Tuesday, January 21, 2020

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும்

திருக்குறள் - திருமணமும் சமுதாயக் கடமைகளும் 


(முந்திய பிளாகின் url

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html)


எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள் என்று திருமணம் ஆனவர்களைக் கேட்டால்,

 "அந்தக் காலத்தில், அப்பா அம்மா பாத்து செஞ்சு வச்சாங்க, பண்ணிக்கிட்டேன்" என்று சிலர் சொல்லுவார்கள்.

 "அந்தப் பெண்ணை/பையனை பிடிச்சு இருந்தது...காதல் பண்ணி திருமணம் செய்து கொண்டோம்...எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது...எவ்வளவு காலம் தான் காதலிச்சுக்கிட்டே இருக்கிறது...?" என்று சிலர் சொல்லலாம்.

இன்னும் சிலர், "அத்தை பொண்ணு, மாமா பையன்...சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்று சிலர் சொல்லலாம்.

ஒரு இனக் கவர்ச்சி. ஒரு சந்தோஷம். புது உறவில் வரும் ஒரு குறுகுறுப்பு. ஒரு எதிர்பார்ப்பு என்று கொஞ்சம் காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், இவை எல்லாம் இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்டவை. திருமணம் என்பது அவ்வ்ளவுதானா? இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயமா? அப்படி என்றால் கட்டாயம் மற்றவர்கள் அதில் தலையிடக் கூடாதுதான்.

நம் சமுதாயம் திருமணத்தை அப்படி பார்க்கவில்லை.

நம் சமுதாயம்  திருமணத்தை ஒரு அறமாக பார்த்தது. அதற்கு "இல்லறம்" என்று பெயர் வைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறம் என்று பெயர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

இன்னொன்று, திருமணம் என்பது ஏதோ இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று  நம் சமுதாயம் பார்க்கவில்லை.

திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாய ஒப்பந்தம் என்று நம் சமுதாயம்  சிந்தித்தது.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்களா, அவர்களுக்கு சில  கடமைகளை முன் வைத்தது நம் இனம்.

இந்த கடமைகளை, பொறுப்புகளை நீ ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து  கொள். இல்லை என்றால், இல்லறம் உனக்கு சரிவராது  என்று அடித்துச் சொன்னது நம்  சமுதாயம்.

அது என்ன கடமைகள்? அதை ஏன் செய்ய வேண்டும் ? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.

சரி, ஏற்றுக் கொள்வோம். சில சமுதாய கடமைகள் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும்  திருமணம் செய்து கொண்டால் அந்த சமுதாய கடமைகளை செய்ய முடியாதா?  என்றும் ஒரு கேள்வி வரும் அல்லவா?

ஒரு ஆணும் ஆணுமோ அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ அந்த கடமைகளை செய்ய முடியாது  என்று நாம் பார்க்க இருக்கிறோம்.

சரி அது என்ன கடமைகள்? பதினோரு கடமைகளை சொல்கிறார் வள்ளுவர். அதெல்லாம் தெரியாமல் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கிறோம்.

அவை என்னென்ன என்று பார்க்க இருக்கிறோம்.

அப்படித்தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_21.html





1 comment:

  1. சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்.அந்த பதினோரு கடமைகளை அறிய இப்போவாவது ஒரு வாய்ப்பு!

    ReplyDelete