்லிக் கொண்டிருக்கும், மனம்  வேறு எதையோ  நினைத்துக் கொண்டிருக்கும், கை இன்னொன்றை செய்து கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு.

திரிகரண சுத்தி என்று சொல்லுவார்கள். மனம், வாக்கு , காயம் என்ற உடல் மூன்றும்  ஒரு புள்ளியில் இலயிக்க வேண்டும்.

இறைவனை வழிப்படு என்றால் சிக்கல். ஆளாளாளுக்கு ஒரு கடவுள் வைத்து இருக்கிறார்கள்.  எந்தக் கடவுளை வழிபடுவது. எல்லாக் கடவுளும் ஒன்றா. நம்ம கடவுள்  மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் இல்லையா? என்றெல்லாம் தோன்றும்.

எனவேதான், குருவை, ஆச்சாரியனை வழிபடுதல் என்று வைத்தார்கள். அவர் நமக்கு  இறைவனை காட்டித் தருவார் என்று  நம்பினார்கள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்,

"துளசியுடன் கூடிய பூ மாலையும், தமிழ் பா மாலையும் பாடிய தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருவடிகளை மனதில் கொண்ட இராமானுஜரின் திருவடிகளே எனக்குத் துணை" என்று.

பாடல்

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

பொருள்

செய்யும் = செய்கின்ற

பசுந் = பசுமையான

துளபத் = துழாய்

தொழில் = எழிலான , அழகான

மாலையும் = மாலையும்

செந்தமிழில் = செம்மையான தமிழில்

பெய்யும் = பொழியும்

மறைத்தமிழ் மாலையும்  = வேதங்களின் சாரமான பா மாலையும்

பேராத  = நீங்காத

சீரரங்கத் தையன்= ஸ்ரீரங்கத்து ஐயன்

கழற் = திருவடிகள்

கணியம் = அணியும், மனதில் தரித்துக் கொள்ளும்

பரன் = தொண்டரடிப் பொடி ஆழ்வார்

தாளன்றி  = திருவடிகள் தவிர

ஆதரியா = மற்றவற்றை ஆதரிக்காத, வணங்காத

மெய்யன் = உண்மையானவன்

இராமா னுசன் = இராமானுசன்

சர ணே = பாதங்களே

கதி = வழி

வேறெனக்கே. = வேறு எதுவும் இல்லை

பூ மாலை, கையால் , உடலால் செய்யும் பூஜை

பா மாலை , மனதால், வாக்கால் செய்யும் பூஜை

அப்படி மூன்றும் ஒன்றுபட்ட தொண்டரடிப் பொடியின் பாதங்களை பற்றிக் கொண்ட இராமானுஜரின் பாதங்களே எனக்குத் துணை என்கிறார்.

கொஞ்சும் தமிழ். தேனாய் தித்திக்கும் தமிழ்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_16.html

Tuesday, October 20, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும்

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும் 


எதைச் செய்தாலும் குற்றம் காண்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நல்லவற்றை விட்டு விட்டு , குறைகளையே தேடி கண்டு கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற = எனக்கு உற்ற = எனக்கு கிடைத்த

செல்வம் = செல்வம்

இராமா னுசனென்று = இராமானுஜன் என்று

இசையகில்லா = ஏற்றுக் கொள்ளாத

மனக்குற்ற = மனதில் குற்றம் உள்ள

மாந்தர் = மக்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் புகழே

அவன் = இராமானுஜரின்

மன்னிய = நிலைத்த

சீர் = சிறந்த

தனக்குற்ற = அவனுக்கு உரிய

அன்பர் = அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய திரு நாமங்களை

சாற்றுமென்பா = சாற்றும் + என் + பா = சொல்லும் என் பாடல்கள்

இனக்குற்றம் = இந்த குற்றங்களை

காணகில் லார் = காண மாட்டார்கள்

பத்தி = பக்தி

ஏய்ந்த  இயல்விதென்றே.= ஏற்ற இயல்பு இது என்று சொல்லுவார்கள்

ஏன் பழி போடுகிறார்கள் ? இந்த பாடல்களில் அப்படி என்ன பழி சொல்லும் படி இருக்கிறது ?


அமுதனார், வேதம், சாஸ்திரம், போன்றவற்றில் சொன்னவைகளை எல்லாம் விட்டு விட்டார். இராமானுசர் ஒருவரே எல்லாம் என்று அவரைப் பற்றிக் கொண்டார். ஆசாரியனே எல்லாம் , ஆண்டவன் கூட கிடையாது என்று அவர் கூறியதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பு இல்லை.

ஆசாரியன், குரு இல்லாமல் இறைவனை, உண்மையை அறிய முடியாது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று பாடினார் அருணகிரிநாதர்.

தாயாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

தந்தையாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

ஏன் குருவாய் வருவாய் என்றார் என்றால் குரு தான் நமக்கு இறைவனை காட்ட முடியும்.

தாய்தான் நமக்கு தந்தையை காட்டுகிறாள். "அப்பா பாரு..." என்று பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப் படுத்துபவள் தாய். தாய் சொல்லாவிட்டால் , தந்தை யார் என்றே தெரியாமல் போய் விடும்.

தந்தை, கைபிடித்து அழைத்துப் போய் பள்ளியில் சேர்த்து குருவை அறிமுகப் படுத்துகிறார். எனவே தான் "தந்தையோடு கல்வி போம்" என்று சொன்னார்கள்.

குருதான், நமக்கு இறைவைனை அறிமுகப் படுத்த வேண்டும்.

அப்படி இராமானுசரையே எல்லாம் என்று கொண்டாடிய என் பாடல்கள் பிழை என்று சொன்னால்  அதுவே கூட அதற்கு புகழ் தான் என்கிறார்.

அது எப்படி பழியே புகழாகும் ?

என்ன பழி போடுகிறார்கள் - ஆசாரியனே எல்லாம் என்று இந்த அமுதனார் கூறுகிறார், ஆண்டவனே ஆசாரியனுக்கு அடுத்தபடிதான் என்று கூறுகிறார் என்றெலாம்  பழி போடுவார்கள்.

அமுதனாருக்கு சந்தோஷம். அது தானே அவருக்கு வேண்டும். இப்படி எல்லோரிடமும் போய் சொல்லி ஆசாரியனின் புகழை  பரப்ப இந்த பழி கூட உதவும் என்கிறார்.

பக்தி உள்ளவர்களுக்கு அது புரியும் என்கிறார். பக்தி உள்ளவர்கள், இராமானுசரின் மேல் அன்பு கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் குறைகளை காண மாட்டார்கள் என்கிறார்.

மாலுமி இல்லாத கப்பல், ஓட்டுனர் இல்லாத வண்டி போல ஆகிவிடும் ஆசாரியன் இல்லாத  வாழ்கை.







Friday, September 25, 2015

இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.

Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார்.