Showing posts with label அற்புத திருவந்தாதி. Show all posts
Showing posts with label அற்புத திருவந்தாதி. Show all posts

Tuesday, August 27, 2019

அற்புதத் திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அற்புதத்  திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது


காரைக்கால் அம்மையார் எழுதியது அற்புதத் திருவந்தாதி.

உண்மையிலேயே அது ஒரு அற்புதத் திருவந்தாதிதான்.

பெண்கள் சுடுகாட்டுக்கு போவது கூடாது என்ற கட்டாய நெறிமுறை இன்றும் கடைபிடிக்கப் படுகிறது.

அந்தக் காலத்திலேயே, இறைவனை சுடுகாட்டில் சென்று வழிபட்டவர் அம்மையார்.

அறிவியலும், தத்துவமும் படிக்க படிக்க நம் மனமும் புத்தியும் எதையும் ஆராயச் சொல்கிறது. கேள்வி கேட்கச் சொல்கிறது. கேட்டதை சரி பார்க்கச் சொல்கிறது.

எதையும் அலசி ஆராயாமல் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

நம்பிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. தாக்கம்தான் மேலோங்கி நிற்கிறது.

எதையும் அறிவுக் கண் கொண்டு பார்க்க புத்தி விளைகிறது.

அறிவுக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது என்று மனம் திடமாக நம்புகிறது.

அம்மையாரிடம் ஒருவர் கேட்டார், "சிவன் சிவன் என்று சொல்கிறீர்களே, அவன் எப்படி இருப்பான்" என்று.

அம்மையார் சொல்கிறார்

"அவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே  ஆட்பட்டேன். சரி அப்போதுதான்  திருவருள் கிடைக்கவில்லை. ஆட்பட்ட பின், அவன் அருள் கிடைத்தபின்  சிவன் எப்படி இருப்பான் என்றால், இப்போதும் தெரியவில்லை. அப்போதும் தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை.  நீ எப்படி  இருப்பாய் என்று கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். உன் உருவம் தான்  என்ன " என்று சிவனையே கேட்கிறார் அம்மையார்.

பாடல்



அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது


பொருள்

அன்றும் = திருவருள் கிடைப்பதற்கு முன்பு

திருவுருவம் = உன் திருவுருவம்

காணாதே ஆட்பட்டேன் = காணாமலேயே ஆட்பட்டேன்

இன்றும் = திருவருள் கிடைத்த பின்பு இன்றும்

திருவுருவம் காண்கிலேன்  = உன் உருவத்தை நான் காண்கிலேன்

என்றும் = எப்போதும்

தான் = தான்

எவ்வுருவோன் =  எந்த உருவத்தவன்

 நும்பிரான் = உன் தலைவன்

என்பார்கட் = என்று என்னை கேட்பவர்களுக்கு

கென்னுரைக்கேன் = என்ன உரைப்பேன் ?

எவ்வுருவோ  = என்ன உருவமோ

நின்னுருவம் = உன் உருவம்

ஏது = எது நான் சொல்லுவேன்

உருவம் இல்லாத ஒன்றை நம்பித்தான் இருந்திருக்கிறார்கள்.

அவன் அநுபூதி பெற்றவர்களுக்கும் அவன் உருவம் தெரியாது.

நாவுக்கரசர் கூறுகிறார்....

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”


அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்லன்

ஒரு ஊர் காரன் இல்லை

உவமை இல்லாதவன்

ஒரு நிறம் இல்லாதவன்

இப்படியன் , இந் நிறைத்தன் , இவன் இறைவன் என்று வரைந்து காட்ட முடியாது என்கிறார்.

அப்படி என்றால், அது சிந்தனைக்கு அகப்படாதது.

"சித்தமும் காணா சேச்சியோன் காண்க" என்கிறார் மணிவாசகர்

உருவம் இல்லாத ஒன்றை எப்படி காண்பதாம்?

இது பற்றி சைவ சித்தாந்தம் மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி வைத்திருக்கிறது.


விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணி சோதியன் 


என்பார் நாவுக்கரசர்.

இதை எப்படித்தான் விளக்குவது ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_27.html

Saturday, March 22, 2014

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம்

அற்புதத் திருவந்தாதி - அக்கோலத்தே அவ்வுருவேயாம் 


படித்து அறிவது என்பது ஒன்று
அனுபவத்தில் உணர்ந்து அறிவது என்பது வேறு ஒன்று

அனுபவத்தில் கிடைப்பதை படித்து அறிய முடியாது.

இறை அனுபவம் என்பது படித்து அறிவது அல்ல. ஆயிரம் புத்தகம் படித்தாலும், காதலியின் கடைக் கண் சொல்லும் செய்தி புரியாது. அதற்கு அனுபவம் வேண்டும்.

காரைக் கால் அம்மையார், இறைவனைப் பற்றி  கூறுகிறார்.

பாடல்

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!
நீல மணிமிடற்றா னீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கு
மக்கோலத் தவ்வுருவே யாம்.

பொருள்

நூலறிவு பேசி = புத்தக அறிவு பற்றி பேசி, விவாதம் பண்ணி

நுழைவிலா தார் திரிக! = நுழைவு இல்லாதார் திரிக. அனுபவம் என்ற உணர்வு தன்னில் நுழையாதவர்கள் மனம் போன படி பேசித் திரியட்டும்


நீல மணிமிடற்றா = நீல மணி போன்ற கழுத்தை உடைய

நீர்மையே = கீழாக இருக்கும்
மேலுலந்த = மேல் உலந்த = அனைத்திற்கும் மேலாக இருப்பது

தெக்கோலத் = எந்த கோலத்தில்

தெவ்வுருவா = எந்த உருவத்தில்

யெத்தவங்கள் = எந்த தவங்கள்

செய்வார்க்கு = செய்பவர்களுக்கு

மக்கோலத் = அக் கோலம்

தவ்வுருவே யாம். = அவ் உருவேயாம்

யார் எப்படி, எந்த உருவத்தில், எப்படி நினைத்து தவம் செய்கிறார்களோ, அந்த உருவத்தில்  அவன் இருப்பான்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் ஒரு பெண்ணால் எழுதப் பட்ட பாடல்.



Sunday, November 24, 2013

அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும் 

கீதை சொல்கிறது - எல்லாவற்றிலும் தன்னை காண்பானும், தன்னை எல்லாவற்றிலும் காண்பானும் உயர்ந்த யோகி என்று. 

இந்த உலகம் நம்மால் உருவாக்கப் பட்டது. "பன்னிய  உலகினில் பயின்ற பாவத்தை நன்னின்று அறுப்பது நமச்சிவாயவே " என்பார் நாவுக்கரசர். 

இது பன்னிய உலகம். 

 அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார் காரைக்கால் அம்மையார். 

பாடல் 

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொருள் 

அறிவானுந் தானே = அறிபவனும் தானே 
அறிவிப்பான் தானே = அறிவை  தருகின்றவனும் தானே 
அறிவாய் அறிகின்றான் தானே = அந்த அறிவாய் தன்னை அறிபவனும் தானே 

 அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே = அறிந்து கொள்ளும் மெய் பொருளும் தானே 

 விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் = ஞாயிறு, ஆகாயம், என்று எல்லா பொருள்களும் அவன். 

அறியும் பொருள் 
அறிபவன் 
அறியும் அறிவு 
அறிவு 

எல்லாம் ஒன்றே. ஒன்றில் இருந்து ஒன்று வேறல்ல. 

இது ஒரு பார்வைக் கோணம் (point of view ). அது எப்படி என்று யோசித்துப் பார்ப்போமே. 




Wednesday, March 20, 2013

அற்புதத் திருவந்தாதி - காண்பார்


அற்புதத் திருவந்தாதி - காண்பார் 


காரைக்கால் எழுதியது அற்புதத் திருவந்தாதி. உண்மையிலேயே அற்புதமான நூல்.  அதில் இருந்து ஒரு பாடல். 

கடவுள் இருக்கிறாரா ? இந்த கேள்வி காலம் காலமாய் எழுப்பப்பட்டு முடிவான விடை கிடைக்காமல் மனித குலம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. 

காரைக்கால் அம்மையார் இறை உணர்வு பற்றி மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார்.

கடவுள் என்று யாரும் கிடையாது. இந்த உலகைப் படைத்தவன் கடவுள் அல்ல.. இந்த உலகம் தானே உண்டானது. இது சில நியதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. என்று வாதிடும் ஒரு சாரார் 

இன்னொரு சாரார், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவென்று  தெரியாது. அப்படி ஒன்று இல்லாமலா இத்தனையும் நடக்கிறது ? இந்த உலகம் ஒரு நியதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று கூறினால் அந்த நியதிகள் எப்படி வந்தன. இவர்கள் இறைவனை முழுமையாக அறியாதவர்கள். ஆனால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மூன்றாவது, இறைவனை அறிந்து, உணர்ந்து, அவன் அன்பில், கருணையில் உருகி அவனையே எங்கும் காண்பார்கள். உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்த ஜோதியாய் காண்பார்கள். 

இதில் முதலாவது பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படி இறைவன் தோன்றுகிறான். மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு ஒழுங்கு, ஒரு நியதி ...அதுவாக இருக்கிறான் இறைவன் அவர்களுக்கு. 

இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள்...கை கூப்பி தொழுது ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள்...பெருமாள் சிவன், பிள்ளையார் முருகன் என்று அவர்கள் ஏதோ ஒரு உருவத்தில் அவனை நினைக்கிறார்கள். அந்த உருவத்தில் அவர்களுக்கு அவன் காட்சி தருகிரான் 

மூன்றாவது ரகம், இவர்களுக்கு இறைவன் ஜோதி ரூபமாய் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற நிறைந்து காட்சி தருகிறான்.

பாடல் 
  

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொருள் 


Saturday, May 5, 2012

அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


சுடுகாட்டிலே ஒரு பேய்.

அது முதலில் சும்மா காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தது.

சும்மா இருக்க வேண்டியது தானே? 
அதுவோ பேய். 

பக்கத்தில் எரிந்து கொண்டு இருந்த ஒரு பிணத்தின் சிதையில் இருந்து ஒரு கொள்ளியை உருவியது.

அதில் இருந்த கரியை எடுத்து நசுக்கி, பொடியாக்கி முகத்தில் பூசிக் கொண்டது. 

எரிந்து கொண்டு இருந்த தணல் அல்லவா ? எங்கோ சூடு பட்டுக் கொண்டது.

சூடு தாங்கவில்லை. அதற்க்கு கோவம் வருகிறது. தலையை அங்கும் இங்கும் ஆட்டி கத்துகிறது. சிரிக்கிறது

அங்கும் இங்கும் துள்ளுகிறது. தீயை அணைக்க முயல்கிறது. 

அந்த சுடுகாட்டில் ஆடுகிறான், என் அப்பன் சிவன் என்கிறார் காரைக்கால் அம்மையார். 

யார் அந்த பேய் ?

நாம் தான் அந்தப் பேய். 

இந்த உலகம் தான் சுடுகாடு.

எங்கே சும்மா இருக்கிறோம் ? 

ஒவ்வொரு ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. 

அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையா இருக்கும். 

அப்புறம், சூடு தாங்காமல் எரியும்.

எல்லோரையும் கோவிக்கிறோம், கத்துகிறோம், 

எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

இத்தனயும் பார்த்து கொண்டு ஆனந்த நடனம் ஆடுகிறான் அவன்.

அர்த்தம் செறிந்த அந்த காரைக்கால் அம்மையாரின் பாடல் இதோ...

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி
கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையைவிள்ள 
எழுதி வெடுவெடென்னநக்கு வெருண்டு விலங்கு
பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 
முற்றுஞ் சுளிந்து பூழ்திஅள்ளி அவிக்க நின்றாடும்
 எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

கள்ளிக் கவட்டிடைக் = கள்ளிக் செடி புதருக்குள்



காலை நீட்டி = காலை நீட்டி



கடைக் கொள்ளி வாங்கி = கடைசியாக நீட்டி கொண்டு இருந்த கொள்ளியை எடுத்து


மசித்து மையை = அதை நசுக்கி, அதில் இருந்த கரியை எடுத்து



விள்ள எழுதி = விள்ள என்றால் எழுதும் மை. அந்த கரியால் எழுதி



வெடுவெடென்ன = பெரிய சிரிப்பு. அல்லது சூட்டில் உடல் வெடு வெடுவென நடுங்குதல்



நக்கு = உறுமி, ஆங்காரமாக சப்தமிட்டு



வெருண்டு = பயந்து



விலங்கு பார்த்துத் = குறுகிப் பார்த்து (தலையை ஆட்டி, கண்ணை சுருக்கிப் பார்த்து)



துள்ளிச் = அங்கும் இங்கும் துள்ளி, ஆட்டம் போட்டு, சூடு தாங்காமல் குதித்து



சுடலைச் = சுடுகாட்டில்



சுடுபிணத்தீச் = பிணத்தை எரிக்கின்ற தீயை



சுட்டிட முற்றுஞ் சுளிந்து = முழுவதும் அணைக்க

பூழ்தி அள்ளி அவிக்க = புழுதியை அள்ளி அந்த தீயின் மேல் போட்டு அதை அணைக்க


நின்றாடும் = அந்த சுடுகாட்டில் நின்று ஆடும்



எங்கள் அப்பனிடந் திரு ஆலங்காடே = எங்கள் தந்தை இருக்கும் திரு ஆலங்காடே


Sunday, April 29, 2012

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும். 

பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம். 

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.

இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்

Saturday, April 28, 2012

அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு


அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு

நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள்.

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்....