Sunday, July 7, 2013

திரு அருட்பா - மனமெனும் குரங்கு

திரு அருட்பா - மனமெனும் குரங்கு 


மனம் ஒரு குரங்கு என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். குரங்காவது ஒரு கிளையை விட்டு மறு கிளை தாவும். மனித மனம் அப்படியா ? இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் பறக்கும்.

வல்லாளர் சொல்கிறார் மனித மனம் - பேய் பிடித்த, கள் உண்ட, பிரம்பால் அடி கொண்டு, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு என்று. அப்படிப் பட்ட குரங்கு எப்படி நடந்து கொள்ளும் ? அது போன்றது மனித மனம்.

வள்ளலார் புலம்புகிறார் ....

வள்ளலே, நான் படும் பாட்டை வாயால் சொல்லி முடியாது...என்ன என்ன செய்வேன், என்ன செய்வேன்...

உன் திருவடிகளை அண்டாது, பொன்னாசை, மண் ஆசை, பெண் ஆசை என்று உழலும் என் மனது

பேய் பிடித்த, கள் உண்ட, கோலினால் அடி கொண்ட, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு போன்றது என் மனது,

அது எப்படி கிடந்து உழல்கிறது தெரியுமா ?

குயவன் மண் பாண்டம் செய்யும் போது சுற்றும் சக்கரம் போல சுழல்கிறது, சிறு பிள்ளைகள் விளையாடும் பந்து போல அங்கும் இங்கும் கிடந்து அலைகிறது....

அது மட்டுமா ?

பசி கொண்ட விலங்கு எப்படி மற்ற விலங்கின் மேல் பாயுமோ அப்படி பாய்கிறது என் மனது....பெரும் சூறாவளி காற்றில் கிடந்து உழலும் பட்டம் போல் அலைகிறது, காலம் எப்படி பொருள்களை மாற்றிப் போடுமோ அப்படி என் மனம் மாறுகிறது....இந்திர ஜாலமோ ? முன் ஜென்ம வினையோ...எனக்குத் தெரியாது

கந்த கோட்டத்தில்  உள்ள கந்தவேளே என்று உருகுகிறார் வள்ளல் பெருமான்...

அவர் மனம் அப்படி என்றால் நம் மனம் எப்படியோ



வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன் 
என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்

தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே......!

(எளிமையான பாடல் தான். எனவே ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தரவில்லை . வேண்டுமா என்ன ?)

1 comment:

  1. அருமையான (எளிய) பாடல். நன்றி.

    ReplyDelete