Sunday, May 6, 2012

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

இவர் ஏழாம் நூன்றாண்டில் வாழ்ந்த நாயன்மார். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

சீர்காழி இவர் பிறந்த ஊர். இவருக்குப் பின் வந்த ஆதி சங்கரர், அவருடைய சௌந்தர்ய லஹரியில் ஞான சம்பந்தரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புராணத்தில் பாதி இவரைப் பற்றி பேசுகிறது. அதனால், பெரிய புராணத்தை பிள்ளை புராணம் என்று கூட கூறுவார்கள்.

இவர் எழுதிய பாடல்களின் தொகுப்புக்கு திருகடைகாப்பு என்று பெயர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் இவர் எழுதியது. 

இவர் குழந்தையாக இருந்த போது, இவரின் தந்தை இவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை குளத்தின் படியில் இருத்திவிட்டு அவர் நீராடச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. 

குழந்தையின் பசி போக்க, உமா தேவி சிவனுடன் வந்து குழந்தைக்கு தன் மார்போடு அனைத்து பசி ஆற்றினாரம். 

தந்தை குளித்து வந்து பார்த்த போது, குழந்தையின் வாயின் ஓரம் பால் வடிந்து கொண்டு இருந்தது. 

யார் உனக்கு பால் தந்தது என்று கேட்ட போது வானை நோக்கி கை காட்டி, கீழ் கண்ட பாடலைப் பாடினார்.

மிக மிக அற்புதமான பாடல். 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி 
காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முன்னை நாள் உன்னை ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் காதில் அணியும் அணிகலன். அது எப்படி சிவனின் காதில் வரும் ? வந்தது அர்த்த நாரீஸ்வரர். ஆணும் பெண்ணும் கலந்த உருவம். தோடுடைய செவியன் என்றால் அது அர்த்த நாரியான சிவனை மட்டும் தான் குறிக்கும். என்ன ஒரு அழகான பதப் பிரயோகம்.

விடையேறியோர் = எருதின் மேல் ஏறி. ஒரு....

தூவெண்மதிசூடிக் = தூய்மையான வெண்மையான நிலவை சூடி

காடுடையசுட லைப்பொடிபூசி = காடு உடைய சுடலை பொடி பூசி = சுடு காட்டில் உள்ள சாம்பலை உடல் எங்கும் பூசி

யென் னுள்ளங்கவர் கள்வன் = என் உள்ளம் கவர் கள்வன். 

என் உள்ளத்தை கவர்ந்த கள்வன். 

இவரோ குழந்தை. இறவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. 

இறைவனை அடைய இவர் ஒன்றும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் இறைவனே வந்து இவர் உள்ளத்தை கவர்ந்து சென்று விட்டான். 

திருடன் கேட்டு கொண்டா வந்து பொருளை எடுத்துச் செல்வான் ? கள்வன். 

"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே தர வேலவர் தந்ததினால்" என்பார் அருணகிரியார்

ஏடுடையமல ரான் = ஏடு உடைய மலரான் = இவர் பாடிய அந்த இடம் சீர்காழி. அதற்க்கு இன்னொரு பெயர் பிரமபுரம். பிரமன் சிவனை வழிபட்ட இடம். ஏடுடைய மலர் தாமரை. அதில் உள்ளவன் பிரமன்.

முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த = அவன் உன்னை முன்பு பணிந்து 

ஏத்த (புகழ). 

அருள் செய்த =அருள் செய்த 

பீடுடைய = பெருமை உடைய

பிரமாபுரம் மேவிய = பிரமாபுரத்தில் உள்ள

பெம்மா னிவனன்றே. = பெம்மான் இவனன்றே = பெம்மான் = பெரிய + அம்மான்.

அவன் அன்றே என்று சொல்லி இருக்கலாம். செய்யுள் தளை தட்டி இருக்காது. அவன் என்றால் எங்கோ இருப்பவன் என்று பொருள் படும். அவன் சேய்மைச் சுட்டு. 

இவன் அன்றே என்றால் இதோ இங்க இருக்கானே இவன் தான் என்று அருகில் இருப்பவரை கூறுவது. இவன் அண்மைச் சுட்டு.

3 comments:

  1. எப்படி சம்பந்தருக்கு சிவனே வந்து அருள் செய்தாரோ, அதே போல சிவனே தன்னை வணஙகுவதற்குப் பிரமனுக்கும் அருள் செய்திருக்கிறாராம்! சுவாரசியம்!

    ReplyDelete
    Replies
    1. "முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்" எனபது மணிவாசகம்.

      ஞான சம்பதரின் முந்தைய வினை அவருக்கு சிவனருள் கிடைக்க உதவியது.

      இதில் சுவாரசியமான விஷயம் எது என்றால் 1400 வருடங்களுக்கு முந்திய தமிழின் "உள்ளம் கவர் கள்வன்" என்ற பிரயோகங்கள் இன்றும் மனதுக்குள் மழை அடிக்க வைப்பது.
      எனக்கு இன்னும் புரியாத ஒன்று, எதற்காக இதை எல்லாம் எழுதி வைத்தார்கள் ?

      பணத்திற்க்கா ?

      புகழுக்கா ?

      எது இந்தப் பாடல்களை ஆயிரம் ஆண்டு கடந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்கிறது?

      கால வெள்ளத்தில் அரன் மனைகள், அரண் மனைகள் அடித்துச் செல்லப்பட்டன...இந்த ஓலை சுவடிகள் அந்த வெள்ளத்தை கடந்து வந்தது எப்படி ?

      Delete
  2. bramma puram enbathu mandaikul irukum moolaiyai kurikum.nyaanigal karuttai anubavattal tan ariye mudiyum.

    ReplyDelete