Tuesday, January 23, 2024

திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

 திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_23.html


உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. அது தவிர வேறு பல மார்கங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. எது சரி, எது தவறு என்று சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

என் சமயம்தான் பெரியது, என் கடவுள்தான் உயர்ந்தவர் என்று சண்டை போட்டுத் திரிகிறார்கள். 


அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது. மதங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கருத்துகளைச் சொன்னால், பாமர மனிதன் என்ன செய்வான்?


மதங்கள் எவ்வளவுதான் வேறுபட்டாலும், ஒரு விடயத்தில் அனைத்து மதங்களும் ஒன்று படுகின்றன. அது என்ன விடயம் என்றால் 


"உயிர்களிடத்து அன்பு செய்"


என்ற ஒரு கட்டளையில் எல்லா மதங்களும் ஒரு புள்ளியில் நிற்கின்றன. 


அன்பு, கருணை, அருள் என்ற விடயத்தில் எல்லா மார்கங்களும் ஒன்றாக நிற்கின்றன. 


நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிர்களிடத்து அன்பு செய் என்று உங்கள் மதமும் போதிக்கும்.  அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 


பாடல் 

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை


பொருள் 


நல்லாற்றான் = நல்ல வழிகளில் 


நாடி = தேர்ந்து எடுத்து 


அருளாள்க = அருள் செய்க 


பல்லாற்றான் = பலவழிகளில் 


தேரினும் = ஆராய்ந்து பார்த்த பின்னும் 


அஃதே துணை = அதுதான் உயிருக்கு சிறந்த துணை 


இந்த குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பமான உரையை பார்ப்போம். அவர் மட்டும் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரிந்தே இருக்காது. 


நல்லாற்றான் = நல்ல வழிகளில். 


அது என்ன நல்ல வழி? 


நல்ல வழி என்பதை இரு கூறாக பிரிக்கிறார் பரிமேலழகர்.


அளவையின் மூலம் அறிந்து கொள்வது. பொருத்தம் அறிந்து செய்வது என்று. 


அளவை என்றால் என்ன?


எது ஒன்றும் சரியா தவறா என்று எப்படி அரிவது? அளந்து பார்க்க வேண்டும். ஒரு அளவுகோல் வேண்டும் அல்லவா? அது போல் நாம் தேர்ந்து எடுத்த பாதை சரியா அல்லது தவறா என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு மூன்றுவிதமான அளவைகள் இருக்கின்றன. அவற்றை பிரமாணங்கள் என்பார்கள்.  


காட்சி பிரமாணம் (காண்டலளவை )

அனுமானப் பிரமாணம்  (கருத்தலளைவை)

ஆகமப் பிரமாணம் என்று  (சப்தலளைவை - ஞானிகள், பெரியவர்கள் சொல்லக் கேட்பது) 


தானே கண்டு உணர்வது. அருள் உடைய பெரியவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்வு சிறந்து இருக்கிறதா நேரடியாக பார்த்து அறிவது. 


அடுத்தது யூகித்து அறிவது. வள்ளலாரை நாம் பார்த்தது இல்லை. ஆனால் அவர் உயிர்கள் மேல் அருள் கொண்டு இருந்தார் என்று எப்படி அறிகிறோம்? அவரது பாடல்கள் மூலம் அவர் ஒரு  அருளாளர் என்று அனுமானிக்கிறோம். 


மூன்றாவது, பெரியவர்கள் சொல்லக் கேட்பது. ஞானிகள், தவ சீலர்கள் சொல்லக் கேட்பது. 


இந்த மூன்று வழிகளால் ஆராய்ந்து பின், அது பொருந்துமா, பொருந்தாதா என்று அறிந்து செய்வதைத்தான் "நல்லாற்றான்" என்கிறார். 


இப்படி ஆழமாக ஆராய்ந்த பின்னும், எல்லா மதங்களும் வேறு பல விடயங்களில் வேறு பட்டாலும், உயிர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையில் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள் 


சரி, அது என்ன "அஃதே துணை " என்றால் என்ன?


உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது இம்மைக்கும், மறுமைக்கு இன்பம் தருவதால், அதை துணை என்றார். 


அன்பு விரிந்து அருளாகட்டும் !



1 comment:

  1. எல்லா உயிர்களிடத்தும, அன்பு செய் என்பது எல்லா மத கொள்கை அல்ல.

    ReplyDelete