Showing posts with label Thirumandhiram. Show all posts
Showing posts with label Thirumandhiram. Show all posts

Thursday, April 30, 2020

திருமந்திரம் - எப்படி அப்படி

திருமந்திரம் - எப்படி அப்படி 


ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை பலவிதமாக பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு. ஆனால், முயன்றால் ஜீவ ஆத்மா , பரமாத்மாவுடன் சேரலாம் என்று.

அ-த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்கிறது. வேறு மாதிரி தெரிவது மாயை.

விசிஷ்டாத்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு என்று. இரண்டும் கலக்கவே முடியாது என்கிறது.

இதில் எதை நம்புவது. மூன்றும் , வெவ்வேறு திசையில் இழுக்கின்றன.

திருமூலர் இதை எளிதாக விளக்குகிறார்.

ஒரு படி நீரில், ஒரு பிடி உப்பைப் போட்டால், நீரின் அளவு மாறாது. அது அதே ஒரு படிதான் இருக்கும். அப்படி ஆனால் உப்பு எங்கே போனது? தண்ணீருக்குள்தான் இருக்கிறது. ஆனால், அது தனியாக தெரிவது இல்லை. தண்ணீரை வற்றக் காய்ச்சினால், அந்த உப்பு மீண்டும் வரும்.

இரண்டும் ஒன்றாக கலந்ததா என்றால், ஆம்.

கலந்த பின் உப்புக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் போயிற்றா என்றால், ஆம்.

மீண்டும் அதை பிரித்து எடுக்க முடியுமா என்றால் , ஆம்.

அது போலத்தான் சீவனும், சிவனும் என்கிறார் திருமூலர்.

ஜீவாத்மா , பரமாத்மாவோடு இரண்டு அற கலந்து விடும். ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், உள்ளே தனியாக இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் பிரித்துக் கொண்டு வந்து விடலாம்.

இதை எப்படி விளக்குவது? அது போலத்தான் ஜீவனும், சிவனும் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.


பாடல்



அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.


பொருள்

அப்பினில்  = நீரினில்

உப்பென  = உப்பைப் போல

அத்தன் = இறைவன்

அணைந்திட்டுச் = சேர்ந்துக் கொண்டு

செப்பு பராபரம் = சொல்லும் பராபரம்

சேர் = சேர்ந்து

பர மும் விட்டுக் = பரத்தை விட்டு விட்டு

கப்புறு = உறுதியான

சொற்பதம் = திருவடிகளை

மாயக் கலந்தமை = மறையும்படி கலந்தது

எப்படி = எப்படி என்றால்

அப்படி என்னும் அவ்வாறே. = அப்படி நடந்ததே அதே மாதிரி

உப்பும் தண்ணீரும் கலந்த மாதிரி என்று சொல்லலாம் என்கிறார்.

எளிய உதாரணம். உயர்ந்த கருத்து.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_30.html

Thursday, January 29, 2015

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம்

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம் 


பொதுவாக நம் தமிழ் இலக்கியமும் , குறிப்பாக அற நூல்களும் மற்றும் சமய இலக்கியங்களும் புலன்களை அடக்க வேண்டும், புலன்கள் போன வழியில் போகக் கூடாது, புலன்கள் வஞ்சனையை செய்யும், புலன்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்றெல்லாம் தான் சொல்கின்றன.

திருமூலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புலன்கள் இல்லாமல் எப்படி எதையும் அறிந்து கொள்வது ? இந்த உடல் முக்கியம், இந்த புலன்கள் முக்கியம் என்று சொல்கிறார்.

புலன்கள் மூலம் தான் அறியமுடியாத இறைவனை அறிய முடியும். எனவே புலன்களை போற்றுங்கள்  என்கிறார்.

உடம்பை  போற்றுகிறார்.

பாடல்


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

மிக எளிய பாடல். மிக மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

பொருள்


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்

 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு

சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை

கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்

காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு

புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும், அறியாமை என்ற இருளைப் போக்கி அறிவு ஒளி பெற உதவுவது இந்த புலன்கள்தான்.

கண் இல்லாமல் எப்படி படிப்பது ?

காது இல்லாமல் எப்படி கேட்டு அறிந்து கொள்வது ?

புலன்கள் இல்லாமல் நம்மால் அறிவைப் பெற முடியாது. 

அறிவைத்தரும் புலன்கள் இந்த உடலோடு சேர்ந்தவை என்பதால், இந்த  உடலும் புனிதமான  கோவிலுக்குச் சமமானது.

உடலுக்குக்குள் இருக்கும்  சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில்  கோவிலாக நாம் கருத நடத்த வேண்டும். 

எங்கே செய்கிறோம் ?

 புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, அளவுக்கு அதிகமாக உணவை அடைப்பது, கண்ட நேரம் தூங்குவது, தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது, அதை  சரியாக பராமரிப்பது கிடையாது. 

பாழடைந்த கோவில் போல வைத்திருக்கிறோம். 

எங்கே இறைவனைக் காண்பது  இதில்.

புலன்களை கூர்மைப் படுத்திக் கொண்டால், நுண்ணிய விஷயங்களை அறிய முடியும். 

இறை என்பது நுணுக்கமான விஷயம். அதை அறிய வேண்டும் என்றால் நம் புலன்கள் கூர்மையாக , மென்மையாக  இருக்க வேண்டும். 

புலன்கள் எப்படி போகத்திற்கு உதவுகிறதோ , அப்படியே யோகத்திற்கும் அது   உதவும் என்கிறார் கம்பரும்.

அதை நாளை பார்ப்போம்....

அதற்கு முன், எப்படி உடலையும், புலன்களையும் போற்றுவது என்று சிந்திப்போம். 


 

Friday, January 4, 2013

திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான். வேண்டாதார் யார் ?

மனித மனம் அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும். கண்ணில் படுவது கையில் வேண்டும்.  

பெறுவதிலேயே கவனமாய் இருந்தோமே, கொடுப்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா ? கொடுக்கும் சுகம் அறிந்தால், பெறுவதில் உள்ள சுகம் மறையும். .அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை. கொடுக்கும்போது திருப்தி வரும். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவு வரும். இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணம் வரும். பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும், இன்பமும் பிறக்கும். 

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே...தானம் செய்யும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரான என்று கேட்பவர்களுக்கு திருமூலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியமா ? நீங்கள் கடவுளுக்கே கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரியவர். கடவுள் நம்மிடம் என்ன கேட்க்கிறார்...ஒரே ஒரு பச்சிலை...ஒரு துளசி தளம். அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும். அன்போடு ஒரே பச்சை இலை கொடுத்தால் போதும் அவனுக்கு. அது முடியாதா ? 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படியே கடவுள் இருந்தாலும், அவருக்கு ஒரு பச்சிலை கொடுப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று வாதிப்பவர்களும் இருக்கலாம். 

வேண்டாம், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம்...மற்ற உயிர்கள் மேல் அன்பு இருக்கிறதா உங்களுக்கு ? போகிற வழியில் நாலு புல்லை பிடுங்கி வழியில் நிற்கும் பசுவுக்கு வயிறார கொடுங்கள். செய்யலாம் தானே ?

எங்க அபார்ட்மெண்ட் பக்கம் புல்லும் இல்லை பசு மாடும் இல்லை. இதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தினம் சாபிடுவீர்கள் தானே ? அதுக்கு நேரம் கட்டாயம் இருக்குமே ? அப்படி சாப்பிடும் போது, ஒரு கை உணவை காக்கைகோ, குருவிக்கோ கொடுங்கள். 

என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கீங்க...அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், பெரிய உணவகங்களில் சாப்பிடும் போது காக்காவையும் , குருவியையும் எங்க போய் தேடுவது என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?

ஒண்ணும் முடியாவிட்டால், மற்றவர்களுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்..அதுவே பெரிய தர்மம்தான். பொய் இல்லாத, கபடம் இல்லாத, சுடு சொல் இல்லாத...இனிய வார்த்தை சொல்லுங்கள்...அது கூட ஒருவிதத்தில் தானம் தான்....

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்...

கொடுத்துப் பாருங்கள், அதன் சுகம் தெரியும்.....

வறிஞர்க்கு நொயிர் பிளவேனும் பகிர்மின்கள் என்பார் அருணகிரி....

பாடல் 

Saturday, April 21, 2012

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

சித்தர்கள் பொதுவாக இந்த ஊண் உடம்பை பெரிதாக மதித்ததில்லை. திரு மூலர் மட்டும் இதற்க்கு விதி விலக்காக இருக்கிறார். 

உடம்பை போற்றி பாது காக்க சொல்கிறார். உடம்பை வளர்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார் இந்தப் பாடலில்....



Thursday, April 19, 2012

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்



நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.


தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்


தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.



Wednesday, April 11, 2012

திரு மந்திரம் - சொல்லிப் புரியாது காதலும் பக்தியும்




பக்தி என்றால் என்ன ?

கடவுள் இருக்கிறா என்பது பற்றிய சந்தேகம் ஆதி காலம் தொட்டு இருந்து வருகிறது.

"நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறி " என்பார் மாணிக்க வாசகர். அவர் காலத்திலேயே நாத்திகம் பேசியவர்கள் இருந்திருக்கிறார்கள்.

புண் வந்தால் தழும்பு வரும் அல்லவா ?

அது போல் நாத்திகம் பேசினால் நாக்கில் தழும்பு வருமாம்.
அது புறம் இருக்கட்டும்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆசாரியர்களும் இறை உணர்வு பெற்றவர்கள். அதை ஏன் நம்மிடம் அவர்கள் தெளிவாக சொல்லவில்லை ?

ஏன் சுத்தி வளைக்கிறார்கள் ?

நமக்கு என்ன அறிவு இல்லையா ?

இப்படி இப்படி செய்தால், அந்த அனுபவத்தை பெறலாம் என்று நேரடியாக சொல்ல வேண்டியது தானே ?

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

மகள், வயதில் ரொம்ப சின்ன பொண்ணு, தாயிடம் பேசிய ஒரு உரையாடல்.

மகள்: அம்மா, இந்த கல்யாணம், குடும்பம் எல்லாம் நல்லா இருக்குமா ?

அம்மா: ஆமா..அதுல என்ன சந்தேகம் உனக்கு.

மகள்: நீ அப்பாகூட இருப்பது உனக்கு சந்தோஷமா ?

அம்மா: (கொஞ்சம் வெட்கத்துடன்): ஆமா .. ஏன் கேக்குற

மகள்: அந்த சந்தோசம் எப்படிமா இருக்கும் ...

அம்மா: போடி இவளே, அது எல்லாம் உனக்கு சொன்னா புரியாது, போய் வேலையப் பாரு...

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!
திரு மூலர் எழுதிய திரு மந்திரம்

முகத்திற் கண்கொண்டு= முகத்தில் உள்ள கண்களை கொண்டு

காண்கின்ற மூடர்கள் = காண்கின்ற காட்சி மட்டும் தான் உண்மை என்று நினைக்கும் மூடர்களே 

அகத்திற் கண்கொண்டு = மனக் கண் கொண்டு 

காண்பதே ஆனந்தம் = காண்பதே உண்மையான ஆனந்தம் 

மகட்குத் = மகளுக்கு 

தாய் = ஒரு தாயானவள் 

தன் மணாளனோடு = தன் கணவனோடு 

ஆடிய சுகத்தைச் = பெற்ற இன்பத்தை 

சொல்லென்றால் = மகள் சொல் என்று தாயிடம் கேட்டால் 

சொல்லுமாறு எங்ஙனே! = அந்த தாய் அதை எப்படி சொல்ல முடியும் 

அது போல், இறை உணர்வை நாமே தான் பெற வேண்டும், மற்றவர்கள் சொல்லி நம்மால் உணர முடியாது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.