Showing posts with label thirukadaikaapu. Show all posts
Showing posts with label thirukadaikaapu. Show all posts

Sunday, July 28, 2019

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே


சில பாடல்கள் ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது. என்னவோ ஒன்று அந்தப் பாட்டில் இருக்கிறது. என்ன என்று சுட்டி கூற முடிவதில்லை.

என்னவோ பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.

என் நண்பர்கள் கேப்டது உண்டு..."என்ன எப்பப் பார்த்தாலும் சாமி, பூதம் என்று அதையே திருப்பி திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறாய் ...மனித உணர்வுகள், உறவுகள், அதில் எழும் சிக்கல்கள் பற்றி நம் தமிழ் இலக்கியம் என்ன கூறுகிறது என்று எழுதக் கூடாதா " என்று.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இருந்தாலும், பக்திப் பாடல்களில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்தம் படிக்கும் போது இப்பவும் மனம் நிறைந்து கண்ணில் நீர் தழும்புவது நிகழாமல் இல்லை.

தெளிந்த குளத்தில் சிறு கல் விழுந்தால், வட்ட வட்டமாக அலை பரவுவதைப் போல, சில பாடல்கள் படித்து முடித்து பல மணி நேரம் கழிந்தும் மனதுக்குள் அலை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்படிப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தர் பாடிய திருக்கடை காப்பில் உள்ளது இந்தப் பாடல்.

ஆன்மீகம், இறை உணர்வு, சமய உணர்வு, உண்மைத் தேடல், நான் என்று அறியும் வேட்கை இவற்றிற்கு நாமே தேடி விடை கண்டு கொள்ள முடியுமா? சிலரால் அது முடியுமாக இருக்கும். எல்லோராலும் அது முடியாத காரியம்.

பின் என்ன செய்வது?

கண்டு தெளிந்தவர்களை பிடித்து, அவர்கள் மூலம் தெரிந்து கொள்வது எளிய வழி.

ஞான சம்பந்தர் சொல்கிறார்


"குருகே (நீர் பறவை) , என் பசலை நோய் அவனுக்குத் தெரியாமல் போனது என் வினைப் பயனே. நீ போய் சொல்லு, இப்படி நான் அவன் நினைவாகவே இருக்கிறேன் என்று". என்று குருகை தூது விடுகிறார்.

இறைவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. உனக்குத் (ஆச்சாரியனுக்கு) தெரியும். எனவே, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க மாட்டாயா என்று வேண்டுகிறார்.


பாடல்

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.


பொருள்

எறிசுறவங்  = எதிரில் வரும் மற்ற கடல் வாழ் விலங்குகளை தூக்கி எறியும் சுறாமீன்

கழிக்கான லிளங்குருகே = இருக்கும் கடலுக்கு பக்கத்தில் உள்ள கானகத்தில் உள்ள இளம் குருகே

யென்பயலை = என் பசலை

அறிவுறா தொழிவதுவு மருவினையேன் = அறிவு உறாது ஒழிவதும்  அரு வினையேன்

பயனன்றே = பயனால் அன்றோ

செறிசிறார் = நெருங்கியசிறுவர்கள்

 பதமோதுந் = பதம் ஓதும் (வேத பதங்களை ஓதும்)

திருத்தோணி புரத்துறையும் = திருத் தோணி புரத்து உறையும்

வெறிநிறார் = சிறந்த நிறங்களைக் கொண்ட

மலர்க்கண்ணி = மலர்மாலையை அணிகலனாக அணிந்த

வேதியர்க்கு = வேதியற்கு, சிவனுக்கு

விளம்பாயே. =  சொல்வாயாக

ஒரு புறம் கலங்கும் கடல். அதில், கோபம் கொண்டு திரியும் சுறா மீன். மறுபக்கம் காடு. காட்டில், ஒரு குருகு. தூரத்தில், திருத்தோணிபுர கோவில்.

கண்மூடி கற்பனை பண்ணிப் பாருங்கள்.

பாட்டின் பல பரிணாமங்கள் தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_28.html



Wednesday, October 10, 2018

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும்

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும் 


பாடல்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


பொறி என்றால் கருவி. குறிப்பாக எதையும் பிடிக்கும் கருவிக்கு பொறி என்று பெயர். எலிப் பொறி என்றால் எலியை பிடிக்கும் கருவி. பொறி  வைத்து பிடிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.


நமக்கு ஐந்து பொறிகள் இருக்கின்றன. கண், காது, மூக்கு, தோல், வாய் என்ற ஐந்து பொறிகள். இவை ஏன் பொறிகள் என்று அழைக்கப் படுகின்றன? வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை, உணர்வுகளை பிடிப்பதால். மூக்கு வாசத்தைப் பிடிக்கிறது. கண், காட்சிகளை பிடித்து மூளைக்கு செய்தி அனுப்புகிறது. இப்படி ஒவ்வொரு பொறியும் , ஒவ்வொன்றை பிடிக்கின்றன.


இந்த பொறிகள் பிடித்து அனுப்பும் செய்திகளை அறியும் செயலுக்கு புலன்கள் என்று சொல்லுகிறோம்.


கண் என்ற பொறி செய்யும் செயல் காண்பது.


காது என்ற பொறி செய்யும் செயல் கேட்பது.


இப்படி பொறிகளும் புலன்களும் ஒன்று சேர்ந்து நமக்கு இந்த உலகையும் ஏன் நம்மையும் நமக்கு அறிய உதவுகின்றன.


வயதாகும் போது, எந்த புலன் எந்தப் பொறியில் இருக்கிறது என்று தெரியாது.


கண்ணால் பார்த்து அறிய வேண்டியதை கையால் தொட்டு தொட்டு அறிய முயல்வோம். காதால் கேட்டு அறிய வேண்டியதை எழுதிக் காட்ட வேண்டி இருக்கும்.


புலன்கள் செயல் இழக்கத் தொடங்கும்.


உடம்புக்கு வேண்டிய சக்தியை உணவை உண்டு ஜீரணம் செய்ய முடியாமல், உடம்புக்குள் நேராக ஊசி குத்தி அனுப்ப வேண்டி இருக்கும். இப்படி புலன்கள் எல்லாம் தட்டுத் தடுமாறி தவிப்போம்.


அது மட்டும் அல்ல,


பொறிகளும் புலன்களும் தள்ளாடும் போது அறிவு அழியும். சொன்னது மறக்கும். அறிவை புதுப்பிக்க முடியாது. புது செய்திகள்  மண்டையில் ஏறாது. அறிவு கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும்.


வாயில் எச்சில் வழியும். அதை தடுத்த நிறுத்த முடியாது.


பரிதாபமாக இருக்கும்.


எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். எல்லோருக்கும் பாரமாக .இருப்போம். என்ன செய்வது தெரியாமல் தெரியாமல் திகைப்போம்.


யார் நம்மை புரிந்து கொள்ளுவார்கள் ? யார் நமக்கு உதவி செய்வார்கள் என்று தவிப்போம்.


அப்போது....


"அச்சப் படாதே நான் இருக்கிறேன்" என்று சொல்லும் அந்த இறைவன் இருக்கும் கோவில் உள்ள இடம் திருவையாறு.


அந்த திருவையாற்றில், கோவில் பிரகாரத்தில், மத்தளம் முழங்குகிறது. சங்கம் ஒலிக்கிறது. அந்த இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள்.


கோவிலிக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல் இது என்ன கூத்து, பாட்டு, மோளம் என்று ?


எந்த கலையாக இருந்தாலும் அதை இறைவனுக்கு படைப்பது என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இசை, நடனம் என்று எந்த கலையாக இருந்தாலும் இறைவனை முன்னிறுத்தி அவனுக்காக செய்வது என்பது ஒரு வழக்கம்.


அப்படி பெண்கள் ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த கோவிலில் நந்தவனம் இருக்கிறது. அங்கே பல மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களில் குரங்குகள் வசிக்கின்றன.


இந்த மேள சத்தத்தை கேட்டு, சில குரங்குகள் ஏதோ இடி இடிக்கிறது, மழை வருமோ என்று  மரத்தின் மேல் ஏறி மேகங்களை நோட்டம் விட்டனவாம்.


இப்போது பாடலை மீண்டும் பார்ப்போம்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.



பொருள் 


புலனைந்தும் = ஐந்து புலன்களும்

பொறிகலங்கி = தத்தம் பொறிகளில் கலங்கி

நெறிமயங்கி = வழி தெரியாமல் மயங்கி

அறிவழிந்திட்டு = அறிவு அழிந்து

ஐம்மேலுந்தி = ஐ என்றால் வாந்தி. வாந்தி மேல் நோக்கி வந்து

அலமந்த போதாக = பரி தவிக்கும் போது

அஞ்சேலென்று = அஞ்சேல் என்று

அருள்செய்வான் = அருள் செய்வான்

அமருங்கோயில் = இருக்கும் கோவில்

வலம்வந்த = சுற்றி வரும்

மடவார்கள் = இளம் பெண்கள்

நடமாட = நடனம் ஆட

முழவதிர = முழவு அதிர

மழையென்றஞ்சிச் = மழை வருமோ என்று அஞ்சி

சிலமந்தி  = சில குரங்குகள்

அலமந்து = பயந்து

மரமேறி  = மரத்தின் மேல் ஏறி

முகில்பார்க்குந் = மேகத்தை பார்க்கும்

திருவையாறே.= திருவையாரே



சரி குரங்குகள் மரம் ஏறி முகில் பார்த்த வரை சரி. அது என்ன சில மந்தி என்று ஒரு வார்த்தையை திரு ஞான சம்மந்தர் போடுகிறார். எல்லா குரங்குகளும் தானே பார்த்திருக்க வேண்டும் ?


காரணம், அந்த ஊரிலேயே உள்ள குரங்குகளுக்குத் தெரியும் இது மத்தள ஓசை என்று. புதிதாக வந்த குரங்குகள் இன்னும் சரியாக பழகாததால், அவற்றிற்கு தெரியாது. எனவே சில மந்தி என்று கூறினார் என்று விளக்கம் சொல்லுவார்கள்.


அது போகட்டும்.


யோசித்துப் பாருங்கள். வயதாகும். புலன்களும் தள்ளாடும். அறிவு மயங்கும். யாருக்கும் நம்மை பிடிக்காமல் போகும் காலம் ஒன்று வரும்.


அப்போதும் நம்மை வெறுக்காமல் நம்மை ஏற்றுக் கொள்ளுவான் இறைவன் மட்டுமே.


தாய் கூட ஒரு காலம் வரை தான் பால் ஊட்டுவாள், சோறு ஊட்டுவாள்.


அப்புறம் "என்ன தடி மாடு மாதிரி வளந்திருக்க தன்ன தான போட்டு சாப்பிடு" என்று கூறி விடுவாள்.


அவன் தாயினும் சாலப் பரிந்து நமக்கு கடைசி காலம் வரை கூடவே இருப்பவன்.

எனவே தான் மாணிக்க வாசகப் பெருந்தகை கூறினார்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று.

தாய் கூட ஒரு கால கட்டத்தில் விட்டு விடுவாள். இறைவன் நம்மை விடவே மாட்டான்.

"உன் பற்று அன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே " என்று கண்ணீர் விட்டார் பட்டினத்தார்.

மேலே உள்ளது ஞான சம்பந்தரின் உயிர் உருக்கும் பாடல்.

ஒரு பாடலுக்கு, எனக்குத் தெரிந்தவரை இவ்வளவு. மொத்தமும் படித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் படித்து அனுபவிக்க

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....



https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_10.html

Saturday, October 22, 2016

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல்

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல் 


திருஞான சம்பந்தர் குழந்தையாக இருக்கும் போதே பாடல் பாடத் தொடங்கினார். சின்ன பிள்ளை தானே, குரங்கைப் பார்த்தால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. எங்கு போனாலும் குரங்கைப் பற்றி , அது செய்யும் செயல்களை பற்றி பாடுவார்.

திருச்சிராப்பள்ளிக்கு வருகிறார். அங்கே, மலை மேலே ஒரு பெண் குரங்கு, தன்னுடைய துணையான ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு, குட்டிக் குரங்கை தூக்கிக் கொண்டு , முகம் சிவந்து , மரங்களின் ஊடே பாய்கிறது. அப்படிப் பட்ட ஊரில் உள்ள சிவனே நீ ஒன்றுக்கு ஒன்று முரணான பாம்பையும் நிலவையும் தலை மேல் வைத்து இருப்பது பிழை அல்லவா என்று வினவுகிறார்.

பாடல்

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?


 பொருள்


கைம் மகவு = கை பிள்ளையை

ஏந்திக் = எடுத்துக் கொண்டு

கடுவனொடு = ஆண் குரங்கோடு

ஊடிக் = ஊடல் கொண்டு

கழை = மரங்களுக்கு

பாய்வான் = (இடையில்) பாய்ந்து செல்லும்

செம்முக = சிவந்த முகத்தை கொண்ட

மந்தி = பெண் குரங்கு

கரு = கரிய

வரை = மலை

ஏறும் = ஏறும்

சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

வெம் முக = வெம்மையான முகத்தைக் கொண்ட

வேழத்து = யானையின்

ஈர் உரி போர்த்த = தோலினை மேலே போர்த்துக் கொண்ட

விகிர்தா! = தலைவா

நீ = நீ

பைம்முக = படத்துடன் கூடிய முகம் கொண்ட

நாகம் = நாகப் பாம்பையும்

மதி = நிலவையும்

உடன் வைத்தல் = ஒன்றாக வைத்து இருப்பது

பழி அன்றே? = தவறு அல்லவா ?

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று இதை ஒரு பெரிய  தோத்திர பாடல் என்று போற்றி மகிழ்கிறார்கள் ?

குரங்குகளுக்குள் சண்டை வருவதும், சிவன் தலையில் பாம்பையும், நிலவையும்  வைத்து இருப்பதும் என்ன பெரிய செய்தியா ?

சிராப்பள்ளி குன்று இருக்கிறது. அதன் மேல் சிவன் கோவில் இருக்கிறது. அங்கே இருக்கும்  குரங்குக்கு அது எல்லாம் முக்கியம் இல்லை. ஆண் குரங்கும்  பெண் குரங்கும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு இருக்கின்றன.

எது முக்கியம் வாழ்வில் என்று தெரியாமல்.

குரங்கைப் பற்றி சொன்னால் என்ன, நம்மைப் பற்றி சொன்னால் என்ன. அதில் இருந்து வந்தவர்கள் தாமே நாம்.

உலகில் என்னென்னெவோ செய்ய வேண்டியது இருக்கிறது. அதை விட்டு விட்டு, சாப்பாடு, ஊடல், கூடல் , பிள்ளைகள், குடும்பம் என்று அலைகிறோம் .

அந்த குரங்குகளுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா

நாம் அந்த குரங்குகளை பார்த்து சிரிக்கிறோம். திருஞான சம்பந்தர் போன்ற பெரியவர்கள்  நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.

பொருள் சேர்ப்பதும், உண்பதும், உறங்குவதும், பிள்ளை வளர்ப்பதும்...இது மட்டும்தானா  வாழ்க்கை.

மதியையும் பாம்பையும் வைத்து இருக்கிறாயே என்கிறார்.

இருவினை ஒப்பு என்பது சைவ சித்தாந்தத்தில் ஒரு முக்கிய பாடம்.

நன்மை தீமை, உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் முட்டாள், இன்பம் துன்பம்  என்று வாழ்வில் எல்லாம் இரண்டு துருவங்களாக இருக்கிறது.


இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

நன்மை வேண்டும், தீமை வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்


இப்படி நாம் ஒன்று வேண்டும், மற்றது வேண்டாம் என்று இருக்கிறோம்.

ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில்லாமல் மற்றது இல்லை.

பிறப்பு உண்டு என்றால், இறப்பு கட்டாயம் உண்டு.

பதவி உயர் வரும்போது மகிழ்ச்சி என்றால், ஓய்வு பெற்று வீட்டுக்குப் போகும் போது  துன்பம் கட்டாயம் உண்டு.

இன்பம், தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் வாலும் கூடவே வரும்.

துன்பம் வேண்டாம் என்றால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கு  வேண்டும்.

அதற்குத் தான் "இருவினை ஒப்பு" என்று  பெயர்.

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது வள்ளுவம்.

அரசை கொடுத்த போதும் மகிழவில்லை, அது இல்லை காட்டுக்குப் போ என்று சொன்னபோதும் இராமன் துன்பப் படவில்லை.

நடுவில் நில்லுங்கள். இன்பமும் துன்பமும் உங்களை ஒன்றும் செய்யாது.



Friday, October 21, 2016

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

நன்மைகளை உடையவனை. தீமைகள் இல்லாதவனை. உமையை தன்னுடைய இடப் பாகம் கொண்டவனை. வெண்மையான எருது ஒன்றைக் கொண்டவனை.  சம்பாதிக்காத செல்வம் உடையவனை. திருச்சிராப்பள்ளியில் உள்ள மலை மேல் இருப்பவனை பற்றி பேச என் உள்ளம் குளிரும் என்கிறார் ஞான சம்பந்தர்

பாடல்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

சீர் பிரித்த பின்

நன்று உடையானைத் தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானை
சென்று அடையாத  திரு உடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

பொருள்

நன்று உடையானைத் = நல்லவைகளை, நன்மைகளை உடையவனை

தீயது இலானை = தீமைகள் இல்லாதவனை

நரை வெள்ளேறு= வெண்மையான எருது

ஒன்று உடையானை = ஒன்றை உடையவனை

உமை ஒரு பாகம் உடையானை = உமையை ஒரு பாகத்தில் கொண்டவனை

சென்று அடையாத  = அவனை சென்று அடையாத

திரு உடையானைச் = செல்வம் உடையவனை

சிராப்பள்ளிக் = திருச்சிராப்பள்ளி

குன்று உடையானைக் = மலையை உடையவனை

கூற = பற்றி பேச

என் உள்ளம் குளிரும்மே = என் மனம் குளிரும்

சிவனுக்கு சில அடையாளங்களை கூறி, அவனை பற்றி நினைக்க என் உள்ளம் குளிரும் என்கிறார்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? நாம் அதில் இருந்து பெறும் செய்தி என்ன ?

நன்று உடையானை என்று சொன்னால் மட்டும் போதாதா ? உடனே ஏன் தீயது இல்லானை என்கிறார் ?

மற்ற சமயங்களில் உள்ள கடவுள்கள் , கோபம் உள்ளவர்கள். பழி வாங்கும் குணம் உள்ளவர்கள். தண்டிக்கும் நோக்கம் உள்ளவர்கள். தன்னை வணங்காதவர்களை, தன் சொல் கேளாதவர்களை கொல்லச் சொல்லும் குணம் வாய்ந்தவர்கள். தன்னை சேர்ந்தவர்களுக்கு நல்லதும், சேராதவர்களுக்கு தீமையும் செய்யும்  குணம் கொண்டவர்கள்.

சிவன் அப்படி அல்ல.

நல்லது உள்ளவன். நல்லது இருக்கு சரி. அதோடு கொஞ்சம் தீய குணமும் இருக்குமோ என்றால். இல்லை.   தீய குணங்கள் எதுவும் கிடையாது அவனிடம். கருணையே வடிவாகக்  கொண்டவன். அன்பு நிறைந்தவன். நல்லது மட்டுமே உள்ளவன்.

அவன் எல்லோருக்கும் பொதுவானவன். தன்னை மதிக்காதவர்களுக்கும் அருள்  செய்வான்.  நல்லவர்களுக்கும்,கெட்டவர்களுக்கும் சம தூரத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

நரை வெள்ளேறு ஒன்று உடையானை - வெள்ளையான ஒரு எருது வச்சிருக்காரு. நிறைய பேர் கிட்ட இருக்கு. எல்லா விவசாயிகிட்டயும் இருக்கு. இது ஒரு பெரிய விஷயமா ?

எருதுக்கு , விடை என்று ஒரு பெயர் உண்டு.

"விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி" என்பார் ஞான சம்பந்தர்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விடை என்றால் , தீர்வு , முடிவு. கேள்விக்கு என்ன விடை என்று கேட்போம் அல்லவா ?

உலகில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லை. இராமர் கூட சீதை போனாள் , இலக்குவன் கூட ஊர்மிளை ஏன் போகவில்லை.

முருகன் ஏன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை ?

நாலு முகம், ஆறு முகம், பத்து முகம் என்றெல்லாம் இருந்தால் எப்படி படுத்து உறங்குவது ?

நல்லவன் துன்பப் படுகிறான். கெட்டவன் இன்பமாக இருக்கிறான் - ஏன் ?

இப்படி ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடையை கொண்டிருப்பவன் அவன்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து போகும். அறம் மட்டும் அழியாது. அது விடையின் வடிவில் நிலைத்து நிற்கும் என்று நம் தமிழ் வேதம் பேசுகிறது.

பொருள்களால் ஆன உலகம் அழியலாம். அவற்றை செலுத்தும் தத்துவங்கள் அழியாது. அவை சாஸ்வதமானவை.

அந்த விடையை தன்னிடம் கொண்டவன் அவன்.


உமை ஒரு பாகம் உடையானை.

நாம் , நம்முடைய தந்தை மற்றும் தாய் இருவரின் கலப்பில் பிறக்கிறோம்.  தந்தையின்  குணமும், தாயின் குணமும் எல்லோரிடமும் இருக்கும். ஒவ்வொரு  ஆணுக்குள்ளும், ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. இந்த சமுதாயம் , ஒரு ஆணிடம் உள்ள பெண்ணை  மழுங்க அடிக்கிறது. "என்னடா, பொம்பள புள்ள மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்து கேலி செய்து பெண் உணர்ச்சிகளை மழுங்க அடித்து  விடுகிறது.அதே போல் பெண் கொஞ்சம் கம்பீரமாக நடந்தால் "என்ன இப்படி  திம்மு திம்மு னு ஆம்புள புள்ள மாதிரி நடக்குற. மெல்லமா நட  " என்று பெண்ணுக்குள்  இருக்கும் ஆணை மழுங்க அடிக்கிறது.

இப்படி மழுங்க அடிக்கப் பட்டதால், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை இழந்து விட்டு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே இருக்கும் பெண் போல   வெளியே ஒன்று  தெரிந்தால் அவள் பால் காதலில் விழுகிறான் ஆண். பெண்ணும் அதே போல் தான்.

தனக்கு வந்த மனைவி, அவனுக்குள்  இருக்கும் பெண்ணை போல இல்லை என்றால்  அவன்   தேடல் தொடர்கிறது.

தனக்குள் இருக்கும் பெண்ணோடு ஆண்  சேர்வதும், தனக்குள் இருக்கும் ஆணோடு பெண் சேர்வதும் தான்  உண்மையான திருமணம். அதுவே முழுமையைத்  தரும்.வெளியே உள்ள ஆணும் பெண்ணும் ஒரு காலத்திலும் உள்ளே இருக்கும் ஆண் மற்றும் பெண் போல வராது.

இதை புரிந்து கொண்ட நம் முன்னவர்கள்  அர்த்த நாரி என்று  வைத்தார்கள்.

அர்த் என்றால் பாதி.

உமை வெளியில் இருந்தால் சரி வராது. ஒன்றாக கலக்க வேண்டும். பாதி பாதியாக.

உமை ஒரு பாகம் உடையானை

சென்று அடையாத திரு உடையானை.

நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் நம்மிடம் வந்தது. உழைத்து சம்பாதித்து வந்தது  அல்லது முன்னோர்கள் தேடி சேர்த்து வைத்து விட்டுப் போனது. எப்படியோ  நம்மிடம் வந்தவை. நாம் வரும்போது ஒண்ணும் கொண்டு வரவில்லை.

வந்தவை , கட்டாயம் போகும்.

அதன் பெயரே 'செல்வம்' . எப்போது வேண்டுமானாலும் செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இறைவனிடம் இருப்பது வெளியில் இருந்து வந்தது அல்ல. உள்ளேயே இருப்பது.

உண்மையான , நிரந்தரமான செல்வம் உள்ளே இருப்பது.

அதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

  என்னமோ தெரியல ...ரேவா, இந்து, உஷா ...எல்லோரும் இதே போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.


உடம்பு எப்போது சூடாகும் ? கோபம் வரும்போது, காமம் வரும் போது , பொறாமை வரும் போது...இரத்தக் கொதிப்பு என்கிறோம். பொறாமை தீயில் வேகிறான் என்கிறோம். கோபத்தில் கண்ணில் கனல் பறக்கிறது என்கிறோம்.

அப்படி கொதித்த மனம் குளிர  என்ன செய்ய வேண்டும்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்,

"சீராப்பள்ளி குன்றுடையானை சொல்லுங்கள்" உள்ளம் குளிரும் என்கிறார் ஞானசம்பந்தர்.


 அரி என்ற பேரரவம் உள்ளத்தில் புகுந்தால் குளிரும் என்கிறாள் ஆண்டாள்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

சொல்லிப் பாருங்கள். குளிரும். 

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?



அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

அரப்பள்ளியானும் = அரவணையில், பாம்பு அணையில் துயிலும் திருமாலும்

அலர் உறைவானும் = மலரின் மேல் வாழும் பிரம்மாவும்

அறியாமைக் = அறியாமல்

கரப்பு = மறைந்து இருப்பதை

உள்ளி = எண்ணி

நாடிக் = தேடி

கண்டிலரேனும் = காணவில்லை என்றாலும்

கல் சூழ்ந்த = கற்கள் நிறைந்த

சிரப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

மேய = வாழும்

வார்சடைச் = நீண்ட சடை முடியை கொண்ட

செல்வர் = செல்வர்

மனைதோறும் = வீடு வீடாக சென்று

இரப்பு உள்ளீர்;= பிச்சை பெற்று கொண்டு இருந்தால்

உம்மை  = உன்னை

ஏதிலர் = மற்றவர்கள்

கண்டால் = பார்த்தால்

இகழாரே? = பரிகாசம் செய்ய மாட்டார்களா

ஏதிலார் என்றால் மற்றவர்கள் என்று பொருள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் திருவள்ளுவர்.

மற்றவர்கள் குற்றத்தைப் பார்க்கும் போது , தன்னுடைய குற்றத்தையும் சிந்தித்தால்  இந்த உலகில் எந்த தீமையும் நிகழாது என்கிறார் வள்ளுவர்.

 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

எல்லோரும் இருக்கும் போது, காதலனும் காதலியும் எதோ மற்றவரக்ளை பார்ப்பது போல  பார்த்துக் கொள்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப் படுத்த மாட்டார்கள்.

ஏன் ஏதிலார் என்றார் ?

சிவ பெருமான் பெரிய ஆள். எல்லாம் வல்லவர் என்று அவரை வணங்குபவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரை வணங்காத மற்ற சமயத்தவர்களுக்கு  என்னடா இவர் பெரிய ஆள் என்கிறார்கள் வீடு வீடாக போய்  பிச்சை வாங்குகிறாரே என்று பரிகாசம் செய்வார்கள் அல்லவா. அதனால் ஏதிலார் என்றார்.

சிவனுக்கு பெரிய மலை கோட்டையே இருக்கிறது. அவ்வளவு பெரிய வீடு இருக்கும் ஆள் எதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று நகைப்பார்கள்.

திருமாலும், பிரமனும் ஆண்டவனின் அடியையும் முடியையும் காணச் சென்றார்கள். காணமுடியாமல் வந்தார்கள் என்ற இந்த கதையை வைத்துக் கொண்டு  சிவனா, திருமாலா யார் பெரியவன் என்ற சர்ச்சை தொடங்கி விட்டது.

இந்த கதைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன ?

முதலாவது, திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகளின் கணவன். ப்ரம்மா அறிவுக்கு அதிபதி. காலை மகளின் கணவன். இறைவனை அறிவினாலோ, செல்வத்தாலோ  காண முடியாது , பக்தி ஒன்றே அவனை அறியும் வழி என்று சொல்லுவது  முதல் அர்த்தம்.

இரண்டாவது, மாலும் அயனும் ஏன் அடி முடி தேடிச் செல்ல வேண்டும் ? சிவன் எங்காவது சென்று  ஒளிந்து கொண்டு எங்கே என்னை கண்டு பிடியுங்கள்  என்று சொல்லி இருக்கலாமே ? அடி முடி காணச் சென்றார்கள் என்றால், இறைவன் என்பவன் இவ்வளவுதான் என்று வரையறை செய்யச் சென்றார்கள் என்று அர்த்தம். இங்கே தொடங்கி, இங்கே முடிவது தான் இறை என்று  வரையறை செய்யச் சென்றார்கள்.


இறைவன் நம் சிந்தனைக்கு உட்பட்டவன் அல்ல. இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

என்பார் மணிவாசகர். 

 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே


இராமனைக்

இராமனைப் பற்றி சொல்ல வந்த கம்பர் சொல்கிறார்,

"யாரே முடியக் கண்டார் " என்று. யாரும் இராமனை முழுமையாக காணவில்லை என்று.

மிதிலை நகர் பெண்கள் எல்லாம் இராமனின் தோளைக் கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள், அவன் திருவடியைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள்

தோள் கண்டார். தோளே கண்டார்.
   தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
   தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
   வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்.
.
ஏன் இறைவனை முழுமையாக அறுதியிட்டு சொல்ல முடியாது ?

வெளியே இருக்கும் ஒன்று என்றால் அதை பார்த்து, தொட்டு உணர்ந்து, இது இப்படி இப்படி  இருக்கிறது என்று சொல்லி விடலாம். உள்ளே இருக்கும் ஒன்றை எப்படி அறிந்து கொள்வது. உள்ளே இருக்கும் ஒன்றே வெளியே தேடினால் எப்படி கிடைக்கும் ?

இறைவன் உள்ளே இருக்கிறான்.

"கரப்பு உள்ளி"

அப்படி என்றால் ஏன் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படித்தான் தெரிந்து கொள்வது.

நாவுக்கரசர் சொல்கிறார்.

பாலில் நெய் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிகிறதா ? தெரியவில்லை.

கன்னுக்குத் தெரியவில்லை என்பதால் பாலில் நெய் இல்லை என்று  சொல்ல முடியுமா ?

விறகின் உள்ளே தீ இருக்கிறது. தொட்டுப் பார்த்தால் சுடுமா என்றால் சுடாது. தீ என்றால்  சுட வேண்டுமே ? எனவே விறகில் தீ இல்லை என்று சொல்ல முடியுமா ?

பின் எப்படி நெய்யும், தீயும் இருக்கிறது என்று நாம் அறிகிறோம்.

பாலை காய்ச்சி, உறை விட்டு, அதை தயிராகச் செய்து, பின் அதை கடைந்து எடுத்தால்  வெண்ணை வரும். அந்த வெண்ணையை உருக்கினால் நெய் வரும்.

அதை போல, விறகை கடைந்தால் தீ வரும்.

அது போல இறைவனை எப்படி காண்பது ?

உறவு கோல் நாட்டு, உணர்வு கயிற்றினால் முறுக  வாங்கி கடைய முன்

நிற்கும் என்கிறார் நாவுக்கரசர்.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே





Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


Saturday, September 19, 2015

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.





Friday, September 18, 2015

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம்

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம் 


எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, சோதனை செய்து, தர்க ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும் என்று மனம் எதிர் பார்க்கிறது.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணி விட முடியுமா ?

எதையுமே ஓரளவுக்கு மேல் ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. முடிந்த முடிவு தெரிந்த பின்தான் எதையும் செய்வேன் என்று இருந்தால் எதையுமே செய்ய முடியாது.

லட்டை கையில் கொடுத்தால் , அது என்ன, எப்படி இருக்கும்  என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் முகர்ந்து பார்த்து அதன் வாசனையை இரசிக்கலாம். சிறிது வாயில் போட்டு சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிடித்தால் முழு லட்டையும் உண்ண வேண்டியதுதான்.

அதை விட்டு விட்டு, இனிப்பு என்றால் என்ன, அந்த இனிப்பு எப்படி வருகிறது, இந்த மஞ்சள் நிறம் எப்படி வந்தது.  இந்த நறுமணம் எப்படி வருகிறது. அது எப்படி இந்த மூக்கினால் நுகரப் படுகிறது, மனத்தால் அறியப்படுகிறது என்று ஆராய்ச்சியில் இறங்கி, இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வான விடை காணாமல் இந்த லட்டை உண்பது இல்லை என்று இருந்தால் வாழ்வில் எந்த இன்பத்தையும் அனுபவிக்க முடியாது.


ஞான சம்பந்தர் சொல்கிறார்....காரண காரியங்களை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். சோதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கி விடாதீர்கள். சோதி வடிவாக இருக்கிறான் அவன். உங்கள் துக்கங்கள் நீங்க மனம் பற்றி வாழுங்கள். அறிவு பற்றாது. அறிவு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.


பாடல்

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

சீர் பிரித்த பின்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்  மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்  சோதி
மா துக்கம்  நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்க  இறையே  வந்து சார்மின்களே.

பொருள் 

ஏதுக்களாலும் = காரணங்களாலும்

எடுத்த மொழியாலும் = தர்க வாதத்தாலும்

மிக்குச் = மிகுதியாக

சோதிக்க வேண்டா = சோதிக்க வேண்டாம்

சுடர் விட்டுளன் = சுடர் வடிவாக உள்ளான்

எங்கள்  சோதி = எங்கள் ஜோதியான அந்த இறைவன்

மா துக்கம்  = பெரிய துக்கம் (பிறவிப் பிணிதான் பெரிய துக்கம்)

நீங்கல் உறுவீர் = நீங்கப் பெறுவீர்

மனம் பற்றி வாழ்மின் = மனம் ஒன்றி வாழ்வீர்

சாதுக்கண் மிக்க  = அன்பு நிறைந்தவர்களே

இறையே  வந்து சார்மின்களே  = இறைவனையே வந்து பற்றுங்கள்


கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அறிவோ எல்லை அற்றது.

வாழ் நாளோ மிகக் குறைவு.

அதிலும், அறிவை சேர்த்துக் கொள்ள செலவழிக்கும் நாட்கள் இன்னும் மிக மிகக் குறைவு.


எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ஒரு சிறு துளியின் ஒரு பகுதியைக் கூட   முழவதும் அறிந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம் ?







Saturday, July 4, 2015

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்


 சில பாடல்கள் எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்   புதுப் புது அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட  ஒரு பாடல் தான் தோடுடைய செவியன் என்ற இந்தப் பாடல்.

பாடல் என்னமோ மிக எளிமையான ஒன்றுதான்

பாடியவர் திருஞான சம்பந்தர்.

சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய தந்தையார் சம்பந்தரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் நுழையும்முன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிச்  செல்லலாம்  என்று குளத்திற்கு சென்றார். சம்பந்தரை குளக்கரையில் அமர்த்தி விட்டு  நீராடச்  சென்றார்.

அவர்   குளத்தில் மூழ்கியவுடன், தந்தையைக் காணோமே என்று குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை கேட்டு சிவனும் பார்வதியும் அங்கே  வந்தார்கள்.பார்வதி குழந்தைக்கு  பால் கொடுத்தாள். பின் அவர்கள் மறைந்து விட்டனர்.

நீராடி வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, யார் பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை பாடியது....



பாடல்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய  பெம்மான் இவன் அன்றே


பொருள்

தோடு உடைய செவியன் = காதில் தோட்டினை அணிந்தவன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய

வெண் = வெண்மையான

மதி = நிலவை

சூடி = தலையில் சூடி

காடு உடைய = சுடுகாட்டில் உள்ள

சுடலைப் பொடி = சாம்பலை

பூசி = உடலெங்கும் பூசி

என் உள்ளம் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = ஏடுகளைக் கொண்ட தாமரை மலரில் இருக்கும் பிரமன்

முன்னை நாள்  = முன்பு ஒரு நாள்

பணிந்து =  பணிந்து

ஏத்த = போற்ற

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய = பெருமை உடைய

பிரமா புரம் = பிரமாபுரம் (பிரமன் வழி பட்ட இடம் )

மேவிய = சென்று இருந்த

பெம்மான் = பெருமான்

இவன் அன்றே = இவன் அல்லவா

சரி, இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? கழல் அணிந்த அடியன் என்ற, நிலவு சூடிய தலையன் என்று சொல்லி இருக்கலாம் தானே ? குழந்தை அழுத போது , அந்த அழு குரலை கேட்டுத்தானே இறைவனும் இறைவியும்  வந்தார்கள். எனவே, காதை சிறப்பித்து "தோடுடைய செவியன்" என்று  ஆரம்பித்தார்.

2. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? தோடு என்பது பெண்கள் அணியும் அணிகலன். தோடுடைய செவியள் என்று இருந்திருக்க வேண்டும். அப்படிச் சொல்லி  இருந்தால் , அவள் யார் என்ற கேள்வி எழும்.  தோடுடைய  செவியன் என்றால் உலகிலேயே ஒருவன் தான் உண்டு....   அது மாதொரு பாகனான சிவனையே  குறிக்கும். எனவே, தோடுடைய செவியன் என்று கூறினார்.

3. விடை ஏறி ஓர் - விடை என்றால் எருது. எருதின் மேல் ஏறி என்பது ஒரு பொருள். தோன்றிய பொருள் எல்லாம் அழியும். உயிர்கள், பொருள்கள் எல்லாம் அழியும் ஒரு நாள்.  இந்த பூமி, சூரியன், நிலவு, கோள்கள், இந்த அண்டம் அனைத்தும் ஒரு நாள் அழியும். அதற்கு மகா மகா சங்காரம் என்று  பெயர்.அந்த, ஊழிக் காலத்தில், எல்லாம் அழிந்த பின்னும் , அழியாத ஒன்று இருக்கும். அது தான் அறம் . நீதி. உண்மை.  அந்த உண்மை ஒரு எருதின் வடிவம் கொண்டு வந்தது. அதன் மேல் ஏறினான் சிவன் என்கிறது சைவ சித்தாந்தம். விடை என்பதற்கு answer  என்றும் ஒரு பொருள் உண்டு. அனைத்து கேள்விகளுக்கும்  விடையாய் இருப்பவன் அவன் என்ற பொருள் பட, விடை ஏறி   என்றார்.

4. தூ வெண் மதி சூடி = தூய்மை அகத்தை குறிப்பது. வெண்மை புறத்தை குறிப்பது. வெண்மை கண்ணுக்குத் தெரியும். தூய்மை கண்ணுக்குத்  தெரியாது.உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், கறை இன்றி இருப்பவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்வான் என்ற பொருள பட - தூ வெண் மதி சூடி என்றார்.

5. காடுடைய சுடலை பொடி பூசி =   நாம் யாரையாவது பார்த்து அவர்களுக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்றால், தலை  சீவி, பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு போவோம் அல்லவா. இறைவனும், காட்டில் உள்ள சாம்பலை பூசிக் கொண்டு வருகிறான். எதற்கு எதற்கு ?

6. என் உள்ளம் கவர் கள்வன் = ஞான சம்பந்தரின் உள்ளத்தை கவர. கள்வன் என்றார் ஏன் என்றால், நம் அனுமதி இல்லாமலே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்.

இராமாயணத்தில், சீதை சொல்வாள், என்னையும் என் நாணத்தையும் கொண்டு செல்ல என் அனுமதி இல்லாமல் என் கண் வழி நுழைந்த கள்வன் அவன் என்று ராமனைப் பற்றி செல்லமாக கோபிக்கிறாள்.


பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர். அவனே அருள் செய்தால் தான் உண்டு.

படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் ஊறும் பாடல்.



 








Thursday, February 7, 2013

திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற


திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற 


அது ஒரு சின்ன அழகிய கிராமம். ஊரைச் சுற்றி மலைகள். குளு  குளு  என்று எப்போதும் இருக்கும். மெல்லிய தென்றல் உயிர் உரசிப் போகும்.

ஊரைச் சுற்றி நிறைய மா மரங்கள். மா மரங்களில் குரங்குகள் ஜாலியாக குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருகின்றன. கிளைக்கு கிளை தாவம் போது அந்த கிளைகள் படாரென்று விடுபடுகின்றன அப்படி விடுபட்ட கிளைகள் மேகத்தில் சென்று மோதுகின்றன. அப்படி மோதும் போது, அந்த மேகத்தில் இருந்து நீர் துளிகள் சிதறுகின்றன. அப்படை சிதறிய நீர்த் துளிகளை மழை என்று நினைத்து அங்கிருந்த மான்கள் மரத்தடியில் சென்று ஒதுங்குகின்றன.

அப்படிப்பட்ட அழகிய ஊர் திருவண்ணாமலை.

திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை   நினைக்க முக்தி

என்று சொல்லுவார்கள்.

அங்கே போகக் கூட வேண்டாம்....அதை நினைத்தாலே முக்தி தான்

அங்கு உறையும் அண்ணாமலையாரின் திருவடிகளை நினைத்தாலே பழைய வினைகள் எல்லாம் அற்றுப் போகும். நினைக்க முக்தி தரும் திருத்தலம்.

ஞான சம்மந்தரின் பாடல் 


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொருள்

Sunday, May 6, 2012

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

இவர் ஏழாம் நூன்றாண்டில் வாழ்ந்த நாயன்மார். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

சீர்காழி இவர் பிறந்த ஊர். இவருக்குப் பின் வந்த ஆதி சங்கரர், அவருடைய சௌந்தர்ய லஹரியில் ஞான சம்பந்தரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புராணத்தில் பாதி இவரைப் பற்றி பேசுகிறது. அதனால், பெரிய புராணத்தை பிள்ளை புராணம் என்று கூட கூறுவார்கள்.

இவர் எழுதிய பாடல்களின் தொகுப்புக்கு திருகடைகாப்பு என்று பெயர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் இவர் எழுதியது. 

இவர் குழந்தையாக இருந்த போது, இவரின் தந்தை இவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை குளத்தின் படியில் இருத்திவிட்டு அவர் நீராடச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. 

குழந்தையின் பசி போக்க, உமா தேவி சிவனுடன் வந்து குழந்தைக்கு தன் மார்போடு அனைத்து பசி ஆற்றினாரம். 

தந்தை குளித்து வந்து பார்த்த போது, குழந்தையின் வாயின் ஓரம் பால் வடிந்து கொண்டு இருந்தது. 

யார் உனக்கு பால் தந்தது என்று கேட்ட போது வானை நோக்கி கை காட்டி, கீழ் கண்ட பாடலைப் பாடினார்.

மிக மிக அற்புதமான பாடல். 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி 
காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முன்னை நாள் உன்னை ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் காதில் அணியும் அணிகலன். அது எப்படி சிவனின் காதில் வரும் ? வந்தது அர்த்த நாரீஸ்வரர். ஆணும் பெண்ணும் கலந்த உருவம். தோடுடைய செவியன் என்றால் அது அர்த்த நாரியான சிவனை மட்டும் தான் குறிக்கும். என்ன ஒரு அழகான பதப் பிரயோகம்.

விடையேறியோர் = எருதின் மேல் ஏறி. ஒரு....

தூவெண்மதிசூடிக் = தூய்மையான வெண்மையான நிலவை சூடி

காடுடையசுட லைப்பொடிபூசி = காடு உடைய சுடலை பொடி பூசி = சுடு காட்டில் உள்ள சாம்பலை உடல் எங்கும் பூசி

யென் னுள்ளங்கவர் கள்வன் = என் உள்ளம் கவர் கள்வன். 

என் உள்ளத்தை கவர்ந்த கள்வன். 

இவரோ குழந்தை. இறவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. 

இறைவனை அடைய இவர் ஒன்றும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் இறைவனே வந்து இவர் உள்ளத்தை கவர்ந்து சென்று விட்டான். 

திருடன் கேட்டு கொண்டா வந்து பொருளை எடுத்துச் செல்வான் ? கள்வன். 

"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே தர வேலவர் தந்ததினால்" என்பார் அருணகிரியார்

ஏடுடையமல ரான் = ஏடு உடைய மலரான் = இவர் பாடிய அந்த இடம் சீர்காழி. அதற்க்கு இன்னொரு பெயர் பிரமபுரம். பிரமன் சிவனை வழிபட்ட இடம். ஏடுடைய மலர் தாமரை. அதில் உள்ளவன் பிரமன்.

முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த = அவன் உன்னை முன்பு பணிந்து 

ஏத்த (புகழ). 

அருள் செய்த =அருள் செய்த 

பீடுடைய = பெருமை உடைய

பிரமாபுரம் மேவிய = பிரமாபுரத்தில் உள்ள

பெம்மா னிவனன்றே. = பெம்மான் இவனன்றே = பெம்மான் = பெரிய + அம்மான்.

அவன் அன்றே என்று சொல்லி இருக்கலாம். செய்யுள் தளை தட்டி இருக்காது. அவன் என்றால் எங்கோ இருப்பவன் என்று பொருள் படும். அவன் சேய்மைச் சுட்டு. 

இவன் அன்றே என்றால் இதோ இங்க இருக்கானே இவன் தான் என்று அருகில் இருப்பவரை கூறுவது. இவன் அண்மைச் சுட்டு.