Showing posts with label இன்னிலை. Show all posts
Showing posts with label இன்னிலை. Show all posts

Saturday, November 5, 2016

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும்

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும் 


எதற்காக திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்டால் , "மனைவியோடு இன்பமாக இருக்கலாம், சீர் செனத்தி என்று கொஞ்சம் செல்வம்  வரும்,மாப்பிள்ளை என்று ஒரு மரியாதை வரும், சமூகத்தில் ஒரு மதிப்பு வரும்..." இவற்றிற்காக கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான்.

சரி, பிள்ளை எதற்கு என்று கேட்டால் "பிள்ளை இல்லா விட்டால் ஆண்மை இல்லாதவன், மலடி என்ற அவச் சொல் வரும், அது மட்டும் அல்ல, நமக்கு அப்புறம் நம் சந்ததி வளர வேண்டாமா, அதற்கும், மேலும், சேர்த்து வைத்த சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டாமா அதற்கும் " ஒரு பிள்ளை வேண்டும் என்கிறான்.

சரி, பிள்ளைகளை எதற்கு பள்ளி கூடத்திற்கு அனுப்புகிறாய் என்று கேட்டால், படிச்சு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத்தான் என்கிறான்.

எதற்கு திருமணம் செய்துகொள்வது, எதற்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவது, எதற்கு அவர்களை படிக்க வைப்பது என்று சரியாகத்  தெரியாமலேயே இவை நடந்து கொண்டிருக்கின்றன.

திருமணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , குழந்தைகளை பெற்றுக் கொள்வதின் நோக்கம் என்ன என்று இன்னிலை என்ற அற நூல் கூறுகிறது.

"ஒரு பெண்ணை மணந்து அவளோடு இன்பம் காணப்பது என்பது நல்ல பிள்ளைகளைப் பெற்று, அவர்களை நான்கு அல்லது ஐந்து ஆண்டில் அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் இறைவனை காணும்படி கல்வி கற்பிப்பதே இல்வாழ்வின் இனிய நோக்கம் "

பாடல்

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய்-தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து.

பொருள்

பாலை = பாலகனை

வளர்த்துக்  = வளர்த்து

கணங்குழை = அழகிய காதணிகளை அணிந்த பெண்ண

மாலையுறல் = மால் என்றால் மயக்கம். கிறக்கம் . இங்கே இன்பம் என்ற பொருளில் வந்தது. இன்பம் அடைதல்

சால்பென்ப = உயர்ந்தது என்று கூறுவார்கள்

கண்கூடாக் காணாய் = கண் கூடாகக் காண்பாய்

தழைகாதல் = பெருகி வரும் காதலில்

வாலறிவ னாக்க = இறைவனை அறிய

வகையறிக = வகையினை செய்தல் , பள்ளியில் சேர்த்தல், குருவிடம் ஒப்புவித்தல்

காலத்தால் = தகுந்த நேரத்தில்

தோலொடு = அழகான

நாலைந் தணந்து = நான்கு அல்லது ஐந்து வயதில்

இரண்டு வயதில், இரண்டரை வயதில் pre kg என்று பிள்ளைகளை கொண்டு போய்  பள்ளிக் கூடத்தில் தள்ளி விடுகிறார்கள்.

கல்வி கற்பதின் நோக்கம், ஏதோ வேலை தேடிக் கொண்டு , நாலு காசு பார்ப்பது அல்ல.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல். இறைவனை அறியாமல் எப்படி அவனை தொழுவது ? இறைவன், கடவுள் என்றால் யார் என்றே அறியாமல் , எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன் என்று கோவிலுக்குப் போவது, பூஜை செய்வது, பாட்டுப் பாடுவது, விரதம் இருப்பது என்று பல பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தேவைதான். ஆனால் அதுவே முடிவு அல்ல.

மணி அடிப்பதும் , சர்க்கரை பொங்கல், சுண்டல் சாப்பிடுவதும் இறைவனை அறிவது ஆகாது. ஆனால் , அங்குதான் ஆரம்பிக்க வேண்டும்.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து அவர்கள் இறைவனை அடைய வழி செய்வதுதான் திருமணம் செய்து கொண்டு , ஒரு பெண்ணோடு இன்பமாக வாழ்வதின்  குறிக்கோள்.

சொல்லித் தந்திருக்கிறார்கள். படிக்காமல் விட்டு விட்டோம்.

படிப்போம். மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.

எந்த நிலையில் நம் சமுதாயம் சிந்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்போம்.





Wednesday, April 8, 2015

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க 


கணவன் மனைவி உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. மென்மையானது. காதலும், காமமும் கலந்தது.

கணவன் மனைவி உறவு சிக்கல் நிறைந்ததும் கூட. யார் பெரியவர், யார் வீட்டுக்காக அதிகம் உழைக்கிறார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி அவற்றை சரி செய்வது போன்ற சிக்கல்கள் வரமால் இருக்காது.

இந்த கணவன் மனைவி உறவு பற்றி இன்னிலை ஒரு பாடலில் சொல்ல்கிறது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இருவரில் யாரும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல.

ஒருவர் மேல் ஒருவர் விருப்பப்பட வேண்டும்.

அந்த விருப்பம் நிலையானதாக இருக்க வேண்டும்.

அப்படி உயர்வு தாழ்வு இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் நிலைத்த அன்போடும் விருப்போடும் இருந்து செய்யும் இல்லற செயல்களை உலகம் அறியும்.

அவர்கள் தங்களுக்குள் உள்ள காதலை, காமத்தை ஒரு மென்மையான மலரை கையாள்வது போல கையாள வேண்டும்.

மனைவி வாழ்வின் துணை, வாழ்க்கைக்கு துணை என்று அறிந்து அவளோடு இல்லறம் நடத்த வேண்டும்.


பாடல்


ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்
நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.

சீர் பிரித்த பின்

ஒப்பு உயர்வு இல் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்
நப்பின்னை ஞால ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மை உறு  தோற்றத்தே வைத்து துய்க்க 
ஏமக் கிழத்தி அறிந்து 

பொருள்

ஒப்பு = ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள், சமமானவர்கள்

உயர்வு இல் = ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் அல்ல

வேட்டோன் = ஆசைப் பட்டவன், காதலன்

ஒரு நிலைப்பட்டு = ஒரு நிலையில், மனம் அலையாமல்

ஆழ்ந்த செயல் = உறுதியுடன் செய்யும் இல்லறம் சம்பந்தப் பட்ட செயல்கள்

நப்பின்னை  = நப்பின்னை (?) . இதை நப்பினையின் (கண்ணனின் மனைவி ) வாழ்வால் அறியலாம் என்று உரை சொல்கிறார்கள். அவ்வளவு சரியாகப் பட வில்லை.

ஞால = உலகு

ஒருங்கு அறிக = ஒன்றாக அறிக

 துப்பாராய்த் = மனத் தூய்மையுடன்

தூமலரின்  = தூய மலரின்

மென்மை உறு  தோற்றத்தே  = மேனமியான தோற்றத்தை

வைத்து  = மனதில் வைத்து

துய்க்க = இன்பம் அனுபவிக்க

ஏமக் = இல்லத்துக்கு காவலாய் இருக்கும்

கிழத்தி =தலைவியின்

அறிந்து = தன்மை அறிந்து



Sunday, April 5, 2015

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும்

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும் 


நம் புலன்களுக்கு இன்பம் தருவன பல.

அவற்றில் சில, ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும். இசை, காதுக்கு மட்டும் இன்பம் தரும். அதை தொட முடியாது, நுகர முடியாது.

நல்ல உடை கண்ணுக்கும், உடலுக்கும் இன்பம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும், அணியும் போது உடலுக்கும் சுகமாக இருக்கும்.

லட்டு - பார்க்க அழகாக இருக்கும், வாயில் போட்டால் சுவையாக இருக்கும். அதில் உள்ள ஏலக்காய் , கிராம்பு போன்றவை நல்ல மணத்தைத் தந்து மூக்குக்கும் இன்பம் தரும்.

இப்படி ஒரு புலனுக்கு, இரு புலனுக்கு , மூன்று புலனுக்கு என்று இன்பம் தரும் பொருள்கள் உள்ளன.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் ஒன்று உண்டா  என்றால் , உண்டு.

அது ஆணுக்கு பெண்ணும், பெண்ணும் ஆணும் தரும் இன்பம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

என்பார் திருவள்ளுவர்.  கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், தொட்டு அறியும்  ஐந்து புலன்களுக்கு இன்பமும் வளையல் அணிந்த அவளிடம் உள்ளது என்கிறார் வள்ளுவர்.

அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆணும் , பெண்ணும் சேர்ந்து அடையும் அந்த சிற்றின்பம் , பேரின்பத்திற்கு வழி வகுக்கும் என்கிறது இன்னிலை என்ற நூல்.

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காமத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அது குறையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக முக்தி அடைய உதவுவார்கள்.

காம விருந்து படைத்த கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாவார்கள். எப்போது என்றால், கலவி இன்பத்தில் குற்றம் ஏதும் வந்து விடாமல்,  அளவு கடக்காமல் இருந்தால். குற்றம் வராமல் என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ நாடாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல்.

அப்படி குற்றம் இல்லமால், அளவோடு காமத்தை சுகிப்பவர்கள்,பின்னாளில் முக்தி அடைய ஒருவருக்கு ஒருவர் துணையாவார்.

அந்த சிற்றின்பமே அவர்களுக்கு ஒரு படகு போல அமைந்து முக்தி கரை சேர்க்கும்.

இளைமையில், மணம் புரிந்த போது இருந்த இளமையும் அழகும் அதன் மூலம் கிடைக்கும் கலவி இன்பமும், கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி தருவது போல.

பாடல்

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

பொருள்

துணையென்ப = துணை என்று சொல்லுவார்கள்

காம விருந்துய்ப்பார் = காம விருந்து உய்ப்பார் (அடைவார்)

தோமில் = குற்றம் இல்லாமல்

இணைவிழைச்சின் = கலவி இன்பத்தில்

மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக போகாமல் இருந்தால்

புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புணை போல (படகு போல )

கூட்டுங் கடுமிசையான்  = கசப்பான மருந்தை

கட்டியிற் கொண்டற்றால் = கற்கண்டு கொண்டு அதன் ஆற்றாலால் (கசப்பை மறைப்பது போல )

வேட்டபோழ் தாகு மணி = மனந்த போது உண்டான அழகு

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி வகுக்கும். 


Wednesday, July 2, 2014

இன்னிலை - அறம் கேட்ட பேய்

இன்னிலை - அறம் கேட்ட பேய் 


பாரதப் போரின் தொடக்கத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தான். அதை அங்கிருந்த பேய் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. கீதையை கேட்ட பேய் அதனால் பயன் பட்டு உயர் நிலை அடைந்தது என்று ஒரு கதை உண்டு.

கீதை பேய்க்கு சொன்னதில்லை. இருந்தும், யாருக்கோ சொன்ன அற உரைகளை கேட்டு பேய் உயர்வடைந்தைப் போல நீங்களும் அற நூல்களைப் படித்து பயன்  பெறுங்கள்.

பாடல்

அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

சீர் பிரித்த பின்

அன்று அமரில் சொன்ன அற  உரை வீழ் தீக்கழுது
மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு.


பொருள்

அன்று = அன்று, பாரதப் போர் நடந்த அன்று

அமரில் = போரில்

சொன்ன அற  உரை = சொல்லப்பட்ட அற உரைகளை (கீதையை)

வீழ் தீக்கழுது = கேட்ட பேயானது

மன்று உயர்ந்து போந்த வகை = மன்று என்றால் மன்றம். உயர்ந்தவர்கள் வாழும் இடம். சொர்க்கம். பேய் சொர்க்கம் போன வகை.

தேர்மின் = ஆராய்ந்து அறியுங்கள்.

பொன்றா = குறையாத

அறம் அறிந்தோன் = அறத்தினை அறிந்தவன் ( பெரியவர்கள்,)

கண்ட வறம் பொருள் கேட்டல்லன் = கண்டு சொன்ன அறத்தின் பொருளை கேட்டு அறிந்து , துன்பம் நீங்கி

மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு = அறம் அல்லாத (மறம் ) வாழ்கையை ஒறுத்து (வெறுத்து ஒதுக்கி)  வாழும் வகையை கடை பிடிக்க வேண்டும்.


ஒரு பேய் அறம் கேட்டு  உய்யும் என்றால் நாம் எந்த விதத்தில் அந்த பேயைவிட தாழ்ந்து போனோம் ? நாமும் அற நூல்களை படித்து பயன் பெறலாம் - பயன் பெற வேண்டும்.

அறம் அறம் என்று நம் இலக்கியங்கள் அரற்றுகின்றன.

எங்கு சென்றாலும், எந்த  இலக்கியத்தை பிரித்தாலும்  அறத்தின் சாயலை பார்க்கலாம்.

நம் இலக்கியங்கள் அறத்தை மிக வலியுறுத்துகின்றன.

சில தலைமுறைகள் அறம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து  வருகின்றன.

இலக்கியங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் அறத்தினை மனதில் ஏற்றி விட்டால் பின் அது மாறாது.

கொஞ்சம் வளர்ந்த பின் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அதற்கு முன் அறத்தை போதிக்க வேண்டும்  குழந்தைகளுக்கு.

அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பித்தாள் ஔவை.

இவற்றை எப்படியாவது இந்தத் தலை முறைக்கு சொல்லித் தரவேண்டும்.

ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம்.







Sunday, October 7, 2012

இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


ஆணும் பெண்ணும் இல்லறத்தில் கூடி காதல் இன்பம் அனுபவிப்பது இறுதியில் பேரின்பம் அடைய ஒரு வழி.

இல்லற இன்பமே இறுதி அல்ல.

கசப்பு மருந்தை நேரடியாக அப்படியே உண்பது கடினம்.

அதன் மேல் சிறிது சர்க்கரை தடவித் தந்தால், உண்பது எளிது, நோயும் குணமாகும்.

 மருந்தை கொடுத்தால் அதன் மேல் உள்ள சர்கரையையை மட்டும் ருசித்து விட்டு, மருந்தை தூக்கி எறிந்து விடுவது எவ்வளவு புத்திசாலித்தனமோ அதுபோல் இல்லற இன்பத்தை மட்டும் அனுபவிப்பது.

காதல் இன்பம் வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். 

பாடல்