Monday, December 3, 2018

பெரிய புராணம் - காதலும் கோபமும்

பெரிய புராணம் - காதலும் கோபமும் 


சுந்தரர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். எல்லோரும் திருமண மண்டபம் வந்து விட்டார்கள். அப்போது, சிவ பெருமான் ஒரு முதியவர் வேடத்தில் வந்து "இந்த சுந்தரன் என் அடிமை. இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ...நான் இட்ட வேலைகளை செய்து கொண்டு எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் ..இவன் எனக்கு அடிமை என்று இவன் தாத்தா எழுதித் தந்த ஓலை என்னிடம் இருக்கிறது " என்றார்.

அது கேட்ட சுந்தரர் கோபம் கொண்டு "நீ என்ன பித்தனா ? எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா " என்று பேசினார்.

சிவன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இப்போது புறப்படு. நிறைய வேலை இருக்கிறது "

சுந்தரர் பார்த்தார். இந்த ஆளைப் பார்த்தால் மனதில் ஏதோ ஒரு அன்பு பிறக்கிறது. இருந்தாலும் இவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருகிறது. எதுக்கும் அந்த ஓலையில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து "சரி, நீ ஓலையைக் காட்டு"  என்றார்.


பாடல்


கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 
தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை.


பொருள்

கண்டது ஓர் வடிவால் = கண்டது ஒரு வடிவத்தை


உள்ளம் காதல் செய்து  = கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு

உருகா நிற்கும் = உருகி நிற்கும்

கொண்டது ஓர் பித்த வார்த்தை  = ஆனால், இவர் பேசுவதோ பைத்தியகாரன் மாதிரி இருக்கிறது

கோபமும் உடனே ஆக்கும் = கேட்டவுடன் உடனே கோபம் வருகிறது

உண்டு ஓர்ஆள் ஓலை  = ஒரு ஓலை இருக்கிறது என்று சொல்கிறாரே

என்னும் அதன் உண்மை அறிவேன் = அதன் உண்மை என்ன என்று அறிவேன்

என்று  = என்று மனதில் நினைத்து

தொண்டனார் = சுந்தரர்

 ‘ஓலை காட்டு’ என்றனர் = சரி அந்த ஓலையை காட்டு என்றார்

 துணைவனாரை. = துணைவனான சிவனைப் பார்த்து

காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் வந்து விடும்.

அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு.

மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும்.

மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல் , அப்படியே முடிவு செய்து விடும்.

சிவனை கண்டவுடன் சுந்தரருக்கு உடனே மனதில் காதல் பிறந்தது.

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.



பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.

இராமன் கானகம் போகிறான். தூரத்தில் அவன் வருவதை அனுமன் காண்கிறான்.

பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. "என் எலும்பு உருகுகிறது. அளவற்ற காதல் பிறக்கிறது. அன்புக்கோ அளவு இல்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை " என்று தவிக்கிறான்.

துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.

குகன் இராமனைக்  கண்டபோதும், விபீஷணன் இராமனைக் கண்ட போதும் இதே நிலை தான்.  பார்த்தவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு வரும். நீண்ட நாள் பிரிந்த பின் கூடுவது போல ஒரு அன்பு பிறக்கும்.

முன்பே கூறியது போல, இறைவனை தேடி காண முடியாது. அவனை காணும் போது உள்ளம் அறியும். அறிவுக்குத் தெரியாது. அறிவு தேடிக் கொண்டே இருக்கும். அறிவின் வேலை அது.

சுந்தரருக்கு சிவன் மேல் காதல் பிறந்த அதே நேரம், சிவனின் சொற்களை கேட்டு கோபமும் பிறக்கிறது.

இருந்தும், இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உண்மை என்ன என்று அறிய முற்படுகிறார்.

நாம் வாழ்வில் உணர்ச்சி மிகுதியில் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

அது அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி

 நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

பெரிய புராணத்தில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை. அவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_3.html

2 comments:

  1. நானாக பாடல்களை படித்தால் இவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியவில்லையே!

    ReplyDelete
  2. இங்கே பதிந்துள்ள கம்ப ராமாயணப் பாடல் நல்ல தூளாக இருக்கும் போல இருக்கிறதே! இதயம் மாறிப் புகுந்தனர்! என்ன இனிமையான கற்பனை!

    ReplyDelete