Sunday, July 14, 2013

ஜடாயு - எல்லாம் என்னால தான்

ஜடாயு - எல்லாம் என்னால தான் 


 ஜடாயு    மிக உக்கிரமாக போர் புரிந்தான். கடைசியில் இராவணன், சிவன் தந்த சந்திரகாந்த வாளால் ஜடாயுவை வீழ்த்தினான்.

சீதை மிக மிக வருத்தப் பட்டாள் .

எல்லாம் தன்னால் தான் நிகழ்ந்தது என்று வருந்துகிறாள். வீட்டில் ஒரு துக்கம் என்று வரும் பொழுது, எல்லாவற்றிற்கும் நாம் தான் காரணம் என்று ஒரு குற்ற உணர்வு எழுவது எல்லோருக்கும் இயற்கை தான்.

சீதை நினைக்கிறாள், நான் இந்த வீட்டில் அடி எடுத்த வைத்த பின் என் குடும்பத்திற்கு பழி வந்தது (குல முறை பிறழ்ந்தது, மூத்தவன் முடி சூட்ட முடியவில்லை); என்னை இராவணன் தூக்கிக் கொண்டு போவதால் இராமனின் வில்லுக்குப் பழி வந்தது, இதோ இப்போது என்னால் இந்த ஜடாயுவும் மாள்கிறான் என்று சீதை வருந்துகிறாள்.

பாடல்


'கற்பு அழியாமை என் கடமை; ஆயினும், 
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் 
வில் பழியுண்டது;  வினையினேன் வந்த 
இல் பழியுண்டது' என்று, இரங்கி ஏங்கினாள்.



பொருள்




'கற்பு அழியாமை என் கடமை; ஆயினும் = கற்பு அழியாமல் காப்பது என் கடமை ஆயினும்


பொற்பு அழியா = அழகு அழியாத

வலம் பொருந்தும் = வலிமை பொருந்திய

போர்வலான்  = போரில் வல்லவனான (இராமன்)

வில் பழியுண்டது = வில் பழி கொண்டது

வினையினேன் = பொல்லா வினை கொண்ட நான்

வந்த = புகுந்த

இல் பழியுண்டது = இல்லம் பழி கொண்டது

என்று, இரங்கி ஏங்கினாள். = என்று வருந்தி ஏக்கம் கொண்டாள்

அன்றிலிருந்து இன்று வரை, வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் வீட்டில் இருக்கும் பெண்ணே காரணாமாய் இருக்கிறாள்.

பெண்ணை வைத்தே  குடும்ப சக்கரம் சுழல்கிறது.

 

No comments:

Post a Comment