Thursday, September 28, 2023

நள வெண்பா - முன்செல் அடி

நள வெண்பா - முன்செல் அடி 


இறைவன் எப்படா, யாருடா நம்மை உதவிக்கு கூப்பிடுவார்கள் என்று காத்து இருப்பானாம். 


கூப்பிட்டவுடன் ஓடிச் சென்று உதவி செய்ய வேண்டுமே என்று. 


கூப்பிட்ட பின், இதோ வருகிறேன் என்று எழுந்து, முகம் கை கால் கழுவி, உடை மாற்றி, வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் ஆபத்து பெரிதாகி துன்பம் அதிகரித்து விடலாம் அல்லவா?  


தீயணைக்கும் படை எந்நேரமும் தயாராக இருப்பது போல, இறைவன் தயாராக இருப்பானாம். 


புகழேந்தி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 


கூப்பிட பின் சென்று உதவி செய்வது என்ன பெரிய காரியம். சாதாரண மனிதர்கள் கூடச் செய்வார்கள். அவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லையா?


கூப்பிடுவதற்கு முன்னே செல்வானாம். 


முதலிலேயே கிளம்பி விடுவான். இன்னாருக்கு, இந்த இடத்தில் உதவி தேவை என்று அங்கே செல்ல ஆரம்பித்து விடுவான். அவர்களுகுக் கூடத் தெரியாது, உதவி தேவைப்படும் என்று. 


ஆபத்து,உதவி என்று கூப்பிட்டவுடன், உடனே அங்கு வந்து நிப்பான். 


முதலை காலைக் கவ்வியபோது, கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அலறியபோது, பெருமாள் அங்கு வந்து அதைக் காப்பாற்றினார். யானை கூப்பிட்டபின் வைகுந்தத்தில் இருந்து கிளம்பினால், என்று வந்து சேர்வது? அதற்குள் முதலை அந்த யானையை கொன்றுவிடாதா?


பாடல் 


 முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்

செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்

புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்

அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_28.html


(pl click the above link to continue reading)


முந்தை = முந்தைய, பழைய 


மறைநூல் =  வேத நூல்களின் 


முடியெனலாம் = முடிவான அர்த்தம் என்று சொல்லலாம் 


 தண் = தண்மையான , குளிர்ச்சியான 


குருகூர்ச் = திருக்குருகூர் என்ற தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச்செய்த 

 

செந்தமிழ் = செந்தமிழ் 


வேத  = வேதமான பிரபந்தத்தின் 


சிரமெனலாம் = தலை என்று கூறலாம் 


 நந்தும் = துன்பத்தில் ஆட்பட்ட, ஆபத்தில் இருந்த 


புழைக்கைக்கும்  = யானைக்கும் (புழை = குழாய், குழாய் போன்ற கையை உடைய) 


நேயப் = அன்பு கொண்ட 


பொதுவர் = ஆயர் குல 


மகளிர்க்கும் = பெண்களுக்கும் 


அழைக்கைக்கு = அழைப்பதற்கு 


 முன் = முன் 


செல் அடி = சென்ற திருவடிகள் 


திருமாலின் திருவடிகளை நான்கு விதமாக சிறப்பிக்கிறார்.


வேதத்தின் முடிவு 

பிரபபந்தத்தின் தலை 

யானைக்கும் 

ஆயர் குல பெண்களுக்கும் அழைப்பதற்கு முன்சென்ற 


திருவடி என்று. 


மறை நூல் = மறைவாக இருக்கும் நூல். மிக நுண்ணிய பொருள் கொண்டது. எளிதில் விளங்காது. பொருள் மறைந்து இருக்கும். எனவே மறை நூல். 


அவ்வளவு உயர்ந்த திருவடி யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் கூப்பிடு முன்னே ஓடிச் சென்றது. 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய் "


என்பார் மணிவாசகர். 


அவ்வளவு பெரிய இறைவன், இவ்வளவு எளிமையாக இருக்கிறான் என்றவாறு. 


இனிமையான அர்த்தம். அழகான பாடல் வடிவம். 


பால் பாயாசம் சாப்பிடும் போது  வாயில் சிக்கும்  நெய்யில் வறுத்த முந்திரி மாதிரி அப்படி ஒரு சுவை. 


 

Sunday, September 24, 2023

திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம்

 திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம் 


ஊருக்கு நடுவே ஒரு நல்ல மா மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோடை காலத்தில் அந்த மரத்தில் மிக சுவையான பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அந்த மரம் யாருக்கும் சொந்தமானது அல்ல. யார் வேண்டுமானாலும் அந்தப் பழத்தை பறித்து சுவைக்கலாம் என்றால் எப்படி இருக்கும்?


எல்லோரும் எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று அந்தப் பழங்களை பறித்து உண்டு இன்புறுவார்கள் அல்லவா? 


அது போல 


ஒப்புரவு அறிந்தவனின் செல்வமும் எல்லோருக்கும் பயன் தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_24.html


(pl click the above link to continue reading)



பயன்மரம் = பயன் தரக்கூடிய மரம் 


உள்ளூர்ப் = ஊரின் உள்ளே 


பழுத்தற்றால் = பழுத்து இருந்தது போல 


 செல்வம் = செல்வமானது 


நயனுடையான் = ஒப்புரவு செய்பவன் 


கண் = இடத்தில் 


படின் = இருக்குமானால் 


இது என்ன குறள்? புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தின் பழங்களை போகிறவன் வருகிறவன் எல்லாம் பறித்துக் கொண்டு போவது போல, ஒப்புரவு செய்பவனின் செல்வம் என்றால் என்ன அர்த்தம். யார் வேண்டுமானாலும் அவன் செல்வத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்கிறாரா வள்ளுவர்? அது சரியா?  கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறையில் இது எப்படி சாத்தியப்படும் என்று நமக்கு சந்தேகம் வரலாம். 


உரை ஆசிரியர்கள் இந்தக் குறளை பெரிதாக உரை செய்யவில்லை. நாமே சிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டா இருக்க முடியும்?


பழ மரம் என்று ஏன் சொன்னார்?  மரம் பழம் தரும். எல்லோரும் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள்.  அப்புறம் என்ன ஆகும்?  அவ்வளவுதானா? இல்லை, அடுத்த வருடம் மீண்டும் அதே அளவு பழங்கள் தோன்றும். கொடுப்பதால் யாரும் குறைந்து விடமாட்டார்கள். இறைக்கும் கிணறு ஊறும் என்பது போல, கொடுக்க கொடுக்க மேலும் வரும். பயப்படாதே என்று வள்ளுவர் சொல்கிறாரோ?


மரத்தில் இருந்து மக்கள் பழத்தைத் தான் எடுப்பார்கள். பழம் தருகிறதே என்று வேரோடு யாரும் பிடுங்கிக் கொண்டு போய் விடுவதில்லை. அல்லது கிளையை வெட்டுவோம், இலையை வெட்டுவோம் என்று ஆரம்பிப்பது இல்லை. பழம் என்பது மரத்தின் அதிகப்படி.  தன் தேவைக்கு போக மீதியைத்தான் அந்த மரம் பழமாக மாற்றி வைக்கிறது. 


மேலும், பழம் தரும் மரம் என்றால் மக்கள் அதை பாதுகாப்பார்கள். யாரும் வெட்டி விடாமல் வேலி போட்டு காவல் செய்வார்கள். அடுத்த வருடமும் பழம் வேண்டுமே என்று மரத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். அதுவே ஊருக்கு நடுவில் ஒரு முள் மரம் அல்லது விஷ மரமாக இருந்தால் என்ன செய்வார்கள்? முதல் காரியமாக அதை வெட்டி விடுவார்கள். எனவே, ஒப்புரவு என்பது ஊருக்கு மட்டும் அல்ல, தனக்கும் நல்லது என்றும் பொருள் கொள்ளலாம். 


மேலும், பழத்தை பறித்துக் கொண்டு செல்பவர்கள், அதை உண்ட பின் அதன் விதையை தூர எறிந்து விடுவார்கள். எங்கோ விழுந்த விதை, அங்கு முளைக்கும். அது போல, ஒருவன் செய்யும் உதவி, பின் வரும் அவன் தலைமுறைக்கும் உதவி செய்யும். 


"அந்த காலத்தில உங்க அப்பா, தாத்தா எல்லாம் எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க.." என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


"உங்க அண்ணன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சு இருக்கார்...உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா" என்று எங்கோ செய்த உதவி, வேறு எங்கோ சென்று பலன் தருவதை நாம் கேட்டு இருக்கிறோம். 


மேலும், வள்ளுவர் பயன் தரும் மரம் என்றுதான் கூறி இருக்கிறார். பழம் தரும் மரம் என்று சொல்லவில்லை. பயன் என்றால் நிழல் தரும் மரமாகக் கூட இருக்கலாம். ஊருக்கு நடுவில்  ஒரு நிழல் மரம் இருந்தால், மக்கள் அதன் நிழலில் இளைப்பாறுவார்கள்.  அதன் கீழே அமர்ந்து உணவு உண்ணலாம், நீர் அருந்தலாம், பின் மீதி உள்ளதை அந்த மரத்தின் அடியில் கொட்டி விட்டுப் போவார்கள். அது மரத்துக்கு உரமாக பயன்படும். இப்படி ஊருக்கு நல்லது செய்வதன் மூலம், மரம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறது. 


குறளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். தோண்டி நாம் தான் எடுக்க வேண்டும். 






Friday, September 8, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன் 


ஏதோ ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்கிறோம். கடைக்காரர் ஒரு விலை சொல்கிறார். அது அதிகம் போலத் தெரிகிறது. நாலு கடையில் விசாரித்து, எங்கே மலிவாக இருக்கிறதோ அங்கே வாங்குகிறோம். 


ஏன்?


அதிக விலை கொடுத்து வாங்கினால் என்ன?


அது முட்டாள்தனம் அல்லவா. எதற்காக ஒரே பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்?  அது அறிவான செயல் அல்லவே?


ஒரு வேலை செய்கிறோம் என்றால் அதனால் அதிக பட்ச பலன் என்ன என்று அறிந்து அதைச் செய்ய வேண்டும். அது தானே புத்திசாலித்தனம்.


நாம் செய்யும் வேலைக்கு ஒரு நிறுவனத்தில் மாதம் ஒரு தொகை சம்பளமாக கொடுக்கிறார்கள். அதே வேலைக்கு இன்னொரு இடத்தில் மூன்று மடங்கு சம்பளம் தருகிறார்கள் என்றால் அந்த புது இடத்துக்கு போவதுதானே புத்திசாலித்தனம்?


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


உன்னிடம் செல்வம் இருக்கிறது. அதை நீ உனக்காகவும், உன் குடும்பத்துக்கும் செல்வழிக்கிறாய். மீதம் உள்ளதை சேமித்து வைகிறாய்.


அந்த செல்வத்தின் உச்ச பட்ச பயன்பாடு அதுதானா? அதை விட சிறப்பாக அந்த செல்வத்தை பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால் அது என்ன?


பாடல் 


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_8.html


(pl click the above link to continue reading)



ஊருணி - ஊர் உண்ணுகின்ற 


நீர் = நீர், குளம் 


நிறைந் தற்றே = நிறைந்தது போல 


உலகவாம் = உலகு + அவாம்  = உலக நடை, உலக வழக்கு 


பேரறி வாளன் திரு = பெரிய அறிவுடையவன் இடம் இருக்கும் செல்வம் 


ஊர் குடிக்க பயன்படும் குளம் நிறைந்து இருந்தால் அது எப்படி எல்லோருடைய தாகத்தையும் போக்கி நலம் தருமோ, அது போல, பெரிய அறிவுடையவனிடம் அமைந்த செல்வம்.


செல்வத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று இங்கே எங்கே வந்தது?


குளம் நிறைந்தது போல ஊர் பெரியவரிடம் நிறைந்த செல்வம், அரசனிடம் நிறைந்த செல்வம், சான்றோரிடம் நிறைந்த செல்வம் என்று சொல்லி இருக்கலாம். மாறாக, பேரறிவாளனிடம் அமைந்த திரு என்று ஏன் சொல்ல வேண்டும். 


மற்றவர்களிடம் செல்வம் சேரும். ஆனால், அது ஊருக்கு பயன்படாது. சிலர், சொந்த பிள்ளைகளுக்கே தர மாட்டேன் என்கிறார்கள், உடன் பிறப்பு, பெற்றோருக்கு தர மாட்டேன் என்கிறார்கள். அண்ணன் தம்பிகள் நீதி மன்ற வாசலை மிதிக்கிறார்கள். 


நான் இப்படி சிந்தித்துப் பார்க்கிறேன்.


அறிவில்லாதவன் - தன் செல்வத்தை தனக்கு கூட செலவழிக்க மாட்டான். எதிர் காலத்துக்கு வேண்டும் என்று பயந்து பயந்து சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் துன்பப் படுவான். 


அறிவுள்ளவன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும் செலவழிப்பான். 


பேரறிவாளன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் செலவழிப்பான். 


இதை சற்று வேறு விதமாகவும் யோசிக்கலாம்.


அறிவு இல்லாதவன், தன் செல்வத்தால் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேட மாட்டான். 


அறிவு உள்ளவன், இம்மைக்கு நன்மை தேடுவான். செல்வத்தை குடும்பத்தோடு அனுபவிப்பான்.


பேரறிவு உள்ளவன், செல்வத்தின் மூலம் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேடுவான். ஊருக்கு கொடுப்பது புண்ணியம். அது மறுபிறப்பிலும் தொடரும். 


நாம் செய்யும் நன்மை தீமைகள், பாவ புண்ணியமாக மாறி மறு பிறவியில் இன்ப துன்பமாக வந்து சேரும். 


வள்ளுவர் அப்படி நினைத்து சொன்னாரா என்று தெரியாது. 


இப்படி சிந்திக்க இடம் இருக்கிறது.


சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளி விடலாம். 




 

Saturday, September 2, 2023

கந்தரநுபூதி - பதறிக் கதறி

 கந்தரநுபூதி - பதறிக்  கதறி 


எவ்வளவோ படிக்கிறோம். யார் சொல்வதை எல்லாம் கேட்கிறோம். கொஞ்சம் மண்டையில் ஏறுகிறது. கொஞ்சம் புரிகிறது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இதில் நிறைய மறந்து போகிறது. 


படிப்பவற்றில் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று எப்படி கண்டுபிடிப்பது. நான் படிக்கும் புத்தகங்கள், நான் வணங்கும் தெய்வங்கள், நான் கொண்ட தத்துவங்கள் மட்டும்தான் சரி. மற்றது எல்லாம் தவறு என்று எப்படி சொல்ல முடியும். அப்படித்தானே மற்றவர்களும் நினைக்கிறார்கள். யார் நினைப்பது சரி? 


அல்லது, யார் என்ன சொன்னால் என்ன, நான் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல, ஒரே பாதையில் செல்வேன். அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, ஒரு நாளைக்கு இரண்டுதரம் எல்லா பாடல்களையும் ஓதுவேன் என்று இருக்கலாம் என்றால் அறிவு விட மாட்டேன் என்கிறது. அங்கே என்ன சொல்லி இருக்கிறது, அது எப்படி சரி ஆகும், இது தவறு இல்லையா என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. 


இறுதியில், குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது. 


அது மட்டும் அல்ல, எது சரி, எது தவறு, யார் சொல்வது உயர்ந்தது, என்று வாதப் பிரதிவாதங்கள், சண்டை சச்சரவுகள் வேறு. 


இது ஆன்மீகத்தில் மட்டும் அல்ல. அறிவு சார்ந்த எல்லா துறைகளிலும் இந்த குழப்பங்கள் உண்டு. படிப்பு மேலும் மேலும் குழப்பத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. 


சரி, படிக்காமல் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. 


முட்டாளாக இருக்க முடியுமா? 


குழப்பம் மட்டும் இருந்தால் பரவாயில்லை. 


எவ்வளவு நேரம் வீணாகி விட்டது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்று வைத்துக் கொண்டால் , 80 வருடம் வாழ்ந்தோம் என்றால்,  கிட்டத்தட்ட 4 முழு வருடங்கள் இதில் செலவழித்து விடுகிறோம். கண்ட பலன் என்ன? 


நேரம் விலை மதிக்க முடியாதது என்று நினைப்பவர்களுக்கு ஒரு பதற்றம் வரும். ஐயோ, இப்படி வீணாகக் கழிகிறதே என்று. வேறு வேலை வெட்டி ஒன்றும் இல்லை என்றால், அந்தப் பதற்றம் இருக்காது. சும்மா தானே இருக்கிறோம், அதில் ஒரு மணி இப்படி போனால் என்ன என்று தோன்றும். நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. 


அருணகிரிநாதர் சொல்கிறார், 


அந்தக் கலை, இந்தக் கலை என்று பல கலைகளை கற்று, இதை படிக்கவில்லையே, அதைப் படிக்கவில்லையே, நேரம் இல்லையே, என்ன செய்வது என்று பதறி, ஒரு வேளை தவறானவற்றை படித்து நேரத்தை வீணாக்கி விட்டோமோ, ஒரு வேளை உண்மை வேறு எங்கோ இருக்கிறதோ என்று பதறி, இறுதியில் ஒன்றும் சரியாக பிடிபடாமல் கலங்கி, கதறி, மண்டை காய்ந்து, துன்பப்படவோ என்னை விடுத்தாய் முருகா "


என்று கலங்குகிறார். 


பாடல் 




கலையே பதறிக் கதறித் தலையூ 

டலையே படுமா றதுவாய் விடவோ 

கொலையே புரிவேடர் குலப்பிடிதோய் 

மலையே மலை கூறிடு வாகையனே 


சீர் பிரித்த பின் 


கலையே பதறிக் கதறித் தலை ஊடு  

அலையே படுமாறு அது வாய் விடவோ 

கொலையே புரி வேடர் குலப் பிடி தோய் 

மலையே மலை கூறிடு வாகையனே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post.html


(please click the above link to continue reading)


கலையே  = பல கலைகள், கல்வி, கேள்விகள் 


பதறிக் = அவசர அவசரமாக படித்து 


கதறித் = ஒன்றும் புரியாமல், என்ன செய்வது என்று அறியாமல் கதறி 


தலை ஊடு = வாதங்கள் புரிந்து (ஒரு தலைக்கும் இன்னொரு தலைக்கும் ஊடே) 

  

அலையே படுமாறு = அங்கும் இங்கும் அலையும் படி 


அது வாய் விடவோ = அது போல விட்டு விடுவாயா என்னை 

 

கொலையே = கொலை செய்வதையே 


புரி = தொழிலாகக் கொண்ட 


 வேடர் குலப்  = வேடர் குலத்தில் தோன்றிய 


பிடி = பெண் யானை போன்ற வள்ளியின் 


தோய் = தோள்களில் தோய்பவனே, அவளை அணைத்துக் கொள்பவனே 

 

மலையே = மலை போன்ற தோள்களை உடையவனே 


மலை = கிரௌஞ்ச மலையை 


கூறிடு = இரண்டு கூறாகப் பிளந்த 


வாகையனே = வெற்றியை உடையவனே 


அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 


எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. 


ஒரு மிகப் பெரிய கேள்வியை எழுப்பும் அருணகிரிநாதர், எதற்கு வள்ளியை கட்டி அணைத்துக்  கொள்பவனே என்று ஒரு வரியை நடுவில் சேர்க்க வேண்டும். 


வேண்டும் என்றால் தகப்பனுக்கு பிரணவத்தை உபதேசம் செய்தவனே என்று சொல்லி இருக்கலாம். உன் மனைவியை கட்டி அணைத்துக் கொள்பவனே என்று ஏன் சொல்ல வேண்டும்?


காரணம் இல்லாமல் அருணகிரி சொல்வாரா? 


கல்வி கேள்விகளால் இறைவனை அடைய முடியாது. அன்பினால் முடியும் என்று சொல்ல வருகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. 


கொலைத் தொழிலை கொண்ட வேடர் குலத்தில் பிறந்த வள்ளிக்கு கல்வி ஞானம் அதிகம் இருக்காது. ஆனாலும், அவளைத் தேடிப் போய் முருகன் அணைத்துக் கொண்டான் என்று சொல்வதன் மூலம், நீ ரொம்ப படித்து சிரமப் படாதே. அன்போடு இரு. நானே வருவேன் உன்னைத் தேடி என்று சொல்ல வருகிறாரோ?


மேலும், கிரௌஞ்ச மலையை பிளந்தவனே என்று ஏன் சொல்ல வேண்டும்?


பதவி, அதிகாரம், பலம், இது எல்லாம் இருந்தாலும், இறைவனை அடைய முடியாது என்பது மட்டும் அல்ல, அவை ஆணவத்துக்கு இடம் கொடுக்கும். அவற்றை நீக்கினால் அன்றி அவனை அடைய முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. 


நேரடியான பொருள் இல்லை. இப்படியும்  சிந்திக்க இடம் உண்டு. அவ்வளவுதான். 


சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளி விடுங்கள்.