Thursday, July 25, 2013

இராமாயணம் - தூங்கல் இல் குயில்

இராமாயணம் - தூங்கல் இல் குயில் 



இராமனும் இலக்குவனும் மான் பின் போன பின், இராவணன் வயதான துறவி போல் மாறுவேடத்தில் சீதை இருக்கும் இடம் நோக்கி வருகிறான்.

"இந்த குடிலில் இருப்பவர்கள் யார் " என்று நடுங்கும் குரலில் கேட்க்கிறான்.

சீதை அவனை வரவேற்கிறாள்....


தூங்கல் இல் குயில் கெழு    சொல்லின், உம்பரின் 
ஓங்கிய அழகினாள்    உருவம் காண்டலும், 
ஏங்கினன் மனநிலை    யாது என்று உன்னுவாம்? 
வீங்கின; மெலிந்தன;    வீரத் தோள்களே. 



அவளுடைய குரல் குயில் போல இனிமையாக இருக்கிறது. அதுவும் தூக்கம் இல்லாத குயில் போல என்கிறான் கம்பன்.

அது என்ன தூக்கம் இல்லாத குயில் ?

ஏதோ ஒரு சோகம். சோகத்தால் தூக்கம் வரவில்லை. அதன் குரலில் அந்த ஏக்கம் தெரிகிறது.  சோகம் இழையோடுகிறது.

அவள் தேவதைகளை விட அழகாக இருக்கிறாள்.

இராவணின் ஏக்கம் ஏகத்துக்கு ஏறுகிறது.

அழகு பிரமிக்க வைக்கும். அழகு பேச்சிழக்க வைக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வார்த்தை வராது.

காலம் நின்று போகும். நான் என்பது மறந்து போகும்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்பார் அருணகிரி.

அவன் மனதில் ஆயிரம் எண்ணம் ஓடுகிறது. அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கு என்ன  தெரியும் என்று கேட்க்கிறான் கம்பன்.

அவளைப் பார்த்த உடன் அவனுடைய தோள்கள் விம்மின...அவளை கட்டி    அணைக்கும்  ஆசையால். முடியாது என்பதால் அந்தத் தோள்கள் சோர்ந்து விழுந்தன.


1 comment:

  1. தூக்கம் இல்லாத குயில்- என்ன ஒரு அருமையான சித்தரிப்பு!

    வீங்கின, மெலிந்தன - இரண்டு வார்த்தையில் எவ்வளவு பொருள்!

    தூள்!

    ReplyDelete