Wednesday, July 24, 2013

திருக்குறள் - நகையும், பகையும்

திருக்குறள் - நகையும், பகையும் 



நண்பர்களுக்கு இடையிலேயோ, உறவினர்களுக்கு இடையிலேயோ சில சமயம்  கிண்டல், குத்தல், நையாண்டி என்று வரும்போது ஏதாவது மற்றவர்களைப் பற்றி ஏதாவது சற்று மனம் புண் படும்படி சொல்லி விடுவோம்.

சும்மா ஒரு ஜோக்குக்குத் தானே, ஒரு தமாஷ் தானே என்று என்று நாம் நினைக்கலாம். அவர்களும் அதை பெரிதாக நினைக்காமல் விடலாம்.

ஆனால், அது அவர்களுக்கு மன வேதனையை தரும் என்பது  நிச்சயம். காட்டிக் கொள்ளா விட்டாலும், மனதுக்குள் வருந்துவார்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் என்று யாரேனும் இருக்கலாம். நம்முடைய பகைவர் என்பற்காக அவர்கள் முட்டாள்கள் என்றோ, அறிவற்றவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. அவர்களிடமும் சில நல்ல பண்புகள் இருக்கலாம்.

இரண்டு விஷயங்களை கூறுகிறார் வள்ளுவர்.

நண்பர்கள்தானே என்று இகழ்ச்சியாகப் பேசக் கூடாது.
பகைவர்கள்தானே என்று அவர்களின் நல்ல குணங்களை மறுக்கக் கூடாது.

இது இரண்டும் நல்ல பண்புள்ளவர்களுக்கு அழகு.

அதாவது, விளையாட்டாகக் கூட நண்பர்களையோ உறவினர்களையோ இகழ்ந்து பேசக் கூடாது. அப்படி செய்தால், நாம் அவர்களின் நட்பையோ உறவையோ இழக்க நேரிடலாம்.

பகைவர்கள் ஆனால் கூட, அவர்களின் நல்ல பண்புகளை போற்ற வேண்டும்.


பாடல்

நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் 
பண்புள பாடறிவார் மாட்டு.


சீர் பிரித்த பின்

நகை உள்ளும் இன்னாது இகழ்ச்சி பகை உள்ளும்
பண்புள்ளது பாடு அறிவார் மாட்டு

பொருள்





நகை உள்ளும் இன்னாது இகழ்ச்சி = சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் போதும் பிறரை இகழ்வது துன்பம் தரக் கூடியது.

பகை உள்ளும் = பகைவர்களிடத்தும்

பண்புள்ளது = பண்பு உள்ளது

 பாடு அறிவார் மாட்டு = பாடு என்றால் பண்பாடு. பண்பாடு  அறிந்தவர்களிடம்

சற்றே கூர்ந்து நோக்கினால் தெரியும்....வள்ளுவர் நண்பர் என்றோ, உறவினர் என்றோ கூறவில்லை. 

இரண்டாவது அடியில் பகை உள்ளும் என்று கூறியதால், முதல் அடியில் நண்பர்கள்/உறவினர்கள் என்று  எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பகைவர்களோடு சிரித்து பேசி இருக்க மாட்டோம். நண்பர்களுடனோ, உறவினர்களுடநோதான் சிரித்துப் பேசி மகிழ்ந்து  இருப்போம். அந்த சமயத்தில்  இகழ்வாகப் பேசக் கூடாது என்கிறார். அந்த சமயத்தில் யாரை இகழ்வாகப் பேசுவோம் ? பகைவரை கூட அந்த சமயத்தில் இகழ்வாகப் பேசலாம். ஆனால், பகைவரைப் பற்றி அடுத்த வரியில் சொல்லுவதால் இந்த வரி   நண்பரையோ அல்லது உறவினரையோ சுட்டுவதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். 

பண்பாடு என்பது, நண்பர்களை உறவினர்களை புண்படுத்தாமல் பேசி, பகைவர்களின் நல்ல குணத்தை  போற்றி இருப்பது. 


இப்ப கூட சில பேர் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விழுந்து விழுந்து உதவி செய்வார்கள்.  ஆனால் சமயத்தில் ஏதாவது எசகு பிசகாக சொல்லி பேரை கெடுத்துக் கொள்ளுவார்கள். 

என்ன சரிதானே ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டைப் பற்றி சிந்தித்த கலாசாரம்.

சின்ன வயசிலேயே இந்த மாதிரி குறளை எல்லாம் சொல்லித்     தந்திருந்தால் வாழ்க்கை  எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். 

அதனால்  என்ன ? இப்பவாவது தெரிந்ததே .....



2 comments:

  1. Better late than never:-).Very good message.

    ReplyDelete
  2. உண்மைதான். நானே தவறாகப் பேசி, பின் என் மனமே வருந்தியிருக்கிறது.

    "யாகாவாராயினும் நா காக்க"

    ReplyDelete