Showing posts with label கந்தர் அலங்காரம். Show all posts
Showing posts with label கந்தர் அலங்காரம். Show all posts

Saturday, June 25, 2022

கந்தரலங்காரம் - 60 - கிலேசம்

 கந்தரலங்காரம் - 60 - கிலேசம் 


நமக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்து இருக்கிறன்றன. இனியும் வரலாம். 


அருணகிரிநாதர் மனிதனுக்கு வரும் துன்பங்களை எல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். மொத்தமே இரண்டு வகையான துன்பங்கள்தான் உண்டு. 


ஒன்று உடலுக்கு வரும் துன்பம். 


மற்றது மனதுக்கு வரும் துன்பம். 


இதில், மனதுக்கு வரும் துன்பம்தான் மிக மிக அதிகமானது. தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் வரும் போகும். காய்ச்சல், சளி, போன்றவை வந்து போகும் தன்மை கொண்டவை. ஏதோ விபத்தில் கை கால் முறிந்து விட்டால் கூட கட்டுப் போட்டு சரியாகி விடும். 


மிக மிக சிறிய அளவிலான உடல் சார்ந்த துன்பங்கள்தான் தீர்க்க முடியாமல் நீண்ட நாள் இழுத்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான உடல் சார்ந்த துன்பங்கள் அப்படி அல்ல.


ஆனால், இந்த மனம் சார்ந்த துன்பங்கள் இருக்கிறதே, அதற்கு ஒரு எல்லை கிடையாது. 


பயம், பொறாமை, வெறுமை, படபடப்பு, மன அழுத்தம், வெறுப்பு, கோபம், ஏக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


எவ்வளவு செல்வம் இருந்தாலும், மற்றவன் என்னை விட அதிகம் வைத்து இருக்கிறானே என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த மனத் துயருக்கு ஏது மருந்து? 


கிலேசம் என்றால் துன்பம். 


உடல் கிலேசம், மனக் கிலேசம் என்கிறார் அருணகிரிநாதர். 


உடலை சரியாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி, உணவு கட்டுப் பாடு, அதையும் மீறி ஏதாவது வந்து விட்டால் மருத்துவரை நாடி பரிசோதனைகள் செய்து, மருந்து உண்டு உடல் துன்பத்தைப் போக்கிக் கொள்கிறோம். 


மனத் துன்பத்தை என்ன செய்வது? சிக்கல் என்ன என்றால், பல நேரம், மன துன்பம் இருக்கிறது என்று கூடத் தெரியாது. 


அருணகிரிநாதர் இரண்டு துன்பங்களும் ஏன் வந்தன, அவை வராமல் எப்படி தடுப்பது என்று கூறுகிறார். 


பாடல் 


சிந்திக்கிலேனின்று சேவிக்கிலேன் றண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேனொன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேனுண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசமுங் காயக்கிலேசமும் போக்குதற்கே.


சீர் பிரித்த பின் 


சிந்திக்கிலேன் நின்று  சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேன் ஒன்றும்  வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசம்  காயக்கிலேசமும் போக்குதற்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/60.html



(click the above link to continue reading)



சிந்திக்கிலேன் = சிந்திக்க மாட்டேன், மனதில் நினைக்க மாட்டேன் 


நின்று  சேவிக்கிலேன் = நின்று வணங்க மாட்டேன் 


தண்டைச் சிற்றடியை =  தண்டை அணிந்த சிறிய திருவடியை 


வந்திக்கிலேன் = வணங்க மாட்டேன் 


ஒன்றும்  வாழ்த்துகிலேன் = ஒரு வாழ்த்தும் சொல்ல மாட்டேன் 


மயில்வாகனனைச் = மயில் வாகனனை, முருகனை 


சந்திக்கிலேன் = சந்திக்க மாட்டேன் 


பொய்யை நிந்திக்கிலேன் = பொய்யை வெறுக்க மாட்டேன் 


உண்மை சாதிக்கிலேன் = உண்மையை நிலை நிறுத்த முயல மாட்டேன் 


புந்திக்கிலேசம் = புத்தியில், ,மனதில் வரும் துன்பத்தையும் 


காயக்கிலேசமும் =உடலுக்கு வரும் துன்பத்தையும் 


போக்குதற்கே. = போக்குவதற்கு 


இவை ஒன்றும் செய்யாமல் "ஐயோ, எனக்கு உடல் துன்பம் வந்து விட்டதே, மன உளைச்சலில் கிடந்து உழல்கின்றேனே" என்று வருந்துவதில் பயன் இல்லை. 


இதில் ஓரிரண்டு செய்திகளை நாம் ஆழ்ந்து சிந்திக்கலாம்.



"பொய்யை நிந்திக்கிலேன்". பொய் என்றால் தவறானவை என்று பொருள் கொள்ள வேண்டும். இன்று என்ன நடக்கிறது? தவறுகள் போற்றப் படுகின்றன. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் பெரிய திறமைசாலிகள் என்று வியக்கப்படுகிரார்கள். 


"அவர் பணம் வாங்கிட்டார்ணா, எப்படியாவது காரியத்தை முடித்து கொடுத்து விடுவார் " என்று பணம் வாங்குபவரை புகழும் காலம் வந்து விட்டது. 


"சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து வெளியில் வந்து விடுவார்...பெரிய கில்லாடி" என்று சட்டத்தை மீறுபவர்களுக்கு புகழாரம். 


பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கிய தகப்பன் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். தலை குனிவதை விட்டு விட்டு. 


மனக் கிலேசம் வராமல் என்ன செய்யும் ?


"சிந்திக்கிலேன்". காலையில் எழுந்தவுடன் youtube இல்  அல்லது ஏதோ ஒரு mp3 இல் பக்திப் பாடலை ஓட விட்டுக் கொண்டு, அடுப்படி வேலை எல்லாம் நடக்கும். கேட்டால் பக்தி என்பது. அந்த ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்காமல் காப்பி கூட குடிப்பது இல்லை என்று பெருமை வேறு. தவறு இல்லை. ஆனால், அது பக்தி இல்லை. மனம் ஒன்ற வேண்டும். ஒரு வரி, ஒரு சொல் ...அது பற்றி சிந்திக்க வேண்டும். 


"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரு வாக்கியத்தைப் படித்த பட்டினத்தார் அத்தைனையும் துறந்தார். 


நாமும் இந்த வரியை எத்தனையோ முறை படித்து இருக்கிறோம். ஒன்றையும் விட முடியவில்லை. காரணம்,  "சிந்தனை இல்லை". ஏதோ இரண்டும் இரண்டும் நாலு என்று வாய்ப்பாடு போல படித்துவிட்டு மேலே போய் விடுகிறோம். 


சிந்தனை இல்லை, 

பணிவு இல்லை,

பொய்யின் மேல் வெறுப்பு இல்லை, 

உண்மை மேல் நாட்டம் இல்லை, 

இறை தேடல் இல்லை, 

வாழ்த்தும் மனம் இல்லை, 


துன்பம் எப்படிப் போகும் என்று கேட்கிறார். 










Wednesday, November 18, 2020

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

விதி என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை மாற்ற முடியுமா? மாற்றவே முடியாது என்றால் எதற்கு இந்த கோவில், பூஜை, கடவுள் எல்லாம். அனைத்தும் விதிப்படித்தான்  நடக்கும் என்றால், நாம் வெறும் பொம்மைகள் தானா?

விதியை மதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

அது இருக்கட்டும். பின்னால் வருவோம். 

நமது பக்தி இலக்கியங்களில் எங்கெல்லாம் இறைவன் திருவடி என்று வருகிறதோ, அங்கெல்லாம் "ஞானம்"  என்று போட்டுக் கொள்ளலாம்.  இறைவன் திருவடி என்பது ஞானத்தின் குறியீடு. 

ஞானத்தை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.  படித்து வருவது, அனுபவ அறிவு. 

பர ஞானம், அபர ஞானம் என்று சொல்லுவார்கள்.

நமது கடவுள்களைப் பார்த்தால், பல தலைகள், பல கரங்கள் இருக்கும். ஆனால் எல்லா  கடவுளுக்கும் இரண்டு கால்கள்தான். பத்து கால், பன்னிரண்டு கால் உள்ள தெய்வங்கள் கிடையாது. விஸ்வ ரூபம் எடுத்தால் கூட ஆயிரம் தலைகள், ஆயிரம் கைகள் வரும்,ஆனால் திருவடிகள் இரண்டு மட்டும் தான். 

ஞானம் வரும் போது தலை எழுத்து அழியும். அல்லது, ஞானத்தைக் கொண்டு 
தலை எழுத்தை அழிக்கலாம். 


 
பாடல் 

-------------------------------------------------------------------------------------- 
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------
 
சீர் பிரிச்சு பார்க்கலாம்
 
------------------------------------------------------------------------------------------------
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------------------
 
பொருள் 


click the above link to continue reading

 
 
சேல் பட்டு - மீன்கள் துள்ளி விளையாடியதில்

அழிந்தது - அழிந்தது

செந்தூர் வயல் பொழில் - திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி 
இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு)

தேன் கடம்பின் - தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள

மால் பட்டு - மாலை பட்டு

அழிந்தது - அழிந்தது

பூங் கொடியார் மனம் - பெண்களின் மனம்

மா மயிலோன் - பெரிய மயில் மேல் உள்ள முருகன்

வேல் பட்டு - வேலினால்

அழிந்தது - அழிந்தது

வேலையும் சூரனும் வெற்பும்  - காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும்

அவன் - அந்த முருகனின்

கால் பட்டு - திருப் பாதம் பட்டு

அழிந்தது - அழிந்தது

இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
 
முருகப் பெருமானின் திருவடி பட்டு நம் தலை எழுத்து மாறும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஞானம் பெருகட்டும். பண்டை வினைகள் ஓயட்டும். 


Wednesday, June 24, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி - பாகம் 2

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி  - பாகம் 2


என்னமோ இந்த பாடல் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எழுதிய அர்த்தம் சரிதானா என்று என்ற கேள்வி விடை காணாமல் நடுவில் நிற்கிறது.

"பயந்த தனி வழி"

என்று மட்டும் தான் அருணகிரிநாதர் சொல்லி இருக்கிறார்.

அந்த வழி ஏன், உயிர் பிரிந்த பின், ஆன்மா செல்லும் வழியாக இருக்க வேண்டும்? அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. நானாக அப்படி ஒரு அர்த்தத்தை வலிந்து கொண்டு வந்த மாதிரி இருக்கிறது.

சரி, அது இல்லை என்றால், பின் எது "பயந்த தனி வழி"?

உண்மையை தேடும் எல்லா வழியும் தனி வழிதான். அந்த உண்மையை கடவுள் என்று சொல்லலாம், சத்யம் என்று சொல்லலாம், இயற்கை என்று சொல்லலாம்...எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அதை தேடி கண்டடையும் வழி தனி வழிதான். அங்கே கும்பல் கும்பலாக போக முடியாது.

பின் எல்லோரும் பெரிய கும்பலாக கோவிலுக்குப் போகிறார்களே, இரத யாத்திரை, கும்பாபிஷேகம்,  போன்ற விசேடங்களுக்கு பெரும் திரளாக போகிறார்களே அது தவறா என்றால், இல்லை.

பாதையின் தொடக்கத்தில் எல்லோரும் இருப்பார்கள். அது நீண்ட வழி என்பதால், முடிவு வரை எல்லோரும் வரமாட்டார்கள்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் பார்த்தால் பெரிய கும்பல் இருக்கும். முடிவில் ஓரிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

இறைவன் ஒருவன் தானே? எல்லோரும் போய் சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனி வழி என்றால்...சேரும் இடம் ஒன்றுதான், புறப்படும் இடங்கள் வேறு வேறு.

எனவே, வழிகள் தனியாகத்தான் இருக்க முடியும்.

தனியாக இருப்பதால் பயம்.

அந்த பயத்தைப் போக்க வேலும் மயிலும் துணை.

சரி, இந்த விளக்கம் சரியாக இருக்குமா ? அருணகிரி நாதர் சொன்னது இறப்புக்குப் பின் உள்ள  வழியை அல்ல, வாழும் போதே இறைவனை தேடி அடையும் வழியை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவனை வணங்கவும் அவன் அருள் இல்லாமல் முடியாது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரி. அவன் அருளினால்தான் உண்டு.

முருகன் தனிவேல் முநிநம் குருவென்
   றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
      உருவன் றருவன் றுளதன் றிலதன்
         திருளன் றொளியன் றெனநின் றதுவே!

"அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்பதும் அவர் வாக்கு.

எனவே, பயந்த தனி வழி என்பது இறைவனை இந்தப் பிறவியிலேயே தேடிச் செல்லும் வழி என்று கொள்ளுவதே சாலச் சிறந்தது.

அது அப்படி என்றால், நீங்கள் இறைவனைத் தனியாகத்தான் போய் சந்திக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்களோடு, சேர்ந்து பயணம் ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு இடத்தில், நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்ந்து எடுக்கத்தான் வேண்டும். பயமாக இருக்கிறது என்று கும்பலோடு சேர்ந்து போனால், போய் சேர வேண்டிய இடம் வராது.

உங்கள் பாதை, உங்கள் ஆத்ம பக்குவத்தைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.

"தனி வழி" என்பதால் அதில் இதற்கு முன் போனவர்கள் யாரும் இல்லை.  போகிற வழியிலும் யாரிடமும்   வழி கேட்க முடியாது. map , கைகாட்டி, பெயர் பலகை ஒன்றும் இருக்காது.  எனவே அது "பயந்த தனி வழி".

யாரோ சொன்ன பாதையில் போக முடியாது...அது அவர் கண்ட வழி. அவருக்கு அந்த  வழி. நீங்கள் புத்தகங்கள், சொற்பொழிவு இவற்றைக் கேட்டு விட்டு நான் அந்த   வழியில் சென்று இறைவனை அடைவேன் என்றால் முடியாது.

எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு, உங்கள் வழியை நீங்கள் தேர்ந்து எடுங்கள்.

அதுவே இறை தரிசனம் காண வழி வகுக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/2.html


இந்த முதல் பாகத்தை கீழே காணலாம்


பாகம் 1


கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி

இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html

Tuesday, May 12, 2020

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?


நல்ல கார் ஒன்று வாங்கி வருகிறோம். சிறிது நாளில் சரியாக ஓட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிது. இல்லை என்றால் பிரேக் பிடிக்காமல் எங்கோ சென்று மோதி விடுகிறது. பின்னொரு நாள் முன் விளக்கு எரியாமல் போகிறது.....

தப்பு யார் பேரில்? நம் பேரிலா, அல்லது அந்த ஓட்டை வண்டியை செய்த அந்த கார் கம்பெனி பேரிலா?

சரியானபடி தயார் செய்யாத அந்த கம்பனிதானே பொறுப்பு?

அது போல,

நம் புலன்களும், இந்திரியங்களும் சரியான படி வேலை செய்யாமல் கண்டமேனிக்கு திரிந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவற்றைப் படைத்த அந்த பிரம்மன் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? நாம் என்ன செய்ய முடியும் ? என்று கேட்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்


கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்ததாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.



பொருள்


கோடாத = கோணல் இல்லாத, குற்றம் இல்லாத

வேதனுக்கு = வேதங்களைக் கொண்டு பிறப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கு

யான்செய்த குற்றமென் = நான் என்ன குற்றம் செய்தேன்

 குன்றெறிந்த = கிரௌஞ்ச மலை என்ற குன்றின் மேல் வேல் எறிந்தவனே

தாடாள னே = விடா முயற்சி உள்ளவனே

தென் தணிகைக் குமர = தென் புரத்தில் உள்ள தணிக்கை மலையில் உள்ள குமரனே

நின் = உன்னுடைய

றண்டையந்தாள் = தண்டை அணிந்த திருவடிகள்

சூடாத சென்னிம் = வைத்துக் கொள்ளாத தலையும்

நாடாத கண்ணுந் = உன்னை வந்து காணாத கண்களும்

தொழாதகையும் = உன்னை தொழாத கைகளும்

பாடாத நாவு = பாடாத நாவும்

மெனக்கே = எனக்கே

தெரிந்து = தெரிந்து

படைத்தனனே. = படைத்தானே

சரி, செய்த கார் நிறுவனத்தின் பிழைதான். அதற்காக, அந்த நிறுவனத்தின் மேலாளரை வாய்க்கு வந்த படி  பேச முடியுமா?

அவரிடம் மெல்ல, மென்மையாக எடுத்துச் சொல்லி, காரியத்தை முடிப்பதுதானே சாமர்த்தியம்?

பிரம்மன் தவறு செய்து விட்டான்.

அவன் தான் குற்றவாளி என்று சொன்னால், பிரம்மனுக்கு கோபம் வரும்.  அடுத்த பிறவியில் குரங்காகவோ, கொரோனா வைரஸ் ஆகவோ படைத்து விட்டால் என்ன செய்வது?

எனவே, "கோடாத வேதனுக்கு" என்று ஆரம்பிக்கிறார்.

அவன் எப்போதும் தவறு செய்ய மாட்டான்.

"எனக்கே தெரிந்து படைத்ததனனே"...நான் மோசமான ஆளுன்னு தெரிஞ்சு எனக்கு இப்படி ஒரு  டப்பா காரை கொடுத்து விட்டான்.

பிழை என்பேரில் இல்லை.  அவர் பேரிலும் இல்லை. நீ பார்த்து ஏதாவது செய்  என்று   வேண்டுகிறார்.

நான் வேணும்னு உன்னை வணங்காமல் இருக்க வில்லை. இந்த வண்டி கொஞ்சம்  டப்பா. எனவே என் மேல் கோபிக்காதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.

வண்டிய service க்கு விடணும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_12.html

Wednesday, October 9, 2019

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே 


எவ்வளவு செல்வம் இருந்தால் போதும் நமக்கு? அதற்கு ஒரு அளவு இல்லை. எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும் போதாது போல் இருக்கிறது.

எதற்கு இவ்வளவு செல்வம்?

நிறைய செல்வம் இருந்தால் மரணத்தை வென்று விட முடியுமா? நோயில் இருந்து தப்ப முடியுமா ? முதுமை வராது போய் விடுமா?

அப்படித்தான் நினைத்தார்கள் பல அரசர்கள். பல அரக்கர்கள். உலகம் அனைத்தையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்து விட்டால், பகை என்பதே இல்லாமல் ஒழித்து விட்டால், பெரிய பெரிய தவம் செய்து, வலிமையான வரங்களைப் பெற்று, சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்று விட்டால், பின் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தார்கள்.

என்ன ஆயிற்று?

ஒருவரும் தப்ப முடியவில்லை.

அதை எல்லாம் பார்த்த பின்னும், இன்னும் மனிதர்கள் பொருளை தேடி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ பொருள் இருந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில்.....

பாடல்


சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

சீர் பிரித்த பின் 

சூரில் கிரியில் கதிர் வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் 
சாரில் கதியின்றி வேறு இல்லை காண் தண்டு தாவடி போய் 
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் 
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே 


பொருள் 


சூரில் = சூர பத்மன் என்ற அரக்கன் 

கிரியில் = கிரௌஞ்ச மலை 

கதிர் வேல் = ஒளி வீசும் வேலை 

எறிந்தவன் = எறிந்தவன் 

தொண்டர் குழாம் = அவனுடைய அடியார்கள் கூட்டத்தை 
சாரில் = சார்ந்து இருப்பதைத் தவிர 

கதியின்றி = வழி இன்றி 

வேறு இல்லை = வேறு வழி இல்லை 

காண் = கண்டு கொள்  (மனமே) 

தண்டு = தண்டாயுதம் 

தாவடி = தாவுகின்ற அடி (காலாட் படை) 

போய் = அவற்றோடு போய் 

தேரில் = தேர் படை 

கரியில் =  யானைப் படை 

பரியில் = குதிரைப் படை 

திரிபவர் = இவற்றில் எல்லாம் திரிபவர் 

செல்வம் எல்லாம்  = செல்வம் எல்லாம் 

நீரில் = நீர் மேல் எழுதிய 

பொறி என்று = எழுத்து என்று 

அறியாத பாவி நெடு நெஞ்சமே  = அறியாத பாவி நெடு நெஞ்சமே 

எவ்வளவு பெரிய படை, ஆள், அம்பு, சேனை, எல்லாம் வைத்துக் கொண்டு திரிந்தவர்களின் செல்வம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது. 

அப்படி என்றால் நம் செல்வம் எந்த மூலைக்கு ?

இதை சேர்க்கவா வாழ் நாள் எல்லாம் செலவழித்தோம் என்று எண்ண வேண்டும்.

செல்வம் என்ற சொல்லை தமிழர்கள் தெரிந்து எடுத்து இருக்கிறார்கள். 

செல்வோம் என்றதால் அது செல்வம் என்று ஆயிற்று. ஒரு இடத்தில் நிலைத்து நிற்காது. சென்று கொண்டே இருக்கும். எனவே, அது செல்வம். 

ஒரு பக்கம், அளவுக்கு அதிகமான செல்வம், படை, பதவி, அதிகாரம். 

இன்னொரு பக்கம் ஒன்றும் இல்லாத பக்தர்கள் கூட்டம். 

பக்தர்கள் கூட்டத்தை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். 

நினைத்துப் பார்க்க முடியுமா நம்மால்?  

பெரிய ஆட்கள் நட்பு இருந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம், சில காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளலாம். அப்படித்தானே நாம் நினைப்போம். அருணகிரிநாதர் சொல்கிறார், அடியார்களை சென்று சேருங்கள் என்று. 

அதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. 

அதை நான் சொல்வதை விட நீங்கள் சிந்தித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். 

தேடுதல் தானே வாழ்க்கை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_58.html


Tuesday, June 23, 2015

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும்

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும் 


எதைப்  படிக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை.

எப்போது படிக்க வேண்டும் என்பது அதை விட பெரிய சிக்கல்.

எப்படி படிக்க வேண்டும் என்பது அதனினும் பெரிய சிக்கல்.

கற்க கசடு அற , கற்பவை , கற்றபின், நிற்க, அதற்குத், தக என்று சொன்ன வள்ளுவர் கூட எப்போது கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை.

எப்போது படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்....

இந்தப் பிறவியை அழித்து, பின் பிறக்க விடாமல் செய்யும் முருகனின் கவியை அன்போடு , பிழை இல்லாமல் படிக்க மாட்டீர்கள். தீ பிடித்தது போல கண்களில் புகை எழ, கோபத்தோடு எமன் வந்து பாசக் கயிற்றை உங்கள் கழுத்தில் போட்டு இழுக்கும் போதா கற்பீர்கள் ?


பாடல்

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீ  ரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அருணகிரியாரின் பாடல்களை சீர் பிரிக்காமல் படிப்பது சற்று கடினம்.

சீர் பிரித்தபின்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர்  எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழ  பொங்கு வெங் கூற்றன் விடும் கையிற்றால் 
கழுத்தில்  சுருக்கிட்டிழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

அடடா ! புரிகிற மாதிரி இருக்கே !!

அழித்துப்  = இந்த பிறவி என்ற தொடரை அழித்து

பிறக்க ஒட்டா = மீண்டும் பிறக்க விடாமல் செய்யும்

அயில் = கூர்மையான

வேலன் = வேலை உடையவன்

கவியை = கவிதையை

அன்பால் = அன்போடு

எழுத்துப் பிழை அற  = எழுத்துப் பிழை இல்லாமல்

கற்கின்றிலீர் = கற்க மாட்டீர்கள்

எரி மூண்டதென்ன = தீ பிடித்தாற்போல்

விழித்துப் = விழித்துக் கொண்டு

புகை எழ  = எங்கும் புகை எழ

பொங்கு = கோபத்தோடு வரும்

வெங் கூற்றன் = வெம்மையான கூற்றன்

விடும் கையிற்றால் = விடும் பாசக் கயிற்றால்

கழுத்தில் = கழுத்தில்

சுருக்கிட்டிழுக்கும் = சுருக்குப் போட்டு இழுக்கும்

அன்றோ  = அன்றைய தினமா

கவி கற்கின்றதே = கவி கற்பது ?

பின்னாளில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள்.

காலன் எப்போது நம் கழுத்தில் கயிற்றை மாட்டுவான் என்று தெரியாது.

நல்லவற்றை முடிந்தவரை சீக்கிரம் படித்து விடுங்கள்.

நமக்கு கிடைத்தது போல் பெரியவர்கள், குருமார்கள் யாருக்குக் கிடைத்தார்கள் ?

நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முன்னவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காசு போட்டால் கிடைக்குமா கந்தரலங்காரம் ?


Wednesday, March 5, 2014

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன்

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன் 


நம் உணர்சிகளிலேயே மிகவும்  ஆழமானது, அழுத்தமானது, சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி.

கள் கூட உண்டால் தான் மயக்கம்  தரும்.காமம் நினைத்த மாத்திரத்திலேயே மயக்கத்தை தரும் இயல்பு உடையது.

காமம் தலைக்கு ஏறி விட்டால், எது சரி, எது தவறு என்றெல்லாம் ஒன்றும் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

காமம் - சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

சக்ரவர்திகளை காலில் விழ வைத்திருக்கிறது.

ஆயிரக் கணக்கான உயிர்களை கொன்று  குவித்திருக்கிறது.

அருணகிரி நாதர் காம வயப் பட்டு விலை மகள்கள் பின்னால்  போனவர்தான். எவ்வளவுதான் தவறான வழியில் போனாலும், அவர் மனம் என்னமோ, ஒரு மூலையில், முருகனின் வேலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறது.

காம மயக்கத்தில் கூட முருகனை மறக்கவில்லை என்கிறார்.

சுந்தரர் சொன்ன மாதிரி "சொல்லும் நா நமச்சிவாயவே" என்று மனமும் உடலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், நாக்கு மட்டும் நமச்சிவாய என்று சொல்லிக்  .கொண்டே இருக்கிறது.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 

          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று உருகினார் வள்ளலார்.

பாடல்

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்  மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள்

கண்டுண்ட = கண்டு + உண்ட. கண்டு என்றால் கற்கண்டு. கற்கண்டை உண்ட என்றால் அவ்வளவு இனிமையான 

சொல்லியர் = குரலை உடையவர்கள். இனிமையான சொல்லுக்கு மயங்காதவர் யார்

சீதை , இராமனிடம் மான் கேட்கிறாள். எப்படி ?

ஆயிடை, அன்னம் அன்னாள், 
     அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன்சொல் 
     கிளியினின் குழறி, மாழ்கி, 
'நாயக! நீயே பற்றி 
     நல்கலைபோலும்' என்னா, 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
     சீறிப் போனாள்.

மழலை + இன் சொல் + கிளியின் + குழறி (தட்டுத் தடுமாறி) + மாழ்கி (வருந்தி) .

இப்படி கேட்டால் எந்த கணவன் தான் மறுக்க முடியும் ? நம் பெண்களுக்கு எங்கே தெரிகிறது. எனக்கு இல்லாத உரிமையா என்று அதிகாரம் செய்ய வேண்டியது. அப்புறம் ஒன்றும் கிடைக்காமல் கண்ணை கசக்க வேண்டியது. இராமாயணம் படிக்க  வேண்டும். கணவன் மனைவி உறவு  பலப் படும்.


மெல்லியர் = மென்மையானவர்கள்

காமக் = காமம் என்ற

கலவிக் கள்ளை = கலவியில் விளைந்த கள்ளை .

மொண்டுண் டயர்கினும் = மொண்டு + உண்டு +  அயர்கினும். கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை. மொண்டு மொண்டு  குடித்தாராம்.குடித்த பின் அயர்ச்சி வந்து  விட்டது.வராதா பின்ன?


வேல்  மறவேன் = அந்த அயர்ச்சியிலும் வேலை மறக்கவில்லை.

முது = முதுமையான

கூளித் = பேய்

திரள் = திரண்டு வந்து.

நமக்கு வயது ஆகும். பின் இறந்து போவோம். ஆனால், பேய்களுக்கு ஏது சாவு ? அவைகளுக்கு வயது ஆகிக் கொண்டே  போகும்.முதுமையான பேய்கள், கூட்டம் கூட்டமாக வந்து

குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் = ஒரே குஷி. ஆட்டம் போடுகின்றன ? ஏன் ?

கொட்டி யாட = வெறும் ஆட்டம் அல்ல. மேள தாளம் முழங்க , கொட்டி ஆடின.

வெஞ் சூர்க் = வெம்மையான சூரனையும் அவன் அரக்க கூட்டத்தையும் 

கொன்ற = போரில் கொன்ற 

ராவுத்தனே = இராவுத்தனே

முருகன், அரக்கர்களை அக்ரோணி கணக்கில் கொன்று குவித்தார். அந்த பிணங்களை தின்ன பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. நல்ல விருந்து கிடைத்ததால் அவைகளுக்கு ஒரே  குஷி.

கலவியிலும் கடவுளை மறவா மனம் !

Sunday, February 16, 2014

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய்

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய் 


ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் இரயிலிலோ, விமானத்திலோ முன் பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இல்லை என்றால் கடைசி நேரத்தில் இருக்க இடம் கிடைக்காமல் அல்லல் பட நேரிடும்.

வேறு ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் முன் கூட்டியே அதைப் பற்றி திட்டமிட்டு செய்வது நலம்.

மரணம் என்று ஒன்று வரும்.  அதற்கு என்ன திட்டம் இட்டு வைத்து இருக்கிறோம் ? ஏதோ அப்படி ஒன்று நிகழவே போவது இல்லை என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அருணகிரியார் நமக்கு அதை நினைவு  படுத்துகிறார்.

மரணம் வரும். கூற்றுவன் வருவான். பாசக் கயிறை வீசுவான். அப்போது அவனிடம் இருந்து யார் நம்மை காக்க முடியும் ? முருகா, நீ தான் எனக்கு "அஞ்சாதே" என்று ஆறுதல் சொல்ல முடியும். அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு திருப்புகழை படித்து போற்றுவேன்.

பாடல்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை

இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

பொருள்

படிக்கும் = படிக்கும்

திருப்புகழ் = திருப்புகழ், சிறந்த புகழ், என்று அழியாத புகழ்

போற்றுவன் = போற்றுவேன்

கூற்றுவன் = உடலையும் உயிரையும் கூறு போடுபவன், கூற்றுவன்

பாசத்தினாற் = பாசக் கயிற்றால்

பிடிக்கும் பொழுது = என்னை வந்து பிடிக்கும் போது

வந்து = என் எதிரில் வந்து

அஞ்லென் பாய் = அஞ்சல் என்பாய்

பெரும் பாம்பினின்று = பெரிய பாம்பின் மேல் நின்று

நடிக்கும் = நடனமாடும்

பிரான் = கண்ணன், திருமால்

மருகா = மருமகனே

கொடுஞ் = கொடுமையான

சூரனடுங்க = சூரன் நடுங்க

வெற்பை = மலையை


இடிக்கும் = இடிக்கும், பொடித்து துகள் துகளாக்கும் 

கலாபத் = தோகை  உள்ள

தனி மயில் = தனித்துவம் உள்ள மயில் (special )

 ஏறும் இராவுத்தனே = ஏறும் இராவுத்தனே 

இராவுத்தன் என்றால் முஸ்லிம் அல்லவா ? குதிரை விற்பவனை , குதிரை வண்டி ஓட்டுபவனை இராவுத்தன் என்று சொல்லலாம். முருகன் மயில் மேல் அல்லவா வருகிறான் ? அவனை எப்படி இராவுத்தன் என்று சொல்லலாம் ?

ஒரு காலத்தில், மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் குதிரை விற்பவனாக  வந்து குதிரை  விற்றார். அந்த தகப்பனுக்கு மகன் தானே  இவன்.எனவே குதிரை விற்பவனின் மகன்  இராவுத்தன். 

எதற்கு சம்பந்தம் இல்லாமல் பாம்பின் மேல் ஆடும் மருகன், மயில் மேல் வரும் முருகன் என்று  சொல்கிறார் ?

இவை எல்லாம் ஒரு குறியீடுகள்.

பாம்பு புஸ் புஸ் என்று சீரும். பெரிதாக காற்றை வெளியே விடும். அப்படி புஸ் புஸ் என்று சீரும்  பாம்பை அடக்கி வைப்பது மயில். 

பிராண வாயுவின் ஓட்டத்தை கட்டுப் படுத்தினால் மரண பயம் வராது. 

மூச்சு சீரானால் , கட்டுப் பட்டால் மனம்  வசமாகும்.

மனம் வசமானால் பயம் நீங்கும். பயத்தில் பெரிய பயம் மரண பயம். அதுவும் நீங்கும். 





Saturday, February 8, 2014

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர் 


துன்பத்திற்கு காரணம் பாசம் என்று சொல்லப் படுகிறது.

பாசம் எதன் மேல் ?

மனைவி, கணவன், பிள்ளகைள், பெற்றோர், சகோதரன், சகோதரி, என்று நட்பும் உறவும் இவற்றின் மேல் உள்ள பாசம். இதில் ஏற்படும் இழப்பு, இது ஒரு பாசம்.

இதைத்தான் நாம் பொதுவாக பாசம் என்று சொல்லுகிறோம்.

ஆனால், அருணகிரிநாதர் அதைவிட ஆழமான, நாம் அறியாத ஒரு பாசத்தைக் காட்டுகிறார்.

நம் மனம் புலன்கள் மேல் வைக்கின்ற பாசம், பிணைப்பு.

புலன்கள் தரும் இன்பம், இன்பத்தில் பிறக்கும் நினைவுகள், ஞாபகங்கள், அவற்றை விட்டு பிரிய வேண்டுமே என்ற ஏக்கம் இது பாசத்தில் பெரிய பாசம்.

இறக்கும் போது எது அதிகம் கவலை தருகிறது ? இந்த இன்பங்களை , இந்த நினைவுகளை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான் பெரிய கவலை.

மனதுக்கும் புலன்களுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு விடுமானால் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் கிடக்கும்.

உடல் வேலை செய்ய உணவு வேண்டும். உடல் தனது தேவைக்கு உண்கிறது என்று அந்த உணவின் மேல் பற்று இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். "ஹா, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு..இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று மனம் அதில் இலயிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது .

உணவு என்பது உடல் தேவை என்பது மாறி உள்ளத் தேவையாகிப் போகிறது.

மனம், புலன், பொருள் (உயிர் உள்ளது, உயிர் அல்லாதது) என்ற இந்த பாசம் மனிதனை பாடாகப் படுத்துகிறது.

இதிலிருந்து என்னை காப்பாற்று என்று முருகனை  வேண்டுகிறார்.

பாடல்

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

சீர் பிரித்த பின்

கு பாச வாழ்க்கையுள்  கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த 
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய்  விழ மேருவும் குலங்க விண்ணாரும் உய்ய 

சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைய  சண்முகனே.

பொருள் 

கு = உலகு
பாச வாழ்க்கையுள் = உலகின் மேல் பாசம் கொண்ட வாழ்க்கையில்
கூத்தாடும்  ஐவரில் = கூத்தாடும் ஐந்து புலன்களும்
கொட்பு = சுழற்சி. ஒரு புலன் ஓய்ந்தால் அடுத்தது தலை தூக்கும். முதலில்  பசிக்கும். உணவு கிடைத்தவுடன், வேறு சுகம் தேடும். 
அடைந்த = அடைந்த 
இப்பாச நெஞ்சனை = இந்த பாச நெஞ்சம் உள்ளவனை
ஈடேற்றுவாய் = கரை ஏற்றுவாய்
இரு நான்கு = எட்டு. அஷ்ட திக்கு
வெற்பும் = மலைகளும்
அப்பாதியாய்  விழ = இரண்டாய் உடைந்து விழ
மேருவும் குலங்க = மேரு மலையும் குலுங்க
விண்ணாரும் உய்ய = தேவர்கள் உய்ய 

சப்பாணி கொட்டிய = சப்பாணி கொட்டிய
கை ஆறிரண்டு உடைய  சண்முகனே = பன்னிரண்டு கைகளை உடைய சண்முகனே


Sunday, February 2, 2014

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று




பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்

கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

சூரபத்மனும் அவன் தம்பிகளும் மூன்று பெரிய மலையை செய்தார்கள். அவை பறக்கும் மலைகள். எங்கெல்லாம் மனிதர்களும் தேவர்களும் கூட்டமாக இருக்கிறார்களோ, அப்படியே பறந்து வந்து அவர்கள் மேல் அமர்ந்து விடும் அந்த மலைகள். அவற்றின் கீழே அகப்பட்டவர்கள் நசுங்கி உயிர் விட வேண்டியது தான். 

முருகன் தன் வேலாயுதத்தால் அந்த மலைகளை பொடிப் பொடியாகச் செய்தான். 

அது ஏதோ கதை என்று நினைத்துத்  தள்ளி விடாதீர்கள். 

நம் மனம் என்ன செய்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

வீட்டில் நாம் அமர்ந்து இருந்தாலும், அது எங்கே நம்மிடம் இருக்கிறது. அது பாட்டுக்கு  ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

கற்பனையில், கனவில், மிதந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் கேட்டு விட்டா அது  போகிறது ? நம்மை விட்டு தப்பித்து ஓடிப் போய் விடுகிறது. 

டிவி யில் ஒரு நல்ல அயல் நாட்டைப் பார்த்தால் அங்கே போய் விடுகிறது, அழகான  பெண்ணை/ஆணைப் பார்த்தால் அவர்கள் கூட இருந்தால் என்ன என்று  அவர்கள் பின்னே போய் விடுகிறது....நல்ல கார், சிறந்த உடை, சுவையான உணவு ...எதைக் கண்டாலும் அதன் மேல் போய் உட்கார்ந்து கொள்கிறது  நம் மனம்....சூரபத்மனின் பறக்கும் மலைகளைப் போல. 

அவன் மலைகளாவது அவன் கட்டுப் பாட்டில் இருந்தது. 

நம் மனம் நம் கட்டுப் பாட்டிலா இருக்கிறது. 

அது பாட்டுக்கு எந்தப் பெண்ணை கண்டாலும் அவர்கள் பின்னால் போய் விடுகிறது. மலையை பொடிப் பொடியாக செய்தது போல என் ஆசை மலைகளைத் தகர்த்து எனக்கு  ஞானம் தருவாய் என்று  வேண்டுகிறார்.


பாடல் 

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.


சீர் பிரித்த பின் 

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போன ஒன்றற்கு 
எட்டாத ஞான கலை தருவாய் இருங் காம விடாய் 
பட்டார் உயிரை திருகி பருகி பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே 


பொருள் 

பொட்டாக = கண்ணுக்குத் தெரியாத  துகளாக.பூச்சி பொட்டு இருக்கப் போகிறது என்று சொல்வார்களே. பூச்சி கண்ணுக்குத் தெரியும். பொட்டு கண்ணுக்குத் தெரியாத சின்ன உயிரினம்.  

ஆசா நிகளம் துகளான பின் பேசா அநுபூதி பிறந்ததுவே 

என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில் 


வெற்பைப் = மலைகளை 

பொருத = சண்டையிட்ட 

கந்தா = கந்தக் கடவுளே 

தப்பிப் போன ஒன்றற்கு = என்னை விட்டு தப்பிப் போன ஒன்றான (என் மனதை )
எட்டாத = அறிய முடியாத 

ஞான கலை தருவாய் = ஞானத்தை தருவாய் 

இருங் = வலிய  

காம விடாய்  = காமம் என்ற தாகம் 

பட்டார் = அடைந்தோர் 

உயிரை  = உயிரை 

திருகி பருகி பசி தணிக்கும் = திருகி, பருகி, பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் = கட்டாரி என்றால் குத்தீட்டி. அது போன்ற வேல் போன்ற விழிகளை கொண்ட பெண்களின் 

வலைக்கே மனம் கட்டுண்டதே  = வலையில் கட்டுப்பட்ட மனதை 




Friday, November 1, 2013

கந்தர் அலங்காரம் - புளித்த தேன்

கந்தர் அலங்காரம் - புளித்த தேன் 




பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

சில சமயம் அல்வா,  குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட்டபின் காப்பி குடித்தால் அது இனிப்பாக இருக்காது. காப்பியில் சர்க்கரை இருந்தாலும் அதற்கு முன் சாப்பிட்ட அதிக இனிப்பான பலகாரத்தால் காப்பி சுவை  குன்றுகிறது.

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது.

அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது. அப்படி என்றால் முருகன் அருள் அவ்வளவு சுவை.


பொருள்

பெரும் = பெரிய

பைம் = பசுமையான

புனத்தினுள் = திணை புனத்தில்

சிற்றேனல் = ஏனல் என்றால் கம்பு. கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் இவற்றை

காக்கின்ற = காவல் காக்கின்ற

பேதை = வெகுளிப் பென்னாணன வள்ளியின்

கொங்கை = மார்புகளை

விரும்பும் = விரும்பும்

குமரனை = குமாரனானான முருகனை

மெய் அன்பினால் = மெய் அன்பினால்

மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்ல நினைக்க

அரும்பும் = ஒரு பூ அரும்பு மெல்ல மெல்ல அரும்புவதைப் போல, மலர்வதைப் போல

தனி = தனிச் சிறப்பான

பரமானந்தம்! = பரமானந்தம்

தித்தித்தது = தித்தித்தது

அறிந்தவன்றோ! = அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து = கரும்பு துவர்த்து

செந்தேனும் புளித்து = சுவையான தேன் புளித்து

அற கைத்ததுவே = ரொம்ப கசந்து போனது

உலகத்தில் உள்ள பொருள்கள் மேல் , அனுபவங்களின் மேல் இன்பமும், சுவையும் இருந்தால்  இறை அருளின் சுவை இன்னும் அறியப் படவில்லை என்று அர்த்தம்.

இறை அனுபவம் வந்து விட்டால் இந்த உலகின் சுவைகள் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

பற்றறுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - பற்றற்றான் பற்றினை பற்றி விட்டால்.

பெரிய ஒன்று கிடைத்த பின் மற்றவை எல்லாம் சிறிதாகப் போய் விடும்.

சிந்திப்போம்


Wednesday, April 10, 2013

கந்தர் அலங்காரம் - இறை தேடல்


கந்தர் அலங்காரம் - இறை தேடல் 


இறைவனை தேடுவது ரொம்ப கடினமா ? இல்லவே இல்லை என்கிறார் அருணகிரிநாதர். இன்னும் சொல்லப் போனால் உள்ளதிர்க்குள் மிக எளிமையான வேலை என்கிறார்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்...."கந்தா" என்று சொன்னால் போதும். உங்களுக்கு கந்தன் வேண்டாம் என்றால் உங்கள் கடவுளை சொல்லுங்கள். அவ்வளவுதான்.

ஹா...அது எப்படி...அருணகிரி வேறு என்னவெல்லாமோ தவம் செய்து இருப்பார், பூஜை செய்து இருப்பார்....இல்லாவிட்டால் சும்மா கந்தா என்றால் பலன் கிடைக்குமா ?

அவரே சொல்கிறார் .... இப்படி கந்தா என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் அறியேன் என்கிறார்.

சரி, கந்தா என்று அவன் நாமம் ஜெபிப்போம்....எப்ப பலன் கிடைக்கும் ?

உடனே...கை மேல் பலன் என்கிறார் அருணகிரி. பிற்காலத்தில், அடுத்த பிறவியில் என்று காத்திருக்க வேண்டாம்....கை மேல் பலன்.

உடனடி பலன் மட்டும் அல்ல....நீண்ட நாள் பலனும். நீண்ட நாள் என்றால் எவ்வளவு நாள் ?  ஒரு ஒரு வாரம்,, மாதம் , வருடம் ? எவ்வளவு நாள் ?

நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போதில் இருந்து நீங்கள் மரணம் அடையும் வரை அதன் பலன் இருக்கும்.

நீங்கள் கற்ற கல்வி மறந்து போய் விடும். பத்தாம் வகுப்பில் படித்த குரல் ஞாபகம் இருக்கிறதா ? கல்லூரியில் படித்த பாடங்கள் நினைவு இருக்கிறதா ? கல்வி  மறந்து கொண்டே வரும். மரணத் தருவாயில் ஒன்றும் ஞாபகம் இருக்காது.

உங்கள் சுற்றம், ஊர் பொது மக்கள் யாரவது உங்களை மரணத்தில் இருந்து காக்க முடியுமா ? கிட்ட இருந்து அழலாம்...வேறு என்ன செய்ய முடியும் ?

கல்வியை விடுங்கள், சுற்றமும் நட்பையும் விடுங்கள்....உங்கள் புலன்கள் உங்களுக்கு துணை செய்யுமா ?

நாக்கு குழறும், கண் பஞ்சடையும், காது கேக்காது...இப்படி உங்கள் புலன்களே உங்களை வஞ்சனை செய்யும். எவ்வளவு செய்து இருப்பீர்கள் இந்த புலன்களுக்கு....கடைசி நேரத்தில் உங்களை கை விட்டு விடும்.

எல்லாம் உங்களை விட்டு விட்டு போய் விடும். எதுவும் உதவி செய்யாது...ஒன்றே ஒன்றைத் தவிர...அவன் நாமத்தை தவிர.

பாடல்  

மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.

சீர் பிரித்த பின்

மை வரும் கண்டத்தர் மைந்தா கந்தா என்று வாழ்த்தும் இந்த 
கை வரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய் 
பை வரும் கேளும் பதியும் கதற பழகி நிற்கும் 
ஐவரும் கை விட்டு மெய் விடும் போது உன் அடைக்கலமே 



பொருள்


Thursday, April 4, 2013

கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு - 1


கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு 


ஒரு வேலை செய்தால், அதற்கு உடனே பலன் கிடைத்தால் நல்லதா அல்லது ரொம்ப நாள் கழிச்சு பலன் கிடைத்தால் நல்லதா ? என்று கேட்டால் உடனே கிடைத்தால் நல்லது என்று தயங்காமல் பதில் சொல்லி விடுவீர்கள். 

ஆனால் இறைவனை வணங்கி வழி பட்டால் பலன் உடனே கிடைக்கிறதா ? இறந்த பிறகு, பலன் கிடைக்கும் (சொர்க்கத்தில்) அல்லது இறந்த பின் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று சொன்னால் அது எப்படி ? இறைவனை இன்று வழிபட்டேன், எனக்கு இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்று யாரும் ஏன் கேட்பது இல்லை. இந்த மருந்தை சாப்பிடு, ஒரு நாப்பது அல்லது ஐம்பது வருடத்தில் உன் நோய் குணமாகிவிடும்...அப்படி குணமாகா விட்டால் அடுத்த பிறவியில் கட்டாயம் குணம் ஆகும் என்று ஒரு வைத்தியர் சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ?  ஆனால் உங்கள் மதம் அப்படி சொன்னால் கேட்டுக் கொள்வீர்கள் தானே  ?

அருணகிரி நாதர் சொல்கிறார்....அப்படி எல்லாம் இல்லை ...இறைவனை வழி பட்டால் பலன் கை மேல் கிடைக்கும் என்று சொல்கிறார்....பிறவி கணக்கு அல்ல, வருட கணக்கு அல்ல, வார கணக்கு அல்ல, நாள் கணக்கு கூட அல்ல....உடனே கை மேல் பலன் என்று உறுதியாக கூறுகிறார்....

அவருக்கு கிடைத்ததாம்....

அப்படி அவர் என்ன பெரிதாக செய்து விட்டார் ? பசி அடக்கி, மூச்சு அடக்கி, முள் மேல் நின்று, தீக்கு நடுவில் தவம் செய்து இருப்பாரோ ?

பார்ப்போம் 

Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4



கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4




அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் மூன்று  அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று கடைசி அடி

தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே


ஒளியில் விளைந்த, உயர் ஞானமான மலையின் உச்சியில், அன்பில் அருளில் விளைந்த  ஆனந்தத் தேனை, வெறும் பாழில், வெறும் தனியில் உதித்த அதை  அருளியவன்  தேசிகன். தேசிகன் என்றால் குரு என்று பொருள்

எத்தனையோ குரு உண்டு அதில் இது எந்த குரு என்ற கேள்வி வரும் அல்லவா ?

முகம் ஆறு உடை தேசிகன்...ஆறுமுகம் உள்ள குரு ஒரே ஒருவன் தான், அவன் தான் முருகன்

அவன் என்ன செய்தான் ...

அருணகிரி தெரிய சொல்லவில்லை, தெளிய சொன்னான்...அதாவது தெரிதல் அறிவின்பால் பட்டது...தெளிதல் உணர்வின் பால் பட்டது...."பட்டு தெளிஞ்சா தான்  உனக்கு புத்தி வரும் " என்று சொல்வதைப்  போல ....சொன்னால் புரியாது  அனுபவித்தால் தான் தெரியும்.எனவே தெளிய விளம்பியவா என்றார்

இப்படி ஒரு பாடலில் இவ்வளவு அர்த்தம்....

வேறு என்ன சொல்லப் போகிறேன் ...முடிந்தால் மூல நூலை படித்துப்  பாருங்கள் ...இப்படி எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3



அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் இரண்டு அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று மூன்றாவது அடி


வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை

அந்த ஆனந்தத்தேன் எங்கு விளைந்தது தெரியுமா ?

தனிமையில் விளைந்தது.....

எப்படிப்பட்ட தனிமை 

வெறும் தனிமை...

அது என்ன வெறும் தனிமை...?

தனிமைக்கும் , வெறும் தனிமைக்கும் என்ன வித்தியாசம் ? 

நீங்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கு ஒரு விடுமுறை தினத்தன்று போகிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம் ? அங்க யார் இருப்பா ? யாரும் இருக்க மாட்டார்கள். வாசலில் ஒரு காவல் காரன் மட்டும் தனியா இருப்பான்.

அவன் தனியாகவா இருக்கிறான் ? பள்ளிக் கூட கட்டிடம் , அங்கு உள்ள மரம் செடி கோடி எல்லாம் இருக்கிறதே ...எப்படி தனியாக இருப்பான் ?  

தனி என்றால் வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் என்று குறிப்பு. அதாவது தன்  இனம் இல்லாதது தனிமை.  அந்த புகை வண்டி நிலையத்திற்கு சென்றேன்..ஒரே ஒரு என்ஜின் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தது என்று சொல்லுவோமே அத போல. 

இனம் இல்லாதது தனிமை. மற்ற பொருள்களும் இல்லை என்றால் ? ஏதுமற்ற தனிமை? 

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை, மரம் செடி கொடிகள் இல்லை, தரை இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை அந்த காவல் காரன் மட்டும் இருந்தான் என்றால் அது வெறும் தனி 


அந்த வெறும் தனிமையில் விழைந்தது பாழ்... பாழ் என்றால் ஒன்றும் இல்லாதது....

அதோ தெரிகிறதே அது ஒரு பாழடைந்த கட்டிடம், அது ஒரு பாழ் நிலம் (பாலை நிலம்) என்று கூறுவது போல. 

பாழ் நிலம், என்றால் அதை அடுத்து வேறு எதாவது இருக்கும். 

அருணகிரி சொல்லுகிறார் ...

வெறும் பாழ் 

அப்படி என்றால் அந்த பாழை தாண்டி ஒன்று இல்லை.

வெறும் பாழ் பெற்ற வெறும் தனிமை.....


அந்த வெட்ட வெளியில் விளைந்த பாழில் இருந்து விளைந்த ஆனந்தத் தேன் 


என்னய்யா இது பாழ், தனிமை, தேன் அது இதுனு போட்டு ஒரே குழப்பமா இருக்கே..இது எல்ல்லாம் யாரு சொன்னா ? இதை எல்லாம் எப்படி நம்புறது ? 

அதையும் சொல்கிறார் அருணகிரிநாதர் 











Monday, March 25, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2 


அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

நேற்று இந்தப் பாடலின் முதல் வரியை சிந்தித்தோம்.. இன்று இரண்டாவது வரி. 


ஞானத்தின் உச்சியில் இருந்து பார்கிறார் அருணகிரி. என்ன தெரிகிறது ?

அளியில் விளைந்த  


அளி என்ற சொல்லுக்கு அன்பில் விளைந்த அருள் என்று பொருள். ஆங்கிலத்தில் "grace" என்று சொல்லலாம்.

அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை 


சாலை, வீடுகள், கட்டிடங்கள் என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு ஊர், மலை மேல் ஏறி நின்று பார்த்தால் எப்படி இருக்கும் ? அங்கொரு மலை, இங்கொரு குளம், சற்று தள்ளி வளைந்தோடும் ஒரு நதி, இந்த பக்கம் கொஞ்சம் பசுமையான வயல்கள் என்று பார்க்க மிக அழகாக இருக்கும் அல்லவா ?

வாழ்க்கையோடு நாளும் ஒட்டி, உறவாடி அதில் அமிழ்ந்து கிடந்தால் அதில் உள்ள சின்ன சின்ன  விஷயங்கள் கூட பெரிதாய் தெரியும். ஞானம் ஏற ஏற...அதே வாழ்க்கை மிக இனிமையாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

அன்பில் விளைந்த ஆனந்தத் தேனை....ஆனந்தமான தேன்....

தேன் எப்படி இருக்கும் ? இனிக்குமா, கசக்குமா ? இனிக்கும் என்றால் எப்படி இனிக்கும் ? சர்க்கரை மாதிரி இருக்குமா ? பால்கோவா மாதிரி இருக்குமா என்று கேட்டால்  எப்படி ? அதை அறிய வேண்டும் என்றால் அதை சுவைத்துப் பார்க்க வேண்டும். அந்தத் தேன் எங்கு கிடைக்கும் ? ஞானத்தின் உச்சியில் கிடைக்கும்.




Sunday, March 24, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1 

அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

விளக்க உரை 

Tuesday, June 26, 2012

கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


முருகன் இந்துவா ? முஸ்லிமா ?

அருணகிரியார் முருகனை இராவுத்தனே என்று அழைக்கிறார் இந்த பாடலில்.

இராவுத்தன் என்றால் முஸ்லிம்தானே? முருகன் எப்படி முஸ்லிம் ஆனான்?

இராவுத்தன் என்றால் குதிரை விற்பவன்.

மாணிக்க வாசகருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி பாண்டிய மன்னனிடம் விற்றார்.

அப்படிப்பட்ட சிவனின் மகன் தானே முருகன். எனவே அவனும் ஒரு இராவுத்தன் தான்.

Tuesday, May 29, 2012

கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


சிறை படாத நீர் போல் காலம் கசிந்து கொண்டே இருக்கிறது.

நமக்கும் வயது ஏறும். படித்தது மறக்கும். 

நம் உடல் அவயங்கள் நாம் சொல்வதை கேட்காத காலம் வரும்.

நம் உறவினார்களும் நண்பர்களும், "அடடா, எப்படி இருந்த ஆளு, இப்படி ஆய்டானே என்று நினைத்து வருந்தும் காலம் வரும்.

அப்போது, முருகா, உன்னை வணங்கும் செயலன்றி வேறு ஒன்றும் அறியேன்....

அருணகிரி நாதர் கரைகிறார்....

Friday, May 4, 2012

கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கந்தர் அலங்காரம் - நாலாயிரம் கண்கள்


கோயில்கள் காலப் பெட்டகங்கள்.

அதன் பிரகாரங்களில் எத்தனையோ பேர் கொட்டிய கவலைகள், கனவுகள், பாவ மன்னிப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அங்குள்ள சிற்பங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கும்.

எத்தனை பிரார்த்தனைகளை, முணுமுணுப்புகளை கேட்டிருக்கும், எத்தனை சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கும்.

மனிதனின் கடைசி நம்பிக்கை கோயில்.

'உன் பற்று அன்றி ஒரு பற்றிலேன் இறைவா கச்சியேகம்பனே' என்று எல்லாம் விட்டு அவனே சரண் என்று அடையும் இடம் கோயில்.

திருசெந்தூர் கோயில்.

கடல் அலை தாலாட்டும் கோயில்.

கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் வரை இங்கே ஒரு கோயில் வரப் போகிறது என்று சொன்னால் நம்ப முடியாது.

அருணகிரி நாதர் திரு செந்தூர் கோயிலில் உள்ள முருகனைப் பார்க்கிறார்.

அழகு அப்படியே அவரை கொள்ளை கொள்கிறது. வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம்.

எவ்வளவு பார்த்தாலும் போதவில்லை.

அடடா , இந்த அழகைப் பார்க்க இரண்டு கண்ணுதானே இருக்கு...

இன்னும் கொஞ்சம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஆதங்கப் படுகிறார்...