Showing posts with label thaayumaanavar. Show all posts
Showing posts with label thaayumaanavar. Show all posts

Friday, July 8, 2022

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்  


தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்

    சந்தையிற் கூட்டம் இதிலோ

  சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை

    சதுரங்க சேனையுடனே

வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்

    வஞ்சனை பொறாமைலோபம்

  வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ

    வாஞ்சனையி லாதகனவே

எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே

    இரவுபக லில்லாவிடத்

  தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே

    யானென்ப தறவுமூழ்கிச்

சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ

    தேடரிய சத்தாகிஎன்

  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

    தேசோ மயானந்தமே.

Thursday, September 13, 2018

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்


நாம் பேசும் வார்த்தைகளை உற்று நோக்கினால் தெரியும்...நாம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நாம் சொன்னதை மட்டும் அல்ல, மற்றவர்கள் சொன்னதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கீதையில் அப்படி சொல்லி இருக்கிறது, தேவாரத்தில் இப்படி சொல்லி இருக்கிறது, அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று மேற் கோள் காட்டிக் கொண்டே இருக்கிறோம்.

மற்றவர்கள் சொல்லாத எதையாவது நாம் சொல்லி இருக்கிறோமா ? நாமே அறிந்த உண்மை என்று ஏதாவது இருக்கிறதா ?

எல்லாம் இரவல் ஞானம்.

பாடல்

சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே.

பொருள்

சொன்னத்தைச் = ஏற்கனவே சொன்னதை

சொல்வதல்லாற் = சொல்வது அல்லால். சொல்வதைத் தவிர

சொல்லறவென் = சொல் + அற + என் = சொல் அறவே இல்லாமல்

சொல்லிறுதிக் = இறுதிச் சொல்லுக்கு

கென்னத்தைச் சொல்வேன்  = எதைச் சொல்வேன்

எளியேன் = நான் எளிமையானவன்

பராபரமே = உயர்ந்த கடவுளே

பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு கணம் யோசியுங்கள். நீங்கள் சொல்லப் போவது  புதிதான ஒன்றா ? நீங்கள் கண்டு பிடித்ததா ? அனுபவத்தில் கண்ட உண்மையா ? அல்லது யாராவது , எப்போவாவது சொன்னதா ?

சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காமல் சற்று மௌனமாக இருந்து பாருங்கள்.

சொல் நின்றால், எண்ண ஓட்டம் நிற்கும். மன ஓட்டம் நிற்கும்.

சொல்லை துறவுங்கள். மனதுக்குள் எப்போதும் ஓடும் எண்ண ஓட்டம் நிற்கும். மனம் ஓரிடத்தில் நிற்கும்.  மனம் வசப்படும்.

மௌனம் ஞான வரம்பு என்பது ஒளவை வாக்கு.

மௌனம் என்றால் வாய் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல. மனமும் பேசாமல் இருக்க வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_13.html

Sunday, September 9, 2018

தாயுமானவர் பாடல் - மன நிலை

தாயுமானவர் பாடல் - மன நிலை 


நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம்....செய்யத் தொடங்குவோம்...ஒரு whatsapp மெசேஜ் வரும், டிவி யில் நல்ல பாட்டோ, படமோ வரும், இல்லை என்றால் சீரியல், ஒரு போன் கால், இப்படி ஏதாவது வரும். நாமும் அதுதான் சாக்கு என்று தொடங்கிய வேலையை விட்டு விட்டு மற்றவற்றின் பின் சென்று விடுவோம்.

நல்ல புத்தகங்களை படிப்பது, நல்லவர்கள் சொல்வதை கேட்பது , அவர்களை சென்று பார்ப்பது எல்லாம் "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் " என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

தாயுமானவர் சொல்கிறார், நல்லவர்கள் எதிரில் வந்தால், ஒளிந்து கொள்வேன் என்று. எதுக்கு வம்பு, அவர் ஏதாவது சொல்வார், நமக்கு பிடிக்காது, என்று ஒளிந்து கொள்வாராம்.

பிள்ளைகளுக்கு எப்படி பெற்றோர் சொல்வது பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்கிறார்களோ, எப்படி ஆசிரியர் சொல்வது பிடிக்காமல் மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்களோ அப்படி....


பாடல்



இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
    இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
    கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ.


பொருள்


இரக்கமொடு = இரக்கத்தோடு

பொறை = பொறுமை

ஈதல் = மற்றவர்களுக்கு கொடுத்தல்

அறிவா சாரம் = அறிவு , ஆசாரம் (ஒழுக்கம்)

இல்லேன்நான் = இல்லேன் நான்

நல்லோர்கள் = நல்லவர்கள்

ஈட்டங் கண்டால் = வரவு கண்டால்


கரக்குமியல் புடையேன் = மறைந்து கொள்ளும் இயல்பு உடையவன் நான்

பாழ் நெஞ்சம் = பாழான என் நெஞ்சம்

எந்தாய் = என் தந்தை போன்றவனே

கருந்தாதோ  = கரிய தாதோ (இரும்பு)

வல்லுருக்கோ = வலிமையான உருக்கு உலோகமோ

கரிய கல்லோ = கரிய கல்லோ


நல்லது எது கெட்டது எது என்று தெரியும். இருந்தும் செய்வது கிடையாது. ஏன் ?

அவை மனதில் படிவது இல்லை.

மனம் இளகினால் அல்லவா அதில் எதுவும் பதியும்.

கல்லிலும், இரும்பிலும் என்ன பதியும்?

நெஞ்ச கனகல்லு நெகிழ்ந்து உருக வேண்டும்...

அதற்கு என்ன செய்ய வேண்டும்...நல்லவர்களை கண்டால் ஓடி ஒளியக் கூடாது.

Thursday, October 13, 2016

தாயுமானவர் பாடல்கள் - பராபரக் கண்ணி

தாயுமானவர் பாடல்கள் - பராபரக் கண்ணி 


தாயுமானவரின் பராபரக் கண்ணி இரண்டைடிகளால் ஆனது. உலகை வெல்லும் இரண்டு வரிகள். திருக்குறள் போல இரண்டு அடிகளில் ஆழமான அர்த்தங்களை தருவது.

உயிர்கள் மேல் அன்பு கொண்டவர் தாயுமானவர்.

பாடல்

கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று 
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே 

எளிமையான பாடல்.

நல்லவர் யார் என்று கேட்டால் உயிர்களை கொல்லாதவர் யாரோ, அவரே நல்லவர்.

அப்படியானால் கொல்பவர்கள் கெட்டவர்களா ?

அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மற்று அல்லாதார் யாரோ, அறியேன் என்கிறார் ஸ்வாமிகள்.

அப்படி உயிர் கொலை செய்பவர்கள் கூட இருக்கிறார்களா ? எனக்குத் தெரியாது என்கிறார்.

எல்லோரும், உயிர் கொலை செய்யாமல் நல்லவர்களாக இருப்பார்கள் என்பது  அவர் எண்ணம்.


நமக்கு எதில் எதில் எல்லாம் ஆசை இருக்கிறது ?

நிறைய பணம் வேண்டும். வீடு, வாசல், கார், பங்களா, நகை, பாங்கில் பணம்,  தோட்டம் , புகழ், செல்வாக்கு என்று ஏதேதோ வேண்டும்  என்று ஆசைப் படுவோம்.

தாயுமானவருக்கு என்ன ஆசை தெரியுமா ?

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க 
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே 

கொல்லா   விரதத்தை எல்லோருக்கும் சொல்லுவதுதான் அவருக்கு உள்ள ஆசையாம்.

உயிர்கள் மேல் எத்தனை கருணை இருந்தால் இப்படி ஒரு ஆசை இருக்கும்.

அருளாளர்கள் வாழ்ந்த பூமி இது.




Friday, June 26, 2015

தாயுமானவர் பாடல் - எது ?

தாயுமானவர் பாடல் - எது ?


தாயுமானவர், வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வேலை பார்த்து, பின் இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தவர். 1700 களில் வாழ்ந்தவர்.

தமிழ், சமஸ்கிரதம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

கிட்டத்தட்ட 1700 பாடல்கள் பாடியுள்ளார்.  மிக மிக எளிமையான பாடல்கள்.

இராமலிங்க அடிகளும், பாரதியாரும் எளிமையான பாடல்கள் பாட இவர் ஒரு உதாரணம் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இவரை சித்தர் என்று சொல்பவர்களும் உண்டு.

எளிமையான பாடல்கள்தான் என்றாலும் ஆழ்ந்த பொருள் செறிந்த பாடல்கள்.

எல்லோரும் பாடத் தொடங்கும்போது பிள்ளையார் மேல் பாடல் பாடுவார்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பாடி நூல் தொடங்குவார்கள்.

தாயுமானவர், கேள்வியோடு பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கும் நிறைந்தது எது ? ஆனதமானது எது ? அருள் நிறைந்தது எது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு விடையான அதை வணங்குவோம் என்று முடிக்கிறார்.

பாடல்

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.   


கொஞ்சம்  .சீர் பிரிப்போம்


அங்கு இங்கு எனாத படி எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி அருளடு  நிறைந்தது எது ?

தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் 
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் 
தழைத்தது எது ?

மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது ?

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் 
என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது ?

எங்கணும் பெரு வழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது அது ? 

கங்குல் பகல் அற நின்ற எல்லையுள்ளது எது அது  ? 

கருத்திற்கு இசைந்ததுவே 
கண்டன எல்லாம் மோன  உரு வெளியதாவும் 
கருதி அஞ்சலி செய்குவாம்.   

கடின பதம் எதுவம் இல்லை. 

பொருள் வேண்டுமா என்ன ?


Saturday, September 27, 2014

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும்

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும் 


பிள்ளை பெறுவதின் வலி ஒரு தாய்க்குத் தான் தெரியும்.  பிள்ளை பெறாத பெண் அந்த வலியை அறிய மாட்டாள். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவளுக்கு அது  புரியாது.

அது போல

பேரானந்தம் அடைந்தவர்களுக்கே உள்ளம் நெகிழ்வதும், கண்ணீர் மல்குவதும்  உண்டாகும்.மற்றவர்கள் நெஞ்சம் கல் நெஞ்சமாகவே  இருக்கும்.

பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்.

பொருள்

பெற்றவட்கே = பெற்றவளுக்கே

தெரியுமந்த = தெரியும் அந்த

வருத்தம் = வருத்தம்

பிள்ளை பெறாப் பேதை யறிவாளோ = பிள்ளை பெறாத பேதைப் பெண் அறிவாளோ (அந்த வலி) 


பேரா னந்தம் = பேரானந்தம்

உற்றவர்க்கே =அடைந்தவர்களுக்கே

கண்ணீர் கம்பலையுண் டாகும் = கண்ணீரும் கம்பலையும் உண்டாகும்

உறாதவரே = அது  அடையாதவர்கள்

கல் நெஞ்சமுடைய ராவார் = கல் நெஞ்சம் உடையவர்களே



Thursday, August 15, 2013

தாயுமானவர் - சிங்காரம்

தாயுமானவர் - சிங்காரம் 



உன்னைச் சிங்காரித்து உன்னழகைப் பாராமல் 
என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே 

 இறைவா,உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.

சரி.இதில் என்ன  பிரமாதம்.  இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

தாயுமானவர், மிக  பெரியவர். உண்மை உணர்ந்த  ஞானி.

ஏன் இறைவனை அலங்கரிக்கிறோம் ? ,கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின்   சிலையை, படத்தை  துடைத்து,அபிஷேகம்  பண்ணி,  பூவாலும்,சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் பண்ணுகிறோம் ?

இறைவன்  பவனி வரும்  பல்லக்கு,தேர் போன்றவற்றையும் நாம் அலங்காரம் பண்ணுகிறோம்...ஏன் ?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம்  பண்ணு என்று இறைவன் கேட்டானா ? இல்லையே ...பின் எதற்கு அந்த அலங்காரம் ?

மனித மனம் அலைபாயக்  கூடியது.ஒரு  இடத்தில் நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு தியானம்  தேவை.

மனக் கட்டுப்பாடு அவ்வளவு எளிதில் வருவது  இல்லை.

முதலில் மனதை  ஒன்றின் மேல் படிய  , பதிய வைக்க வேண்டும். மனம் அதில் இலயிக்க வேண்டும். அதிலேயே கலக்க வேண்டும்.

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம்.

கோவில் நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம்,சொற்பொழிவுகள் என்றும்,

மூக்குக்கு இனிமையாக  கற்பூரம்,ஊதுபத்தி, மலர்கள் என்றும்,

நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும்,

உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும்,

கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்ப்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள்,அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.


இறைவனை எவ்வளவுக்  எவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை.

நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா ...அது போல்.

குழந்தைகளுக்கு அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ.

மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்க்கிறோம்,அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்....

அப்படி அழகை இரசிக்கும் போது மனம் இலயிக்கிறது ...மனம் ஒன்று  படுகிறது. ஆவல்  எழுகிறது.

ஒன்றை இரசிக்கும் போது,  இரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி கொள்கிறோம்...கண்ணை மூடி  இரசிக்கிறோம்...அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும்  ...இரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை .அனுபவிக்கிறோம்..

இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது , அதில் இலயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.

அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

 எனவே, உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் , அழியும் இந்த உடலை அலங்காரித்து  இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.  


தாயுமானவர் இது போல் 389 பராபரக் கண்ணிகளை எழுதி இருக்கிறார்.ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துகளை  உடையது.

 மூல   நூலைப் படித்துப்  பாருங்கள்.


Monday, July 22, 2013

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே 


தாயின் கருவறையில் இருந்தோம். எவ்வளவு பெரிய இருட்டு அறை அது.

வெளிச்சம் கிடையாது, கருவில் இருக்கும் குழந்தைக்கு அறிவு கிடையாது. கண் பார்வை கிடையாது.

அது போல ஆன்மாக்களாகிய நாம், ஆணவம் என்ற இருண்ட கரு அறையில்  அகப்பட்டு கிடக்கிறோம். தெளிவாக பார்கின்ற பார்வை இல்லை. அறிவு இல்லை. அங்கும் இங்கும் போக முடியாமல் கட்டுண்டு இருக்கிறோம்.

குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் இன்னல்தான்.

பசி, பிணி, மூப்பு என்ற முப்பெரும் துயரிலே இந்த உயிர்கள் கிடந்து உழல்கின்றன.

இந்த இருளில் இருந்து, இந்த துயரில் இருந்து உயிர்கள் விடுபட்டு, பேரின்பத்தை அடையச் செய்பவன் இறைவன்.

அன்னை வடிவான அப்பனே என்று உருகுகிறார் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவன் தந்தையானவன்.  தாயும் ஆனவன்.

பாடல்

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.

சீர் பிரித்த பின்

கார் இருள் இட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற 
கண்ணில்லாக் குழவியைப் போல் 
கட்டு உண்டிருந்த எம்மை வெளியில் விட்டு அல்லலாம்
காப்பிட்டு மெய்யென்று பேசும் பாழும் பொய் உடல் 
பலக்க விளைய அமுதம் ஊட்டி 
பெரிய புவனத்திடை போக்கும் வரவும் உறுகின்ற
பெரிய விளையாட்டு அமைத்திட்டே 
இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு 
இடருற  உருக்கி இடர் தீர்த்து 
இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் 
இசைந்து துயில் கொண்மின் என்று 
சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே 
சித்தாந்த முத்தி முதலே 
சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே 
சின்மயானந்த குருவே 


பொருள்

கார் இருள் இட்ட = கரு கும்முன்னு இருட்டு

ஆணவக் கருவறையில் =ஆணவமான கருவறையில்

அறிவற்ற  = அறிவு இல்லாத

கண்ணில்லாக் = கண்ணும் இல்லாத

 குழவியைப் போல் = குழந்தையைப் போல

கட்டு உண்டிருந்த = கட்டுப்பட்டு இருந்த

எம்மை = எங்களை 

வெளியில் விட்டு =   அந்தக் கருவறை விட்டு வெளியே வரவைத்து 

அல்லலாம் = துன்பம் என்ற

காப்பிட்டு = விலங்கை இட்டு

மெய்யென்று பேசும் = உண்மை என்று பேசும்

பாழும் பொய் உடல்  = பாழாய்ப்போன இந்த பொய்யான உடலை (இன்றிக்கும் நாளை போகும் பொய்யான இந்த உடலுக்கு மெய் என்று பெயர்  வைத்தது யார் )

பலக்க விளைய = பலமாகும்படி

அமுதம் ஊட்டி = அமுதம் ஊட்டி

பெரிய புவனத்திடை = பெரிய  உலகத்தில்

போக்கும் வரவும் உறுகின்ற = பிறந்து இறந்து வருகின்ற

பெரிய விளையாட்டு அமைத்திட்டே  = பெரிய விளையாட்டை அமைத்து

இட்ட தன் சுருதி மொழி தப்பில் = நாக்குக் குழறி, மொழி தப்பி

 நமனை விட்டு = எமனை விட்டு

இடருற  உருக்கி = துன்பங்களை உருக்கி

இடர் தீர்த்து  = துன்பங்களை தீர்த்து

இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் =  இரவும் பகலும் இல்லாத பேரின்ப வீட்டினில்

இசைந்து துயில் கொண்மின் என்று = நன்றாக சேர்ந்து தூக்கம் கொள்ளுங்கள் என்று

சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே  = சீரிய உலக அன்னையான  வடிவம் கொண்ட என் தந்தையே

சித்தாந்த முத்தி முதலே = அனைத்து சித்தாங்களும் ஆதி மூலமே

சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே  = தலையில் உள்ள புத்தி விளங்க வரும் தட்சிணா மூர்த்தியே

சின்மயானந்த குருவே = சின்முத்திரைகள் மூலம் உபதேசம் செய்யும் குருவே


Tuesday, July 16, 2013

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை


இந்த ஆன்மாவை ஆண்டவன் படைக்கவில்லை. எப்போது இறைவன் தோன்றினானோ அப்போதே, அதே சமயத்தில் ஆன்மாக்களும் தோன்றின. ஆன்மாவும் இறைவனும் ஒன்றல்ல. ஆனால், இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றியவை.

பாடல்

என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே.


சீர் பிரித்த பின்

என்று உள்ளை நீ அன்று உள்ளம் யாம் என்பதனை
இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே
பொன்றிடச் செய்ய வல்லவன் நீ எம்மை படைக்கும் 
பொற்புடையாய் என்னின் அது பொருந்திடாதே 

பொருள்


Monday, July 15, 2013

தாயுமானவர் - என் போல் ஒரு பாவி

தாயுமானவர் - என் போல் ஒரு பாவி 


வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றின் மேல் ஆசை கொள்கிறோம்.

மிட்டாய், பொம்மை, புத்தகம், படிப்பு, வேலை, எதிர் பாலினர் மேல் கவர்ச்சி, பணம், சொத்து, புகழ் , பதவி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டே இருக்கிறோம்.

அந்த கால கட்டத்தை தாண்டி வரும் போது, முன்னால் ஆசைப் பட்டது எல்லாம் சிறு பிள்ளைத் தனமாய் தெரிகிறது.

இதுக்கா இவ்வளவு ஆசைப் பட்டோம் என்று நம்மை நாமே பார்த்து சிரித்துக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஆசை விடுவது இல்லை. எல்லாம் பொய் என்று அறிந்தும் விட மனமில்லை

தாயுமானவர் உருகுகிறார்

இறைவா, நீ படைத்த எத்தனையோ உயிர்களில் என்னைப் போல் ஒரு பாவி உண்டா ? உடம்பால் செய்த உலகம் பொய் என்று அறிந்தும் ஒன்றையும் எள்ளளவும் துறக்காமல் இருப்பவர் எங்கேனும் உண்டா ?

பாடல்

உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல்
ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக்
கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக்
காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 

சீர் பிரித்த பின்

உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் 
ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யாக் 
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி 
காசினிக்குள் அலைந்தவர் யார் காட்டாய் தேவே 

பொருள்


Tuesday, May 7, 2013

தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம்


தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம் 

தாயுமானவர் - மிகப் பெரிய ஞானி.

1452 பாடல்கள் எழுதி உள்ளார். மிக மிக எளிமையான பாடல்கள்.

வல்லாருக்கும், பாரதியாருக்கும் இவர் பாடல்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்துணை எளிமை.

வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்து, இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தார்.

ஒரு பொருளின் மேல் முதலில் ஆசை வரும். அது கையில் கிடைத்துவிட்டால் ஆணவம் வரும். என்னை போல் இந்த உலகில் யார் உண்டு ? நினைத்ததை முடிப்பவன் நான் என்ற ஆணவம் வரும். கிடைக்க வில்லையென்றால் ஆங்காரம் வரும். அந்த ஆங்காரம், ஆணவத்தை விட மோசமானது.

அறிவை மயக்கும் நாடு நிலை தவற வைக்கும். எதை எடுத்தாலும் அதுவாய் மாறிடும். வாயில் வந்த படி பேசும். மும்மூர்த்திகளும் நான் தான் என்று சொல்லும்.....

இப்படி சொல்லிக் கொண்டே தாயுமானவர் இந்த பட்டியலுக்கு முடிவு வேண்டுமே என்று முடிவில் இராவணாகாரமாகி விடும் என்றார்

அது என்ன இராவணாகாரம் ?

வீரத்திலும், பக்தியிலும் சிறந்தவன் இராவணன்.

சீதை மேல்  ஆசைப் பட்டான். புத்தி வேலை செய்வது நின்றது. வீரம் போய் குறுக்கு புத்தி வந்தது. கள்ளமாய் அவளை கவர்ந்து வந்தான். இராமனோடு சண்டை போட்டான். தன் சொந்த மகனை போரில் இழந்தான்.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதை தானே, அவளை கொன்று விடுகிறேன் என்று புறபட்டான்.

அவள் வேண்டும் என்று தானே தூக்கி வந்தான். அவளுக்காகத்தானே இத்தனை  போர். மகனையும் இழந்தான். இப்போது அவளை கொல்லுவேன் என்கிறான். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆங்காரம்.

பாடல்

ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
       ஆணவத் தினும்வலிதுகாண்
    அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
       யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
       தம்மொடு சமானமென்னுந்
    தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
       தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
       திராவணா காரமாகி
    இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
       திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
       மௌனோப தேசகுருவே
    மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
       மரபில்வரு மௌன குருவே.


பொருள்:

Tuesday, April 9, 2013

தாயுமானவர் - உன்னை பூசை பண்ண மாட்டேன்


தாயுமானவர்  - உன்னை பூசை பண்ண மாட்டேன் 

தாயுமானவர் ஒரு நாள் பூஜைக்கு மலர் பறிக்கச் சென்றார். மலரின் அருகே சென்று அதை பறிக்க எத்தனிக்கையில் அவருக்கு ஒன்று தோன்றியது. இந்த மலரில் இருப்பதும் அந்த இறைவன் தானே. அந்த மலரைப் பறித்தால் அது வாடிப் போகுமே என்று நினைத்தார். பூவை பறிக்காமலே வந்து விட்டார். மலர் இல்லாமலே வழி படுவோம் என்று இரு கை கூப்பி வணங்க முனைந்தார்....மீண்டும் ஒரு சந்தேகம்...வணங்கப் படும் கல் சிலை தெய்வம் என்றால் வணங்கும் எனக்குள்ளும் இருப்பது அதே கடவுள் தானே...அப்படி என்றால் பாதி வணக்கம் தானே முன்னாள் இருக்கும் கடவுளுக்குப் போகும்...மீதி பாதி எனக்குள் இருக்கும் கடவுளுக்குத்தானே போகும்....இது என்ன பாதி வணக்கம் ?


பாடல் 

பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6.


சீர் பிரித்த பின் 

பண்ணேன் உனக்கு ஆனா பூசை ஒரு வடிவிலே 
பாவி இறைஞ்ச ஆங்கே 
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி 
அப் பனி மலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அல்லாமல் இரு கைதான் குவிக்க எனில் 
நாணும் என் உள்ளம் நிற்றி நீ 
நான் கும்பிடும் டோதரைக் கும்பிடாதலால்
நான் பூசை செய்யல் முறையோ
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே அவித்தின் முளையே
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே
கதிக்கான மோன வடிவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நர்த்தமிடும் 
கருணாகர ககடவுளே.

.