Sunday, January 5, 2020

கம்ப இராமாயணம் - இரணியன்

கம்ப இராமாயணம் - இரணியன் 


வலிமை வர வர மனிதனுக்குள் ஆணவம் ஏறுகிறது. ஆணவத்தின் உச்சம், நான் தான் எல்லாம் என்று சொல்ல வைக்கிறது.

என்னால் தான் இந்த நிறுவனம் நடக்கிறது, என்னால்தான் இந்த குடும்பம் நடக்கிறது, இந்த நாடு என்னால் நடத்தப் படுகிறது என்று மனிதன் நினைக்கத் தலைப்படுகிறான்.


ஒரு குடும்பத் தலைவி நினைக்கலாம், "நான் மட்டும் இல்லை என்றால் இந்த வீடு என்ன கதி ஆகும்...நான் இருக்கேனா ஒழுங்கா எல்லாம் நடக்குதோ" என்று.

அளவு மாறுபடலாம், நிகழ்வு ஒன்றுதான்.

என்னால் நிகழ்கிறது என்பது ஒரு அரக்க குணம்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். மிகப் பெரிய பலசாலி.  மிகப் பெரிய என்றால் எவ்வளவு பெரிய தெரியுமா? கம்பன் காட்டுகிறான்.

எட்டு திக்குகளையும் காவல் காக்கும் யானைகள் இருக்கின்றன அல்லவா? அதில் இரண்டு யானைகளை இரண்டு கையால் எடுத்து, ஒன்றோடு ஒன்று அப்பளம் மாதிரி நொறுக்குவானாம்.  பெரிய கடல் இருக்கிறது அல்லவா? அது அவனுக்கு கணுக்கால் மட்டும் வருமா. அப்படி என்றால் முழுக்  காலும் எவ்வளவு பெரிதாக இருக்கும், அவ்வளவு பெரிய கால் என்றால் ஆள் எப்படி இருப்பான் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.


பாடல்

‘பாழி வன் தடம் திசை சுமந்து
    ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை
    கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய்,
    அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு
    எனக் கடந்து ஏறும்.


பொருள்

‘பாழி = அகன்ற

வன்  = வன்மையான

தடம் = வழி

திசை சுமந்து = திசைகளை சுமந்து நிற்கும்

ஓங்கிய = பெரிய

பணைக்கைப் = பனை மரம் போன்ற பெரிய தும்பிக் கைகளை

பூழி  = துவாரம் உள்ள

வன்கரி = பலமான யானை

இரண்டு = இரண்டினை

இருகை  கொடு  = இரண்டு கைகளை கொண்டு

பொருத்தும் = முட்ட வைப்பான்

ஆழம் காணுதற்கு அரியவாய், = ஆழம் காண முடியாத

அகன்ற = அகன்ற

பேர் ஆழி = பெரிய கடல்

ஏழும் = ஏழையும்

தன் இருதாள் அளவு = தன்னுடைய இரண்டு கால் பாதங்களின் அளவு

எனக் கடந்து ஏறும். = என்று அதில் நடந்தே கடந்து விடுவானாம்.


கடல் கணுக்கால் அளவு என்றால் ஆள் எப்படி இருப்பான்?

ஐந்து அல்லது ஆறு அடி இருக்கும் நமக்கு இவ்வளவு ஆணவம், இறுமாப்பு இருக்கும் என்றால், இரணியனுக்கு எவ்வளவு இருந்திருக்கும் ?

நரசிம்ம  அவதாரம் பற்றி முன்பு எழுதி இருந்தேன். இது, அதன் முன் பகுதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_5.html


1 comment:

  1. கம்பன் அசுரனின் பலத்தை காண்பிக்க கையாண்ட உதாரணங்கள் பிரமிப்பு ஊட்டுகிறது.
    ஏற்கனவே நரசிம்ம அவதாரம் பற்றி எழுதிய பதிவின் லிங்கை ஒரு
    hyperlink மூலம் கொடுத்து இருக்கலாம்.

    ReplyDelete