Friday, July 5, 2013

ஜடாயு - எங்கு அடா போவது ?

ஜடாயு - எங்கு அடா போவது ?


சீதையை தூக்கிச் செல்லும் இராவணனை ஜடாயு மறிக்கிறான்.

இராவணன் பேராற்றல் கொண்டவன். உடல் வலியும் , தவ வலியும் கொண்டவன்.

ஜடாயுவோ வயதான ஒரு பறவை.

ஜடாயுவுக்குத் தெரியும் அவனால் இராவணனை வெல்ல முடியாது என்று. இந்திராதி தேவர்கள் எல்லாம் இராவணனுக்கு தூசு. ஜடாயு எம்மாத்திரம்.

இருந்தும் ஏன் இராவணனோடு சண்டை போடப் போனான் ?

அநீதியை எங்கு கண்டாலும் யாரும் எதிர்க்க வேண்டும். என்னால் எப்படி முடியும், நான் இந்த அநீதியை வெல்ல முடியுமா என்று சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தால் காரியம் ஆகாது.

அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது முதல் செய்தி.

சீதையின் அபயக் குரல் கேட்டவுடன், ஜடாயு இராவணன் முன் பறந்து வந்து, எங்கே அடா போகிறாய், நில் நில் என்று இடி இடித்தார்போன்ற குரலுடனும், நெருப்பு கக்கும் விழிகளுடனும், மின்னலைப் போல ஒளி வீசும் அலகுடனும் , அந்த மேரு மலையே வானில் பறந்து வருவது போல பறந்து வந்து இராவணனை தடுத்தான்....

பாடல்


என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு 
     அடா போவது?' என்னா, 
'நில் நில்' என்று, இடித்த சொல்லன், 
     நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்; 
மின் என விளங்கும் வீரத் 
     துண்டத்தன்; மேரு என்னும் 
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே 
     பொருவும் மெய்யான்;

பொருள்





என்னும் அவ் வேலையின்கண் = சீதை அபயம் என்று கேட்ட அந்த நேரத்தில் 

 'எங்கு      அடா போவது?' என்னா = எங்கேயடா போகிறாய் என்று

'நில் நில்' என்று, இடித்த சொல்லன் = நில் நில் என்று இடி போன்ற குரலுடன் 

நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன் = நெருப்பு கக்கும் விழிகளுடன்

மின் என விளங்கும் = மின்னலைப் போல விளங்கும்

வீரத் துண்டத்தன் = வீரமான அலகுடனும்

 மேரு என்னும் பொன் நெடுங் குன்றம் = மேரு என்ற பெரிய குன்றம்

 வானில் வருவதே = வானில் பறந்து வருவதைப் போல 

பொருவும் மெய்யான் = பெரிய உடலை கொண்டவன்


2 comments:

  1. Good Information and interesting.

    ReplyDelete
  2. அருமையான அறிமுகம். இன்னும் எழுதுக.

    ReplyDelete