Showing posts with label பட்டினத்தார். Show all posts
Showing posts with label பட்டினத்தார். Show all posts

Monday, January 6, 2020

பட்டினத்தார் - தீங்குகள்

பட்டினத்தார் - தீங்குகள் 


நாம யாருக்கு என்ன தீங்கு செய்கிறோம்?  யார் சொத்தையும் களவாடுகிறோமா? அல்லது பொய் சொல்லி பணம் சம்பாதிக்கிறோமா? கொலை, களவு, நம்பிக்கை துரோகம் என்று செய்கிறோமா? நாம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருக்கிறோம். இதில் தீவினை எங்கிருந்து வருகிறது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போது நமக்கு ஏன் துன்பம் வருகிறது?

தவறு, தீமை என்று தெரியாமலேயே பல தீமைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். தெரியாவிட்டால்? அதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம் அல்லவா?

அது என்ன தெரியாத தவறு?

பட்டினத்தார், பட்டியல் தருகிறார்.

சொல்லால் வரும் குற்றம்.  யாரையும் மனம் நோக்கும் படி பேசுவது, மற்றவர்களை ஏளனமாக பேசுவது, கோபித்து பேசுவது, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது என்று இப்படி சொல்லால் பல குற்றங்களை செய்து கொண்டு இருக்கிறோம்.

சிந்தையால் வரும் குற்றம்.  பொறாமை. பொருந்தா காம சிந்தனை. மற்றவனுக்கு தீமை வர வேண்டும் என்று நினைப்பது. இப்படி சிந்தியால் பல குற்றங்கள் செய்கிறோம்.

பார்வையால் வரும் குற்றங்கள். ஒருவரை பார்வையால் நோகடிக்க முடியும்.  பசி என்று வரும் பிச்சைக்காரனை நாம் பார்க்கும் பார்வை இருக்கிறதே. மாற்றான் மனைவி மேல் பார்க்கும் பார்வை. "யார் கண்ணோ பட்டிருக்கும். சுத்தி போட வேண்டும்" என்று சொல்லுவார்கள். அது  பார்வையால் வரும் குற்றம்.

இதெல்லாம் கூட நமக்குத் தெரியும்.  கேடு என்று தெரியும். இருந்தாலும், பெரிய குற்றம் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்ததாக ஒரு பெரிய குற்றத்தை சொல்கிறார் பட்டினத்தார். இதுவரை கேட்டிராத குற்றம்.

"நல்ல நூல்களை படிக்காமல்,மற்றவற்றை படித்த குற்றம்" என்று புதிதாக ஒரு குற்றத்தைச் சொல்கிறார்.

யோசித்துப் பார்ப்போம். நல்லன அல்லாத நூல்கள் எத்தனை நாம் படிக்கிறோம். இங்கே நூல்கள் என்று சொல்லும் போது சினிமா, டிவி சீரியல், youtube videos , bloggukal , என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூல் , எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

எத்தனை ஆயிரம் மணிகளை நாம் செலவழித்து இருப்போம் இந்த நல்லன அல்லாதவற்றை  அறிந்து கொள்ள.

நல்லன அல்லாதவற்றை படிப்பது எப்படி குற்றம் ஆகும்? ஏதோ பொழுது போகாமல்  வாசிக்கிறதுதான், பாக்குறதுதான். அது ஒரு குற்றமா? என்றால் குற்றம் தான்.

நம் அறிவுக்குள், மனதுக்குள் எது போகிறதோ அது நம்மை மாற்றுகிறது.

நம் எண்ணங்களை, செயல்களை , நம் வார்த்தைகளை அவை மாற்றுகின்றன.

இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொன்னவுடன் இலக்குவன் கொதித்து எழுந்து  எல்லோரையும்   அழித்து விடுகிறேன் என்று புறப்படுகிறான்.  "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்றான்.

அப்போது இராமன் சொல்லுவான் "மறை சொன்ன வாயால், இப்படி கண்டதையும்   பேசலாமா" என்று. வேதம் படித்தால் நல்ல சொல் தான் வரும் என்பது இராமனின்  முடிவு.

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ

நல்லன அல்லாததை படிப்பது பெரிய குற்றம். அது மனதை நல்லன அல்லாதவற்றை சிந்திக்க வைக்கும். சிந்தனை செயலாகும்.

பாடல்


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.


பொருள்


சொல்லால் வருங்குற்றம் = சொல்லால் வரும் குற்றம்

சிந்தையால்  = மனதால்

வருந்தோடஞ் செய்த = வருந்தி ஓடச் செய்த

பொல்லாத தீவினை  = பொல்லாத தீவினை

பார்வையிற் = பார்வையில்

பாவங்கள் = (செய்த ) பாவங்கள்

புண்ணியநூல் = புண்ணியம் தரும் நல்ல நூல்களை

அல்லாத = அவை அல்லாத

கேள்வியைக் = அறிவை

கேட்டிடுஞ் தீங்குகள் = கேட்டிடும் அல்லது படித்திடும் தீங்குகள்

யாவுமற்று = யாவும் விட்டு

எல்லாப் பிழையும் = எல்லா பிழையும்

பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. = பொறுத்து அருள்வாய் கச்சி (காஞ்சீபுரம்) ஏகம்பனே


"எந்தெந்த குப்பைகளை எல்லாம் படித்தேனோ, எந்தெந்த குப்பைகளை எல்லாம் கேட்டேனோ, அந்த பிழை எல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய்"  என்று வேண்டுகிறார்.

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரே ஒரு வாசகத்தைப்  படித்து விட்டு, அனைத்தும் துறந்து  தெருவில் இறங்கினார் பட்டினத்தார். அதற்கப்புறம் ஒன்றும் படிக்கவில்லை.

நாமோ?

இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறோம், டிவி, whatsaap , youtube , facebook  என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மூளைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

"எல்லா பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!"


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_6.html


Friday, January 3, 2020

பட்டினத்தார் பாடல் - பக்தி

பட்டினத்தார் பாடல் - பக்தி 



பெரும்பாலானோர் செய்யும் பக்தி எப்படி இருக்கும்? தினமும் காலையும், மாலையும் விளக்கு ஏற்றுவது, பூ போடுவது, கற்பூர ஆராதனை காட்டுவது, ஊதுபத்தி கொளுத்தி வைப்பது, முடிந்தால் வாழைப் பழத்தின் முனையை சற்று உரித்து வைப்பது....மற்றபடி நாள் கிழமை என்றால் பொங்கல், சுண்டல், வடை, பொரி என்று நைவேத்தியம் பண்ணுவது. முடிந்தால் சில பல இடங்களுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி சிறப்பு வழியில் சென்று கடவுளை தரிசிப்பது.  இதுதான் பெரும்பாலானோர் செய்யும் பக்தி.

இதில் அவர்களுக்கு பெரிய பெருமை வேறு. ஒரு நாள் கிழமை விடுவது கிடையாது, தினம் இரண்டு வேளை பூஜை செய்கிறேன், மடி, ஆச்சாரம் என்று ஒரே பெருமை.

இதெல்லாம் செய்து விட்டால், சொர்க்கத்தில்/வைகுண்டத்தில்/ கைலாயத்தில் ஒரு இடம் நமக்கு கட்டாயம் உண்டு என்று முன்பதிவு செய்த மாதிரி தைரியமாகத் திரிகிறார்கள்.


இதுவா பக்தி?

அத்தனை சொத்தையும் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு கோவணத்துடன் புறப்பட்ட பட்டினத்தார் சொல்கிறார்...."நான் செய்வது என்ன பக்தி...அந்த மூன்று பேர் செய்த பக்திக்கு முன்னால் நான் செய்வது ஒன்றும் இல்லை...அப்படி எல்லாம் செய்ய முடியாத நான், எங்கே இறைவனை அடைய போகிறேன் " என்று அழுகிறார்.


பாடல்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று
ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


பொருள்

"வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்"

சிறுத்தொண்டர் என்று ஒரு நாயனார் இருந்தார். அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். சிறுத்தொண்டரும் ஒத்துக் கொண்டார்.

சிவனடியார் சில நிபந்தனைகள் வைத்தார்...

- பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
- பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது
- தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க வேண்டும்
- முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள்.

என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே என்கிறார் பட்டினத்தார்.

அடுத்தவர் திருநீலகண்டர் என்று ஒரு நாயன்மாரில் ஒருவர்.

"மாது சொன்ன சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்"

(சூள் = ஆணை, சத்தியம்)


மண் பாண்டம் செய்து விற்கும் குயவனார். சிவனடியார். ஆனால், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் பலவீனம் உள்ளவர்.  பல பெண்களிடம் உறவு கொள்பவர். காமத்தை கட்டுப் படுத்தத் தெரியாதவர்.

ஒரு நாள் அவரின் இந்த பலவீனம், அவருடைய மனைவிக்குத் தெரிந்தது. அன்று இரவு  மனைவியின் அருகில் சென்றார். "எம்மைத்  தொடாதீர். தொட்டால் , அந்த திருநீலகண்டத்தின் மீது ஆணை"  என்று சொல்லிவிட்டார்.
என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்று சொன்னார். எம்மை என்பது பன்மை. எனவே எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று இருந்துவிட்டார் திருநீலகண்டர்.  முடியுமா?  காமத்தை அடக்க முடியுமா ?

குடிசை வீடு. அருகில் மனைவி. புரண்டு படுத்தால் கை படும், கால் படும். சிவன் மேல் ஆணை, எம்மை தொடாதீர் என்றதனால் அந்தக் கணம் முதல் எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை  என்று இருந்தார்.

"என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே" என்கிறார் பட்டினத்தடிகள்.

மூன்றாவது ஒரு ஆளைச் சொல்கிறார்.

"நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்"

நாள் + ஆறில்

ஆறே நாள். பக்தி உச்சம் தொட்டது. இறைவன் காட்சி கொடுத்தான்.

கண்ணப்ப நாயனார். சிவ இலிங்கத்தை கண்ட ஆறாவது நாள். இலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம்  வந்ததைக் கண்டு பொறுக்க மாட்டாமல், தன்னுடைய கண்ணை தோண்டி தந்து விட்டார். ஒன்றல்ல, இரண்டு கண்களையும்.

"என்னால் அப்படியும் செய்யும் முடியாதே " என்கிறார் பட்டினத்தார்.

இப்படி எல்லாம் பக்தி செய்து அவர்கள் இறைவனை அடைந்தார்கள். என்னால் அதெல்லாம்  செய்ய முடியாது. நான் எப்படி இறைவனை அடைவேன்  என்று அயர்ந்து போகிறார் பட்டினத்தார்.

அவர் கதி அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை ?

வீட்டுக்குள், சௌகரியமாக இருந்து கொண்டு, உடல் நோகாமல் பக்தி செய்து விட்டு, "அடடா என்னைப் போல் பக்திமான் உண்டா" என்று இறுமாத்துப் போகிறோம்.

அப்படியெல்லாம் செய்தவர்கள், இறைவனை அடைந்தார்கள்.

அனைத்தையும் விட்டு விட்ட பட்டினத்தார் போவோமா மாட்டோமா என்று சந்தேகம் கொள்கிறார்.

நாம்?

அடுத்த முறை கோவிலுக்குப் போனதற்கு,  உண்டியலில் பணம் போட்டதற்கு,  விளக்கு ஏற்றி பாட்டு படிப்பதற்கு ..இதெல்லாம் பெரிய பக்தி என்று   நினைக்கும் போது ,இந்தப் பாடலையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_3.html


Friday, December 28, 2012

பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


கடவுளை வணங்க வேண்டும் என்று நினைக்கிறார் பட்டினத்தார். கண் ஒரு பக்கம், மனம் ஒரு பக்கம், நாக்கு ஒரு பக்கம் என்று அவரை பல பக்கங்களில் இழுத்துக் கொண்டு அலைகிறது. மனம் ஒரு நிலை பட மாட்டேன் என்கிறது. 

எல்லாம் துறந்த பட்டினத்தாருக்கு அந்த நிலை. 

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க -  அறியாத
சடகசட மூட மட்டி 

என்று நோகிறார் அருணகிரி. அவன் திருவடி என்ற தாமரையில் மனதை அரை நிமிடம் கூட முறைப் படி தியானம் பண்ண முடியாத சட - கசட - மூட - மட்டி என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் அவர்.

பட்டினத்தாருக்கும் அருணகிரிக்கும் இந்த நிலை என்றால் நம்ம நிலை என்ன ?

பாடல்

Tuesday, December 18, 2012

பட்டினத்தார் - எரிந்த கட்டை மீது எரித்து


பட்டினத்தார் - எரிந்த கட்டை மீது எரித்து 


நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்கு கீழே எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள். எனக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு. நான் எவ்வளவு படித்து இருக்கிறேன்....இப்படி இந்த "நான்" என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. 

இத்தனை சுகங்களையும், உறவுகளையும், சேர்த்து வைத்த சொத்தையும் விட்டு போக மனம் இல்லை. 

இது எல்லாம் ஒன்றும் இல்லை. நம்மை விடவும் பெரிய பெரிய அரசர்கள் இதற்க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். அப்படி பட்ட மன்னர்களையும், அவர்கள் இறந்த பின், புது இடத்தில் கூட இல்லை முன்பு ஏதேதோ உடல்களை எரித்த அதே இடத்தில் வைத்து, கட்டி இருந்த உள் ஆடைகளை கூட எடுத்து விட்டு எரித்து சாம்பலாக்கி இருக்கிறார்கள். நாம் எல்லாம் எம்மாத்திரம். 

அதை எல்லாம் பார்த்த பின்னும் , இந்த வாழ்க்கையில், இந்த சுக போகங்களில், இந்த பிறவியில் இன்னுமா உங்களுக்கு ஆசை என்று கேட்க்கிறார் பட்டினத்தார்...
 
பாடல்

Monday, December 17, 2012

பட்டினத்தார் - உருகும் மொழி


பட்டினத்தார் - உருகும் மொழி


உபதேசம். பட்டினத்தார், அருணகிரியார், மாணிக்க வாசகர் என்று எல்லோரும் அவர்களுக்கு இறைவன் உபதேசம் பண்ணியதாகவே சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய், முருகன் தனக்கு உபதேசம் மட்டும் அல்ல ஜெப மாலையும் சேர்த்து தந்ததாக கூறுகிறார் ("ஜெப மாலை தந்த சற் குருநாதா, திருவாவினன் குடி பெருமாளே).

இங்கே பட்டினத்தார் தனக்கு இறைவன் உபதேசம் செய்ததாக கூறுகிறார். அந்த உபதேச மொழியையை கேட்டால் ...


Saturday, December 8, 2012

பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்க்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலையும் மக்களைப் பார்த்து பாடுகிறார்....

பாடல்

Friday, December 7, 2012

பட்டினத்தார் - பகலை இரவென்பார்


பட்டினத்தார் - பகலை இரவென்பார் 


படித்தால் புரிகிறது. ஆனால் உணர முடிவதில்லை. 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். மனம் அதை வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

அது மட்டும் அல்ல, ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு ஏதோ எல்லா உண்மையும் அறிந்தவர்கள் போல் அடித்துப் பேசும் ஆட்களைப் பார்த்து சொல்கிறார் பட்டினத்துப் பிள்ளை...பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என்று.....

அந்த திருவருட் பிரகாசம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது...பார்த்தால்தானே?...கவனம் எல்லாம் புத்தகத்திற்குள்.... 

பாடல் 

Saturday, June 2, 2012

பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார், இருந்த செல்வத்தையெல்லாம் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு உண்மையையை தேடி திரிந்தார்.

அவர் கண்ட உண்மைதான் என்ன?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அவரை மிகவும் பாத்திருக்கிறது. 

நிரந்தரமான ஏதோ ஒன்றை தேடி அவர் அலைந்திருக்கிறார்.
செல்வம், பெண்கள், பிள்ளைகள், உறவுகள் ஏன் நமது உடம்பே கூட நிரந்திரம் அல்ல என்று அறிந்த அவர் சாஸ்வதமான ஒன்றை தேடி அலைந்திருக்கிறார்.

கிடைத்ததா இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.
[
அவருடைய பாடல்கள் எளிமையானா பாடல்கள்.

நிலையாமையை பற்றி அவர் போல் யாரும் அவ்வளவு ஆழமாக சொல்லி இருகிறார்களா என்று தெரியவில்லை.

Saturday, April 14, 2012

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம்

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம் 


மரண பயத்திற்கு முதல் காரணம் உடம்பின் மேல் உள்ள பற்று. மரண பயம் நீங்க வேண்டும் என்றால் உடல் பற்று நீங்க வேண்டும். இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.  பட்டினத்தார் இந்த உடலின் மேல் உள்ள கவனத்தை குறைக்க பல பாடல்கள் பாடி உள்ளார்...அதில் ஒன்று ....