Tuesday, March 28, 2017

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு


நாளும் பல பேரை சந்திக்கிறோம். இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படி அறிந்து கொள்வது ?

சில பேரை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடுகிறது. சிலரை பார்த்தாலே பிடிப்பதில்லை.

ஒருவரை நம்பி பணம் கொடுக்கலாமா ? நம்பி சில இரகசியங்களைச் சொல்லலாமா ?

ஏன், சில பேரை பார்த்து அவர்களுடன் பழகி காதல், திருமணம் என்று கூட போய் விடுகிறது. அப்படி திருமணம் செய்தவர்கள் பின்னாளில் யோசிப்பது உண்டு, எங்கே போயிற்று அந்த காதல் என்று. காதல் போய் வெறுப்பு நிறைந்த வாழ்க்கை , அவர்கள் எடுத்த முடிவை சிந்திக்க வைக்கும்.

யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ?

சிக்கல் தான். இதற்கு ஒரு தெளிவான விடை இல்லை. இருக்கவும் முடியாது.

மற்றவர்கள் மனதில் இருப்பதை நாம் ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது என்கிறது நாலடியார்.


பாடல்

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.


பொருள்

யாஅர் ஒருவர் = யார் ?

ஒருவர்தம் உள்ளத்தைத் = மற்றொருவரின்  உள்ளத்தை

தேருந் துணைமை யுடையவர் = தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் ?

சாரல் = மலைச் சாரலில்

கனமணி = பெரிய மணிகள்

நின்றிமைக்கும் = நின்று ஒளி விடும்

நாட! = நாட்டை உடையவனே

கேள்; = கேள்

மக்கள் = மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு = நினைப்பது ஒன்று , செய்வது மற்றொன்றாக இருக்கும்


நல்லது செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. ஊருக்கு நாலு நல்லது செய்து விட்டு  அதன் பின்னணியில் பல தீய செயல்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அது போல தீய செயல் செய்பவரின் மனத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம்.

வழிப்பறி செய்துகொண்டிருந்த வாலமீகிக்குள் தான் பெரிய துறவி இருந்தார்.

சாத்திரம் அத்தனையும் கரைத்துக் குடித்த இராவணணுக்குள்தான் மாற்றான் மனைவியை  விரும்பும் தீய குணம் இருந்தது.

செயலை வைத்து ஒருவரை முழுவதும் எடை போட முடியாது. தீர ஆராய வேண்டும் என்கிறது நாலடியார்.

சரிதானே ?

 

Sunday, March 26, 2017

திருக்குறள் - பெண்ணின் காமம்

திருக்குறள் - பெண்ணின் காமம் 


பெண்ணிற்கு காமம் உண்டா ? அவளுக்கும் கூடலில் ஆசை இருக்குமா ? பெண்கள் அதை பெரிதாக வெளிப்படுத்துவது இல்லை. எனவே இந்த சந்தேகம் ஆண்கள் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது.

மனைவி மேல் சந்தேகம் , வருத்தம். "அவளுக்கு என் மேல் ஆசை இல்லை" என்ற முடிவுக்கு வந்து விடுகிறான். அந்த குழப்பத்தில் வேறு இடத்தில் அவன் மனம் செல்கிறது.

பெண் தன்னுடைய காமம் பற்றி வெளிப்படையாக பேசுவதோ அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்துவதோ இல்லை.

பெண் கவிஞர்களோ, பெண் எழுத்தாளர்களோ கூட இதைப் பற்றி ஆழமாக எழுதுவது இல்லை.

வள்ளுவர் தெளிவு படுத்துகிறார்.

அந்தக் காலத்தில் ஒரு பெண் மேல் ஒரு ஆடவனுக்கு காதல் வந்த பின், அந்த பெண்ணின் பெற்றோர் அந்த காதலை எதிர்த்தால், அந்த பையன் மடல் ஊர்வான்.

மடல்  ஊர்தல் என்றால் என்ன ?

எந்த பெண்ணை காதலிக்கிறானோ, அந்த பெண்ணின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து கொள்வான். இந்த காலம் போல போட்டோ எல்லாம் இல்லாத காலம்.

பனை மரத்தின் குருக்குகளை கொண்டு ஒரு குதிரை செய்து கொள்வான். அந்த குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு , அந்த கொடியை கையில் பிடித்துக் கொள்வான். அந்த உள்ளில் உள்ள சிறு பையன்கள், அவனுடைய நண்பர்கள் எல்லாம் அந்த குதிரையை ஊருக்குள் இழுத்துக் கொண்டு செல்வார்கள்.

அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து, ஊர் மக்கள்  , சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அவர்களை திருமணத்துக்கு  சம்மதிக்க வைப்பார்கள்.

இதற்கு மடல் ஊர்தல் என்று பெயர்.

காதலன் சொல்கிறான் "கடல் போல காமம் இருந்தும் மடல் ஏறாத பெண்ணனை விட பெருமையானது எது" என்கிறார்.

பாடல்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


பொருள்

கடல் அன்ன = கடல் போல

காமம் =காமம்

உழந்தும் = விருத்தியும்

மடல் ஏறாப் = மடல் ஏறாமல் இருக்கும்

பெண்ணில் = பெண்ணைவிட

பெருந்தக்கது இல் = பெருமை உடையது ஒன்றும் இல்லைபெண்ணுக்கு காமம் உண்டு என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

அவ்வளவுதானா ?

இல்லை. குறளில் நுணுக்கமாக சில விஷயங்களை சொல்கிறார்.

கடல் அன்ன .....கடல் போன்ற காமம்.  பெண்ணின் காமம் மிகப் பெரியது. உலகில் மிகப்  பெரியது எது என்று பார்த்தார் வள்ளுவர். மலை போல பெரியது என்று சொல்லலாம். ஆனால், மூன்றில் இரண்டு பங்கு கடல் தான். எனவே, கடலைப் போல பெரியது என்றார். பெண்ணின் காமத்தின் முன்னால்  ஆணின் காமம் ரொம்ப சிறியதாகி விடுகிறது. கடலுக்கும், நிலத்துக்கும் உள்ள விகிதம்.

இரண்டாவது, நிலம் அங்கொன்றும் , இங்கொன்றுமாக இருக்கும். ஒன்று கொஞ்சம் பெரிதாக இருக்கும், இன்னொன்று ஒரு குட்டி தீவாக இருக்கும். கடல் அப்படி  அல்ல. தொடர்ந்து இருப்பது. இடை வெளி இல்லாமல் பரந்து பட்டது. ஆணின் காமம் வரும், போகும். சிறிது நேரம் இருக்கும், அப்புறம் காணாமல் போய் விடும். பெண்ணின் காமம் நிலைத்து நீண்டு கிடப்பது.

மூன்றாவது, கடலின் ஆழம் யார்க்கும் தெரியாது. மேலே பார்க்க எங்கும் சமமாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஆயிரம் மேடு பள்ளங்கள் இருக்கும். வெளியே  தெரியாது. பெண்ணின் காமமும் அப்படித்தான், வெளியே ஒன்றும் தெரியாது. ஆயிரம் இரகசியங்களை உள்ளடக்கியது அது.

நான்காவது, கடல் பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்கும். மற்ற நாட்களில்  அமைதியாக இருக்கும். அது போல பெண்ணின் காமம் தருணம் பார்த்து வெளிப்படும். மற்ற நேரங்களில் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.

ஐந்தாவது, கடலுக்குள் முத்து இருக்கும், பவளம் இருக்கும், ஆயிரம் விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கும். ஆனால், கடல் அதை எல்லாம் கொண்டு வந்து கரையில் கொட்டி விடுவது கிடையாது. அது போல பெண்ணும் தன் காமத்தை மறைந்து வைத்து இருக்கிறாள்.

உழந்தும் ...வருத்தம் தந்தும். காமம் அவளுக்கும் சங்கடம் தான். வருத்தம் இல்லாமல்  இல்லை. அவளையும் அது படுத்துகிறது என்கிறார் வள்ளுவர்.


சரி , பெண் அப்படி இருக்கிறாளே, அது சரிதானா ? வாய விட்டு சொன்னா என்ன ? என்று ஆண் தவிக்கிறான். ஆனால், அப்படி சொல்லாமல் இருப்பதுதான்  மிகப் பெரிய பெருமை என்கிறார் வள்ளுவர்.

அப்படி என்றால், ஒரு பெண் தன் காமத்தை தானே சொல்லுவது அல்லது வெளிப்படுத்துவது என்பது  சிறுமை என்கிறார்.

காமத்தை அடக்க முடியாதுதான். இருந்தும், அதையும் அடக்கி, ஏதோ ஒண்ணும் இல்லாதது போல  இருப்பதுதான் பெண்ணின் பெருமை என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், அதை விட பெரிய பெருமை வேறு எதுவும் இல்லை என்று முடிக்கிறார்.

பெருந்தக்கது இல் என்கிறார். கடல் போல காமம் வந்து வருத்தினாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்மையை போல பெருமை உடையது எதுவும் இல்லை என்கிறார்.

பெண் காதலை, காமத்தை சொல்லவில்லையே என்று ஆண்கள் வருந்தக் கூடாது. அது அவளின் இயற்கை. அது அவளின் பெருமை. அவளை கொண்டாடுவோம்.


Saturday, March 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?


நமக்குத் பிடித்தவர்கள், வேண்டியவர்கள் கோபம் கொண்டால் அதை எப்படி கையாள்வது ? அவர்கள் கோபம் , அவர்களுக்கு சரி என்று படும். அவர்களோடு விவாதம் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் கோபம் இன்னும் கூடும். தங்கள் கோபத்திற்கு ஞாயம் கற்பிப்பார்கள். அவர்கள் எப்படி சரி, மற்றவர்கள் எப்படி தவறு என்று குரல் மேலும் கூடும்.

சரி, அப்படியே விட்டு விடுவதா என்றால் அதுவும் சரி இல்லை.

சரி, அதுவும் வேண்டாம், பதிலுக்கு நாமும் கோபப் படலாமா என்றால் இரண்டு பக்கமும் கோபம் என்றால் ஒன்றும் சரி ஆகாது.

பின் என்னதான் செய்வது ?

கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, உடன் வேலை செய்பவர்களோ கோபம் கொண்டால் என்ன செய்வது ?

என்ன செய்வது என்று நேரடியாகச் சொல்லாமல், இராமன் என்ன செய்தான் என்று கம்பன் காட்டுகிறான். அதிலிருந்து நாம் ஏதாவது பாடம் படித்துக் கொள்ளலாம் என்று.

இராமனைத் தேடி பரதன் கானகம் வருகிறான். இராமனைக் கண்டு , அரசை அவனிடம் மீனும் ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம்.

தூரத்தில் பரதன் சேனைகளோடு வருவதைக் கண்ட இலக்குவன் , தங்கள் மேல் பரதன் படை எடுத்து வருவதாக எண்ணிக் கொண்டு சண்டைக்கு தயாராகுகிறான்.

"இராமா, இந்த பரதனையும் அவன் படைகளையும் வென்று அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் பார் " என்று ஆற்றொணா கோபத்தோடு கிளம்புகிறான்.

நீண்ட வீர வசனம் பேசுகிறான். கோபத்தின் உச்சியில் நின்று எரிமலையாக வெடிக்கிறான்.

அப்போது இராமன், சாந்தமாகச் சொல்கிறான்

"இலக்குவா, இந்த ஈரேழ் உலகத்தையும் அழிப்பது என்று நீ முடிவு செய்துவிட்டால் அதை யாரால் நிறுத்த முடியும். இருந்தலும் , உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். கேட்பாயா ?"

என்று சொன்னான்.

பாடல்

“இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
“கலக்குவென்” என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்.


பொருள்

“இலக்குவ! = இலக்குவனே

உலகம் ஓர் ஏழும், ஏழும், = ஈரேழு உலகத்தையும்

நீ = நீ

“கலக்குவென்” என்பது கருதினால் = கலக்குவேன் என்று நினைத்து விட்டால்

அது விலக்குவது அரிது = அதை நிறுத்துவது என்பது கடினம்

 அது விளம்பல் வேண்டுமோ? = அது பற்றி சொல்லவே வேண்டாம்

புலக்கு = அறிவுக்கு

உரித்து ஒரு பொருள் = உரிய ஒரு பொருள்

புகலக் கேட்டியால் = சொல்கிறேன், கேட்பாயா

இலக்குவன் கோபத்தை இராமன் எப்படி மாற்றுகிறான் ?

முதலில், அவன் திறமையை, ஆற்றலை மதித்து பேசுகிறான். யாராவது கோபம் கொண்டு  பேசினால் , முதலில் அவர்களை மட்டம் தட்டி பேசக் கூடாது. "ஆமா , கிளிச்சீங்க , உங்கள பத்தி தெரியாதா " என்று ஆரம்பித்தால் வீம்புக்காகாவேணும் எதையாவது செய்து வைப்பார்கள். முதலில் கோபம் கொண்டவர்களை குளிர்விக்க வேண்டும்.

இராமன் சொல்கிறான், "நீ நெனச்சா பதினாலு உலகத்தையும் கலக்கிருவ" என்று சொன்னவுடன் இலக்குவனுக்கு கொஞ்சம் பெருமையும்  , தான் கொண்ட கோபம் வெட்டி கோபம் இல்லை, செயல் படுத்த முடியும் என்றும் தோன்றும்.

கோபம் கொண்டவர்களின் நல்ல குணங்களை முதலில் சொல்ல வேண்டும். "உங்களுக்கு கோபமே வராதே...என்ன ஆச்சு இன்னிக்கு " என்று ஆரம்பிக்க வேண்டும்.

அவர்கள் கொஞ்சம் கோபம் தணிந்தவுடன் மேற்கொண்டு சொல்ல வேண்டும்.


கோபத்திற்கு, கோபம் பதில் இல்லை.

சரி, நீ சொன்ன மாதிரியே இவனுகள ஒரு கலக்கு கலக்கிட்டு வர்றேன் அப்படினு கிளம்பிட்டா என்ன பண்றது.

அடுத்து இராமன் சொல்கிறான், "அறிவுக்கு உகந்த ஒன்றை சொல்கிறேன் கேட்பாயா " என்கிறான்.

கேட்க மாட்டேன் என்று சொன்னால், தனக்கு அறிவு இல்லை என்று ஆகிவிடும். கேட்டுத்தான் ஆக விடும். அப்படி ஒரு கேள்வியை போடுகிறான் இராமன்.

நமக்கு எப்படி அறிவு வளர்கிறது ?


படித்து , வாசித்து (கண்), ஆசிரியரும் மற்றவர்களும் சொல்வதைக் கேட்டு (காது), தொட்டு உணர்ந்து (தோல்), முகர்ந்து பார்த்து (மூக்கு), வாயில் போட்டு பார்த்து  (நாக்கு), சிந்தித்து (மனம்) என்ற இந்த ஆறு புலன்கள் வழியாக அறிவு நமக்குள் வருகிறது.

அறிவை வளர்ப்பது புலன்கள்.

புலக்கு என்றால் அறிவுக்கு என்று பொருள்.

கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே என்பார் மணிவாசகர்.

ஏதோ அறிவு பூர்வமான விஷயம் சொல்லப் போகிறான் இராமன் என்று கேட்கத் தொடங்குகிறான் இலக்குவன்.

அவன் என்ன கேட்டான் என்று மேலும் பார்ப்போம். 

Thursday, March 23, 2017

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும்

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும் 


ஒன்று எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறோம். அல்லது இறந்த காலத்தை எண்ணி அசை போடுகிறோம். நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை. ஒவ்வொரு வினாடியும் கசிந்து கொண்டே போகிறது. வாழ்ந்ததையும் , வாழப் போவதையும் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர வாழ்வதே இல்லை.

உங்களைச் சுற்றி பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது. டிவி, கைபேசி இவற்றை மூடி வையுங்கள். வாழ்வு என்பது என்ன என்று தெரியும்.

கணவன், மனைவி, பிள்ளைகள், மழை, மரம், மேகம், அனைத்தையும் பாருங்கள்.

அது ஒரு பெரிய காடு. அடர்ந்த காடு. மரம் செடி கொடிகள் ஏகமாக வளர்ந்து கிடக்கிறது. பல வன விலங்குகள் அங்கே இருக்கும்.

அந்த காட்டில் ஒரு மலை. அந்த மலையில் ஒரு கொடிய சிங்கம் இருக்கிறது. வளைந்த கூர்மையான நகங்கள். சிவந்த கண்கள். அந்த சிங்கம் குகையில் படுத்து இருக்கிறது.

மழை மேகமாக இருக்கிறது. மழை வரும் போல இருக்கிறது. வானம் இருண்டு தூரத்தில் எங்கோ இடி இடிக்கிறது. அந்த இடி சத்தத்தை கேட்ட சிங்கம் எதோ யானை தான் பிளிறிக் கொண்டு வருகிறதோ என்று எண்ணிக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க எழுகிறது.

அந்த காட்டின் இன்னொரு பக்கத்தில் பெரிய ஆல மரம். அந்த ஆல மரத்தின் கீழ் ஒரு முனிவர் தவம் புரிகிறார். அவரின் இனிய அழகிய மனைவி உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அந்த கானகம் இருக்கும் இடம் திரு முதுகுன்றம் என்ற இடம். அங்கே போவோமா என்கிறார் திரு ஞான சம்பந்தர்.

பாடல்


தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

சீர் பிரித்தபின்

தழையார் வட வியவீதனில் தவமே புரி சைவன்
இழையார் இடை மடவாளொடும் இனிதாக உறை இடமாம் 
மழை வானிடை முழவ எழில்  வளை வாளுகி எரி கண் 
முழை வாளரி குமிறும் உயர்  முது குன்று அடைவோமே 

பொருள்

தழையார் = தழைகள் (இலைகள்) நிறைந்த

வட  வியவீதனில் = ஆல மர நிழலில்

தவமே = தவம்

புரி = புரிகின்ற

சைவன் = சைவன் (சிவன்)

இழையார் =  நூல் இழை போன்ற

இடை = இடையைக் கொண்ட

மடவாளொடும் = பெண்ணான உமா தேவியோடு

இனிதாக = இன்பமாக

உறை இடமாம் = இருக்கின்ற இடமாம்

மழை வானிடை முழவ = மழை வானத்தில் இடி ஒலிஎழுப்ப

எழில் = அழகான

வளை  = வளைந்த

வாளுகி = நகங்களுடன்

எரி கண் = தீ போன்ற சிவந்த கண்களுடன்

முழை = குகையில்

வாளரி= சிங்கம்

குமிறும் = கர்ச்சிக்கும்

உயர்  = உயர்ந்த

முது குன்று  = முதுகுன்று என்ற இடத்தை

அடைவோமே = செல்வோமே


முதுகுன்றம் என்ற கோவிலுக்குப் போவோம் என்று சொல்லவில்லை. அங்குள்ள இயற்கை. அந்த காடு, மலை, மழை மேகம், சிங்கம் என்று இயற்கையை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

அது சரி, இந்த முதுகுன்றம் என்ற இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? நம்ம விருத்தாச்சலம் தான் அந்த இடம். (விருதா என்றால் வயதான; அசலம் என்றால் மலை. வயதான மலை. முது குன்றம். 
வேதாச்சலம். அருணாச்சலம் இதை பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்) 


Wednesday, March 22, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால் 


சினம் அன்பை முறிக்கும். உறவைக் கெடுக்கும். உண்மை எது என்று அறியவிடாமல் தடுக்கும். புத்தி தடுமாறச் செய்யும். தவறான முடிவுகளை எடுக்கச் செய்யும். தானே ஏதோ கற்பனை பண்ணிக் கொண்டு தவிக்கும். தூக்கம் போக்கும். உடல் நலத்தைக் கெடுக்கும்.

கோபத்தை தவிர்க்க வேண்டும்.

கோபத்தில் ஏதேதோ செய்து விட்டு, சொல்லி விட்டு வாழ் நாள் எல்லாம் வருந்துபவர் பலர்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.


என்பார் வள்ளுவர்.

சினம் என்பது தன்னை கொண்டவனை மட்டும் அல்ல, அவன் இனத்தையே சுடும் என்கிறார்.

இராமனைக் காண பரதன் வருகிறான். வரும் வழியில் பரத்துவாஜ முனிவரைக் காண்கிறான். அவர் எல்லோருக்கும் விருந்து அளிக்கிறார். எல்லோரும் நன்றாக உண்டார்கள் - பரதனைத் தவிர.

பின் அங்கிருந்து கிளம்பி இராமன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.

பரதனும் அவன் படைகளும் தூரத்தில் வருவதைக் கண்ட இலக்குவன், "ஆஹா, நாட்டை எடுத்துக் கொண்டது மட்டும் அல்ல, இராமனை கொல்லவும் இந்த பரதன் படையோடு வருகிறானே " என்று கோபம் கொள்கிறான்.


பாடல்

‘பரதன், இப் படை கொடு,
    பார் கொண்டான், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர்
    கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன்
    மேல், வந்தான்; இது
சரதம், மற்று இலது ‘எனத் ‘
    தழங்கு சீற்றத்தான்.

பொருள்


‘பரதன் = பரதன்

இப் படை கொடு = இந்த படைகளோடு

பார் கொண்டான் = உலகையே கொண்டவன். பார் கொண்ட பரதன் இந்த படையோடு வந்தான் என்று வாசிக்க வேண்டும் 

மறம் கருதி = போர் செய்யக் கருதி

உள் கிடந்தது ஓர் = மனதின் உள்ளே கிடந்த ஒரு

கறுவு = கோபம், மன வைராக்கியம்

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் என்பார் அருணகிரிநாதர்

கறுவு மிக்கு ஆவியை கலக்கும் அக் காலன் ஒத்து என்பது திருப்புகழ். நம் ஆவியை எப்படா கொண்டு போகலாம் என்று கறுவிக் கொண்டே இருப்பானாம் அந்த காலன்.

காதலால் = பேராசையால்

விரதம் உற்று இருந்தவன் = தவ விரதம் ஏற்று இருக்கும் இராமனை

மேல், வந்தான்; = சண்டை போட வந்திருக்கிறான்

இது சரதம் = இது உண்மை

மற்று இலது = வேறு எதுவும் இல்லை

எனத் தழங்கு சீற்றத்தான் = என்று முழக்கும் சீற்றம் கொண்ட இலக்குவன்


விசாரிக்கவில்லை. என்ன ஏது என்று தெரியாது. கண்டவுடன் கோபம் கொள்கிறான் இலக்குவன். 

பரதனை தவறாக நினைக்கிறான். 

கோபம் கண்ணை மறைக்கிறது. 

இலக்குவனுக்கே இந்த நிலை என்றால், நாம் எந்த மூலை .

வந்த கோபத்தில் என்னவெல்லாம் பேசுகிறான் தெரியுமா ?


Sunday, March 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை


தவறு ஏன் நிகழ்கிறது ?

எது சரி, எது தவறு என்று தெரியாததனால் தவறு நிகழ்கிறது. சிறு வயதில் புகை பிடிப்பது சரியா தவறா என்று தெரியாமல் , அதனால் வரும் பின் விளைவுகள் தெரியாமல் புகை பிடிக்கத் தொடங்கியோர் பலர்.

சில  சமயம்,தவறென்று தெரியும், செய்யக் கூடாது என்று தெரியும், இருந்தும் அதனால் வரும் சந்தோஷம், இன்பம், இவற்றினால் உந்தப் பட்டு தவறு நிகழ்ந்து விடுகிறது.

எனவே வாழ்வில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்  என்றால்,அற வழியில் நடக்க வேண்டும் என்றால் எது சரி , எது தவறு என்று  .தெரிய வேண்டும்.  தெரிந்த பின் அதில் இருந்து துளியும் விலகாமல் நடக்க வேண்டும். எவ்வளவு ஆதாயம் வந்தாலும் தவறான ஒன்றை செய்து விடக் கூடாது.

இராமனைத் தேடி கானகம் வருகிறான்  பரதன். வந்த இடத்தில் பரத்துவாஜ முனிவரை  காண்கிறான்.  முனிவர் கேட்கிறார் "என்ன பரதா , முடி சூட்டிக் கொள்ளவில்லையா " என்று.

கொதித்துப் போகிறான் பரதன்.

"முனிவனே நீ எனக்கு நல்லது சொல்லவில்லை. உன் தவ நெறிக்கு ஏற்ற மொழியும் நீ பேசவில்லை "

என்று முனிவரோடு கோபம் கொள்கிறான் பரதன்.

பாடல்

சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்;
‘உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!’ என்றான்

பொருள்

சினக் = கோபத்தால்

கொடுந் = கொடுமையான

திறல் = வலிமையுடன்

சீற்ற = சீறிக் கிளம்பும்

வெந் தீயினான் = தீபோல கிளம்பி (கோபம் தீ போல கிளம்பியது)

மனக் கடுப்பினன் = மனம் கொதித்து

மா தவத்து  = பெரிய தவத்தினால்

ஓங்கலை = உயர்ந்தவனே

‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்; = எனக்கு உகந்ததை சொல்லவில்லை நீ என்றான்

‘உனக்கு = உனக்கு

அடுப்பது = ஏற்புடையது

அன்றால் = அல்லாதவற்றை

உரவோய்!’ என்றான் = வலிமையானவனே. இங்கு உயர்ந்தவனே என்று கொள்ளலாம். உரவு என்ற அடிச்சொல்லில் இருந்து வந்தது தான் உரம்.


என்னே நீ முடிசூட்டிக் கொள்ளவியல்லையா என்று பரதனிடம் கேட்டவுடன், அவன் அந்த முனிவரைப் பார்த்துச் சொல்கிறான் "நீ எனக்கு தேவையானதையும் சொல்லவில்லை,  உனக்கு ஏற்புடையதையும் சொல்ல வில்லை " என்று.

தான் முடிசூடுவது தவறென்று அவனுக்குத் தெரிகிறது. அந்தத் தவறை யார் செய்யச் சொன்னாலும் அவன் செய்யத் தயாராக  இல்லை.

தயரதன் சொன்னான்.

கைகேயி சொன்னாள்.

அமைச்சர் சுமந்திரன் சொன்னான்.

குலகுரு வசிட்டர் சொன்னார்.

இப்போது பரத்துவாஜ முனிவர் சொல்கிறார்.

ம்ம்ஹும் ...பரதன் ஒரு இம்மி கூட அசையவில்லை.

அதுதான் பரதன். அறநெறியில் வாழ்வதற்கு ஒரு உதாரணம் என்றால் அது பரதன்தான்.

Friday, March 17, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை 


கங்கை கரை கடந்து, பரதன் இராமனைத் தேடி வருகிறான். பரதன் படையோடு வருவதை தூரத்தில் கண்ட இலக்குவன் கோபம்  கொள்கிறான்.பரதன் தங்கள் மேல் படை எடுத்து  வந்து விட்டான் என்று தவறாக எண்ணி சண்டைக்கு தயாராகுகிறான். பின் பரதன் வருகிறான். பரதன் இராமனை அரசை மீண்டும் ஏற்றுக்  கொள்ளும்படி கூறுகிறான். அவர்களுக்குள் வாதம் நடக்கிறது. இறுதியில் பரதன் இராமனின் பாதுகைகளை பெற்றுச் செல்கிறான்.

தெரிந்த கதைதான்.

இந்த திருவடி சூட்டுப் படலம் இராமாயணம் என்ற மகுடத்தில் ஒளி  ஒரு உயர்ந்த வைரம் போல ஜொலிக்கிறது. அவ்வளவு இனிமையான பாடல்கள். உணர்ச்சிகளின் தொகுப்பு.

உணர்வுகள் மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவு எவ்வளவு முக்கியமோ, உணர்ச்சிகளும் அவ்வளவு முக்கியம். ஆங்கிலத்தில் emotional intelligence என்று கூறுவார்கள்.

நம்முடைய உணர்ச்சிகள் என்ன, அவை சரியா ,  தவறா,அவற்றை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரிய வேண்டும்.

அநேக வீடுகளில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் இவர்களுடைய வரும் சிக்கல்களுக்கு காரணம் அன்பை சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது தான்.

அன்பு  இருக்கிறது.காதல் இருக்கிறது.  ஆனால் அதை சரியாக வெளிப்படுத்துவது  இல்லை.

கண் கலக்கினால் பலகீனம் என்று ஒரு எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அப்படி சொல்லியே ஆண் பிள்ளைகளை வளர்க்கிறோம். "என்ன இது பொம்பளைப் பிள்ளை மாதிரி அழுது கொண்டு " என்று ஆண் பிள்ளைகளை கேலி  செய்கிறோம்.

ஆண் பிள்ளைகள் அழாமல் அடக்கிக் கொள்ள பழகிக் கொள்கிறார்கள்.

அன்பு, காதல், பக்தி எல்லாம் கண்ணீரில் தான் வெளிப்  படும்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்கிறார்  வள்ளுவர்.

அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

காதலாகி கசிந்து கணீர் மல்கி என்பார் ஞானசம்பந்தர்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்பது அவர் வாக்கு.

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி என்பார் மணிவாசகர்மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே

என்பது திருவாசகம்.

கண்ணீர் என்பது  அன்பின், காதலின்,கருணையின், பக்தியின் வெளிப்பாடு. அழ முடியாத ஆண் மகனால் எப்படி காதலிக்க முடியும் ? அவன் காதலும் உள்ளேயே இறுகிப் போய் விடுகிறது.

மனம் இளக வேண்டும். நெகிழ வேண்டும். அன்பு வெளிப்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால் உறவுகள் பலப்படும். குடும்பம் சந்தோஷமாக  இருக்கும். சமுதாயமும், நாடும் அமைதியாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். இயற்கையின் மேல் பரிவு பிறக்கும். மண்ணில் சொர்கம்  தோன்றும்.


மிக பலம் பொருந்திய , அறிவாற்றல் மிக்க இராமன் அழுகிறான். புலம்புகிறான். மயங்கி விழுகிறான். ஆண் அழுவது தவறல்ல என்று கம்பன்  காட்டுகிறான்.அரசு போனபோது  அழவில்லை.கானகம் போ என்று சொன்ன போது அழவில்லை.  ஆனால், இங்கே அழுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.


உணர்ச்சிக்கு குவியல் ஒரு புறம் என்றால், அறிவார்ந்த சர்ச்சை இன்னொரு புறம், அறம் பற்றிய சிந்தனை இன்னொரு புறம், அண்ணன் தம்பி பாசம் இன்னொரு புறம்,  ஒன்றுக்கு ஒன்று முரணான ஆனால் அனைத்தும் சரியான வாதம்  என்றாலும் எதை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலுக்கு விடை காணும் முறை இன்னொரு புறம் என்று இந்த படலம் மனித வாழ்வின் அத்தனை கோணங்களையும்  படம் பிடிக்கிறது.

எது வென்றது ?

அறிவா ? உணர்வா ? அறமா ? என்று தெரியவில்லை. இந்தப் படலத்தை படித்து  முடிக்கும் போது , இது போன்ற சர்ச்சைகள் தேவையில்லாமல் போய் விடுகிறது.

வாழ்க்கை என்பது  ஒரு கட்டுக்குள் அடங்காத ஒன்று. வரையறுக்க முடியாத ஒன்று. அது அதுபாட்டுக்குப் போகிறது. வாழ்வது ஒன்றுதான் நிகழ்கிறது.

அற்புதமான படலம்.


வாருங்கள் . அத்தனையையும்  சுவைப்போம்.

திருவடி சூட்டுப் படலம்.

Wednesday, March 15, 2017

திருக்குறள் - கல்லாதான் சொல் காமுறுதல்

திருக்குறள் - கல்லாதான் சொல் காமுறுதல் 


கல்வி அறிவு இல்லாதவன் ,  பேச (அவையில்) நினைப்பது முலை இரண்டும் இல்லாத பெண் காமம்/காதல் கொண்டது போல என்கிறார் வள்ளுவர்

பாடல்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்

கல்லாதான் = கல்வி அறிவு இல்லாதவன்

சொற்கா முறுதல் = சொல் காமுறுதல் , சொல்ல நினைத்தல்

முலையிரண்டும் = முலை இரண்டும்

இல்லாதாள் = இல்லாத

பெண்காமுற் றற்று. = பெண் காமம் அடைந்தது போல

என்ன இது வள்ளுவர் இப்படி ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறதா ? ஒரு பெண்ணின் அங்கங்களை கூறி , பால் உணர்வு சார்ந்து பாடல் உள்ளது போல தோன்றுகிறது அல்லவா ?

மார்பகங்கள் பெரியதாக அழகாக இல்லாத பெண்கள் காதல் வயப்படக் கூடாதா ? அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ?

காதலுக்கு உடல்தான் முக்கியமா ? அதுவும் குறிப்பாக பெண்ணின் மார்பகமா முக்கியம் ?  வள்ளுவர் இப்படி பாடல் எழுதுவாரா ?

வள்ளுவர் கூற வந்ததே வேற.

ஒரு பெண்ணுக்கு காதல் வருகிறது. ஒரு ஆணை காதலித்து மணம் புரிந்து கொள்கிறாள். அவளுக்கு பெரிய மார்பு இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அவளுடைய கணவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் குணத்தில் தங்கம். அறிவு, பண்பாடு, வீட்டை பராமரிப்பதில் எல்லாம்  சிறந்து விளங்குகிறாள்.

இல்லறம் இனிதே நடக்கிறது.

நாளடைவில் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

குழந்தை பசித்து அழுகிறது. குழந்தைக்கு பால் தர வேண்டும்.  அவள் எப்படி அந்த குழந்தையின் பசியை போக்குவாள் ? அவளுக்கு அது எவ்வளவு வருத்தமாய் இருக்கும். குழந்தை பசித்து அழுகிறது. தன்னால் அந்த குழந்தைக்கு தாய் பால் தர முடியவில்லையே என்று தவிப்பாள் அல்லவா ? தாய்ப்பால் புகட்டிய பெண்களுக்குத்தான் அந்த சுகமும், வலியும் , தாய்மையின் பூர்ணமும் தெரியும்.

அவளிடம் ஆயிரம் சிறந்த குணங்கள் இருக்கலாம். மற்ற அழகு எல்லாம் இருக்கலாம். அவள் ஒரு பெண்ணாகபூர்ணம் அடைவது தாய்மையில்தான்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

தந்தைக்கு அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.

உதிரத்தை பாலாக்கி , அன்பைக் கலந்து தரும் அந்த மகோன்னதம் ஒரு தாயால்தான் மட்டும்தான் முடியும்.

அது முடியாத பெண் எவ்வளவு வருந்துவாள் , அது போல கல்வி அறிவு இல்லாதவன் கற்றறிந்தோர் சபையில் பேச நினைத்தால் அவ்வளவு வருந்துவான் என்கிறார்.

இந்த அர்த்தம் சரிதானா என்று வாசிப்பவர்களுக்குத் தோன்றும். இது சரி தான் என்று நிரூபிக்க முடியும்.


சிறு குழந்தைக்கு பல் கிடையாது. அதற்கு உணவை கடித்து உண்ண முடியாது.

அதன் செரிமான குழாய்கள் நன்றாக வளர்ந்து இருக்காது. திட உணவு எளிதாக அதில் செல்ல முடியாது.

அதன் ஜீரண உறுப்புகள் முழுதும் வளர்ச்சி பெற்றிருக்காது. அதனால் கடின உணவை ஜீரணம் செய்ய முடியாது.

தாய் என்ன செய்கிறாள், உணவை தான் உண்டு, செரித்து, அதை இரத்தமாக்கி, அதை பாலாக்கி , அதில் குழந்தைக்கு வேண்டிய சத்து மட்டும் நோய்  எதிர்ப்பு பொருள்களை கலந்து குழந்தை எளிமையாக ஜீரணம் பண்ணும் வகையில் பாலாக, திரவ வடிவில் தருகிறாள்.

குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால், தான் பத்தியம் இருக்கிறாள்.

குழந்தைக்கு எப்போது தர வேண்டும் (நினைந்து ஊட்டும்), எவ்வளவு தர வேண்டும் என்று அறிந்து தருகிறாள்.

அது போல, ஒரு படித்தவன் , பல நூல்களை படித்து, உள்வாங்கி, ஒன்றோடு ஒன்று  இணைத்து, கடின பதங்களை எளிமையாக்கி, கேட்பவர் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம்  பேச வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு தர வேண்டும், எப்போது தரவேண்டும் என்று அறிந்து தரவேண்டும்.

அதனால் தான் கல்வி அறிவு உள்ளவனை தாய்க்கு உதாரணமாக கூறினார்.

ஒரு தடவை பால் தந்து விட்டாள் போதாது. குழந்தை பெரிதாக வளரும் வரை தாய் தன் பாலை தந்து கொண்டே இருப்பாள். அதற்காக அவள் மேலும் மேலும் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு சொல்லுபவனும் அது போல படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளும் புதிய செய்திகளை கொண்டு தர வேண்டும்.

தாய் எப்படி உணவை தான் ஜீரணம் செய்து பிள்ளைக்கு அதை பால் வடிவில் தருகிறாளோ அது போல பேச நினைப்பவன் புத்தகங்களை மேற் கோள் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. படித்து, உள்வாங்கி, அவனுடைய அறிவினால் படித்ததை எளிமையாக்கி , செறிவூட்டி தரவேண்டும்.

பால் புகட்டும் தாய் கண்டதையும் சாப்பிடக் கூடாது. மது, புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்த்து விடுவது குழந்தைக்கு நலம் பயக்கும். அது போல கற்று அறிந்தவன்  நல்ல விஷயங்களை மட்டும் படிக்க வேண்டும்.  கண்டதையும் படித்து  தன் அறிவையும், மனதையும் குழைப்பிக் கொள்ளக் கூடாது.

தாய் தன் பிள்ளைக்கு வேளா வேளைக்கு பால் தருவாள். ஆனால் குழந்தைக்கு ஜீரணக் கோளாறு இருந்தால், சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் மேலும் மேலும் பால் புகட்ட மாட்டாள். முதலில் தந்தது உள்ளே சென்று ஜீரணமானதை அறிந்த பின் தான் அடுத்த முறை பால் தருவாள் தாய்.

அது போல , ஒரு மாணவனோ அல்லது கேட்பவனோ ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்த பின்பே அடுத்த விஷயத்தை சொல்ல வேண்டும். நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போகிறேன், நீ புரிந்து கொண்டால் சரி, இல்லை என்றால் அது என் பாடு இல்லை என்று இருக்கக் கூடாது.

முலை இரண்டும் இல்லாதாள் காமுறுதல் என்பதற்கு பின்னால் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

இன்னும் சிந்தித்தால் மேலும் பல பொருள் விரியும்.

ஒரு குறளின் பின்னால் இவ்வளவு இருக்கும் என்றால், 1330 குறள் இருக்கிறது. ஒரு வாழ்நாள் போதாது.

மூல நூலை படியுங்கள். 

Sunday, March 12, 2017

திருவாசகம் - ஊர் நாய்

திருவாசகம் - ஊர் நாய் 


தெருவிலே சில நாய்கள் திரியும். பார்த்து இருப்பீர்கள். stray dogs என்று சொல்லுவார்கள்.

அது காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மிக சுறு சுறுப்பாக இருக்கும்.


ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு ஓடும். அங்கே உள்ள மற்ற நாய்களை பார்த்து குலைக்கும். பின் வேறொரு தெருவுக்கு ஓடும். அங்கே உள்ள உணவைத் தின்னும்.  தெருவில் செல்லும் வாகனங்களை துரத்தும்.  பயந்த மாதிரி யாராவது வந்தால் , அவர்களை குலைத்து விரட்டும். யாராவது கல்லை எடுத்தால் வாலை சுருட்டிக் கொண்டு பம்மி ஓடும்.

இப்படி நாள் எல்லாம் அலைந்த பின் , தளர்ந்து போகும் . சரி இவ்வளவு அலைந்தாயே நாயே, நீ உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. ஆனால், ஓட்டத்துக்கும், அலைச்சலுக்கும் ஒரு குறைவும் இல்லை.

அந்த நாய்க்கு உடையவன் என்று யாரும் கிடையாது. அது பாட்டுக்குத் திரியும். அலையும். அடி வாங்கும். கடிக்கும். கண்ட இடத்தில் சாப்பிடும், கண்ட இடத்தில் தூங்கும்.

என்ன ஒரு வாழ்க்கை.


அந்த நாயைப் பார்த்தால் பாவமாகவும், கேவலமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது அல்லவா.

சற்று நம்மை பற்றி யோசிப்போம்.

வேலை வேண்டும் என்று அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே ஓடுகிறோம்.  அந்த முதலாளி, இந்த முதலாளி என்று யார் சொன்னாலும் கேட்கிறோம். மேலே உள்ளவன் சொன்னால் வாலை ஆட்டிக் கொண்டு பணிந்து போகிறோம். கீழே உள்ளவனை, வீட்டில் வேலை செய்பவர்களை அதட்டுகிறோம். அங்கே கல்யாணம், இங்கே பிறந்த நாள் விழா என்று ஓடுகிறோம்.

சரி, எல்லாம் முடிந்து , ஆடி ஓடி மரணப் படுக்கியில் இருப்பவனிடம் நீ என்ன சாதித்தாய்  என்று கேட்டால் , கண்ணீர் தான் மிஞ்சும். என்னென்னெவோ செய்ய நினைத்தேன். ஒன்றும் செய்யவில்லை.  இன்னும் சொல்லப் போனால் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாகக் கூட வாழ வில்லை என்ற ஏக்கமே அவனிடம் நிறைந்து இருக்கும்.

பெரிய வித்தியாசம் இருக்கிறதா ?

ஊர் நாய் போல ஆகி விட்டேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

"என்னை உடையவனே, உன்னை நினைத்து, வரும் பெரும் காதலால் உன் தொண்டர்கள் உன் திருவடி அடையக் கண்டும், ஊர் நாயை விட கேவலமான நான் இந்த உடலை பேணிக் கொண்டு இங்கே இருக்கட்டும் என்று என்னை விட்டு விட்டாயே " என்று மருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.

பாடல்

உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.


சீர் பிரித்த பின்

உடையானே நின்தனை உள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங்கு ஊர் நாயில் 
கடையானேன் நெஞ்சு உருகாதேன்  கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக் கூடி இது காத்து இங்கு இருப்பதாக  முடித்தாயே.

பொருள்


உடையானே = என்னை உடையவனே

நின்தனை = உன்னை

உள்கி  = மனதில் நினைத்து

உள்ளம் உருகும் = மனம் உருகும்

பெருங்காதல் = பெரிய காதல்

உடையார் = உடையவர்கள், உன் அடியார்கள்

உடையாய் = உடையவனே

நின்பாதம் = உன் திருவடிகளை

சேரக் கண்டிங்கு  = சேரக் கண்டு இங்கு

ஊர் நாயில் = ஊர் நாயை விட

கடையானேன் = கீழான நான்

நெஞ்சு உருகாதேன் = மனம் உருக மாட்டேன்

கல்லா மனத்தேன் = கல் போன்ற கடின மனம் உடையவன்

கசியாதேன் = மனம் கசிய மாட்டேன்

முடையார் = முடை நாற்றம் அடிக்கும் (புலால் நாற்றம்)

புழுக் கூடி இது = புழுக்கள் நிறைந்த கூடான இந்த உடலை

காத்து = காவல் பண்ணிக் கொண்டு

இங்கு இருப்பதாக = இங்கேயே இருக்கட்டும் என்றும்

முடித்தாயே = முடிவு செய்து விட்டாயே


"நெஞ்சு உருகாதேன்" ...நம் மனம் எப்போதும் இரும்பு போல இறுகி கிடக்கிறது. மனம் உருக வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரிநாதர் 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

நெஞ்சம் உருகும் அன்பு படைத்தனை என்பார் அபிராமி பட்டர் உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

என்பது அபிராமி அந்தாதி 


உள்ளம் உருகி வரும் பெரும் காதலால் அடியவர்கள் அவனை அடைந்தார்கள். ஊர் நாய் போல குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால் அவனை அடைய முடியாது.


Thursday, March 9, 2017

திருக்குறள் - ஈன்ற பொழுதினும்

திருக்குறள் - ஈன்ற பொழுதினும் 


திருக்குறள் போன்ற நூல்களை படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

பாடல்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் 

பொருள்

ஈன்ற பொழுதிற் = பிள்ளையை பெற்ற நேரத்தை விட

பெரிதுவக்கும் = மிகவும் மகிழும்

தன்மகனைச் = தன் மகனை

சான்றோன்= சான்றோன்

எனக்கேட்ட தாய் = என கேள்விப் பட்ட தாய்

பிள்ளையை பெற்ற போது மகிழ்ததை விட அவன் சான்றோன் என்று மற்றவர்கள் கேட்ட பொழுது தாய் மிக மகிழுவாள்.

இந்த குறள் பற்றி ஏற்கனவே மிக விரிவாக முன்பு எழுதி இருந்தேன். அதை கீழே தந்திருக்கிறேன். படிக்க விட்டுப் போனாலோ அல்லது படித்தது மறந்து போயிருந்தாலோ இன்னொரு முறை படித்து மகிழலாம்.

இந்த குறளை மீண்டும் எடுத்ததற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.


பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உள்ள உறவு அவ்வளவு சிறப்பாக இருப்பது இல்லை. காரணம் என்ன என்று இருவருக்குமே தெரியாது. அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கித் தருகிறேன், சினிமா, டிராமா என்று கூட்டிப் போகிறேன். போன வருடம் கூட அவளுக்கு ஓர் வைர அட்டிகை வாங்கித் தந்தேன். என்ன செய்தாலும் ஒரு திருப்தியோ சந்தோஷமோ கிடையாது என்பது பெரும்பாலான கணவர்களின் குற்றச் சாட்டு.

பெண்களுக்கும் தெரியும்...கணவன் தனக்காக, இந்த குடும்பத்துக்காக எவ்வளவு பாடு படுகிறான் என்று. இருந்தும் ஏதோ ஒன்று குறை மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். என்ன என்று கேட்டால் சொல்லத் தெரியாது.

வள்ளுவர் சொல்லுகிறார்.

பெண்களுக்கு எதையும் காதால் கேட்டால் தான் திருப்தி.

"சான்றோன் என கேட்ட தாய் " என்கிறார் வள்ளுவர்.

ஏன் ? மகன் சான்றோன் என்று பார்த்தால் தெரியாதா ? தெரியும். இருந்தாலும், அதை நாலு பேர் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவளுக்குத் மகிழ்ச்சி.

மனைவி ஒரு காப்பி போட்டு கொடுத்தால், ஒரு தோசை வாரத்துக்கு கொடுத்தால் , நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். காப்பி போடுவது என்ன பெரிய கம்ப சித்திரமா, அதுக்கு ஒரு பாராட்டா என்று கேட்காமல், "இன்னிக்கு என்ன பண்ண...காப்பி நல்லா இருக்கே " என்று சொல்லிப் பாருங்கள். அவள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை. நல்லா இல்லாட்டிதான் சொல்லுவோம்ல. ஒண்ணும் சொல்லலேன்னா நல்லா இருக்குன்னுதான் அர்த்தம் என்பது ஆண்களின் வாதம். அதை வாயை திறந்து சொன்னால் என்ன என்பது பெண்களின் ஆதங்கம்.


ஒண்ணும் இல்லா விட்டாலும், இந்த சேலையில நீ அழகாத்தாண்டி இருக்க என்று சொல்லி வையுங்கள். வெட்கத்தில் கன்னம் சிவப்பதை காணலாம்.

உன்னை போல அழகி கிடையாது, எனக்கு நீ தான் உலக அழகி,  சமையலில் உன் கை பக்குவமே ஒரு ருசி, நீ இரண்டு நாள் இல்லாட்டி வீடு என்னமோ போல இருக்கு என்று சொல்லிப் பாருங்கள், தாம்பத்யம் சிறக்கும்.

பெண்களுக்கு கணவன் மேல் ஒரு சின்ன சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆண் என்னத்தான் நேரத்துக்கு வீட்டுக்கு வந்தாலும், அந்த சந்தேகம் போகாது.  சந்தேகம் எப்ப போகும் என்றால், அவளை பத்தி நாலு வார்த்தை சொல்ல வேண்டும்.

ஆண்களுக்கு கேட்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் பார்த்தே அறிந்து கொள்வார்கள். பெண்களுக்கு எதையும் கேட்க வேண்டும்.

இலட்சம் ரூபாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதை விட, நாலு வார்த்தை பாராட்டி சொன்னால் அவர்கள் மனம் மகிழும்.

"நான் சம்பாதிக்கிறது எல்லாம் என் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் தானே...இதுக்கு மேல நான் என்ன செய்யணும்னு எதிர் பார்குறா " என்று சலித்து கொள்ளும் ஆண்களுக்கு வள்ளுவர் தரும் அறிவுரை, பெண்களுக்கு வேண்டியது பணம் அல்ல. ஏழை வீட்டு பெண்கள் சந்தோஷமாக இல்லையா ?  அவர்களுக்கு வேண்டியது அன்பான, ஆதரவான, வார்த்தைகள், நாலு பாராட்டு வார்த்தைகள்.

"பாவம் நீ உழைச்சு ஓடா தேயுற...என்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்ட  " என்று சொல்லிப் பாருங்கள்....அவள் மனம் உருகும்.

இராமன் கானகம் போன போது  சீதையும் கிளம்பி விட்டாள் . அவளுக்கு வேண்டியது செல்வம், பணம், அரசு, ஆள், அதிகாரம் அல்ல. கணவனின் பாராட்டு, அன்பான வார்த்தை. அதற்காக ஆயிரம் துன்பங்களை அவள் சுமப்பாள் , மகிழ்ச்சியோடு.

அவளோடு பேசுங்கள். டீவியை அணைத்து விட்டு அவளோடு பேசுங்கள். அவளுக்கு கேட்க வேண்டும். அவ்வளவுதான்.

செய்து பாருங்கள்.

வள்ளுவர் எந்த அளவுக்கு பெண்ணை புரிந்து வைத்திருக்கிறார் என்று தெரியும்.

பெரிய மனோதத்துவ இரகசியம் சொல்லித் தருகிறார்.

இது சரிதானா என்று இதை வாசிக்கும் பெண் வாசகிகள் சொன்னால் நன்றாக இருக்கும்.


======================================================================
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? இது எல்லோருக்கும் தெரிந்தது தான். தன் பிள்ளை பெரிய ஆளாகி விட்டான் என்றால் எல்லா  தாயும் மகிழ்ச்சி கொள்வது இயற்கை தானே. இதைச் சொல்ல ஒரு வள்ளுவர்   வேண்டுமா ? என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம். ஒவ்வொரு வார்த்தையாக சிந்திப்போம்.

ஈன்ற - ஏன் ஈன்ற என்ற சொல்லை போட்டார் ? பெற்ற பொழுதின் என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஈதல் என்றால் கொடுத்தல். பெறுதல் என்றால்  பெற்றுக் கொள்ளுதல். ஒரு தாய் மகனை தருகிறாள். யாருக்குத் தருகிறாள் ? அவளுடைய குடும்பத்துக்கு, அவன்  வாழும் சமுதாயத்துக்கு, அவன் வாழும் நாட்டுக்குத் தருகிறாள்.  தருகிறாள் என்றால் ஏதோ விலைக்கு தருவது இல்லை. ஈதல் என்றால் கொடையாகத் தருதல் என்று பொருள். பெரிய செல்வந்தர்கள்  தங்கள் சொத்தில் கொஞ்சத்தை நன்கொடையாக தருவது ஈதல்.

தாய் ஒரு மகனைப் பெறுவது சுயநலத்தால் அல்ல. அவனால் வீடும், நாடும்  சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தால். அவள் அவ்வளவு துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு , இந்த நாடும், மனித குலமும் சிறக்க  ஒரு மகனைப் பெற்றுத் தருகிறார்கள்.

உலகத்தில் உள்ள அத்தனை பெரியோர்களையும் பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே ?

ஒரு இராம கிருஷ்ண பரம ஹம்சரை, ஒரு நியூட்டனை, ஒரு வள்ளுவரை, ஒரு கம்பரை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசனை, காந்தியை , மாணிக்க வாசகரை என்று அத்தனை பெரியவர்களையும்  பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே. அவள் தந்த கொடை தானே. அவள் வலி பொறுக்காமல் இருந்திருந்தால், நமக்கு  அவர்கள்  கிடைத்து இருப்பார்களா ?

எனவே "ஈன்ற" என்ற சொல்லை போடுகிறார் வள்ளுவர். ஒவ்வொரு தாயும்   இந்த உலகுக்கு ஒரு கொடையாளி தான்.

பிள்ளை பெற்றாள் என்று சொல்லக் கூடாது. பிள்ளை ஈன்றாள் என்று சொல்ல  வேண்டும்.

பொழுது  - ஒரு பிள்ளை பிறந்து, தவழ்ந்து, பேசி, பள்ளிக்கூடம் போய் , இப்படி அவன் செய்யும் ஒவ்வொவரு செயலும் தாய்க்கு மகிழ்ச்சி  தருவது தான் . இருந்தாலும், ஏன், அந்த ஈன்ற பொழுதை மட்டும்  வள்ளுவர் குறிப்பாகச் சொல்கிறார் ? மற்றைய பொழுதுகள்  சிறந்தவை இல்லையா ?

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பிள்ளை பிறக்கும் அந்த கணம் வரை அவள் தாய் அல்ல. அவள் மகளாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கலாம். தாய் என்ற  நிலை பிள்ளை பெறும் அந்த கணத்தில் நிகழ்வது. அது மட்டும் அல்ல,  மற்ற அனைத்து நிலைகளும் அவளால் நிகழ்ந்தவை அல்ல.  அவள் யாருக்கோ மகளாகப் பிறந்தாள், சகோதரியாக ஆனால்,  வாழ்க்கைப் பட்டு மனைவியானாள். அவளுடைய செயல் இதில்  மிகக் குறைவு.

ஆனால் , தாய் என்ற ஒரு நிலைக்கு வர, முழுக்க முழுக்க அவள் செய்த அர்பணிப்புகள்  ஏராளம்.

தூக்கம் போகும், பசி போகும், உணவை கண்டால் குமட்டும், சாம்பல், மாங்காய் போன்ற சுவை அற்ற உணவு பிடிக்கும், தலை சுத்தும், வாந்தி வரும்...இப்படி எத்தனையோ துன்பங்களை தாங்கி அவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள்.  ஈனுகிறாள்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஒரு தலைவலி, பல் வலி, கண் வலி என்றால்  அந்த அவயம் மட்டுமே வலிக்கும். பிள்ளை பேறு என்றால் உடம்பில் அத்தனை அவயங்களும் வலிக்கும்.

"அங்கமெல்லாம் நொந்து" என்பார் பட்டினத்தார். அத்தனை அங்கமும்  வலிக்கும்.

எனவே, அந்த ஒரு கணம் பிள்ளை மட்டும் தோன்றவில்லை. ஒரு தாயும்  தோன்றுகிறாள். மனைவி என்று இருந்தவள், தாயாக மாறும் தருணம்  அந்த பொழுது. எனவே அதை சிறப்பித்துக் கூறுகிறார்.

இன் : ஈன்ற பொழு தின்  என்று ஒரு "இன்' என்ற வார்த்தையைப் போடுகிறார்.  போடாவிட்டால் குறள் எப்படி இருக்கும் ?

ஈன்ற பொழுது பெரிது உனக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று அமையும்.

அதாவது, மகன் சான்றோன் என்று ஆகி விட்டால், அவன் பிறந்த அந்த நேரத்தை எண்ணி பெரிதும் மகிழுவாள் என்று அர்த்தம் ஆகும். அப்படி என்றால், வேறு எந்த நேரத்தை நினைத்தும் மகிழ மாட்டாள் என்று ஆகும்.

இன் அந்த வார்த்தையால், பொழுதினும் என்று அமைகிறது. மற்ற பொழுதும் மகிழ்தாள் . மற்ற எல்லா நேரங்களை விடவும் ஈன்ற பொழுதில் மகிழ்ந்தாள். ஆனால், சான்றோன் எனக் கேட்ட போது , ஈன்ற பொழுதை விட மிக  மகிழ்ந்தாள் என்று ஆகிறது. இன் என்ற ஒரு வார்த்தை  செய்யும் மாயம்.

பெரிது - என்ற இந்த வார்த்தை இல்லாவிட்டால் என்ன ஆகும் ? ஈன்ற பொழுதின் உவக்கும் என்று இருக்கும். அப்படி என்றால் மகனின் வாழ்வில் இரண்டே இரண்டு மகிழ்ச்சியான தருணங்கள் தான் இருக்க முடியும். பிறந்த பொழுது, சான்றோன் என்று கேட்ட பொழுது. பெரிது என்ற வார்த்தையால், மற்ற நிகழ்வுகளும் உண்டு, அதை விட  பெரிய நிகழ்வு ஈன்ற பொழுது என்று ஆகும்.

உவக்கும் - உவக்கும் என்ற சொல்லுக்கு அளவற்ற மகிழ்ச்சி என்று பொருள்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

என்பார் தொல்காப்பியர்.

கட்டற்ற மகிழ்ச்சி. அன்பு கலந்த மகிழ்ச்சி.

தன் மகனை - அது என்ன தன் மகனை ? வெறுமனே மகனை என்று சொல்லி இருந்தால் போதாதா ?

அவன் சான்றோனாகும் போதுதான் அவனை தன் மகன் என்று ஒரு தாய் நினைப்பாள். பெருமை படுவாள். ஒருவன் களவாணியாக, காமுகனாக,  பித்தலாட்டம் செய்பவனாக, தீவிர வாதியாக இருந்தால், அவனை தன்னுடைய மகன் என்று சொல்ல ஒரு தாய்  வெட்கப் படுவாள். சொல்லாமல் இருப்பதே நலம் என்று நினைப்பாள். தன்னால், தான் பெட்ற மகனால் இப்படி ஒரு கேடு வந்து விட்டதே என்று  நினைத்து வருந்துவாள் . இப்படி ஒரு பிள்ளையை பெறாமலேயே  இருந்திருக்கலாம் என்று நினைப்பாள் அல்லவா ? தான் ஒரு மலடியாகவே இருந்து விட்டுப் போய்  இருக்கலாம், இப்படி ஒரு பிள்ளையை பெற்றதை விட என்று ஒரு தாய்  நினைப்பது இயல்பு தானே.

எனவே தான், "தன் மகனை " என்றார்.

"மகனை" - அது என்ன மகனுக்கு மட்டும் தான் சிறப்பா ? மகள் என்றால் இல்லையா ? மகள் என்பவள் அவளுடைய இளமையான வயதில் திருமணம் முடித்து இன்னொரு வீட்டுக்குப் போய்  விடுவாள். அதற்குப் பின் , அவளுடைய சாதனைகள் புகுந்த வீட்டைப் பொறுத்தே அமையும் . அவள் பிறந்த வீட்டார் பங்கு அதில் அதிகம் இருக்காது. ஆனால், மகன் என்பவன் தாயின் இறுதிக் காலம் வரை  அவளுடனேயே இருப்பவன். எனவே, மகன் என்றார்.

"சான்றோன்" ஒருவரை புகழ வேண்டும் என்றால் , அவரை சான்றோன் என்று சொன்னால் போதும். அதற்கு மேல் ஒரு உயர்ந்த வார்த்தை கிடையாது. சான்றோன் என்பவன் யார் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை

என்ற இந்த ஐந்து குணங்களும் நிறைந்தவனே சான்றோன் ஆவான்.  அதிலும், முதலில் அன்பைச் சொன்னார் வள்ளுவர்.

"கேட்ட தாய்" ...தன் மகன் பெரிய ஆள் என்று எல்லா தாய்க்கும் ஒரு அபிப்ராயம் உண்டு. அப்படி மற்ற தாய்மார்களும் நினைப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அவன் உண்மையிலேயே சான்றோன் தானா , அல்லது தனது தாய்மை என்ற அன்பினால் அப்படி தோன்றுகிறதா  என்ற அவளுக்குத் தெரியாது. எனவே, மற்றவர்கள்  உன் மகன் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் மகிழ்வாள் என்றார்.

அது மட்டும் அல்ல, ஒரு மகன் எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும், தாய்க்கு அவன் சின்ன பிள்ளை தான்...நல்லா சாப்பிடு, பார்த்து சாலையை கட என்று அவனுக்கு சின்ன பிள்ளைக்கு சொல்லுவதைப் போல  சொல்லுவாள். அது தாய்மையின் குணம். அவன்  பெரிய ஆள் என்பதெல்லாம் ஊருக்கு. அவளை பொறுத்தவரை  அவன் சிறு பிள்ளை தான். எனவே, மற்றவர்கள் சொல்லும்போது  அவளுக்கு  மகிழ்ச்சி உண்டாகிறது.

மேலும், ஒரு மகன் தானே சான்றோன் ஆகி விட முடியாது. "அவையத்து முந்தி இருப்பச் செயல்" தந்தையின் கடமை. எனவே, மகன் சான்றோன் என்றால், கணவன் தன் கடமையை சரி வர செய்திருக்கிறான் என்று பொருள். அவன் அப்படி செய்ய வாழ்க்கை துணைவியான  தானும் உறுதுணையாக இருந்திருக்கோம் என்று அவள் நினைப்பாள். ஒரு பெற்றோராக தங்களது கடைமையை தாங்கள்  ஒழுங்காக செய்து விட்டோம் என்று மகிழ்வாள்.

ஒரு குறளுக்கு இவ்வளவு அர்த்தம், ஆழம். இப்படி 1330 குறள்.

சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் அர்த்தம்.

நம் முன்னவர்கள் நமக்காக தேடி சேர்த்து வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

Tuesday, March 7, 2017

திருக்குறள் - பெண்

திருக்குறள் - பெண் 


பெண்ணிற்கு  மிகப் பெரிய பொறுப்பை தருகிறார் வள்ளுவர். பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார்.

பெண் என்பவள் யார் என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார்.


பாடல்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பொருள்

தற்காத்துத் = தன்னைக் காத்துக் கொண்டு

தற்கொண்டாற் = தன்னைக் கொண்டவனை

பேணித் = போற்றி பாதுகாத்து

தகைசான்ற =  பெருமைக்குரிய

சொற்காத்துச் - சொல்லினை காத்து

சோர்விலாள் = சோர்வு அடையாமல் இருப்பவள்

பெண் = பெண்

அதாவது தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காத்துக் கொண்டு, அவர்களின் குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்பவளே பெண்.

இன்றைய பெண் இன வாதிகள், அது எப்படி வள்ளுவர் பெண்ணை , கணவன் கொண்ட ஒன்று என்று சொல்லலாம் என்று வாதிப்பார்கள். பெண் என்பவள் கணவனின்  உடமையா ? அவளுக்கு என்று தனி அந்தஸ்து கிடையாதா என்று  கேட்கலாம்.

அவர்களின் வாதம் ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

பெண் எவ்வளவு பெரியவள் என்று வள்ளுவர் மதித்திருந்தால் , அவளால் என்னவெல்லாம் முடியும் என்று வள்ளுவர் நினைத்திருந்தால் இப்படி ஒரு பெரிய பொறுப்பை அவளுக்கு தந்திருப்பார் ?

அப்படி என்ன பெரிய பொறுப்பை தந்து விட்டார் ?


தற்காத்து - முதலில் பெண் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவு, உடை, மருத்துவம், கல்வி , உடற்பயிற்சி என்று அனைத்து விதங்களிலும்  ஒரு பெண் தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். பெண் வலிமை குன்றி படுத்து விட்டால், வீடு படுத்து விடும். பெண்ணை சுற்றியே வீடு சுழல்கிறது. எல்லோரையும் பார்க்கிறேன் என்று அவள் தன்னை பார்க்காமல்  இருந்துவிடக் கூடாது.  சாப்பிடக் கூட நேரம் இல்லை, மருத்துவரிடம் போகணும், போகணும் என்று நினைக்கிறேன், எங்க நேரம் இருக்கு இருக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. அதுவும் இந்த காலத்தில் பெண்கள் வேலைக்குப் போக தொடங்கிய பின், அவர்களுக்கு நேரமே கிடைப்பது இல்லை.

நாம் ஆகாய விமானத்தில் செல்லும் போது , அங்குள்ள பணிப்பெண் சொல்லுவாள் , "விமானத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்தால், முகத்தில்  பொருத்திக் கொள்ள முக மூடி மேலே இருந்து வரும். முதலில் உங்கள் முகத்தில் பொருத்திக் கொண்டு பின், அருகில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் " என்று.

நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

பெண் முதலில் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்கள், தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது இல்லை. வயசான இப்படித்தான் இருக்கும் என்று ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். அல்லது , கணவனோ மகனோ அழைத்துக் கொண்டு போனால்தான்  மருத்துவமனைக்கு போவார்கள். அப்படி இருக்கக் கூடாது.

அவள் தன்னைத் தானே முதலில் காத்துக் கொள்ள வேண்டும்.

"தற்கொண்டான் பேணி" - கணவனை பேண வேண்டும். அவனை பாதுகாக்க வேண்டும். கணவனை இதில் இருந்து காக்க வேண்டும் ? கணவனின் உடல் நலம், மன நலம், அவன் புகழ் இவற்றை காக்க வேண்டும்.

ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவோம்.

பெண்ணின் நலனை காக்கும் பொறுப்பை ஆணிடம் தரவில்லை வள்ளுவர்.

பெண், தன்னைத் தானே காத்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவள் கணவனையும் காக்க வேண்டும் என்று சொல்லும் போது பெண்ணின் பொறுப்பு எவ்வளவு என்று வள்ளுவர் எடை போடுகிறார். அவளால் தான் இரண்டும் முடியும்.

கணவனின் உடல் நலம் - ஆரோக்கியம் அதை அவள் காக்க வேண்டும்.

அதை விட முக்கியம், அவனின் மன நலம். இன்று பாதி சிக்கல் மன நிலை சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது.  வேலைப் பளு, போட்டி, மற்றவரோடு தன்னை ஒப்பிட்டு  அதனால் வரும் சிக்கல் என்று பல மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன.

அதையும் விட முக்கியம், கணவனின் நல்ல பெயரை காக்க வேண்டும். "எங்க வீட்டு காரரா, அதுக்கு ஒண்ணும் தெரியாது " என்று மனைவியே கணவனை  மட்டமாக பேசக் கூடாது. கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், அவரை போல உண்டா என்று கூறி அவன் புகழ் காக்க வேண்டும்.

ஏன் ? பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கூடுதல் வேலைப் பளு ?

ஒரு பெண் தன் கணவனை மதிக்காமல் , அவனை ஏளனமாக பேசத் தலைப்பட்டால், அவளின் பிள்ளைகள் தந்தையை மதிக்காது. தகப்பன் சொல் கேளாத பிள்ளை, அப்பாவுக்கு பயப்படாத பிள்ளை , ஒழுக்கமாக வளர்வது கடினம். எதற்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளின் எதிர் காலம் கருதியாவது, அவள் கணவனின் புகழை காக்க வேண்டும்.


"தகைசான்ற சொற்காத்துச் "  - தகை என்றால் உயர்ந்த என்று பொருள். தகை சார்ந்த என்றால் உயர்வினை சார்ந்து நிற்கும். அப்படிப்பட்ட சொல் எது ?புகழ்ச்சி. அந்த புகழை காக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அந்த மதிப்பையும் மரியாதையும் காத்து உயர்த்த வேண்டியது ஒரு பெண்ணின் கடமை. ஒரு குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் ஒரு பெண்ணின் கையில் இருக்கிறது.

நண்பர்கள், சுற்றம் எல்லாம் ஒரு குடும்பத்தை மதிப்பது அந்த குடும்பத்தின் பெண்ணை வைத்துதான்.

ஒரு நண்பர் வந்திருக்கிறார். அவருக்கு ஒரு குவளை தண்ணீர் தர வேண்டும். அந்த வீட்டு பெண்மணி, அந்த குவளை நீரை "நங்" என்று வைத்தால், அந்த நண்பர் அந்த வீட்டு பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார். நட்பு அன்றோடு அறுந்து விடும்.

வீட்டின் பெருமை எப்போது காக்கப் படும் என்றால், வீட்டில் உள்ள அனைவரின் நலமும்  காக்கப்பட்டால் தான். ஒரு வீட்டில் , ஒரு குடும்பத்தில் ஒரு நபர் சரி இல்லை என்றாலும், மொத்த குடும்பத்தின் பெருமை சீர் கெட்டு விடும். "அந்த வீட்டுல எல்லாம் சரி தான், அந்த கடைசி பையன் மட்டும் கொஞ்சம் சரி இல்லை. ஏதோ தப்பு தண்டா பண்ணிட்டு இப்ப சிறையில்  இருக்கிறான் " என்றால் அந்த குடுபத்தின் பெருமை குலையத்தான் செய்யும்.

எனவே ஒரு பெண் என்பவள் தன்னையும், தன் கணவனையும் மட்டும் பார்த்துக் கொண்டால்  போதாது. அந்த மொத்த குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு அவளிடம் இருக்கிறது.

அப்படி என்றால், நாம் சிலவற்றை யோசிக்க வேண்டும்.

முதலாவது, ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மருமகள்கள் வருவார்களாயின்  அவர்கள் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்.

இரண்டாவது, ஒரு பெண் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்துகிறாள் என்றால் அவளுக்கு உரிய மரியாதையும், உதவியும் செய்யப் பட வேண்டும்.  அது அவ  வேலை என்று வீட்டில் உள்ளவர்கள் பொறுப்பற்று இருக்க முடியாது.  அவள் சொல்வதைக் கேட்டு, அவளுக்கு உரிய மரியாதை தந்து, அவளின் கடமைகளில் உதவி செய்ய வேண்டும்.

மூன்றாவது, ஒரு வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் கடமை இது. மாமியார், மருமகள், மகள், என்று அனைத்து பெண்களும் சேர்ந்து செய்ய வேண்டிய கடன் இது. ஒருவர்க்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் வீட்டின் பெருமை எங்கே சிறக்கும்.

"சோர்விலாள் பெண் "  இது ஏதோ நாள் கிழமைக்கு, கல்யாணம் போன்ற முக்கிய தினங்களில் செய்ய வேண்டிய ஒன்று அல்ல. நித்தம் நித்தம் செய்ய வேண்டியது. அப்படி செய்யும் போது நிறைய சிக்கல்கள் வரும். சவால்கள் வரும். நெருக்கடிகள் வரும். அவள் சோர்ந்து போய் விடக் கூடாது.

கணவன் கொஞ்சம் ஒரு மாதிரி இருப்பான். மாமியார் குணம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு புறம் இழுப்பார்கள். எக்கேடும் கேட்டு போங்கள் நேற்று விட்டு விடக் கூடாது. சலிக்காமல், சோர்வு இல்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

ஒரு பெண்ணின் திறமையின் மேல், அவளின் ஆற்றலின் மேல் நம்பிக்கை இருந்தால் வள்ளுவர் இத்தனை விஷயங்களை அவளிடம் இருந்து எதிர் பார்ப்பார்.

இது ஏதோ ஒரு சில படித்த பெண்களிடம் இருந்து மட்டும் அல்ல...எல்லா பெண்களுக்கும் சொன்னது இது.

அவர் காலத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும் அல்ல, இன்றும் நாளையும் வரும் பெண்களுக்கும் சொன்னது.

பெண்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்.

ஆண்கள், பெண்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும், உரிமையையும்,  உதவியையும் தர வேண்டும்.

இன்று வரும் டிவி சீரியல்கள் பெண்களை பற்றி எவ்வளவு கேவலமாக சித்தரிக்கின்றன. அவற்றை விடுத்து , திருக்குறளை படியுங்கள்.

பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு. வருங்காலத்தில் மனைவியை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். சொல்லிக் கொடுக்காமல் விட்டு விட்டோம்.

வீட்டில் உள்ள மாமியார்களுக்கும், நாத்தனார்களுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

வீடு சிறக்கும். அது ஒரு இனிமையான சோலையாக மாறும்.

மாற வாழ்த்துக்கள். 

Friday, March 3, 2017

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே


பாடல்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

பொருள்

மிக மிக எளிய பாடல். கடின பதங்களே கிடையாது. ஒவ்வொரு செயலையும் செய்வித்தால் யார் செய்யாமல் இருப்பார்கள் என்று கேட்கிறார்.

ஆட்டுவித்தால், அடக்கினால், ஓட்டினால், உருக வைத்தால், பாட வைத்தால், பணிய வைத்தால், காட்டினால்  அதை செய்யாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறார்.

சரி, இதில் என்ன இருக்கிறது ?

நாவுக்கரசர் சொல்கிறார் என்றால் அதில் ஏதாவது இல்லாமல் இருக்குமா ? சிந்திப்போம்.

மொத்த பாடலும் ஒரு உயிரின் ஆன்மீகப் பயணம். எங்கிருந்து ஆரம்பிக்கிறது. எங்கு முடிகிறது என்பதைச் சொல்லும் பாடல்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

ஆசையினால் உயிர்கள் அங்கும் இங்கும்  அலைகின்றன. அது வேண்டும், இது வேண்டும்  என்று நாளும் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆசைக்கு ஒரு அளவு இருக்கிறதா. ஒன்று கிடைத்தால் அடுத்ததை தேடுகிறது.  இறைவன் அனைத்தையும் படைத்தது வைத்திருக்கிறான். உயிர்கள் அது வேண்டும் , இது வேண்டும்  என்று அனைத்துக்கும் ஆசைப் பட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றன.  ஆட்டுவிப்பவன் அவன். உயிர்கள் ஆடுகின்றன. 

கூத்தாடுவானாகி என்கிறார் மணிவாசகர். 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

கூத்தாடுகிறான். கூத்தாட்டுகிறான்."அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே"

ஆசைகளின் பின்னால் போகும் உயிர்கள் அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணியே அவற்றின் பின்னால் போகின்றன. எல்லாமா கிடைத்து விடுகிறது. உடலில் வலு இருக்கும் வரை உயிர்கள் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றன. நாள் ஆக ஆக , தனது சக்தியின் எல்லையை உணர ஆரம்பிக்கின்றன.  முடியாது என்று சிலவற்றை உணர ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் அடங்குகின்றன.ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

ஓட்டம் இரண்டு வகையில் இருக்கும். ஒன்று வெளி நோக்கி ஓடுவது. இன்னொன்று, உள் நோக்கி ஓடுவது.  ஆசையினால், இன்பம் அனுபவிக்க வேண்டி உயிர்கள் வெளி நோக்கி ஓடுகின்றன. வீடு, கார் , நகை, சொத்து, சொந்தம் , பந்தம் என்று என்று ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் இந்த ஓட்டம் நிற்கும். நின்ற பின், எதற்கு இந்த ஓட்டம், எதை அடைய வேண்டி இந்த ஓட்டம், யாருக்காக இந்த ஓட்டம் என்று உயிர்கள் நினைக்கப் தலைப் படும். பின், நான் யார், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வாழ்வின் நோக்கம் என்ன என்று உயிர்கள் தன்னை நோக்கி உள்புறமாக சிந்திக்கத் தொடங்கும். வெளியில் ரொம்ப தூரம் ஓடி விட்டதால், தன் வசம் வர அவ்வளவு தூரம் உள்நோக்கியும் ஓடி வர வேண்டி இருக்கிறது.

நீ எந்த பக்கம் ஒட்டுகிறாயோ, அந்த பக்கம் ஓடுகிறேன். நான் புலன் இன்பங்கள் பின்னால் ஓடுவதை நிறுத்தி , என்னை அறிய என்னை நோக்கி ஓடி வர அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.


"உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே"

முதலில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று உயிர்கள் அலையும். எனக்கு கிடைக்க வேண்டும், அது எனக்கு உரியது  என்று உயிர்கள் சொந்தம் கொண்டாடும். எனக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும், எனக்கு அழகான பெண் வேண்டும், அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும் என்று உயிர்கள் தனக்குக் கிடைத்ததெல்லாம் ஏதோ அவை தமக்கு உரியன போலவும்,  மேலும் கிடைக்க வேண்டியது இருக்கிறது என்று அலையும்.

ஒரு காலகட்டத்தில், நமக்கு இவ்வளவு கிடைத்ததே, நாம் இதற்கு தகுதி உள்ளவர்கள் தானா, நாம் என்ன செய்து விட்டோம் நமக்கு இப்படி ஒரு அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், இனிய வாழ்க்கை என்று தனக்கு கிடைத்ததை எண்ணி உயிர்கள் உருகும். கிடைத்த நல்லன எல்லாம் உணரச் செய்து , உயிர்களை உருக வைப்பான்.

"பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே"


உயிர்கள் தங்களுக்கு கிடைத்த இன்பங்களை எண்ணி உருகும் போது , மனதுக்குள் தோன்றும் நன்றி உணர்வில் பாடத் தோன்றும். தனக்காக பாடல் வரவில்லை என்றாலும், மற்றவர்கள் பாடியதை பாடி உள்ளம் உருகும். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், அபிராமி அந்தாதி என்று மற்றவர்களின் பாடலைப் பாடும்.

"பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே"


தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. தன் முயற்சி என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் நடக்கிற படி நடக்கிறது என்று மனிதன் எண்ணத் தலைப்படுகிறான்.  தான் சாதித்தது ஒன்றும் இல்லை என்ற பணிவு வருகிறது.


"காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே"

எல்லாம் மிகப் பெரிய அளவில் தன்னைச் சுற்றி நடப்பதை உயிர்கள் அறிகின்ற. பிறப்பும், வளர்வதும், ஆடுவதும், பாடுவதும், தேடுவதும், ஓய்வதும் நில்லாமல் நடக்கின்றன. இது எப்படி நடக்கிறது. யார் இதை நடத்திச் செல்கிறார்கள் என்று அறியாமல் உயிர்கள் குழம்பும்.  எது உண்மை என்று  யாராவது காட்டினால் அன்றி காண முடியாது.


அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே என்பார் அபிராமி பட்டர். என் சிற்றறிவுக்கு இது எல்லாம் புரியவே புரியாது . இருந்தும் புரிந்து விட்டது. எப்படி , எல்லாம் உன் அருள் என்று உருகுகிறார் பட்டர்.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

என்பது அபிராமி அந்தாதி.

"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே."

கண் நுதல் = நெற்றியில் கண் 

நெற்றியில் கண் உள்ள நீ காட்டாவிட்டால் எப்படி காண முடியும். நீ காட்டினால் இவை எல்லாம் என்னால் காண முடியும் என்கிறார். 

உங்களுக்கும் காட்டுவான். காத்திருங்கள். 

எவ்வளவு எளிமையான பாடல். எவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள். சமயமிருப்பின் மூல நூலை தேடித் படியுங்கள். 

Thursday, March 2, 2017

திருவாசகம் - மெய் சுடரே

திருவாசகம் - மெய் சுடரே 


பாடல்

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

சீர் பிரித்த பின்

பொய்யாயின எல்லாம் போய் அகல வந்து அருளி 
மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

பொருள்

பொய்யாயின = பொய்யானவை

எல்லாம் = அனைத்தும்

போய் அகல =விட்டு விலக

வந்து அருளி = வந்து அருளி

மெய் ஞானமாகி = உண்மையான ஞானமாகி

மிளிர்கின்ற = சுடர் விடும்

மெய்ச்சுடரே = உண்மையான சுடரே


இரண்டே இரண்டு வரிதான். திருவாசகத்தில் இருந்து.

பொருள் என்ன என்று சிந்திப்போம்.


பொய்யாயின = பொய்யானவை 

எது பொய்யானது ?

செல்வம் ? மாடு, மனை, மனைவி, பிள்ளைகள் ? இவை எல்லாம் பொய்யா ?

மது, மாமிசம் போன்றவை பொய்யா ?

எது பொய் ? இவை எல்லாம் நிஜமானவைதானே ? நமக்கு இன்பம் தரக்கூடியவைதானே. 

மனைவி சுகம் இல்லையா ? பிள்ளைகள் சுகம் இல்லையா ? செல்வம் சுகம் இல்லையா ? 

இவை எல்லாம் நமக்கு நன்மைதானே செய்கின்றன. பின் எது பொய் ? 

பொய் என்பது பொருளிலோ , உயிர்களிலோ இல்லை. 

சில பொருள்கள், உறவுகள் நமக்கு இன்பம் தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை நமக்கு உண்மையிலேயே இன்பம் தருகின்றனவா ?

உதாரணத்துக்கு - மது இன்பம் தருகிறது என்று தானே குடிக்கிறார்கள். அது உண்மையிலேயே  இன்பம் தருகிறதா ? இன்பம் தருவது போல தோன்றும், ஆனால்  அது உண்மையில் துன்பத்தையே தரும்.  குடல் வெந்து, மதி மயங்கி, செல்வம் அழிந்து, நம்மை தவறான வழியில் இட்டுச் சென்று பெரிய துன்பத்தில் மாட்டி விட்டுவிடும். 

இன்பம் போலத் தெரியும். அது உண்மை அல்ல. இன்பம் போலத் தெரிவது பொய்.

சரி. புகை பிடிப்பது ? அதுவும் அப்படித்தான் ?

சரி ...மனைவி ? இன்பம் தான். அந்த இன்பத்தின் பின்னால் வரும் துன்பம் தெரிகிறதா ? அவளின் தேவைகள், பிள்ளைகள், அவர்களின் தேவைகள்.  மனைவியின் அழகு குறையும். ஆரோக்கியம் குறையும். பிள்ளைகள் வீட்டை விட்டுப் போய் விடுவார்கள். இன்பமா ? 

கணவனுக்கு மனைவி எப்படியோ, மனைவிக்கும் கணவன் அப்படித்தான். 

இவை இன்பமா ? முதலில் கொஞ்ச நாள் இன்பம். அப்புறம் சரி பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி  விட்டது. விடவா முடியும் ? சகித்துப் போக வேண்டியதுதான்  என்று வாழ்க்கை செல்கிறது. 

"நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி,
பூபிளக்க பொய்யுரைத்து புற்றீசல் போல
கலகவென புலபுலவென புதல்வர்களைப் பெறுவீர்.
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் 
"கவன் பிளந்த மரமதனில் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை பிடுங்கிவிட்ட குரங்கதனைப்போல 
அகப்பட்டீர் அகப்பட்டீர் அகப்பட்டீரே!!" "

என்று பட்டினத்தார் சொன்னது போல, ஆப்பை அசைத்து விட்டு காலை உள்ளே விட்டு மாட்டிக் கொண்ட குரங்கைப் போல அகப்பட்டுக்கொண்டோம் என்பது தான் உண்மை. 

இன்பம் போலத் தெரியும். ஆனால் துன்பம் என்பதுதான் உண்மை.

இனிப்பு பலகாரங்கள் சுவையானதுதான். சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் துன்பம் வரும். 

இளமை - இனியதுதான். உடலில் வலு இருக்கும் போது ஏதேதோ செய்கிறோம். ஆடல், பாடல், கூத்து என்று நடக்கிறது. வயதாக வயதாக அதே உடல்  என்ன பாடு படுத்துகிறது. கண் தெரிவது இல்லை, காது கேட்பது இல்லை, ஞாபக சக்தி குறைந்து கொண்டே வருகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும்  பாரமாகிப் போகிறோம். இன்பத்தை தந்த உடல் துன்பத்தின் இருப்பிடமாகிப் போகிறது. 

சரி, அதற்காக இதை எல்லாம் வேண்டாம் என்று விட முடியுமா ?

முடியாதுதான். 

இவை இன்பம் என்று நினைத்து கையில் எடுக்கிறோம். துன்பமாகப் போய் விடுகிறது. 

இவை துன்பம் என்று கையில் எடுப்போமா ?

நான் திருமணம் செய்து கொண்டு துன்பப் படப் போகிறேன் என்று யாரவது  திருமணம் செய்து கொள்வார்களா ?

அது துன்பம் என்று தெரிந்தால் செய்ய மாட்டார்கள். இன்பம் என்று நினைத்தால் அது பொய். 

அது தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். 

இன்பம் என்று சொன்னால் அது இன்பமாகவே இருக்க வேண்டும். துன்பம் என்று சொன்னால் அது துன்பமாகவே இருக்க வேண்டும். 

இன்பம் பின்னால் துன்பமாக மாறும் என்றால் அது பொய் தானே. 

எனவே , பொய்யான எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 

"எல்லாம்" - வாழ்வில் ஏதோ ஒன்றிரண்டு பொய்யாகத் தெரிவது இல்லை. நிறைய இருக்கிறது. "எல்லா" பொய்களையும். 

"போய் அகல "....அது என்ன போய் , அகல என்று இரண்டு வார்த்தை. போய் என்றாலும், அகலுதல் என்றாலும் ஒன்று தானே ?

கூறியது கூறல் தவறல்லவா ?

மணிவாசகர் தவறு செய்வாரா ? மாட்டார். 

பொய் என்று தெரிவதை விட்டு உடல் விலகலாம். அறிவு விலகலாம். மனம் விலகாது. 

சர்க்கரை உடம்புக்கு நல்லது இல்லை என்று மருத்துவர் சொல்லி இருப்பார். அறிவு அதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், மனம் இனிப்புக்கு ஏங்கும்.

திருமணத்தால் பொறுப்புகளும், தொல்லைகளுமே அதிகம் என்று அறிவு சொல்கிறது. பெண்ணைப் பார்த்தால் மனம் அவள் பின்னே போகிறது. 

உடலும் விலகனும் . உள்ளமும் விலகனும் . 

போய்  - உடலை விட்டுப் போய் 

அகன்று  - மனதை விட்டு அகன்று.

எது பொய்யோ அது பற்றிய எண்ணமே இருக்கக் கூடாது. 

சரி, இந்த பொய்யை விட்டு எப்படி விலகுவது. படித்து அறிந்து அதில் இருந்து விலக முடியுமா ? எது சரி , எது தவறு என்று படித்து அறிந்து கொள்ள முடியுமா ?

முடியாது என்கிறார் மணி வாசகர் 

"அருளி" அருள் இல்லாமல் அது முடியாது. அறிவு ஏற ஏற குழப்பமும் ஏறும். அறிவின் இலட்சணம் அது. அறிய அறிய, அறியாமை விரிந்து கொண்டே போகும். 

அவன் அருள் இருந்தால் பொய்யானவை எல்லாம் போய் அகலும்.

சரி, அருளுக்கு எங்கே போவது. எப்படி அந்த அருள் கிடைக்கும். 

"வந்து அருளி " என்கிறார். 

நீங்கள் போக முடியாது. எங்கே போவீர்கள் ? அவன் இருக்கும் இடம் தெரியுமா ? விலாசம் இருக்கிறதா ? கூகிள் மேப்பில் தேட முடியுமா ? எங்கும் போக முடியாது. 

அவன் உங்களைத் தேடி வருவான். 

வந்து அருள் செய்வான் 

"வந்து அருளி" 

"மெய்ஞானமாகி " ஞானத்தில் மெய்ஞானம், அஞ்ஞானம் என்று இருக்கிறது. பொய்யான ஞானம். உண்மையான ஞானம் பொய்யில் இருந்து விலகி உண்மையை அறிய உதவும். 

"மிளிர்கின்ற மெய் சுடரே " 

இருட்டில் கிடப்பது பாம்பா கயிறா என்று தெரியாமல் மனம் குழம்பும். எத்தனை ஆயிரம் புத்தகங்களை படித்தாலும் அந்த குழப்பம் தீராது. ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டுவந்தால் பாம்பா கயிறா என்று தெளிவாகத் தெரிந்து விடும். 

வாழ்வில் ஆயிரம் குழப்பங்கள் அப்படி இருக்கும். படித்து தெளிய முடியாது. மெய் சுடர் வேண்டும். 

அது என்ன மெய் சுடர் ? 

சுடர் என்று சொன்னால் போதாதா ?

வீட்டில் பச்சை நிறத்தில் ஒரு tube லைட் போட்டால் எல்லாம் பச்சையாகத் தெரியும். மஞ்சள் நிறத்தில் ஒரு லைட் போட்டால் எல்லாம் மஞ்சளாகத் தெரியும். 

பொருளின் உண்மையை அறிய உதவும் மெய் சுடர் வேண்டும். 

உலகில் எத்தனையோமதங்கள் , அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை சொல்கின்றன. எது சரி, எது தவறு என்று எப்படி  அறிந்து கொள்வது. 

மெய்யான சுடர் வேண்டும். 

மீண்டும் இந்த இரண்டு வரிகளை படித்துப் பாருங்கள். இன்னும் கூட அர்த்தம் தோன்றலாம். 

இரண்டு வரியில் இவ்வளவு அர்த்தம் என்றால் முழு திருவாசகத்தில் எவ்வளவு இருக்கும். 

படியுங்கள்.

Wednesday, March 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்


பரதன் தன்னுடைய தாயார்கள் கோசலையையும் , சுமித்திரையையும் குகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அடுத்து, அருகில் இருந்த கைகேயியை  பார்த்து "யார் இவர்"  கேட்கிறான்.

கம்பனின் கவித்திறமைக்கு உதாரணமான பாடல்.

"சுடுகாட்டுக்கு துணையான தசரதனை அனுப்பி விட்டு, துன்பக் கடலில் பெற்றெடுத்த மகனைத் தள்ளி விட்டு, கொடுமையான காட்டுக்கு இராமனை அனுப்பி விட்டு,  திருமால் அன்று தன்னுடைய நீண்ட வடிவாள் அளந்த மூன்று உலகத்தையும்  , இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய கொடுமையால் அளந்தாளை பார்த்து யார் இவர் " என்று கேட்டான் குகன்.

பாடல்

சுடும் மயானத்து இடைத் தன் துணை ஏகத்
    தோன்றல் துயர்க் கடலின் ஏகக்,
கடுமை ஆர் கானகத்து இடைக் கருணை ஆர்
    கலி ஏகக் கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
    தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை‘‘ ‘யார் இவர்? ‘என்று
    உரை‘‘ என்னக் குரிசில் கூறும்.

பொருள்


சுடும் மயானத்து இடைத் = எரிக்கின்ற  மயானத்துக்கு

 தன் துணை ஏகத் = தன்னுடைய துணைவனான தசரதன் போக

தோன்றல் = தன்னிடம் தோன்றிய பரதன்

துயர்க் கடலின் ஏகக் = துயரமான கடலில் செல்ல

கடுமை ஆர் கானகத்து இடைக் = கடுமையான கானகத்துக்கு

கருணை ஆர்  கலி ஏகக் = கருணை வடிவான இராமன் செல்ல

கழல் கால் = வீரக் கழல் அணிந்த

மாயன் = திருமால்

நெடுமையால் = பெரிய உருவத்தால்

அன்று  = அன்று

அளந்த உலகு எல்லாம் = அளந்த உலகை எல்லாம்

தன் மனத்தே = தன்னுடைய மனத்தினால்

நினைந்து செய்யும் = நினைத்து செய்யும்

கொடுமையால் அளந்தாளை = கொடுமையால் அளந்தாளை

‘‘ ‘யார் இவர்? ‘என்று = யார் இவர் என்று

 உரை‘‘ =கூறு

என்னக்  = என்ன

குரிசில் கூறும் = அரசன் கூறினான் (பரதன் கூறினான் ...கூறத் தொடங்குகிறான்)

பெண்ணின் மனதில் ஒன்று தைத்து விட்டால் , அது எவ்வளவு பெரிய விஷயமானாலும் அவள் அதை சாதிக்காமல் விட மாட்டாள்.

பெண் என்பவள் உடல் அளவில் ஆணை விட பலகீனமானவள் தான்.

எப்படி ஒரு புலன்  சரியாக வேலை செய்யாவிட்டால் மற்ற புலன்கள் மிக அதிகமாக வேலை செய்து  அந்த சரியாக வேலை செய்யாத புலனின் குறையை நிறைவு செய்யுமோ அது போல, பெண்ணின் உடல்  பலகீனத்தை அவளின் மன பலம் சரி செய்கிறது.

திருமாலுக்கு கூட, பாற்கடலை விட்டு , பூமிக்கு வந்து, வாமனனாக உருவெடுத்து, மூவடி தானம் பெற்று, பின் உலகளந்த பெருமாளாக வடிவு கொண்டு, மூன்று உலகத்தையும் அளக்க வேண்டி இருந்தது.

கைகேயியோ, இருந்த இடத்தில் தன்னுடைய மனதால் நினைத்த மாத்திரத்திலேயே அளந்தாள்.

பெண்ணின் மனம் அவ்வளவு வலிமை வாய்ந்தது.

சீதை , இலங்கையில் சிறை இருக்கிறாள்.

அவளை மீட்டு வர, இராமனுக்கு வானர சேனையின் துணை தேவைப் பட்டது.  பாலம் அமைத்து, இலங்கை போய் , சண்டை போட்டு, பின் சிறை மீட்டான்.

சீதை சொல்கிறாள், இந்த இலங்கை என்ன பெரிய பிரமாதம். எல்லாம் இல்லாத இந்த உலகம் அனைத்தையும் , என்னுடைய சொல்லால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்

இராமனுக்கு இவ்வளவு வேலை செய்ய வேண்டி இருத்தது. சீதைக்கு அது ஒரு சொல். அவ்வளவுதான். யாருக்கு வலிமை அதிகம் ?

இவ்வளவு சக்தியை தனக்குள் வைத்துக் கொண்டு, தன்னிடம் அவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னும், அதை உபயோகிக்காமல் , இராமன் வரட்டும் என்று இருக்கிறாள் என்றால் அவளின் மன உறுதி எவ்வளவு இருக்கும்  ?

கைகேயி கொடியவளாக மாறிப் போனாள். அதை சொல்லும் போது கூட, பெண்ணின் மிகப் பெரிய சக்தியை கம்பர் படம் பிடித்து  காட்டுகிறார்.

அவள்  அடங்கி , அமைதியாக இருக்கிறாள் என்பதால் சக்தி இல்லாதவள் என்று  அர்த்தம் அல்ல. அளவிட முடியாத ஆற்றல் அவளிடம் புதைந்து கிடக்கிறது என்று இராமாயணம் நமக்கு சுட்டி காட்டுகிறது.

அந்த சக்தியை வணங்குவோம்.

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
  நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள் 
  பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
  வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி 

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

என்று பாரதி சொன்னது போல , அவளே தஞ்சம் என்று உரைப்போம்.

அவள் பேர் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்