Monday, January 6, 2020

பட்டினத்தார் - தீங்குகள்

பட்டினத்தார் - தீங்குகள் 


நாம யாருக்கு என்ன தீங்கு செய்கிறோம்?  யார் சொத்தையும் களவாடுகிறோமா? அல்லது பொய் சொல்லி பணம் சம்பாதிக்கிறோமா? கொலை, களவு, நம்பிக்கை துரோகம் என்று செய்கிறோமா? நாம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருக்கிறோம். இதில் தீவினை எங்கிருந்து வருகிறது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போது நமக்கு ஏன் துன்பம் வருகிறது?

தவறு, தீமை என்று தெரியாமலேயே பல தீமைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். தெரியாவிட்டால்? அதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம் அல்லவா?

அது என்ன தெரியாத தவறு?

பட்டினத்தார், பட்டியல் தருகிறார்.

சொல்லால் வரும் குற்றம்.  யாரையும் மனம் நோக்கும் படி பேசுவது, மற்றவர்களை ஏளனமாக பேசுவது, கோபித்து பேசுவது, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது என்று இப்படி சொல்லால் பல குற்றங்களை செய்து கொண்டு இருக்கிறோம்.

சிந்தையால் வரும் குற்றம்.  பொறாமை. பொருந்தா காம சிந்தனை. மற்றவனுக்கு தீமை வர வேண்டும் என்று நினைப்பது. இப்படி சிந்தியால் பல குற்றங்கள் செய்கிறோம்.

பார்வையால் வரும் குற்றங்கள். ஒருவரை பார்வையால் நோகடிக்க முடியும்.  பசி என்று வரும் பிச்சைக்காரனை நாம் பார்க்கும் பார்வை இருக்கிறதே. மாற்றான் மனைவி மேல் பார்க்கும் பார்வை. "யார் கண்ணோ பட்டிருக்கும். சுத்தி போட வேண்டும்" என்று சொல்லுவார்கள். அது  பார்வையால் வரும் குற்றம்.

இதெல்லாம் கூட நமக்குத் தெரியும்.  கேடு என்று தெரியும். இருந்தாலும், பெரிய குற்றம் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்ததாக ஒரு பெரிய குற்றத்தை சொல்கிறார் பட்டினத்தார். இதுவரை கேட்டிராத குற்றம்.

"நல்ல நூல்களை படிக்காமல்,மற்றவற்றை படித்த குற்றம்" என்று புதிதாக ஒரு குற்றத்தைச் சொல்கிறார்.

யோசித்துப் பார்ப்போம். நல்லன அல்லாத நூல்கள் எத்தனை நாம் படிக்கிறோம். இங்கே நூல்கள் என்று சொல்லும் போது சினிமா, டிவி சீரியல், youtube videos , bloggukal , என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூல் , எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

எத்தனை ஆயிரம் மணிகளை நாம் செலவழித்து இருப்போம் இந்த நல்லன அல்லாதவற்றை  அறிந்து கொள்ள.

நல்லன அல்லாதவற்றை படிப்பது எப்படி குற்றம் ஆகும்? ஏதோ பொழுது போகாமல்  வாசிக்கிறதுதான், பாக்குறதுதான். அது ஒரு குற்றமா? என்றால் குற்றம் தான்.

நம் அறிவுக்குள், மனதுக்குள் எது போகிறதோ அது நம்மை மாற்றுகிறது.

நம் எண்ணங்களை, செயல்களை , நம் வார்த்தைகளை அவை மாற்றுகின்றன.

இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொன்னவுடன் இலக்குவன் கொதித்து எழுந்து  எல்லோரையும்   அழித்து விடுகிறேன் என்று புறப்படுகிறான்.  "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்றான்.

அப்போது இராமன் சொல்லுவான் "மறை சொன்ன வாயால், இப்படி கண்டதையும்   பேசலாமா" என்று. வேதம் படித்தால் நல்ல சொல் தான் வரும் என்பது இராமனின்  முடிவு.

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ

நல்லன அல்லாததை படிப்பது பெரிய குற்றம். அது மனதை நல்லன அல்லாதவற்றை சிந்திக்க வைக்கும். சிந்தனை செயலாகும்.

பாடல்


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.


பொருள்


சொல்லால் வருங்குற்றம் = சொல்லால் வரும் குற்றம்

சிந்தையால்  = மனதால்

வருந்தோடஞ் செய்த = வருந்தி ஓடச் செய்த

பொல்லாத தீவினை  = பொல்லாத தீவினை

பார்வையிற் = பார்வையில்

பாவங்கள் = (செய்த ) பாவங்கள்

புண்ணியநூல் = புண்ணியம் தரும் நல்ல நூல்களை

அல்லாத = அவை அல்லாத

கேள்வியைக் = அறிவை

கேட்டிடுஞ் தீங்குகள் = கேட்டிடும் அல்லது படித்திடும் தீங்குகள்

யாவுமற்று = யாவும் விட்டு

எல்லாப் பிழையும் = எல்லா பிழையும்

பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. = பொறுத்து அருள்வாய் கச்சி (காஞ்சீபுரம்) ஏகம்பனே


"எந்தெந்த குப்பைகளை எல்லாம் படித்தேனோ, எந்தெந்த குப்பைகளை எல்லாம் கேட்டேனோ, அந்த பிழை எல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய்"  என்று வேண்டுகிறார்.

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரே ஒரு வாசகத்தைப்  படித்து விட்டு, அனைத்தும் துறந்து  தெருவில் இறங்கினார் பட்டினத்தார். அதற்கப்புறம் ஒன்றும் படிக்கவில்லை.

நாமோ?

இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறோம், டிவி, whatsaap , youtube , facebook  என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மூளைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

"எல்லா பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!"


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_6.html


3 comments:

  1. ரொம்ப மனதில் பதியும் வண்ணம் விளக்கி இருக்கிறீர்கள்.உடனே மாறாவிட்டாலும் நேரத்தை விரயமாக்கும் பொழுது குற்ற உணர்ச்சி தலை தூக்கும்.அதுவும் நல்லது.

    ReplyDelete
  2. இந்த blog -ஐப் படிப்பது குற்றங்களில் சேராது!

    ReplyDelete
  3. SINTHANIL VARUM THODAM

    ReplyDelete