Thursday, July 18, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 




நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

உயர்ந்த நூல்களை படிக்கும் போதெல்லாம் எப்படி அதன் உன்னதம், மகிமை, சிறப்பு நமக்குப் புரிகிறதோ அது போல நல்ல பண்பு உள்ளவர்களின் நட்பு ஒவ்வொரு முறை அவர்களோடு தொடர்பு கொள்ளும் போதும் நமக்கு ஒரு புது உற்சாகத்தை, மகிழ்ச்சியைத் தரும். 

தமிழில் அது போன்ற உயர்ந்த இலக்கியங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அதில் இருந்து புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். படிப்பவரின் மன நிலையை பொறுத்து அதில் அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். 

சில பல நாட்களுக்கு முன் குசேலோபாக்கியானத்தில் இருந்து ஒரு பாடலுக்கு பிளாக் எழுதி இருந்தேன் 

அதாவது, கண்ணனைப் பார்க்கப் போகும் போது, வழியில் உள்ள ஈ எறும்புகளுக்கு தன்னால் துன்பம் வந்து விடக் கூடாதே என்று அவை நடக்கும் மர நிழலைத் தவிர்த்து, வெயிலில், தலைக்கு மேல் கையை வைத்துக் கொண்டு நடந்து போனாராம் குசேலர். 



சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்


அன்று தோன்றியது, "அடடா எவ்வளவு பெரிய கருணை உள்ளம். ஜீவ காருண்யம்" என்று. 

மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை நினைத்துப் பார்க்கிறேன். 


இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் நித்தமும் இறைவனிடம் பக்தர்கள்  வேண்டுகிறார்கள். 

இறைவன் அவர்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பானா? எப்படி இறைவனின் கருணையை பெறுவது?

முதலில் நாம் கருணை செலுத்த பழக வேண்டும். 

கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பிச்சைக்காரனை கண்டால் அவன் மேல்  வெறுப்பும், கோபமும் வருகிறது. "வந்துட்டானுக ...நிம்மதியா சாமி கும்பிட  முடியுதா..." என்று எரிச்சல் வருகிறது. 

உள்ளே போய் "ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு " என்று பிச்சை  எடுத்தால் ஆண்டவன் என்ன நினைப்பான். "நிம்மதியா இருக்க விடுறானுகளா ...வந்துட்டானுக காலங் காத்தால ...கைலாயம் கொடு, பாற்கடல் கொடு, சொர்ககம் கொடுனு ...பிச்சைக்கார பசங்க" என்று தானே ஆண்டவனும்  நினைப்பான். 

வீட்டில் வேலை செய்பவர்களிடம் நாம் எவ்வளவு அன்போடு இருக்கிறோம்? நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம் எவ்வளவு கருணை இருக்கிறது நம்மிடம்.  

வயதான காலத்தில், சாலையை மெதுவாக கடக்கும் முதியவர் மீது எவ்வளவு கோபம்  வருகிறது. 

அவ்வளவு ஏன், வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மேல் எவ்வளவு பேர் அன்போடு இருக்கிறார்கள்? "கிழத்துக்கு காதும் கேக்காது, கண்ணும் தெரியாது ...நம்ம உயிரை வாங்குது" 

எங்கிருந்து இறை அன்பு கிடைக்கும். 

கண்ணனின் அருள் வேண்டி சென்ற குசேலர், ஈ எறும்புகளின் மேல் அன்பு செலுத்தினார். அவற்றின் மேல் கருணை கொண்டார். தான் துன்பப் பட்டாலும் பரவாயில்லை, அந்த சிறிய உயிர்கள் துன்புறக் கூடாது என்று நிழலை தவிர்த்து  வேகாத வெயிலில் நடந்தார்.

அவருக்கு கண்ணனின் அன்பு முழுவதும் கிடைத்தது. 

இறைவன் ஒரு படி மேலே. 

கொஞ்சம் கீழே வருவோம். 

"என் மேல் யாருக்கும் அன்பு இல்லை. யாரும் என்னை நேசிக்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையான காதல் என்பதை நான் சினிமாவிலும் புத்தகங்களிலும் தான்  படித்து இருக்கிறேன். அனுபவித்தது இல்லை. " 

என்று பலர் ஏங்குவார்கள். 

என் உதவி வேண்டும். ஆனால், என் மேல் அன்பு செலுத்துவோர் யாரும் இல்லை  என்று தனிமையாக உணர்வார்கள். 

அவர்களுக்கும் இது ஒரு பாடம். 

நீங்கள் முதலில் அன்பை செலுத்தப் படியுங்கள். உங்களுக்கு அன்பு வந்து சேரும். 

ஒரு பலனும் எதிர் பார்க்காமல், கன்னுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் மேல்  அன்பு  செலுத்தினார் குசேலர்.

பலன் கருதாமல் எத்தனை பேர் மேல் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள்?

மற்றவர்களிடம் இருந்து அன்பும், காதலும், இறைவனிடம் இருந்து கருணையும் வேண்டுமா?  முதலில் நீங்கள் மற்ற உயிர்கள் மேல் அன்பு செலுத்தப் படியுங்கள். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்  என்று வேண்டிய வள்ளலார், முதலில் வேண்டியது "ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செய்ய வேண்டும்" என்று. 


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


அன்பை அள்ளி அள்ளி கொடுங்கள். 

அது திரும்பி வரும்.


2 comments:

  1. அபாரம்!!!.வார்த்தைகளால் சொல்ல முடியாது. சொன்ன,விவரித்த விதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நன்றி.

    ReplyDelete