Showing posts with label Aaththi Choodi. Show all posts
Showing posts with label Aaththi Choodi. Show all posts

Friday, March 13, 2020

ஆத்திச் சூடி - பேச்சு

ஆத்திச் சூடி - பேச்சு 


மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான். சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்?

கணவன் - மனைவி
பெற்றோர் - பிள்ளைகள்
உயர் அதிகாரி - கீழே வேலை செய்பவர்கள்
உறவினர் கள் - நண்பர்கள்

என்று எங்கும் இனிமையாக பேசுவதால் உறவுகள் பலப்படும், வாழ்க்கை இனிமையாகும்.

ஆனால், எப்படி இனிமையாக பேசுவது?

அது பெரிய விஷயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு பல கருத்துகள் கிடைக்கின்றன.

ஒளவை சொல்கிறாள்

"வெட்டென பேசேல்"

அப்படினா என்ன?

மனைவி: ஏங்க , இன்னிக்கு சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாமா?

கணவன்: முடியாது.  மனுஷனுக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு, இதுல சினிமாவாம்  சினிமா...நல்ல நேரம் பாத்தியே சினிமா போக

இது வெட்டென பேசுவது.

மாறாக,

கணவன்: இன்னிக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்மா....நிறைய வேலை இருக்கு. நாளைக்கு போகலாமா? என்ன சொல்ற...

செய்தி ஒண்ணுதான், சொல்லுகிற விதம் வேற.

அதிகாரி:  இந்த வருஷம் கணக்கு முடிக்கும் போது , எப்படியாவது  10% இலாபம் வரணும்...இல்லைனா பங்குதார்களிடம் பதில் சொல்ல முடியாது...

கீழே வேலை செய்பவர்:  அது எப்படிங்க முடியும். முடியவே முடியாது. ஏற்கனவே ரொம்ப   நட்டத்தில் இருக்கு, இதுல 10% சதவீதம் இலாபமா...முடியவே முடியாது.

இது வெட்டென பேசுவது.

மாறாக

"10% சதவீதமா ? கொஞ்சம் கஷ்டம் தான்...இருந்தாலும் முயற்சி செஞ்சு பாக்குறேன்...ஒரு நாள் அவகாசம் கொடுங்க...பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்"

மறு நாள் வந்து

"நீங்க சொன்னதால ரொம்ப முயற்சி செஞ்சு பாத்தேன்...10% சதவீதம் வராது போல இருக்கு...அதிக பட்சம் 3% சதவீதம் வரலாம்...."

இப்படி மென்மையா எடுத்துச் சொன்னால் கேட்க இதமாக இருக்கும்.

முகத்தில் அடிப்பது மாதிரி பேசக் கூடாது.

முடியாது, நடக்காது, ஆகாது, என்று பேசக் கூடாது.

அதையே மென்மையாக பேசிப் பழக வேண்டும். மற்றவர் முகம் வாடும் படி  பேசக் கூடாது.

மரத்தில் கோடாலி போடுவது மாதிரி பேசக் கூடாது. பூ பறிப்பது போல மென்மையாக இருக்க வேண்டும் பேச்சு.

அழகாக பேச ஒளவை சொல்லும் வழி.

நல்லதுன்னு தெரிஞ்சா முயற்சி செஞ்சு பாக்காமலா இருக்கப் போறீங்க? கட்டாயம் பண்ணுவீங்க தான?



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_13.html

Sunday, March 8, 2020

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேற முடியும். 

குடும்ப உறவில், உடல் ஆரோக்கியத்தில், செல்வம் சேர்ப்பதில், புகழ் அடைவதில், அறிவை பெருக்குவதில் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாம் அதில் பெரிய முன்னேற்றம் காண முடியும். 

இருந்தும், நாம் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்த மாதிரி தெரியவில்லையே. 

ஏன்? 

நம்மிடம் போதுமான அறிவு இருக்கிறது. நம்மை விட அறிவு குறைந்தவர்கள் எல்லாம் எப்படியெல்லாமோ உயர்ந்து இருக்கிறார்கள். 

நல்ல உடல் வலிமை இருக்கிறது. கை , கால், கண், மூக்கு, மூளை எல்லாம் சரியாக செயல்படுகிறது. 

இருந்தும் ஏன் சாதிக்க முடியவில்லை?

காரணம், ஒரு வேலையை செய்வதால் வரும் துன்பத்தை சகித்து கொள்ள முடியாமல் அதை தொடங்குவது இல்லை அல்லது தொடங்கினால் முடிவு வரை தொடர்வது இல்லை. 

ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, தள்ளிப் போட்டு விடுவது அல்லது அது சரியா வரல , சரிப்படாது என்று கூறி தொடங்கியதை பாதியில் விட்டு விடுவது. 

படிப்பதாக இருக்கட்டும், உடற் பயிற்சியாக இருக்கட்டும்,  உணவு கட்டுப்பாடாக இருக்கட்டும், உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பணத்தை எதில் , எப்படி முதலீடு செய்வது என்று அறிந்து கொண்டு செயல்படுவதாக இருக்கட்டும்...எல்லாவற்றிலும் ஓரளவுக்கு மேல் அதை செய்வதால் வரும் துன்பத்தை  பொறுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். 

சாதனை செய்தவர்கள் எல்லாம், அந்த வலியை , துன்பத்தை பொறுத்துக் கொண்டு மேலே  சென்றவர்கள். 

சாதிக்க வேண்டும் என்றால் உடல் உழைப்பு வேண்டும், தூக்கம் குறைக்க வேண்டும், சோம்பல் இருக்கக் கூடாது, தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். 

"முடியல...கால் வலிக்குது, முதுகு வலிக்குது, கண் வலிக்குது," என்று விட்டு விட்டால், எங்கிருந்து சாதனை வரும். 

ஒளவை ரெண்டே வார்த்தையில் சொன்னாள் 


"துன்பத்திற் கிடங்கொடேல்"

துன்பம் வரும். அதுக்கு இருக்க இடம் கொடுக்கக் கூடாது. விரட்டி அடித்து விட வேண்டும். 

"சீ போ...இங்க வராத...வேற எங்காவது போ " என்று விரட்டி விட வேண்டும். 

கொஞ்சம் துன்பம் வந்தவுடன் 

"ஐயோ, முடியலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது. எடுத்தது எல்லாம் தடங்கல், ஒண்ணாவது போன உடனே நடக்குதா" என்று அலுத்துக் கொண்டு தொடங்கிய வேலையை விட்டு விடுவது.

துன்பம் வந்தால், அது என்னவோ அழையா விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போகட்டும் நாம் நம்  வேலையை பார்ப்போம் என்று முயற்சியை கை விட்டு விடக் கூடாது. 


தடங்கல் வரும், தோல்வி வரும், காலம் இழுக்கும், பண விரயம் ஆகும், உடல் சோர்வு வரும், மனச் சோர்வு வரும். 

இவற்றால் வரும் துன்பத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. 

தொடங்கிய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிக்கோளை எட்டும் வரை. 

துன்பத்தைக் கொண்டு துவண்டு விடக் கூடாது.  துன்பத்தை சகிக்க படிக்க வேண்டும். அதை உதாசீனப் படுத்த பழக வேண்டும். 

"ஏய் துன்பமே, இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நான் இல்லை"  என்று அதைப் பார்த்து கை ஆட்டி விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். 

"துன்பத்திற்கு இடம் கொடேல்"

இடம் கொடுப்பீர்களா?


Tuesday, March 3, 2020

ஆத்திச் சூடி - படிப்பது

ஆத்திச் சூடி - படிப்பது


படிப்பது.

என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால்


சில இளம் வயது ஆண்களையும் பெண்களையும் கேட்டால் "படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு try பண்ணிக்கிட்டு இருக்கேன் " என்பார்கள்.  படித்து முடிக்க முடியுமா?

குடும்பத் தலைவிகளை கேட்டால், "வீட்டைப் பாக்கவே நேரம் பத்தலை, இதுல எங்க போட்டு படிக்கிறது..." என்று அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறோம்.

வயதானவர்களைக் கேட்டால்  "..ஆமா..இத்தனை வயசுக்கு அப்புறம் படிச்சு என்ன செய்யப் போறேன்...வேலைக்கா போகப் போறேன் " என்பார்கள்.

வேலைக்கு போகும் ஆண் / பெண்களைக் கேட்டால், "வேலை, வீடு, பிள்ளைகள், குடும்பம் ...இதுக்கே நேர பத்தலை...இதுல எங்கிருந்து படிக்கிறது ..." என்பார்கள்.

ஆக மொத்தம், படிப்பது என்பது ஏதோ ஒரு சிலர்க்கு மட்டும் வாய்த்த வாய்ப்பாக இருக்கிறது.

அது சரிதானா?

வள்ளுவரிடம் கேட்டால்

யாதானும் நாடாமல் ஊராமால் எவனொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு

என்று நீட்டி முழக்கி ஒண்ணே முக்கால் அடியில் சொல்லுவார்.

அவருக்கு சுருக்கமாகச் சொல்லாத் தெரியாது.

நம்ம கிழவி தான் சரி.

இரண்டே வார்த்தை.

"ஓதுவது ஒழியேல் "

நாங்களும் தான தினமும் whatsapp துணுக்குகள், வதந்திகள் எல்லாம் படிக்கிறோமே ,  facebook ல யார் என்ன செய்றாங்கன்னு படிக்கிறோம்...அதெல்லாம் படிப்புல வராதா என்றால்,  வராது.

ஓதுவது என்றால் மனப்பாடம் செய்ய வேண்டி மீண்டும் மீண்டும்  சொல்லுவது.

மனதுக்குள் ஏற வேண்டும்.

எதை திருப்பி திருப்பி படிப்போம்?

எது கடினமானதோ, எது நமக்கு மிகவும் தேவைப் படுகிறதோ , எது பயன் உள்ளதோ, அதை திருப்பி திருப்பி படிப்போம்.

அப்படி நல்லதை, உயர்ந்ததை படிப்பதை ஒரு நாளும் விட்டு விடக் கூடாது  என்கிறாள் ஒளவை.


"ரொம்ப பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது"

"நாலு நாளா உடம்பு சரியில்லை"

"வீட்டுல கொஞ்சம் விருந்தாளிங்க வந்துட்டாங்க ..கொஞ்சம் பிஸி " (என்ன நாலஞ்சு நாளா பிளாக் படிக்கல போல அப்படினு கேட்டா)

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, பக்கத்து வீட்டு மாடு கன்னு போட்டு இருக்கு,  ஊருக்குள்ள நல்ல மழை, மாமனார் திவசம், "

என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள், படிக்காமல் இருப்பதற்கு.

ஒரு சாக்கும் சொல்லக் கூடாது.

ஓதுவது ஒழியேல்.

படிப்பதை நிறுத்தாதே.

வாழ்வின் கடைசி நாள் வரை, நாழிகை வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சாப்பிடுவது ஒழியேல், ஊர் சுற்றுவது ஒழியேல் அப்படினு சொல்ல வில்லை.

ஓதுவது ஒழியேல் என்று கூறினாள்.

தினம் ஒரு பத்து பக்கமாவது நல்ல செய்திகளை படியுங்கள்.

பாட்டி சொல்லைத் தட்டாதே.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_3.html

Friday, February 28, 2020

ஆத்திச் சூடி - உயர்வது எப்படி

ஆத்திச் சூடி  - உயர்வது எப்படி 


நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அது மட்டும் தெரிஞ்சிட்டா போதும். வேற என்ன வேண்டும்.

ஆனால், அந்த பட்டியல் பெரிசா இருக்குமோ?

கடின உழைப்பு, நேர்மை, நீதி, நாணயம், பெரிய மனிதர்கள் தொடர்பு, கொஞ்சம் மூலதனம் என்று நீண்டு கொண்டே போகுமோ?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒளவையார் ஒரு எளிய வழி சொல்கிறார்.

நாம் உயராமல் இருக்கக் காரணம் நம்மிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. நம்மிடம் நிறைய கெட்ட குணங்கள் இருப்பதுதான் காரணம் என்று.

யோசித்துப் பார்ப்போம்.

ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வீணாக செலவழிக்கிறோம்?

டிவி, whatsapp , facebook , youtube , தொலைபேசியில் அரட்டை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன்  பயனற்ற உரையாடல், வீடியோ கேம்ஸ், குப்பையான நாவல்கள், வார இதழ்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் அரட்டை, நண்பர்களோடு ஊர் சுற்றுவது ....இப்படி ஒரு நாளில் பொழுதை எவ்வளவு வீணாகக் கழிக்கிறோம்?

அது ஒரு பக்கம் இருக்க

காப்பி, டீ, புகை பிடித்தல், மது, அளவுக்கு அதிகாக உண்பது, இனிப்பு, எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, நொறுக்குத் தீனி, என்று   எத்தனை தீய உணவு பழக்கங்கள் இருக்கிறதோ அத்தைனயும் நம்மிடம் இருக்கிறது.

காலையில எந்திரிச்சவுடன் ஒரு காப்பி உள்ள போனாத்தான் வேலை நடக்கும் னு பெருமையா வேறு சொல்லிக் கொள்வது.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அளவுக்கு அதிகமான தூக்கம், சோம்பேறித்தனம், செய்ய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது (procrastination ), முடிவு எடுக்காமல் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவது போன்ற தீய பழக்கங்கள் இன்னொரு பக்கம்.

அதை இன்னொரு பக்கம் வையுங்கள்.

பொறாமை, கோள் சொல்வது,  வதந்திகளை பரப்புவது (யோசிக்காமல், சரி பார்க்காமல்  whatsapp செய்திகளை அப்படியே மனம் போன போக்கில் மற்றவர்களுக்கு  அனுப்புவது. இதில் "forwarded as received" னு ஒரு disclaimer வேற,  கோபம் கொள்வது, மற்றவர்கள் சொல்வதை , செய்வதை சகித்துக் கொள்ளாமல் இருப்பது,  நான் சொல்வதே சரி என்று முரண்டு பிடிப்பது,  சிண்டு முடிவது, போட்டுக் கொடுப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, குடும்பத்தை பிரிப்பது ....

இப்படி கொஞ்சம்  தீய பழக்கங்கள்.


பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவை எல்லாம் விட்டு விட்டால் எப்படி இருக்கும்?

இந்த தீய பழக்கம் எதுவுமே இல்லாமல் இருந்தால் நாம் எப்படி இருப்போம்?

நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது  இந்த தீய பழக்கங்கள் தான்.

தீய பழக்கம் என்றால் ஏதோ திருடுவது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது  என்பது மட்டும் அல்ல.

நமக்கு நாமே தீங்கு செய்துகொள்வதும் தீய பழக்கம் தானே.

வீணாக பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பதும் தீய பழக்கம் தானே.

இவற்றை எல்லாம் களைந்து விட்டால் நாம் எவ்வளவு சிறந்தவர்களாக இருப்போம்  என்று எண்ணிப்பார்ப்போம்.

இதைத்தான் கிழவி இரண்டே வார்த்தையில்  சொல்லிவிட்டுப் போனாள்

"கீழ்மை யகற்று"

இதெல்லாம் கீழ்மையானதோ, அவற்றை அகற்று.

கீழானது எல்லாம் நம்மை விட்டு விட்டு போய் விட்டால், நாம் தானாகவே உயர்ந்து விடுவோம்.

கீழான குணங்களை வைத்துக் கொண்டு, எவ்வளவு தான் முயன்றாலும், முன்னேற முடியாது.

களை எடுத்தால்தான் பயிர் வளரும்.

களை இருக்கும் போது எவ்வளவு நீர் ஊற்றி, உரம் போட்டாலும், பயிர் நன்றாக வளராது.

அட்டாங்க யோகத்தில் முதல் அங்கம் "இயமம்" எனப்படுவது.

இயமம் என்றால் "தீய பழக்கங்களை, கீழான பழக்கங்களை விட்டு விடுவது".

நாளுக்கு நாலு பாக்கெட் புகை பிடித்துக் கொண்டு நான் பிராணாயாமம் செய்கிறேன் என்றால் அதில்  ஏதாவது பலன் இருக்குமா?

ஒரு பட்டியல் போடுங்கள்.

உங்களிடம் உள்ள தீய, கீழான பழக்கங்கள் என்னென்ன என்று.

ஒவ்வொன்றாக விட்டு விட முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கீழான பழக்கம் உங்களை விட்டு போகும் போதும், எவ்வளவு சுகமாக இருக்கிறது  என்று பாருங்கள்.

கீழ்மை அகற்று.

வாழ்வில் உயர இதை விட சுருக்கமா எப்படி சொல்ல முடியும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_28.html

Tuesday, February 25, 2020

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..


"அம்பது வயசாச்சு...இனிமேல் போட்டு என்னத்த படிச்சு...என்ன செய்ய. இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன வேலைக்கா போகப் போறேன்..." என்று பலர் அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறேன்.

"இப்பவே காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது" என்று வாழ்வின் முடிவை எதிர்பார்த்து வாழ்வில் சோர்ந்து போய் இருக்கும் பலரை பார்க்க முடிகிறது.

ஐம்பது எல்லாம் ஒரு வயசா? அல்லது அறுபது எல்லாம் ஒரு வயசா ?

எந்த வயசும் ஒரு பொருட்டு இல்லை. மனம் தான் முக்கியம்.

மனம் சோர்ந்து விட்டால் உடலும் சோர்ந்து விடும். மனதை துடி துடிப்பாக வைத்து இருக்க வேண்டும்.

புதிது புதிதாக கற்க வேண்டும். புதிய உடற் பயிற்சி செய்யலாம். ஓடலாம், மலை ஏறலாம், நீச்சல் கற்றுக் கொள்ளலாம்...இப்படி உடலை உறுதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

புதிதாக இசை கற்கலாம். பாட்டு, படம் வரைதல், புதிய சமையல் கலை, கணனியில் (computer) எவ்வளவோ இருக்க கற்றுக் கொள்ள.

புதிது புதிதாக எவ்வளவோ வருகிறது. அது பற்றி கற்கலாம். கற்றதை சொல்லித் தரலாம்.

ஊர் சுற்றலாம்.

புது உடைகள் வாங்கி போட்டுப் பார்க்கலாம்.

எப்ப பாத்தாலும் ஒரே உடை. ஒரே மாதிரியான  உணவு, ஒரே மாதிரியான பழக்க வழக்கம், அதே மனிதர்களிடம் உறவு.

மனம் சுருங்கிப் போகாதா ?

ஒரு உற்சாகம் வேண்டாம்? ஒரு துடிதுடிப்பு வேண்டாம்? ஒரு உயிர்ப்பு வேண்டாம் ?


ஒளவை சொல்கிறாள்


"ஊக்கமது கை விடேல்"

எப்போதும் ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் ஆயிரம் நடக்கும். நல்லது நடக்கும். அல்லாததும் நடக்கும். அதற்காக ஊக்கத்தை கை விட்டு, சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடக் கூடாது.

ஒவ்வொரு நாளும், நமக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று நினைத்து துடிப்புடன் வாழ வேண்டும்.

உங்களோடு சேர்ந்து நேற்று இரவு தூங்கப் போன பல பேர் இன்று காலை எழுந்திருக்கவில்லை. அதுவே அவர்களின் கடைசி இரவாக இருந்தது.

நீங்கள் எழுந்து இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய விஷயம்.

எழுந்து என்ன பண்ணப் போகிறீர்கள்?

உற்சாகமாக இருங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

ஒரு துள்ளல். ஒரு வேகம் இருக்கட்டும் உங்கள் செயல்களில்.

அவ்வளவு வயசான கிழவி சொல்கிறாள்

"ஊக்கமது கை விடேல்" என்று.

கற்பதற்கும், செய்வதற்கும் எவ்வளவோ இருக்கிறது.

வாருங்கள் செய்வோம், கற்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_25.html

Saturday, February 22, 2020

ஆத்திச்சூடி - அழகு

ஆத்திச்சூடி - அழகு 

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம். போகும் போது மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசு வாங்கிக் கொண்டு போகிறோம். அந்த பரிசுப் பொருளை அப்படியேவா கொடுக்கிறோம்? அதை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, அழகான காகிதத்தில் சுத்தி, அதற்கு மேல் ஒரு வண்ணை ரிப்பன் வைத்து கட்டி, ஒரு சிறு கார்டில் நம் பேரை எழுதித்தானே தருகிறோம். 

எப்படியும், அதை எல்லாம் கிழித்து குப்பையில் போடப் போகிறார்கள். பின் எதற்கு வேலை மெனக்கெட்டு இவ்வளவு வேலை?

இரவு, வேலை எல்லாம் முடிந்து படுக்கப் போகிறோம். படுக்கை அழகாக விரித்து, தலையணை எல்லாம் ஒழுங்காக வைத்து, அறை சுத்தமாக இருந்தால், மனதுக்கு ஒரு சுகம் இருக்கும் இல்லையா. அதை விட்டு விட்டு, கசங்கிய படுக்கை விரிப்பு, அழுக்கான தலையணை உறை, படுக்கை மேல் ஓரிரண்டு புத்தகங்கள், ஒரு உணவு உண்ட தட்டு என்று இருந்தால் படுக்க மனம் வருமா?

அலுவலகத்தில் ஒரு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் தயார். அதை அப்படியே அனுப்புவதை விட, அதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை எல்லாம் சரி பார்த்து, எழுத்தின் அளவு (font size), எழுத்தின் தன்மை (font ), alignment , எல்லாம் சரி பார்த்து, பத்தி (paragraph ) பிரித்தது சரி தானா, பக்க இலக்கம் போட்டு இருக்கிறோமா (page number ) என்று பார்த்து பின் அனுப்பினால், படிக்கவே ஒரு சுகம் இருக்கும் அல்லவா?

பரீட்சை எழுதினாலும் அப்படி அழகாக எழுத வேண்டும். 

எதைச் செய்தாலும், அதில் ஒரு அழகு இருக்க வேண்டும். 

ஏதோ செய்து விட்டோம் என்று இருக்கக் கூடாது. 

வீடு பெறுக்கினாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். 


“If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”


― Martin Luther King Jr.


என்று மார்ட்டின் லூதர் கிங் கூறுவார். 

ஒரு கடிதம் எழுதுவது, ஒரு காப்பி போடுவது, உணவு பரிமாறுவது, குளித்து தலை வாரி உடை உடுத்துவது என்று எதிலும் ஒரு அழகு உணர்ச்சி வேண்டும். 

கசங்கிய ஆடையை உடுத்திக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?

சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒளவை ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் 

" அழகு அலாதன செய்யேல்"

என்று. 

அழகு இல்லாத ஒன்றை செய்யக் கூடாது. 

அதாவது, எதையும் அழகாகச் செய்ய வேண்டும், இல்லை என்றால் செய்யக் கூடாது. 

எந்த காரியம் செய்து முடித்தாலும், அது அழகாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால், அதற்கு அழகு கூட்டுங்கள். 

Tom Peters என்ற மேலாண்மை (மேனேஜ்மென்ட்) குரு சொல்லுவார்,

"No work is completed until you get an 'Wow' effect" 

என்று. 

எதையும் அழகாகச் செய்து படியுங்கள். 

(ஒண்ணாப்புல படிச்சது, இந்த ஆத்திச் சூடி)


Saturday, November 2, 2019

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல்

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல் 



வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.

அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால், ஐயோ, அப்பா என்று அதை பெரிது படுத்தக் கூடாது.

தடங்கல்களும், சறுக்கல்களும் அவ்வப்போது வரும் , போகும்.

சரி சரி என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

சிலர், சின்ன தலை வலி வந்தால் கூட  ஏதோ உயிர் போவது போல அலட்டிக் கொள்வார்கள்.

சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அழுத்தி விடுவார்கள்.

காதலித்தவர் கை விட்டு விட்டால், பரிட்சையில் தோல்வி அடைந்தால், உறவுகளில் சிக்கல் வந்தால், வியாபாரத்தில் நட்டம் வந்தால், போட்ட முதல் சரியானபடி வருமானம் தரவில்லை என்றால்...அதை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம், எப்படி நாம் மற்றவர்களிடம் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது  அதன் பாதிப்பு.

பிரச்சனைகளை ஊதி ஊதி பூதாகரமாக மாற்றி விடக் கூடாது.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா...வாழ்க்கை என்றால் அப்படி இப்படித் தான் இருக்கும் " என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படி சொல்லிப் பழகுவதன் மூலம், பெரிய பிரச்சனை கூட சாதாரணமாய் தெரியும்.

மாறாக, "ஐயோ, எனக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே " என்று ஒப்பாரி வைத்தால்,  பூதக்  கண்ணாடி மூலம் பார்த்தால் எப்படி சிறிய பொருள் கூட பெரிதாய் தெரியுமோ, அப்படி சின்ன சிக்கல் கூட பெரிதாய் மாறி விடும்.


இராஜ்யமே போனால் கூட, "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது" போல இராமன் சிரித்துக் கொண்டே சென்றான். வானுக்கும் பூமிக்கும் குதிக்கவில்லை.

எனவே தான் ஒளவை சொன்னாள்

"மிகைப்பட  பேசேல்"

என்று.

ரொம்ப அலட்டிக் கொள்ளக் கூடாது.

சாதாரணமாக பேசிப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை  சரி செய்யும் பக்குவம் வரும்.

பழகுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் மிகைப்பட  பேசி, உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வார்த்தையில் வாழ்க்கை நெறியை சொல்லி விட்டுப் போகிறாள் அவள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச் சூடி !

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_2.html

Sunday, February 17, 2019

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும்

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும் 


இன்றைய சூழ்நிலையில், நிறைய இளம் பையன்களும் பெண்களும்  அயல் நாட்டுக்குப் போய் படிக்க வேண்டும். அயல் நாட்டுக்குப் போய் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்கா. கனடா. ஐரோப்பா. ஆஸ்திரேலியா. என்று கண்டம் விட்டு கண்டம் சென்று படிக்க மற்றும் வேலை தேடி செல்கிறார்கள்.

நாளடைவில் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அங்கேயே வீடு வாசல் வாங்கி, பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து மொத்தமாக குடி பெயர்ந்து விடுகிறார்கள்.

அது நல்லது தான்.

உயர்ந்த கல்வி. நிறைய சம்பளம். சிறப்பான சுற்றுப் புற சூழ்நிலை. எல்லாமே நல்லது தான்.

இப்படி பிறந்த நாட்டை விட்டு விட்டு, இன்னொரு நாட்டுக்குப் போகலாமா ? பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? தாய் நாடு அல்லவா என்ற கேள்வி ஒரு புறம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சில பெரியவர்கள், வயதானவர்கள் "ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம ஊரு போல வருமா " என்று அங்கலாய்ப்பார்கள். "உள்ளூரில் விலை போகாத மாடு தான் வெளி ஊரில் விலை போகும் " என்று குதர்க்கம் பேசுபவர்களும் உண்டு. "இங்க பத்து ரூபாய் இட்லி, அங்க நூறு ரூபாய். இங்க பத்து ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்று தான் , அங்க போய் இலட்ச ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்று தான் " என்று கூறும் பொருளாதார மேதைகளும் உண்டு.

இதற்கு விடை யார் தருவது? வள்ளுவரிடமே கேட்போம்.

என்னது வள்ளுவரா ? அவருக்கு என்ன தெரியும் இந்த பாஸ்போர்ட், விசா, workpermit , immigration, citizenship பத்தி எல்லாம் என்று நினைக்கிறீர்களா?

அவரு பெரிய ஆளு.

போற போக்கில ஏழு வார்த்தைகளில்  நமக்கு விடை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

பாடல்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையும் கல்லாத வாறு 


பொருள்


யாதானும் = எதானாலும் (எந்த இடம் ஆனாலும்)

நாடாமால் = நாடு ஆம்

ஊராமால் = ஊர் ஆம்

என்னொருவன்  = ஏன் ஒருவன்

சாந்துணையும் = சாகும் வரையில்

கல்லாத வாறு  = கல்வி கற்காமல் இருப்பது

அதாவது, படித்தவனுக்கு, எல்லா நாடும், எல்லா ஊரும் தன் நாடு, தன் ஊர் போலத்தான். அப்படி இருக்க, எவனாவது சாகும் வரையில் படிக்காமல் இருப்பானா என்று கேட்கிறார்.

மிக மிக ஆழமான பொருள் கொண்ட குறள் . ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

முதலாவது, படித்தவனுக்கு எல்லா ஊரும், தன் சொந்த ஊர் போல. எல்லா நாடும் தன் சொந்த நாட்டைப் போல. எனவே, எங்கு ஒரு வேறுபாடும் இல்லை. அவன் எங்கு வேண்டுமானாலும் போய் தங்கலாம், படிக்கலாம், வேலை செய்யலாம். வள்ளுவர் விசா தந்து விட்டார்.

இரண்டாவது,  ஒருவன் பிறந்த நாட்டில் அவனுக்கு குடி உரிமை இருக்கிறது.  படித்தவன்  எந்த நாட்டுக்கு சென்று அங்கு குடி உரிமை கேட்டாலும், அந்த நாடு அவனை தன் குடிமகனாக / மகளாக ஏற்றுக் கொண்டு குடி உரிமை வழங்கி விடும். எல்லா நாடும் அவனை தங்கள் நாட்டு குடிமகனாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். அவனுக்கு பிறந்த ஊரும் ஒன்றும் தான், மற்ற ஊரும் ஒன்று தான். ஒரு வேறுபாடும் இல்லை.

மூன்றாவது, அடடா, அந்தக் காலத்திலேயே யாரும் எனக்கு இதை சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தால் நானும் படித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போய் செட்டில் ஆகியிருப்பேனே என்று நினைத்து வருந்த வேண்டாம். வள்ளுவர் சொல்கிறார், இன்னைக்கு ஆரம்பி. இன்றிலிருந்து படிக்கத் தொடங்கு. இளமையில் கல் என்று சொன்னது சரிதான். எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. "சாம் துணையும்" . சாகும் வரை படிக்க வேண்டும் என்கிறார். இன்று ஆரம்பித்து , சாகும் வரை படித்துக் கொண்டே இருந்தால், எல்லா நாடும் நம் நாடு ஆகும்.  40 , 50, 60 வயதுக்கு மேல் படிக்கத் தொடங்கி சாதித்தவர்கள் இல்லையா ? இதுவரை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. இன்று நல்ல நாள் ஆரம்பிக்கலாம்.

நான்காவது, சரி வெளி நாட்டுக்குப் போய் , தத்தி முத்தி குடியுரிமை வாங்கியாச்சு. அப்புறம்  என்ன. ஜாலிதான். புத்தகத்தை எல்லாம் மூட்டை கட்டி போட்டுற வேண்டியதுதானா ? இல்லை. சாகும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஐந்தாவது, சில பேர் நினைப்பார்கள்...ஆமா இப்பவே இவ்வளவு வயாசாச்சு...இனிமேல் படிச்சு ...என்னத்த செய்ய ...என்று. அப்படி நினைக்கக் கூடாது. கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சாகும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..

ஆறாவது, வயதான காலத்தில் மிக பெரிய சிக்கல் எது என்றால் நோய் , உடல் வலிமை குன்றுவது, காது கேட்காமல் போவது, கண் சரியாக தெரியாமல் போவது போன்றவை அல்ல. தனிமை.  தனிமை தான் மிகப் பெரிய கொடுமை. சிறையில் போட்டது மாதிரி இருக்கும். பேசக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் மும்மரமாக இருப்பார்கள். நம்மோடு இருந்து பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.  என்ன செய்வது ? சாகும்  வரை கற்றுக் கொண்டே இருந்தால், அந்தத் தனிமை தெரியாது.  கற்பது என்பது அவ்வளவு இனிமையான விஷயம்.  படுக்கையில் கிடந்து கடைசி மூச்சு வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

வள்ளுவராவது ஏழு வார்த்தை எடுத்துக் கொண்டார்.

நம்ம கிழவி, ஒளவை இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

ஓதுவது ஒழியேல் 

படிப்பதை விட்டு விடாதே. ஓதுவது என்றால், படிப்பது, படித்தையே மீண்டும் மீண்டும் படிப்பது. நன்றாக மேடையில் ஏறும்வரை படிப்பது. ஓதுவார் என்று சொல்லுவார்கள். அவர் படித்து. படித்ததை பல முறை சொல்லிப் பார்த்து, மற்றவர்களுக்கும்  சொல்லுவார். அவர் சொல்லுவதை, பாடுவதை கேட்டு கேட்டு நமக்கு பாடம் ஆகி விடும். படி. திரும்பத் திரும்பப் படி. மனதில் தெளிவாகும் வரை படி. படித்ததை மற்றவர்களுக்கு சொல். இதை ஒரு நாளும் விட்டு விடாதே என்கிறாள் ஒளவை.

ஏதாவது சால்ஜாப்பு சொல்லாமல், படிக்கத் தொடங்குங்கள்.

என்ன படிக்கப் போகிறீர்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_17.html

Sunday, August 24, 2014

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் 


இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ படித்தது.

மனப்பாடம் செய்து, ஒப்பித்து, மதிப்பெண்கள் வாங்கி எல்லாம் முடித்து வந்தாகி விட்டது.

இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது ?

அறம் செய்ய விரும்பு என்று சொன்ன அவ்வை ஏன் அடுத்த வரியில் ஆறுவது சினம் என்று சொன்னாள் ?

ஆறுவது காமம், ஆறுவது ஆசை என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஏன் சினத்தை சொல்ல வேண்டும் ?

அறம் செய்யும் போது கோபம்  வரும்.

ஏன் ?

அறம் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று தானம் செய்வது.

இன்னொன்று தர்ம , ஒழுக்க நெறிப்படி வாழ்வது.

முதலில் தானம் செய்வதைப் பற்றி  பார்ப்போம்.

ஒருவர் தான தர்மம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் உதவி பெற்றவன்  நாலு பேரிடத்தில் சொல்லுவான். அவர்களும் உதவி கேட்டு  வருவார்கள். நாளடைவில் இது ஒரு தொல்லையாகப் போய் விடும். காலம் கெட்ட  நேரத்தில் போன் செய்வார்கள். அடிக்கடி தொடர்பு கொண்டு நச்சரிப்பார்கள். உதவி செய்ய முடியாவிட்டால் , "ரொம்பத்தான் அலட்டிக்கிறான், நெனச்சா செய்ய முடியாதா, அவனுக்கு செஞ்சான், இவனுக்கு  செஞ்சான் எனக்கு மட்டும் செய்யவில்லை " என்று பேசத் தலைப் படுவார்கள்.

ஒரு கட்டத்தில் எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை.

என்னத்துக்கு தானம் செய்யப் போவானே , இத்தனை பேர் கிட்ட கெட்ட பேர் வாங்குவானே , ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும்.

எனவே பாட்டி சொன்னாள்

"ஆறுவது சினம்"

சினம் ஆறி விடும். நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு" அறம் செய்வதை வெறுத்து விடாதே என்று சொன்னாள் .

இரண்டாவதை எடுத்துக் கொண்டால்..

அற வழியில் நிற்பவர்களை இந்த உலகம் என்ன சொல்லும் ....

"பிழைக்கத் தெரியாத ஆள்", "அப்பாவி" , " சரியான ஏமாளி" என்றெல்லாம் பட்டம்  கொடுக்கும்.

அவர்கள் மேல் மட்டும் அல்ல, நம் மேலேயே நமக்கு கோபம் வரும்.

நாமும் மற்றவர்கள் மாதிரி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிடலாமா என்று  தோன்றும். அறத்தின் மேல் வெறுப்பு வரும்.

அவ்வை சொல்கிறாள் .... "ஆறுவது சினம்"....நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு". அதை வெறுத்து விடாதே.


Monday, May 20, 2013

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்



உடல் நலத்திற்கு முதல் எதிரி அளவுக்கு அதிகமாக உண்பது. அதிலும் முக்கியமாக சாப்பாட்டிற்கு இடையில் கொறிக்கும் சிற்றுண்டிகள் - சமோசா, வடை, முறுக்கு, பிஸ்கட்,காபி, டீ  போன்ற நொறுக்கு தீனிகள் பானங்கள்.

இவற்றை முற்றுமாக தவிர்க்க வேண்டும் என்கிறார் அவ்வையார்.

நுண்மை என்றால் சிறிய என்று  பொருள்.

சின்ன சின்ன உணவு வகைகள், சிற்றுண்டிகள் இவற்றை தவிர்க்க சொல்கிறார்.

இதையே இன்னும் கொஞ்சம் விரித்து பார்த்தால் சிறிய விஷயங்கள் என்றால் வாழ்க்கைக்கு பயன் தராத சில்லறை விஷயங்கள் -   புகை பிடிப்பது, புறம் சொல்லுவது, சூதாடுவது, போன்ற பலன் இல்லாத விஷயங்கள் என்றும் கூறலாம்.

வாழ்க்கையில் பெரிய விஷயங்களை நுகருங்கள்.

கல்வி, ஒழுக்கம், சேவை என்று நீண்ட பலன் தரும் விஷயங்களை நுகருங்கள்.

இரண்டு வார்த்தைகள் ...எவ்வளவு விஷயங்கள்.


Sunday, February 24, 2013

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல்

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல் 


இப்போது எங்கு பார்த்தாலும் விளையும் நிலங்களை பிளாட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் நசிகிறது. வீடு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீர் வரும் பாதையில் இருக்க வேண்டும், இப்படி நிறைய தேவைகள் இருக்கின்றன . அப்படி இருக்கும் இடங்களில் வீடு கட்டக் கூடாது. 

இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பட்டு போதல் என்றால் கருகிப் போதல். பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. 

எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு   முன், மக்கள் தொகை இவ்வளவு இல்லாத காலத்தில் அவ்வை சொல்லி இருக்கிறாள் ...இடம் பட வீடு எடேல் என்று.

எங்க கேக்கிறோம் ? விவசாய உற்பத்தி குறைந்து, உணவு பொருட்களின் விலை ஏறி திண்டாடுகிறோம். 

பெரியவங்க சொன்னா கேட்கணும். 

சிறுக கட்டி பெருக வாழ் அப்படின்னு தெரியாமையா சொன்னாங்க.

எவ்வளவு தீர்க்க தரிசனம் ? 

காலம் காலமாக ஆத்தி சூடி பள்ளிகளில் சொல்லித் தரப் படுகிறது. ஒழுங்காக சொல்லித் தந்திருந்தால், சொல்லிய படி நடந்திருந்தால் ...


ஹ்ம்ம்ம்ம்ம் 


Saturday, February 16, 2013

ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல்


ஆத்தி சூடி - எண்ணெழுத்து இகழேல் 


Bless those things you want to have என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

சிலருக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனால் பணக்காரர்களை   கண்டால் ஒரு வெறுப்பும் கோபமும் இருக்கும். "ஹா..அவனைப் பற்றி தெரியாதா ...அவன் எப்படி பணம் சம்பாதித்தான் என்று என் கிட்ட கேளு .." என்று பணம் சம்பாதித்தவனை பற்றி எப்போதும் ஒரு இளக்காரம், ஒரு கேலி.

உங்களுக்கு எது வேண்டுமோ அதைப் போற்றுங்கள். 

போற்றுதலின் முதல் படி அதை இகழாமல் இருப்பது 

நம் முன்னோர்கள் புத்தகம் தெரியாமல் காலில் பட்டு விட்டால் கூட அதை தொட்டு கண்ணில்   ஒத்திக் கொள்ளச் சொன்னார்கள். ஏன் ? அது வெறும் காகிதம் மற்றும்  இங்க்  அவ்வளவு தானே ...இதில் என்ன இருக்கிறது  என்று நினைக்காமல் அதை மதிக்கச் சொன்னார்கள். 

படிப்பு வர வேண்டுமென்றால் புத்தகத்தை மதிக்க வேண்டும், படிப்பு சொல்லித் தரும் ஆசிரியரை மதிக்க வேண்டும். 

சில மாணவர்கள் சொல்லுவார்கள்...இந்த integration , differentiation ...இது எல்லாம் எவன் கண்டு   பிடிச்சான் ... இந்த graammar  ஐ கண்டு பிடிச்சவனை சுட்டுக் கொல்லனும் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். படிப்பு எப்படி வரும் ?

எண்ணையும் (maths )   எழுத்தையும் (literature ) இரண்டையும் இகழாதீர்கள். அதை போற்றுங்கள். 

எண்ணென்ப   ஏனை  எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பார் வள்ளுவர் 

சின்ன வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதன் மேல் வெறுப்பு  கொள்ளக் கூடாது.

நாம் எதை வெறுக்கிறோமோ அதை நாம் செய்ய மாட்டோம். நாம் எதை வெறுக்கிறோமோ அதை விட்டு விலகி நிற்போம். படிப்பை விட்டு விலகி நின்றால் வாழ்க்கை சிறக்காது. 

எனவே, எண்  எழுத்து இகழேல்.

இதுவரை எப்படியோ...இதை படித்தபின் எண்ணையும்  எழுத்தையும் இகழ்வதை நிறுத்துவது நலம் பயக்கும்.

 

 

Monday, February 4, 2013

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல்

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல் 

உணவு. 

உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு.

அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணம் ஆகி விடும் 

மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 

ஔவையார்  இப்படி ஏழு வார்த்தைகள் எல்லாம் உபயோகப் படுத்த மாட்டார். இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள்தான் உபயோகப் படுத்துவார் 

மீதூண் விரும்பேல் 

அதிகமான உணவை விரும்பாதே. 

சில பேருக்கு உணவை கண்ட மாத்திரத்திலேயே எச்சில் ஊறும். அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு " மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டேன்...மூச்சு வாங்குது " என்று இடுப்பு பட்டையை (belt ) கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொள்வார்கள். 

சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வராது. 

சாம்பார், ரசம் இரசம் , காரக் குழம்பு, மோர் குழம்பு, தயிர், பழம், பீடா, ஐஸ் கிரீம், என்று ஒவ்வொன்றாக உள்ளே போய்  கொண்டே இருக்கும்.

எப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது ? 

மீதூண் விரும்பேல்.

முதலில் அதிகமாக சாபிடுவதற்கு விரும்புவதை நிறுத்த வேண்டும்.

அந்த உணவு விடுதியில் (hotel ) அது நல்லா இருக்கும், இந்த உணவு விடுதியில் இது நல்லா இருக்கும், என்று பட்டியல் போட்டுக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய கூடாது. 

அளவு இல்லாத (unlimited ) உணவை சாப்பிடக் கூடாது. அளவு சாப்பாடு நலம் பயக்கும் 

நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். 

உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோஷம் அடைவோம் 

விருப்பம் குறைந்தால் , அளவு குறையும்.

அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும் 

மீதூண் விரும்பேல்...

Sunday, February 3, 2013

ஆத்திச் சூடி - உடையது விளம்பேல்


ஆத்திச் சூடி - உடையது விளம்பேல் 


வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது 

இன்று நண்பர்களாய் இருப்பவர்கள் நாளை வேறு மாதிரி மாறலாம்

இன்றைய உறவு   நாளைய   பகையாக மாறலாம்.

யார் யாரோடு எப்போது சேருவார்கள் என்று தெரியாது. 

நபர்கள் என்று நாம் எதையாவது சொல்லப் போக, நாளை அவர்கள் வேறு மாதிரி மாறிவிட்டால் கஷ்டம் தான். 

நம் நண்பர்கள் நம் எதிரிகளோடு கை கோர்த்து கொள்ளலாம். 

சில பேர் வீடு வேலைக்காரியிடம், வண்டி ஓட்டும் டிரைவரிடம், கடை காரரிடம் என்று எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள் 

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்த்தால் நிச்சயம் ஆகும் வரை வெளியே சொல்ல மாட்டார்கள். நடுவில் யாரவது புகுந்து எதையாவது சொல்லி சம்பந்தத்தை கலைத்து விடலாம் எதுக்கு வம்பு. 



பொதுவாக யாரிடமும் அளவுக்கு அதிகமாக உள்ளதை சொல்வதை தவிர்ப்பது நலம் பயக்கும் 

உடையது விளம்பேல் என்றாள்  ஔவை  பாட்டி 

உன்னிடம் உள்ளதை பிறரிடம் சொல்லாதே....

அது சொத்து பற்றிய விவரமாய் இருக்கலாம், நட்பு, பகை, காதல் பற்றிய உறவை இருக்கலாம், நோய் பற்றிய சொந்த விஷயமாக இருக்காலாம். 

தோழனோடாயினும்  ஏழ்மை பேசேல் 

சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி 
சொல்லிய சொல் நமக்கு அதிகாரி 

யோசித்துப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள்.


Friday, December 14, 2012

குறள் - ஆத்திசூடி - சூது


குறள் - ஆத்திசூடி - சூது


வெல்வது சர்வ நிச்சயம் என்று தெரிந்தால் கூட, சூதாடாதே. சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. முதலில் நன்றாக இருக்கும், கொஞ்சம் கடித்தவுடன் முள் வாயில் ஏறி வேதனை செய்யும், அதில் இருந்து தப்பிக்க வேகமாக அங்கும் இங்கும் துள்ளும் போது அந்த முள் இன்னும் ஆழமாகத் தைக்கும். இரத்தம் வரும். தூண்டிலில் மீன் துள்ளுவதைப் கண்டு தூண்டில் போட்டவன் அதை மேலே இழுப்பான். நீரை விட்டு வெளியே வந்த மீன் மூச்சு முட்டி இறந்து போகும். அதுபோல சூதில் வரும் வெற்றி. முதலில் சுகமாகத் தோன்றினாலும் பின்னால் மிகுந்த துன்பத்தை தரும் எனவே சூதாடக் கூடாது என்கிறார் வள்ளுவர். 

பாடல் 

Monday, December 3, 2012

ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


அவ்வையார்: வள்ளுவரே, ஒருவர் தானம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் ஆட்களை பற்றி நீங்கள் ஏதாவது குறள் எழுதி இருக்கிறீர்களா?

வள்ளுவர்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்...இதோ நான் எழுதிய குறள் 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் 
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஔவ்: இதையே இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்ல முடியுமா ?

வ: இதை விட எப்படி சுருக்க முடியும் ? இருப்பதே ஏழு வார்த்தை...

ஔவ்: முடியும்...இதைப் பாருங்கள்...

ஈவது விலக்கேல் 

ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே. 

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம்...

ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே. 

ஈவது விலக்கேல். 

Saturday, December 1, 2012

ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


அது என்ன அறம் செய்ய "விரும்பு". 

அறம் செய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம் தானே. 

அது என்ன விரும்பு ? விரும்பினால் மட்டும் போதுமா ? அறம் "செய்ய" வேண்டாமா ?

உங்களுக்கு மிக விருப்பமான செயல் எது ? 

இசை, இலக்கியம், வித விதமான உணவு வகைகளை சமைப்பது/உண்பது, புது புது இடங்களை சென்று பார்ப்பது, வித விதமான உடைகளை அணிவது என்று ஏதோ ஒன்றில் விருப்பம் இருக்கும்.

நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம், அதை பற்றி நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்வோம்...எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். 

மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம். புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே, புது டிசைனில் சேலை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்....

எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும். 

நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...மகிழ்ச்சியாக செய்வோம்...

எனவே, அவ்வை பாட்டி சொன்னாள் ...அறம் செய்ய விரும்பு என்று.

விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம், மீண்டும் மீண்டும் செய்வோம், தேடி தேடி போய் செய்வோம்...

அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, அவ்வை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்....


அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...அற  வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான,தர்ம வழியில் நிற்றல் என்று பொருள். அற  வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும். 

எனவே ... அறம் செய்ய விரும்புங்கள் 
 


Friday, November 30, 2012

ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 


எது முடியுமோ, அதை மறைக்காமல் செய்ய வேண்டும்.  ஆங்கிலத்தில் சொல்லுவார்களே Realising one's potential என்று, அது போல. 

எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும்.


எவ்வளவு வேலை பார்க்க முடியுமோ, அவ்வளவு வேலை பார்க்க வேண்டும். 

எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு 

எவ்வளவு தானம் பண்ண முடியுமோ, அவ்வளவு. 

இயல்வது என்றால் முடிந்த வரை. 

கரவேல் என்றால் மறைக்காமல் என்று பொருள்

.......................
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

என்பார் மணிவாசகர் ...

செய்கிறோமா ? எட்டு மணிநேரம் வேலை செய்ய முடியும் என்றால், ஆறு மணி நேரம் செய்கிறோம். நம்மால் பிறர்க்கு உதவ முடியும், ஆனால் செய்வது இல்லை. 

சாலையில் அடி பட்டு கிடக்கும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி போகிறோம். 

பசி என்று கை ஏந்துபவர்களுக்கு பத்து பைசா தர்மம் பண்ணுவது இல்லை. 

முடியாததை செய் என்று சொல்லவில்லை அவ்வை பாட்டி. முடிந்ததையாவது மறைக்காமல் செய் என்கிறாள். 

முடிந்த வரை செய்து கொண்டு இருந்தால், அந்த முடிந்தவற்றின் எல்லை கோடுகள் தானே விரியும். 

நாம் ஏன் முடிந்ததை செய்வது இல்லை ? 

என்னால் நிறைய செய்ய முடியும், செய்யவும் ஆசை இருக்கிறது...ஆனால் வாய்ப்பு இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்போருக்கு அவ்வை பதில் சொல்கிறாள்...அடுத்த ப்ளாக்-இல் 


Thursday, November 22, 2012

ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது. 

உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார். 

(முழுப் பாடல் கீழே 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

)

தானம் பற்றி சொல்லவந்த வள்ளுவர் 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை 

என்றார்.

அதாவது நமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழுதல் சிறந்த அறம் என்றார். 

ஔவையார் அதை இன்னும் சுருக்கமாக சொல்ல vizhaikiraar. 

ஏழு  வார்த்தை  எல்லாம் அனாவசியம்  ... மூணே மூன்று வார்த்தையில் சொல்கிறார். 

Wednesday, November 21, 2012

ஆத்திசூடி - ஆறுவது சினம்

ஆத்திசூடி - ஆறுவது சினம் 

ஆத்திசூடி நாம் ஒன்றாம் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ படித்தது.

ஔவையார் எழுதியது. பெண் என்பதாலோ என்னவோ, அவள் எழுதிய பாடல்களுக்கு பெரிய சிறப்பு கிடைக்கவில்லை. 

திருவள்ளுவர் ஏழு வார்த்தைகளில் எழுதியதை இவள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் எழுதி விடுகிறாள். ஏழு வார்த்தைகளை பார்த்தே நாம் பிரமித்து போய் இருக்கிறோம். இரண்டு வார்த்தைகளை என்னவென்று சொல்லுவது ?

ஆத்திசூடியில் இருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

ஆறுவது சினம்.

சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.

சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.

சரி. ஆறுவது சினம் ... அதனால் என்ன ?

பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும். 

யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும். 

இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோவம் ஆறி விடும். 

கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....