Monday, December 29, 2014

குறுந்தொகை - புது நலன் இழந்த

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம். 

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு
 
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
 
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை 

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.


Thursday, December 25, 2014

தேவாரம் - பலர் சிரிக்கும் முன்

தேவாரம் - பலர் சிரிக்கும் முன் 


வாழ்க்கையில் என்னென்னமோ செய்கிறோம். கொஞ்சம் நல்லது, கொஞ்சம் அல்லாதது, கொஞ்சம் பொய், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் காமம்...இப்படி அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கிறோம்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதை அனுபவிக்காமல் விட்டு விட்டுப் போகிறோம்.

 நம்பியவர்கள் கை விட்டு விடுகிறார்கள். நம்பியவர்களை நாம் கை விட்டிருக்கிறோம்.

கூட்டிக் கழித்தால் நம் வாழ்க்கையே ஒரு அர்த்தமற்றதாக, நகைப்புக்கு உரியதாக இருக்கும். இதற்கா இந்த பாடு....இந்த  அலைச்சல் ?

இறந்த பின், இடு காட்டில் பிணத்தை வைத்திருக்கும் போது , சுற்றி நிற்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்....

நம்மைப் பார்த்து அவர்கள் சிரிக்கும் முன் திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

வாழ்வில் எதை எதையோ தேடி அலைகிறோம் . கிடைத்தது கொஞ்சம், கிடைக்காதது நிறைய. கலைந்த கனவுகள், கரைந்த கற்பனைகள், ஏமாந்த எண்ணங்கள்...

இவ்வளவுதானா வாழ்க்கை ?

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


சீர் பிரித்த பின்

அரித்து உற்ற வினையால் அடர்பு உண்டு நீர் 
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் 
சிரித்து உற்று பல பேசப் படா முன்னம் 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே 



பொருள்

அரித்து = அரித்து,

உற்ற வினையால் = செய்த வினையால். நாம் செய்யும் இரு வினைகள் நாளும் நம்மை அரித்து எடுக்கின்றன

அடர்பு உண்டு  = பற்றப் பட்ட

நீர் = நீங்கள்

எரி = தீ

சுற்ற கிடந்தார் என்று = சுற்றி இருக்கக் கிடந்தார் (பிணத்தைச் சுற்றி தீ எரியும் போது )

அயலவர் = மற்றவர்கள்

சிரித்து உற்று = நம்மைப் பார்த்து சிரித்து

பல பேசப் படா முன்னம் = பலவிதமாக பேசும் முன்

திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே  = திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள்.



Wednesday, December 24, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை 



அழகழகான பெண்கள் புடை சூழ தாரை, இலக்குவன் முன் போய் நிற்கிறாள்.

அப்போது இலக்குவனின் நிலையை கம்பன் சொல்கிறான்.

ஒரு ஆணுக்கு இலக்கணம் வகுக்கிறான்.

முதலில் அவனுடைய கோபம் போயிற்று.

இரண்டாவது, அவர்களை பார்க்காமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.

பார்த்தால் தானே சலனம் வரும்...முதலில் கண்ணை அவர்களை விட்டு வேறு இடம் நோக்குகிறான்.

பின்னர், அவர்களுக்கு நேர் எதிரே நிற்காமல், ஒதுங்கி நிற்கிறான்.

பின்னர், மீண்டும் முகம் திருப்பி அவர்களை பார்க்கவும் அஞ்சினான்.

என்னடா இவன் பெண்களை பார்க்க எதற்கு அஞ்ச வேண்டும், ஒரு வேளை இவன் ஒரு கோழையோ என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அப்படி நின்றவன் "மலை போல் உயர்ந்த தோள்களை" கொண்டவன் என்கிறான் கம்பன்.

பாடல்


ஆர்க்கும் நூபுரங்கள் பேரி,
    அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப,
    மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர,
    முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப்
    பருவரை அனைய தோளான்.

பொருள்

ஆர்க்கும் = விம்மி வரும்

நூபுரங்கள் = மார்பகங்கள்

பேரி = முரசு போல

அல்குலாம் தடம் = இடுப்புப் பகுதி

தேர் சுற்ற = தேர் போல அசைய 

வேல் கண் = வேல் போன்ற கண்கள்

வில் புருவம் = வில் போன்ற புருவம்

போர்ப்ப = போருக்கு வர

மடந்தையர் மிடைந்த போது = பெண்கள் வந்த போது

பேர்க்க  அருஞ்சீற்றம் = மாற்ற முடியாத கோபம்

 பேர = மாறிப் போக

முகம் பெயர்த்து = முகத்தை வேறு இடத்திற்கு மாற்றி - அதாவது பார்வையை மாற்றி

ஒதுங்கி = அவர்களிடம் இருந்து ஒதுங்கி

பின்னர்ப் = மீண்டும்

பார்க்கவும் அஞ்சினான் = பார்க்கவும் அஞ்சினான்

அப் = அந்த

பருவரை  = மலை போன்ற

அனைய தோளான் = பெரிய தோள்களை உடைய (இலக்குவன் )

பெண்களை நேராக பார்க்காமல், அவர்கள் முன்னால் நேருக்கு நேர் நில்லாமல், அவர்களை பார்ப்பது கூட தவறு என்று அஞ்சி விலகி நின்றான்.

இது போன்ற உயர்ந்த கருத்துகளை இளம் வயதில் பையன்களுக்கு சொல்லிக் கொடுத்தால்,  அவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன, எது சரி, எது தவறு என்று  தெரியும்.

பாலியல் கொடுமைகள் குறையும்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அதில் உள்ள உயர்ந்த பாத்திரங்களின்  குணங்களை இரசித்து, அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஒரு சமுதாயம் உருவானால், மிக நன்றாக இருக்கும்.



Monday, December 22, 2014

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை 


பல பெண்கள் மத்தியில் மாட்டிக் கொண்ட ஆண்களுக்குத் தெரியும், அது எவ்வளவு சங்கடமான விஷயம் என்று.

அதிலும், மிக மிக அழகான பெண்கள் மத்தியில் , தனி ஆளாக மாட்டிக் கொண்டால் தெரியும்....

இலக்குவன் அப்படி  மாட்டிக் கொண்டான்.

மிகுந்த கோபத்தோடு வரும் அவன் முன், ஒரு பெண்கள் பட்டாளாமே, ஒரு படையே சென்றது.

வாளும் , வேலும், கொடியும், அசைய, முரசு ஒலிக்க ஒரு பெண் படையே சென்று நின்றது.


வில் போல் வளைந்த உடல், கண்ட நொடியில் இதயத்தை அறுக்கும் கண்கள், பளபளக்கும் அணி கலன்கள் , ஒலி எழுப்பும் மேகலை, வளைந்து நெளியும் புருவங்கள்...

என்ன செய்வான் அவன்....

பாடல்

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

பொருள்

வில்லும் = வில்லும்

வாளும் = வாளும்

அணிதொறும் மின்னிட = ஒவ்வொரு அணிகலனிலும் மின்ன

மெல்  = மென்மையான

அரிக் குரல் = ஆரவாரிக்கும்

மேகலை ஆர்த்து எழ = மேகலை விம்மி எழ

பல் வகைப் = பலவிதமான

புருவக் கொடி = புருவங்கள், கொடி போல

பம்பிட = உயர்ந்து பறக்க

வல்லி ஆயம் = வலிமையான போர்ப் படை போல 

வலத்தினில் வந்ததே. = வலம் வந்ததே



Friday, December 19, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அமுதம் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. திருமால், அமுதத்தை தேவர்களுக்குக் கொடுத்தார்.

இது கதை.

நம்பும் படி இருக்கிறதா ? கடலை கடைய முடியுமா ? தண்ணீரைக் கடைந்தால் என்ன கிடைக்கும் ? அதைக் கடைய எவ்வளவு பலம் வேண்டும்....இப்படி ஒரு அர்த்தமில்லா கதையை ஏன் படைத்து இருக்கிறார்கள் ?

பாற்கடல் என்பது நம் வாழ்க்கைதான். இந்த உலகம் தான்.

இதில் உண்மை தேடி (அமுதம்) நாளும் கடைந்து கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் நல்லதும் இருக்கிறது. பொல்லாததும் இருக்கிறது.

நல்லதை (அமுதை) எடுத்துக் கொண்டு அல்லாததை (விஷத்தை ) விட்டு விடவேண்டும்.

இதுவரை நாம் அமுதத்தை கண்டதில்லை. அதனால், அதை நேரில் வந்து யார் தந்தாலும் அது அமுதம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்போதெல்லாம் மனித குலம் நல்லது எது , கெட்டது எது என்று அறியாமல் தவிக்கும் போது பெரியவர்கள் தோன்றி வழி காட்டி இருக்கிறார்கள்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரியார்.

எத்தனை அற நூல்கள், எத்தனை குருமார்கள்....

அமுதை அள்ளி தந்திருக்கிறார்கள்....நாம் தான் அமுதை விட்டு விட்டு வேறு எங்கோ  அலைந்து கொண்டிருக்கிறோம்.....

பாடல்

கூடிநீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடு கின்ற நின்தனை
நாடும் வண்ணம்சொல்லாய் நச்சுநா கணையானே!

பொருள்

கூடி = தேவர்களும் , அசுரர்களும் ஒன்றாகக் கூடி (நல்லவர்களும் கெட்டவர்களும் )

நீரைக் கடைந்த வாறும் = கடலை கடைந்து

அமுதம் தேவர் உண்ண = அமுதை தேவர்கள் உண்ண

அசுரரை - அசுரர்களை

வீடும் வண்ணங்களே    =  விட்டுப் போகும்படி (விடுவது வீடு)


செய்துபோன வித்தகமும் = செய்த வித்தகமும்

ஊடு புக்கு = உள்ளே புகுந்து 

எனது ஆவியை உருக்கி = எனது ஆவியை உருக்கி

உண்டிடு கின்ற நின்தனை = உண்ணும் உன்னை

நாடும் வண்ணம் = நான் அடையும் வண்ணம்

சொல்லாய் = சொல்வாய் 

நச்சு நாகணையானே! = நஞ்சை கொண்ட பாம்பணையில் துயில்பவனே


இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


கோபத்தோடு வரும் இலக்குவனை சந்திக்க தாரை தன் தோழிகளோடு செல்கிறாள்.

எப்படி ?

அந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்.....

பாடல்


விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.

பொருள்

விலங்கி = பார்பவரை விலங்கிட்டு, அங்கிங்கு நகர விடாத அழகு

மெல்லியல் = மென்மையானவர்கள்

வெள்நகை = வெண்மையான புன்னகை. பளிசென்ற வெண்மையான பற்கள் தெரியும்படியான புன்னகை

வெள்வளை = வெண்மையான வளையல். சங்கு வளையல்

இலங்கு நுண்ணிடை = விளங்கும் நுண்ணிய இடை

ஏந்து இள மென்முலை = ஏந்திய இளமையான மார்புகள்

குலம்கொள் = நல்ல குலத்தில்  

தோகை மகளிர் குழாத்தினால் = மயில் போன்ற பெண்களின் கூட்டத்தினால்

வலம்கொள் வீதி  = வலம் வரும் வீதியின்

நெடுவழி மாற்றினாள் = இலக்குவன் வரும் வழியை மாற்றினாள், தடுத்தாள்

ஆணின் கோபத்தை, மூர்கத்தை மாற்றும் இயல்பு பெண்மைக்கு உண்டு. அனுமனோ, அங்கதனோ சென்றிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.

இலக்குவன் பெண்ணிடம் வீரத்தை காண்பிக்க மாட்டான். அவன் கோபம் மட்டுப் படும்  என்று நினைத்து அனுமன் தாரையை அனுப்பினான்.

பின் வரும் பாடல்களில் தாரையின் பேச்சு சாதுரியத்தை, இலக்குவனின் மிக உயர்ந்த ஒழுக்கத்தை காட்டுகிறான் கம்பன்.

பார்ப்போம்.




Wednesday, December 17, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன், சொன்ன சொல்லை மறந்து, போதையில் மிதந்தான்.

அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான்.

இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான். கோட்டை மதிலை கற்களை கொண்டு குரங்குகள் அடைத்தன. இலக்குவன், அவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு வருகிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.

அப்போது, அனுமன் "தாரை அவன் முன் சென்று நின்றால், அவன் கோபம் மாறும் " என்றான்.

அதைக் கேட்ட தாரை

"நீங்க எல்லாம் விலகுங்கள். நான் போய் இலக்குவனை சந்தித்து அவன் மன நிலை என்ன என்று அறிந்து வருகிறேன் " என்று கிளம்பினாள் . அவளுக்கு வழி விட்டு எல்லோரும் விலகி நின்றனர்.

ஒரு அரசியல் திருப்பத்திற்கு , தாரை வழி வகுக்கிறாள். இத்தனை ஆண்பிள்ளைகள் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் . தானே நேரில் சென்றால்தான், இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று முடிவு செய்து, "நீங்க எல்லோரும் தள்ளுங்கள்..நான் போகிறேன் " என்று கிளம்புகிறாள்.

ஒரு பெண்ணின் தைரியம், அவளின் தன்னம்பிக்கை, ஆளுமை வியக்க வைக்க வைக்கிறது.

பாடல்

'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.

பொருள்

'நீர் எலாம் = நீங்கள் எல்லாம் (அனுமன், அங்கதன் எல்லோரும்)

அயல் நீங்குமின் = நீங்கிப் போங்கள்

நேர்ந்து , யான் = நான் சென்று

வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும் = வீரனாகிய இலக்குவனின் உள்ளத்தை விசாரிக்கிறேன்

பேர நின்றனர் = எல்லோரும் விலகி நின்றனர்

யாவரும் = எல்லோரும்

பேர்கலாத் = நல்ல நெறிகளில் இருந்து பெயராத, விலகாத

தாரை சென்றனள் = தாரை சென்றாள்

தாழ் குழலாரொடும் = தன் தோழியரோடு

யோசித்துப் பார்ப்போம்.

தன் கணவனை, இராமனின் துணையோடு, வஞ்சகமாக கொன்றவன் சுக்ரீவன்.

அவனுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

தாரை நினைத்திருந்தால் "நல்லா வேண்டும்...என் கணவனை கொன்றவன் இப்போது  வகையாக மாட்டிக் கொண்டான். இலக்குவன் அவனை கொல்லட்டும் , என் மகனுக்கு ஒரு வேளை ஆட்சி கிடைக்கலாம் " என்று நினைத்து இருக்கலாம்.

கணவனை கொன்றவன் மேலும் கருணை.

கணவனை கொன்றது மட்டும் அல்ல, மகனுக்கு ஆட்சி கிடைக்காமல் செய்தவன்.

அப்படிப் பட்ட சுக்ரீவன் மேலும் கருணை கொள்கிறாள் தாரை.

மேலும் உயிர் சேதம் விளைவதை அவள் விரும்பவில்லை.

குடும்பச் சண்டையில்  மற்றவர்கள் பாதிக்கப்  கூடாது என்று நினைக்கிறாள்.

பிரச்சனையை தீர்க்க தானே முனைகிறாள்.

அவளின் பெரிய மனதை நாம் கண்டு வியக்கிறோம்.

இப்படிப் பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

வீரமும், அறிவும்,  விவேகமும்,பரந்த மனமும், கருணையும் கலந்து அற்புத பிறவிகளாக இருந்திருக்கிறார்கள்.

வருங்காலப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக தாரையைப் படைக்கிறான் கம்பன். 

Tuesday, December 16, 2014

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை 


பெரிய பள்ளம். ரொம்பப் பெரிய பெரிய பள்ளம். எவ்வளவு போட்டாலும் நிறையாத பள்ளம்...கடலில் உள்ள நீரைக் எல்லாம் எடுத்து விட்டால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்குமோ அது போன்ற பள்ளம்...

அது எந்தப் பள்ளம் தெரியுமா ?

நம் வயிறுதான் .... நிறைந்த மாதிரி ..இருக்கும்.சிறிது நேரத்தில் காலியாகி விடும்...இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த பள்ளத்தை இட்டு நிரப்புவதே வேலையாக அலைகிறோம் .

உழைப்பதும், உணவு சேகரிப்பதும், அதை இட்டு வயிற்றை நிரப்புவது ஒரு வேலை.

இந்த உடலுக்குள் ஐந்து முரடர்கள் இருந்து கொண்டு இந்த உடலை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...அதைத் தொடு , இதை சுவைத்துப் பார், இதை கேட்டுப் பார் என்று இந்த உடலை படாத பாடு படுத்துகிறார்கள்.

அவர்கள் சொன்ன படியெல்லாம் கேட்டு அலைவது இன்னொரு வேலை.

இது ஒரு வாழ்க்கையா ? போதும் இது என்று கூறுகிறார் நாவுக்கரசர்....

என்னதான் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும்.

கெடுவது என்றால் கேட்டுப் போவது, முடிந்து போவது...முடியும் வாழ்கை இது....

உண்பதும், புலன் இன்பம் தேடுவதும் ...இது மட்டும் தானா வாழ்க்கை .


பாடல்

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

சீர் பிரித்த பின்

படு குழிப் பவ்வம் அன்ன  பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை காணும் தோறும் கேதுகின்றேன்
முடுகுவர்  இருந்து  அளைவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டே ஆரூர் மூலட்டனீரே.


பொருள்

படு குழிப் = பெரிய குழி

பவ்வம் அன்ன = கடல் போன்ற

பண்டியைப் = வயிற்றில்

பெய்த வாற்றால் = போட்டு நிரப்பிக் கொண்டே இருந்தால்

கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை = கெடுவது இந்த மனிதர் வாழ்கை 

காணும் தோறும் கேதுகின்றேன் = இதை காணும்போதெல்லாம் , அழைக்கின்றேன்

முடுகுவர் = முடுக்கி விட்டுக் கொண்டு இருப்பார்

இருந்து  அளைவர் = அங்கும் இங்கும் அலைய வைப்பார்


மூர்க்கரே = மூர்கமான

இவர்களோடும் = இவர்களோடும்

அடியனேன் வாழ மாட்டேன் = அடியேன் வாழ மாட்டேன்

ஆரூர் மூலட்டனீரே = ஆரூரில் மூலமாக இருப்பவரே

.


Sunday, December 14, 2014

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.


பயம்.

நமக்குத்தான் எவ்வளவு பயங்கள் ?

வேலை போய் விடுமோ என்ற பயம், உடல் நிலை குறித்து பயம், பிள்ளைகள் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற பயம், காதல் கீதல் என்று தவறான முடிவை எடுத்து விடுவார்களோ என்று பயம், நெருங்கியவர்களின் உடல் நிலை குறித்துப் பயம், வருமான வரி குறித்துப் பயம்...

பயம் இல்லாத வாழ்க்கை  இருக்க முடியுமா ?

எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ?

அச்சம் இல்லை, அச்சம் இல்லை , அச்சம் என்பது இல்லையே என்று மார் தட்டிய பாரதியும் பயந்து புதுச்சேரி  சென்றார்.

பிணி,  மூப்பு,மரணம் என்ற மூன்று பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
 
நாவுக்கரசர் சொல்லுகிறார்...

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, இனிமேல் நம்மை பயப் படுத்துவதற்கு ஒன்றும் வராது என்றும்  சொல்கிறார்.

சொல்லுவது யார் ?

ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி, படை பலம்  உள்ளவர்,செல்வாக்கு உள்ளவர்  ...அந்த மாதிரி எதுவும் இல்லாதவர்...

இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.

அக்காவின் வளர்ப்பில்  வளர்ந்தவர்.

அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.

சொன்னது எப்போது தெரியுமா ?

அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...

மதம் கொண்ட யானை வருகிறது...நாவுக்கரசரின் தலையை இடற...

அப்போது சொல்லுகிறார் "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."

எங்கிருந்து இந்த தைரியம் வந்தது ?

"மேலே பூசிய திரு வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை , நமக்கு அஞ்ச வருவதும் இல்லை...."

பாடல்

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பொருள்

சுண்ண = பொடியான

வெண் = வெண்மையான

சந்தனச்  சாந்தும் = சந்தன சாந்தும்

சுடர்த் = சுடர் வீசும்

திங்கள் = நிலவை

சூளாமணியும் = தலையில் சூடாமணியாக சூடியவரும்

வண்ண = வண்ண மயமான

இரிவை = புலித்தோல்

உடையும் = உடையும்

வளரும் பவள நிறமும் = நாளும் மெருகு ஏறும் பவளம் போன்ற சிவந்த நிறமும்

அண்ணல் = பெரியவன்

அரண் = மதில் போன்ற

முரண் ஏறும் = எதிரிகளை அழிக்கும் காளை வாகனமும்

அகலம் வளாய அரவும் = அகலமான படத்தைக் கொண்ட பாம்பும்

திண்ணென் கெடிலப் புனலும் = குளிர்ந்த கெடில நதியின் நீரும்

உடையார் ஒருவர் = உடையார் ஒருவர்

தமர் = நம் உறவினர்

நாம்!- = நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; = அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை. = நாம் அஞ்சும்படி வருவதும் ஒன்றும் இல்லை

ஆழ்ந்த திடமான பக்தி. அசைக்க முடியாத நம்பிக்கை.

சொல்லிப் பாருங்கள் - ஒரு தைரியம் வரும்.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."




Thursday, December 11, 2014

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 


நமக்கு வாய்த்தது மாதிரி குருமார்கள் யாருக்கு வாய்த்து இருக்கிறார்கள் ?

சம்பவாமி யுகே யுகே என்றான் கண்ணன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு நிறைய குருமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

ஏனோ நாம் தான் அவர்கள் சொல்வதை எல்லாம் அறியாமலேயே, அறிந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமலும், வாதம், எதிர்வாதம், குதர்க்கம் பேசியும் அவர்கள் சொன்ன நல்லதையெல்லாம் இழந்து நிற்கிறோம்.

அவர்கள் திருவருள் பெற்றார்கள். பெற்றவரை நல்லது என்று சுயநலத்தோடு இல்லாமல், பின் வரும் சந்ததியினரும் வாழ வேண்டும் என்று அவற்றை சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நம் துர்பாக்கியம், அவற்றை எல்லாம் நாம் அறியாமலேயே போனது.

புதையலின் மேல் அமர்ந்து பிச்சை எடுக்கும் பிச்சைகாரானைப் போல இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் !

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

வழி தவறிப் போய் இருக்கிறார்.

இளைய தலைமுறையினர் பல வழி தெரியாமல் செல்வதைப் போல அவரும் இளமையில் வழி தவறி சென்றிருக்கிறார்.

இறைவன் இல்லை, என்று நாத்திகம் பேசி இருக்கிறார். சிவ நிந்தனை செய்திருக்கிறார்.  தான் பிறந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தில் சேர்ந்து , சமண மத பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

ஏதோ கொஞ்ச காலம் இல்லை...நீண்ட காலம்.

பின் உண்மை உணர்ந்து, மீண்டும் சைவ சமயம் வந்து சேர்கிறார்.

சிவ நிந்தனை செய்த அவருக்கு "திருநாவுக்கரசர்" என்ற பட்டத்தை சிவனே

கொடுத்தான்.

அவர் பாடிய பாடல்களை தேவாரம் என்று சைவ சமயம் கொண்டாடுகிறது.

இன்று அகிம்சை என்பது ஏதோ காந்தி கண்டு பிடித்தது என்று நாம்  நினைக்கிறோம்.

அன்பால், பக்தியால் அரசனை எதிர்த்து வென்றவர் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.

அகிம்சை என்றால் கோழைத்தனம் இல்லை. "யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் " என்று வீர முழக்கம் செய்தவர் அவர்.

இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது " எதுவும் வேண்டி  பக்தி செய்யவில்லை..." என்று இறைவனிடமே சொன்னவர் அவர்.

காதலையும், ஏன் காமத்தையும்  போற்றினார். ஆண் பெண் இன்பத்தின் உயர்வை சிறப்பித்துப் பாடினார்.

வாருங்கள், அவரின் வாழ்க்கையை அறிவோம்.

அவர் சொன்னவற்றை கேட்போம்.

கொட்டிக் கிடக்கிறது செல்வம். அள்ளிக் கொண்டு போங்கள். அள்ள அள்ள குறையாத செல்வம் இது.

திருநாவுகரசைப் பற்றிப் சொல்ல வந்த சேக்கிழார் இப்படி ஆரம்பிக்கிறார்.

உலகில் ஒரு நாவாலும் (ஒருவராலும்) சொல்ல முடியாத புகழ் உடைய அவரைப் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் என்று அடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

பாடல்

திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.

சீர் பிரித்த பின்

திரு நாவுக்கரசு, வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவ முனிவர் வாகீசர், வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  பேருலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 

பொருள்

திரு நாவுக்கரசு, = திரு நாவுக்கரசு

வளர் = வளர்ந்த, வளர்கின்ற, வளரும். இந்த உலகம் அறியாமை, ஆணவம், என்ற சேற்றில் அமிழ்ந்து கிடைக்கிறது. அதில் இருந்து முளைத்து வளர என்பது பொருள். துன்பத்தில், அறியாமையில் கிடந்து மக்கிப் போய் விடாமல், வளரும் படி என்று கொள்க.

திருத் தொண்டின் = சிறந்த திருத் தொண்டின்

நெறி வாழ = வழி முறைகள் வாழ

வரு = வந்த . நெறிகள் வாழ என்று பொருள். இன்னொரு பொருள், அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டிய ஞான தவ முனிவர் என்பது இன்னொரு பொருள். சொல்லுவது எளிது. செய்வது கடினம். அப்பர் அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டினார்.

ஞானத் = ஞானமும்

தவ  = தவமும்

முனிவர் = கொண்ட முனிவர்

வாகீசர், = வாகீசர் (வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முந்திய பிறப்புப்  பெயர்)

வாய்மை திகழ் = வாய்மை திகழ

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  = அவருடைய பெருமையை எல்லோரிடமும் பரப்ப நினைக்கின்றேன்

பேருலகில் = பெரிய உலகில்

ஒரு நாவுக்கு உரை செய்ய = ஒரு நாவாலும் உரை செய்ய

ஒண்ணாமை உணராதேன் = முடியாமையை உணராத நான்





Wednesday, December 10, 2014

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல்

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல் 


எதுதான் நிலையாக இருக்கிறது நம் வாழ்வில்.

நேற்று இருந்தது போல இன்று எது இருக்கிறது.

மனம், அது நொடிக்கு ஒரு தரம் மாறிக் கொண்டிருக்கிறது.

 சுற்றமும்,உறவும்  அப்படியே.

செல்வம் - வரும்,  போகும்.

ஆரோக்கியம் - இன்றிருக்கும், நாளை போகும்.

வாலிபம், இளமை எல்லாம் அப்படித்தான்.

அப்படியென்றால், எது தான் நிலைத்து நிற்கும் ?

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அப்பர்.



நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, 
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, 
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும், 
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”

    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

Tuesday, December 9, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு - பாகம் 2

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு  - பாகம் 2 



மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.


இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

---------------------------பாகம் 2 ----------------------------------------------------------------------------------------------

ஏன் ஒவ்வொரு செயலையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறார்  ? ஒரு வேளை அவற்றிற்கு  ஒரு அழுத்தம் தர நினைத்து அப்படி சொல்லி இருப்பாரா ? அப்படி என்றால் ஒவ்வொரு  வார்த்தைக்கும் அழுத்தம் தர நினைத்து இருப்பாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம்  இருக்குமா ?

சிந்தித்துப் பார்ப்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நினைந்து நினைந்து = முதலில் எதை நினைக்க வேண்டும் ? பின் எதை நினைக்க வேண்டும் ? 

முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.

இரண்டாவது, இந்த பிரபஞ்சம், இதன் சிருஷ்டி, அதன் தாளம் தவறாத கதி இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகின் லயம் புரியும். ஒரு வேளை,  அதில் இருந்து இறைவனும் புரியலாம். 


உணர்ந்து உணர்ந்து 

உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும்  இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.

நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும். 


நெகிழ்ந்து நெகிழ்ந்து = முதலில் நமக்கு கிடைத்த நல்லவற்றை நினைத்து மனம் நெகிழ வேண்டும். நாம் என்ன செய்து விட்டோம் , நமக்கு இவ்வளவு கிடைத்து இருக்கிறதே என்று மனம் நெகிழ வேண்டும். 

நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று  வித்து என்பார் மணிவாசகர். 

நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே. 

அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர். 

உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும். 


நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்

முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர். 

இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும். 

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். 


உடம்பு நனைந்து நனைந்து= அந்தக் கண்ணீரால் உடம்பு நனைய வேண்டும். உடம்பு நனைந்தால் உடல் குளிரும். உள்ளமும் குளிர வேண்டும். உள்ளத்தில் காமமும், கோபமும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் உடல் குளிர்ந்தாலும் உள்ளம் குளிராது. கண்ணீரால் உடலும் குளிர வேண்டும். உள்ளமும் குளிர வேண்டும். 

மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி சொல்லுகிறார் வள்ளலார்.

Thursday, December 4, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு 


மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.




Wednesday, December 3, 2014

நாலடியார் - நல்ல வழி இல்லை

நாலடியார் - நல்ல வழி இல்லை 


முதுமை நமக்கில்லை என்று நாம் இருக்கிறோம்.

அப்படியே வரும் என்று நினைத்தாலும், அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ணி வைத்து விட்டு, அப்புறம் அதையெல்லாம் செய்யலாம் என்று நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நேரத்தில் இப்படியேவா இருக்கப் போகிறோம் ?

படிக்க வேண்டும் என்று நினைத்தால் - கண் சரியாக இருக்காது.

யாரிடமாவது பேசலாம் என்றால் பேச்சு குழறும்.

சரி, படித்தவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றால் காது கேட்டால் தானே.

எனவே, இளமையிலேயே இது பற்றியெல்லாம் சிந்தித்து இப்போதே முடிவு எடுங்கள்.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள்

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தைகள் கோர்வையாய் வராது. வார்த்தைகளோடு எச்சிலும் வரும். பல் போன பின், சொல் தளரும். குரல் கம்மும்.

கோல்ஊன்றிச் = ஒரு இடத்திற்கு போக முடியாது. நடை எனபது பெரிய விஷயமாகப் போகும்.  கோல் துணையின்றி நடக்க முடியாது

சோர்ந்த நடையினராய்ப் = கொஞ்ச தூரம் நடந்தாலும் சோர்வு வரும்.

பல்கழன்று = பல் விழுந்து

பண்டம் பழிகாறும் = இந்த உடல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகும். "கிழத்துக்கு காது கேட்க்காது...நம்ம உயிரை வாங்குது..."

இல்செறிந்து = இல்லத்தில் இருந்து

காம நெறிபடருங் = காம, ஆசையின் வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே. கண் போன திசை எல்லாம் போனவர்களுக்கு 

ஏம நெறிபடரு மாறு.= மெய் வழியில் செல்லும் வகை

உடலில் வலிமை இருக்கும் போதே நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வோம்



Monday, December 1, 2014

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது 


 இந்தப் பிறவி இன்பமானதா ? துன்பமானதா ?

ஒட்டகம் முள் மரத்தின் இலைகளை  தின்னும்.அப்படி தின்னும் போது , அந்த முள்  மரத்தில் உள்ள முள் தைத்து , ஒட்டகத்தின் உதட்டில் இருந்து இரத்தம் வழியும். அப்படி வழிந்த இரத்தம் ஒட்டகத்தின் வாயில்  சென்று  சேரும். தன் இரத்தத்தை தான் அறியாத ஒட்டகம், இந்த முள் மரத்தின் இலைகள் மிக சுவையாக இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் உதடு கிழிபட தின்னும்.

துன்பத்தை இன்பமாக நினைத்தது அந்த முட்டாள் ஒட்டகம்.

இந்தப் பிறவிக்குத்தான் எத்தனை துன்பம் ? நோயால் துன்பம், நம் மீது அன்பு கொண்டவர்கள் நம்மை பிரிந்தால் துன்பம், வறுமை வந்தால் துன்பம், பழி வந்தால் துன்பம், நினைத்தது கிடைக்கவில்லை என்றால் துன்பம்..இப்படி துன்பத்திற்கு இருப்பிடமாகும் இந்தப் பிறவி.


இந்தப் பிறவி, துன்பத்தின் இருப்பிடம் என்று அறிந்த பெரியவர்களோடு மிக மிக நெருங்கி  பழக வேண்டும்.

பாடல்


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.


சீர் பிரித்த பின்

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.

பொருள்

அடைந்தார்ப் பிரிவும் = நம்மை அடைந்தவர்களின் பிரிவும். பெற்றோரை வெட்டு பிரிவது, காதலன் / காதலி பிரிவது, பிள்ளைகளை பிரிவது, நண்பர்களைப் பிரிவது, என்று பலவிதமான பிரிவு

அரும்பிணியும் = கொடுமையான நோயும்

 கேடும் = மற்ற பலவிதமான துன்பங்களும்

உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் = இந்த உடம்பை கொண்டவர்களுக்கு வருவதால்

தொடங்கிப் = தொடக்கம் முதல்

பிறப்பு இன்னாது என்று உணரும் = இந்த பிறப்பு துன்பம் தருவது என்று உணரும்

பேரறிவினாரை = பெரிய அறிவை கொண்டவர்களை


உறப் புணர்க அம்மா என் நெஞ்சு = மிக நெருங்கிப்  பழகுக, என் நெஞ்சே

கண்டு பிடியுங்கள்...அப்படி யாராவது இருக்கிறார்களா என்று. இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருங்கள்.

 .


தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்


இளையராஜாவின் இனிமையான இசையை கேட்டு மெய் மறக்கிறோம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்த்தானி சங்கீதம், என்று பலவிதமான இசைகளை கேட்கிறோம்.

இந்த இசையின்  பயன் என்ன ?

இந்த இசைகளை கேட்பதால் நமக்கு என்ன கிடைக்கிறது ?

சுந்தரர் சொல்கிறார், இசையும் அதன் பயனும் இறைவனே  என்கிறார்.

அது மட்டும் அல்ல, அவன் இனிய அமுதமாய் இருக்கிறான்.

இறைவனை, நண்பனாகக் கண்டவர் சுந்தரர்.

சுந்தரருக்கு ஏதோ ஒன்று அறியக் கிடைத்து இருக்கிறது. அதை நினைத்து நினைத்து உருகுகிறார். அது வாழ் நாள் பூராவும் இன்பம் தரக் கூடியது என்கிறார்.

பாடல்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை 
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் 
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. 

பொருள்

ஏழிசையாய் =  ஏழிசையாய்

இசைப்பயனாய் = இசையின் பயனாய்

இன்னமுதாய் = இனிய அமுதமாய்

என்னுடைய தோழனுமாய் = என்னுடைய நண்பனுமாய்

என்று = என்று

முன் நீ சொன்ன = முன்பு நீ சொன்ன 

பெருஞ் சொற்பொருளை = பெரிய சொல்லின் பொருளை

ஆழ நினைத்திடில் = ஆழமாக யோசித்தால்

அடியேன் = என்

அருங்கரணம் = அருமையான பொறிகள் எல்லாம்

கரைந்துகரைந் = கரைந்து கரைந்து

தூழியல் = ஊழிக் காலம் வரை

இன்புறுவது காண் = இன்பம் அடைவது காண்

உயர்கருணைப் பெருந்தகையே = உயர்ந்த கருணை கொண்ட பெரியவனே

அவர் அறிந்த அது என்னவாக இருக்கும் ?