Showing posts with label நெடுநல் வாடை. Show all posts
Showing posts with label நெடுநல் வாடை. Show all posts

Sunday, October 13, 2013

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும் 


நெடு நல் வாடை - பெயரே இனிமையானது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அது வாடைக் காலம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு அது நீண்ட வாடைக் காலமாக இருக்கிறது. தலைவியை சென்று சேரப் போவதால் அவனுக்கு அது நல்ல வாடைக் காலமாக இருக்கிறது. 

இதில் உள்ள பாடல்கள் எல்லாம் வாடைக் காலத்தை பின்னனியாகக் கொண்டு எழுதப் பட்டவை. மிக மிக இனிமையான பாடல்கள். அதிலிருந்து சில பாடல்கள்....

அது ஒரு வாடைக் காலம். மாலை நேரம் தாண்டி முன்னிரவு வந்து விட்டது. குளிர் காற்று சிலு சிலு என்று அடிக்கிறது.  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் குளிருக்கு இதமாக, நீண்ட பிரிவை ஆற்றும் வகையில் கட்டி அணைத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் , பாடல் ஆசிரியர் இதை நேரடியயாகச் சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறார். 

எப்படி ?

அழகான விசிறி ஆணியில் தொங்குகிறது. குளிர் காற்று உள்ளே வராமல் இருக்க பள்ளி அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்கிறார். 

ஏன் படுக்கை அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது என்பதை நாம் யூகத்திற்கு விடுகிறார். 

சொல்லாமல் சொன்ன கவிதை இது 


கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக் 

பொருள்

கைவல் = கை வேலைப்பாடு நிறைந்த 
கம்மியன் = தொழிலாளியின் 
கவின் பெறப் புனைந்த = அழகு நிறைந்த 
செங்கேழ் = சிவந்த விசிறி 
வட்டஞ் சுருக்கிக் = வட்டமான அந்த தோற்றத்தை சுருக்கி, மடக்கி வைத்து 
கொடுந்தறிச் = வளைந்த சுவற்றில் உள்ள ஆணியில் 
சிலம்பி = சிலந்தி 
வான் நூல் = வலை போல 
வலந்தன தூங்க = தூங்க. அதாவது, ஆணியில் மாட்டப்பட்ட விசிறி சிலந்தி வலை போல இருக்கிறதாம். என்ன ஒரு உவமை. 
வான் உற நிவந்த = வானத்தை எட்டும் படி உயர்ந்த 
மேனிலை = மாடி 
மருங்கின் = மாடத்தில் 
வேனில் = வேனில் காலத்தில் 
பள்ளித் = படுக்கை அறையில் 
தென்வளி = தென்றல் காற்று 
தரூஉம் = வரும் 
நேர் வாய்க் கட்டளை = நேராக வரும் வழி 
திரியாது = திரியாமல் , உள்ளே வர விடாமல் 
திண்ணிலைப் = தின்மையான, உறுதியான 
போர் வாய் = பெரிய வாசலை உடைய 
கதவம் =கதவு 
தாழொடு  துறப்பக் = தாழ்பாழை இட்டு கிடக்க 

பாடல் அவ்வளவுதான். அது சொல்லியது அவ்வளவுதான். சொல்லாமல் விட்டது ஏராளம்.