Wednesday, January 29, 2020

திருக்குறள் - நாடு

திருக்குறள் - நாடு 


சில நாட்களுக்கு முன் நாம் நமது குடியரசு தினத்தை கொண்டாடினோம். நம்மிடம் உள்ள ஆயுத பலம்,  அரசு மேற்கொண்ட முயற்சிகள் போன்றவற்றை அணிவகுப்பில் இடம் பெறச் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினோம்.  இவை ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதார மந்த நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற சவால்களும் நம் முன்னே இருக்கின்றன.

சற்று தள்ளி, வேறொரு நாட்டில் கொடிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது உலகம் பூராவும் பரவி விடுமோ என்று உலகமே அஞ்சுகிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும், சில நல்லவைகளும் , சில அல்லாதவைகளும் இருப்பதைக் காண்கிறோம்.

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்....என்னது ? ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா என்று நமக்கு வியப்பாக இருக்கும். என்னதான் சொல்கிறார் பார்த்து விடுவோம்.

குறள்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு


பொருள்

உறுபசியும்  = பெரிய பசியும்

ஓவாப் பிணியும் = நீங்காத நோயும்

செறுபகையும் = அழிக்கின்ற பகையும்

சேராது = சேராமல்

இயல்வது = இருப்பது

நாடு = ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.

பசியும், பிணியும், பகையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்கிறார்.

இது சரிதானா? வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம்,  கட்டமைப்பு  (infrastructure ), எதிர்கால பாதுகாப்பு (social security ) இதெல்லாம் வேண்டாமா?  சட்டம் ஒழுங்கு முக்கியம் இல்லையா? போன்ற கேள்விகள் எழலாம்.

சிந்திப்போம்.

அது  என்ன உறு பசி ?

பெரிய பசி. கொடுமையான பசி.

அங்கொன்றும், இங்கொன்றும் சிலருக்கு சில வேளை பசி இருக்கலாம். யாருக்குமே, எங்குமே பசியே இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது.

பெரிய பசி என்றால், பஞ்சம் வந்து, உணவு தட்டுப்பாடு வந்து அதனால் மக்கள் பசியால்  வாடுவது. அது உறு பசி.

அந்த உறு பசி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

விவசாயிகள் பாடுபட வேண்டும் (agricultural production ). அவர்களுக்கு விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் (Levy and pricing ), விவசாயம்  செய்ய நீர்  வேண்டும். அதற்கு நீர் மேலாண்மை வேண்டும் (water management ). மழை நீரை தேக்கி தேவையான நேரத்தில் பயன் படுத்தும்  விதத்தில் அணை  கட்ட வேண்டும். (Dam  - infrastructure ). விளைவித்த பொருள்களை சரியான படி  சேமித்து வைக்க வேண்டும்.. உணவு கிடங்குகள் வேண்டும் (storage , godown , warehouse ....infrastructure ). உணவு எல்லா இடத்திலும் உண்டாக்க முடியாது.  நிலத்தின் வளம், நீர் வளம் இவற்றைக் கொண்டு தான் உணவு உற்பத்தி செய்ய முடியும்.  ஒரு இடத்தில் உற்பத்தி செய்த பொருளை நாட்டில் எல்லா  பாகத்துக்கும் விரைந்து கொண்டு செல்ல வேண்டும். (distribution ). அப்படி  கொண்டு செல்ல நல்ல சாலை வசதி வேண்டும் (road , வண்டிகள், infrastructure ).  எல்லோராலும் விலை கொடுத்து வாங்க முடியாமல் இருக்கலாம். மான்ய விலையில் உணவு பொருட்களைத் தர பொது விநியோக முறை வேண்டும்  (public distribution சிஸ்டம்).

பசியை ஒழிக்க வேண்டும் என்றால், இவ்வளவு செய்ய வேண்டும்.

அடுத்தது,  "ஓவா பிணி"

தீராத நோய். தீராத நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆரோக்கியமான உணவு வேண்டும்.

சுகாதாரம் வேண்டும் (hygene ).

அதற்கு நீரும், காற்றும் சுத்தமாக இருக்க வேண்டும் (pollution control ).

குப்பைகளை, கழிவு நீரை உடனடியாக நீக்க வேண்டும் (waste  அண்ட் waste water management ).

நோய் தடுப்பு முறை வேண்டும் (vaccination )

நோய் இன்னது என்று அறியும் அறிவு வேண்டும் (medical diagnosis )

நல்ல மருத்துவ மனைகள் வேண்டும் (hospital )

அவற்றை நிர்வாகம் செய்ய நல்ல மருத்துவர்கள் வேண்டும் (medical education ).

புது புது மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும் (research and development )

நோய் பரவாமல் தடுக்க வேண்டும் (quarantine ).

ஓவா பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இவை எல்லாம் செய்ய வேண்டும்.

செறு  பகை

அடுத்து நிற்கும் பகை, அழிக்கும் பகை.

இது இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

படைகள் வேண்டும் (defence force )

ஆயுதங்கள் வேண்டும் (arms and ammunitions )

எதிரியின் நடவடிக்கைளை கவனிக்க வேண்டும் (military intelligence )

அரண் வேண்டும்.

இவற்றிற்கு எல்லாம் பணம் வேண்டும் (resources ). அதற்கு வரி வசூல் செய்ய வேண்டும். அதற்கு நாட்டில் பொருளாதாரம் முன்னேற வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும்.

இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்ய நல்ல அரசாங்கம் வேண்டும்.

அப்படி ஒரு அரசு இருந்தால், அது இந்த குறளில் சொல்லாத மற்றவற்றையும் தானே செய்யும்.

நான் தந்த பட்டியல் சிறியதுதான். இன்னுமும் எவ்வளவோ இருக்கிறது.

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார் வள்ளுவர் ?

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_29.html

2 comments:

  1. இவ்வளவு பொருள் பொதிந்த விஷயத்தை எப்படி இவ்வாறு நுணுக்கமாகவும் சில வார்த்தைகளில் பல நூற்றாண்டு முன்னமேயே சொல்ல முடிந்தது வள்ளுவரால்? அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

    ReplyDelete
  2. இந்தியாவில் மூன்றுமே இருக்கின்றனவே என்று வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete