Showing posts with label bharadhiyaar. Show all posts
Showing posts with label bharadhiyaar. Show all posts

Thursday, February 26, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4


பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், ஒரு நாள் தெருவில் , ஞானியைப் போல தோன்றும் ஒரு குள்ள மனிதனைக்  கண்டார்.ஏனோ அந்த மனிதனின் மேல் பாரதியாருக்கு ஒரு ஈர்ப்பு.

அந்த குள்ளச் சாமியின் கையை பற்றிக் கொண்டு "நீ யார் " என்று கேட்டார்.

அப்போது அந்த குள்ளச் சாமி, பாரதியின் கையை உதறி விட்டு ஓட்டம் பிடித்தான். பாரதியும்  விடவில்லை.அந்த குள்ளச் சாமியின் பின்னாலேயே  ஓடுகிறார்.

இரண்டு பெரிய ஞானிகள் செய்யும் வேலையா இது என்று நமக்கு வியப்பு வரும்.

ஓடிய குள்ளச் சாமி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தை அடைந்தான்.  பாரதியும்  அங்கே சென்று அந்த குள்ளச் சாமியை மடக்கிப் பிடித்தான்.

பாடல்


பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்

பொருள்

பற்றிய கை திருகி அந்த குள்ளச் சாமி , பரிந்தோடப் பார்த்தான், நான் விடவே இல்லை.

சுற்று முற்றும் பாத்து, பின் புன் முறுவல் பூத்தான் அந்த குள்ளச் சாமி.

அவனுடைய தூய்மையான தாமரை போன்ற இரண்டு பாதங்களைக் கண்டேன்.
குற்றம் இல்லாத அந்தக் குள்ளச் சாமியும், கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த வீட்டின் கொல்லைப் புரத்தை அடைந்தான்.

அவன் பின்னே நான் ஓடிச் சென்று அவனை மறித்துக் கொண்டேன்

......


அதன் பின் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

குள்ளச் சாமி பாரதிக்கு ஞான உபதேசம்  செய்தான்.

என்னென்ன செய்திகள் சொல்லி இருப்பார், எவ்வளவு நேரம் சொல்லி இருப்பார்,  வேதம், புராணம், இதிகாசம் இவற்றில் இருந்து எல்லாம் எடுத்து அறங்களை  சொல்லி இருப்பார் இல்லையா ?

சிந்தித்துக் கொண்டிருங்கள்...

குள்ளச் சாமி என்ன சொன்னார் என்று நாளை பார்ப்போம்....


Wednesday, February 25, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3


பாரதியார், அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீ யார்" என்று கேட்கிறார்.

பாடல்

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பொருள்

நீ யார். உனக்கு உள்ள திறமை என்ன ? நீ என்ன உணர்வாய் ? ஏன் கந்தை சுற்றி திரிகிறாய் ? தேவனைப் போல ஏன் விழிக்கிறாய் ? சின்ன பையன்களோடும் நாய்களோடும்  ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் ? புத்தனைப் போல இருக்கிறாயே நீ யார் ? பரம சிவன் போல இருக்கிறாய் ....ஆவலோடு நிற்கிறாய் ....நீ அறிந்தது எல்லாம் எனக்கு உணரத்த வேண்டும்

என்று பாரதியார் அவனை வேண்டுகிறார்.

நாம் அறிவை சேர்ப்பது பொருள் தேட, சுகம் தேட, மேலும் அறிவைத் தேட.

நம் அறிவை நாம் எதற்கு உபயோகப் படுத்துகிறோம் ?

யாருக்கோ பயன் படுத்துகிறோம்.  அவர் நமக்கு சம்பளம் தருகிறார். நாம் படித்தது  அத்தனையும் பொருள் தேடவே சென்று விடுகிறது. பொருள் தேடுவதைத் தவிர   வேறு ஏதாவது நாம் செய்கிறோமா நம் அறிவை வைத்து.

குள்ளச் சாமி, பெரிய ஞானி. பாரதி குரு என்று ஏற்றுக் கொண்ட ஞானி. அவர் கந்தை  கட்டி அலைகிறார்.

பெரிய ஆட்களோடு சகவாசம் இல்லை....சின்னப் பையன்களோடும், நாய்களோடும்  விளையாடுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடு ! பொருள் மேல் பற்று இல்லை. அறிவின் மேல் பற்று இல்லை.  உறவுகளின் மேல் பற்று இல்லை. ஒரே விளையாட்டு தான்...


Tuesday, February 24, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2 


புதுவை நகரில் பாரதியார் இருந்த காலம். உபநிடதங்களில் தமிழாக்கத்தை திருத்திக் கொண்டிருந்த ஒரு மதிய வேளை. யாரும் இல்லாத் தெரு. அங்கே குள்ளமாக ஒரு ஆள் வந்தான். பார்த்தால் அழுக்கு நிறைந்து, ஒரு குப்பை கோணியை சுமந்து வருகிறான். அவன் கண்ணில் ஒரு ஒளி . அவன் தான் தன் குரு என்று பாரதி கண்டு கொள்கிறான்....ஒரு பிச்சைக்காரனை போன்ற தோற்றம் உள்ள ஒருவனை குரு என்று அடையாளம் கண்டு கொள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட ஒருவரால் தான் முடியும்.

பாரதி ஓடிச் சென்று அந்த குள்ளச் சாமியின் கையைப் பற்றிக் கொள்கிறார்.



அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.


அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு பாரதி சொல்கிறான் 

"சிலர் உன்னை ஞானி என்கிறார்கள், சிலர் உன்னை பித்தன் என்கிறார்கள், வேறு சிலரோ  உன்னை சித்தி பெற்ற யோகி என்கிறார்கள், நீ யார் என்று எனக்குச் சொல் " 

ஞானிகள் தங்களை அடையாளம் காட்ட மாட்டார்கள். 

அடியாளம் காட்டுபவர்கள் ஞானியாக  இருக்க மாட்டார்கள். 

அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு அவர்கள் தென் படுவார்கள். 

ஞானியை பித்தன் என்றும் இந்த உலகம் சொல்லி இகழ்ந்து இருக்கிறது.

ஞானிகள் அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். 

"நீங்கள் யார் " என்று நம்மை யாராவது கேட்டால் நாம் எவ்வளவு சொல்வோம் நம்மைப் பற்றி ...

இந்த குள்ளச் சாமியிடம் பாரதி "எனக்கு நின்னை உணர்த்துவாய்" என்று கேட்டவுடன்  அந்த குள்ளச் சாமி என்ன செய்தார் தெரியுமா ?


Sunday, February 22, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1 


பாரதியார் !

சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் பாடல்களைப் பாடியதால், அவரை  ஒரு தேசியக் கவி, புரட்சிக் கவி, என்று மக்கள் இனம் கண்டார்கள்.

பெண் விடுதலைக் கவிஞர் என்றும் அறியப்பட்டார்.

அவருடைய பாடல்கள் மிக மிக எளிமையாக இருந்ததால் அவற்றில் ஒரு ஆழம் இல்லையோ என்று எண்ணியவர்களும் உண்டு. கவிதை என்றால் அதில் அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

பாரதியாரின் அதிகம் அறியாத இன்னொரு முகம் அவரின் ஆன்மீக முகம்.

அதைக் கண்டு சிலிர்த்துப் போனேன்.

முதலில் அவரின் குரு தரிசனம் என்ற பாடல்.

மாணவன் எப்போது தயாராகி விட்டானோ அப்போது குரு அவன் முன் தோன்றுவார்  என்பது நம் மத நம்பிக்கை. (when the student is ready, the Master will appear)

பாரதியார் குருவை தேடித்  தவிக்கிறார்.

ஆழ்ந்த ஆன்மீக தாகம்  இருக்கிறது.யாரிடம் போனால் அந்த தாகம் தீரும் என்று தவித்துக்  கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் முன் ஒரு குரு  தோன்றினார்.அந்த குருவின் தரிசனத்தைப் பற்றி  கூறுகிறார்.

என்ன ஒரு ஆழமான அருமையான கவிதை.


பாடல்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

சீர் பிரித்த பின்

அன்று ஒரு நாள்  புதுவை நகர் தனிலே கீர்த்தி
அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில்,
இராஜா ராமையன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநி டத்தை
மொழி பெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனை வேண்டிக் கொள்ள யான் சென்று ஆங்கண் 
இருக்கையிலே ...அங்குவந்தான் குள்ளச் சாமி.

பொருள்

பாரதியார் புதுச் சேரியில் இருந்த காலம். அங்கு இராஜ இராமையன் என்ற நாகை  நகரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர்  இருந்தார்.அவரின் தந்தை உபநிடதங்களை  தமிழில் மொழி பெயர்த்து வைத்து இருந்தார். இராஜ இராமையன், அந்த மொழி பெயர்ப்பை பாரதியிடம் கொடுத்து பிழை திருத்தித் தரச் சொன்னார்.

பாரதியும், தினமும் அதை படித்து பிழை திருத்திக் கொண்டு இருக்கும் போது , ஒரு நாள்

குள்ளச் சாமி அங்கு வந்தான்.



Monday, August 12, 2013

பாரதியார் - கடவுள் எங்கே ?

பாரதியார் - கடவுள் எங்கே ?


பாடல்

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

ஒரு நாள் ஒரு சீடன் பாரதியிடம் கேட்டான், குருவே, நான் இறைவனைக் காண வேண்டும். அவர் எப்படி இருப்பார் ? எங்கே இருப்பார் ? இராமர்  போல, கிருஷ்ணர் போல, சிவன் போல, திருமால் போல இருப்பாரா ? கோவிலில்,  குளத்தில்,மரத்தில், மலையில் ...எங்கே காணலாம் அவரை என்று கேட்டான்.

பாரதி பதில் சொன்னான்....வேதாந்தத்தின் உச்சம் அந்த  பாடல்கள்.

கடவுள் என்பவர் இரவி வர்மா வரைந்த படங்களில் உள்ளதைப் போல இருக்க மாட்டார்.

இந்த உலகம்  எல்லாம் அவன் படைத்தது என்பதால் எல்லாவற்றிலும் அவன் இருப்பான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எல்லாம் மனிதனின் மடமை. எல்லாம் அவன் படைத்தது . அதில் உயர்வு ஏது , தாழ்வு ஏது ?

பாரதி  சொல்கிறான்.

 கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;


கழுதையை, கீழான பன்றியை, தேளைக் கண்டு தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும். 

சிவன் எங்கு இருக்கிறான்...எப்படி இருப்பான்....அழுக்கை சுமக்கும் கழுதை, அழுக்கை  உணவாக உண்ணும் பன்றி, விஷத்தை கக்கும் தேள் அவற்றின் பாதத்தில் சிவன் இருக்கிறான். 

சொன்ன பின் பாரதி யோசிக்கிறான்...அடடா எல்லாம் இறைவனின் அம்சம் என்று  சொல்ல வந்த நானே தவறு செய்து விட்டேனே என்று  நினைக்கிறான். கழுதையை  வெறுமனே சொன்ன பாரதி பன்றியை கீழான பன்றி என்று சொல்லி  விட்டான். விலங்குகளுக்குள் என்ன உயர்வு தாழ்வு.....

 தவறை திருத்துகிறான் அடுத்த வரியில் 

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

குப்பையையும் மலத்தையும் வணங்க வேண்டும்  என்றான்.அதிலும் கடவுள் இருக்கிறான். கடவுள் என்பவன்  வில்லேந்தி,சங்கு சக்கரம் ஏந்தி, திரி சூலம் ஏந்தி  வருபவன் அல்ல. கூளத்திலும் மலத்திலும் இருப்பவன். 

மீண்டும் பாரதி யோசிக்கிறான்.  அடடா மீண்டும் தவறு நிகழ்ந்து விட்டதே...அது என்ன  இறைவனை கழுதை, பன்றி, தேள், கூளம் , மலம் என்று சொல்லி ..வருகிறேன்..

ஏன்  குயிலை, மயிலை,  சந்தனத்தை, வைரத்தை,தங்கத்தை சொல்லாமல் விட்டு  தாழ்ந்த பொருள்களையே சொல்லிக் கொண்டிருக்கிறோமே ... என்று நினைக்கிறான்....அடுத்த வரியில் அதையும் திருத்துகிறான் .....

கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

சுற்றியுள்ள எல்லா பொருளும் தெய்வம் என்றான். 

பொருளே தெய்வம் என்றால் உயிர்களை என்ன  சொல்லுவது ? 

நீங்கள் வேண்டி விரும்பி வணங்கும் கடவுள் உங்களை சுற்றி எல்லா இடத்திலும்  இருக்கிறான். நீங்கள் தான் அவற்றை விட்டு விட்டு நீங்கள் நினைத்த  வண்ணத்தில் இறைவன் வேண்டும் என்று அடம்  பிடிக்கிறீர்கள். அப்படி வர வில்லை என்றால்  இறைவனை நீங்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டீர்கள். 

நீங்கள் விரும்பிய வண்ணம்  இராமனாகவோ,க்ரிஷ்ணனாகவோ, எசுவாகவோ  இறைவன் வர வேண்டும்....இல்லை என்றால் அவன் இறைவன் இல்லை, உங்களைப்  பொருத்தவரை.

விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே

கடவுள் விண்ணில் மட்டும் அல்ல, மண்ணும் அவனே.  

கோவிலை விடுங்கள் - விக்ரகங்களை விடுங்கள் - படங்களை விடுங்கள் - 

எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர பிரமத்தை உணருங்கள். 

ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ! ....என்பார் மணிவாசகர்.

அவனுக்கு எத்தனை பெயர்கள்  ... மரம், செடி, கொடி , வண்டி, காவல்  காரன்,பால் காரன்,  தபால் காரன், வேலைக்காரி, வாத்தியார், நண்பன்,  மாணவி,  கணவன், பிள்ளைகள், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவன்....

ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ....