Showing posts with label கலிங்கத்துப் பரணி. Show all posts
Showing posts with label கலிங்கத்துப் பரணி. Show all posts

Wednesday, June 18, 2014

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள்

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள் 


கடலில் கப்பல் போவதை பார்த்து இருக்கிறீர்களா ?

ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள், நீரில் மிதந்து போகும்.

கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம்.

அந்த வெள்ளம் தேங்கியது மட்டும் அல்ல, போர்களம் நிறைந்து வெளியில் போகிறது.

அந்த வெள்ளத்தில் இறந்த யானைகள் அடித்துச் செல்லப் படுகின்றன.

அப்படி அந்த இரத்த வெள்ளத்தில் யானைகள் மிதந்து போவது கடலில் கப்பல்கள் மிதந்து போவதைப் போல இருக்கிறதாம்.

பாடல்

உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

பொருள்

உடலின்மேல் = (யானைகள் தங்கள் ) உடலின் மேல்

பலகாயஞ் = பல காயங்களை கொண்டு

சொரிந்து = (இரத்தம்) கொட்ட

பின்கால் = பின்னால்

உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை = உடல் பதித்து உதிரம் ஒழுகி யானைகள்

கடலின்மேல் = கடலின் மேல்

கலந்தொடரப் = கப்பல்கள் , தொடர

பின்னே செல்லுங் = ஒன்றன் பின் ஒன்று செல்லும்

கலம்போன்று  = கப்பல்கள் போல

தோன்றுவன = தோன்றின

காண்மின் காண்மின்.= காணுங்கள் , காணுங்கள்



Tuesday, June 17, 2014

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும்

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும் 


எவ்வளவு படிச்சவரு...அவரு போய் இந்த பொண்ணு விஷயத்தில இப்படி நடந்துகிட்டாரே...என்று சில பேரை பற்றி செய்தித்தாளில் படிக்கும் போது நாம் வியந்திருக்கிறோம்.

பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உலகு அறிந்த அறிவுடையவர்களும் நிலை தளரும் இடம் அது என்கிறார் ஜெயங்கொண்டார்.

பாடல்

புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து 
இடைபடு வதுபட அருளுவீர் 
   இடுகதவு உயர்கடை திறமினோ.

பொருள்

சீரை பல விதங்களில் பிரித்தும் சேர்த்தும் இரசிக்க வேண்டிய பாடல்


புடைபட = பக்கங்கள் திரண்டு வளர்ந்த

இளமுலை = இளமையான மார்புகள்

வளர்தொறும் = நாளும் வளரும் போது

பொறைஅறி வுடையரும் = பொறுமையும், அறிவும் உள்ளவர்களும்

நிலைதளர்ந்து = தங்கள் நிலை தளர்ந்து

இடை படுவது பட = பெண்களே , உங்கள் இடை எந்த பாடு படுமோ அந்த அளவு அவர்களும் பட. மார்புகள் நாளும் வளர்வதால் இடை பாரம் தாங்காமல்  வருந்தும்.அது போல பொறை உடை அறிவுடையவர்களும் வருந்தாவர்கள்.

இன்பமும் இல்லாமல், துன்பமும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் கிடந்து தவிப்பது - பட. பட என்றால் பட்டுப் போக. விலகிப் போக.

இடையை நோக்கிய துன்பங்கள் பட்டுப் போக...என்று பலப் பல அர்த்தங்கள் சொல்லிக் கொண்டே  போகலாம்.

அருளுவீர் = அந்த துன்பங்கள் எல்லாம் அற்றுப் போக அருள் தருவீர்

இடுகதவு = உங்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள கதவு

 உயர்கடை திறமினோ.= உயர்ந்த வாசலில் உள்ளது, அதைத் திறவுங்கள்.

சொல்லுக்கும் ஜொள்ளுக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

சட்டை எல்லாம் நனைகிறது.....


Thursday, June 5, 2014

கலிங்கத்துப் பரணி - மார்பில் துயில்வீர்

கலிங்கத்துப் பரணி - மார்பில் துயில்வீர் 


கணவனோடு கூடி இருந்த மயக்கம் தீராமல், விடிந்தது கூடத் தெரியாமல், அவன் மார்பின் மேலேயே படுத்து உறங்கும் பெண்களே, கதவைத் திறவுங்கள்.

பாடல்


போக அமளிக் களிமயக்கில்
     புலர்ந்த தறியா தேகொழுநர் 
ஆக அமளி மிசைத்துயில்வீர் 
   அம்பொற் கபாடம் திறமினோ.

பொருள்

போக = இன்பம் தரும்

அமளிக் = போர்

களிமயக்கில் = மிகுந்த மயக்கத்தில்

புலர்ந்த தறியா தே = பொழுது புலர்ந்ததை அறியாமல்

கொழுநர் = கணவரின்

ஆக = மார்பு என்ற

அமளி = படுக்கை

மிசைத்துயில்வீர் = மேல் துயில்வீர்

அம் = அந்த

பொற்  =பொன்னாலான

கபாடம் திறமினோ = கதவைத் திறவுங்கள்


Tuesday, June 3, 2014

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று 


பெண்ணுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று இயற்கை குணங்கள் உண்டு. அவையே அவளுக்குக் காவல். அவளுக்கு கவசம். அந்த கவசத்தை அவள் இழந்து நிற்கும் நேரமும் உண்டு. அதில் அவளுக்கு வருத்தம் இல்லை. மாறாக புன்னகை பூக்கிறாள். அது , அவள் கணவனோடு இருக்கும் நேரம்.  அந்த நேரத்தில் அந்த கவசங்களை சற்று விலக்கி வைத்து விட்டு அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பாடல்

அவசமுற் றுளம்நெகத்  துயில்நெகப் பவளவாய்
     அணிசிவப்  பறவிழிக் கடைசிவப் புறநிறைக் 
கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும் 
   கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

சீர் பிரித்த பின்

அவசம் உற்று உள்ளம் நெகத்  துயில் நெகப் பவளவாய்
அணி சிவப்பு அற விழிக் கடைசிவப்பு உற நிறைக் 
கவச மற்று இளநகைக் களிவரக் களிவரும் 
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

பொருள் 

அவசம் = மகிழ்ச்சி

உற்று  = அடைந்து

உள்ளம் நெகத் = உள்ளம் நெகிழ

 துயில் நெகப் = தூக்கம் நெகிழ

பவள வாய் = பவளம் போன்ற வாய்

அணி சிவப்பு அற = இரண்டு இதழ்களும் சிவப்பை இழக்க

விழிக் கடை = விழியின் ஓரம்

சிவப்பு உற = சிவப்பு ஏற 

நிறைக்  = பெண்ணின் நிறையான அச்சம், மடம் போன்ற குணங்கள்

கவச மற்று = கவசம் இல்லாமல்

இளநகைக் = இளமையான புன்னகை

களிவரக் = மகிழ்வோடு வர

களிவரும் = இன்பத்தோடு வரும்

கணவரைப் = கணவரை

புணருவீர் = ஒன்று சேருவீர்

கடைதிறந் திடுமினோ = கதவைத் திறவுங்கள்



Monday, June 2, 2014

கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?

கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?


கண்ணில் நீர் துக்கத்தில் வரும்.

அளவு கடந்த இன்பத்திலும் வரும்.

அவள் முதலில் ஊடல் கொள்ள நினைக்கிறாள். முடியவில்லை. தன்னுடைய பொய் கோபத்தைக் கண்டு, அவளையும் தாண்டி, அவளுக்கு ஒரு புன்னகை பிறக்கிறது. ஆஹா, அவள் சிரித்து விட்டாள் என்று அவன், அவளை முத்தம் இட நெருங்குகிறான். என் மீது அவனுக்கு இவ்வளவு காதலா என்று அவள் மனத்திலும் அன்பு பெருக்கெடுக்கிறது, ஆனந்தம் பொங்குகிறது...அதனால் அவள் கண் ஓரம் இரண்டு கண்ணீர்த் துளிகள் முத்து போல உதிர்கின்றன.


பாடல்

முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
     முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் 
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும் 
    கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.


சீர் பிரித்த பின் 

முனிபவர் ஒத்து, இலராய்,  முறுவல் கிளைத்தலுமே
      முகிழ் நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர் வாய் 
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும்  
    கயல்கள் இரண்டு உடையீர் கடை திறமின் திறமின்.


பொருள்


முனிபவர் = கோபம் கொள்பவர்களைப் போல

ஒத்திலராய் = ஒத்து + இலராய். முதலில் அப்படி ஒத்து  இருந்தாலும்,பின்னால் முடியாமல்

முறுவல் = புன்னகை 

கிளைத்தலுமே = புறப்பட்டதும்

முகிழ்நகை = மலர்கிண்ட புன்னகையைப்

பெற்றமெனா = பெற்றோம் என்று

மகிழ்நர் = மகிழும் காதலர்கள்

மணித்துவர்வாய் = அழகிய இதழ்களை

கனி = கனிந்த

பவளத்தருகே = பவளம் போன்ற இதழ்களின் அருகே

வருதலும் = வரும்போது

முத்துதிரும் = முத்து உதிரும்

கயல்களி ரண்டுடையீர் = கயல்கள் இரண்டு உடையீர். கயல் என்றால் மீன். முத்துப் போல நீர்த் துளிகள் தெறிக்கும் இரண்டு மீன் போன்ற கண்களை உடையவர்களே 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார்  வள்ளுவர். அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

 கடைதிற மின்திறமின் = கதவைத் திறவுங்கள், திறவுங்கள்

அன்பையும், காதலையும், ஆனந்தத்தையும், அதில் விழையும் அன்யோன்யத்தையும்  இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன ?



Thursday, May 29, 2014

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின்

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின் 


அவனோடு ஊடல் கொண்டு கதவைத் திறக்காமல் இருக்கிறாள் அவள். அவளிடம் கெஞ்சுகிறான் அவன்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போது, அவள் ஆடையை அவன்  பற்றுவான்.அப்போது அவள், அய்யோ விடுங்கள் விடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சுவாள் அவனிடம். விடு விடு என்று சொன்னாலும், அந்த இடத்தை விட்டு விலக மாட்டாள். அது என்னவோ, விடாதே, பிடித்துக் கொள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது அவனுக்கு. உண்மை கூட அதுதானோ என்னவோ.

அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி  இருக்கிறதாம்.


பாடல்

விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
     வெகுளி மென் குதலை துகிலினைப் 
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய் 
   பெடைந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விடுமின் = விடுங்கள்

எங்கள்துகில் = எங்கள் ஆடைகளை

விடுமின் = விடுங்கள்

என்று = என்று

முனி வெகுளி = கோபித்து (ஊடல்)

மென் = மென்மையான

குதலை = மழலைச் சொல்லால் 

துகிலினைப் = ஆடையை

பிடிமின் = பிடித்து கொள்ளுங்கள்

என்ற பொருள் விளைய = என்ற அர்த்தம் தோன்ற

நின்றருள்செய் = நின்று அருள் செய்யும்

பெடை = அன்னம்

நலீர் = நல்லவர்களே

கடைகள் திறமினோ = கதவுகளை திறவுங்கள்


அந்த அருள் என்ற வார்த்தையை கண்டு நான் அசந்து போனேன்.

தெய்வம் தான் அருள் புரியும். அருள் கிடைத்தால் முக்தி கிடைக்கும். சொர்க்கம் கிடைக்கும்.

அவள் அதைத்தானே தருகிறாள்.

அதுவும் நின்று அருள் செய்யும்.  ஆடையை விடு விடு என்று சொன்னாலும், அவனை விட்டு விலகாமல் அங்கேயே நின்று அவனுக்கு அருள் செய்கிறாள்.

"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்வேன்"



Tuesday, May 27, 2014

கலிங்கத்துப் பரணி - கணவர் தோள் மலையில் ஆடி வரும் மயில்

கலிங்கத்துப் பரணி - கணவர் தோள் மலையில் ஆடி வரும் மயில் 


கணவன் போர்க்களம் சென்று திரும்பி வருகிறான். வரத் தாமதமாகி விட்டது. மனைவி கோவித்துக் கொண்டு கதவை திறக்க மாட்டேன் என்கிறாள். அவளை கொஞ்சி கொஞ்சி கதவைத் திறக்க சொல்கிறான் கணவன்.

வீரமும் காதலும் கொஞ்சும் பாடல்கள்.

கலிங்கத்துப் பரணியில் கடை திறப்பு.

பாடல்

விலையி லாதவடம் முலையி லாட
    விழி குழையி லாட
விழை கணவர்தோள் மலையி லாடி
    வரு மயில்கள் போலவரு
மடந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விலையி லாதவடம் = விலை மதிப்பில்லாத கழுத்தில் அணியும் ஆரம் (chain )

முலையி லாட = மார்பின் மேல் விழுந்து விளையாட

விழி குழையி லாட = பெண்களுக்கு கண்கள்   நீண்டு இருந்தால் அழகு. காதளவோடிய கண்கள் என்று சொல்வார்கள். இங்கே, பெண்களின் கண்கள் காது நீண்டு  அது காதில் அணிந்துள்ள அணிகலன்களோடு விளையாடுகிரதாம். விழி, குழையில் ஆட 


விழை கணவர் = விரும்புகின்ற கணவர் 

தோள் மலையி லாடி = தோள் நேட்ற மலையில் ஆடி
   
வரு மயில்கள் = வருகின்ற மயில்கள்

போலவரு = போல வரும்

மட நலீர் = வெகுளித் தனம் நிறைந்த நல்ல பெண்களே

கடைகள் திறமினோ = கொஞ்சம் கதவைத் திறங்கம்மா. திறக்க மாட்டீங்களா என்று கெஞ்சுகிறான், கொஞ்சுகிறான்.



Friday, September 7, 2012

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்


அவனும் அவளும் எதிர் எதிர் வீடு. 

பார்த்தது உண்டு. பேசியதில்லை. 

இருவருக்குள்ளும் காதல் ஊடு பாவாய் ஓடி கொண்டிருக்கிறது. 

தினமும் காலையில் அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் இருந்து ஒற்றை ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொள்வாள். 

வைக்கும் போது அவன் பார்க்கிறானா என்று ஓரக் கண்ணில் ஒரு பார்வை வேறு. உதட்டோரம் கசியும் ஒரு புன்னகை. 

அவள் பறித்து தலையில் சொருகியது ரோஜாவை மட்டுமா ? அவன் உயிரையும் தான். 


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


காதலன் போருக்கு சென்று திரும்பி வருகிறான்.

அவன் வருவான் வருவான் என்று காத்திருந்து சலித்துப் போனாள் அவள்.

கடைசியாக வந்து விட்டான். ஒரு புறம் அவனை காண வேண்டும் என்று ஆவல். 

மறு புறம் தன்னை காக்க வைத்ததால் வந்த கோவம். "நாம எவ்வளவு நாள் அவனைப் பார்க்காமல் கஷ்டப் பட்டோம்..அவனும் கொஞ்சம் படட்டும்"என்று கதவை திறக்காமல் ஊடல் கொள்கிறாள் காதலி.

அவளை சமாதனப் படுத்த காதலன் கொஞ்சுகிறான்

" நீ நடந்து வருவதே தேர் ஆடி ஆடி வருவது மாதிரி இருக்கு. உன் மார்பில் ஆடும் அந்த chain , அலை பாயும் உன் கண்...எல்லாம் பார்க்கும் போது மலையில் இருந்து ஆடி ஆடி இறங்கி வரும் மயில் போல் இருக்கிறாய் நீ "என்று அவளுக்கு ஐஸ் வைக்கிறான்...
  

Thursday, August 23, 2012

கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்


கொஞ்சம்போல அமுதம் கிடைத்தாலே எவ்வளவு இனிமையாக இருக்கும்..?
அதுவே கடல் அளவு கிடைத்தால் எப்படி இருக்கும் ?

அவள் கடல் அளவு அமுதம் போன்றவள்...அள்ள அள்ள குறையாத இன்பம்..
வற்றாத இன்பக் கடல்...

உடுக்கை போல் சிறுத்த இடை, காது வரை நீண்ட விழி, இளமையான அவள் மார்பு ...

ஒரு நாள் அவர்களுக்குள் ஊடல்...பாக்க மாட்டேன் என்று கதவை சாத்திக் கொண்டாள்...

அவளிடம் கெஞ்சுகிறான்..."கதவை திற"என்று கொஞ்சுகிறான்...அவள் மிஞ்சுகிறாள்..

அவர்கள் இடையே ஊடல் நாடகம் ஊடாடிக் கொண்டு இருக்கிறது....

Sunday, June 10, 2012

கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...


கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...

காதலனோடு கலந்து மகிழ்ந்து இருந்தாள்.

அந்த மயக்கத்தில் நிலவின் ஒளியை உடை என்று எடுத்து அணிந்து கொண்டு போனவளே...கதவை திற 

Saturday, June 2, 2012

கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


பெண், ஆணை விட அதிகம் உணர்ச்சி வசப் படுகிறாளோ? 

ஊடலும், கூடலும், கோபமும், புன்னகையும், காதலும், கண்ணீரும் மாறி மாறி சோப்புக் குமிழியின் நிறம் போல மாயா ஜாலம் காட்டும் கலிங்கத்துப் பரணி பாடல் இங்கே.

அவள் அவனோடு ஊடல் கொண்டு இருக்கிறாள்.

அவன் அவளை சமாதனப் படுத்துகிறான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வருகிறாள்.

அவனைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாய் இருக்கிறது. சரி போனால் போகிறது என்று ஊடலை விட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள்.

அது போதாதா நம்ம ஆளுக்கு.

அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் தர முனைகிறான்.

அவன் தன் மேல் கொண்ட காதலை அவள் அறிகிறாள்.

அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் சுரக்கிறது."ஏய், என்ன இது, அசடு மாதிரி அழுதுகிட்டு" என்று அவள் கண்ணீரை தன் விரலால் துடைக்கிறான்....

Tuesday, May 29, 2012

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா


கலிங்கத்துப் பரணி என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப் பட்டது.

எழுதிய காலம் கி.பி. 1112 என்று சொல்கிறார்கள்.

ஆயிரம் வருஷம் முந்தியது.

குலோத்துங்க மன்னன் கலிங்கத்தை வென்றதை பாராட்டி எழுதிய பாடல்.

பரணிக்கு ஒரு புலவன் ஜெயங்கொண்டார் என்று சிறப்பு பெற்றவர்.

காதல், வீரம், அந்த கால வாழ்கை முறை, என்று பல விஷயங்களை சேர்த்து எழுதி இருக்கிறார்.

அதில் கடை திறப்பு என்று ஒரு பகுதி.

ஜொள்ளர்களுக்கு பெரிய விருந்து.

வள்ளுவரின் காமத்துப் பாலோடு போட்டியிடும் பாடல்கள்.


படித்து முடித்தவுடன், உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையையை வரவழைக்கும் பாடல்கள்.

கடை (வாசல்) திறப்பு என்ற பகுதியில், வீரர்கள் போர் முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் மனைவியோ, காதலியோ அவர்கள் மேல் ஊடல் கொண்டு கதவை திறக்காமல் முரண்டு பண்ணுகிறார்கள்.

அவர்களை சமாதனம் பண்ணி கதவை திறக்க சொல்லும் பாடல்களின் தொகுப்பு.

romance இன் உச்ச கட்டம் !