Monday, July 1, 2019

கம்ப இராமாயணம் - வெய்து இழையேல்

கம்ப இராமாயணம் - வெய்து இழையேல்


சீதையை கவர்ந்து செல்ல சூர்ப்பனகை சென்றாள். அவள் செல்வதைக் கண்ட இலக்குவன், சூர்ப்பனகையின் பின்னே சென்று அவள் கூந்தலை பிடித்து இழுத்து, எட்டி உதைத்து, கீழே தள்ளின்னான். அவள் கீழே விழுந்தவுடன் கையில் இருந்த வாளை  உருவினான் என்று நேற்று பார்த்தோம்.

அடுத்து என்ன நடந்தது ?

"கீழே விழுந்த சூர்ப்பனகை, விரைந்து விண்ணில் செல்வேன் என்று உந்தி எழுந்தாள். மீண்டும் கீழே வீழ்த்தி, 'கொடிய செயல் செய்யதே என்று கூறி, அவளின் மூக்கையும், காதுகளையும், அவளின் முலை கண்களையும் வெட்டினான். பின்,  அவள் கூந்தலை விட்டான்"

பாடல்

ஊக்கித் தாங்கி, ‘விண் படர்வென்‘ என்று
    உருத்து எழுவாளை
நூக்கி, நொய்தினின், ‘வெய்து
    இழையேல் ‘என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண்
    முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும்,
    புரி குழல் விட்டான்.

பொருள் 



ஊக்கித் = ஊக்கத்துடன், முயற்சியுடன்

தாங்கி = தூக்கிக் கொண்டு

‘விண் படர்வென்‘  = விண்ணில் பறப்பேன்

என்று = என்று

உருத்து = சத்தம் இட்டுக் கொண்டு

எழுவாளை = எழும்புபவளை

நூக்கி = அழுத்தி, அமுக்கி

நொய்தினின் = எளிதாக

‘வெய்து இழையேல்  ‘ = தீயன செய்யாதே

என நுவலா, = என்று கூறி

மூக்கும் = அவளுடைய மூக்கையும்

காதும் = காதையும்

வெம் = வெம்மையான

முரண் = வலிய

முலைக் கண்களும் = முலை காம்புகளையும்

முறையால் = ஒன்றன் பின் ஒன்றாக

போக்கிப்  = வெட்டி

போக்கிய சினத்தொடும் = அதனால் குறைந்த சினத்தோடு

புரி குழல் விட்டான். = அவளுடைய கூந்தலை விட்டான்

சூர்ப்பனகை சீதையை கவரச் சென்றது தவறுதான். தவறுக்கு தண்டனை தரத்தான் வேண்டும்.

ஒரு பெண்ணின் மூக்கையும், காதையும், மார்பகத்தையும் வெட்டுவது சரியான தண்டனையா ?

சூர்பனகையிடம் தேவை இல்லாத பேச்சுக்  கொடுத்து அவள் மனதில் ஆசையை வளர்த்து விட்டது இராமன்.

சீதை இருக்கும் வரை இராமன் தன்னை நினைக்க மாட்டான் என்று நினைத்து, சீதையை சூர்ப்பனகை தூக்கச் சென்றாள். தூக்கிவிடவில்லை.

அதற்கு இலக்குவன் கொடுத்த தண்டனை இது.

இலக்குவன் செய்தது சரியா ?



1 comment:

  1. ராமாயணத்தை படிக்கும் போது பல விஷயங்களில் பண்ணின காரியம் சரியாய் தப்பா என சந்தேகம் வரத்தான் செய்கிறது. எளிதில் புலப்படுவதில்லை.ராமனின் அவதார நோக்கத்தை மனதில் கொண்டால் சுலபமாக புரிந்து விடும். சூர்ப்பனகையை விகார படுத்தி அனுப்பினால் இராவணன் கோபம் கொள்ளுவான் என தெரிந்தே செய்த காரியமோ?

    ReplyDelete