Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thursday, March 14, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின் 


இன்று ஒரு சிக்கலான குறளைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். சில சமயம் சொற் சிக்கனம், புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குறள்களில் நாம் காண இருக்கும் குறளும் ஒன்று. 


அன்பின் விரிவு அருள் என்று பார்த்தோம். அருள் இருந்தால் மற்ற உயிர்களை கொல்லத் தோன்றாது. சொல்ல வந்தது அவ்வளவுதான். ஆனால், குறள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்:


பாடல் 


அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் றினல்.


பொருள் 


அருளல்ல = அருள் அல்லாதது 


தியாதெனிற் = யாது எனில் 


கொல்லாமை = கொல்லாமை 


கோறல் = கொல்லுதல் 


பொருளல்ல = பொருள் அல்ல 


தவ்வூன் றினல் = அந்த ஊனை தின்பது 


பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அர்த்தம் புரியாமல் போவது மட்டும் அல்ல, தவறான அர்த்தமும் வந்து விடும். 


பரிமேலழகர் சொல்கிறார் 


அருள் என்பது யாது எனின் = அருள் என்றால் என்ன என்று கேட்டால் 


அல்லது யாது எனின் = அதாவது அருள் அல்லாதது எது என்றால் 


கோறல் = கொல்லுதல் 


பொருள் என்றால் சிறந்தது என்று அர்த்தமும் உண்டு. 


"போற்றி என் வாழ் நாள் முதலாகிய பொருளே" 


என்பார் மணிவாசகர். 


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்

ஒன்றும் அரும்"பொருளே" அருளே. உமையே. இமயத்து

அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.




திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்

வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்"பொருளே".



"பொருளே", பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்

மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்

அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 


இங்கே குறளில் 


"பொருள் அல்லது யாது எனில் ஊன் தின்றல்" என்பதில் பொருள் என்பது அறம் நோக்கி நின்றது. அதை அறம் என்பது யாது எனின் ஊன் தின்றல் என்று கொள்ள வேண்டும். 


கொல்லாமை கோறல் என்றால் என்ன. 


கொல்லாமை என்றால் கொல்லாமல் இருப்பது. 

கோறல் என்றால் கொல்லுவது.


கொல்லாமை கோறல் என்றால் என்ன ?


கொல்லாமை என்ற விரத்தை கொல்லுவது. அதாவது அதை கை விட்டுவிடுவது என்று பொருள் சொல்கிறார்கள். 




அவ்வூன் என்றார். கொல்லப்பட்ட அந்த ஊனை என்று அர்த்தம். 


கொல்வதும், கொன்றதைத் தின்பதும் அருள் அற்ற செயல்.






Monday, March 11, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார் 



இளம் பருவத்தில், புலால் உணவே சாப்பிடாமல் வளர்ந்த சிலர் பிற்காலத்தில் மாமிச உணவை விரும்பிச் சுவைப்பதை நாம் கண்டு இருக்கிறோம். 


எப்படி இப்படி மாறினீர்கள் என்று கேட்டால் , "பள்ளியில், கல்லூரியில் மாமிச உணவு என்று சொல்லாமல், நண்பர்கள் ஏமாற்றி உண்ண வைத்து விட்டார்கள். அந்த சுவை பிடித்துப் போய் விட்டது. அப்படியே பழகிப் போய் விட்டது. விட முடியவில்லை" என்பார்கள். 


ஒருமுறை புலால் உணவை சுவைத்து விட்டால் பின் அதை விட முடியாது. மனம் மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாடும். 


உயிர்களை கொன்று தின்பது என்று ஆரம்பித்து விட்டால், மனம் அருளின் பக்கம் போகாது. 


அது எப்படி என்று ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர். 


வீட்டில் சின்ன பையன்கள் கையில் ஒரு சின்ன குச்சியைக் கொடுத்தால் அதை வைத்து எதையாவது தட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். எதைப் பார்த்தாலும், அதை தட்டி ஒலி உண்டாக்குவார்கள். 


அது போல, கையில் கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவிகளை வைத்து இருப்பவர்கள் மனம் யாரைப் போட்டுத் தள்ளலாம் என்றுதான் நினைக்கும். கருவியின் பின்னே மனம் போகும். கையில் செல் போன் இருந்தால், நொடிக்கு நூறுதரம் அதைப் பார்க்கச் சொல்லும். 


அது போல, மாமிச உணவின் சுவை கண்டு விட்டால், மனம் அதன் பின்னே மீண்டும் மீண்டும் போகும். 


பாடல் 


படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி

னுடல்சுவை யுண்டார் மனம்.


சீர் பிரித்த பின் 


படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்

உடல் சுவை உண்டார் மனம்.


பொருள் 


படைகொண்டார் = கத்தி போன்ற படைக் கருவிகளை கொண்டவர்கள் 


நெஞ்சம் போல் = மனம் போல் 


நன்று ஊக்காது = நல்லதை நினைக்காது 


ஒன்றன் = ஒரு உயிரின் 


உடல் சுவை = உடலின் சுவையைக் 


உண்டார் மனம் = உண்டவர்களின் மனம் 



"நன்று ஊக்காது" அதாவது நல்லதை நினைக்காது என்ற சொல் தொடரை இரண்டு பக்கமும் சேர்த்துக் கொள்ளலாம். 


படை கொண்டவர் நெஞ்சமும் நல்லதை நினைக்காது. 


மாமிசம் உண்டவரின் மனமும் நல்லதை நினைக்காது. 


இரண்டும் கொலையை நாடும். 


மாமிசம் உண்பது சரி தவறு அல்ல என்பதல்ல விவாதம். 


சாப்பிட்டால் மனதில் அருள் வருவது கடினம். அவ்வளவுதான். 


அருள் வராவிட்டால் போகட்டும் என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை. 


அன்பு விரிய அருள் பிறக்கும். 


அருள் மனதில் சுரக்கவில்லை என்றால், அன்பின் வட்டம் சுருங்கும். 


அன்பின் வட்டம் சுருங்க சுருங்க சுயநலம் மேலோங்கும். மற்ற உயிர்களின் மேல் அருளும் அன்பும் குறையும். 


சிந்திக்க வேண்டிய விடயம். 



Monday, March 4, 2024

திருக்குறள் - பொருளும் அருளும்

 திருக்குறள் - பொருளும் அருளும் 


நிறைய பேருக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை சேமிக்கத் தெரியாது.  சிலருக்கு சேமிக்கத் தெரியும், ஆனால் சம்பாதிக்கத் தெரியாது. சிலருக்கு சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும் ஆனால் அனுபவிக்கத் தெரியாது. மூன்றும் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. 


பொருளை ஆட்சி செய்ய வேண்டுமா? அதன் அனைத்துத் துறைகளிலும் (சம்பாதித்தல், சேமித்தல், செலவிடுதல்) சிறந்து விளங்க வேண்டுமானால், செல்வத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். செல்வத்தை அலட்சியம் செய்தால், அதனை நல்ல வழியில் பயன்படுத்த முடியாது. 


பொருளை ஆட்சி செய்யும் தகுதி பொருளைப் போற்றாதவர்களுக்கு இல்லை. 


அது போல 


அருளை ஆட்சி செய்யும் தகுதி பிற உயிர்களை தின்பவர்களுக்கு இல்லை. 


பாடல் 


பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி

யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.


பொருள் 


பொருளாட்சி = பொருளை ஆட்சி செய்கின்ற திறமை 


போற்றாதார்க் கில்லை = அந்தப் பொருளை போற்றாதவர்களுக்கு இல்லை 


யருளாட்சி = அருளை ஆட்சி செய்யும் திறன் 


யாங்கில்லை = ஆங்கு இல்லை 


யூன்றின் பவர்க்கு. = ஊன் தின்பவர்க்கு 


சில பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், நான் உணவு விடுதிக்கு (hotel) சென்று சில மாமிச உணவை வரவழைத்து உண்கிறேன். அந்த உயிர்களை நான் கொல்லவில்லை. நான் சாப்பிடாவிட்டால் வேறு யாராவது சாப்பிடத்தான் போகிறார்கள். நான் உண்பது ஒரு இறந்த உடலைத்தான். நான் கொல்லவில்லை. ஒரு வேளை யாருமே உயிர் கொலை செய்யமாட்டேன் என்று இருந்து விட்டால், நான் மாமிசம் தின்ன முடியாது. நாளடைவில் அதை மறந்து விடுவேன்.எனவே தவறு என் மேல் அல்ல.....


என்று வாதம் செய்வார்கள். 

அந்த உயிர்களை கொல்பவன் என்ன சொல்லுவான் "நான் கொல்வது அவன் தின்பதற்காக? அவன் தின்பதை நிறுத்தி விட்டால் நான் ஏன் கொல்லப் போகிறேன். தவறு என் மேல் அல்ல. தின்பவன் மேல் என்று கூறுவான். 


இப்படி மாறி மாறி பழி போட்டுக் கொண்டு யாரும் பொறுப்பை எடுக்க மாட்டார்கள். 



வள்ளுவர் சொல்கிறார், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீ மாமிசம் சாப்பிட்டாயா? ஆம் என்றால், உனக்கு அருளை ஆளுகின்ற குணம் இல்லை. யார் கொன்றார், யார் தின்றார் என்பதல்ல பிரச்சனை. 


"நீ மாமிசம் உண்கிறாயா, உனக்கும் அருளுக்கும் சம்பந்தம் இல்லை" 


மாமிசம் உண்பது சரியா தவறா என்று வள்ளுவர் இங்கே வாதம் செய்யவில்லை. மாமிசம் சாப்பிட்டால் உயிர்கள் மேல் அருள் வராது. அவ்வளவுதான் அவர் சொல்லுவது. 


அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார். வள்ளுவரைப் போல் உதாரணம் சொல்ல இன்னொருவர் பிறக்க வேண்டும். 


கண்டமேனிக்கு ஊதாரித்தனமாக செலவு செய்பவன் இடத்தில் எப்படி பொருள் தாங்காதோ அது போல உயிர்களை தின்பவனிடம் அருள் தங்காது என்கிறார். 


பொருளை போற்ற வேண்டும். எச்சரிக்கையுடன்  செலவழிக்க வேண்டும். கணக்கு எழுத வேண்டும். சரியான படி முதலீடு செய்ய வேண்டும். செய்த முதலீட்டை பார்த்துக் கோனே இருக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு கொடுத்தால், வாடகை ஒழுங்காக வருகிறதா என்று பார்க்க வேண்டும். 


இல்லை என்றால் வீடு போய் விடும். 


அது போல, உயிர்களை கொன்று தின்றால், அருள் போய் விடும். 


அருள் போனால், துறவு போகும். 


துறவு போனால், வீடு பேறு போகும். மீண்டும் பிறவி வந்து சேரும்.


அவ்வளவு பெரிய பலனை பெறுவதற்கு இந்தச் சின்ன தியாகத்தை செய்யக் கூடாதா என்று வள்ளுவர் கேட்காமல் கேட்கிறார். 




 


Saturday, February 24, 2024

திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு

 திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு 


இந்த உடல் அழியும் தன்மை உடையது. என்ன செய்தாலும், ஒரு நாள் அழிந்தே தீரும். இப்படி அழியும் உடலை பாதுகாக்க வேண்டி இன்னொரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால், உயிர்க்  கொலை  செய்த பாவம் வரும். அந்தப் பாவம் பிறவி தோறும் தொடரும். இப்படி ஒரு பிறவியில் அழியும் உடலை வளர்க வேண்டி செய்த பாவம் அழியாமல் நின்று பிறவி தோறும் தொடரும் என்றால், அதைச் செய்யலாமா? 


அப்படி தன் சுய தேவைக்காக இன்னொரு உயிரைக் கொன்று தின்பவன் மனதில் அருள் எங்கே இருக்கும் ? அருள் இல்லாதவன் வீடு பேறு அடைவது எங்கனம்?


பாடல் 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்


பொருள் 


தன்ஊன் = தன் உடலில் உள்ள மாமிசத்தைப் 


பெருக்கற்குத் = வளர்ப்பதற்கு 


தான் = ஒருவன் 


பிறிது = பிற உயிரின் 


ஊன்உண்பான் = மாமிசத்தை தின்பான் என்றால் 


எங்ஙனம் ஆளும் அருள் = அவன் எப்படி அருள் வழியில் நிற்க முடியும்? 


இன்றைய நவீன சிந்தனையாளர்கள் "ஆஹா...உயிரைக் கொல்லக் கூடாதா? சரி, அப்படி என்றால் தாவரங்களும் உயிர்கள்தானே, அதை மட்டும் கொல்லலாமா? " என்று வாதிக்கக் கூடும். 


தாவரங்களால் நகர முடியாது. ஒரு மரமோ செடியோ இன விருத்தி செய்ய வேண்டும் என்றால் அதன் விதைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எல்லா விதையும் ஒரே இடத்தில் விழுந்தால் ஓரிரண்டு முளைக்கலாம். எல்லாம் முளைக்காது.  பின் எப்படி விதைகளைப் பரப்புவது?


உண்மைதான். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளல் பெருமான். அது அருளின் உச்சம். 


வள்ளலார் ஒரு நாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே மீன் பிடிக்கும் வலைகளை காய வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்து, பதறிப் போய், அதை கொலைக் கருவி என்றார். எத்தனை மீன்களை அது கொல்கிறது. மீன் வலையைப் பார்த்தால் கொலைக் கருவி என்று நமக்குத் தோன்றுமா?


நம் பழைய இலக்கியங்களில் பார்த்தால் தெரியும், முனிவர்கள், கானகத்தில் மரங்கள் உதிர்த்த, காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள். இலையைக் கூடப் பறிக்கக் கூடாது. அதுவும் ஒரு உயிர் தான் என்பது அவர்கள் எண்ணம். 


பாரதத்தில், அர்ச்சுனன் தவம் மேற்கொள்கிறான். வெறும் சருகை மட்டும் உண்டு தவம் செய்தான் என்பார் வில்லிபுத்துரார். 


பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்

                           பாதபங்களின் சினை உதிர்ந்த

சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது

                                  அருந்துதல் தவிர்ந்தான்

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி

                                  ஆக்கி, நம்மிடத்தே

செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்

                                  சிறந்தவர்?' என்றான்.



தாவரங்கள் தங்கள் விதைகளை காய்களிலும், கனிகளிலும் புதைத்து வைக்கின்றன. அதை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும், அந்த விதைகளை அவர்கள் வசிக்கும் இடங்களில் விழச் செய்கிறார்கள். 


உதாரணமாக, சேலத்தில் ஒரு மாமரம் இருக்கிறது. மாம்பழம் இனிமையாக இருப்பதால், அந்த மரத்தின் பழத்தை பறித்து சென்னை , டெல்லி போன்ற இடங்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கே உள்ள மக்கள் அந்தப் பழத்தை உண்டு, அதன் விதையை குப்பையில் போட்டு விடுகிறார்கள். அது அங்கே முளைக்கும். மாம்பழத்தை மனிதர்கள் உண்பது இல்லை என்று வைத்து விட்டால், சேலத்தில் உள்ள விதை மும்பைக்கும், டெல்லிக்கும் எப்படி போகும். தங்கள் விதைகளை கொண்டு செல்ல விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவரங்கள் தரும் கூலி அந்த காய்களும், கனிகளும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


தொலைக்காட்சியில் இந்த மாமிச உணவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி நிறைய செய்திப் படங்கள் இருக்கின்றன. அதில், விலங்குகளை எப்படி கொன்று, அதன் மாமிசத்தை எடுத்து டப்பாவில் அடைகிறார்கள் என்று காட்டுவார்கள். 


சிறு சிறு கோழிக் குஞ்சுகளில் இருந்து, பெரிய திமிங்கலம் வரை, கொஞ்சம் கூடஒரு முக சுளிப்பு இல்லமால், மனதில் உறுத்தல் இல்லாமல், கொன்று தள்ளுகிறார்கள். இரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படுவது இல்லை. அப்படி ஒரு சிறு உறுத்தல் கூட இல்லாமல் உயிர்களை கொல்பவர்கள் மனதில் அருள் எப்படி இருக்கும் என்று வள்ளுவர் கேட்கிறார். 




Thursday, February 22, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.html


மாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. 


வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை. 


வாழ்வின் நோக்கம் என்ன?  


வீடு பேறு அடைவது. 


அதற்கு வழி என்ன?


இல்லறம் - துறவறம். 


துறவறத்துக்கு இன்றியையாத ஒன்று - அருள். 


பிற உயிர்களை கொன்று தின்றால், மனதில் அருள் இல்லாமல் போகும். அருள் இல்லை என்றால் துறவு இல்லை. துறவு இல்லை என்றால் வீடுபேறு இல்லை. 


எனவே, புலாலை மறுக்கச் சொல்கிறார். 


புலால் உண்பவர்கள் சொல்லும் ஒரு தர்க்கம் இருக்கிறது. 


"...நான் அந்த ஆட்டை மாட்டை கொல்லவில்லை. யாரோ, ஏற்கனவே கொன்று அதன் மாமிசத்தை கடையில் வைத்து இருக்கிறான். நான் வாங்கவிட்டாலும், யாராவது அதை வாங்கி உண்ணத்தான் போகிறார்கள். இல்லை என்றால் குப்பையில் போடப்படும். எனவே, நான் கொல்லவில்லை. எனக்கு எந்த பாவமும் இல்லை..." என்று ஒரு சாரார் வாதம் செய்கிறார்கள். 


மற்றவன் 


"..நான் புலால் உண்பது இல்லை. விலங்குகளை வெட்டி வைக்கிறேன். வேண்டுபவர்கள் வாங்கி உண்கிறார்கள். அவர்கள் உண்பதால்தானே நான் வெட்டி வைக்கிறேன்?  யாருமே வாங்கவில்லை என்றால் நான் ஏன் விலங்குகளை வெட்டப் போகிறான் " 


இரண்டு பக்கமும் இப்படி கூறுவார்கள் என்று அறிந்து பரிமேலழகர் அதை மறுக்கிறார். 


"கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது"


அதாவது உண்பதால், கொலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே புலால் உண்பது கொலைக்கு காரணமாகிறது. 


கொலை செய்யப்பட்டதால், உண்கிறார்கள். எனவே புலால் உணவு காரியமாகிறது. 


அவ்வாறு காரணம், மற்றும் காரியம் இரண்டுக்கும் எதுவாக இருப்பதால், புலால் உண்பது துறவிகளுக்கு மறுக்கப்பட்டது. 


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 



Sunday, February 18, 2024

திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம்

 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.html

அருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?


அருள் வராத இடங்கள் எவை ?


வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், புகழில், பெருமையில் குறைந்தவர்களிடம் நமக்கு ஒரு ஆணவம், அவர்கள்மேல் ஒரு இளக்காரம், திட்டினால் பதிலுக்கு திட்டமாட்டார்கள் என்று ஒரு தைரியம். சிலர் அது போன்ற எளியவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது கிடையாது. அவர்கள் ஏதாவது கேட்டால் முகம் பார்த்து கூட பதில் சொல்ல மாட்டார்கள். 


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி மாற்றுவது?


வள்ளுவர் சொல்கிறார்,


"உன்னை விட மெலிந்த ஒருவன் மேல் நீ உன் வலிமையை காட்டுவதற்கு முன், உன்னை விட வலிமையான ஒருவன் முன் நீ நிற்பதாய் ஒருமுறை எண்ணிப் பார். உனக்கு எவ்வளவு பயம் இருக்கும், நடுக்கம் இருக்கும். அது உனக்கு பிடித்து இருக்கிறதா?  அது ஒரு வலிதானே ? அந்த வலிதானே உன் முன்னால் இருப்பவனுக்கும் இருக்கும் என்று நினைத்துப் பார். தானாகவே அருள் பிறக்கும் "


என்கிறார். 


பாடல்  


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


வலியார்முன் = தன்னை விட வலியவர்கள் முன் 


தன்னை நினைக்க = ஒருவன் தன்னை நினைத்துக் கொள்க 


தான் தன்னின் = ஒருவன் தன்னை விட 


மெலியார்மேல் = மெலிந்தவர்கள் மேல் 


செல்லும் இடத்து = செல்லும் பொழுது 


இந்தக் குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுணுக்கம் மிக அழகானது.


மெலியார் என்று உயர்திணையில் கூறினாலும், அது விலங்குகளையும், ஏனைய உயிர்களையும் சேர்த்தது என்கிறார். 


ஆட்டையும், மாட்டையும், வெட்டும் போது, என்னை விட  பலமான ஒருவன் என்னை இப்படி வெட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க வேண்டும் என்கிறார். 


மேலும்,


"செல்லும் இடத்து" என்றால் என்ன?  


ஒரு போக்குவரத்து துறை அதிகாரி உங்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு உண்டான certificate களை கேட்கிறார். ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாம் சரியா இருக்குமோ, இருக்காதோ என்று சந்தேகம் வரும். எவ்வளவு அபராதம் வருமோ என்ற பயம் வரும். ஆனால், அதே அதிகாரியின் முன் நாம் வண்டியில் இல்லாமல் நடந்து செல்லும் போது அந்தப் பயம் வருமா?  வராது. 


பயம் எப்போது வரும் என்றால், நம்மை விட வலியவன் நமக்கு துன்பம் தருவதற்கு வருகிறான் என்றால், பயம் வரும். அதைத்தான் 'செல்லும் இடத்து" என்றார். நாம் அவனிடம் போகிறோம். அவனால் நமக்கு துன்பம் வரலாம் என்றால் பயப்படுவோம் அல்லவா?  அது போல உன்னிடம் வருபவனை நினைத்துப் பார். என்கிறார். 


தானே அருள் வரும் என்கிறார். 


அப்படியாக அருளுடைமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது. 


அடுத்தது புலால் மறுத்தல் என்ற அதிகாரம். 







Tuesday, February 13, 2024

திருக்குறள் - அருளற்றானின் அறம்

 திருக்குறள் - அருளற்றானின் அறம் 


பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். 


அந்த தர்ம காரியங்களுக்குப் பின்னால் இருப்பது உயிர்கள் மேல் உள்ள அருள் அல்ல. என்னிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்ட, அரசியல் செல்வாக்குப் பெற, தனக்குப் புகழ் சேர்க்க என்று பல காரணங்கள் இருக்கும். 


அவர்கள் செய்வதெல்லாம் அறத்தில் சேராது. அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது அறத்தில் சேராது.  


அது எப்படி என்றால், சில சமயம் சில மடையர்கள் வாயில் இருந்து அபூர்வமாக சில நல்ல தத்துவங்கள் வருவதைப் போல. போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள். "அட...இது இவனுக்கு எப்படித் தெரியும்" என்று ஆச்சரியப்படுவோம். அது அவன் இயற்கை அறிவு அல்ல. ஏதோ வந்து விழுந்தது. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 


ஏறல் எழுத்துப் போல என்பார்கள். கடற்கரையில் நண்டு அங்கும் இங்கும் அலையும். சில சமயம் அதன் தடம் 'ட' மாதிரி இருக்கும், சில சமயம் 'ப' மாதிரி இருக்கும். உடனே, "ஆஹா, இந்த நண்டுக்கு தமிழ் தெரியும்" என்று யாராவது சொல்லுவார்களா? 


அது போல முட்டாள் சொல்லும் மெய்ப் பொருளும், அருள் இல்லாதவன் செய்யும் அறமும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்


பொருள் 


தெருளாதான் = தெளிவு இல்லாதவன் 


மெய்ப்பொருள் = உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்ட உண்மைப் பொருளை 


கண்டற்றால் = கண்டு சொன்னால் 


தேரின் = நினைத்துப் பார்த்தால் 


அருளாதான் = அருள் இல்லாதவன் 


செய்யும் அறம் = செய்யும் அறம் போன்றது 


ஓட்டு வேண்டும் என்று தலைக்கு இவ்வளவு பணம் என்று ஒரு அரசியல்வாதி கொடுக்கலாம். அது அறமா?  இல்லை. 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 


என்றார் வள்ளலார்.  அவர் ஒன்றும் செய்யவில்லை. வாடினார். அது அவர் அந்த பயிரின் மேல் கொண்ட அருள். 


அருள்தான் அடிப்படை. அதன் வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். செயலை வைத்து தீர்மானிக்க முடியாது. மனதை வைத்து தீர்மானிக்க வேண்டும். 




Sunday, February 11, 2024

திருக்குறள் - பொருளும், அருளும்

 திருக்குறள் - பொருளும், அருளும் 


மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினாலும், திறமையாலும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆனவர்கள் உண்டு. பெரிய செல்வந்தர்கள் கூட தொழிலில் நட்டப்பட்டு, இருப்பதை எல்லாம் இழந்து, பின் மறுபடியும் பொருள் ஈட்டி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களும் உண்டு. 


பொருள் இல்லாவிட்டால் பரவாயில்லை. எப்படியாவது சம்பாதித்து விடலாம். நிறைய பேர் அப்படி சம்பாதித்துக் காட்டி இருக்கிறார்கள். 


ஆனால், அருள் இல்லாவிட்டால், ஒருக்காலும் மீண்டும் அருள் உடையவர்களாக ஆக முடியாது என்கிறார் வள்ளுவர். 


பாடல்  


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது


பொருள் 


பொருளற்றார் = பொருள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள் 


பூப்பர்  ஒருகால் = ஒரு காலத்தில் செல்வத்தை சம்பாதித்து விட முடியும் 


அருளற்றார் = அருள் இல்லாதவர்கள் 


அற்றார் = அருள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள் 


மற்று ஆதல் அரிது = மீண்டும் அருள் உடையவர்களாக மாறுவது கடினம். 


ஏன் அருள் இல்லாதவர்கள் மீண்டும் அருள் உள்ளவர்களாக மாற முடியாது?


அருள் இல்லாதவர்கள், அருள் அற்ற வழிகளில் சென்று பல பாவங்களைச் செய்வார்கள். தீயவர்களோடு சேர்ந்து கொண்டு அருள் அற்ற செயல்களைச் செய்வார்கள். 


அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அவர்கள் மீள நினைத்தால் கூட, கூட்டாளிகள் விட மாட்டார்கள். எங்கே இவன் வெளியே போய் நம்மைக் காட்டி கொடுத்து விடுவானோ என்று அஞ்சி அவனை வெளியே விட மாட்டார்கள். 


மேலும், அருள் அற்ற தீய செயல்களை செய்யும் போது, ஒருவன் அறியாமலேயே அவனுக்கு அதில் ஒரு உருசி வந்து விடும். ஒரு முறை இலஞ்சம் வாங்கி பொருள் சேர்த்து விட்டால், "அட, இது எளிய வழியாக இருக்கிறதே...இப்படியே இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன " என்று தோன்றும். நிறைய செய்வான். மாட்டிக் கொள்வான். சிறை செல்ல வேண்டி வரும். எங்கிருந்து மீள்வது? 


இப்போதைக்கு கொஞ்சம் அப்படி இப்படி இருந்து பணம் சேர்ப்போம். பின்னால், நன்கொடை, கோவில், அன்ன தானம் என்று செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார் வள்ளுவர். 


அந்தப் பாதையில் போகாதே. போனால் திரும்பி வர மாட்டாய் என்று. 


அருள் அற்ற எந்த செயலை செய்யவும் அஞ்ச வேண்டும். இது நம்மை எங்கே கொண்டு செல்லுமோ, திரும்பி வர முடியாதே என்று அஞ்ச வேண்டும். 


சிலருக்குத் தோன்றும், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று. 


முயன்று பார்க்க வேண்டும். செல் போன் பார்ப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  காப்பி குடிப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  


எனவே, அருள் அற்ற வழியில் ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது. 


Wednesday, February 7, 2024

திருக்குறள் - இடம் இல்லை

 திருக்குறள் - இடம் இல்லை 


அருள் இல்லாமல் வாழ்ந்தால் என்ன ஆகும்?  அரசாங்கம் பிடித்து சிறையில் போட்டு விடுமா? அப்படி வாழ வேண்டும் என்பது என்ன சட்டமா? சட்டம் இல்லை என்றால் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்?


அருள் இல்லாமல் வாழ்ந்தால் யாரும் தண்டிக்க மாட்டார்கள். தாரளமாக அப்படி வாழலாம். சிக்கல் என்ன என்றால், வீட்டுலகத்து இன்பம் கிடைக்காது. அதாவது சுவர்க்கம் என்று சொல்கிறோமே, அந்த சொர்கத்தின் அனுபவம் கிடைக்காது. 


சொர்க்கம் என்பது உயர்ந்தபட்ச இன்ப அனுபவம். அது கிடைக்காமல் போய் விடும். 


பாடல் 



அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு


பொருள் 


அருள்இல்லார்க்கு = அருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு 


அவ்வுலகம் இல்லை= சுவர்க்கம் கிடையாது 


பொருள்இலார்க்கு = பொருள் இல்லாதவர்களுக்கு 


இவ்வுலகம் = இந்த பூ உலகம் 


இல்லாகி யாங்கு = எப்படி இல்லையோ, அது போல. 


பொருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏழைகள் இருக்கிறார்களே. அது எப்படி, பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லலாம்? என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


அவ்வுலகு, இவ்வுலகு என்பதெல்லாம் ஆகு பெயர். 


உலகு என்பது உலகில் உள்ள இன்பங்களுக்கு ஆகி வந்தது. 


அதாவது, பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகில் உள்ள இன்பங்கள் கிடைக்காதது போல, அருள் இல்லாதவர்களுக்கு அந்த உலகின் இன்பம் கிடைக்காது. 


சொர்கத்துக்கு ஒரு வேளை போனால் கூட, அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாது என்கிறார். 


அருள் இருந்து, பொருள் இல்லாவிட்டால், இந்த உலக இன்பம் கிடைக்காமல் போகலாம். 


பொருள் இருந்து, அருள் இல்லாவிட்டால், அந்த உலக இன்பங்கள் கிடைக்காது. 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        `


Monday, February 5, 2024

திருக்குறள் - மறந்து போச்சு.

 திருக்குறள் - மறந்து போச்சு.


உயிர்கள் மேல் அன்பு செய்தால், அவை நம்மிடம் அன்பு செய்யும்.  புரிந்து கொள்ள இது மிக எளிதான ஒன்று. இரண்டு அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே பகை இருக்காது, ஒருவரை ஒருவர் துன்பம் செய்யும் எண்ணம் இருக்காது, எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். 


இது தெரிந்தும் கூட ஏன் மக்கள் உயிர்கள் மேல் அன்பு செலுத்தாமல் வெறுப்பு கொள்கிறார்கள்?


அவன் வேறு மதம், அவன் வேறு இனம், பணக்காரன், ஏழை, படித்தவன், முட்டாள், அழகானவன், அழகு இல்லாதவன் என்று வேறுபாடு கொண்டு, வெறுப்பை வளர்த்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பகைமை பாராட்டுவது ஏன்?  


விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். ஏழைகளை, பாமர மக்களை துன்புறுத்துகிறார்கள், மெலியாரை வலியார் வதைக்கிறார்கள். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?


வள்ளுவர் அதற்கு விடை தருகிறார். அந்த விடையில் நமக்கும் ஒரு வழி இருக்கிறது. 


பாடல் 

 


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்


பொருள் 


பொருள்நீங்கிப் = பொருளை விட்டு நீங்கி 


பொச்சாந்தார் = மறந்து விட்டார் 


என்பர் = என்று கூறுவார்கள் 


அருள்நீங்கி = அருளை விட்டு நீங்கி 


அல்லவை = அது அல்லாத காரியங்களை 


செய்துஒழுகு வார் = செய்து வாழ்பவர்கள். 


என்ன இது பொருள், அருள் னு ஒண்ணும் புரியலையே.


பொருள் நீங்கி என்றால் பொருளை விட்டு நீங்கி என்று அர்த்தம். சரி, அது என்ன பொருள்?  வீடு, வாசல், நிலம், புலம் என்ற பொருளா என்றால் இல்லை. மிக உயர்ந்த பொருள், நிரந்தரமான பொருள், உறுதியான பொருள் எது என்றால் அறம் தான் சிறந்த பொருள். அழியாத பொருள். என்றும் நிலைத்து நிற்கும் பொருள். 


அந்த அறத்தில் இருந்து நீங்கி.


"பொச்சாந்தார் என்பர்". மறந்து விட்டார்கள் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். 


மக்கள் ஏன் அற வழியில் நிற்க மாட்டேன் என்கிறார்கள் என்றால், அறம் அல்லாத வழியில் சென்று பட்ட துன்பங்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். எனவே அறம் அல்லாத வழியில் செல்கிறார்கள் என்கிறார். 


தீயில் விரலை வைக்கிறோம். சுடுகிறது. மீண்டும் வைப்போமா? மாட்டோம் என்றால் ஒரு முறை சுட்டது நினைவில் நிற்கும். 


ஆனால், அறம் தவறி நடந்ததன் மூலம் வந்த துன்பம் மறந்து போய் விடுகிறது. மீண்டும் அதே வழியில் மக்கள் செல்கிறார்கள். 


ஒவ்வொரு முறை துன்பம் வரும் போதும், அந்தத் துன்பம் ஏன் வருகிறது என்று யோசிக்க வேண்டும்.  எங்கோ தவறு செய்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் புரிவது கடினம். 


தவறு செய்ய நினைக்கும் போதே, முன் பட்ட துன்பங்கள் நினைவு வந்தால், தவறு செய்வோமா?  




Friday, February 2, 2024

திருக்குறள் - இதுவே சாட்சி

 திருக்குறள் -  இதுவே சாட்சி 


https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_2.html


மனதில் அருள் இருந்தால் தன் உயிர் அஞ்சும் வினை வராது என்றார் வள்ளுவர். அவர் சொன்னால் போதுமா? நமக்கு ஒரு நிரூபணம் வேண்டாமா?  சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது என் மரபில் கிடையாது. எதையும், சான்றுகளோடு, வாத பிரதிவாதம் செய்துதான் ஏற்றுக் கொள்வது நம் மரபு.


வள்ளுவர் சொல்கிறார் 


"மனதில் அருள் உள்ளவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்பதற்கு இந்த உலகமே சான்று"  


என்று. 


அது எப்படி இந்த உலகம் சான்றாகும்? குழப்பமாக இருக்கிறதே.


பாடல் 


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு

மல்லல்மா ஞாலம் கரி.


பொருள் 


அல்லல் = துன்பம் 


அருளாள்வார்க்கு = மனதில் அருள் உள்ளவர்களுக்கு 


இல்லை  = இல்லை 


வளி வழங்கு = காற்றை வழங்குகின்ற 


மல்லல் = வளம் நிறைந்த 


மா = பெரிய 


ஞாலம் = இந்த உலகே 


கரி = சான்று .


உலகம் சான்று என்றால், உலகில் உள்ளவர்கள் சான்று. ஊரே பாராட்டுகிறது என்றால் ஊரில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். 


இந்த உலகில் அருள் உள்ளவர்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் மனதில் ஒரு சாந்தம், அமைதி, பொறுமை, எல்லாம் இருக்கும். எல்லோரும் அவர்களிடம் சென்று ஆசி பெறுவார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள், அவர்களை வணங்குவார்கள். அவர்களுக்கு ஒரு துன்பமும் இருக்காது. 


அருள் உள்ள மகான்கள், துறவிகளை துன்பம் பற்றாது. 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் ஒருவனை யார் துன்புறுத்தப் போகிறார்கள்? ஒருவரும் செய்ய மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு துன்பம் இல்லை. 





Monday, January 29, 2024

திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை

 திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை



தவறு ஏன் நிகழ்கிறது? அருள் இல்லாமையால்.


அது எப்படி ? அருளுக்கும், தவறுக்கும் என்ன சம்பந்தம்?


ஒருவன் தவறு செய்கிறான் என்றான் அதனால் யாருக்கோ பாதிப்பு இருக்கத்தானே செய்யும். 


திருட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை, போன்ற எந்த குற்றம் செய்தாலும் அதனால் யாருக்கோ ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது. மற்ற உயிர்கள் மேல் எல்லாம் கருணை இருந்தால் எப்படி தவறு செய்ய முடியும். 


அன்பு கொண்ட ஒருவரை அடிக்க முடியுமா? அவர்கள் மேல் கடுமையான வார்த்தைகள் பேச முடியுமா? அவர்களிடம் இருந்து திருட முடியுமா? அவர்களை கொலை செய்ய முடியுமா?


அருள் இல்லாமைதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். 


அருள் இல்லாமை ஒரு காரணம் என்றால், அறிவீனம் இன்னொரு காரணம். 


தவறு செய்ய பயம் இல்லாத தன்மை. மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியம். மாட்டினாலும் எப்படியாவது வெளியே வந்து விடலாம் என்ற நம்பிக்கை. யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு. 


யாருக்குத் தெரியாவிட்டாலும், மனதுக்குத் தெரியும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும் என்ற பயம் இருந்தால் குற்றம் செய்யத் தோன்றுமா?  


அருள் இருந்தால் குற்றம் செய்ய முடியாது. குற்றம் செய்யாவிட்டால் தண்டனை வருமோ என்ற பயம் இருக்காது. 


எனவே பயம் இல்லாமல் வாழ வேண்டுமா? அருள் மனதில் நிரம்பி இருக்க வேண்டும். 


பாடல் 



மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள் 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்களை 


ஓம்பி = போற்றி 


அருளாள்வாற்கு = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு 


இல்என்ப = இல்லை என்று அறிவுடையவர்கள் சொல்லுவார்கள் 


தன்னுயிர் = அவர்களுடைய உயிர் 


அஞ்சும் வினை = பயப்படும் செயல் 


மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல். உடல் அழியும். உயிர் நிலைத்து நிற்கும். எனவே "மன்னுயிர்" என்றார். 


உயிர்கள் அருள் செய்பவர்கள் அவ்வுயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள். எனவே அவர்களுக்கு துன்பமும் வராது. துன்பம் வந்து விடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. 


இதில் இருந்து என்ன தெரிகிறது. எப்போதெல்லாம் நமக்கு துன்பம் வருகிறதோ, அப்போதெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும் மனதில் அருள் இல்லாமல் யாருக்கோ தீங்கு செய்து இருக்கிறோம் என்று. மேலும், இனிமேல் துன்பம் வேண்டாம் என்றால் இப்போது இருந்தே உயிர்கள் மேல் அன்பு செலுத்த தொடங்க வேண்டும். 


"தன்னுயிர் அஞ்சும் வினை " என்றார். தன் உடல் அஞ்சும் வினை என்று சொல்லவில்லை. காரணம், உடல் அழிந்து விடும். இப்போது தவறு செய்தால், இந்த உயிர் மறு பிறவி எடுத்து அங்கு வருந்தும். அப்போது தெரியாது...நமக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது. என்றோ செய்த வினை, இப்போது வருகிறது. எனவே, இப்போது அருள் செய்து வாழ்ந்தால் இனி வரும் பிறவிகளிலும் துன்பம் வராது. மகிழ்ச்சியாக இருக்கலாம். 


அப்புறம் உங்க இஷ்டம்.. 


Thursday, January 25, 2024

திருக்குறள் - இன்னா உலகம்

 திருக்குறள் - இன்னா உலகம் 


நாம் வாழும் இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கின்றன. 


அப்படி அல்லாமல், இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ, அல்லது துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ இருக்க முடியுமா?


முடியும் என்று நம்பியது நம் இலக்கியங்கள். 


இன்பம் மட்டுமே உள்ள உலகத்திற்கு சொர்க்கம் என்று பெயர். 


துன்பம் மட்டுமே உள்ள உலகிற்கு நரகம் என்று பெயர். 


மற்றபடி இரம்பை , திலோத்தமை, எண்ணெய் கொப்பரை எல்லாம் கொஞ்சம் கற்பனையாக இருக்கலாம். 


எல்லோருக்கும் சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விருப்பம் இருக்கும். யாருக்குமே நரகத்துக்கு போக ஆசை இருக்காது. 


அதை எப்படி நிறைவேற்றுவது? நரகத்துக்குப் போகாமல் எப்படி தப்புவது?


வள்ளுவர் வழி சொல்கிறார்...


"உன் மனதில் அருள் சேர்ந்து இருக்குமானால், நீ நரகுக்கு போக மாட்டாய்"


என்று. 


பாடல் 



அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்


பொருள் 


அருள்சேர்ந்த = அருள் நிறைந்த 


நெஞ்சினார்க்கு = நெஞ்சம் உடையவர்களுக்கு 


இல்லை = ஒருபோதும் நிகழாது 


இருள்சேர்ந்த = எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும் 


இன்னா உலகம் = இனிமை இல்லாத உலகிற்குள் 


புகல் = செல்லுதல் 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தால், நரகம் போக வேண்டி வராது என்கிறார். 


அருள் இல்லை என்றால், நரகில் ஒரு இடம் உறுதி. 


                                                                                    


Tuesday, January 23, 2024

திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

 திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_23.html


உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. அது தவிர வேறு பல மார்கங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. எது சரி, எது தவறு என்று சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

என் சமயம்தான் பெரியது, என் கடவுள்தான் உயர்ந்தவர் என்று சண்டை போட்டுத் திரிகிறார்கள். 


அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது. மதங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கருத்துகளைச் சொன்னால், பாமர மனிதன் என்ன செய்வான்?


மதங்கள் எவ்வளவுதான் வேறுபட்டாலும், ஒரு விடயத்தில் அனைத்து மதங்களும் ஒன்று படுகின்றன. அது என்ன விடயம் என்றால் 


"உயிர்களிடத்து அன்பு செய்"


என்ற ஒரு கட்டளையில் எல்லா மதங்களும் ஒரு புள்ளியில் நிற்கின்றன. 


அன்பு, கருணை, அருள் என்ற விடயத்தில் எல்லா மார்கங்களும் ஒன்றாக நிற்கின்றன. 


நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிர்களிடத்து அன்பு செய் என்று உங்கள் மதமும் போதிக்கும்.  அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 


பாடல் 

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை


பொருள் 


நல்லாற்றான் = நல்ல வழிகளில் 


நாடி = தேர்ந்து எடுத்து 


அருளாள்க = அருள் செய்க 


பல்லாற்றான் = பலவழிகளில் 


தேரினும் = ஆராய்ந்து பார்த்த பின்னும் 


அஃதே துணை = அதுதான் உயிருக்கு சிறந்த துணை 


இந்த குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பமான உரையை பார்ப்போம். அவர் மட்டும் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரிந்தே இருக்காது. 


நல்லாற்றான் = நல்ல வழிகளில். 


அது என்ன நல்ல வழி? 


நல்ல வழி என்பதை இரு கூறாக பிரிக்கிறார் பரிமேலழகர்.


அளவையின் மூலம் அறிந்து கொள்வது. பொருத்தம் அறிந்து செய்வது என்று. 


அளவை என்றால் என்ன?


எது ஒன்றும் சரியா தவறா என்று எப்படி அரிவது? அளந்து பார்க்க வேண்டும். ஒரு அளவுகோல் வேண்டும் அல்லவா? அது போல் நாம் தேர்ந்து எடுத்த பாதை சரியா அல்லது தவறா என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு மூன்றுவிதமான அளவைகள் இருக்கின்றன. அவற்றை பிரமாணங்கள் என்பார்கள்.  


காட்சி பிரமாணம் (காண்டலளவை )

அனுமானப் பிரமாணம்  (கருத்தலளைவை)

ஆகமப் பிரமாணம் என்று  (சப்தலளைவை - ஞானிகள், பெரியவர்கள் சொல்லக் கேட்பது) 


தானே கண்டு உணர்வது. அருள் உடைய பெரியவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்வு சிறந்து இருக்கிறதா நேரடியாக பார்த்து அறிவது. 


அடுத்தது யூகித்து அறிவது. வள்ளலாரை நாம் பார்த்தது இல்லை. ஆனால் அவர் உயிர்கள் மேல் அருள் கொண்டு இருந்தார் என்று எப்படி அறிகிறோம்? அவரது பாடல்கள் மூலம் அவர் ஒரு  அருளாளர் என்று அனுமானிக்கிறோம். 


மூன்றாவது, பெரியவர்கள் சொல்லக் கேட்பது. ஞானிகள், தவ சீலர்கள் சொல்லக் கேட்பது. 


இந்த மூன்று வழிகளால் ஆராய்ந்து பின், அது பொருந்துமா, பொருந்தாதா என்று அறிந்து செய்வதைத்தான் "நல்லாற்றான்" என்கிறார். 


இப்படி ஆழமாக ஆராய்ந்த பின்னும், எல்லா மதங்களும் வேறு பல விடயங்களில் வேறு பட்டாலும், உயிர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையில் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள் 


சரி, அது என்ன "அஃதே துணை " என்றால் என்ன?


உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது இம்மைக்கும், மறுமைக்கு இன்பம் தருவதால், அதை துணை என்றார். 


அன்பு விரிந்து அருளாகட்டும் !



Saturday, January 20, 2024

திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம்

 திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_20.html


திருக்குறள் என்ற நூலை மூன்று பெரும் பிரிவுகளாக வள்ளுவர் பிரிக்கிறார். 


அறம்

பொருள் 

இன்பம் 


என்று. இந்த மூன்றுக்கும் பால் என்று பெயர். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால். 


அறத்துப் பாலை மூன்று  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். 


பாயிர இயல், இல்லறவியல், துறவறவியல் என அப்பிரிவுகள் அழைக்கப்படும். 


நாம் பாயிரம், இல்லறம் பற்றி சிந்தித்து விட்டோம். 


இனி துறவுக்குள் நுழைகிறோம்.


துறவறம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். விரதம், ஞானம் என்று. 


இதில், விரதத்தில் பலவிதமான விரதங்கள் உண்டு என்றாலும் அதில் சிறப்பான சிலவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார். 


அதில் முதலாவது அருளுடைமை. 


அருளுடைமை என்றால் என்ன?


நமக்கு தொடர்பு உள்ளவர்கள் மேல் நாம் காட்டும் கருணை, பரிவு அன்பு எனப்படும். என் மனைவி/கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தோர் இதில் அடங்குவர்.


தொடர்பு இல்லாதவர்கள் மேல் காட்டும் கருணை அருள் எனப்படும். என் பையனுக்கு ஒரு மிட்டாய் வாங்கித் தருகிறேன். அதை ருசித்து அவன் மகிழ்கிறான். அதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். அப்போது அந்தக் கடை வாசலில் ஒரு ஏழைப் பையன் ஏக்கத்தோடு என் மகன் மிட்டாய் சாப்பிடுவதை பார்க்கிறான். அந்த ஏழைப் பையன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித்தந்தால் அது அருள். 


என் மகன் மேல் நான் செலுத்துவது அன்பு. 

அந்த ஏழைப் பையன் மேல் நான் செலுத்துவது அருள். 


அதில் முதல் குறள்

பாடல் 


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள


பொருள் 


அருட்செல்வம் = அருளாகிய செல்வம் 


செல்வத்துள் செல்வம் = செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் 


பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம் 


பூரியார் கண்ணும் உள = இழிந்தவர் இடத்திலும் இருக்கும் 


மேலோட்டமாய் பார்த்தால் மிக எளிமையான, பெரிய ஆழ்ந்த அர்த்தம் இல்லாத குறள் போலத் தெரியும். 


வாருங்கள்,உள்ளே செல்வோம். 


பொருள் செல்வம் புரிகிறது. வீடு, மனை, நகை, கார், வங்கிக் கணக்குகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


அது என்ன அருள் செல்வம்?  அருள் செய்யலாம். அது எப்படி செல்வமாக முடியும்?


செல்வம் என்றால் என்ன? ஏதோ ஒருவிதத்தில் நமக்கு இன்பம் தருவதைத்தானே நாம் செல்வம் என்போம். நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எப்ப அதை எடுத்தாலும் ஏதாவது ஒரு கோளாறு. ஓடுவது கிடையாது, ரொம்ப சத்தம் வரும், பிரேக் பிடிக்காது என்று இருந்தால், அதை செல்வம் என்போமா? "இந்தச் சனியனை கட்டிக்கொண்டு ..." என்று சலிப்போம் அல்லவா?  செல்வம் என்றால் சுகம் தர வேண்டும். 


பொருள் செல்வத்தால் சுகம் வரும். ஆனால், சிக்கலும் வரும். பயம் வரும். சில சமயம் அது நம்மை விட்டுப் போய் விடலாம். 


ஆனால், அனைத்து உயிர்களையும் போற்றி, அவைகளுக்கு நன்மை தருவதால் வரும் இன்பம் இருக்கிறதே, சுகம் இருக்கிறதே, அது தான் அருளலால் வரும் செல்வம். அது இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கு நன்மை தருவது. வீடு பேற்றையும் தரும். எனவே, அருளை செல்வம் என்றார். 


சரி, அதை செல்வம் என்று ஏற்றுக் கொண்டாலும், மற்ற எல்லா செல்வத்தையும் விட, இதுதான் உயர்ந்த செல்வம் என்று எப்படி கூற முடியும்?


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். தெருவில் நம் வண்டியைப் பார்த்து மற்றவர்கள் வியப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்கிறோம். வீடு, கார், நகை எல்லாம் அப்படித்தான்.


ஆனால், அதே போல் கார் நிறைய பேரிடம் இருந்தால் என்ன ஆகும். நாம் சாதாரண ஆளாகி விடுவோம். அதில் ஒரு பெருமையும் இல்லை. பணமும் பொருளும் யார் வேண்டுமானாலும் சேர்த்து விடலாம். திருடன், அயோக்கியன் இடம் கூட பெரும் செல்வம் இருக்க வாய்ப்பு உண்டு. 


இந்த அருளாகிய செல்வம் இருக்கிறதே, அது எல்லோரிடமும் இருக்காது. 


அருள் செல்வம் பெற முதலில் அறிவு வேண்டும். மன மாசுகள் நீங்க வேண்டும், அன்பு நிறைய வேண்டும், அருள் பெருக வேண்டும்.  எளிதான காரியம் அல்ல. ஒருவனிடம் அருள் செல்வம் இருக்கிறது என்றால், அது மற்றவர்களால் எளிதாக அடைய முடியாத செல்வம். எனவே அது உயர்ந்த செல்வம். 


அது மட்டும் அல்ல, எவ்வளவு பொருள் சேர்த்தாலும், நாம் இறந்த பின் அதில் ஒரு குன்றுமணியைக் கூட கொண்டு செல்ல முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் செல்ல முடியும். 


ஆனால், அருள் செல்வம் இருக்கிறதே, அது மறுமைக்கும் பயன் தரும். 


எனவே அது உயர்ந்த செல்வம். 


மேலும் சிந்திப்போம். 




Sunday, January 14, 2024

திருக்குறள் - துறவறம் - விரதம்

 திருக்குறள் - துறவறம் - விரதம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_14.html



துறவறத்தை பரிமேலழகர் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 


விரதம், ஞானம் என்று. 


ஞானம் என்பது பற்றி முந்திய பதிவில் சிந்தித்தோம். இனி விரதம் பற்றி கூறத் தொடங்குகிறார். 


விரதம் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


விரதம் என்றால் பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நாம் சொல்லுவோம். சாப்பட்டுக்கே வழி இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் என்று அர்த்தமா? 


பரிமேலழகர் காட்டும் விரதம் வேற லெவல்.



"அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்"


 "இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும்,"


ஒருவன் உலகில் உள்ள எல்லா அறத்தையும் செய்ய முடியாது. எனவே, எதை எதை செய்யப் போகிறான் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். அதே போல் எதை எதை விடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும். 


உதாரணமாக, காலையில் குளித்துவிட்டு தான் சமையல் தொடங்குவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு விரதம். தினமும் ஒரு மணி நேரம் நல்ல விடயங்களைப் படிப்பேன் என்று செய்து வந்தால், அதுவும் ஒரு விரதம். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவேன் என்று வைத்துக் கொண்டால், அது ஒரு விரதம். 


என்ன வந்தாலும், விரதத்தைக் கை விடக் கூடாது.எவ்வளவு துன்பம் வந்தபோதும், உண்மை பேசுவேன் என்ற விரதத்தை அரிச்சந்திரன் கைவிடவில்லை. அரிச்சந்திரன் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. அவனை ஏன் இன்றும் கொண்டாடுகிறோம்?  ஒரு விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தான். அவ்வளவுதான். 


அதே போல், சிலவற்றை செய்யமாட்டேன் என்று இருப்பதும் ஒரு விரதம்தான். மாமிசம் உண்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, மது அருந்துவது இல்லை என்று பிடிவாதமாக இருப்பதும் விரதம் தான். 


சரி, இதை எந்த அளவுக்குச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 


"தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன"


நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு. உதாரணாமாக மது அருந்துவதில்லை என்ற விரதம், சில இருமல் மருந்தை உட்கொள்ளும் போது கைவிடப்படும். பல இருமல் மருந்துகளில் கொஞ்சம் மது இருக்கும். தவிர்க்க முடியாது. நாம் உண்ணும் தயிரில் கோடிகணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தயிர் விட்டு உண்ணும்போது நாம் அத்தனை உயிர்களையும் உண்ணுகிறோம். விரதம் பழுதுபடும். தவிர்க்க முடியாது. எனவே, "ஆற்றலுக்கு ஏற்றவாறு" என்று கூறினார். 


சரி இப்படி எத்தனை விரதங்கள் இருக்கின்றன? எதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும்? என்று கேட்டால்....



"அவைதாம் வரம்பில"


அந்த விரதங்கள் கணக்கில் அடங்காது. அவ்வளவு விரதங்கள் இருக்கின்றன. 



"ஆகலின்,"


எனவே. 



"பெருகும் என்று அஞ்சி"


அவை அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரியதாகி விடும் என்று பயந்து 



", அவைதம்முளே"  - அந்தப் பல விரதங்களில் 


"பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை" பல விரதங்களை உள்ளடக்கிய ஒரு சில சிறப்பான விரதங்களை 


"ஈண்டுக் கூறுவான் தொடங்கி", - இன்று கூறத் தொடங்கி 


"முதற்கண் " - முதலி 


'அருளுடைமை' கூறுகின்றார் = அருளுடைமை என்ற விரதம் பற்றிக் கூறுகிறார். 


துறவுக்கு அருள்தான் முதல் படி. 


பொண்டாட்டியை பிடிக்கவில்லை, கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, வாழ்க்கைச் சுமை பெரிதாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் துறவுக்கு அடிப்படை அல்ல. அருள்தான் அடிப்படை என்பதால் அதை முதலில் கூறத் தொடங்கினார். 


என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமா ?



Thursday, January 11, 2024

திருக்குறள் - துறவறம் - தொடக்கம்

 திருக்குறள் - துறவறம் - தொடக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_11.html


துறவறம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, அது எப்படி வரும் என்பதை எல்லாம் பரிமேலழகர் மிகத் தெளிவாக, மிகச் சுருக்கமாக விளக்குகிறார். 


"இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்  பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்."


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் மிக நீண்ட பொருள் உண்டு. 


விரித்து சிந்திப்போம். 


முதலில் துறவறம் என்றால் என்ன என்று சொல்கிறார். 


"மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி"

துறவறம் என்பது இல்லறத்தின் நீட்சி. இல்லறத்தை ஒரு தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பல பேர் இல்லறத்தில் சிக்கல் அதிகமானால் அதை சமாளிக்க முடியாமல் சந்நியாசியாகப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். அது அல்ல துறவு. இல்லறத்தை முழுமையாக, சிறப்பாக, ஒரு குற்றமும் இன்றி நடத்த வேண்டும். 


" அறவுடையராய்ப்"


அறத்தின் வழி நிற்க வேண்டும். ஊரை ஏமாற்ற காவி அணியக் கூடாது. அது துறவறம் அல்ல. அறத்தின் வழி நிற்பதுதான் துறவறம். 


"  பிறப்பினை அஞ்சி"

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு அஞ்சி, அதில் இருந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைதான் துறவறம். இந்தப் பிறப்பு என்பது நல்லாத்தானே இருக்கிறது என்று நினைபாவர்களுக்கு துறவு வாய்க்காது. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகர் கூறியது போல 


"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி " என்பார் அருணகிரி. 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா’


என்னை மீண்டும் மீண்டும் பெற்று, தாய்மார்களும் உடல் சலித்து விட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் பிறப்பது எனக்கு மட்டும் துன்பம் அல்ல. என்னை ஈன்றெடுக்கும் அன்னைமார்களுகும் துன்பம்தான். ஓடி, ஆடி, விளையாடி, பொருள் சேர்க்க உழைத்து, என் கால் வலிக்கிறது. ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் பிரமன் எனக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். இன்னும் ஒரு கருப்பையில் வாராமல் என்னை காத்தருள் என்று இருப்பையூர் வாழும் சிவனை உருகி வேண்டுகிறார் பட்டினத்தார். 


"வீடுபேற்றின் பொருட்டுத்"


பிறப்பினை அஞ்சி என்ன செய்ய? மீண்டும் பிறக்காமல் இருக்க வீடு பேறு அடைய வேண்டும். அதற்கு துறவு அவசியம். 


"துறந்தார்க்கு உரிய அறம்."


அப்படிப்பட்ட துறவை மேற் கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை இந்த துறவற இயலில் கூற இருக்கிறார். 



"அதுதான்"


அந்தத் துறவரமானது



"வினைமாசு தீர்ந்து"


வினையினால் வரும் குற்றங்கள் தீர்ந்து. அதாவது வினையினால் வரும் பாவ புண்ணியங்கள் தொடராமல். புண்ணியமும் பிறவிக்கு வழி வகுக்கும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி"


என்பார் மணிவாசகர். 


அறமும், பாவமும் நம்மை பிறவியில் கட்டும் கயிறுகள். இரண்டும் தீர வேண்டும். 


"அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு"


அந்தக்கரணங்கள் என்றால் என்ன? 


கரணம் என்றால் செய்கை, செயல் என்று பொருள். தோப்புகரணம், குட்டிக் கரணம் என்று சொல்கிறோம் அல்லவா? அந்தக் கரணம் என்றால் உள்ளே நடக்கும் செயல்பாடுகள். 


கண் என்பது புற உறுப்பு. கண் காண்பது இல்லை. கண் காண்பதற்கு உதவி செய்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். அதன் பின் சரியாகத் தெரிகிறது. அப்படி என்றால் கண்ணாடி பார்கிறது என்று அர்த்தமா? இல்லை. கண்ணாடி நாம் காண உதவி செய்கிறது. அது போல கண் உதவி செய்கிறது. 


இப்படி அனைத்து புலங்களில் இருந்தும் வரும் செய்திகளை பகுத்து, பிரித்து, ஆராய்ந்து நமக்கு சொல்லும் கருவிகளுக்கு அந்தக்கரணங்கள் என்று பெயர். 


நான்கு வித அந்தக் கரணங்கள் இருக்கின்றன. 


மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன.


கண், காது, மூக்கு, தோல், நாக்கு இவற்றில் இருந்து வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து நமக்கு இது இன்னது என்று சொல்லுபவை இந்த நான்கும். இந்த நான்கிற்கும் உள்ள தொடர்பினை நமது வேதாந்தங்களும்,தர்க்க இயலும் பலவாறு ஆராய்ந்து சொல்கின்றன. 


இந்த நான்கு அந்தக்கரணங்களும் தூய்மையாக வேண்டும். நாம் அணியும் மூக்குக் கண்ணாடி எண்ணெய் பிசுக்கு ஏறி, அழுக்கு படித்து இருந்தால் நம்மால் சரிவர பார்க்க முடியாது அல்லவா? அது போல இந்த அந்தக்கரணங்கள் தூயவையாக இல்லாவிட்டால் உண்மை சரியாக நமக்கு புலப்படாது. எனவே, அவற்றை தூய்மையாக வேண்டும். 


"அவராற் காக்கப்படும்"


அப்படி தூய்மையாக்க வேண்டுபவர்கள் செய்யும் செயல்கள், கடமைகள் விரதங்கள் எனப்படும். விரதங்கள் மூலம் அந்தக்கரணங்களை தூய்மை படுத்த முடியும். 


உடனே, விரதம் என்றால் பட்டினி கிடப்பது, உண்ணாமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. விரதம் என்றால் என்ன என்பதை பின்னர் விளக்குகிறார். 



"விரதங்களும்"  


அவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களும் 


" அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும்"


விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்றால், "ஞானம்".


விரதம் இல்லாமல் ஞானம் வராது. ஞானம் என்பது படித்து வருவது அல்ல. விரதங்களின் மூலம் வருவது.



" என இருவகைப்படும்."


துறவறம் என்பது விரதம், ஞானம் என்ற இரண்டு வகைப்படும்.


 - இல்லறத்தின் வழுவாது ஒழுகி, 

- அறவுடையராய்ப்  

- பிறப்பினை அஞ்சி, 

- வீடுபேற்றின் பொருட்டுத் 

- துறந்தார்க்கு உரிய அறம். 

-  வினைமாசு தீர்ந்து, \

- அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, 

- அவராற் காக்கப்படும் விரதங்களும், 

- அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் 

- என இருவகைப்படும்."


இதைவிட தெளிவாக யாரால் கூற முடியும்.


அடுத்து விரதம் பற்றி கூற இருக்கிறார். 


அதை அடுத்த பதிவில் சிந்திக்க இருக்கிறோம். 



Monday, January 8, 2024

திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம் 


நமக்கும் துறவறத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் என்ன துறவியாகப் போகிறோமா? அந்த எண்ணம் துளியும் நமக்கு இல்லை. பின் எதற்கு துறவறம் பற்றி நாம் படிக்க வேண்டும்?  துறவியாக போக விரும்புபவர்கள் படிக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். 


சற்று பொறுங்கள். 


ஏன் துறவறம் பற்றி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 


நாம் எல்லோருமே துறவிகள்தான். 


துறவு என்றால் என்ன? ஏதோ ஒன்றை துறப்பதுதானே ?


சிறு வயதில் பொம்மைகள் வைத்து விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் கோலி குண்டு, கிட்டிப் புள், பம்பரம், பட்டம் என்று விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் சைக்கிள், அதையும் துறந்தோம். 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை துறந்து கொண்டேதானே இருக்கிறோம். இல்லை, எதையுமே நான் துறக்க மாட்டேன் என்று இன்றும் சொப்பு சட்டி வைத்து விளையாடினால் எப்படி இருக்கும்?


ஏன் துறந்தோம்?  அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி அடைவதால் துறந்தோம். எனவே துறவு என்பது மன, அறிவு வளர்ச்சியின் அடையாளம். 


இரண்டாவது, சில விடயங்களை நாம் நன்மை நோக்கி துறக்கிறோம். உதாரணமாக, வயதானால், இனிப்பை துறக்கிறோம். உடம்பு ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை வியாதி வரும். இனிப்பு கிட்ட கூட போகக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சரி, இனிமேல் காப்பியில் சர்கரை போடாமல் குடிப்போம் என்று சர்க்கரையை துறந்து விடுகிறோம் அல்லவா. அது நன்மை நோக்கி வந்த துறவு. 


துறவு ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 


சர்க்கரை என்பது ஒரு உதாரணம். பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் மட்டுப் படும். இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று விட்டு விலகத் தோன்றும். அதுவும் ஒரு துறவு தான். 


ஒரு துறையில் நாம் முன்னேற வேண்டும், சிறப்பாக வேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்தத் துறையில் பெயர் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதைப் போல் செய்ய முயற்சி செய்வோம் அல்லவா. வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் சிறப்பாக வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களைப் போல வாழ முயற்சி செய்யலாம். அப்படி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் துறவிகள். அவர்கள் வழிகாட்டிகள். 


எப்படியும் நாம் கொஞ்ச கொஞ்சமாக துறவில் ஈடுபடுகிறோம். அதையே சிறப்பாகச் செய்து விட்டால் என்ன?  


துறவு என்பது தனி வாழ்க்கை முறை அல்ல. துறவு என்பது இல்லறத்தின் தொடர்ச்சி. அவ்வளவுதான். 


வயதாக வயதாக நாம் விரும்புகிறோமோ இல்லையோ, துறவு என்பது தானே நம் மீது திணிக்கப்படும்.  உறவுகள் நம்மைத் துறக்கும், ஆரோக்கியம் நம்மைத் துறக்கும், செல்வம் ஒரு பொருட்டாகத் தெரியாது...வலிந்து திணிக்கப்படும் துறவை விட நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவு சிறந்தது அல்லவா?  


துறவு என்றால் ஏதோ வாழ்வை உதறிவிட்டு ஓடிவிடுவது அல்ல. வாழ்வின் நீட்சி. அவ்வளவுதான். 


நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று அல்ல. வள்ளுவர் என்ன சொல்கிறார் சிந்திப்போம். நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். திறந்த மனத்துடன் இதை அணுகுவோம். 




 
















Saturday, January 6, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 6

  

 திருக்குறள் - இதுவரை - பாகம் 6

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/6.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை

16.  புறங்கூறாமை 

17. பயனில சொல்லாமை 

18. தீவினையச்சம் 


மேற்கண்ட 18 அதிகாரங்களின் தொகுப்புரை பற்றி சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


ஒப்புரவு அறிதல் - மன, மெய், மொழியால் வரும் குற்றங்களை நீக்கிய பின், ஒருவன் தான் பெற்ற செல்வத்தினை சமுதாய நலனுக்குக்காக செலவிடத் தலைப்படுவான். பொறாமை, பேராசை, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க நினைப்பது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது என்ற குற்றங்கள் எல்லாம் மறைந்த பின், ஒருவன் மகிழ்வான வாழ்வை நடத்துவான். அப்படி மகிழ்ந்து இருப்பவன், தான் மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதாது, தன்னைச் சார்ந்த சுமுதாயமும் மகிழ வேண்டும் என்று நினைத்து செய்வான். அது ஒப்புரவு எனப்பட்டது. அது தன் குற்றங்கள் மறைந்த பின்னால் தான் வரும் என்பதால், அவற்றின் பின்னே இந்த அதிகாரம் கூறினார். 


ஈகை - பொது நலம் குறித்து நல்லது செய்தாலும், அதில் கொஞ்சம் புகழ் வரும். நாலு பேர் புகழ்ந்து பேசுவார்கள். டிவி, செய்தித்தாள் இவற்றில் பேர் வரும். சுய இலாபம் இருக்கும். மாறாக, தனி ஒருவனுக்கு உதவி செய்தால், பெரிய விளம்பரம் இருக்காது. அதாவது, அதில் சுயநலம் கொஞ்சம் கூட இருக்காது. பொது நலத்துக்கு செய்வது போல், தனி மனிதனுக்கும் உதவி செய்வது ஈகை என்பது. கொஞ்சம் கூட விளம்பரம், சுய இலாபம் இல்லாமல் செய்யும் மனப் பக்குவம் வர வேண்டும் என்பதால், இதை ஒப்புரவின் பின் கூறினார். 


புகழ் - ஒருவன் இல்லறத்தை சிறந்த முறையில் நடத்தி, மன, மெய், மொழிக் குற்றங்களை நீக்கி, சமூகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் உதவி செய்து வாழ்ந்தால், அவனுக்கு நீடித்த புகழ் கிடைக்கும். புகழ் ஒன்றே ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்தினான் என்பதற்கு சான்று.  


புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் நிறைவு பெறுகிறது. 


இனி அடுத்து துறவறம் பற்றிப் பேசப் போகிறார். 


நாளை முதல் அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை நாம் சேர்ந்து பயணித்த அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 



Wednesday, January 3, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 5

 

 திருக்குறள் - இதுவரை - பாகம் 5

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/5.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை


இதுவரை மேலே உள்ள 15 அதிகாரங்களை சிந்தித்தோம். 


புறங்கூறாமை 


அழுக்காறாமை,  வெஃகாமை என்ற இரண்டும் மனதின் கண் நிகழும் குற்றங்கள். அதை அடுத்து மொழியின் கண் குற்றங்கள் பற்றி கூற இருக்கிறார். அதில் முதலாவதாக, புறங்கூறாமை பற்றி கூறுகிறார். அதாவது, ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறுவது. இது தேவையில்லாத ஒன்று. ஒருவர் தவறு செய்தால், அது தவறு என்று தெரிந்தால், அதை அவரிடமே நேரிடையாகவே கூறலாமே. அவர் இல்லாத போது கூறுவது என்பது நடந்ததை திரித்துக் கூறவே உதவும். அதனால் ஒரு பயனும் விளையாது. 


பயனில சொல்லாமை 


சொல்லில் ஏற்படும் குற்றங்கள் நான்கு. அவை பொய், குறளை, கடும் சொல், பயனில சொல் என்பவை. இதில் இல்லறத்தில் உள்ளவன் பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது. ஒன்றும் இல்லாவிட்டால் கூட மனைவியை "நீ இரதி மாதிரி இருக்கிறாய்' என்று பொய் சொல்லத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லறம் சிறக்காது. பொய்யை முற்றும் விலக்க துரவியால்தான் முடியும் என்பதால், அதை துறவறத்தில் வைத்தார். கடும் சொல்லை தவிர்க்க இனியவை கூறல் என்ற அதிகாரம் வைத்தார். மீதி இருக்கும் புறங்கூறாமை மேலே சொல்லிவிட்டபடியால், அடுத்து பயனில சொல்லாமை பற்றி கூறுகிறார். தனக்கும், பிறருக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை கூறாமல் இருப்பது. 


தீவினையச்சம் 


மனதின் கண் நிகழும் குற்றங்களும், வாக்கின் கண் நிகழும் குற்றங்களும் சொல்லிய பின், உடலின் கண் நிகழும் ஏனைய குற்றங்கள் பற்றி தொகுத்து ஒரே அதிகாரத்தில் கூறினார். தீய வினைகள் செய்ய அஞ்ச வேண்டும். அச்சம் வந்தால் தானே அதில் இருந்து விலகி விடுவோம். தவறான காரியம் செய்தால் மானம் போய்விடுமே என்ற அச்சம், தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தவறான காரியங்கள் செய்ய மாட்டோம். 


மேலும் சிந்திப்போம்.