Friday, July 12, 2013

திருக்குறள் - நட்பின் கடமை

திருக்குறள் - நட்பின் கடமை 


நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.

 
அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?

நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்.













1 comment:

  1. நட்புக்கு நல்ல இலக்கணம்தான்! அருமை!

    ReplyDelete