Showing posts with label திருக்கோயில் திருவெண்பா. Show all posts
Showing posts with label திருக்கோயில் திருவெண்பா. Show all posts

Saturday, November 23, 2013

திருக்கோயில் திருவெண்பா

திருக்கோயில் திருவெண்பா 


இந்த திருக் கோவில் திரு வெண்பாவை அருளிச் செய்தது ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர்.

மூப்பு வருமுன், இறைவனை நினை என்று ஒவ்வொரு கோவிலாகக் கூறுகிறார்.  அந்த கோவிலில் உள்ள , அந்த பெயர் உள்ள இறைவனை போய் வணங்கு என்று பெரிய பட்டியலைத்  தருகிறார்.

வாழ்வின் நிலையாமையை மிக மிக ஆழமாக, மனதில் தைக்கும்படி சொல்லும்படி பாடல்கள்.


பாடல்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொருள்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது = உயிர் இருக்கிறதா என்ற தொட்டு தடவி பார்த்து, நாடித் துடிப்பை காணாமல்....


பெட்டப் பிணமென்று பேரிட்டுக் = இதுவரை இருந்த பெயரை நீக்கி, பிணம் என்று பெயரிட்டு

 கட்டி எடுங்களத்தா என்னாமுன் = சுடுகாட்டுக்கு கட்டி எடுத்துக் கொண்டு போங்கள் என்று மற்றவர்கள் சொல்லும் முன்னே 

ஏழைமட நெஞ்சே = வரிய என் நெஞ்சே


நெடுங்களத்தான் பாதம் நினை = நெடுங்களுத்தூர் என்ற ஊரில் உள்ள சிவனின் பாதத்தை நினை



Friday, November 8, 2013

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம்

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம் 



கிழம் இப்படித்தான் படுத்துது என்று மகளோ மருமகளோ அலுத்துக் கொள்வது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் காதில் விழுவது பற்றி அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாள் என்று தாத்தாவும் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கிறார்...கண்ணோரம் ஈரம்...

பக்கத்து மேஜையில் மருந்துகள் குமிந்து கிடக்கின்றன.....சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது என்று தாத்தா தலையை திருப்பிக் கொள்கிறார்

பாடல்


உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

சீர் பிரித்த பின்

உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்து எதிரே காட்டிய கால் - பைய
எழுந்து இருமி யான் வேண்டேன் என்னா முன் நெஞ்சே
செழுந் திரு மயானமே சேர்


பொருள் வேண்டுமா என்ன ?