Tuesday, July 9, 2013

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு



 மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

பட்டருக்கும் அபிராமிக்கும் உள்ள உணர்வு, உறவு புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது பக்தியா ? காதலா ? அன்பா ? சிநேகமா ? இது எல்லாவற்றையும் கடந்து வார்த்தையில் வராத ஒரு உறவா ?

அபிராமியை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகு அவரை கொள்ளை கொள்கிறது. உடனே அவளுடைய கணவனின் நினைப்பும் வருகிறது. அவளின் அழகை வர்ணித்த கையோடு சிவனைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறார்.

ஏன் ?

மெல்லிய நுண்மையான இடையை உடையவளே;  மின்னலைப் போன்றவளே; சடை முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் அணைக்கும் மென்மையான மார்புகளை உடையவளே ; பொன் போன்றவளே; உன்னை மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அடியார்களுக்கு  மேள தாளத்துடன் ஐராவதம் என்ற வெள்ளை யானை மேல் செல்லும்  வரம் கிடைக்கும்.


பொருள்

மெல்லிய நுண் இடை = மெலிந்த சிறிய இடை

மின் அனையாளை  = மின்னலைப் போன்றவளை

விரிசடையோன் = சடையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் 

புல்லிய மென் முலைப் = அணைத்த மென்மையான மார்புகளை உடையவளை

பொன் அனையாளை = பொன் போன்ற நிறம் உடையவளை

புகழ்ந்து = அவளைப் புகழ்ந்து

மறை சொல்லியவண்ணம் = மறை நூல்கள் சொல்லிய வண்ணம்

தொழும் அடியாரைத் = தொழுகின்ற அடியவர்களை

 தொழுமவர்க்கு, = தொழுகின்றவர்களுக்கு

பல்லியம் ஆர்த்து எழ = பல வித வாத்தியங்கள் ஒலி எழுப்ப

வெண் பகடு ஊறும் பதம் தருமே = வெண்மையான யானை (ஐராவதம்) மேல் செல்லும் பதவி தருமே



1 comment:

  1. பக்தி இலக்கியத்தில் மிதமிஞ்சிய அன்னியோன்யம் குழைந்து வருவது அபிராமி அந்தாதியில்தான் போலும்!

    என்ன அருமையான பாடல். அதைப் பாடியவர் மனதில் என்ன உணர்வுகள் இருந்திருக்க வேண்டும்!

    ReplyDelete