Tuesday, July 23, 2013

திருக்குறள் - விடாது கருப்பு

திருக்குறள் - விடாது கருப்பு 


வெல்லவே முடியாத பகை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது.

அவரிடம் பெரிய பதவி இருக்கிறது. சொத்து பத்து எக்கச்சக்கம். பெரிய பெரிய அரசியல்வாதிகள்,  அதிகாரிகள் எல்லாம் அவர் கைக்குள். அவர் வைத்ததுதான் சட்டம்.

தனது செல்வாக்கை பயன்படுத்தி சில பல தீய காரியங்களை செய்கிறார். மற்றவர்களின் சொத்தை அபகரிக்கிறார். பொது சொத்தை தனதாக்கி கொள்கிறார். எதிர்த்தவர்களை, இல்லாதவர்களாக்குகிறார்.

யார் என்னை என்ன செய்ய  முடியும் என்று இருமாத்து இருக்கிறார்.

சட்டத்தை சட்டை செய்வது இல்லை.


இப்படி பட்டவர்கள் இராவணன் காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ பேர். 

எவ்வளவு பெரிய பகை இருந்தாலும் அதை வென்று விடலாம்; ஆனால் தீவினை செய்வதால் வரும் பகையை வெல்லவே முடியாது. எங்கு போனாலும் துரத்தி வந்து பிடித்துக் கொள்ளும்.

பாடல்

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென் றடும்.

சீர் பிரித்தபின்

எனை பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை 
வீயாது பின் சென்று அடும்

பொருள்





எனை பகை = எந்த விதமான பகை

உற்றாரும் = அடைந்தோரும்

உய்வர் = அதை வெல்ல முடியும்

வினைப் பகை = தீவினை என்ற பகை

வீயாது பின் சென்று அடும் = விடாமல் பின் சென்று பீடிக்கும்.


உய்தல் என்றால் பிழைத்தல். அதாவது தீவினையில் இருந்து பிழைக்க முடியாது.

வீதல் என்றால் விலகுதல். வீயாது  என்பது அதன் எதிர்பதம். விலகாமல் என்று பொருள்.

தீவினை செய்து விட்டால் அது செய்தவனை விடாமல் தொடரும்.

அது என்ன அடும்? அடும் என்றால் கூடவே இருத்தல், ஒட்டி இருத்தல் என்று பொருள். அடுக்குதல் என்றால் ஒன்றின் மேல் ஒன்று ஒட்டி இருக்கும் படி  வைத்தல்.

தீவினையின் என்ற பகை விடாமல் கூடவே சென்று பிடித்துக் கொள்ளும். விடாது. அந்த பகையை வெல்ல முடியாது. அதிலிருந்து பிழைக்க முடியாது





1 comment:

  1. இது சொல்றதெல்லாம் சரிதான்... ஆனால், நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் பாரு ... எவனுக்காவது எதாவது தண்டனை கிடைச்சிருக்கா??

    ReplyDelete