Wednesday, July 24, 2019

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி 


கோபம் மற்றும் காமம்.

இவை பற்றி நமது இலக்கியங்கள் மிக மிக ஆழமாக பேசி இருக்கின்றன.

கோபமும் காமமும் உயிர்க் குணங்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் மற்றைய குணங்கள் வெளியில் இருந்து உள்ளே வந்து நம்மைத் தூண்டுபவை. காமமும், கோபமும் நமக்குள்ளேயே இருந்து உள்ளிருந்து வெளியே செல்வன என்கிறார்கள்.

இராமாயணத்தில், விஸ்வாமித்ரன் , தயரதனிடம் தன்னுடைய வேள்வியை காக்க இராம இலக்குவனர்களை துணையாக அனுப்பு என்று கேட்கிறான். வேள்வியை யாரிடம் இருந்து காக்க வேண்டும் என்று கேட்கிறான் தெரியுமா ?

"அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்"

வெகுளி என்றால் கோபம். காமம் மற்றும் வெகுளி என்ற அரக்கர்களிடம் இருந்து என் வேள்வியை காப்பாற்ற இராம இலக்குவனர்களை தா என்று வேண்டுகிறான்.

வேள்விக்கு இடையூறு செய்பவர்கள் ஏதோ கருப்பா, குண்டா, கோரை பற்களோடு வரும் அரக்கர்கள் அல்ல. அது எல்லாம் ஒரு உவமை. உண்மையான இடையூறு எது தெரியுமா , நமக்குள் இருக்கும் காமமும் கோபமும் தான்.

“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்



எனக்கு காமம் பற்றி புரிகிறது. கோபம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக  புரிய ஆரம்பித்து இருக்கிறது.

கோபம் என்றால் ஏதோ கத்துவது, சாமான்களை தூக்கி எறிவது , சுடு சொல் கூறுவது , பிறர் மனம் புண் படும்படி பேசுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கோபம் என்பது மிக ஆழமான ஒன்று என்று அறியத் தொடங்கி இருக்கிறேன்.

கோபம் பிறர் மேல் மட்டும் வருவது அல்ல. நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம்.

நான் அழகாக இல்லை, நிறைய படிக்கவில்லை, நிறைய சம்பாதிக்க வில்லை, பேரும் புகழும் சேர்க்கவில்லை , நான் எல்லாம் எதுக்கு இலாயக்கு என்று  நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம். அந்த கோபம் மன அழுத்தம் (anxiety  ), மன பதட்டம் (nevousness ),  மனச் சோர்வு (depression ) என்று கொண்டு விடலாம்.

இவை நமக்கு எளிதில் புரிவதில்லை.


திருநாவுக்கரசர் சொல்கிறார் ....

"நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ   நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம்  மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு  சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த  சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு  செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக  கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு  உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே "


பாடல்




மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொருள்

மனமெனும் தோணி பற்றி  = மனம் என்ற படகைப் பற்றிக் கொண்டு

மதியெனுங் கோலை ஊன்றிச் = அறிவு என்ற துடுப்பை ஊன்றி

சினமெனும் சரக்கை யேற்றிச் = சினம் என்ற சரக்கை ஏற்றி கொண்டு

செறிகட லோடும் போது = அடர்ந்த கடலில் போகும் போது  (பிறவிப் பெருங்கடல்)

மனனெனும் பாறை தாக்கி  = மன்மதன், காமம் என்ற பாறை தாக்கி

மறியும்போது = தலைகீழாக கவிழும் போது

அறிய  வொண்ணா = அறிந்து கொள்ள முடியாத

துனையுனு முணர்வை நல்கா = உனை உன்னும் உணர்வை நல்காய்

யொற்றியூ ருடைய கோவே. = ஒற்றியூர் உடைய கோவே

இறைவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

அவனை அறிய முடியாது. உணர முடியும்.

"அறிய முடியாத உன்னை, உணர்வைத் தருவாய்" என்று வேண்டுகிறார்.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம் " என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் உணர்ந்து, ஓதற்கு அறியவன் " என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.


நாம் அறிவைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சிகளை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

உணர்ச்சிகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.

எதையும், அறிவுக் கண் கொண்டு பார்க்கத் தோன்றுகிறது.

உணர்வுகளை கண்டு நாம் பயப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

உளவியல் அறிஞர்கள் "emotional intelligence" பற்றி நிறைய பேசுகிறார்கள்.

நாவுக்கரசர் சொல்கிறார், அறிவின் துணையோடு செல்லும் போது காமம் என்ற  பாறையில் முட்டிக் கொள்கிறோம் என்று.

அறிவு ஏன் அந்த விபத்தை தடுக்கவில்லை?

அந்த சமயத்தில் கூட 'உனை அறியும் அறிவை நல்காய்" என்று அவர் கேட்கவில்லை.

"உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று வேண்டுகிறார்.

காமம் என்ற உணர்வால் தான், மனம் என்ற தோணி முட்டி உடைந்தது. பின் எதற்கு  "உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று மீண்டும் உணர்ச்சியை தா  என்று  கேட்கிறார்?

விளக்கம் கேட்கலாம் என்றால், அவர் இல்லை.

நாம் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

தேவாரத்தில், ஒரு பாடலுக்குள் இவ்வளவு இருக்கும் என்றால், முழுவதிலும் எவ்வளவு இருக்கும்?

நேரம் கிடைக்கும் போது, மூல நூலை படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_24.html

12 comments:

  1. பாடல்களைப் படிக்கும்பொழுது எத்துணை செல்வங்களையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் ஏற்படுகிறது. முன்னோர்கள் நமக்காக அனைத்தையும் சொல்லிவைத்துள்ளார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஏன் சினத்தைச் சரக்காகவும், காமத்தைப் பாறையாகவும் சொன்னார் என்று எண்ணிப் பார்த்தேன். காரணம் ஒன்றும் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Sinnam enbathu alavaga iruka vendam illayel padaku ennum manam athaanal alinthuvidum..padaku kavilthuvidum... Irivanai adaiya antha padugu enum manam vendum aanal kammam enbathu irivanai sinthipathil irunthu muluvathumaga nammai matrivi vidum athuve padagu paraiyai idithu udaivathai kurikum... kamathil idupatal intha janmathil irivanai unarum bakhiyathai nammam illathu vidum enbathu airtham..

      Delete
    2. Padaku udanthithu poga nerathalum enai aduthu piriviyil aavathu intha samasara kadalil mulkamal irivani ninaka arulvai enru padi irikirar..

      Delete
    3. Arivu enbathu udal samathapaduthu nyanam enabhu aathama samthapathu.. athaanal thaan "உனை உன்னும் உணர்வை நல்காய்" endu vandukirar....arival irivanai adaiya mudiyathu..athu nallathu ketathai pirithariyea mathum thaan uthavum.. nyanam thaan irivanai unaravum adaiyavum uthavum..

      Delete
  3. திரும்ப இந்த பதிவை படித்தேன் தோன்றிய எண்ணத்தை கூற விழைகிறேன்..
    உங்கள் வலைப் பூவை படிக்க ஆரம்பித்த பிறகுதான் தமிழ் பாடல்களிலுள்ள அழகும்,அர்த்தமும் படிப்பினையும் உணர ஆரம்பித்தேன்.இவ்வளவு வருஷங்களை கோட்டை விட்டு விட்டோமே, எதை என்று எங்கே தேடி அலைவது என்கிற ஒரு ஆதங்கம் தான் மனதை அழுத்துகிறது.ஒரு வேளை பள்ளியில் தமிழை பாடமாக எடுத்து கொண்டிருந்தால் ஆர்வம் வந்து இருக்குமோ என்றால் அதுவும் சரியில்லை. சம்ஸ்க்ருதத்தில் என்ன படித்து சாதித்து விட்டேன்..
    உங்கள் எழுத்துகளை படிக்க தொடங்கிய பிறகு கம்ப ராமாயணம்,திவ்ய பிரபந்தங்கள் மீது ஈடு பாடு ஏற்பட்டு கொஞ்ச நேரம் செலவழிக்கிறேன்.
    உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றியை கூற இயலாது.
    இந்த பாடலின் விளக்கம் அற்புதம்.நானாக படித்தால் ஒரு போதும் இவ்வளவு புலப்பட்டு இருக்கவே இருக்காது.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சிறப்பான முயற்சி. அழகான எழுத்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  7. பெருமாள் மாயவன் பெங்களூர்January 28, 2023 at 11:13 PM

    ஐயனே தமிழ் கடவளே சிவ மே ! ! ! என்னையும் பொருளாக்கி உன்னை சிந்திக்க வைத்தார் சிவமே ! ! !

    ReplyDelete
  8. மாயவன் பெருமாள் பெங்களூர்January 28, 2023 at 11:19 PM

    8, 9 வகுப்புகளில் கற்றது.யாது என என்னையும் அறியது உச்சரித்து வந்தேன். இன்று கண்டுகொண்டேன் தேவாரம் தேன் என்று நமசிவாய போற்றி ! ! !

    ReplyDelete