Showing posts with label thirumurai. Show all posts
Showing posts with label thirumurai. Show all posts

Saturday, May 5, 2012

அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


சுடுகாட்டிலே ஒரு பேய்.

அது முதலில் சும்மா காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தது.

சும்மா இருக்க வேண்டியது தானே? 
அதுவோ பேய். 

பக்கத்தில் எரிந்து கொண்டு இருந்த ஒரு பிணத்தின் சிதையில் இருந்து ஒரு கொள்ளியை உருவியது.

அதில் இருந்த கரியை எடுத்து நசுக்கி, பொடியாக்கி முகத்தில் பூசிக் கொண்டது. 

எரிந்து கொண்டு இருந்த தணல் அல்லவா ? எங்கோ சூடு பட்டுக் கொண்டது.

சூடு தாங்கவில்லை. அதற்க்கு கோவம் வருகிறது. தலையை அங்கும் இங்கும் ஆட்டி கத்துகிறது. சிரிக்கிறது

அங்கும் இங்கும் துள்ளுகிறது. தீயை அணைக்க முயல்கிறது. 

அந்த சுடுகாட்டில் ஆடுகிறான், என் அப்பன் சிவன் என்கிறார் காரைக்கால் அம்மையார். 

யார் அந்த பேய் ?

நாம் தான் அந்தப் பேய். 

இந்த உலகம் தான் சுடுகாடு.

எங்கே சும்மா இருக்கிறோம் ? 

ஒவ்வொரு ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. 

அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையா இருக்கும். 

அப்புறம், சூடு தாங்காமல் எரியும்.

எல்லோரையும் கோவிக்கிறோம், கத்துகிறோம், 

எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

இத்தனயும் பார்த்து கொண்டு ஆனந்த நடனம் ஆடுகிறான் அவன்.

அர்த்தம் செறிந்த அந்த காரைக்கால் அம்மையாரின் பாடல் இதோ...

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி
கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையைவிள்ள 
எழுதி வெடுவெடென்னநக்கு வெருண்டு விலங்கு
பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 
முற்றுஞ் சுளிந்து பூழ்திஅள்ளி அவிக்க நின்றாடும்
 எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

கள்ளிக் கவட்டிடைக் = கள்ளிக் செடி புதருக்குள்



காலை நீட்டி = காலை நீட்டி



கடைக் கொள்ளி வாங்கி = கடைசியாக நீட்டி கொண்டு இருந்த கொள்ளியை எடுத்து


மசித்து மையை = அதை நசுக்கி, அதில் இருந்த கரியை எடுத்து



விள்ள எழுதி = விள்ள என்றால் எழுதும் மை. அந்த கரியால் எழுதி



வெடுவெடென்ன = பெரிய சிரிப்பு. அல்லது சூட்டில் உடல் வெடு வெடுவென நடுங்குதல்



நக்கு = உறுமி, ஆங்காரமாக சப்தமிட்டு



வெருண்டு = பயந்து



விலங்கு பார்த்துத் = குறுகிப் பார்த்து (தலையை ஆட்டி, கண்ணை சுருக்கிப் பார்த்து)



துள்ளிச் = அங்கும் இங்கும் துள்ளி, ஆட்டம் போட்டு, சூடு தாங்காமல் குதித்து



சுடலைச் = சுடுகாட்டில்



சுடுபிணத்தீச் = பிணத்தை எரிக்கின்ற தீயை



சுட்டிட முற்றுஞ் சுளிந்து = முழுவதும் அணைக்க

பூழ்தி அள்ளி அவிக்க = புழுதியை அள்ளி அந்த தீயின் மேல் போட்டு அதை அணைக்க


நின்றாடும் = அந்த சுடுகாட்டில் நின்று ஆடும்



எங்கள் அப்பனிடந் திரு ஆலங்காடே = எங்கள் தந்தை இருக்கும் திரு ஆலங்காடே