Friday, January 19, 2024

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_19.html


தெருவில் பிச்சைக் காரர்களை பார்த்து இருக்கிறோம். பசி. வறுமை. அழுக்குத் துணி. குளித்து எத்தனை நாளோ. இருக்க இடம் இல்லை. குளிர், வெயில் கொடுமைகள். போதாக்குறைக்கு தெருவில் சென்றால் நாய்கள் எல்லாம் அவர்களை பார்த்துக் குரைக்கும், கடிக்க வரும். எல்லார் முகத்தையும் பரிதாபமாக பார்த்து பிச்சை கேட்க வேண்டும். சிலர் போடுவார்கள், சிலர் முகம் சுளிப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. 


ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள்? யாரும் பிச்சைக்கார்களாய் பிறப்பது இல்லை. பின் ஏன் இப்படி வருந்துகிறார்கள். 


விவேக சிந்தாமணி சொல்கிறது. 


ஒரு காலத்தில், முன் பிறவிகளில், அன்பான மனைவி பால் சோறை (அன்னத்தை) பொன் கிண்ணத்தில் கொண்டு வந்து அன்போடு ஊட்டிய போது, அதை சுவைத்து உண்டு கொண்டு, பசி என்று வந்தவர்களுக்கு ஒன்று ஈயாமல் விரட்டி அடித்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் இந்தப் பிறவியில்  பிச்சைக்கார்களாய்  பிறந்து துன்பப் படுகிறர்கள் 


என்கிறது. 


பாடல் 



 மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை

     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு

     உதவா மாந்தர் இவர்தாமே!


பொருள் 


மண்ணார் = மண்ணால் செய்த 


சட்டி = சட்டியை 


கரத்து ஏந்தி = கையில் ஏந்தி 


மறநாய் = கொடூரமான நாய்கள் 


கௌவும் = கவ்வும் 


காலினராய் = கால்களை உடையவர்களாய் 


அண்ணாந்து = தெருவில் அமர்ந்து போவோர் வருவோர் முகங்களை அண்ணாந்து பார்த்து 


 ஏங்கி இருப்பாரை = யார் நமக்கு பிச்சை போடுவார்கள் என்று ஏங்கி இருப்பவர்களை பற்றி 


அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா! = அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும், தெரியும் 


பண்ணார் = இசை போன்ற இனிய 


மொழியார் = குரலை உடைய மனைவி 


பால் அடிசில் = பால் சோறை 


பைம்பொன் = சிறந்த தங்கப்  


கலத்தில் = பாத்திரத்தில் வைத்து  


பரிந்து ஊட்ட = பாசத்தோடு ஊட்டும் போது 


உண்ணா நின்ற போது = அவற்றை உண்டு கொண்டு இருந்த போது 


ஒருவர்க்கு = பசி என்று வந்த ஏழைக்கு 


உதவா மாந்தர் இவர்தாமே! = உதவாத மனிதர்கள்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் 


விவேக சிந்தாமணி சொல்லும் கருத்து ஒருபுறம் இருக்கட்டும். 


இனி வரும் நாட்களில் பிச்சைக்கார்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


எந்த ஊரில் மனைவிகள் இனிமையாக பேசிக் கொண்டு, தங்கப் பாத்திரத்தில், பால் சோறை அன்போடு கணவனுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்தக் காலம். :)


நகைச்சுவையை தவிர்த்து, இன்றைய சூழ்நிலையோடு ஓட்டிப் பார்த்தால், இவ்வளவு செல்வம் இருந்தும், மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்யாமல் இருப்பவர்கள் மறு பிறவியில் துன்பப்படுவார்கள் என்று பயம் காட்டுகிறது விவேக சிந்தாமணி. 



1 comment:

  1. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
    தீப்பிணி தீண்டல் அரிது. (227)

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமிய ருணல். (229)

    ReplyDelete