Wednesday, July 10, 2013

ஜடாயு - கரும்பு உண்ட சொல்

ஜடாயு - கரும்பு உண்ட சொல்


இராவணா, இராமன் வரும் முன், இந்த சீதையை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடி விடு என்று ஜடாயு சொன்னான்.

இராவணனுக்கு பயங்கர கோபம்.

அடேய் ஜடாயு, என் வாள் உன் மார்பை புண் ஆக்குவதற்குள் இங்கிருந்து ஓடி விடு. கொதிக்கின்ற இரும்பின் மேல் விழுந்த நீர் எப்படி மீளாதோ அது போல் இந்த கரும்பினும் இனிய சொல்லினை உடையவள் என்னிடம் இருந்து மீள மாட்டாள்

என்று கர்ஜிக்கிறான்


பாடல்


'வரும் புண்டரம்! வாளி  உன் மார்பு உருவிப் 
பெரும் புண் திறவாவகை  பேருதி நீ; 
இரும்பு உண்ட நீர்  மீளினும், என்னுழையின் 
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,'

பொருள்





'வரும் புண்டரம்! = புண்டரம் என்றால் கழுகு. வருகின்ற கழுகே

 வாளி  உன் மார்பு உருவிப்  = என் அம்பு உன் மார்பை உருவி

பெரும் புண் திறவாவகை = பெரிய புண்ணாக திறப்பதற்கு முன்

பேருதி நீ = பெயர்ந்து செல் (இங்கிருந்து ஓடி விடு)

இரும்பு உண்ட நீர்  மீளினும் = கொதிக்கின்ற இரும்பின் மேல் விழுந்த நீர் ஒரு வேளை மீண்டு வரலாம்

என்னுழையின் = என்னிடம் உள்ள

கரும்பு உண்ட சொல் மீள்கிலள் = கரும்பை போல் இனிய சொல்லை கொண்ட இந்த ஜானகி மீள மாட்டாள்

காணுதியால், = நீ வேணும்னா பாரு


கொதிக்கின்ற இரும்பைப் போல் காமத்தாலும் கோபத்தாலும் கொதிக்கும் இராவணன்.

குளிர்ந்த நீரைப் போன்ற ஜானகி

கம்பனின் உவமைகள் எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.





No comments:

Post a Comment