Monday, March 28, 2016

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம்

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம் 


திருநீறு அணிந்த சிவனைப் போல வெளுத்த மேகங்கள் கடலில் நீரைக் கொண்டு திருமாலைப் போலக் கருத்து திரும்பி வந்தன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அந்த மேகங்கள் எங்கே போயின ?

நேரே மலைக்கு மேலே சென்றன , அங்கே சென்று மலையின் மேல் மழை பொழிந்தன.

ஏன் ?

ஆறுகள் எல்லாம் மலையின் மேல் உற்பத்தி ஆகின்றன. பின் அவை எல்லாம் போய் கடலில் கலக்கின்றன. கடல் ஆறுகளுக்கு கணவன் போல. மலை என்ற பிறந்த வீட்டில் இருந்து கடல் என்ற கணவன் வீட்டுக்கு இந்த ஆறுகள் போகின்றன. அப்படி பார்த்தால் இந்த மலை , கடலுக்கு மாமன் முறை வேண்டும். பெண்ணை கொடுத்தவன் என்ற முறையில்.

மலை உயர்ந்து நிற்கும். அதனால் அதன் மேல் வெயில் நன்றாகப் படும். வெயில் பட்டு  ரொம்ப சூடாகி இருக்கும். அவன் வெம்மையை தணிப்போம் என்று கடல் மேகத்தை அனுப்பி வைத்ததாம்.

பாடல்

பம்பி மேகம் பரந்தது, ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

பொருள்

பம்பி = நெருங்கி

மேகம் = மேகங்கள்

பரந்தது =சூழ்ந்து

‘பானுவால் = சூரியனால்

நம்பன் மாதுலன் = நமது மாமன்

வெம்மையை நண்ணினான்; = சூட்டினை அடைந்தான்

அம்பின் ஆற்றதும்’ = நீரால் குளிப்பாட்டுவோம்

என்று = என்று

அகன் குன்றின்மேல் = அந்தக் குன்றின் மேல்

இம்பர் = இந்த உலகில் உள்ள

வாரி = கடல்

எழுந்தது போன்றதே = எழுந்து வந்தது போன்றதே

அந்த மேகம் எங்காவது மழை   பொழிந்து விட்டுப் போயிருக்கலாம். கம்பன் கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடுகிறான்.  வெயிலில் சூடேறி துன்பப்படும் மலையின்  சூட்டை ஆற்ற அந்த மேகம் வந்தது என்றான்.

எங்கெல்லாம் துஷ்டர்கள் தோன்றி அறத்திற்கு கேடு விளவிக்கிறார்களோ , எங்கெல்லாம் நல்லவர்கள் துன்பப் படுகிறார்களோ அவர்களை காக்க யுகம் தோறும் யுகம்  தோறும் நான் அவதரிப்பேன் என்று கண்ணன் சொன்ன மாதிரி துன்பம் வந்த இடத்தில் , அதை துடைக்க அந்த மேகம் சென்றதாம்.

அவதாரம் என்றாலே அது தான். உதவி செய்ய மேலிருந்து கீழே வருவதுதானே அவதாரம். அதை மறைமுகமாகச் சொல்கிறான் கம்பன்.

இராமன் வரப் போகிறான். திருமால் அவதரிக்கப் போகிறார். தேவர்களின் துயர் துடைக்க  அவன் வரப் போகிறான் என்று கட்டியம் கூறுகிறான் கம்பன்.


மலை மேல் பொழிந்த மழை எப்படி கீழிறங்கி வந்தது  தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_28.html )

Sunday, March 27, 2016

இராமாயணம் - இராமன் வரவு

இராமாயணம் - இராமன் வரவு 


நம் வீட்டுக்கு திருமணமாகி மருமகளோ, மருமகனோ முதன் முதலாக வருகிறார்கள் என்றால் வீட்டை எவ்வளவு அழகு படுத்துவோம் ? முடிந்தால் வெள்ளை அடித்து, திரைச் சீலைகள் எல்லாம் மாத்தி, படுக்கை விரிப்பு, தலையணை உறை எல்லாம் மாத்தி வீட்டையே புத்தம் புதிதாக மாற்றி விடுவோம் அல்லவா ?

மருமகன், மருமகளுக்கே எந்த பாடு என்றால்,  பரம் பொருளான இறைவனே வரப் போகிறான் என்றால் என்ன செய்ய மாட்டோம் ?

கம்பனுக்குத் தெரியும் இராமன் அயோத்தியில் பிறக்கப் போகிறான் என்று. அந்த ஊரை தன் கற்பனையில் அழகு படுத்துகிறான் கம்பன். இழைக்கிறான்.

நமது திரைப் படங்களில் கதாநாயகனை அறிமுகப் படுத்தும் போது அவன் காலைக் காட்டி, கையைக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவலைத் தூண்டி முடிவில் முகத்தைக் காட்டுவதைப் போல, இராமன் பிறந்து தொட்டிலில் கிடக்கிறான், அதைக் காட்டுவதற்கு முன்னால் , கம்பனின் காமிரா எங்கெல்லாம் போகிறது , எதையெல்லாம் படம் பிடிக்கிறது என்று பார்ப்போம்.

முதலில், காமிராவை மேகத்தை நோக்கி focus பண்ணுகிறான். Long Shot .

வெண்ணிற மேகங்கள் மிதந்து செல்கின்றன. கடல் நோக்கி சென்று, கடலில் உள்ள நீரை "மேய்ந்து" அயோத்திக்கு வந்து மழை பொழிகின்றன.


பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

பொருள் 

நீறு அணிந்த = திருநீறு அணிந்த

கடவுள் = சிவன்

 நிறத்த வான் = வெண்மையான நிறம் கொண்ட மேகங்கள்

ஆறு அணிந்து சென்று = வழியே என்று

ஆர்கலி = ஆரவாரிக்கும் கடலினை

மேய்ந்து = மேய்ந்து

அகில் சேறு = சந்தன குழம்பை

அணிந்த = அணிந்த

முலைத் = மார்பகங்களைக் கொண்ட

திரு மங்கை தன் = திருமகளின்

வீறு அணிந்தவன் = சிறப்பினைக் கொண்டவன் (விஷ்ணு)

மேனியின் மீண்டதே = கருத்த மேனி போல் மீண்டு வந்ததே

சிவனைப் போல சென்று திருமாலைப் போல வந்ததாம்.

திருமால் வரப் போகிறான் என்பதை சூசகமாக தெரிவிக்கிறான் கம்பன்.

இதற்கு இடையில் மத நல்லிணக்கம் வேறு.  ஒரே மேகம் தான் - சிவனைப் போலவும் இருக்கிறது, திருமாலைப் போலவும் இருக்கிறது.

பரம் பொருளுக்குள் வேறுபாடு ஒன்றும் கிடையாது.  வடிவங்கள்தான் வேறு வேறே தவிர  அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்கிறான்.

மேலும், பெண்ணின் சக்தியை போற்றுகிறான்.

திருமகளின் வீறு அணிந்தவன் - சிறப்புகளை, வீரியத்தை, சக்தியை கொண்டவன் என்று பெண்ணின் பெருமையை போற்றுகிறான்.

வெண் மேகம் கடலில் சென்று நீரைக் குடிக்கிறது. அதனால் அது கறுத்துப் போகிறது. அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஏதோ கருத்த எருமை மாடு புல் மேய்வது  போலத் தோன்றுகிறது. கடல் நீரை மேய்ந்து என்கிறான்.

அந்த மேகம் எங்கே போயிற்று தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_27.html )

Wednesday, March 23, 2016

இராமாயணம் - அவை அடக்கம் - பிள்ளைகளின் கிறுக்கல்

இராமாயணம் - அவை அடக்கம்  - பிள்ளைகளின் கிறுக்கல்



சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து,  இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள். அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர். அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின்  விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.

அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.

தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.

பாடல்

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 

பொருள்

அறையும் = பல்வேறு அறைகளும் (பூஜை அறை , சமையல் அறை )

ஆடரங்கும் = ஆடும் இடமும்

மடப் பிள்ளைகள் = அறிவில் முதிர்ச்சி இல்லாத பிள்ளைகள்

தறையில் கீறிடின் = தரையில் படம் வரைந்தால்

தச்சரும் = மர  வேலைகளில் வல்ல தச்சரும்

காய்வரோ? = கோபம் கொள்வாரா ? (மாட்டார் )

இறையும் = கொஞ்சம் கூட

ஞானம் இலாத = ஞானம் இல்லாத

என் புன் கவி, = என்னுடைய பிழையான கவிதைகளை

முறையின் = முறைப்படி

நூல் உணர்ந்தாரும் = புத்தகங்களைப் படித்தவர்களும்

முனிவரோ? = கோபிப்பார்களோ ? (மாட்டார்கள் )

அவை அடக்கம் என்பது மேலோட்டமான செய்தி.

அதற்கு கீழே உள்ளது கம்பனின் ஆளுமை.

தன் நூலை யாரும் குறை சொல்லாதபடி ஒரு வேலி அமைக்கிறான் கம்பன்...மிக மிக சாமர்த்தியமாக.

பிள்ளைகளின் படத்தை ஒரு பெரிய பட வல்லுநர் (drawing master ) குறை சொன்னால்  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்...இந்த வல்லுநர் கொஞ்சம் புத்தி  கழண்டவன் என்றுதானே  நினைப்பார்கள். "ஏதோ சின்ன பிள்ளை வரைஞ்சிருக்கு...அதை பாராட்டிடுப் போகாம பெரிய மேதாவி மாதிரி குறை சொல்ல வந்துட்டார் " அப்படின்னு அந்த வல்லுனரைத்தான் குறை சொல்லுவார்கள்.

அது போல, என் கவியை யாராவது குறை சொன்னால், குறை சொல்பவர்களைத்தன்  உலகம் தூற்றும் என்று சொல்கிறான் கம்பன்.

அதாவது, பேசாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்பது அவனுடைய மறைமுகக் கட்டளை.

எப்படி, கம்பனின் அவை "அடக்கம்"  ?

கம்பனைப் படிக்கும் போது இந்த எழுத்துச் சாதுரியமும் நமக்குள் வரும்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_23.html )



Monday, March 21, 2016

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம்

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம் 



பாடல்


முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், 
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 

பொருள்

முத்தமிழ்த் = இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதியான தமிழின்

துறையின் = ஒவ்வொரு துறையிலும்

முறை நோக்கிய = முறையாக பயின்ற

உத்தமக் கவிஞருக்கு = உயர்ந்த கவிஞர்களுக்கு

ஒன்று உணர்ந்தவென் = ஒன்று உணர்த்துவேன்

‘பித்தர் சொன்னவும் = பைத்தியம் பிடித்தவர்கள் சொன்னதும்

பேதையர் சொன்னவும் = பேதையர் சொன்னதும்

பத்தர் சொன்னவும் = பக்தர்கள் சொன்னதும்

பன்னப் பெறுபவோ? = ஆராயத் தக்கதோ ? (இல்லை)

பாடலையும், அதன் சொற்களுக்கு அர்த்தத்தையும் பார்த்தாச்சு. வேறு என்ன இருக்கிறது  இந்த பாடலில்.

பித்தர்கள், பக்தர்கள், பேதைகள் சொன்னதை பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்டு முடிக்கிறான் கம்பன்.

பாடலுக்கு பின்னால் வருவோம்.

தமிழர்களின் மேல் பொதுவாக சொல்லப் படும் ஒரு குறை என்னவென்றால் நல்ல விஷயங்களை பாராட்டுவதே கிடையாது. என்ன செய்தாலும் ஒரு திருப்தி இல்லை. ஏதோ குழந்தைகளை பாராட்டி விட்டால் அவர்களுக்கு தலைக்கனம் வந்து விடும் என்று பிள்ளைகளை பாராட்டுவதே இல்லை.

அதே போல், தான் ஏதாவது பெரியதாக சாதித்தாலும், அதெல்லாம் ஒண்ணும் இல்லை..இது என்ன பெரிய சாதனை என்று நினைத்துக் கொள்வது.

14000 பாடல்களுக்கு மேலே பாடிய கம்பன், தன் பாடல்களை ஏனோ பைத்தியக்காரன் பாடியது, முட்டாள் பாடியது , என்று குறைத்து சொல்கிறான்.

இது என்ன ஒரு வித தாழ்வு மனப்பான்மையா ?

கம்பன் மட்டும் அல்ல, அனைத்துப் புலவர்களும் அவை அடக்கம் பாடுகிறார்கள். "நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை, என் பாட்டு ரொம்ப சுமாரு தான் " என்று தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஏன் ?

காரணம், தாழ்வு மனப்பான்மை இல்லை.

கல்வியின் வீச்சு, கல்வியின் ஆழம் தெரிந்தமையால் வந்த அடக்கம்.

கல்வி கடல் போன்றது. அதில் எந்த கொம்பனும் கரை கண்டு விட முடியாது.

இது புரிந்ததால் தான், அடங்கி ஒடுங்கி அவை அடக்கம் வாசிக்கிறார்கள்.


ஒண்ணும் தெரியாதவன் தான், ஏதோ கொஞ்சம் வாசித்து விட்டு தனக்குத் தான்  எல்லாம் தெரியும் என்று தலைக் கனம் பிடித்துத் திரிவான்.

படிக்க படிக்க, பயம் வரும்.

நாம் என்ன புதிதாகச் சொல்லி விடப் போகிறோம் என்று. அவ்வளவு இருக்கிறது.

எனவே, அவை அடக்கம் பாடுகிறார்கள்.

ஆனாலும், கம்பன் ஒரு கொம்பன். அவனுக்குத் தெரியும் தான் ஒரு நல்ல கவிஞன் என்று.

தன் பாடல்களை குறை சொல்லவே கொஞ்சம் பேர் வருவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

எப்படி ?

பார்த்தான் கம்பன் ...


பித்தர் சொன்னதும், பேதையர் சொன்னதையும் பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்பதன் மூலம், என் கவிதையை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் பெரிய கவிஞர்கள் இல்லை என்று நிரூபணம் ஆகிவிடும் என்றான்.

இனிமேல் அவன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்.

இப்படி, பெரிய புலவர்களை ஒரே வரியில் ஓரங் கட்டிவிட்டான் கம்பன்.

அது மட்டும் அல்ல, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல ஒரு விஷயம் சொல்கிறான்.


முத்தமிழ் துறையின் முறை போக்கிய

அப்படினா என்ன அர்த்தம்.

வெறும் தமிழ் பாடம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இசை ஞானமும் வேண்டும். நாடக ஞானமும் வேண்டும். ஒரு பாட்டு என்ன இராகம் என்று சொல்லத் தெரிய வேண்டும். அந்த இராகத்தில், சொன்ன தாளத்தில், பாவத்தோடு பாடத் தெரியவும் வேண்டும். அது மட்டும் அல்ல, நடிக்கவும் தெரிய வேண்டும்.

அப்போதுதான், ஒருவன் முழுமையான தமிழ் அறிஞன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.


உங்களில் எத்தனை பேருக்கு இசையும் நடிப்பும் தெரியும் என்று கேட்கமால் கேட்கிறான் கம்பன்.

அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்துத்தான் கம்பன் சொல்கிறான்...தமிழ் படிக்க வேண்டுமா ? இசையும் நடிப்பும் சேர்ந்து படியுங்கள் என்று.

நாளை முதல் யாரவது தமிழ் தெரியுமா என்று கேட்டால், 1/3 -ல் கொஞ்சம் தெரியும் என்று தான்  சொல்ல வேண்டும்.

தமிழ் பாடல்களை இசையோடு படிக்கும் போது அதற்கு உள்ள அழகே வேறு. சில சமயம் அர்த்தமே கூட மாறிப் போகும்.

தமிழை இரசிக்க வேண்டுமா , கொஞ்சம் இசையும் தெரிந்திருக்க வேண்டும்.

அவை அடக்கத்துக்குள் இவ்வளவு அர்த்தங்களை அடக்கியவன் கம்பன்.

எப்பேர்பட்ட பரம்பரையில் பிறந்தவர்கள் நாம் !

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_21.html )

Sunday, March 20, 2016

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன்

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன் 


கம்பன் தன் காவியத்தை தொடங்குமுன் அவை அடக்கம் பாடுகிறான்.

பாடல்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 

பொருள்


ஓசை பெற்று = எப்போதும் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்

உயர் = உயர்ந்த

பால் கடல் உற்று = பால் கடலை அடைந்த

ஒரு பூசை = ஒரு பூனை

முற்றவும் = முழுவதுமாக

நக்குபு = நக்கி குடித்து விட

புக்கு என = புகுந்தது போல

ஆசை பற்றி = ஆசையால்

அறையல் உற்றேன்; = சொல்லத் தொடங்கினேன்

மற்று = மேலும்

இக் = இந்த

காசு = குற்றம்

இல் =இல்லாத

கொற்றத்து = வெற்றி அரசனாகிய

இராமன் கதை அரோ = இராகவனின் கதையை

பாற்கடலில் உள்ள பால் அனைத்தையும் குடிக்க புறப்பட்ட பூனையைப் போல இந்த  இராம காதையை நான் சொல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார் கம்பர்.

சரி. இதில் என்ன பெரிய விசேஷம் ?

இது ஒரு புறம் இருக்கட்டும். 

குற்றவியலில், ஒரு குற்றம் முதலில் மனதில் நடக்கிறது, அதன் பின் தான் உண்மையிலேயே நிகழ்கிறது. அதாவது, குற்றம் முதலில் மனதில் அரங்கேறுகிறது. ஒரு தவறை செய்வதற்கான காரணம் (motive ), செய்யும் திட்டம், என்று பல நிகழ்வுகள் மனதில் ஒத்திகை பார்க்கப்பட்டு பின் நிஜ உலகில் நிகழ்கின்றன. 

தீமைக்கு அப்படி என்றால், நல்லதுக்கும் அப்படியே.

நல்லது நிகழ வேண்டும் என்றால், முதலில் அது மனதில் நிகழ வேண்டும். அதைப் பற்றிய   ஒரு எண்ணம், ஆசை மனதில் விதையாக விழ வேண்டும். பின் அது முளை விட்டு, வேர் பரப்பி, தளைத்து வளரும். 

சரி தானே ?

இன்னும் ஒரு படி மேலே போவோம்.

மனதில் எவ்வளவு பெரிதாக நினைக்கிறோமோ அவ்வளவு பெரிதாக நிகழும். 

40 மதிப்பெண் பெற்று எப்படியாவது தேர்ச்சி அடைந்தால் போதும் என்று நினைத்தால் அவ்வளவுதான் படிப்போம். 

நூத்துக் நூறு பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வர வேண்டும் என்று நினைத்தால், அதற்கான முயற்சியில் ஈடு படுவோம்.

மனம் விரிய விரிய செயலும் அதன் விளைவுகளும் விரியும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்பார் வள்ளுவர். 

எப்படி நினைக்கிறோமோ அப்படியே நடக்கும் என்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் தாப்பாகச் சொல்வாரா ?

மார்பு விரிய வேண்டும் என்றால் பளு தூக்கி, உடற் பயிற்சி செய்து மார்பை விரியச் செய்யலாம். 

மனம் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? 

உயர்ந்த இலக்கியங்களை படிக்க வேண்டும். 

இலக்கியங்கள் மனம் விரிய உதவி செய்கின்றன. 

எப்படி ?

உங்களால் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்க முடியுமா ? உங்களால் எவரெஸ்ட் மலை உச்சியை அடைய முடியுமா ? நீங்கள் எடை அதிகம் உள்ளவர்கள் என்றால், உங்களால் ஒரு வருடத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா ?

இப்படி பெரிய இலக்கை கொடுத்தால் நம் விடை முடியாது என்பதுதான். நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று விட்டு விடுவோம்.

பத்து கிலோ குறைக்க முயன்றால் , ஆறு அல்லது ஏழு கிலோவாவது குறைப்போம் அல்லவா ? அது நல்லது தானே. 

மாநிலத்தில் முதல் மாணவனாக முயன்று முடியாவிட்டால் மாவட்டத்தில், அல்லது குறைந்த பட்சம் பள்ளிக்காவது முதல் மாணவனாக வர முடியும் அல்லவா. 

பெரிய காரியங்களை நினைத்து பயப்படக் கூடாது. 

ஒரு ஊரில் ஒரு பூனை இருந்தது. அதற்கு , அதிக பட்சம் ஒரு டம்பளர் பால் குடிக்க முடியும். மிக முயன்றால் இரண்டு டம்பளர் குடிக்கலாம். ஆனால், அந்த பூனை என்ன செய்தது தெரியுமா ? நேரே பாற்கடலுக்குச் சென்றது. அந்த பாற்கடல் முழுவதையும் நக்கியே குடித்து தீர்த்து விடுவது என்று நக்கத் தொடங்கியது. 

நமக்குத் தெரியும், அந்த முட்டாள் பூனையால் முடியாது என்று. 

இறைவனின் புகழ் எவ்வளவு பெரியது ? அதை தனி ஒரு ஆள் சொல்லி முடியுமா ? முடியாது. இருந்தாலும் , நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கம்பன். 

பாற்கடலை பூனை நக்கி குடித்து முடித்துவிட நினைத்ததைப் போல குற்றமற்ற இராமனின் கதையை நான் சொல்ல நினைக்கிறேன் என்கிறான். 

சொல்லி முடித்தானா இல்லையா ? 

பூனையாவது, பாற்கடலை குடித்து முடிப்பதாவது என்று நினைத்திருந்தால் ? 

பெரிய விஷயங்களை கண்டு மிரண்டு விடக் கூடாது. துணிச்சலாக ஆரம்பிக்க வேண்டும். 

இது இலக்கியங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம். 

மனம் விரிவடைய இல்லக்கியங்கள் வழி செய்யும். 

பாற்கடல் என்ற ஒன்றை நினைக்கும் போதே உங்கள் மனம் எவ்வளவு கற்பனையில் விரிகிறது ?


நல்ல இல்லக்கியங்களை தேடி படியுங்கள். 

உங்கள் மனம் விரியும். மனம்  .உயரும். மனம் உயர உங்கள் வாழ்க்கை உயரும். 

உயரட்டும். 

Friday, March 18, 2016

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும்

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும் 



பாடல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எளிமையான குறள் . அன்பும் அறமும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதுவே அந்த குடும்பத்தின் பண்பும் பயனும் ஆகும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். 

ஒரு குடும்ப வாழ்கை இனிமையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். இருப்பினும், எத்தனை குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன ?

ஏதோ ஒரு சில நேரம் சந்தோஷமாக இருந்தாலும், அந்த சந்தோஷம் எவ்வளவு நாள் நீடிக்கிறது ?

எப்போதும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் ?


இல்வாழ்கை என்பது என்ன - குடும்ப வாழ்கை என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் , சுற்றத்தார் இவர்கள் அனைவரும் சேர்த்ததே ஒரு குடும்ப வாழ்கை.

இந்த குடும்ப வாழ்கை அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

ஒவ்வொருவருக்கும் ஒரு  தேவை இருக்கும். இந்தத் தேவைகள் ஒன்றோடு ஒன்று முட்டி  மோதும். அப்போது சிக்கல் பிறக்கும்.

இந்த குடும்ப வாழ்க்கைக்கு இரண்டு விஷயங்களை வள்ளுவர் சொல்கிறார்.

முதலாவது அன்பு.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் இவர்கள் ஒருவரோடு ஒருவர் இடையறதா அன்பு செலுத்த வேண்டும். அன்பு அனைத்து சிக்கலையும் விடுவிக்கும். சுயநலம் வரும்போதுதான் சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போய் மன வருத்தம் வருகிறது.  நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற ஆணவ மனப் போக்கு, என் தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும், மற்றவர்கள் தேவைகள் எப்படியும் போகட்டும் என்று சுயநலமாக நினைப்பது போன்ற அன்பற்ற செய்கைகளால் குடும்பத்தில் சந்தோஷம் குறைகிறது.

சரி, அன்பு மட்டும் இருந்தால் போதுமா ?

போதாது.

அந்த குடும்பம் அற வழியில் செல்ல வேண்டும். அற வழியில் செல்லாத யாருக்கும் இன்பம் இருக்காது. அறத்தை விட்டு விலகினால் கட்டாயம் துன்பம் வந்து சேரும்.

எனவே, குடும்பத்தில் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி, குடும்பத்தில் அனைவரும் அற வழியில் நின்றால் ....

நின்றால் என்ன ஆகும் ?

அன்பு குடும்பத்தின் பண்பாக இருந்தால், அந்த குடும்பம் அற வழியில் சென்றால், அதனால் விளைவது எதுவோ , அதுவே அதன் பயன் ஆகும்.

அதாவது நிரந்தர இன்பமே அதன் பயனாக விளையும்.

ஒருவர் மேல் அன்பு செலுத்துங்கள்.

அற வழியில் செல்லுங்கள்.

இன்பத்தை அடைவீர்கள்.

(For other poems http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_18.html )




Saturday, March 12, 2016

அபிராமி அந்தாதி - பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

அபிராமி அந்தாதி -  பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.


பாடல்

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு 
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?-- 
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் 
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

பொருள்

தைவந்து = மலர்களோடு வந்து (தைத்த மலர்கள் என்று கூறுகிறார்கள்)

நின் = உன்

அடித் தாமரை = திருவடியாகிய தாமரையில்

சூடிய சங்கரற்கு  = தலையை வைத்த சங்கரற்கு

கைவந்த தீயும் = கையில் உள்ள தீயும்

தலை வந்த ஆறும் = தலையில் உள்ள கங்கை ஆறும்

கரந்தது எங்கே? = மறைந்தது எங்கே

மெய் வந்த நெஞ்சின் அல்லால் = உண்மை ஒளி விடும் மனதைத் தவிர

ஒருகாலும் = ஒருபோதும்

விரகர் தங்கள் = தீயவர்கள்

பொய்வந்த நெஞ்சில் = பொய் இருக்கும் மனதில்

புகல் அறியா = செல்லத் தெரியாத

மடப் பூங் குயிலே = பூங்குயிலே

பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் நான் எனது என்ற எண்ணங்களே.

எனக்கு வேண்டும் என்ற ஆசை. என் பொருள், என் மனைவி, என் சொத்து , என் கார் , என் வீடு என்ற பெருமிதம்.

அவை கை விட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

என்னை விட மற்றவன் அதிகம் வைத்து இருக்கிறானே என்ற பொறாமை, ஆதங்கம்.

என் திறமை மேல் கொண்ட பெருமிதம். அதற்கு ஒரு பங்கம் வரும் போது வரும் அவமானம்.

என்று நமக்கு வரும் அத்தனை துபங்களுக்கும் காரணம் நான், எனது என்ற அகங்காரம், மமகாரங்களே.

இவற்றை எப்படி விடுவது ? இவற்றைத் தாண்டி எப்படி போவது ?

மனிதன் எத்தனையோ வழிகளை தேடிகொண்டிருக்கிறான்.

சிலர் மதுபானம் அருந்தி தன்னை மறக்கிறார்கள்.

சிலர் சினிமா, நாடகம், விளையாட்டு என்று அதில் மூழ்கி தங்களை மறக்கிறார்கள்.

சிலர் படிப்பு, இசை, ஊர் சுற்றுவது என்று தன்னை மறக்கிறார்கள்.

அனைத்து முயற்சிகளும் "நான்" என்ற இந்த அகங்காரத்தை இழந்து, அதன் சிறையில் இருந்து  விடுபடுவதுதான்.

தன்னை மறப்பது பெரிய சுகம்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரிநாதர்.

சரி அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?

அபிராமியைக் காண சிவன் வருகிறான்.

அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறான். அவளுடைய திருவடிகளை   தன் தலையில் சூடிக் கொண்டான்.

அந்த சமயத்தில், அவன் தன்னையே இழக்கிறான்.

அவன் கையில் உள்ள தீயும், தலையில் உள்ள கங்கையும் மறைந்து போய் விட்டது என்கிறார் பட்டர்.

நான் பெரிய ஆள், கங்கையை தலையில் கொண்டவன், தீயைக் கையில் கொண்டவன் என்பவை போய் விட்டது.

அவளில் அவன் கரைந்தான்.

தான் என்ற ஒன்று இல்லாமல் சிவம் சக்தியில் கரைவதுதான் உலகம் முழுதும் நடக்கும் லீலை.

கைலாய காட்சி கண்டபின் நாவுக்கரசர் உலகம் முழுவதும் ஆண் சக்தியும் பெண் சக்தியும் பின்னி பிணைந்து கிடப்பதைக் காண்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை.

ஆண் யானையும், பெண் யானையும், (மடப் பிடியோடு களிறு) வருவன கண்டேன், கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன் என்று வியக்கிறார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.

இதில் இன்னும் ஆழமான கருத்து என்ன என்றால்,

இந்த ஆணும் பெண்ணும்  வெளி உருவங்கள் அல்ல.

நாம் ஒவ்வொருவரும் தாய் (பெண்) மற்றும் தந்தையின் (ஆண் ) கலப்பில் தான் உருவாகிறோம்.

நமக்குள் ஆணும், பெண்ணும் சரி விகிதத்தில் இருக்கிறது.

இதை அறிந்த நம்  முன்னவர்கள்,அர்த்த நாரி என்ற வடிவை படைத்துக் காட்டினார்கள். ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் கலந்த கலவை தான் என்று சொல்லும் வடிவம் அது.

நம் சமூகச் சூழ்நிலை ஆணுக்கு சில குணங்கள் என்றும் பெண்ணுக்கு சில குணங்கள் என்று வரையறத்து வைத்து இருக்கின்றது. நாம் அந்த வரையறைக்கு உட்பட்டு  வாழ்கிறோம்.

நாளடைவில், ஒரு ஆணுக்கு, அவனுக்குள் இருக்கும் பெண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அதே போல் பெண்ணுக்கும், அவளுக்குள் இருக்கும் ஆண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அழுந்திக் கிடக்கிறதே தவிர , அழிந்து போவது இல்லை.

ஒவ்வொருஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடுகிறான். பெண்ணும் அப்படியே.

உள்ளுக்குள் இருக்கும் பெண்ணோடு ஒரு ஆண் இணைவதுதான் உண்மையான திருமணம். அப்போது அந்த ஆணோ பெண்ணோ முழுமை அடைகிறார்கள். அது வரை, ஒரு பாதி இன்னொரு பாதியைத் தேடி அலைந்து கொண்டே தான்  இருக்கும்.

தேடுங்கள்,

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் பெண்ணையும்,
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும் தேடுங்கள்.

அதுதான் உண்மையான கலவி. கலப்பு. கரைதல்.

சிவன் அபிராமியோடு கரைந்தான்.

உங்கள் அபிராமியை ,உங்களுக்குள்ளேயே கண்டு பிடியுங்கள்.

(For other poems - http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_12.html )

Thursday, March 10, 2016

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம்

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம் 




அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்


உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உண்டு. மீதி அத்தனை கதையும் அந்த மூலக் கதையின் கருவை எடுத்துக் கொண்டு, பெயர்களை, சூழ்நிலைகளை மாற்றி மாற்றி எழுதுவதுதான்.

அது என்ன கதை.

ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.

இந்த ஒரு கதை தான் உண்டு.

அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.

கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.

ஆனால்,

இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.

உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.

கோவலன் கதாநாயகன்.
கண்ணகி கதாநாயகி.

வில்லன் யார் ?

கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ?  தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?

யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று போர்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.

விதி.

விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.

நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.

ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.

திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.


அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.

விதியை நம்பாத  இலக்குவன் கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய   போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.

சிலப்பதிகாரம் மூன்று அறத்தை முன்னிறுத்தி காப்பியம் சொல்கிறது.


1. அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
2. உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
3. ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.  அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.

நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.

ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.

இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

அதிலிருந்து சில பாடல்களை வரும் நாட்களில் சிந்திப்போம்.

(for other poems , http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_10.html )

Wednesday, March 9, 2016

அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு

 அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு 


பாடல்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = குயில் போல இருப்பாள் கடம்பா அடவியில் (அடவி என்றால் காடு)


கோல வியன்  = அழகிய

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = மயில் போல இருப்பாள் இமய மலையில்

வந்து உதித்த  = வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் = மலையின் மேல் வெயில் போல இருப்பாள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரின் மேல் தோன்றும் அன்னப் பறவை போல இருப்பாள்

கயிலாயருக்கு = கயிலை மலையில் இருக்கும் சிவனுக்கு

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று ஒரு நாள் இமவான் அளித்த

பாடல் இவ்வளவுதான். 

இதில் என்ன இருக்கிறது ? 

மயில் போல, குயில் போல, அன்னம் போல , வெயில் போல, அன்னம் போல இருக்கிறாள்  அபிராமி என்று கூறுகிறார். இதில் புதுமையான விஷயம் ஒன்று இல்லை என்றே தோன்றும்.

பொறுங்கள். 

மிக மிக ஆழமான, நுண்ணியமான செய்தியை கூறுகிறார் பட்டர்.

நாம் பேசும் போது , அந்த சப்தம் நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கிறது  அல்லவா ?

நாம் மனதுக்குள் பேச முடியும் அல்லவா ? மாணவர்களை மனதுக்குள் படியுங்கள் என்று சொன்னால் அவர்கள் படிப்பார்கள். ஒவ்வொரு எழுத்தாய் , ஒவ்வொரு வார்த்தையாய் வாசிப்பார்கள்.  அந்த வார்த்தைகளின் சப்தம் அவர்களுக்கு கேட்க்கும் , அருகில் இருப்பவர்களுக்கு கேட்க்காது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம்.  அக்ஷரம் இல்லாமல் வார்த்தைகள் இல்லாமல்  சொல்ல வேண்டியதை நினைக்க முடியும். ஒலி வடிவம் இல்லை ஆனால்  அந்த வார்த்தைகள் தரும் அர்த்தம் மொத்தமும் உள்ளே ஓடும். 

அதற்கும் முந்தைய நிலை இருக்கிறது. அந்த நிலையில் சப்தம் தோன்றும்.  சொல்பவருக்கே கூட  தெரியாது. 

இதை  சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நாலு விதமான நிலை என்று சொல்லுவார்கள். 

சூக்குமை...சூட்சுமமானது. நமக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. மூலாதாரத்தில்  இது தோன்றும். 

அடுத்த நிலை பைசந்தி, வார்த்தை முழுதுமாக உருவாவிட்டாலும் அது தோன்றுவது  தெரியும். நாபிக் கமலத்தில் இருக்கும் இது. 

அடுத்த நிலை மத்திமை - தொண்டையில் இருப்பது. மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ஒலி வடிவம் இருக்கும். நமக்கு கேட்கும். மற்றவர்களுக்கு கேட்காது. ஆரூடம் சொல்பவர்கள் இந்த ஒலியை கேட்க்கும் சக்தி படைத்தவர்கள். நாம் வாய் விட்டு சொல்லாமலே மனதுக்குள் ஒலிக்கும் அந்த ஒலியை அவர்களால் கேட்க முடியும். நாம் நம்மைப் பற்றி நினைப்பதை, கேட்க நினைப்பதை அவர்கள் நம்மிடம் இருந்தே கேட்டுக் கொள்ளவார்கள். நாம் நினைப்போம், இது எப்படி  அவர்களுக்குத் தெரிந்தது , நாம் சொல்லவே இல்லையே என்று.  
மந்திரங்களை இந்த இடத்தில் சொல்ல முடியும். அதற்கு அசபா மந்திரம் என்று பெயர். 

இதைத்தான் ஔவையார் 

குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

என்பார் 

வைகரி - இறுதியாக வெளிப்படுவது. நமக்கும் மற்றவர்களுக்கும் கேட்கும். 

சூக்குமையில் இருக்கும் போது , வாக்கு ஒளி வடிவில் இருக்கும்.    மேலே எழுந்து வரும் போது அது ஒலி வடிவம் பெறும்.


குயிலாய் இருக்கும் = குயில் கூவுவது கேட்கும். இது வெளிப்பட்ட சப்தம். குயில் இருக்கும் இடம் தெரியாது. ஒளி வடிவம் இல்லை.


மயிலாய் இருக்கும் = மயில் பார்பதற்கு உகந்தது.  அழகாய் இருக்கும். ஒளி வடிவமானது.


வந்து உதித்த = உதித்தல் என்றால், இருப்பது வெளிப்படுவது. சூரியன் உதிப்பான். சூரியன் தோன்றினான் என்று சொல்லக் கூடாது.

வெயிலாய் இருக்கும் = மயில் சற்று மயக்கமான உருவைத் தரும். நீளமும், பசுமையும், இடை இடை வெளியும் விட்டு, அசையும் போது அதன் அழகு தெரியும், ஆனால் முழுவதும் தெரியாது. ;ஆனால், வெயில் தெளிவாகத் தெரியும்.

கமலத்தின்மீது அன்னமாம் = ஞான முக்தி அடைந்தவர்களை அன்னம் என்று குறிப்பிடுவார்கள். அன்னத்திற்கு வட மொழியில் ஹம்சம் என்று பெயர்.

இராம கிருஷ்ண பரம ஹம்சர்.

ஞானம் என்பது உண்மையையும் , உண்மை அல்லாததையும் கண்டு தெளிவது. எனவே ஞானிகளை ஹம்சர் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த உண்மைகளை அறியும் போது ஞானம் பிறக்கும் என்று பட்டர் கூறுகிறார்.


இந்த மயில் , குயில் எல்லாம் உண்மையா ? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

வானத்தில் மயில் ஆடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய், மயில் குயில் ஆச்சுதடி  


என்பார் குதம்பைச் சித்தர்.

அபிராமி அந்தாதி ஒரு ஞானப் பெட்டகம்.

ஆழ்ந்து படிக்க வேண்டும்.


For other entries: http://interestingtamilpoems.blogspot.com/2016/03/blog-post_9.html