Wednesday, July 17, 2013

குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை

குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை 


இறைவனைப் பற்றி நினைக்கவும், கோவில்களுக்குப் போகவும் எங்கே நேரம் இருக்கிறது ? பணம் சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையின் அத்தனை நேரமும் போய் விடுகிறது. பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களை கட்டி கொடுக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், பாரின் டூர் போக வேண்டும்...இப்படி எல்லாவற்றிற்கும் பணம் தேவைப் படுகிறது.

எவ்வளவு இருந்தாலும் போத மாட்டேன் என்கிறது.

இந்த பணம் எல்லாம் சேர்த்த பின், இறைவனைப் பற்றி சிந்திப்போம் என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

என்று நிறைவது ? என்று நினைப்பது ?

நிறைய பேருக்கு உதவி செய்ய ஆசை தான். அனாதை ஆசிரமத்திற்கு, முதியோர் இல்லத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நல்ல எண்ணம் இருக்கும்.

ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கும்.

இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்த பின் அனுப்பலாம் என்று நினைப்பார்கள்.

என்று நிறைவது ? என்று அனுப்பவது ?

தானம் பண்ணவும், இறைவனை நினைக்கவும் பணம் அவசியம் இல்லை. மனம் தான் முக்கியம்.

காட்டுக்குப் போய் , செடிகளில் முளைத்து உதிர்ந்து கிடந்த தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியின் கையில் கொடுப்பார் குசேலர்.

அவர் மனைவி, அந்த தானியங்களை வாங்கி அதை குத்தி, பக்குவம் பண்ணி சமைப்பாள். சமைத்த அந்த உணவில், அதிதிகளுக்கு என்று கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, மீதியில் குசேலருக்கு கொஞ்சம் தருவாள். அதை மகிழ்வுடன் உண்டு, மந்திரங்களுக்கும் மறைகளுக்கும் எட்டாத திருமாலின் திருவடிகளை நினைத்து இருப்பார் .


பாடல்


வந்துதன் மனைகைந் நீட்ட 
          வாங்கிமற் றவற்றைக் குற்றி
     அந்தமெல் லியல்பா கஞ்செய் 
     ததிதிக்கோர் பாகம் வைத்துத் 
          தந்ததன் பங்க யின்று
     தவலரும் உவகை பூத்து
          மந்திர மறைகட் கெட்டா
     மாலடி நினைந்தி ருப்பான்.


பொருள்





வந்து = கானகத்தில் இருந்து தானியங்களை பொறுக்கிக் கொண்டு வந்து

தன் மனை = அவருடைய (குசேலரின்) மனைவி

கைந் நீட்ட = கை நீட்டிப்

வாங்கி = வாங்கி

மற்றவற்றைக் குற்றி = அவற்றை குற்றி

அந்த மெல்லியல் = அந்த பெண்மணி (குசேலனின் மனைவி )

பா கஞ்செய் = பாகம் செய்து (கஞ்சி போன்ற ஒரு உணவு)

ததிதிக்கோர் பாகம் வைத்துத் = அதிதிக்கு ஒரு பாகம் (பகுதி) வைத்து

தந்ததன் பங்க யின்று = தனக்கு தந்ததன் பங்கை இன்று

தவலரும் = தவசீலரான அவரும்

உவகை பூத்து = மகிழ்வுடன்

மந்திர மறைகட் கெட்டா = மந்திரங்களுக்கு மறைகளுக்கும் எட்டாத

மாலடி நினைந்தி ருப்பான் = திருமாலின் திருவடிகளை நினைத்து இருப்பான்

அதிதிகளை உபசரிக்கவும், இறைவனை நினைக்கவும் வறுமை ஒரு தடை இல்லை.


1 comment: