Tuesday, December 18, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான்

திருப்பாவை - நமக்கே பறை வருவான் 



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்


மார்கழி திங்கள் = மார்கழி மாதத்தில்

மதிநிறைந்த = நிலவு நிறைந்த

நன்னாளால் = நல்ல நாளில்

நீராடப் போதுவீர்! = நீராடப் போகின்றவர்களே

போதுமினோ, = போவோம் வாருங்கள்

நேரிழையீர்! = உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே

சீர்மல்கும் =செல்வம் கொழிக்கும்

ஆய்பாடிச் = ஆயர்பாடியில்

செல்வச் சிறுமீர்காள்! = செல்வ சிறுமிகளே

கூர்வேல் = கூரிய வேலைக் கொண்டு

கொடுந்தொழிலன் = கொடுமையான தொழில் செய்யும்

நந்தகோபன் = நந்தகோபனின்

குமரன் = குமரன்

ஏரார்ந்த கண்ணி = ஏர் போன்ற கூர்மையான கண்களை உடைய

யசோதை  = யசோதையின்

இளஞ்சிங்கம் = இளைய சிங்கம்

கார்மேனிச் = கரிய மேனியை உடைய

செங்கண் = சிவந்த கண்களை உடைய

கதிர் = சூரியன்

மதியம் = நிலவு

போல் = போன்ற

முகத்தான் = முகத்தை உடைய

நாரா யணனே = நாராயணனே

நமக்கே = நமக்கே

பறைதருவான் = பறை தருவான்

பாரோர் = உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும்

புகழப் = புகழும்படி

படிந்தேலோ ரெம்பாவாய்! = (நோன்பில்) படிந்து இதை ஏற்றுக் கொள்வாய்

இரண்டு சொற்களை சேர்க்கும் போது ஒரு புது எழுத்தோ அல்லது சொல்லோ வரும். இரண்டு சொற்களை ஒட்டுப் போடும் பசை போல. அந்த விதிக்கு புணர்ச்சி இலக்கணம் என்று பெயர்.

இலக்கணத்தில் அது ஒரு பெரிய பிரிவு. வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள், பண்புப் பெயர் புணர்ச்சி என்று பல விதிகள் உள்ளன.

இடைச் சொல் என்பது அவற்றுள் ஒன்று. இரண்டு சொற்கள் சேரும் பொழுது நடுவில் ஒரு எழுத்தோ சொல்லோ வந்து அந்த சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை, சிறப்பை குறிக்கும் சொல்லுக்கு இடைச் சொல் என்று பெயர்.

ஏகாரம் அவற்றுள் ஒன்று.

இரண்டு சொற்களுக்கு நடுவில் "ஏ" என்று ஒரு எழுத்து வந்து அந்த சொற்களை இணைத்து அவற்றிற்கு மேலும் பொருள் சேர்ப்பது ஏகாரம்.

நால்வரில் இராமன் சிறந்தவன்.

நால்வரில் இராமனே சிறந்தவன்.

இதில் இரண்டாவது வரும் வாக்கியத்தில் உள்ள இராமனே என்ற சொல்லில் ஏகாரம் வருகிறது. அந்த ஏகாரம் பிரி நிலை ஏகாரம் எனப்படும். மற்றவர்களில் இருந்து இராமனை பிரித்துக் காட்டுவதால்.


ஊருக்குத்தானே போகிறாய் என்ற வாக்கியத்தில் வரும் ஏகாரம் வினாப் பொருளில் வந்தது. 


அன்பே சிறந்தது என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. தேற்றம் என்றால் உறுதி என்று பொருள்.

அவள் சிரித்தால் முத்தே தோற்றுப் போகும் என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு ஏகாரம். முத்து தோற்றுப் போகும் என்றும் சொல்லலாம். முத்தே தோற்றுப் போகும் என்றால் வேறு எதுவும் வெல்லாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 

பிச்சைக் காரனே கூட இதை வாங்கிக் கொள்ள மாட்டான் என்று சொல்லும் போது ஏகாரம் இழிவு நிலையில் வந்தது. 

இந்த பாசுரத்தில் ஆண்டாள் இரண்டு இடங்களில் ஏகாரத்தை கையாளுகிறாள். 

நாராயணனே, நமக்கே பறை தருவான் என்கிறாள். 

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொல்லி இருக்கலாம். 

நாராயணனே என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு. வேறு  யார் தந்தாலும் அவ்வளவு சிறப்பு இல்லை. 

அவன் எல்லோருக்கும் தர மாட்டான், "நமக்கே" தருவான். 

சரி, என்ன தருவான்? "பறை" தருவான். 

இது என்ன பறை? வேறு யாருமே சொல்லாத ஒன்றாக இருக்கிறதே. பறை என்றால்  ஒலி எழுப்பும் ஒரு வித தோல் கருவி. அதை வாங்கவா இந்தப் பாடு?

இருக்காது. 

பறை என்றால் சொல்லுவது. சத்தியம் செய்வது என்று எடுத்துக் கொள்ளலாம். 

பறைதல் என்றால் சொல்லுதல். இன்றும் மலையாளத்தில் இந்த சொல் வழங்குகிறது. 

"ஞான் பறையுன்னது கேக்கு"

"ஞான் பறைஞ்சிட்டலே"

என்று சொல்லுவார்கள். 

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு வரம் தருவான் என்று சொல்கிறாள். 

வரம் என்பது என்ன? நாம் கேட்பதை, விரும்புவதை இறைவன் "அப்படியே ஆகட்டும் " என்று சொல்லுவது தானே?

அதுதான் பறை தருவது. 

நாம்  இறைவனிடம் என்று இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கிறோம்.  இறைவனுக்குத் தெரியாதா, நமக்கு எது வேண்டும், எப்போது வேண்டும் என்று? அவனிடம் சென்று கேட்பது அவனுடைய சக்தியை குறைத்து மதிப்பிடுவது போன்றது. 

பெற்ற குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்று அறிந்து பால் தருவாள் தாய். அந்தக் குழந்தை வந்து, "அம்மா, எனக்கு பசிக்கிறது , பால் தா " என்று கேட்பதில்லை. 

தாய்க்குத் தெரியும் எப்போது என்ன தர வேண்டும் என்று. 

இறைவன் தாயினும் மேலானவன் அல்லவா?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து 

என்பார் மணிவாசகர். 

நமக்குஎன்ன வேண்டும் என்று நாம் அறிவதற்கு முன்பே இறைவன் அறிந்து நமக்குத் தருவான் என்பது அதன் பொருள். 

அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்....

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

அவனுக்குத் தெரியும் நமக்கு எது தேவை என்று. எதுக்கு நாம போயி கேக்கணும். அவனே தருவான். 

இன்னொரு செய்தியும் கூட எனக்கு இந்த பாசுரத்தில் பிடித்தது....அது என்ன என்றால்...


நமக்கு ஒரு நல்லது கிடைக்கும் என்றால் அது எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்ற பரந்த மனப்பான்மை. 

யோசித்துப் பார்ப்போம். நமக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைக்கிறது என்றால் நாம்  அதை எல்லோரிடமும் சொல்வோமா ? எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள நினைப்போமா அல்லது நமக்கு மட்டுமே வேண்டும் என்று நினைப்போமா?

ஆண்டாள், இறைவனை நாடி,  அவன் அருள் பெற நினைக்கிறாள். தான் மட்டும் இரகசியமாக போய்  அதைப் பெற்றுக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கவில்லை.

"செல்வச் சிறுமிகாள்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டுப் போகிறாள். 

எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

மேலும் சிந்திப்போம்.




4 comments:

  1. மேலெழுந்தவாரியாக பாடலை படித்தால் ஆண்டாளின் சொல்லாண்மையும் ஆழ்ந்த கருத்தும் எளிதில் புலப்படாது. சிறப்பாக தெளிவு படுத்தினீர்கள். நன்றி

    ReplyDelete
  2. "நாராயணனே", "நமக்கே பறை" என்ற சொற்களின் கூட்டை அருமையாக விளக்கியதற்கு நன்றி.

    நானும் பல முறை இந்தப் பாடலைப் படித்திருக்கிறேன், அனால் பறை என்றால் என்ன என்று யோசித்ததே இல்லை!

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
  4. விளக்கம் அருமை. மிக்க நன்றி🙏

    ReplyDelete