Wednesday, January 24, 2024

கார் நாற்பது - இன்னே வருவர் நமர்

 கார் நாற்பது - இன்னே வருவர் நமர் 


பருவ நிலைகள் நம் மனதைப்  பாதிக்கின்றன. 


மழைக் காலம் 


அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் எப்போதும் மேகம் சூழ்ந்து இருண்டு இருக்கிறது. மரங்களும் செடிகளும் துளிர் விட்டு, மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன. சில மரங்களிலும், செடிகளிலும் புது மொட்டுகள் மலரலாமா வேண்டாமா என்று மெல்ல எட்டிப் பார்க்கின்றன. வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. காற்றில் ஈர மணம். 


காதலனை பிரிந்து இருக்கிறாள். அவன் மட்டும் இப்போது கூட இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்குகிறாள். 


தூரத்தில் மின்னல் வெட்டுகிறது. 


அந்த மின்னல் அவன் வர இருக்கிறான் என்ற செய்தியை சொல்லவதாக அவளுக்குப் படுகிறது. அவன் அனுப்பிய தூது என்று நினைக்கிறாள். 


பாடல் 



கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த

நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்

இன்னே வருவர் நமரென் றெழில்வானம்

மின்னு மவர்தூ துரைத்து


பொருள் 


கடுங்கதிர் = கடுமையான வெப்பம் 

 

நல்கூரக் = நல்குரவு என்றால் வறுமை. கோடைக் காலம் வறுமை அடைந்தது என்றால், வெயில் குறைந்து விட்டது என்று அர்த்தம். கோடைக் காலம் போய் விட்டது. 


கார் = கார் காலம், அதாவது மழைக் காலம் 


செல்வ மெய்த = மேலும் மேலும் வலுப்பெற 


நெடுங்காடு = பெரிய காடு 


நேர் = நேர்த்தியான 


சினை யீனக் = சினை என்றால் உறுப்பு. இங்கே காட்டில் உள்ள மரம், செடி, கொடிகளின் உறுப்பான மலர்கள். மலர்கள் மொட்டு விட்டு பூக்கத் தொடங்கி விட்டன. 


கொடுங்குழாய் = வளைந்த காதணியை அணிந்தவளே 


இன்னே வருவர் = இப்போதே வருவார்  


 நமரென் றெழில்வானம் = நமர் + என்று + எழில் + வானம் = நம் துணைவர் இப்போதே வருவார் என்று அழகான வானம் 


மின்னு மவர்தூ துரைத்து = மின்னும் அவர் தூது உரைத்து = மின்னல் மூலம் அவர் சொல்லி அனுப்பிய தூதினை என்னிடம் சொல்லி 


இப்படி ஒரு நாற்பது பாட்டு இருக்கிறது. அத்தனையும் காதலை, பிரிவை, இயற்கையை ஒட்டிய வாழ்வை சித்தரிக்கும் பாடல்கள். 


1 comment:

  1. கிட்ட தட்ட இதே அர்த்தத்தில் ஒரு குறள் நினைவிர்க்கு வருகிறது. காதலன் தூது கொண்டு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.

    ReplyDelete