Saturday, May 15, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச

 இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச 


ஒரு சில நாட்களாய் பயங்கர வயிற்று வலி. மருத்துவரிடம் போகிறோம். அவர் சோதனை எல்லாம் செய்து விட்டு, ஒரு மாத்திரை தருகிறார். அதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். 


பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. ஓரிரு நாட்களில் திருமணம். எதிர்பாராத செலவு வந்து விட்டது. கையில் காசு இல்லை. யார் யாரிடமோ கேட்டாகி விட்டது. கடைசி நிமிடத்தில் எல்லோரும் கை விரித்து விட்டார்கள். என்ன செய்வது என்று ஒரே தவிப்பு. கடைசியாக ஒரு நண்பரிடம் சென்று கேட்கிறோம். அவரோ, "இதை ஏன் முதல்லியே என் கிட்ட சொல்லல " என்று கோபித்துக் கொண்டு, நாம் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே தந்து, "முதல்ல போய் கல்யாணத்தை நல்ல படியா முடி...மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று நம்மை அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


நம் மனம் எவ்வளவு சந்தோஷப் படும். 


இப்படி நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் யாரோ ஒருவர் வந்து உதவி பண்ணி நம்மை கை தூக்கி விடுகிறார். 


எல்லாம் குருவருள். 


மேகத்தின் தன்மை மழை பொழிவது. 


அது எங்கே பொழிய வேண்டும், இந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நமக்கு வேண்டியவன், அங்கே கொஞ்சம் நிறைய பொழிவோம். இந்த நிலத்துக்காரன் மோசமானவன், அவன் நிலத்தில் பெய்யக் கூடாது என்று பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை. 


எல்லோருக்கும் பொதுவாக அது பொழிகிறது. விருப்பு வெறுப்பு கிடையாது. நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. 


இராமானுசரே, உம்முடைய கருணை அந்த கார் மேகத்தைப் போன்றது. உம்முடைய அந்த கருணை உள்ளத்தை யார் அறிவார்கள்? யாரும் அறிய மாட்டார்கள்.  எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு துன்பத்தைப் பற்றிக் கொண்டு தவிக்கின்றேன் நான். நான் அந்த துன்பங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேன் இல்லை என்றால் அது என்னைப் பிடித்துக் கொள்கிறது.  எப்படியோ இந்த துன்பங்கள் என்னை தேடி வந்து அடைந்து விடுகின்றன. வருவது மட்டும் அல்ல, என் கூடவே நிரந்தரமாய் தங்கியும் விடுகின்றன. ஒண்ணு போனா இன்னொன்னு வந்து விடுகிறது.  நீர் வந்து என்னை இந்தத் துன்பக் கடலில் இருந்து கரை ஏற்றிய பின், உன்னுடைய பெருமைகளை எல்லாம் நினைக்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் திருவரகத்து அமுதனார். 


பாடல் 


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_15.html


(please click the above link to continue reading)


காரேய் = நீர் கொண்ட கரிய மேகம் 


கருணை இராமானுச! = கருணை கொண்ட இராமானுசரே 


இக்கடலிடத்தில் =  இந்தப் பிறவி என்ற கடலில் 


ஆரே அறிபவர் = யார் அறிவார்கள் 


நின்னருளின் தன்மை?! = உன் அருளின் தன்மையை 


அல்லலுக்கு = துன்பத்துக்கு 


நேரே உறைவிடம் நான்! = எப்போதும் இருப்பிடம் நான் 


வந்து நீ என்னை  = நீ வந்து 


உய்த்த பின் = என்னை காப்பாற்றிய பின் 


உன் சீரே  = உன் பெருமைகளை 


உயிர்க்குயிராய் = உயிருக்கும் உயிராய் 


அடியேற்கு இன்று தித்திக்குமே! = அடியேனாகிய எனக்கு இன்று தித்திகின்றது 




1 comment:

  1. "அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்!" - வேடிக்கையான ஆனால் உணர்ச்சி பொங்கும் வரி!

    நன்றி.

    ReplyDelete