Thursday, January 29, 2015

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம்

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம் 


பொதுவாக நம் தமிழ் இலக்கியமும் , குறிப்பாக அற நூல்களும் மற்றும் சமய இலக்கியங்களும் புலன்களை அடக்க வேண்டும், புலன்கள் போன வழியில் போகக் கூடாது, புலன்கள் வஞ்சனையை செய்யும், புலன்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்றெல்லாம் தான் சொல்கின்றன.

திருமூலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புலன்கள் இல்லாமல் எப்படி எதையும் அறிந்து கொள்வது ? இந்த உடல் முக்கியம், இந்த புலன்கள் முக்கியம் என்று சொல்கிறார்.

புலன்கள் மூலம் தான் அறியமுடியாத இறைவனை அறிய முடியும். எனவே புலன்களை போற்றுங்கள்  என்கிறார்.

உடம்பை  போற்றுகிறார்.

பாடல்


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

மிக எளிய பாடல். மிக மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

பொருள்


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்

 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு

சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை

கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்

காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு

புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும், அறியாமை என்ற இருளைப் போக்கி அறிவு ஒளி பெற உதவுவது இந்த புலன்கள்தான்.

கண் இல்லாமல் எப்படி படிப்பது ?

காது இல்லாமல் எப்படி கேட்டு அறிந்து கொள்வது ?

புலன்கள் இல்லாமல் நம்மால் அறிவைப் பெற முடியாது. 

அறிவைத்தரும் புலன்கள் இந்த உடலோடு சேர்ந்தவை என்பதால், இந்த  உடலும் புனிதமான  கோவிலுக்குச் சமமானது.

உடலுக்குக்குள் இருக்கும்  சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில்  கோவிலாக நாம் கருத நடத்த வேண்டும். 

எங்கே செய்கிறோம் ?

 புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, அளவுக்கு அதிகமாக உணவை அடைப்பது, கண்ட நேரம் தூங்குவது, தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது, அதை  சரியாக பராமரிப்பது கிடையாது. 

பாழடைந்த கோவில் போல வைத்திருக்கிறோம். 

எங்கே இறைவனைக் காண்பது  இதில்.

புலன்களை கூர்மைப் படுத்திக் கொண்டால், நுண்ணிய விஷயங்களை அறிய முடியும். 

இறை என்பது நுணுக்கமான விஷயம். அதை அறிய வேண்டும் என்றால் நம் புலன்கள் கூர்மையாக , மென்மையாக  இருக்க வேண்டும். 

புலன்கள் எப்படி போகத்திற்கு உதவுகிறதோ , அப்படியே யோகத்திற்கும் அது   உதவும் என்கிறார் கம்பரும்.

அதை நாளை பார்ப்போம்....

அதற்கு முன், எப்படி உடலையும், புலன்களையும் போற்றுவது என்று சிந்திப்போம். 


 

Monday, January 26, 2015

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும்

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும் 


புலன்கள் நம்மை துன்பத்தில் இழுத்து விட்டு  விடும். புலன்கள் நம்மை தீய வழியில் இட்டுச் செல்லக் கூடும். அப்படி புலன்கள் போன வழியில் போகாமல், அவற்றை கட்டுப் படுத்தி, அவை தவறான பாதையில் செல்ல முயலும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி என்றால், ஆமை எப்படி தனக்குத் துன்பம் வந்த போது புலன்களை உள்ளே இழுத்துக் கொள்கிறதோ அப்படி.

புலன்களை உள்ளே இழுத்துக் கொள்வதன் மூலம் அந்த புலன்கள் மட்டும் அல்ல உடல் பூராவும், உயிரும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும்.

பாடல்

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி 
னெழுமையு மேமாப் புடைத்து.

சீர் பிரித்த பின்

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றி 
எழுமையும் எமாம்பு உடைத்து 


பொருள்

ஒருமையுள் = ஒன்றனுக்குள் 

ஆமை போல் = ஆமையைப் போல

ஐந்து அடக்கல் ஆற்றி = ஐந்து புலன்களையும் அடக்கினால்

எழுமையும் = ஏழு பிறப்பிற்கும்

எமாம்பு உடைத்து = அரணாக அமையும்

ஒருமையுள் என்றால் என்ன ?


ஆமை அனைத்தையும் (நான்கு கால்களையும், தலையையும் ஆக மொத்தம்  ஐந்து ) தன் ஒரு ஓட்டினுக்குள் இழுத்துக் கொள்ளும். அது ஒரு ஒருமை.

ஆனால் பின்னால் வரும் எழுமைக்கும் என்பதோடு இது சேர மாட்டேன் என்கிறது.

ஒரு பிறவியில் புலன்களை அடக்கினால் அது பின் வரும் ஏழு பிறவிக்கும் நல்லது  செய்யும் என்பது பொருத்தமாக இருக்கிறது.

இரண்டையும் சேர்த்து சிந்தித்தால் இன்னும் சுவை கூடும்.

தனக்கு ஆபத்து வரும்போது ஆமை தன் அவயங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்.

அது போல புலன்களால் ஆபத்து வரும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிறவியில் மன மொழி மெய்யை அடக்கினால் அதன் பலன் ஏழு பிறவிக்கு  வரும் என்கிறார்.

முயன்று தான் பார்ப்போமே ?





Sunday, January 25, 2015

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள்

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள் 


வள்ளுவனும் சரி, கம்பனும் சரி சொல்லுக்கு மிக மிக முக்கியத்வம் தந்து இருக்கிறார்கள்.

கோபத்தோடு வந்த இலக்குவனைப் பார்த்து தாரை பேசுகிறாள். அவள் பேசியது  இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக இருந்தால் யார் தான் மயங்க மாட்டார்கள் ?

தாரை சொல்கிறாள் ..

"நீ சீற்றத்தோடு வருவதைக் கண்ட வானர சேனைகள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றன. உன் உள்ளத்தில் உள்ளது என்ன என்று எங்களிடம் சொல்லுவாய். நீ இராமனை விட்டு எப்போதும் பிரியமாட்டாயே, எப்படி இங்கு தனியாக வந்தாய் " என்று கேட்கிறாள்.

பாடல்

‘வெய்தின் நீ வருதல் நோக்கி,
    வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது,
    “திருவுளம் தரெித்தி “ என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன்
    அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை? ‘என்றாள்
    இசையினும் இனிய சொல்லாள்.

பொருள் 


‘வெய்தின் = சீற்றத்தோடு

நீ = நீ

வருதல் நோக்கி = வருவதைப் பார்த்து

வெருவி நின் = அஞ்சி நின்றனர் 

சேனை வீரர் = சேனை வீரர்

செய்திதான் உணர்கிலாது = செய்தியை உணராது

"திருவுளம் தெரித்தி  “ என்றார்; = உன் உள்ளத்தை தெரிவிக்க வேண்டும்

ஐய! = ஐயனே

நீ = நீ

ஆழிவேந்தன் = இராமனின்

அடியிணை = திருவடிகளை

பிரிகலாதாய் = பிரிய மாட்டாயே

எய்தியது என்னை?  = எப்படி வந்தாய் வந்தாய்

என்றாள் = என்றாள்

இசையினும் இனிய சொல்லாள் = இசையினும் இனிய சொல்லாள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,

1. முதலில் இராமனும் இலக்குவனும் சீதையை தனியே விட்டு விட்டு சென்றதால்,சீதையை இழந்தார்கள். இப்போது, இலக்குவன் இராமனை தனியாக விட்டு விட்டு வந்து இருக்கிறான். ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து  வந்து விட்டால் என்ன செய்வது என்று இலக்குவனிடம் கூறுகிறாள். அதாவது, நீ இப்படி வந்திருக்கக் கூடாது , ஓடு என்று  சொல்லமால் சொல்கிறாள்.

2. அவன் கோபத்தை மாற்றி, அவன் சிந்தனையை வேறு திசையில் திருப்புகிறாள்.

3. சீதையை தேட உதவி செய்வதாக சுக்ரீவன் சொல்லி இருக்கலாம். அது இந்த வானர வீரர்களுக்குத் தெரியாது. எனவே, நீ இவர்களின் செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே என்றும் கூறுகிறாள்.





திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்

திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்


அடக்கமுடைமை என்றால் ஏதோ எல்லா புலன் இன்பங்களையும் விடுத்து, சாமியாராகப் போய் விடுவதா ?

ஒன்றையுமே அனுபவிக்காமல் மரக் கட்டை போல இருப்பதா ? ஒரு கல்லைப் போல உணர்ச்சி இல்லாமல் இருப்பதா ?

ஒன்றுக்குமே ஆசைப் படாவிட்டால் வாழ்கை எப்படி நடக்கும் ?

வள்ளுவர் விடை  தருகிறார்.

பாடல்

நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

அது என்ன நிலையில் திரியாது ?

நாம் வாழ்வில் பல நிலைகளை கடந்து வருகிறோம்.

குழந்தையாக இருக்கும் நிலை, பின் மாணவன், பின் மணம் முடித்து இல்லற நிலை , பின் முதுமை நிலை என்று பல நிலைகள்.

அதே போல,  பிள்ளையாக,மாணவனாக, கணவனாக,  சகோதரனாக, தந்தையாக,  பாட்டனாக பல நிலை. பெண்கள் அதே போல்  மாணவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என்று பல நிலைகள்.

இப்படி நம் வாழ்வை உற்று நோக்கினால் நாம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

அந்த நிலைக்கு ஏற்ப வாழ  வேண்டும்.  அதில் இருந்து மாறுபடக் கூடாது.

ஆசிரியர் கேள்வி கேட்டால், அடக்கமாக இருக்கிறேன் என்று பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது.

எதிரி மன்னன் படை எடுத்து வந்தால் என் படை பலத்தை காட்டாமல் அடக்கமாக இருக்கிறேன் என்று ஒரு மன்னன் இருக்கக் கூடாது.

இல்லறத்தில் இருப்பவன் மனைவி மேல் ஆசை கொள்ளாமல் புலன்களை அடக்கி ஆளப் போகிறேன் என்று இருக்கக் கூடாது. பின் எதற்கு திருமணம் செய்வது ?

நிலையில் திரியாது இருக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாக அலையக் கூடாது. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொன்றை தேடி அலையக் கூடாது. அது அடக்கமின்மை.

உடலுக்கு வேண்டியவற்றை உண்ணத்தான் வேண்டும். அதற்கு மேல் உண்டால் அது அடக்கமின்மை.

அப்படி இருப்பவனின் தோற்றம் மலையை விடப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

ஏன் மலை ?

மலை தன்னிடம் எவ்வளவோ செல்வங்களைக் கொண்டிருந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்வது  கிடையாது. அமைதியாக  இருக்கும்.  கம்பீரமாக இருக்கும்.   அதைப் போல நிலையில் திரியாதவனின் நிலை இருக்கும் என்கிறார் வள்ளுவர்.



Tuesday, January 20, 2015

குறுந்தொகை - அவள் வருவாளா ?

குறுந்தொகை - அவள் வருவாளா ?



வாழ்க்கையின் சிக்கல்களை இலக்கியம் படம் பிடிக்கிறது. நமக்கு ஒரு சிக்கல் வரும் போது , இலக்கியத்தைப் படித்தால், அட இது ஒண்ணும் புதிதல்ல,  இதற்கு முன் எத்தனையோ பேர் இந்த சிக்கலை, இந்த துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்று தோன்றும். வாழ்கையின் மேல் உள்ள வெறுப்பு  குறையும்.

கணவனுக்கு வெளி நாடு செல்ல வேண்டும். சென்றால் நல்ல  சம்பளம். மேலும் பிற்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்புகள் வரும்.

ஆனால், மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முடியாத சிக்கல். விசா கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

என்ன செய்வது ? பெரிய சிக்கல்.

 அன்பான,அழகான மனைவியை விட்டு பிரியவும்  முடியவில்லை.

அதே  சமயம்,வெளி நாடு செல்லும் வாய்ப்பை உதறவும்  மனமில்லை.

தவிக்கிறான்  கிடந்து.

அவன் தவிப்பை இந்த பாடல் படம் பிடிக்கிறது.

பாடல்

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
கம்மா வரிவையும் வருமோ 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  

சங்கப் பாடல், கொஞ்சம் சீர்  பிரிப்போம்.

ஈதலும்  துய்த்தலும் இல்லோர்க்கு இல்லென   
செய் வினை கைம்மிக எண்ணுதி  அவ்வினைக்கு   
அம்மா அரிவையும் வருமோ ?
எம்மை உய்த்தியோ உரைத்திசி நெஞ்சே 

பொருள்

ஈதலும் = தானம் தருவதும்

துய்த்தலும் = அனுபவித்தலும்

இல்லோர்க்கு = இல்லை என்று தம்மிடம் வருவோர்க்கு

இல்லென = இல்லை என்று சொல்லாமல் தருவதும்
 
செய் வினை = செயல் செய்ய

கைம்மிக எண்ணுதி = அதைப் பற்றி மிகுதியாக எண்ணுவாய்

அவ்வினைக்கு = அந்த வினைக்கு   

அம்மா  = அம் + மா = அந்த பெரிய, அல்லது சிறந்த

அரிவையும் = பெண்ணும்

வருமோ ? = வருவாளோ

எம்மை உய்த்தியோ = என்னை மட்டும் அனுப்புகிறாயே

உரைத்திசி நெஞ்சே = சொல் என் நெஞ்சே

அவன், தன் நெஞ்சிடம்  சொல்கிறான்.

என்னை மட்டும் போ போ என்று  பிடித்துத் தள்ளுகிறாயே...அவளையும் வரச் சொல்  என்று சொல்கிறான்.

காதல் பாடல்  தான். பிரிவு சோகம் தான். அதிலும் அறத்தைப் பாடுகிறான்   தமிழ்  புலவன்.

பாடலை உற்று நோக்கினால் பாடலின் பின்னே உள்ள அறம் விளங்கும்.


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  


நாமெலாம் , நம் செலவு போக, எதிர் கால தேவை போக மீதியை கொஞ்சம் தானம்  செய்வோம். 

முதலில் நாம் அனுபவிப்போம், பின் தானம் செய்வோம். 

இந்தப் பாடலில் , முதலில், ஈதல் பின் துய்த்தலை பற்றி பேசுகிறான் புலவன். 

தானம் தந்தது போக மீதி உள்ளது நமக்கு என்று வாழ நினைத்த மனம். 

நம்மிடம் ஒரு பிச்சைகாரன் வந்து பிச்சை கேட்டால்,  "ஒண்ணும் இல்லை, அங்க போய்  கேளப்பா " என்று அவனை விட பெரிய பிச்சைகாரனாக நாம் மாறி விடுவோம். 

இங்கே, தலைவன் தன்னிடம் இல்லை என்று வருவோர்க்கு தானும் இல்லை என்று  சொல்லாமல் தர வேண்டுமே என்று நினைத்து பொருள் தேடச் செல்கிறான். 

பொருள் சேர்ப்பது தான் அனுபவிக்க இல்லை. ஈவதற்கும், இல்லை என்று யாசகம்  வேண்டி வருவோருக்கு தருவதற்கும். 

இதற்கு இடையில் மனைவியை விட்டு பிரிய மனம் இல்லை. 

தவிக்கிறான். 

இதுதான் வாழ்க்கை.

சுயநலத்துக்கும் பொது நலத்துக்கும் இடையில் கிடந்து ஊசலாடுகிறது....


திருக்குறள் - அடக்கமுடைமை - செறிவு அறிந்து சீர்மை பயக்கும்

திருக்குறள் - அடக்கமுடைமை - செறிவு அறிந்து சீர்மை பயக்கும் 


அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்.

அடக்கத்தை ஒரு பொருளாக நினைத்து காக்க வேண்டும் என்றார்.

அப்படி மனம், மெய், மொழிகளை அடக்கினால் என்ன கிடைக்கும் ? அதனால் என்ன இலாபம் ?  என்ற கேள்விகள் ஒரு  புறம்.

எப்படி புலன்களை, மனதை, மொழியை அடக்குவது ?

இந்த குறளில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை  தருகிறார்.

பாடல்

செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் = சிறந்த நன்மையை அளிக்கும்

அறிவு அறிந்து = அறிவு அறிந்து

ஆற்றின் = வழியில்

அடங்கப் பெறின் = அடங்கப் பெற்றால்

இந்த குறளுக்கும் , முன்பு சொன்ன கேள்விக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பது போலத் தெரியவில்லையா ?

உள்ளே இறங்கி சிந்திப்போம்.

அறிவு அறிந்து அப்படி  என்றால் என்ன ?

அறிவு எதை   அறிய வேண்டும் ?

எதை அடக்க வேண்டுமோ அதை அறிவு அறிய வேண்டும்.

முதலில் புலனடக்கத்தை எடுத்துக்  கொள்வோம்.

புலன்  இன்பங்கள் மூன்று காரணங்களால் நிகழ்கிறது.

ஒன்று, இன்பத்திற்கு   காரணமான புறப் பொருள்கள். உதாரணமாக ஒரு இனிப்பு பண்டம், நல்ல இசை, அழகான காட்சிகள்.

இரண்டாவது, அந்த புறப் பொருட்கள் தரும் இன்பம் - சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம் (அல்லது மணம் )

மூன்றாவது - அவற்றை அனுபவிக்க உதவும்  கரணங்கள் அதாவது புலன்கள். நாக்கு, கண், தோல், காது, மூக்கு என்பன.

இந்த மூன்றின் தொகுப்பாக புலன் இன்பம் நிகழ்கிறது. இதை அறிய வேண்டும்.

அது மட்டும் அல்ல,  ஏன் நமக்கு ஒரு குறிப்பிட்ட ஒன்றின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது என்று அறிய வேண்டும். உடம்புக்கு கெடுதல் என்று அறிந்தும் ஏன் அளவுக்கு அதிகமாக சிலர் உண்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள் ...ஏன் ?

அதை அறிய வேண்டும்.

 அறிந்த பின்,

"ஆற்றின்" = ஆற்றுதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள். புலன் இன்பத்தைப் பற்றி அறிந்தால் மட்டும் போதாது அதை எப்படி அடக்க வேண்டும் என்ற வழியை அறிய வேண்டும். சிலர், உணவு கட்டுபாட்டுடன் இருக்கப்  போகிறேன் என்று கொலை பட்டினி  கிடப்பார்கள். சில நாட்களில் அதை  தொடர முடியாமல் மீண்டும் பெரும் தீனி தின்னத் தொடங்கி  விடுவார்கள். பட்டினி கிடப்பது அல்ல "வழி". கொஞ்சமாக உண்ண வேண்டும். நேரத்துக்கு உண்ண வேண்டும். இப்படி நல்ல வழிகளை வகுத்துக் கொண்டு அந்த  பாதையில் போக வேண்டும்.




வழியை கண்டு பிடிச்சாச்சு...அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

அந்த வழியில் சென்று "அடங்கப் பெறின் "  மன மொழி மெய் அடங்கப் பெற்றால்.

செறிவு அறிந்து சீர்மை பயக்கும்.

சீர்மை என்றால் சிறப்பு.  சிறப்பைத் தரும். 

செறிவு அறிந்து என்றால் அதன்  தன்மை அறிந்து சீர்மை பயக்கும். எந்த அளவுக்கு  அடக்கம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பு  உண்டாகும்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் .

அறிவுதான் அனைத்து அடக்கத்திற்கும்  மூல வேர்.

அடக்கம் இல்லாதவன்  அறிவில்லாதவன் என்றே அர்த்தம் அல்லது அறிவு இருந்தும்  அதை பயன் படுத்தாதவன். 

அறிவின் மூலம், நம் புலன்கள், மனம், மற்றும் மொழி எப்படி வேலை செய்கிறது  என்று அறிந்து, அதன் தன்மை அறிந்து, சிறந்த வழியில் அதைக் அடக்கினால்  சிறப்புகள் வந்து சேரும். 


Sunday, January 18, 2015

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை 


நம்மிடம் யாராவது உங்களுடைய உடமைகள் என்னென்ன என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

நம்மிடம் இருக்கும் வீடு, நிலம், நகை, பங்குகள், கார், வங்கியில் உள்ள பணம், இவற்றைச் சொல்லுவோம்.

இவை நம் உடமைகளா ?

வள்ளுவர் வேறு சிலவற்றை உடமைகள் என்று சொல்கிறார்.

முதலில் அவர் சொல்லுவது அடக்கம் உடமை.

அதைத் தொடர்ந்து மேலும் சில உடமைகளை சொல்கிறார்....ஒவ்வென்றுக்கும் ஒரு அதிகாரம் வேறு வைத்து  இருக்கிறார்.


  1. அருளுடைமை 
  2. அறிவுடைமை 
  3. அன்புடைமை 
  4. ஆள்வினையுடைமை 
  5. ஊக்கமுடைமை 
  6. ஒழுக்கமுடைமை 
  7. நாணமுடைமை 
  8. பண்புடைமை 
  9. பொறையுடைமை 


அடக்கமுடமையுடன் சேர்த்து மொத்தம் பத்து சொத்துகள்.

யோசித்துப் பாருங்கள், இதில் உங்களிடம் எத்தனை சொத்துகள் இருக்கின்றன என்று.

இதில் முதலில் வந்த அடக்கமுடைமை அதிகாரத்தில்  அடக்கம் அமரருள் உய்க்கும் என்று  பார்த்தோம்.

அடக்கம் என்றால் ஏதோ ஒன்று எதிலோ வேறொன்றில் அடங்க வேண்டும்.

நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி பாதுகாப்போம் ? ஒரு விலை உயர்ந்த வைரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை எப்படி பாதுகாப்போம் ? அதன் மேல் எவ்வளவு கவனமாக இருப்போம் ? அடிக்கடி அது பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்போம் அல்லவா ?

கவனாமாக இல்லாவிட்டால் தொலைந்து போய் விடும் அல்லவா ?

அது போல அடக்கம் என்ற உடமையை பாதுகாக்க வேண்டும்  என்கிறார்.

பாடல்

காக்க பொருளா வடக்கத்தை யாக்க

மதனினூஉங் கில்லை யுயிர்க்கு

சீர் பிரித்த பின்

காக்க பொருளாக அடக்கத்தை ஆக்கம் 
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு 


பொருள்

காக்க = காபாற்றுக

பொருளாக = உயர்ந்த பொருளாக

அடக்கத்தை = அடக்கத்தை

ஆக்கம் = உயர்வு

அதனின் = அதைவிட

 ஊங்கு இல்லை உயிர்க்கு = உயிர்களுக்கு அதை விட ஒன்றும் இல்லை

இதை விட ஒரு படி மேலே போகிறார் வள்ளுவர்.

நம் குழந்தைகளை நாம் எப்படி பாதுகாப்போம் ?

அவர்களை சிறிது நேரம் காணவில்லை என்றாலும் தவித்துப் போவோம் அல்லவா ? அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் இரவு பகல் கண் விழித்து மருத்துவம் பார்ப்போம் அல்லவா.

குழந்தை காணாமல்  போய் விட்டால், போனால் போகிறது என்று இருப்போமோ ?

வள்ளுவர் பொருள் என்று கூறுவது குழந்தைகளை.

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில்,

 தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையால் வரும்.

தம் பொருள் என்பது தம் மக்கள் என்கிறார். 

பொருள் என்பது பிள்ளைகளையே குறிக்கும். அல்லது, அந்த காலத்தில் குறிக்கப் பட்டிருக்கிறது.

நாம் குழந்தைகளை எப்படி பாதுகாப்போமோ அப்படி அடக்கத்தை பாதுகாக்க வேண்டும் .

ஒரு நிமிடமும் நம் கவனத்தில் இருந்து பிரிந்து போய் விடக் கூடாது. 

பிள்ளைகள் ஆசைப் பட்டு கண்டதையும் கேக்கும். அதற்காக ஒரு பொறுப்புள்ள பெற்றோர் அதை வாங்கித் தருவார்களா ? மாட்டார்கள் அல்லவா. அது போல புலன்கள் கண்டதையும் கேக்கும். பிள்ளைகள் கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளாமல் எப்படி அவற்றை பாதுகாப்போமோ அது போல புலன்கள் கண்டதையும் அனுபவித்து கெட்டுப் போகாமால்  காக்க வேண்டும். 

கண்டித்து வளர்க்கவில்லை என்றால் பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். அது போல  புலன்களை கண்டித்து அடக்கி வைக்க வேண்டும். 

பிள்ளைகள் தீயனவற்றை பார்க்கக் கூடாது என்று நாம் அக்கறை கொள்வோம்...வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று உள்ள படங்களை பிள்ளைகளை  பார்க்க அனுமதிக்க மாட்டோம். அது போல, புலன்களை கண்டதையும் பார்க்க அனுமதிக்கக் கூடாது. 

பிள்ளைகள் தீயவர்களோடு பழகுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அது போல புலன்கள் தீய வழியில் செல்வதை அடக்க வேண்டும்.

சுருக்கமாக, பிள்ளையைப் பார்ப்பதைப் போல அடக்கத்தை காக்க வேண்டும். அடக்கம் என்பது மனம், வாக்கு செயல் வழி வெளிப்படுவதால் , அவற்றை பிள்ளைகளைப் போல   காக்க வேண்டும். 

எவ்வளவு ஆழமாக யோசித்து இருக்கிறார்கள் ?

 


Saturday, January 17, 2015

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை 


இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை இப்படி தெருவில் நடமாட விட்டிருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய ஆபத்து. 

இவளுடைய பெற்றோருக்கு ஆண்கள் மேல் என்ன பகையோ. இவள் இப்படி தெருவில் திரிந்தால் ஆண் பிள்ளைகளின் மனம் என்ன பாடு படும். இவளை அடைய எல்லோரும் முயல்வார்கள். எல்லோருக்குமா அவள் கிடைத்து விடுவாள் ? கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்....

சரி, பெற்றோர் தான் போகட்டும்...இந்த நந்தி வர்மன் இருக்கிறானே....குடிகளை காக்க வேண்டியது அவன் கடமை அல்லவா ? இவள் இப்படி ஊரில் திரிந்தால் ஆண்கள் பாதிக்கப் படுவார்களே. அவர்களை காக்கவேண்டியது மன்னனாகிய நந்தியின் கடமை அல்லவா ? இப்படி கடமை தவறிய மன்னனாக இருக்கிறானே என்று அந்த பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மனதை பறிகொடுத்த கவிஞன் பாடுகிறான் 

பாடல் 


அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
 புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
 நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்

 உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?

பொருள் 

அரிபயில் = அறிவு முற்றாத (இளைஞர்கள்) மத்தியில் 

நெடுநாட்டத் தஞ்சனம் = நீண்ட கண்களில் மையை 

முழுதூட்டிப் = முழுவதுமாக தீட்டி 

புரிகுழல் = முடியை சரி செய்து 

மடமானைப் = பேதை போன்ற இந்தப் பெண்ணை 

போதர விட்டாரால் = வெளியில் விட்டதால் 

நரபதி எனும் = மக்களின் தலைவன் என்ற 

நந்தி = நந்தி வர்மனின் 

நன்மயி லாபுரியில் = நல்ல நாட்டில் 


உருவுடை= அழகான 

இவள் தாயர்க் = இவளின் தாயார் 

குலகொடு பகை உண்டோ? = ஆண் குலத்தோடு பகை கொண்டவளோ ?



Friday, January 16, 2015

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் - பாகம் 2

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும்  - பாகம் 2


அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.

அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?

அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை  வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?

எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.

வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.


பாடல்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

சீர் பிரித்த பின்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்

அடக்கம்  = அடக்கமான குணமானது

அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்

அடங்காமை = அடங்காமை என்ற குணம்

ஆர் இருள் = அடர்ந்த இருளில்

உய்த்து விடும்.= சேர்த்து விடும்

மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.

சற்று ஆராய்ச்சி செய்வோம்.

எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?

அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

எதில் அடக்கம் வேண்டும் ?

மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.

மன அடக்கம்.

பேச்சில் அடக்கம்.

புலனடக்கம்.


மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.

மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி,  புரட்டு,பொய்,  என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.

புலன் அடக்கம்  - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில்  பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.

இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?

இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.

 
------------------------------------------------- பாகம் 2 ----------------------------------------------------------

சரி, அது என்ன "அமருருள் உய்க்கும்"

உய்க்கும் என்றால் கொண்டு சேர்க்கும் என்று பொருள்.

ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை போட்டால் அந்த ஆறு கட்டையை கடலில்  கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். சும்மா அந்த  ஆற்றில் கிடந்தால் போதும்.

மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகை வண்டி  நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்த கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்.

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில்   ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில்   சேர்த்து விடும்.

அதற்கு உய்க்கும் என்று பெயர்.

அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், அது உங்களை அமரர்   இருக்கும் இடமான தேவ லோகத்தில் கொண்டு சேர்த்து விடும்.

சரி, அடக்கம் இல்லை என்றால் என்ன ஆகும் ?

"ஆரிருள் உய்த்து விடும் "

அது என்ன ஆரிருள் ?

மிகுந்த இருள் . அடர்ந்த இருள்.

ஏன் ஆரிருள் என்று சொன்னார் ?

இருட்டில் இருப்பவனுக்கு  பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது.

அடக்கம் இல்லாதவன், புலன்கள் போன வழியில் போவான். அவனிடம் என்ன  இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது.

அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றை எல்லாம்  கவனிக்காமல் , வேறொன்றின் பின் செல்வான். அருகில் உள்ளது தெரியாது.

அவனுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாது. இருட்டு.

புலன் அடக்கம்   இல்லாதவன் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து,  சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பான்.

அடக்கம் இன்மை  இருட்டுக்குள் தள்ளி விடும்.

எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம்  என்று தெரியாது. கண் தெரியாத இருட்டு.

புலன் அடக்கம் இல்லாதவனைப் பார்த்தால்  தெரியும் , ஏதோ குருடன் போல தவறான  பாதையில் செல்வது தெரியும்.

மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது,  மது அருந்தக் கூடாது என்று,  ஆனால், கேட்க்காமல் நேரே அந்த கடைக்குத்தான் செல்வான்.

எனவே,

சிந்தித்துப் பாருங்கள்,  அடக்கம் எவ்வளவு உயர்ந்தது என்று. அடக்கம் இன்மை  எத்தனை துன்பங்களுக்கு காரணம்  என்று.

சாதாரண குறள் இல்லை. நீள யோசிக்க வேண்டிய குறள். வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய   குறள் .

Thursday, January 15, 2015

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும்

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் 


அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.

அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?

அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை  வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?

எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.

வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.


பாடல்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

சீர் பிரித்த பின்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்

அடக்கம்  = அடக்கமான குணமானது

அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்

அடங்காமை = அடங்காமை என்ற குணம்

ஆர் இருள் = அடர்ந்த இருளில்

உய்த்து விடும்.= சேர்த்து விடும்

மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.

சற்று ஆராய்ச்சி செய்வோம்.

எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?

அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

எதில் அடக்கம் வேண்டும் ?

மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.

மன அடக்கம்.

பேச்சில் அடக்கம்.

புலனடக்கம்.


மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.

மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி,  புரட்டு,பொய்,  என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.

புலன் அடக்கம்  - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில்  பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.

இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?

இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.

  


Monday, January 12, 2015

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே 


அச்சம். பயம்.

நல்லது செய்யவும் அச்சம். தீயதை விட்டு விலக அச்சம். உண்மையைத் தேட அச்சம்.

நாம் அச்சப் படாத ஒன்று உண்டா இந்த உலகில்.

அஞ்சி அஞ்சி சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை  என்றான் பாரதி. 

புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ள அச்சம். பழைய கருத்துகளை விட்டு விட அச்சம்.

இந்த பிறவியைக் கண்டு அச்சம். பிணி, மூப்பு, மரணம் இவற்றைக் கண்டு அச்சம்.

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் என்கிறார் மணிவாசகர்.

மேலும்  சொல்கிறார்.

நம்மிடம் இருந்து பொய் முதலில் சிறிதாகத் தோன்றும். நாளடைவில் அதுவே வளர்ந்து பெரிய மரமாகி விடும். விதை போல இருந்த ஒன்று மரம் போல மாறி விடும்.

பொய்யே வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி இருந்தால் உண்மையை எப்படி கண்டு உணர்வது ? பயப்படுகிறார் மணிவாசகர். 

என்ன செய்வது என்று தெரியாமல் , இறைவனை கேட்கிறார். இறைவனோ பேசாமல் இருக்கிறான். "நீயும் பேசாவிட்டால் நான் என்ன செய்வேன் " என்று வருந்துகிறார் இறைவனிடம். 

பாடல்

விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய்
இச்சைக் கானார் எல்லோரும் வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்நான் செய்கேன் பேசாயே.

பொருள்

விச்சுக் = வித்து என்பது விச்சு என்று ஆனது. வித்து என்றால் விதை

கேடு = அழிந்து.

பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய் = பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய். அதாவது, பொய் என்பது இந்த உலகத்தில் மறைந்து போய் விடக் கூடாது என்பதற்காக என்னை  அந்த பொய்யின் விதையாக வைத்து இருக்கிறாயா என்று கேட்கிறார்.  அதாவது, எல்லோரும் நல்லவர்களாகி விட்டார்கள். அதனால் இந்த உலகில் பொய் என்பது இல்லாமல் போய் விட்டது. நான் ஒருவன் மட்டும் அதன் விதை போல பொய்யை மீண்டும் மீண்டும்  தோற்றி வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

தன்னைத் தவிர மற்ற எல்லோரும் நல்லவர்கள் என்கிறார். என்ன ஒரு பணிவு.

இச்சைக் கானார் = உன்மீது ஆசைப் பட்டோர்

எல்லோரும் = எல்லோரும்

வந்துன் தாள்சேர்ந்தார் = வந்து உன் திருவடிகளை அடைந்து விட்டனர்

அச்சத் தாலே = பயத்தால்

ஆழ்ந்திடு கின்றேன் = மூழ்குகின்றேன்

ஆரூர் = திரு ஆரூர்

எம் = எம்முடைய

பிச்சைத் தேவா = மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கும் தலைவனே

என்நான் செய்கேன் = நான் என்ன செய்வேன்

பேசாயே. = நீ ஏதாவது பேசு

பொய்யை விடுத்து இறைவன் மேல் அன்பு கொள்ள வேண்டும்.


Sunday, January 11, 2015

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி 


நாலு வரிக்குள் காதலின் பிரிவை, தவிப்பை, ஏக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் இது.

தலைவன் , பொருள் தேடி தலைவியை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவனை எல்லோரும் பெருமையாக  பேசுகிறார்கள்.வலியவன், அறிவாளி என்று. இப்படி கட்டிய மனைவியை விட்டு பிரிந்து செல்பவன் பெரிய அறிவாளி என்றால், அவனை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் நாம் முட்டாளாகவே இருந்து விட்டு போவோம் என்று அலுத்து சலித்துக்  கொள்கிறாள்.

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து  
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்  
உரவோ ருரவோ ராக  
மடவ மாக மடந்தை நாமே. 

சீர் பிரித்த பின்

அருளும் அன்பும்  நீக்கித் துணை துறந்து  
பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின்   
உரவோர்  உரவோர் ஆக  
மடவம ஆக மடந்தை நாமே. 

பொருள்

அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

 நீக்கித் = நீங்கி

துணை துறந்து = துணையான என்னை துறந்து
 
பொருள் வயிற் = பொருள் வேண்டி

பிரிவோர் = பிரிந்து சென்றவர்

உரவோராயின் = பெரிய அறிவுடையவராயின்
 
உரவோர்  உரவோர் ஆக = அவர் பெரிய அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும்
 
மடவம்  ஆக மடந்தை நாமே.= அறிவற்ற மடந்தையரான நாம் மடந்தையாரகவே இருந்து விட்டு போவோம்

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் சில அர்த்தம் தோன்றும்.  இரசிக்கலாம்.

அன்பு என்பது நம்முடன் தொடர்புள்ளவர்களிடம்  வருவது.

அருள் என்பது தொடர்பு இல்லாதவர்களிடம் கூட வருவது.

நான் ஒரு பெண் என் மேல் அருள் கொண்டு  இருக்கலாம்.

அவரது மனைவி என்று என் மேல் அன்பு கொண்டு இருக்கலாம். 

இரண்டும் இல்லாமல் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்.

எதற்கு ?

பொருள் சேர்க்க.

குடும்பத்தை விட, பொருள் பெரிதாகப் போய் விட்டது அவருக்கு. 

அவரைப் போய் இந்த உலகம்   நல்லவன்,வல்லவன் என்று சொல்கிறது. 

அப்படிப்பட்ட உலகம் , அவரை போக வேண்டாம் என்று சொன்ன என்னை என்ன சொல்லும் ?

முட்டாள் என்று தானே சொல்லும். 

சொல்லி விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்து விட்டு போகிறேன் என்று நொந்து கூறுகிறாள் அவள். 

அவனும்  புரிந்து கொள்ளப்  போவதில்லை. அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்களும் அவனுக்கு பரிந்து கொண்டுதான்  பேசுவார்கள். எனக்கு என்று பேசுவதற்கு யாரும் இல்லை என்று அவள் தனிமையில்   புலம்புகிறாள்.

காலம் கடந்தும் அவள் சோகம் இன்றும் நம் மனதை ஏதோ செய்கிறது. 




Thursday, January 8, 2015

பெரிய புராணம் - அலகில் சோதியன்

பெரிய புராணம் - அலகில் சோதியன் 


இறைவன் இருக்கிறானா என்ற சர்ச்சை இருந்து கொண்டே  இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று நம்பிய பெரியவர்கள் அவனை சொல்லுவதற்கு படாத பாடு படுகிறார்கள்.

நாம் அறிவியல் படிக்கும் போது எதை ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவை கண்டு கொள்ள ஒரு அலகு (unit ) வேண்டும்.

நேரம் என்றால் நொடி, வினாடி,  நிமிடம்,மணி
தூரம் என்றால் மில்லி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்
எடை என்றால் கிராம், கிலோ கிராம்

இப்படி எதை எடுத்தாலும் அதற்கு என்று ஒரு அலகு உண்டு.

இறைவனை எப்படி அளந்து சொல்லுவது ?

இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, இன்ன நிறம், என்று ஒன்று இருந்தால் சொல்லி விடலாம்.

மனிதனின் அளவுக்குள் அடங்குபவனா அவன் ?

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை...

தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்லுகிறார்

"அலகில் சோதியன்" அலகு என்று ஒன்று இல்லாதவன். அவனை எந்த விதத்திலும் அளந்து சொல்ல முடியாது.


பாடல்

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அலகில்லாத ஒன்றை உங்களால் சிந்திக்க முடியுமா ?

எதை அளக்க முடியுமோ  அது இறை அல்ல.

சிலை, படம், இவை எல்லாம் அளந்து செய்தது.

அவன் அலகில் சோதியன்


Wednesday, January 7, 2015

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும்

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும் 




வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

கிரிகெட் விளையாட்டைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவன் அவுட் ஆனவுடன் அவனுக்கு பந்தைப் போட்டவன் என்னவெல்லாம் கோஷ்டி காண்பிப்பான் ? கையை மடக்குவதும், கத்துவதும் என்று ஏறக்குறைய எல்லோருமே அப்படித்தான் செய்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் கோல் அடித்தவன் செய்யும் அங்க சேஷ்டைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.

ஏன் அந்த மாதிரி செய்கிறார்கள் ?

வெற்றி அடையும் போது  உடல் அதை வெளிப் படுத்துகிறது.

கோபம் வந்தால் பல்லைக் கடிக்கிறோம்.

பயம் வந்தால் சுருண்டு கொள்கிறோம்.

மன நிலைக்கு தங்குந்தவாறு உடல் நிலை மாறு படுகிறது.

சந்தோஷமாக இருப்பவனையும்,  சோகமாக இருப்பவனையும் அவன் நடக்கும்  விதம், உட்காரும் விதம், அவன் பேசும் பேச்சு இவற்றைக் கொண்டு நாம்  தெரிந்து கொள்ள முடியும்.

யோக சாஸ்திரம் கண்டு சொன்ன மகத்தான உண்மை என்னவென்றால் எப்படி மன நிலை உடலை பாதிக்கிறதோ, அதே போல உடல் நிலை மனதைப் பாதிக்கும் என்று.

உதாரணமாக,

நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முதுகு நேராக இருக்கும், நம் மூச்சு வேகமாக இருக்கும்...

நாம் சோகமாக இருந்தால், முதுகு கூன் போடும், மூச்சு நீண்டதாக இருக்கும்.

இப்போது சற்று மாற்றிப் பார்ப்போம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது சற்று கூன் போட்டு அமருங்கள், நீண்ட மூச்சு விட்டுப்  பாருங்கள்.....சிறிது நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி பறந்து போய்விடும்....சோகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

அதே போல் சோகமாக இருக்கும் போது நேராக அமர்ந்து, வேக வேக மாக மூச்சு விட்டுப் பாருங்கள் ... சோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மன நிலையம், ஒரு உடலின் நிலையைப் பொறுத்து அமைகிறது.

ஒவ்வொரு உடல் நிலையும், ஒரு மன நிலையைப் பொறுத்து அமைகிறது.

உடலும் மனமும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

மனதை மாற்ற வேண்டுமா ? எப்போதும் மிகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? உடல்  நிலையை மாற்றுங்கள்...நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எப்படி இருக்கிறீர்கள்  என்று கவனித்துப் பாருங்கள். அப்படி செய்தால் நீங்கள் தானகவே  மகழ்ச்சி அடைவீர்கள்.

யோகம் சொல்வது இதைத்தான்.

உடலையும், உள்ளத்தையும் இணைப்பது யோகம். இவற்றை ஒன்று படுத்துவது  யோகம்.

சரி , அதற்கும் இந்த சிவ புராண பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?



Tuesday, January 6, 2015

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல்

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல் 


திருக்குறள் படித்த பின் பேசுவதற்கே பயமாக இருக்கிறது.

எதைப் பேச வேண்டும் ? எப்படி பேச வேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர். அதன் படி பார்த்தால் நாமெல்லாம் பேசவே முடியாது போலிருக்கிறது. இது வரை பேசியதை நினைத்து வெட்கமாகவும் இருக்கிறது.

பெரிய நலன்களை ஆராயும்  அறிவுள்ளவர்கள் ஒருபோதும் பெரிய பயனைத் தராத சொற்களை பேச மாட்டார்கள்.

பாடல்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்

அரும்பயன் = பெரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும்

அறிவினார் = அறிவு உள்ளவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்களைத்

இல்லாத = தராத

சொல். = சொற்களை

1. ஒரு சொல்லை சொல்வதற்கு முன், அந்த சொல்லினால் என்ன பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல வேண்டும். 

2. ஒரு சொல்லினால் கொஞ்சம் தான் பயன் விளையும் என்றால் இன்னும் நன்றாக  சிந்தித்து அதை விட சிறப்பாக எப்படி சொன்னால் பெரிய பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல  வேண்டும்.

3. ஒரு வேளை பெரிய பயன்களை தரும் சொற்களை சொல்ல முடியாவிட்டால் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நலம். "சொல்லார் பெறும் பயன் இல்லாத  சொல்" என்கிறார் வள்ளுவர். 

4. இன்னும் சிந்தித்தால், எவன் ஒருவன் பெரிய நன்மை பயக்கும் சொற்களை சொல்லவில்லையோ அவன் பெரிய அறிஞன் அல்ல. அவன் சொல்வதை நாம்  கேட்டு நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. பெரிய பயன்களை தரும் சொற்களை பேசுபவர்களை கண்டு அவர்கள் சொல்வதை கேட்க்க வேண்டும். 

5. வள வள என்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி பேசுபவர்களின் பேச்சை  கேட்டு நேரத்தை வீணடிக்கவும் கூடாது. 

6. பெறும் பயன் தரும் சொற்களை யார் பேசுவார்கள் என்றால், அரிய பயன்களைப் பற்றை ஆராய்ச்சி செய்பவர்கள் அப்படி பேசுவார்கள். அது என்ன அரிய  பயன் ? பரிமேல் அழகர் சொல்கிறார் அரிய பயன் என்றால் வீடு பேறு , முக்தி என்று. உங்களுக்கு அதில் உடன் பாடு இல்லை என்றால் நீண்ட இன்பம், அமைதி, சமாதானம், இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யார் பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்களோ  அவர்கள் பேசுவது நமக்கு பெரிய பயனைத் தரும். 

எனவே, 

பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், 
அப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்வதை கேளுங்கள், 
இரண்டும் முடியாவிட்டால், பேசாமல் இருங்கள். 





Monday, January 5, 2015

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம்

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம் 


கோபமாக வந்த இலக்குவனை வழி மறித்த தாரை பேசத் தொடங்குகிறாள்.

அவ்வளவு அருமையாகப் பேசுகிறாள். ஒவ்வொருவரும் அதை இரசித்து பின் அதை பயில வேண்டும். இப்படிப் பேசப் பழகினால் வாழ்க்கை மிக இன்பபமாக இருக்கும்.

பேசத் தெரியாமல் தானே இவ்வளவு துன்பப் படுகிறோம்.

முதலில் கோபமாக வந்த இலக்குவனின் கோபத்தை மாற்ற வேண்டும். பின், அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். பின், அவன் நினைத்து வந்ததை  அவனே செய்ய முடியாமல் செய்ய வேண்டும்.

நாமாக இருந்தால் என்ன சொல்லி இருப்போம்

"என்ன லக்ஷ்மணா ரொம்ப கோபமாக இருக்கிறாய் போலிருக்கிறது. என்ன விஷயம் சொல்லு " என்று ஆரம்பித்து இருப்போம்.

உடனே அவனும், இன்னும் சூடாகி "என்ன விஷயம்னு உனக்குத் தெரியாதா, தெரியாத  மாதிரி கேட்கிறாய் " என்று விவாதம் வலுத்து இருக்கும்.


தாரை அந்த வழியில் செல்லவில்லை. அவள், அவனின் கோபத்தை ஒரு பொருளாகவே மதிக்கவில்லை. அவனைப்  புகழ்கிறாள்.  

"நாங்கள் எவ்வளவோ காலம் செய்த தவத்தின் பயனாக நீ இங்கு வந்து இருக்கிறாய். இந்திரர்களுக்கும் எட்டாத செல்வம் உன்னை காணக் கிடைப்பது.  உன்  பாதம் எங்கள் மனையில் பட நாங்கள் என்ன வரம் பெற்றிருக்க வேண்டும். உன்னால் நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இதுவரை செய்த வினை எல்லாம் தீர்ந்தது. இதை விட வாழக்கைக்கு வேறு என்ன வேண்டும் "

பாடல்

'அந்தம் இல் காலம் நோற்ற
      ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோரால் எய்தல்
      ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம்
     மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி
      வேறு இதனின் உண்டோ?

பொருள்

'அந்தம் இல் = இறுதி இல்லாத. மிக நீண்ட.

காலம் = காலம்

நோற்ற ஆற்றல் = செய்த தவத்தால்

உண்டாயின் அன்றி = வந்ததே இல்லாமல்

இந்திரன் முதலினோரால் = இந்திரன் உள்ளிட்ட தேவர்களால்

எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே? = அடைய முடியாத ஒன்று அல்லவா இது

மைந்த! = மைந்தனே

நின் பாதம் கொண்டு = உன் பாதம்

எம் மனை வரப் பெற்று = எங்கள் வீட்டிற்கு வந்ததால்

வாழ்ந்தேம்; = நாங்கள் வாழ்வு அடைந்தோம்

உய்ந்தனம்; = எங்களுக்கு ஒரு வழி பிறந்தது

வினையும் தீர்ந்தேம்; = எங்கள் தீ வினைகள் யாவும் சென்று மறைந்தன

உறுதி வேறு இதனின் உண்டோ? = இதை விட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்.


நடுவில் , மைந்தனே என்று அவனை அழைக்கிறாள். அப்படி என்றால் நான் உனக்கு அம்மா  மாதிரி என்று சொல்லி விடுகிறாள். 

"நீ எவ்வளவு பெரிய ஆள். நீ வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா ?   நீ தான்  எங்கள் வாழ்வே " என்று அவன் வரவை நல்வரவாக்குகிறாள் தாரை. 

இனி, அவன் என்ன செய்ய முடியும் ?

அது மட்டும் அல்ல, இலக்குவனை அந்த இடத்தில் இருந்து ஓட ஓட விரட்டுகிறாள் தாரை  ...தன் சொல்லால். 

தான் வந்ததே தவறு என்று அவனை நினைக்கும் படி செய்கிறாள்....

எப்படி ?


Saturday, January 3, 2015

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.



அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம். 



==================== பாகம் 3 ============================================

பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்

அது ஒரு பெரிய மரம். பல கிளைகளைக் கொண்டது. கடற் கரையில் அமைந்த  மரம். மரத்தடியில் அமர்ந்து பார்த்தால் கடல் தெரியும். நீண்ட மணல் பரப்பு.  அதைத் தாண்டி  கடல். 

அந்த மரத்தடியில் அமர்ந்து அவர்கள் காதல் புரிந்தார்கள். 

பசு நனை = பசுமையான அரும்புகளைக் கொண்ட 
ஞாழற் = ஒரு வகை மரம் 
பல் சினை = பல கிளைகள் 
ஒரு சிறை = அதில் ஒரு கிளையின் கீழே 
புது நலன் இழந்த = புதியதாய் பெற்ற அழகை (நலன்) இழந்த. ஒரு பெண் பருவம்  அடையும் போது புது அழகைப் பெறுகிறாள். உடலில் சில மாற்றங்கள், மனதில் ஒரு சிலிர்ப்பு, ஒரு புன்னகை...அந்த அழகை இழந்தாள் என்று  சொல்லி நிறுத்துகிறது கவிதை. 

ஏன் இழந்தாள் , எப்படி இழந்தாள் என்று சொல்லவில்லை. அங்குதான் கவிதை நிற்கிறது. 

நலனை இழந்தது மட்டும் அல்ல, புலம்புகிறாள். இழந்ததை நினைத்து புலம்புகிறாள். 

முதலில் - இவளே என்று அருகில் இருந்த பெண்ணைச் சுட்டிக் காட்டி பாடல் ஆரம்பித்தது. 

அடுத்து, அருகில் இருக்கும் மரத்தைக் காட்டியது. 

அடுத்து, 


உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 

உது என்ற சுட்டுச் சொல். அது, இது, உது. அருகிலும் இல்லை, தூரத்திலும் இல்லை, இரண்டுக்கும் நடுவில்.  "உது".

உதுக் காண் = அதைப் பார் (உதைப் பார் என்று சொல்ல வேண்டும் )

எய்ய = எய்யாமல், மறைந்து விடாமல், மறந்து போய் விடாதே. நீ எப்போதும் வேண்டும். எய்ய என்றால் அடைய. 

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

 என்பார் மணிவாசகர் 

 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

உள்ளல் வேண்டும் = நினைக்க வேண்டும். 



 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 


நிலவும் இருளும் போல . நல்லதும் கெட்டதும் எங்கும் இருக்கும். அவளிடம் சிறு  குறைகள் இருக்கலாம். உன்னிடமும் சிறு சிறு குறைகள் இருக்கலாம். நிலவும்  இருளும் போல இருக்கிறது எங்கள் ஊர் என்கிறாள். அது ஊருக்கு மட்டும் சொன்னது அல்ல.  

புலவு திரை  = மாமிச மணம் வீசும் கரை. மீனும், நண்டும் இறந்து கிடக்கும். அதனால்  அவற்றின் உடலில் இருந்து வாடை வீசும்.  தலைவியின் சோகத்தை  விளக்குகிறாள் தோழி. நிலவு போல பளிச்சென்று இருக்கும் கடற்கரைதான்  என்றாலும், இப்போது மாமிச மணம் வீசுகிறது. 

கடலும் கானமும் = கடலும், அதை அடுத்த கரையும். 

மடல் தாழ் பெண்ணை = தாழ்ந்த மடல்களைக் கொண்ட பனை மரங்கள்.

பனை மரம் உயர்ந்து வளரும்.  ஆனால், மடல் தாழ்ந்த பனை மரம் என்கிறாள். தலைவி  எவ்வளவுதான் பெரியவளாக இருந்தாலும், உன்னிடம் வரும்போது எப்படி இருப்பாள் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இப்படி நாங்கள் வந்து உன்னிடம் பேசுவதால், ஏதோ நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று  நினைத்து விடாதே. 

சிறு நல் ஊரே = சின்ன ஊர் என்றாலும், நல்ல ஊர் எங்கள் ஊர். 

 

Friday, January 2, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே



 எத்தனையோ மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், மடிகிறார்கள். எல்லோரும் ஒரு ஆழ்வாரகவோ, நாயன்மாரகவோ, எசுவாகவோ, புத்தராகவோ ஆக முடிவதில்லை.

ஏன் ?

ஒரு சிலருக்குத்தான் விதித்து இருக்கிறதா ?

மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?

எல்லோரும் சுவர்க்கம் போக முடியுமா ?

முடியும் என்கிறார் நம்மாழ்வார்.

அது மட்டும் அல்ல, நீங்கள் வைகுண்டம் போக வேண்டியது உங்கள் விதி.  போகாமல் இருப்பது விதிவிலக்கு. நாம் எல்லோரும் கட்டாயம் வைகுண்டம் போவோம்.

அவர் போனார். போன போது என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறார். நீங்களும் போகலாம் என்றும் கூறுகிறார்.

பாசுரம்

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.  

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.

அது அவருடைய பரந்த மனத்தைக் காட்டுகிறது. மக்கள் மேல் அவர் கொண்ட அன்பை வெளிப் படுத்துகிறது.

இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

வைணவ உரை   எழுதிய பெரியவர்கள் இந்த பாடலுக்கு சற்று வேறு  விதமாக பொருள் சொல்லி இருக்கிறார்கள்.  அதை கீழே தந்திருக்கிறேன். அதையும் படியுங்கள்.


 -அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர். அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!

“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது. இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.



இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து

இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து 


தன் தோழிகளுடன் தாரை இலக்குவனை சந்திக்க வருகிறாள். அவர்களை கண்டு இலக்குவன் தயங்கி, முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறான்.

மாமியார்கள் நடுவில் நின்ற மருமகனைப் போல வெட்கப்பட்டு நின்றான் என்றான் கம்பன்.

ஒரு புறம் இலக்குவன் தயங்கி, நாணி நிற்கிறான்.

மறுபுறம், தாரை அவனை நேரில் பார்க்க நாணி தோழிகள் கூட்டத்தின் நடுவில் நிற்கிறாள். தோழிகளை விலக்கிக் கொண்டு வருகிறாள்.

பாடல்

தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.

பொருள்


தாமரை வதனம் சாய்த்து = தாமரை போன்ற முகத்தை சாய்த்து

தனு = வில்லை

நெடுந் தரையின் ஊன்றி = நீண்ட தரையின் மேல் ஊன்றி. ஒரு support -க்கு.

மாமியர் குழுவின் = மாமியார்கள் குழுவின் முன்

வந்தான் ஆம் என = வந்ததைப் போல

மைந்தன் நிற்ப = இலக்குவன் நிற்க

பூமியில் = பூமியின் மேல்

அணங்கு அனார்தம் = வானுலகப் பெண்களைப் போன்ற பெண்களின்

பொது இடைப் புகுந்து = நடுவில் இருந்து

பொன் தோள் = பொன் போன்ற தோள்களை கொண்ட

தூமன = தூமையான மனத்தைக் கொண்ட

நெடுங்கண் தாரை = நீண்ட கண்களைக் கொண்ட தாரை 

நடுங்குவாள், = நடுங்கிக் கொண்டு

இனைய சொன்னாள் = இவற்றைச் சொன்னாள்.



Thursday, January 1, 2015

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி




தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி.

தில்லையுள் கூத்தனே = இந்த உலகம் அலைந்து கொண்டே இருக்கிறது. கூத்தாடிக் கொண்டிருக்கிறது. சலனம் இல்லாத ஒன்று இல்லவே இல்லை. எலெக்ட்ரான், ப்ரோடான் என்று அனைத்து துகள்களும் சுழன்று கொண்டே இருக்கின்றன. கிரகங்கள், பால் வெளி, கலக்சி (galaxy ) என்று அனைத்தும் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

சிவனின் வடிவைப் பார்த்தால்  தெரியும். சுழன்று ஆடும் போது ஒரு புகைப் படம் பிடித்த  மாதிரி இருக்கும். ஒரு frame அப்படியே உறைந்த மாதிரியான தோற்றம்.

ஏன் இந்த  உலகம் சுழன்று கொண்டே  இருக்கிறது ? ஏன் இந்த துகள்கள் சுழன்று கொண்டே  இருக்கின்றன. ஒரு இடத்தில் நிலையாய் நின்றால் என்ன ?

இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நுரையீரல் சுருங்கி விரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

நின்று போனால் உயிர்ப்பு நின்று போகும்.

உயிராய், இயக்கமாய் இருப்பவன் அவன்.

சுழற்சி, இயக்கம் இறை தத்துவம்.

தென் பாண்டி நாட்டானே .

தில்லையுள் கூத்தனே என்றார் முதலில். அடுத்து தென் பாண்டி நாட்டானே. பாண்டிய  நாட்டில் உள்ளவனே என்கிறார்.

அங்கும் இருப்பான். இங்கும் இருப்பான்.

அல்லல் பிறவி அறுப்பானே = இந்தப் பிறவி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது....துன்பம் நிறைந்த பிறவி இது.  சங்கிலித் தொடர் போல. அந்தத் தொடரை அறுப்பவன் அவன்.

ஓம் என்று சொல்லுவதற்கு அரியவன்.

சொல்லி = சொல்ல முடியாவிட்டாலும், எப்படியாவது சொல்லி.

திருவடிக்கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் = இதுவரை  சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்ல வில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் தெரியுமா ?

சிவபுரத்தி னுள்ளார் = சிவ புரம் செல்வார்கள். சிவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். 

சிவனடிக்கீழ்ப் = அங்கே சென்று, அவனின் திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. = எல்லோரும் போற்றும் படி இருப்பார்கள்.

எல்லோரும் போற்றும் படி, சிவபுரம் சென்று, சிவனின் அடியின் கீழ் இருப்பார்கள்.

சிவ புராணம்  முற்றும்....அதாவது என் உரை முற்றும். சிவ புராணத்திற்கு உரை சொல்லி  முடியாது.

திருவாசகத்திற்கு  பொருள் என்ன என்று மாணிக்க வாசகரிடமே கேட்டார்கள்.

இதுதான் பொருள் என்று இறைவனின் திருவடியைக் காட்டிவிட்டு  அதில் அவர் மறைந்து விட்டார்   என்று ஒரு வரலாறு உண்டு.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் .....உணர்ந்து பாருங்கள்....
நாவில் தித்திக்கும்  திருவாசகம்.

திருவாசகம் எனும் தேன் என்பார் வள்ளலார்.

நன்றி . வணக்கம்.

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 2

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.

அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம்.