Showing posts with label திருச்சதகம். Show all posts
Showing posts with label திருச்சதகம். Show all posts

Wednesday, September 2, 2015

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே


சொர்க்கம் நல்லதுதான்.

வீடு பேறு வேண்டும்தான்.

கைலாயம் கையில் கிடைத்தால் சுகம் தான்.

வைகுண்டம், பரமபதம் ..அடடா கிடைத்தால் என்ன சுகம்.

சரி, போகலாமா என்று கேட்டால் யார் வரத் துணிவார்கள் ?

யாராவது, இறைவனிடம் நான் உன்னிடம் வரவேண்டும் என்று வேண்டுகிறார்களா. அப்படியே வேண்டினாலும், சரி வா என்று இறைவன் அழைத்தால் போய் விடுவார்களா ?

இந்த உலகை விட்டுப் பிரிய யாருக்கு மனம் வரும்?

வைகுந்தம் அப்புறம் போகலாம், இந்த பூலோகத்தை அனுபவிப்போம் என்று இங்கேயே இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

இந்தச் சிக்கல், நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கே இருந்திருக்கிறது.

இறைவன் நேரில் வந்து, " வா போகலாம் " என்று அழைத்தான். சற்று தயங்கி நின்றார். இறைவன் போய் விட்டான்.

கிடந்து புலம்பித் தவிக்கிறார். ஐயோ, போகவில்லையே என்று.

திருவாசகம் எல்லாமே இந்தப் புலம்பல்தான்.

பாடல்

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருள்

மானேர் நோக்கி = மானைப் போன்ற கண்களைக் கொண்ட 

உடையாள் = உடையவளான பார்வதியை 

பங்கா  = பாதியாக கொண்டவனே

மறையீ றறியா = மறை + ஈறு + அறியா = வேதங்கள்  உன்னை முடிவாக அறியா

மறையோனே = மறைந்து இருப்பவனே, மறைகளுக்கு அப்பாற்பட்டவனே

தேனே = தேனே

அமுதே = அமுதே

சிந்தைக் கரியாய் = சிந்தனைகளுக்கு அரியவனே

சிறியேன் பிழைபொ றுக்கும் = சிறியவனான என் பிழைகளைப் பொறுக்கும்

கோனே = தலைவனே

சிறிதே கொடுமை பறைந்தேன் = சிறிய கொடுமைகள் சில சொன்னேன்

சிவமா நகர் = சிவ மாநகர் = கைலாயம்

குறுகப் போனார்  அடியார் = அடியார்கள் சென்றார்கள்

யானும் = நானும்

பொய்யும் = பொய்யும்

புறமே போந்தோமே. = வெளியே நின்று விட்டோம்

இறைவன் , வலிய வந்து ஆட்கொண்டான். இவர் போகவில்லை.

ஏன் போகவில்லை ?

பெரிய வேலையில் இருந்தார். பாண்டியன் அரசவையில் முதல் அமைச்சர் வேலை என்றால் சாதரணமா.

இப்படித்தான் வேலை, குடும்ப பொறுப்பு என்று அதை விட உயர்ந்தவற்றை விட்டு விடுகிறோமோ ?

வள்ளலார் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார்...


தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

அம்மா ஒரு தடை. பின்னர் தாரம் ஒரு தடை. பின்னர் பிள்ளைகள்....

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவை எல்லாம் எப்போதுதான்  தீருவது என்று சோர்கிறார் வள்ளல் பெருமான்.

ஒன்றைச் செய்யும் போது, மற்றது ஏதோ ஒன்றைச் செய்யாமல் விடுகிறோம்.

எதைச் செய்கிறோம் , எதை விடுகிறோம் என்று சிந்திப்போம்.



Tuesday, October 23, 2012

திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


பக்த கோடிகள், இறைவனை நம்பாதவர்களை விட புத்திசாலிகளா ?

இறைவனை தேடுவதும் அவனை அடைவதும் ஒரு அறிவான செயலா ? இறை அருள் பெற்ற பின் ஒருவன் முன்பிருந்ததை விட அறிவு அதிகம் பெற்றதாக கூற முடியுமா ? இறை அருள் பெறாதவர்கள் அறிவில் குறைந்தவர்களா ? 

இந்த குழப்பம் மாணிக்க வாசகருக்கும் இருக்கிறது. இறைவனிடமே கேட்கிறார். "உன் அருள் பெறுவதற்கு முன் நான் அறிவற்றவனாக இருந்தேன் என்று எனக்கு தெரியும்.. ஆனால், உன் அருள் பெற்ற பின், என் அறிவு கூடி விட்டதா?"  என்று 


 பாடல்:


அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.

சீர் பிரித்த பின் 

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அரு ஈசனே 

பொருள் 

அறிவனே = அறிவில் சிறந்தவனே

அமுதே = அமுதம் போன்றவனே

அடி நாயினேன் = நாயையை போன்ற அடிமையான நான்

அறிவனாகக் கொண்டோ = என்னை அறிவுடையவனாக ஆக்குவதற்கோ

எனை ஆண்டது = எனை ஆண்டு கொண்டது ?

அறிவிலாமை = (நான்)அறிவு இல்லாமை இருந்தது

அன்றே கண்டது = அன்றே நான் கண்டு கொண்டது

ஆண்ட நாள் = நீ என்னை ஆண்டு கொண்ட நாள் முதல் 

அறிவனோ = நான் எதையும் அறிந்தவனா ?

அல்லனோ = இல்லை அறிவில்லாதவனோ ?

அரு ஈசனே  = நான் அதை தெரிந்து கொள்ள அருள் புரிவாய் ஈசனே 

Monday, October 22, 2012

திருச்சதகம் - கரை காணாக் கடல்


திருச்சதகம் - கரை காணாக் கடல் 


பிறவியை பெரிய கடல் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 

கடல், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நமக்கு என்ன என்று நாம் இருப்போம். 

மாணிக்க வாசகர் அந்த பிறவி பெருங்கடலை நம் மனதில் தைக்கும்படி உணர்த்துகிறார். 

பெரிய கடல். அந்த கடல் நடுவே (கரையோரம் அல்ல) நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டு தத்தளிகிறீர்கள். அலை உங்களை போட்டு புரட்டி எடுக்கிறது. புயல் காற்று ஒரு புறம் ஊசி போல் துளைக்கிறது. சற்று தூரத்தில் சில சுறா மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. எப்படி கரை சேர்வது என்று தவித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு மரத்துண்டு கிடைக்கிறது பற்றிக்கொள்ள. உங்கள் அருகே வந்து ஒரு மாலுமி கரை இருக்கும் இடத்தை காட்டுகிறார்.  உங்களுக்கு எப்படி இருக்கும் ?

பிறவி என்ற பெருங்கடல்.

துன்பம் என்ற அலை அடித்துக்கொண்டே இருக்கிறது

பெண்கள் மேல் கொண்ட மோகம் என்ற புயல் காற்று அலைகழிக்கிறது

ஆசை என்ற சுறாமீன் விழுங்க வருகிறது

அஞ்செழுத்து தான் தெப்பம்

கரை காட்டியது அவன் அருள்

பாடல்